என் மலர்
கடலூர்
கடற்கரையில் இருந்து 5 நாட்டிகலுக்குள் மீனவர்கள் மீன் பிடிக்கக் கூடாது என உத்தரவு உள்ளது.
இதனை தொடர்ந்து மீன்வளத்துறை உதவி இயக்குநர் தமிழ்மாறன் தலைமையில் சார் ஆய்வாளர் பிரபாகரன், மீன்வள மேற்பார்வையாளர் சுரேஷ் மற்றும் அலுவலர்கள் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.
அந்த ரோந்து பணியின்போது விதிமுறைகளுக்கு புறம்பாக 5 நாட்டிக்கல் மைல்களுக்குள்ளாக அக்கரைக்கோரி கரை பகுதிகளில் இழுவலை பயன்படுத்திய 1 விசைப்படகு கண்டறியப்பட்டு அப்படகின் மீது குற்றப்பத்திரிகை சமர்ப்பிக்கப்பட்டது. மேலும் டீசல் மானியம் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. மேலும் குற்றப்பத்திரிகையின் மீது உரிய விசாரணை மேற்கொள்ளப்படும்.
கடலூர்:
தனியார் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு தலைவர் விமல் தலைமை தாங்கினார். செயலாளர் ஜெயசீலன், பொருளாளர் பீட்டர் பெர்னாண்டஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் 40 ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அப்போது அவர் கூறுகையில், கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 19 மாதமாக எங்களுக்கு பாதி சம்பளம் நிர்வாகத்தால் வழங்கப்பட்டது. தற்போது கடந்த சில மாதங்களாக பள்ளிகள் திறக்கப்பட்ட காரணத்தினால் முழு சம்பளம் வழங்கி வந்தனர்.
தற்போது மீண்டும் தொற்று பரவல் ஏற்பட்ட காரணத்தினால் 10 நாட்கள் விடுமுறை விடப்பட்டதால் மீண்டும் பாதி சம்பளம் நிர்வாகம் வழங்கியது. இதனை கண்டித்து நாங்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகிறோம். மேலும் பள்ளி நிர்வாகம் முழு சம்பளம் வழங்க வேண்டும். அதுவரை எங்கள் போராட்டம் தொடரும் என தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் பிரசித்தி பெற்ற விருத்தாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் 5 கோபுரங்கள், 5 நந்திகள், 5 பிரகாரங்கள், 5 தீர்த்தங்கள், 5 தேர்கள் என அனைத்தும் 5 எண் ணிக்கையில் இருப்பது சிறப்பம் சமாகும். காசியை விட சக்தி வாய்ந்த விருத்த கிரீஸ்வரர் கோவில் 1,500 ஆண்டுகள் பழமையானது.
இந்த கோவிலில் கடந்த 5 ஆண்டுகளாக திருப்பணிகள் நடைபெற்று வந்தது. தற்போது புதுப்பொலிவுடன் காட்சி அளிக்கும் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் வருகிற 6-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 8.30 மணிக்கு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதையொட்டி கடந்த 27-ந் தேதி கணபதி பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது.
இதன் தொடர்ச்சியாக நாளை (வியாழக்கிழமை) யாகசாலையில் முதல்கால பூஜை தொடங்குகிறது. இதற்காக பிரமாண்டமாக யாக சாலை மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.
இதில் 9 நவ அக்னி ஹோம குண்டங்கள், 2 பஞ்சா அக்னி ஹோம குண்டங்கள், 35 ஏகா அக்னி குண்டங்கள் உள்ளிட்ட 81 ஹோம குண்டங்கள் இடம் பெற்றுள்ளன. இங்குதான் 6 கால பூஜைகள் நடத்தப்படுகிறது. பின்னர் 6-ந் தேதி கோவில் கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது.
யாகசாலைக்கு தேவையான ஹோம திரவியங்கள், நெல், அரிசி, நெய், தானிய வகைகள், மரக்கட்டைகள் மற்றும் கும்பாபிஷேகத்திற்கு தேவையான பொருட்களை பக்தர்கள் கோவிலில் கொண்டு வந்து கொடுத்து விட்டு சாமியை வழிபட்டு செல்கின்றனர்.
கும்பாபிஷேகத்தையொட்டி விருத்தாசலம் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. கோவிலின் 5 கோபுரங்களும் மின்னொளியில் ஜொலிக்கின்றன. மேலும் கோவிலுக்கு செல்லும் நுழைவு வாயில், பாலக்கரை ஆகிய பகுதிகளில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
விழாவிற்கான ஏற்பாடுகளை கும்பாபிஷேக கமிட்டி குழு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
இதற்கிடையே விருத்தகிரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். இதனால் கோவிலை சுற்றியுள்ள 4 கோட்டை வீதிகளிலும், கடை வீதியிலும் ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி வியாபாரிகள், தாங்களாகவே ஆக்கிரமிப்பை அகற்றிக் கொண்டனர். அகற்றாத ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைத்துறையினர் அகற்றினர்.
கடலூர்:
கடலூர் அருகே ரெட்டிச்சாவடி சந்திக்குப்பம் சேர்ந்தவர் ஜனார்த்தனன். இவரது மனைவி கவுசல்யா (வயது 24). இவர்களுக்கு திருமணமாகி 2 வருடம் ஆகியது. இதில் 1 வருடம் 2 மாதம் திரிஷிகா என்ற பெண் குழந்தை உள்ளது.
நேற்று மாலை கவுசல்யா வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கு மாட்டிக் கொண்டதாக கூறி அவர்களது உறவினர்கள் புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் கவுசல்யா பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து ரெட்டிச்சாவடி போலீசார் விசாரணை நடத்தியதில், ஜனார்த்தனுக்கும் கவுசல்யாவுக்கும் திருமணம் ஆகி 2 வருடம் ஆன நிலையில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இதில் கணவன்-மனைவிக்குள் கடந்த சில மாதங்களாக குடும்பத்தகராறு இருந்து வருகின்றது. இதன் காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன் கவுசல்யா தனது பெற்றோர் வீடான மேல்பட்டாம்பாக்கம் பகுதிக்கு சென்று உள்ளார்.
நேற்று முன்தினம் இவர்களுக்கு 2-வது திருமண நாள் என்பதால் ஜனார்த்தனன் தனது மனைவி கவுசல்யா வீட்டிற்கு நேரில் சென்று சமாதானப்படுத்தி திருமணநாளான்று தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். நேற்று மாலை கவுசல்யா வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்ததாகவும் முதல் கட்ட விசாரணையில் தெரிய வருகிறது.
மேலும் திருமணமாகி 2 வருடத்தில் கவுசல்யா இறந்த காரணத்தினால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கு போலீசார் பரிந்துரை செய்து உள்ளனர். மேலும் வருவாய் கோட்டாட்சியர் இது சம்பந்தமாக விசாரணை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் இறந்த கவுசல்யா உறவினர்கள் கவுசல்யா இறந்ததற்கு உரிய காரணம் தெரியாமல் நாங்கள் கவுசல்யா உடலை வாங்க மாட்டோம் என தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
மேலும் வருவாய் கோட்டாட்சியர் மற்றும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.
கடலூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு விஜயகுமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் பத்மா மற்றும் போலீசார் கடலூர் அருகே திருவந்திபுரம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது பொருட்கள் ஏற்றிச் செல்லும் வேன் ஒன்று வந்து கொண்டிருந்தது. அதனை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். இதில் அட்டைப்பெட்டிகள் அதிக அளவில் இருந்தன. அப்போது சந்தேகம் அடைந்த போலீசார் அட்டைப் பெட்டியைத் திறந்து பார்த்தபோது மது பாட்டில்கள் இருந்தன.
இதனை தொடர்ந்து மது பாட்டில்கள் மற்றும் ஒரு வாலிபரை பிடித்து காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை நடத்தினர். இதில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகா குமளன்குண்டு சேர்ந்தவர் சரவணன் (வயது 35) என தெரியவந்தது. மேலும் பறிமுதல் செய்த மதுபாட்டில்களை பார்த்தபோது போலீசாருக்கு மேலும் சந்தேகம் எழுந்தது. பின்னர் சரவணனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தியதில், கடத்தி செல்லப்பட்ட அனைத்து மதுபாட்டில்களும் போலி மதுபாட்டில்கள் என தெரிய வந்தது. மேலும் 46 பெட்டிகளில் 2200 மது பாட்டில்கள் இருந்தது. இதன் மதிப்பு 3 லட்சம் ஆகும்.
மேலும் புதுச்சேரி மாநிலத்தில் போலியாக மதுபானம் எங்கு தயாரிக்கிறார்கள்? இதுபோன்ற கடத்தல் எங்கிருந்து நடைபெறுகிறது? உள்ளிட்ட பல்வேறு கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிதம்பரம்:
கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகர பகுதியில் உள்ள ஞானப்பிரகாசம் குளக்கரை பகுதி அருகே பாலமான் ஓடை உள்ளது. இது கொள்ளிடம் வடிகால் வாய்க்கால் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பகுதியில் வசிக்கும் கிராம மக்கள் குளிப்பதற்கும் துணிகளை துவைப்பதற்கும் இந்த வாய்க்காலுக்கு வருவது வழக்கம்.மேலும் சிறுவர்கள் மற்றும் வாலிபர்கள் இந்த வாய்க்காலில் மீன்பிடிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
நேற்று இந்த வாய்க்காலின் கரையோரம் 5 அடி நீளமுள்ள முதலை ஒன்று கரை ஒதுங்கியது. தொடர்ந்து அந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் கொள்ளிடம் வாய்க்காலின் கரையோரம் முதலை ஒன்று சுற்றிக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அந்த பகுதி மக்கள் கூறியதாவது:-
எங்கள் பகுதியில் வசிக்கும் பெண்கள், சிறுவர்கள், முதியவர்கள், வாலிபர்கள் என அனைவரும் இந்த வாய்க்காலுக்கு செல்வது வழக்கம். இத்தகைய சூழலில் அந்தப் பகுதியில் 5 அடி நீளமுள்ள முதலை ஒன்று சுற்றித் திரிவது கிராம மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து வனத்துறையினர் இந்த பகுதியில் சுற்றித் திரியும் முதலைகளை பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேஷ் உத்தரவின் பேரில் பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா தலைமையில் புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார், சப்-இன்ஸ்பெக்டர் ராஜாராம் ஆகியோர் போலீசார் நேற்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது பண்ருட்டி கொக்குபாளையம் மெயின் ரோடு முத்தையா நகரை சேர்ந்த முனியப்பன் (வயது 44) அ.தி.மு.க. பிரமுகர் என்பவரை கைது செய்தனர்.
இவர் மீது தமிழகம் மற்றும் புதுவை மாநிலத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளது. குற்றத்தடுப்பு நடவடிக்கை காரணமாக கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திட்டக்குடி:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே செங்கமேடு,வி. சித்தூர், மேல் ஆதனூர், கல்லூர் ,ஆவட்டி, வாகையூர், ஆ.பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் கோயில் உண்டியல் பணம் திருடு போனது. அதனை தொடர்ந்து கொள்ளையர்களை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
நேற்று ஆவினங்குடி அடுத்த குடிக்காடு மாரியம்மன் கோயில் அருகே நின்ற வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அந்த வாலிபர் பெண்ணாடம் சோழ நகரைச் சேர்ந்த மகாலிங்கம் மகன் சூரியமூர்த்தி (வயது 26) என தெரியவந்தது. இவர் கோயில்உண்டியல் திருட்டு தொடர்புடையவர் என தெரிய வந்தது.
திருப்பூரில் கூலி வேலை செய்து வந்த சூரிய மூர்த்தி பொங்கல் விழா விற்காக சொந்த ஊருக்கு வந்துள்ளார் . சரிவர வேலை கிடைக்கததால் செலவுக்கு பணம் இல்லாததால் 8 கோவில்களில் உண்டியலை உடைத்து பணம் திருடி உள்ளார். போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் சூரியமூர்த்தியிடம் இருந்து ரூ. 7 ஆயிரம் பணத்தை கைப்பற்றிசிறையில் அடைத்தனர்.
குறிஞ்சிப்பாடி அருகே உள்ள பாச்சாரப்பாளையம் நடுத்தெருவை சேர்ந்தவர் தனஞ்செயன். இவரது மனைவி பாக்கியம்(வயது 48). இவர், தனது உறவினர்களுடன் நேற்று கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்தார். அங்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசனை சந்தித்து ஒரு மனு அளித்தார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
எனது மகன் தாமரைக்கண்ணன்(23), சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அவரும், எங்கள் ஊரை சேர்ந்த தி.மு.க. பிரமுகர் அருள்முருகனின் மகள் மகாலட்சுமி(20) என்பவரும் காதலித்து வந்தனர். மகாலட்சுமி, திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம். படித்து வருகிறார். இருவரும் கடந்த வாரம் திருமணம் செய்து கொண்டனர். மேலும் பாதுகாப்பு கேட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலும் மனு அளித்தனர்.
இதனை தொடர்ந்து அவர்கள் சென்னையில் உள்ள பா.ஜ.க. பிரமுகரிடம் தஞ்சம் அடைந்தனர். பின்னர் எனது மகனும், மருமகளும் சென்னையில் இருந்து காரில் நேற்று முன்தினம் இரவு பாச்சாரப்பாளையத்துக்கு புறப்பட்டனர்.
மரக்காணம் அருகே வந்தபோது அருள்முருகன் மற்றும் சிலர் அவர்களை மறித்து இருவரையும் காரில் கடத்திச்சென்று விட்டனர். ஆகவே அவர்கள் 2 பேரையும் மீட்டுத்தர வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து தனஞ்செயன், வடலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் அருள்முருகன் மற்றும் சிலர் மீது வடலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க., பாஜக, தே.மு.தி.க., பா.ம.க. கூட்டணி சேர்ந்து போட்டியிட்டது. இதனைத் தொடர்ந்து 2021 சட்டமன்றத் தேர்தலில் தே.மு.தி.க. தனித்து போட்டியிட்டது. அதன்படி கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் கட்சி பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் போட்டியிட்டார்.
தற்போது தமிழகம் முழுவதும் வருகிற 19-ந் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி தி.மு.க. கூட்டணி கட்சிகள், அ.தி.மு.க., பாஜக என அனைவரும் தங்களது கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் அறிவித்து வருகின்றனர்.
தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் கடலூர் நகராட்சி மாநகராட்சியாக அறிவிக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து கடலூர் மாநகராட்சியாக அறிவித்து தற்போது முதல்முறையாக மேயர், துணை மேயர் பதவிக்கு களம் கண்டு வருகின்றனர்.
இதன் காரணமாக கடலூர் மாநகராட்சியில் தி.மு.க. கூட்டணிக் கட்சிகள், அ.தி.மு.க., பா.ஜ.க., பா.ம.க., தே.மு.தி.க. உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகள் கடலூர் மாநகராட்சியில் உள்ள 45 வார்டுகளில் போட்டியிடுவதற்கு தயாராகி உள்ளனர்.
கடலூர் மாநகராட்சியில் அ.தி.மு.க. சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. அதனை தொடர்ந்து அ.தி.மு.க. நிர்வாகிகள் தற்போது தீவிரமாக வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்து வருகிறார்கள்.
தி.மு.க. கூட்டணி கட்சி நிர்வாகிகள் நேற்றுவரை அவரவர்களுக்கு பலம் வாய்ந்த வார்டுகளை கேட்டு பேச்சுவார்த்தையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கடலூர் மாநகராட்சியில் தி.மு.க. முக்கிய நிர்வாகிகள் தே.மு.தி.க. முக்கிய நிர்வாகிகள் ரகசிய கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கிறது.
இந்த ரகசிய கூட்டணி பேச்சு வார்த்தையில், கடலூர் மாநகராட்சியில் உள்ள 45 வார்டுகளில் உள்ள தே.மு.தி.க. நிர்வாகிகள் ரகசியமாக தி.மு.க.வுக்கு ஆதரவு அளிப்பதாகவும், தே.மு.தி.க. நிர்வாகிகள் 2 வார்டுகளில் போட்டியிடுவதற்கு கேட்பதாகவும் கூறப்படுகிறது.
தி.மு.க.வுடன் ஏற்கனவே விடுதலை சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் கூட்டணியில் உள்ள நிலையில் தே.மு.தி.க. இரகசிய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுவிட்டால் அரசியல் களத்தில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும் என முக்கிய கட்சி நிர்வாகிகள் பேசி வருகின்றனர். இதையொட்டி தேர்தல் களம் சூடு பிடித்து உள்ளது.






