என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில்
    X
    விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில்

    விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் நாளை யாகசாலை பூஜைகள் தொடக்கம்

    விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் யாகசாலைக்கு தேவையான ஹோம திரவியங்கள், நெல், அரிசி, நெய், தானிய வகைகள், மரக்கட்டைகள் மற்றும் கும்பாபிஷேகத்திற்கு தேவையான பொருட்களை பக்தர்கள் கோவிலில் கொண்டு வந்து கொடுத்து விட்டு சாமியை வழிபட்டு செல்கின்றனர்.
    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் பிரசித்தி பெற்ற விருத்தாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் 5 கோபுரங்கள், 5 நந்திகள், 5 பிரகாரங்கள், 5 தீர்த்தங்கள், 5 தேர்கள் என அனைத்தும் 5 எண் ணிக்கையில் இருப்பது சிறப்பம் சமாகும். காசியை விட சக்தி வாய்ந்த விருத்த கிரீஸ்வரர் கோவில் 1,500 ஆண்டுகள் பழமையானது.

    இந்த கோவிலில் கடந்த 5 ஆண்டுகளாக திருப்பணிகள் நடைபெற்று வந்தது. தற்போது புதுப்பொலிவுடன் காட்சி அளிக்கும் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் வருகிற 6-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 8.30 மணிக்கு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதையொட்டி கடந்த 27-ந் தேதி கணபதி பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது.

    இதன் தொடர்ச்சியாக நாளை (வியாழக்கிழமை) யாகசாலையில் முதல்கால பூஜை தொடங்குகிறது. இதற்காக பிரமாண்டமாக யாக சாலை மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.

    இதில் 9 நவ அக்னி ஹோம குண்டங்கள், 2 பஞ்சா அக்னி ஹோம குண்டங்கள், 35 ஏகா அக்னி குண்டங்கள் உள்ளிட்ட 81 ஹோம குண்டங்கள் இடம் பெற்றுள்ளன. இங்குதான் 6 கால பூஜைகள் நடத்தப்படுகிறது. பின்னர் 6-ந் தேதி கோவில் கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது.

    யாகசாலைக்கு தேவையான ஹோம திரவியங்கள், நெல், அரிசி, நெய், தானிய வகைகள், மரக்கட்டைகள் மற்றும் கும்பாபிஷேகத்திற்கு தேவையான பொருட்களை பக்தர்கள் கோவிலில் கொண்டு வந்து கொடுத்து விட்டு சாமியை வழிபட்டு செல்கின்றனர்.

    கும்பாபிஷேகத்தையொட்டி விருத்தாசலம் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. கோவிலின் 5 கோபுரங்களும் மின்னொளியில் ஜொலிக்கின்றன. மேலும் கோவிலுக்கு செல்லும் நுழைவு வாயில், பாலக்கரை ஆகிய பகுதிகளில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கும்பாபிஷேக கமிட்டி குழு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

    இதற்கிடையே விருத்தகிரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். இதனால் கோவிலை சுற்றியுள்ள 4 கோட்டை வீதிகளிலும், கடை வீதியிலும் ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி வியாபாரிகள், தாங்களாகவே ஆக்கிரமிப்பை அகற்றிக் கொண்டனர். அகற்றாத ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைத்துறையினர் அகற்றினர்.

    Next Story
    ×