என் மலர்
கோயம்புத்தூர்
- 3,250 ஹெக்டேர் பரப்பளவு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு ரூ. 27.27 கோடி நிதி ஒதுக்கீடு செய் யப்பட்டு உள்ளது
- 2023-24-ம் ஆண்டிற்கான விண்ணப்பங்கள் விவசாயிகளிடம் இருந்து வரவேற்கப்படுகிறது.
கோவை,
கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி கூறியிருப்பதாவது:-
கோவை மாவட்டத்தில் தோட்டக்கலை துறை மூலம் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் முக்கியமாக பிரதம மந்திரியின் நுண்ணீர் பாசன திட்டம் செயல்பட்டு வருகிறது.
இந்த நுண்ணீர் பாசன திட்டம் மூலம் 2023-24-ம் ஆண்டிற்கான விண்ணப்பங்கள் விவசாயிகளிடம் இருந்து வரவேற்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் சொட்டுநீர் பாசன கருவிகள் வழங்கப்பட உள்ளன.
சிறு, குறு விவசாயிகள் குறைந்தபட்சம் 0.40 ஹெக்டேர் முதல் அதிகபட்சமாக 2 ஹெக்டேர் வரை நிலம் வைத்திருந்தால் பயன்பெறலாம். இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்தில் சொட்டுநீர் பாசன கருவிகள் வழங்கப்படுகிறது. நடப்பு ஆண்டில் கோவை மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் 3,250 ஹெக்டேர் பரப்பளவு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு ரூ. 27.27 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
இதன்படி பாதுகாப்பான மற்றும் செமி கிறிட் 5 டிக்கல் குறுவட்ட பகுதிகளுக்கு 250 ஹெக்டேர் இலக்கும், ஓவர் எக்ஸ்பிளோடெடு மற்றும் கிறிட்டிக்கல் குறுவட்ட பகுதிகளுக்கு 3000 ஹெக்டேரும் இலக்கு பெறப்பட்டு உள்ளது. ஆனைமலை 150 ஹெக்டேர், அன்னூர் 390 'ஹெக்டேர், காரமடை 450 ஹெக்டேர், கிணத்துக்கடவு 385 ஹெக்டேர், மதுக்கரை 270 ஹெக்டேர், பி.என்.பாளையம் 140 ஹெக்டேர், பொள்ளாச்சி வடக்கு 265 ஹெக்டேர். பொள்ளாச்சி தெற்கு 145 ஹெக்டேர், சர்க்கார்சாம குளம் 125 ஹெக்டேர், சுல்தான்பேட்டை 360 ஹெக்டேர், சூலூர் 165 ஹெக்டேர், தொண்டாமுத்தூர் 405 ஹெக்டேர் என வட்டாரங்களுக்கு இலக்கு அளிக்கப்பட்டு விவசாயிகளின் விண்ணப்பங்கள் tnhorticulture.tn.gov. in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.
விவசாயிகள் தாங்களாகவே விண்ணப்பங்களை இந்த இணையதளத்தில் பதிவு செய்து பயன்பெறலாம். மேலும் இணையதளத்தில் பதிவு செய்ய தெரியாத விவசாயிகள் வட்டார தோட்டக்கலை அலுவலர்களின் உதவியுடன் பதிவு செய்யலாம். இத்திட்டத் தின் கீழ் பயன்பெற வட்டாட்சியரால் வழங்கப்பட்ட சான்று மற்றும் சிறு, குறு விவசாயிகளுக்கான சான்று, நில வரைபடம், மண் மற்றும் நீர் பரிசோதனை அறிக்கை, குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், சிட்டா, அடங்கல், விண்ணப்ப தாரரின் புகைப்படம் உள்ளிட்ட ஆவணங்களை வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தில் சமர்ப்பித்து பயன்பெறலாம். மேலும் விபரங்களுக்கு தோட்டக்கலை உதவி இயக்குனர்களை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- மக்களுக்கு தரமான பொருட்கள் கிடைக்கின்றதா என்பதை அதிகாரிகள் மூலம் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றோம்.
- அரிசி கருப்பு, பழுப்பு நிறத்தில் இருக்க கூடாது என்பதில் அரசு கவனம் செலுத்தி வருகிறது.
கோவை:
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர்கள் மற்றும் அதிகாரிகளுடனான ஆய்வு கூட்டம் இன்று நடந்தது.
கூட்டத்திற்கு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
கூட்டத்திற்கு பின்னர் அமைச்சர் சக்கரபாணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகள் முடிந்து 3-வது ஆண்டை நோக்கி செல்கிறோம். மக்களுக்கு தரமான பொருட்களை கொடுக்க முதலஅமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
மக்களுக்கு தரமான பொருட்கள் கிடைக்கின்றதா என்பதை அதிகாரிகள் மூலம் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றோம். அரிசி கருப்பு, பழுப்பு நிறத்தில் இருக்க கூடாது என்பதில் இந்த அரசு கவனம் செலுத்தி வருகிறது.
2 வருடங்களில் 16 லட்சம் பேருக்கு குடும்ப அட்டை வழங்கப்பட்டு இருக்கிறது. குடும்ப அட்டை தொலைந்து விட்டால், ரூ.45 செலுத்தி அதன் நகலை பெற முடியும். தகுதியுள்ள அனைவருக்கும் குடும்ப அட்டை கிடைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றது.
சிறுதானிய உணவு திருவிழா அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்பட உள்ளது.
அனைத்து நியாய விலை கடைகளிலும் கியூஆர் கோடு முறை விரைவில் நடைமுறைப்படுத்தப்படும். இனி பொருட்களை கியூ ஆர் கோடு முறையில் வாங்கி கொள்ளலாம். அதற்கான நடவடிக்கைகள் விரைவில் தொடங்க உள்ளது.
கோவை மாவட்டத்தில் 536 நியாய விலை கடைகள் வாடகை கட்டிடத்தில் இருக்கின்றது, அவற்றிக்கு சொந்த கட்டிடம் கட்டப்படும்.
கோதுமையை பொறுத்தவரை 23 ஆயிரம் மெட்ரிக் என்பதை 8 ஆயிரம் டன்னாக மத்திய அரசு குறைத்து விட்டனர். இது தொடர்பாக மத்திய அரசுடன் பேசி கூடுதல் ஒதுக்கீடு கேட்க இருக்கின்றோம்.
நியாயவிலை கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்குவது அரசின் பரீசிலனையில் இருக்கிறது. கோவை, நீலகிரி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் முதல்கட்டமாக வழங்க திட்டமிடப்பட்டு இருக்கின்றது. மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டை அதிகரிக்க மத்திய அரசிடம் வலியுறுத்தி இருக்கின்றோம். இந்த விவகாரத்தில் தமிழக அரசை மத்திய அரசு வஞ்சிக்கின்றது.
பருப்பு, பாமாயில், சக்கரை போன்றவற்றை எவ்வளவு விலை கொடுத்தும் அரசால் வாங்கி விட முடியும். எதிர்கட்சி என்பதால் மத்திய அரசு தமிழக அரசை வஞ்சிக்கின்றது. கோதுமை, மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டை ஒன்றிய அரசு குறைத்து இருக்கின்றது.
ரேஷன் கடைகளில் இரு விதமான அரிசி விநியோகம் செய்யப்பட்டாலும், மக்கள் எந்த அரிசியை விரும்புகின்றனரோ அதை மட்டுமே கொடுப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஒரு தோட்டத்தின் அருகில் பதுங்கி இருந்த யானை ஒன்று ராஜப்பனை பின்தொடர்ந்து விரட்டி வந்தது.
- போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து யானை மிதித்து உயிரிழந்த ராஜப்பன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கோவை:
கோவை ஆனைகட்டி அருகே தூமனூரை சேர்ந்தவர் ராஜப்பன் (வயது43). கட்டிட தொழிலாளி. இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் ராஜப்பன் சம்பவத்தன்று வழக்கம் போல் காலையில் வேலைக்கு சென்றார்.
பின்னர் மாலையில் வேலை முடிந்து மீண்டும் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டார். தூமனூர், செம்புக்கரை பிரிவு வழியாக வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.
அப்போது அங்குள்ள ஒரு தோட்டத்தின் அருகில் பதுங்கி இருந்த யானை ஒன்று ராஜப்பனை பின்தொடர்ந்து விரட்டி வந்தது.
இதனால் அதிர்ச்சியான அவர் அங்கிருந்து தப்பியோட முயற்சி செய்தார். ஆனால் அதற்குள்ளாகவே அந்த யானை விரட்டி சென்று துதிக்கையால் தூக்கி வீசி காலால் மிதித்தது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அந்த வழியாக வந்தவர்கள் பார்த்து தடாகம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து யானை மிதித்து உயிரிழந்த ராஜப்பன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக தடாகம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கோவை கார் வெடிப்பு தொடர்பாக விரைவான நடவடிக்கையை தமிழக அரசு எடுத்தது.
- தமிழ்நாட்டில் மட்டும் இருந்த திராவிட மாடல், தற்போது இந்தியா முழுவதும் பரவி உள்ளது.
கோவை:
கோவை மாவட்டம் சூலூரில் மாவட்ட வர்த்தக சங்கம் சார்பில் 2-வது ஆண்டு விழா, தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:-
தமிழக அரசு வர்த்தகர்களை அழைத்து பேசி ஆலோசனைகளை பெற்று நிதிநிலை அறிக்கை தயார் செய்து வணிகர்களுக்கு உதவி செய்து வருகிறது.
மாநில கவர்னர்கள், இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி பணியாற்ற வேண்டியவர்கள். இந்தியா மத சார்பற்ற நாடு. இந்தியாவில் சட்டத்தின் ஆட்சிதான் நடைபெறுகிறது. மதசார்பற்ற நாடு என்பதை மறைத்து, மதசார்புள்ள நாடுதான் என்று திணிப்பது போன்று கவர்னர்கள் பேசுவது தவறானது.
அரசியல் கட்சி பிரமுகர்களை போல ஆளுங்கட்சிக்கு எதிராக தொடர்ந்து கருத்துகளை தமிழக கவர்னர் பரப்பி வருவதும், திராவிட மாடல் காலாவதியாகிவிட்டது என்பது போல சொல்வதும் சரியானது இல்லை.
கோவை கார் வெடிப்பு தொடர்பாக விரைவான நடவடிக்கையை தமிழக அரசு எடுத்தது. இது தொடர்பாக ஏதாவது ஆதாரம் இருந்தால் அரசிடமோ, உள்துறையிடமோ அல்லது பிரதமர், ஜனாதிபதியை சந்தித்தோ புகார் தெரிவிக்காமல் நான்காம் தர அரசியலை தமிழக கவர்னர் செய்கிறார்.
சட்டத்துக்கு புறம்பாக பேசி நான்காம் தர அரசியல் செய்ய வேண்டாம். தமிழ்நாட்டில் மட்டும் இருந்த திராவிட மாடல், தற்போது இந்தியா முழுவதும் பரவி உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
- எனது கணவர் அடிக்கடி எனக்கு தெரியாமல் சுப்புலட்சுமியுடன் பேசி வந்தார்.
- சம்பவத்தன்று சுப்புலட்சுமியை எனது கணவர் எங்களது வீட்டிற்கு அழைத்து வந்தார்.
கோவை:
கோவை அருகே உள்ள இடையர் பாளையத்தை சேர்ந்தவர் ராஜன். இவரது மகள் சுப்புலட்சுமி (வயது 20). கல்லூரி மாணவி. இவர் பொள்ளாச்சி டி. கோட்டாம்பட்டியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குத்தி கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.
இது குறித்து மகாலிங்கபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கொலை நடந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த சுஜய் (27), அவரது மனைவி 8 மாத கர்ப்பிணியான ரேஷ்மா (23) ஆகியோர் சுப்புலட்சுமியை குத்திக்கொலை செய்தது தெரிய வந்தது. கேரள மாநிலம் கண்ணூரில் பதுங்கி இருந்த தம்பதியை நேற்று போலீசார் கைது செய்தனர்.
ரேஷ்மாவிடம் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-
எனது சொந்த ஊர் கேரள மாநிலம். நான் கோவை இடையர்பாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தேன். அப்போது அந்த நிறுவனத்தில் வேலை பார்த்த எனது கணவரான சுஜயுடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் காதலாக மாறியது. நாங்கள் 2 பேரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்தோம். அடுத்து சில மாதங்களில் நான் குடும்ப சூழ்நிலை காரணமாக எனது காதலனை பிரிந்து கேரளாவுக்கு சென்றேன்.
அதன்பின்னர் சுஜய், கவுண்டம்பாளையத்தில் புதிய நிறுவனத்தை தொடங்கி நடத்தி வந்தார். அப்போது அந்த நிறுவனத்தில் கல்லூரி மாணவியான சுப்புலட்சுமி வேலைக்கு சேர்ந்து உள்ளார். அவர் வேலைக்கு வரும் போது அவரை ஒரு வாலிபர் பின் தொடர்ந்து சென்று காதலிக்குமாறு தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனை அவர் சுஜயிடம் கூறி உள்ளார். உடனடியாக அவர் அந்த வாலிபரை எச்சரித்து பிரச்சினையை சரி செய்து உள்ளார். இதனால் எனது கணவர் மீது சுப்புலட்சுமிக்கு ஈர்ப்பு ஏற்பட்டது. பின்னர் அது காதலாக மாறி உள்ளது. சுஜய் என்னை காதலிப்பதை மறைத்து சுப்புலட்சுமியுடன் பழகி வந்தார்.
கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன்பு சுஜயை நான் மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அப்போது மீண்டும் எங்களுக்கு இடையே காதல் மலர்ந்தது. பின்னர் நாங்கள் திருமணம் செய்து கொண்டோம். நாங்கள் பொள்ளாச்சி டி. கோட்டாம்பட்டியில் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாடகைக்கு எடுத்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தோம். இதன் காரணமாக நான் கர்ப்பமானேன். தற்போது 8 மாத கர்ப்பமாக உள்ளேன்.
இந்தநிலையில் எனது கணவர் அடிக்கடி எனக்கு தெரியாமல் சுப்புலட்சுமியுடன் பேசி வந்தார். இதனையடுத்து நான் அவரை கண்டித்தேன். அப்போது எங்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் என்னை விட்டு எனது கணவர் பிரிந்து சென்று விடுவாரோ என்ற பயத்தில் இருந்த நான் சுப்புலட்சுமியை வீட்டிற்கு அழைத்து வாருங்கள், பேசி தீர்த்து கொள்ளலாம் என கூறினேன்.
சம்பவத்தன்று சுப்புலட்சுமியை எனது கணவர் எங்களது வீட்டிற்கு அழைத்து வந்தார். வீட்டில் இருந்த என்னை பார்த்ததும் அவர் அதிர்ச்சியடைந்தார். அப்போது தான் எனது கணவர் என்னை திருமணம் செய்ததை மறைத்து சுப்புலட்சுமியுடன் பழகியது எனக்கு தெரியவந்தது.
நான் சுப்புலட்சுமியிடம் எங்களுக்கு திருமணம் ஆகி விட்டது. தற்போது கர்ப்பமாக உள்ளேன். எனவே எனது கணவரிடம் பேசுவதையும், பழகுவதையும் கைவிட வேண்டும் என கூறினேன். அவர் எனது கணவரை தகாத வார்த்தைகளால் பேசினார். இதனால் எங்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. 2 பேரும் ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கி கொண்டோம். இதில் ஆத்திரம் அடைந்த நான் அங்கு இருந்த கத்தியை எடுத்து சுப்புலட்சுமியின் வயிற்றில் குத்தினேன். இதில் நிலைகுலைந்த அவர் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார். கத்திக்குத்தில் படுகாயம் அடைந்த அவர் வலி தாங்க முடியாமல் சத்தம் போட்டார். எனது கணவர் சத்தம் வெளியே வராமல் இருக்க மற்றொரு கத்தியை எடுத்து அவரது கழுத்து உள்ளிட்ட இடங்களில் குத்தினார். இதில் சம்பவ இடத்திலேயே சுப்புலட்சுமி துடிதுடித்து இறந்தார்.
பின்னர் நாங்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் கேரளாவுக்கு தப்பி சென்றோம். கண்ணூர் உள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கி இருந்தோம். போலீசார் விசாரணை நடத்தி எங்களை கைது செய்து விட்டனர்.
இவ்வாறு அவர் அளித்த வாக்குமூலத்தில் கூறினார்.
பின்னர் போலீசார் கைது செய்யப்பட்ட சுஜய், ரேஷ்மா ஆகியோரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
- 2 ஊழியர்கள் ஜெப கூடத்தில் ஜன்னலை பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
- இதுகுறித்து ஆனந்தன் செல்வபுரம் போலீசில் புகார் அளித்தார்.
கோவை,
கோவை பேரூர் மெயின் ரோடு தனலட்சுமி நகரை சேர்ந்தவர் ஆனந்தன் (48). வியாபாரி. இவர் செல்வபுரம் எல்ஐசி காலனி சிஜிவி நகரில் ஜெப கூடம் நடத்தி வருகிறார். இந்தநிலையில், நேற்று 2 ஊழியர்கள் இவரது ஜெப கூடத்தில் ஜன்னலை பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் அவர்களிடம் தகராறு செய்தார். மேலும் அங்கிருந்த லேப்டாப்பை அடித்து உடைத்து சேதப்படுத்தினார். தொடர்ந்து அங்கு வேலை பார்த்து கொண்டிருந்த 2 பேரை தாக்கி மிரட்டல் விடுத்தார். இது குறித்து ஊழியர்கள் செல்போன் மூலம் ஆனந்தனுக்கு தகவல் கொடுத்தனர். அவர் இதுகுறித்து செல்வபுரம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
அதில், முன் விரோதம் காரணமாகவும், பணம் கொடுக்கல் வாங்கல் காரணமாக இந்த சம்பவம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதனையடுத்து போலீசார் ஜெப கூடத்தில் புகுந்து ஊழியர்களை தாக்கி மிரட்டிய செட்டிபாளையம் பேரூர் மெயின் ரோட்டை சேர்ந்த கந்து வட்டி தொழில் செய்யும் சுசாந்த் (36) என்பவரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
- போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நாகராஜின் உடலை ஆய்வு செய்தனர்.
- நாகராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
குனியமுத்தூர்,
கோவை குனியமுத்தூர் ரைஸ்மில் ரோட்டை சேர்ந்தவர் நாகராஜ் (வயது42) மனநலம் பாதிக்கப்பட்டவர். இன்று காலை 8 மணியளவில் அந்தப் பகுதியில் உள்ள குழிபைப் சந்து அருகே தலையில் மற்றும் உடலில் பலத்த காயங்களுடன் நாகராஜ் இறந்து கிடந்தார்.
இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து குனியமுத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நாகராஜின் உடலை ஆய்வு செய்தனர். அப்போது யாரோ ஒருவர் அவரை உருட்டு கட்டையால் தலை மற்றும் உடலில் தாக்கி கொலை செய்தது தெரிய வந்தது. பின்னர் போலீசார் நாகராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து குனியமுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மனநலம் பாதிக்கப்பட்டவரை அடித்து கொலை செய்தவர் யார் என்பது குறித்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
- 1000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
- 25-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் குண்டு, கட்டாக தூக்கி கைது செய்தனர்.
கோவை,
சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் கோவையில் உள்ள 3 வணிக வளாகங்களில் உள்ள தியேட்டர்களில் இன்று வெளியிடப்பட்டுள்ளது. கோவையில் ஒரு சில அமைப்புகள் படத்தை திரையிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து முற்றுகை போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து இருந்தனர்.
இதனை முன்னிட்டு 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் வெளியாகி உள்ள 3 வணிக வளாகங்கள் முன்பு 1000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் தடையையும் மீறி இன்று புரூக் பாண்ட் ரோட்டில் உள்ள வணிகவளாகத்தை தமிழக முஸ்லீம் முன்னேற்ற கழக நிர்வாகிகள் மத்திய மாவட்ட பொறுப்பாளர் சர்புதீன் தலைமையில் திரண்டு முற்றுகையிட திரண்டனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
ஆனால் தடுப்புகளையும் மீறி த.மு.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது போலீசாருக்கும், அவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் 25-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் குண்டு, கட்டாக தூக்கி கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
திரைப்படம் வெளியாகி உள்ள வணிக வளாகத்தில் போடப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாநகர போலீஸ் துணை கமிஷனர் சந்தீஷ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
3 வணிக வளாகங்களில் தி கேரளா ஸ்டோரி படம் திரையிடப்படுகிறது. பாதுகாப்பு கருதி மாநகர் முழுவதும் 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்கள் படத்தை பார்க்க வரும் போது சோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள்.
மெட்டல் டிடெக்டர் மூலமாக பொதுமக்கள் அனைவரையும் சோதனை செய்த பின்னரே மால்களில் அனுமதிக்கப்படுகின்றனர். உடைமைகள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படும். எனவே தியேட்டர்கள், வணிக வளாகங்கள் மட்டுமின்றி கோவை மாநகரம் முழுவதும் போலீஸ் பாது காப்பு போடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- மேய்ச்சலுக்கு வந்த மாட்டை சிறுத்தை கொன்றதால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்
- சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க மக்கள் கோரிக்கை
மேட்டுப்பாளையம்,
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே காரமடை வனச்சரத்திற்குட்பட்ட முத்துக்கல்லூர் பகுதியில் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வருபவர் கோவிந்தராஜ்.
இவர் 10 பசு மாடுகளை வைத்து பால் உற்பத்தியில் ஈடுபட்டு வரும் நிலையில் நேற்று மாலை முத்துக்கல்லூர் கிராமத்தில் தோகைமலை அடிவார பகுதியில் மேய்ச்சலுக்காக அழைத்து சென்றுள்ளார். அப்போது அங்கு மேய்ச்சல் நிலத்தில் மேய்ந்து கொண்டிருந்த பசு மாட்டை ஒன்றை வனப்பகுதியினுள் இருந்து வெளியே வந்து பதுங்கி இருந்த சிறுத்தை ஒன்று பசு மாட்டை தாக்கி இழுத்து சென்றுள்ளது.
பசுமாட்டின் அலறல் சத்தம் கேட்டு அங்கு கோவிந்தராஜ் சென்று பார்த்தபோது அங்கு புதரில் மறைந்து இருந்த சிறுத்தை, பசுமாட்டை கடித்து இழுத்து சென்றதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் கோவிந்தராஜ் இதுகுறித்து காரமடை வனத்துறையினருக்கு தகவல் அளித்தார். தகவலறிந்து அங்கு விரைந்து வந்த காரமடை வனத்து றையினர், அங்கு சென்று பார்த்த போது அங்குள்ள ஒரு புதர் பகுதியில் வைத்து பசு மாட்டினை சிறுத்தை கடித்து கொன்று ரத்தத்தை குடித்து விட்டு சென்றது தெரியவந்தது.
இதனையடுத்து உயிரிழந்த பசுவை ஆய்வு செய்த போது சிறுத்தை தாக்கியதை உறுதி செய்தனர். மேலும் இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
- ஐடிஐயின் முதல்வரை நேரில் அழைத்து விசாரணை நடத்தினர்.
- போலீசாரின் உதவியுடன் 17 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது
மேட்டுப்பாளையம்,
மேட்டுப்பாளையம் - சிறுமுகை சாலையில் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் ஐடிஐ செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் சுமார் 800க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இங்கு கடந்த 2017-19, 2018- 2020,2019-2021ம் கல்வியாண்டில் இங்கு ஐடிஐயில் படித்த மாணவ, மாணவிகள் ஒவ்வொருவரிடமும் ரூ.5 முதல் ரூ.10 ஆயிரம் வரை கல்வி கட்டணத்தை விட கூடுதலாக பெற்றதாக கூறப்படுகிறது.
மேலும், மாணவர்களின் கல்வியாண்டு முடிந்த பின்னரும் அவர்களுக்கான சான்றிதழை வழங்காமல் மாணவர்களை இழுத்தடிப்பு செய்ததாக மாணவர்கள் தரப்பில் குற்றம்சாட்டி உள்ளனர். ஆனால், ஒரு சில மாணவர்களுக்கு மட்டுமே சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.இதனிடையே, கடந்த 10 நாட்களுக்கு முன் இந்நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வந்த ஐடிஐ-யில் படித்த முன்னாள் மாணவர்கள் தங்களுக்கு கல்விச் சான்றிதழ் வழங்குவதில் தாமதம் செய்து வருவதாக கல்லூரி நிர்வாகத்திடம் கேட்டு வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து கல்லூரி நிர்வாகம் 15 நாட்களுக்குள் மாணவர்களுக்கு தேவையான சான்றிதழ் மற்றும் அவர்கள் கட்டணத்தை விட அதிகமாக கட்டிய ரொக்கப்பணத்தை வழங்குவதாக மாணவர்களிடம் கூறியதாக தெரிகிறது. இதனிடையே சான்றிதழ் மற்றும் பணத்தை இழந்த 17 மாணவர்கள் நேற்று மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையத்தில் ஐடிஐயில் படித்தபோது தங்களிடம் பணம் கையாடல் செய்துள்ளதுடன், சான்றிதழ்களும் வழங்கவில்லை என புகார் அளித்தனர். இதனையடுத்து, மேட்டுப்பாளையம் இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன், உதவி இன்ஸ்பெக்டர் செல்வ நாயகம் உள்ளிட்டோர் ஐடிஐயின் முதல்வரை நேரில் அழைத்து விசாரணை நடத்தினர்.
அதன்பின் கல்லூரியில் படித்து சான்றிதழ் பெறாதவர்களுக்கு முதற்கட்டமாக சான்றிதழ்களை வழங்க ஏற்பாடு செய்து கொடுத்துள்ளனர். தொடர்ந்து மாணவர்கள் இழந்த பணத்தை விரைவில் பெற்று தருவதாக கூறியதை தொடர்ந்து மாணவர்கள் அங்கிருந்து கல்லூரிக்கு சென்று சான்றிதழ்களை பெற்றுச்சென்றுள்ளனர். மேலும், இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து மாணவர்கள் கூறுகையில், "ஐடிஐ . முதல்வர் தங்களிடம் ரூ.5,000 முதல் ரூ.15,000 வரை பணத்தை பெற்றுள்ளார். ஆனால், கூடுதலாக பணம் கட்டினால் தான் சான்றிதழ் வழங்கப்படும் என தொடர்ந்து தங்களிடம் கூறி வந்தார். ஆனால், நாங்கள் கல்லூரிக்கு கட்ட வேண்டிய அனைத்து தொகைகளையும் கட்டியுள்ளோம். இவர் எங்களிடம் பெற்ற பணத்தை கல்லூரி நிர்வாகத்திடம் கட்டவில்லை என நிர்வாக அதிகாரிகள் எங்களிடம் கூறுகின்றனர். எனவே, எங்களுக்கு கல்விச்சான்றிதழையும், எங்களிடம் பெற்ற கூடுதல் பணத்தையும் திருப்பி கொடுக்க வேண்டும் என மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளோம். போலீசாரின் உதவியுடன் 17 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது" என்றனர்.
இதுகுறித்து கல்லூரியின் செயலாளர் கூறுகையில்,"ஐடிஐயின் முதல்வர் தங்களது கல்லூரியில் கடந்த 2017ம் ஆண்டு முதல் பணியாற்றி வருவதாகவும், அவர் ஐடிஐயில் படித்த மாணவர்களிடம் பெற்ற கல்வி கட்டணத்தை முறையாக நிர்வாகத்திற்கு கட்டாமல் இருந்துள்ளனர். இது மாணவர்கள் மூலம் நிர்வாகத்திற்கு தெரிய வந்துள்ளது. இதனையடுத்து கல்லூரியின் நிர்வாகம் தரப்பில் முதல்வருக்கு கடந்த 29-ந் தேதியில் இருந்து வரும் 12-ந் தேதிக்குள் மாணவர்களிடம் பெற்ற பணத்தை திருப்பி அளிக்க வேண்டுமென நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. தற்போது மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு சான்றிதழ் கேட்டுச் சென்ற மாணவர்களுக்கு முதற்கட்டமாக சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது" என்றார்.
- சோனாவுக்கு அவரது கணவரின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை,
பொள்ளாச்சி அருகே உள்ள கருமாபுரம்புதூரை சேர்ந்தவர் ஆனந்தகுமார். இவரது மனைவி சோபனா (வயது 33). தனியார் பள்ளி ஆசிரியை இவர்களுக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஒரு பெண் குழந்தை உள்ளது. சோனாவுக்கு அவரது கணவரின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
சம்பவத்தன்று மீண்டும் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த சோபனா வீட்டில் உள்ள அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து நெகமம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் போலீசார் தற்கொலை செய்து கொண்ட தனியார் பள்ளி ஆசிரியை சோபனாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் திருமணமான 4 வருடத்தில் சோபனா தற்கொலை செய்து கொண்டதால் ஆர்.டி.ஓ. விசாரணை நடந்து வருகிறது.
- சந்தன மரத்தை கடத்தியதாக பெரியநாயக்கன்பாளையம் வனச்சரக அலுவலருக்கு தகவல் கிடைத்தது.
- வனச்சரக அலுவலர் செல்வராஜ் தலைமையிலான வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
கவுண்டம்பாளையம்,
கோவை பெரியநாயக்கன்பாளையம் அடுத்துள்ள கூடலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் புதிய கட்டுமானம் கட்டுவதற்கு அங்கிருந்த பல இன மரங்களை வெட்டும்பொழுது, அதில் இருந்த ஒரு சந்தன மரத்தையும் வெட்டி, அதன் அடித்துண்டை செதுக்கி, கடத்தி விட்டதாக பெரியநாயக்கன்பாளையம் வனச்சரக அலுவலருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து வனச்சரக அலுவலர் செல்வராஜ் தலைமையிலான வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் சந்தன மரங்களை வெட்டி கடத்திச் சென்றது நியூ ஹவுசிங் யூனிட் பகுதியை சேர்ந்த திருமலைசாமி (53), குணசீலன் (40), சுதாகர் (33), சரவணன்(33), ரமேஷ்(28), கோவிந்தசாமி(43), இளவர சன்(33) ஆகிய 7 பேரையும் பிடித்தனர்.
மேலும் சந்தன மரத்தை வெட்டி கடத்திச் சென்ற அவர்கள் மீது கோவை மாவட்ட வன அலுவலர் உத்தரவின் பேரில், கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட முதல் 2 பேருக்கு ரூ.25 ஆயிரம் மற்றும் வெட்டி கடத்திய மற்ற 5 நபர்களுக்கு ரூ.10 ஆயிரம் என மொத்தம் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.






