என் மலர்tooltip icon

    கடலூர்

    • சிதம்பரத்தில் சுருக்குமடி வலை பயன்படுத்தியதை தடுத்த அதிகாரிகளுக்கு மீனவர்கள் கொலை மிரட்டல் விடுத்தனர்.
    • மீன்வளத் துறை ஆய்வாளர் சதுருதீன் புதுச்சத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.

    கடலூர்:

    தமிழகம் முழுவதும் மீனவர்கள் அனைவரும் சுருக்கு மடி வலைகளை பயன்படுத்தி மீன் பிடிக்கக் கூடாது என அரசால் தெரிவிக்கப்பட்டதுஇந்த சுருக்குமடி வலை பயன்படுத்தாத வண்ணம் கடலூர் சிதம்பரம் உள்ளிட்ட கடல் பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் கண்காணித்து வருகின்றனர். சிதம்பரம் அருகே சாமியார் பேட்டை கடற்கரை பகுதியில் விசை ப்படகுகளில் அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலையை பயன்படுத்தி மயிலாடுதுறையை சேர்ந்த 4 மீனவர்கள் மீன் பிடித்தனர். அப்போது அந்த பகுதியில் ரோந்து சென்ற கடலூர் முதுநகர் மீன்வளத்துறை ஆய்வாளர் சதுருதின் தலைமையிலான குழுவினர் சந்தேகப்படும் படியாக மீன்பிடித்தது தெரிய வந்தது. உடனே அதிகாரிகள் மீனவர்களிடம் சென்று சோதனை செய்தனர்.

    அந்த சோதனையில் இவர்கள் அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலை பயன்படுத்தியது தெரிய வந்தது. ஆத்திரமடைந்த அக்கறைசேரி பகுதியைச் சேர்ந்த லோகு, பிரகாஷ், வினித் மற்றும் மயிலாடுதுறையை சேர்ந்த மணி ஆகிய4 பேரும் மீனவத் துறை ஆய்வாளர் சதுருதீனை தகாத வார்த்தையில் திட்டி அவர்களை பணி செய்ய விடாமல் தடுத்து அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து மீன்வளத் துறை ஆய்வாளர் சதுருதீன் புதுச்சத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் புது சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வினோதா வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர். 

    • விருத்தாசலத்தில் வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து பொது மக்கள் ஊர்வலமாக சென்று மனு கொடுத்தனர்.
    • தனி நபர் ஒருவர் தொடுத்த வழக்கின் அடிப்படையில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    கடலூர்:

    விருத்தாசலத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கட்டிடங்களை இடிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி வருவாய் துறையினர் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட கட்டிடங்களை இடித்து வருகின்றனர். இந்நிலையில் தங்களது குடியிருப்புகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து இந்திரா நகர் பகுதி மக்கள் நேற்று ஊர்வலமாக வந்து விருத்தாசலம் ஏ.எஸ்.பி.,யிடம் நேற்று மனு அளித்தனர். ஆக்ரமிப்பு அகற்றத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் பகுதியில் இருந்து, கோரிக்கை பாதாகைகளை ஏந்தி ஊர்வலமாக, விருத்தாசலம் போலீஸ் நிலையம் வந்தனர்.அங்கு ஏ.எஸ்.பி. அங்கித் ஜெயினிடம் புகார் மனு அளித்தனர்.

    அந்த மனுவில் பல ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் எங்களது வீடுகளை இடிக்க கூடாது. மாற்று இடம் எதுவும் தங்களுக்கு இல்லாததால் போக்கிடம் செல்ல முடியாமல் பிள்ளை குட்டிகளோடு தவிப்பதாகவும், தனி நபர் ஒருவர் தொடுத்த வழக்கின் அடிப்படையில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. உயர்நீதிமன்றம் கருணை அடிப்படையில் எங்கள் வீடுகளை இடிக்காமல் இருக்க வேண்டும்.மேலும் அந்த தனிநபர் வீடுகளை இடிக்காமல் இருக்க வேண்டுமானால் பணம் தர வேண்டும் என எங்களை மிரட்டி வந்தார், எனவே அவர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறி உள்ளனர்.  மனுவை பெற்றுக் கொண்ட ஏ.எஸ்.பி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததால் அனைவரும் கலைந்து சென்றனர்.

    • கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் சுத்தம் செய்யும் பணியினை மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜாஅவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது.
    • சிறப்பாக பணிபுரிந்த நிர்வாகத்திற்கும், துப்புரவு பணியாளர்களுக்கு மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

    கடலூர்:

    கடலூர் மாநகராட்சி சார்பில் எனது குப்பை எனது பொறுப்பு என்பதனை வலியுறுத்தி கடலூர் மாநகராட்சி முழுவதும் மேயர் சுந்தரி ராஜா அறிவுறுத்தலின் பேரில் மாநகராட்சி ஆணையாளர் நவேந்திரன் தலைமையில் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் பல்வேறு முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொண்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து இன்று காலை கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் எனது குப்பை எனது பொறுப்பு என்பதனை வலியுறுத்தி கடற்கரை முழுவதும் இருந்த குப்பைகளை மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா தலைமையில் நகர்நல அலுவலர் டாக்டர் அரவிந்த் ஜோதி மற்றும் பணியாளர்கள் பணியில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் கடலூர் அரசு பெரியார் கலைக்கல்லூரி, புனித வள்ளலார் கலைக் கல்லூரி மற்றும் நகராட்சி மேல்நிலை பள்ளியை சேர்ந்த மாணவர்கள் எனது குப்பை எனது பொறுப்பு அடிப்படையில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு சிறப்பாக பணிபுரிந்த நிர்வாகத்திற்கும், துப்புரவு பணியாளர்களுக்கு மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா சான்றிதழ் வழங்கி பாராட்டினார். அப்போது மாநகர தி.மு.க. செயலாளர் கே.எஸ்.ராஜா, மாணவரணி தி.மு.க. துணை அமைப்பாளர் பாலாஜி, மண்டல குழு தலைவர் பிரசன்னா, மாநகராட்சி கவுன்சிலர்கள் சுதா ரங்கநாதன், செந்தில் குமாரி இளந்திரையன் மற்றும் பணியாளர்கள் உடன் இருந்தனர்.

    • கடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பலத்த இடியுடன் காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது.
    • கடலூர் பகுதியில் ஒரு சில இடங்களில் மரம் சேர்ந்து இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது.

    கடலூர்:

    தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது . இன்று தமிழகம் மற்றும் புதுவை காரைக்காலில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்திருந்தனர். அதன்படி கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து இரவு நேரங்களில் பலத்த இடியுடன் கூடிய மழை பெய்து வருகின்றது. இந்த நிலையில் நேற்று மாலை கடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பலத்த இடியுடன் காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது. கடலூர் மாவட்டத்தில் கடலூர் பண்ருட்டி நெல்லிக்குப்பம் நடுவீரப்பட்டு வேப்பூர் பெல்லாந்துறை எஸ்.ஆர்.சி. குடிதாங்கிவிருத்தாசலம் தொழுதூர் பண்ருட்டி உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்து வந்தது. இது மட்டும் இன்றி கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாநகராட்சி நகராட்சி பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் வடிகால் வாய்க்கால் சீரமைக்கும் பணி மழையால் பாதிப்பு ஏற்படாத வகையில் முன்னெச்சரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றது.

    இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக வழக்கமான நடைபெற்று வரும் விவசாய பணிகள் முழுவதும் பாதிக்கப்பட்டு தற்போது நிலப்பகுதிகளில் தண்ணீர் தேங்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது இதன் காரணமாக விவசாயிகள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் கடலூர் பகுதியில் ஒரு சில இடங்களில் மரம் சேர்ந்து இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது. கடலூர் மாவட்டத்தில் மழை அளவு பின்வருமாறு:- வேப்பூர் - 97.0, பெல்லாந்துறை - 79.8, குப்பநத்தம் - 69.6, கீழச்செருவாய் - 56.0, காட்டுமயிலூர் - 55.0, எஸ்.ஆர்.சி. குடிதாங்கி - 39.5, விருத்தாசலம் - 29.0, தொழுதூர் - 22.0, மீ-மாத்தூர் - 18.0, பண்ருட்டி - 15.0, லக்கூர் - 8.0, வானமாதேவி - 5.0, கலெக்டர் அலுவலகம் - 1.0, கடலூர் - 0.2, மொத்த மழை - 495.10 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகி உள்ளது.

    • கடலூரில் கலக கூட்டத்தினரை கட்டுப்படுத்துவது சம்மந்தமான போலீசார் ஒத்திகை நடைபெற்றது.
    • ஆயுதப்படை காவலர்கள் மற்றும் சட்டம் ஒழுங்கு காவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது .

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் ஆயுதப்படை கவாத்து மைதானத்தில் , கலக கூட்டத்தினரை கட்டுப்படுத்துவது சம்மந்தமான ஒத்திகை பயிற்சி நடைபெற்றது. கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் ஒத்திகை பயிற்சியினை பார்வையிட்டு அறிவுரை வழங்கினார் . மாவட்டத்தில் திடீரென கலக கூட்டத்தினால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் சமயத்தில் , கலக கூட்டத்தினரை காவல்துறையினர் எவ்வாறு கையாள்வது குறித்து ஆயுதப்படை துணை போலீஸ் சூப்பிரண்டு சவுந்திரராஜன் முன்னிலையில் , ஆயுதப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் அருட்செல்வன் தலைமையில் ஆயுதப்படை காவலர்கள் மற்றும் சட்டம் ஒழுங்கு காவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது .

    கலக கூட்டத்தினரால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என கருதும் சூழ்நிலையில் முதலில் கலக கூட்டத்தினர்க்கு கூடியிருப்பது சட்டவிரோதமான கூட்டம் உடனே கலைந்து செல்ல எச்சரிக்கப்பட்டது . கூட்டம் கலையாத பட்சத்தில் வருண் வாகனம் மூலம் கலக கூட்டத்தினர் மீது தண்ணீர் பீச்சி அடித்தும், பின்னர் வஜ்ரா வாகனம் மூலம் கண்ணீர் புகை குண்டு வீசியும், பின்னர் லத்தி சார்ஜ் நடத்தியும் , பின்னர் கலக கூட்டத்தினர் மீது துப்பாக்கி சூடு நடத்தியும் ஒத்திகை பயிற்சி அளிக்கப்பட்டது . ஒத்திகை பயிற்சி கடலூர் ஆயுதப்படை காவலர்கள் மற்றும் சேத்தியாத்தோப்பு உட்கோட்ட காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது .

    • பெண்ணாடம் அருகே தரைப்பாலம் மழை வெள்ளத்தில் அடித்துசெல்லப்பட்டது.
    • பாலம் 90 சதவீதம் கட்டி முடிக்கப்பட்டு நிதி பற்றாக்குறை காரணமாக இணைப்பு சாலை அமைக்காமல் பணி நிறுத்தப்பட்டது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே சவுந்திர சோழபுரம் கிராமத்தில் உள்ள வெள்ளாற்றில் கடலூர் - அரியலூர் மாவட்டம் கோட்டைக்காடு கிராமத்தை இணைக்கும் தரைப்பாலம் உள்ளது. இந்த வெள்ளாற்றில் அரியலூர் மாவட்டத்தில் இருந்து வரும் ஆனாவாரி ஓடை, உப்பு ஓடை ஆகிய இரண்டு ஓடை தண்ணீரும் வெள்ளாற்றில் கலந்து அதன் மூலமாக கடலில் சென்று கலக்கிறது. கடந்த 3 நாட்களாக இரவு நேரங்களில் விட்டு விட்டு பொழியும் மழையால் கடலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் பெய்த கன மழையால் வயல்வெளி பகுதியில் உள்ள மழைநீர் வெள்ளம் ஏற்பட்டு சவுந்திர சோழபுரம்-கோட்டைகாடு கிராமத்தின் இடையே வெள்ளாற்றின் குறுக்கே தற்காலிகமாக போடப்பட்ட தரைபாலம் அடித்து செல்லப்பட்டது. இதனால் அந்த வழியாக செல்லும் சவுந்தர சோழபுரம், கோட்டைக்காடு, ஆலத்தியூர், ஆதனக்குறிச்சி, முள்ளுக்குறிச்சி, தெத்தேரி, முதுகுளம், உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் 15 கிலோமீட்டர் சுற்றி வரும் நிலைஏற்பட்டுள்ளது.

    அடிப்படை தேவைக்கா கவும், விவசாய தேவைக்காகவும் இந்த தரைபாலத்தின் வழியாக சென்றுவந்த நிலையில் தற்போது போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசால் கோட்டைக்காடு சௌந்தர சோழபுரம் இடையே 2013 ஆம் ஆண்டில் நிதி ஒதுக்கப்பட்டு 11 கோடி ரூபாய் மதிப்பில் புதிய மேல்மட்டபாலம் கட்டும் பணிகள் நடைபெற்றது. பாலம் 90 சதவீதம் கட்டி முடிக்கப்பட்டு நிதி பற்றாக்குறை காரணமாக இணைப்பு சாலை அமைக்காமல் பணி நிறுத்தப்பட்டது. இந்த மேம்பாலத்தை விரைந்து முடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 7 ஆண்டுகளாக நடைபெறும் தரைப்பாலம் பணியை விரைந்து முடிக்க வேண்டும், ஒவ்வொரு ஆண்டும் 6 முறை தரைப்பாலம் துண்டிக்கப்பட்டு கிராம மக்கள் பள்ளி, கல்லூரிக்கு செல்லவும் அடிப்படைத் தேவைக்காக கடலூர் மாவட்டத்திற்கு வருவதற்கும் விவசாய தேவைக்காக தரைப் பாலத்தை கடந்து செல்வதுமாக இருந்து வந்த நிலையில் தற்போது 15 கிலோமீட்டர் சுற்றி வருவது தொடர் கதையாக உள்ளது.

    • தமக்கு வளைகாப்பு செய்யும் அற்புதராஜிடம் வற்புறுத்தியுள்ளார்.
    • கடன் பிரச்சினை இருப்பதால் வளைகாப்பு நடத்த முடியாது கணவர் கூறி வந்துள்ளார்

    கடலூர்:

    விருத்தாசலம் அருகே சின்னவடவாடி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ். அவரது மகன் அற்புதராஜ் (வயது 20). இவர் மார்க்கெட்டில் கூலி வேலை செய்து வருகிறார். இவரும் விருத்தாசலம் பெரியார் நகரை சேர்ந்த லதாவின் மகள் சக்தி(18) என்ற பெண்ணும் காதலித்து வந்தனர். இந்நிலையில் இருவரும் நெருங்கி பழகியதால் சக்தி கர்ப்பம் அடைந்தார்.

    இதனையடுத்து இருவரும் கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் செய்து கொண்டனர், கர்ப்பிணியான சக்தி, தனது தாய் லதா வீட்டில் தங்கி இருந்தார். கர்ப்பம் அடைந்த சக்தி 7 மாதங்கள் ஆகியதால் தமக்கு வளைகாப்பு செய்யும் அற்புதராஜிடம் வற்புறுத்தியுள்ளார். ஆனால் கடன் பிரச்சினை இருப்பதால் வளைகாப்பு நடத்த முடியாது கணவர் கூறி வந்துள்ளார். இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு நடந்து வந்துள்ளது.

    நேற்று மாலை தாய் வீட்டில் தனியாக சக்தி இருந்துள்ளார். வேலை முடிந்து வீட்டிற்கு வந்த அவரது தாய் லதா அங்கு சக்தி உயிரிழந்த நிலையில் முகம், கழுத்து ஆக இடங்களில் ரத்தக்காயங்களுடன் சடலமாக இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    தகவல்அறிந்த விருத்தாசலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, சக்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கணவன் மனைவியிடையே அடிக்கடி தகராறு நடந்து வந்ததால் அவரது கணவர் அற்புதராஜை பிடித்து தீவிர விசாரணை நடத்தினர். அதில் அவர் தனது காதல் மனைவியை அடித்துக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த விருத்தாசலம் போலீசார் காதல் மனைவியை கொலை செய்த அற்புதராஜை கைது செய்தனர்.

    • கனிமொழியை, சக்திவேல் திருமணம் செய்து கொள்வதாக கூறி அவரது வீட்டில் கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்துள்ளார்.
    • கனிமொழி 5 மாதம் கர்ப்பம் ஆனார்.

    கடலூர்:

     பண்ருட்டி அருகே கோட்டலாம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல் (வயது 27). ஆட்டோ ஓட்டி வந்தார். அதே கிராமத்தைச் சேர்ந்தவர் கனிமொழி (25). இவர் 10-ம் வகுப்பு முடித்துவிட்டு வீட்டில் இருந்து வருகிறார்.

    இவர்கள் 2 பேரும் கடந்த 3 ஆண்டுகளாக தீவிரமாக காதலித்து வந்தனர். அடிக்கடி தனிமையில் சந்தித்து தங்கள் காதலை வளர்த்து வந்ததனர். இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் கனிமொழியை, சக்திவேல் திருமணம் செய்து கொள்வதாக கூறி அவரது வீட்டில் கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்துள்ளார். இதனால் கனிமொழி 5 மாதம் கர்ப்பம் ஆனார்.

    அதிர்ச்சி அடைந்த கனிமொழி தன்னை திருமணம் செய்து கொள்ள சக்திவேலை வற்புறுத்தியுள்ளார். இதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கனிமொழி பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் வள்ளி விசாரணை செய்து சக்திவேலை கைது செய்தார்.

    • விவசாயி தற்கொலை குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சங்கரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அதே ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
    • ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவந்த சங்கர் எதற்காக தற்கொலை செய்தார். அதற்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கடலூர்:

    கடலூர் அருகே உள்ள வழிசோதனை பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சங்கர் (வயது 53). விவசாயி. இவர் கடந்த 24-ந் தேதி மதியம் வாகன விபத்தில் காயமடைந்தார். உடனடியாக அக்கம் பக்கம் உள்ளவர்கள் சங்கரை கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு உள்ள வார்டில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். அவருடன் மனைவி மஞ்சுளா இருந்தார்.

    இன்று அதிகாலை 5 மணி அளவில் சங்கர் திடீரென எழுந்து கழிவறைக்கு செல்வதாக தனது மனைவியிடம் கூறினார். உடனே மஞ்சுளா இப்போது செல்லவேண்டாம். டாக்டர் வந்தபின்பு செல்லலாம் என்று கூறினார்.

    ஆத்திரமடைந்த சங்கர் அவரது மனைவியை தள்ளிவிட்டு திடீரென கழிவறைக்குள் சென்று பூட்டிக்கொண்டார். பின்னர் வெகுநேரமாகியும் வராததால் அதிர்ச்சியடைந்த அவரது மனைவி மஞ்சுளா கூச்சல்போட்டார். உடனே வார்டில் இருந்தவர்கள் ஓடிவந்தனர். கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது சங்கர் லுங்கியால் தூக்கில் பிணமாக தொங்கினார்.

    இதனை பார்த்ததும் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக கடலூர் புதுநகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சங்கரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அதே ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவந்த சங்கர் எதற்காக தற்கொலை செய்தார். அதற்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • 7 மாத கர்ப்பிணியான சக்தி, தனது தாய் லதா வீட்டில் தங்கி இருந்தார்.
    • தனக்கு வளைகாப்பு நடத்த வேண்டும் என கணவர் அற்புதராஜிடம் சக்தி கூறியுள்ளார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் சின்னவடவாடி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் மகன் அற்புதராஜ் (வயது 20). இவரும், விருத்தாசலத்தை சேர்ந்த லதா மகள் சக்தி (18) என்ற பெண்ணும் காதலித்தனர். இதில் சக்தி கர்ப்பமானார். இதையடுத்து இருவரும் கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் செய்து கொண்டனர்.

    7 மாத கர்ப்பிணியான சக்தி, தனது தாய் லதா வீட்டில் தங்கி இருந்தார். தனக்கு வளைகாப்பு நடத்த வேண்டும் என கணவர் அற்புதராஜிடம் சக்தி கூறியுள்ளார். அதற்கு அற்புதராஜ், ஏற்கனவே கடன் அதிகமாக உள்ளது என்றும், தற்போதுள்ள நிலைமையில் வளைகாப்பு நடத்த முடியாது என்றும் கூறியுள்ளார்.

    இதுதொடர்பாக நேற்று இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது அற்புதராஜ் சக்தியை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் சக்தி பரிதாபமாக உயிரிழந்தார். போலீசார் அற்புதராஜை கைது செய்தனர்.

    நன்னடத்தை வெளியில் வந்த நபர்களுக்கு மத்திய சிறைச்சாலை சூப்பிரண்டு செந்தில்குமார் தலைமையில் துணை மேயர் தாமரைச்செல்வன், ஆகியோர் நிவாரண உதவிகள் வழங்கினர்.

    கடலூர்:

    75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கடலூர் மத்திய சிறைச்சாலை உள்ள 10 கைதிகள் நன்னடத்தை காரணமாக இன்று காலை விடுதலை செய்யப்பட்டனர்‌.இதனை தொடர்ந்து 10 பேரின் குடும்பத்தினர் பெருமகிழ்ச்சியுடன் வெளியில் காத்துக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் காலை நன்னடத்தை காரணமாக 10 நபர்கள் வெளியில் வந்தனர். அப்போது அவர்களது குடும்பத்தினர் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

    இதனை தொடர்ந்து நன்னடத்தை வெளியில் வந்த நபர்களுக்கு மத்திய சிறைச்சாலை சூப்பிரண்டு செந்தில்குமார் தலைமையில் துணை மேயர் தாமரைச்செல்வன், ஆகியோர் நிவாரண உதவிகள் வழங்கினர்.

    இதனை தொடர்ந்து நன்னடத்தை காரணமாக வெளியில் வந்த நபர்கள் இனி வருங்காலங்களில் சரியான முறையில் தங்கள் வாழ்க்கையை நடத்தி எந்தவிதமான குற்ற செயல்களில் ஈடுபடாமல் இருக்க வேண்டும் என சிறை சூப்பிரண்டு செந்தில்குமார் அறிவுறுத்தினார்.

    கடலூர் ரோட்டில் உள்ள முல்லா ஏரியை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட கட்டிடங்கள் 2-வது நாளாக இன்று அகற்றம் செய்யப்பட்டன.

    கடலூர்:

    சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி விருத்தாசலத்தில் உள்ள நீர் நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி விருத்தாசலம் தாசில்தார் தனபதி தலைமையில் நடைபெற்றது.

    கடலூர் ரோட்டில் உள்ள முல்லா ஏரியை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட கட்டிடங்கள் 2-வது நாளாக இன்று அகற்றம் செய்யப்பட்டன. விருத்தாசலம் தாசில்தார் தலைமையிலான வருவாய்த்துறையினர் 2 பொக்லைன் எந்திரங்கள் மூலம் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அப்புறப்படுத்தினர்.

    அப்போது எந்தவித பிரச்சினை சம்பவம் எதும் நிகழாமல் இருக்க விருத்தாசலம் உதவி போலீஸ் சூப்பிரண்டு அங்கித் ஜெயின் தலைமையிலான 100-க்கும் மேற்பட்ட போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    ஆக்கிரப்பு அகற்றும் பணி நடைபெற்றதால் கடலூர் மற்றும் சிதம்பரம் செல்லும் சாலை மாற்றி அனுப்பி வைக்கப்பட்டது.

    ×