என் மலர்tooltip icon

    கோயம்புத்தூர்

    • கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் கோவில் டவுன்ஹால் பகுதியில் அமைந்துள்ளது.
    • கோவிலில் உண்டியல் உடைத்து கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கோவை,

    கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் கோவில் டவுன்ஹால் பகுதியில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் இன்று அதிகாலையில் கோவில் உண்டியல் பூட்டு உடைக்கப்பட்டு திருட்டு போயிருப்பதை கோவில் பாதுகாவலர் ஒருவர் பார்த்தார்.

    நள்ளிரவில் கோவிலுக்குள் நுழைந்த மர்ம நபர்கள் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உடனே இது குறித்து கோவில் நிர்வாகத்தினருக்கு தகவல் கொடுத்தார்.

    அவர்கள் இந்த சம்பவம் தொடர்பாக உக்கடம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் கோவிலில் ஆய்வு செய்தனர். மேலும் அங்கிருந்த சி.சி.டி.வி காமிரா காட்சிகளை கைப்பற்றி பணத்தை கொள்ளையடித்து சென்ற நபர்களின் உருவம் பதிவாகியுள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

    மேலும் உண்டியலில் எவ்வளவு பணம் இருந்தது? அதனை கொள்ளையடித்து சென்றவர்கள் யார்? இந்த சம்பவத்தில் ஒரே நபர் ஈடுபட்டாரா? அல்லது கூட்டு சேர்ந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்களா? என பல்வேறு கோணங்களில் போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். கோவையில் பிரசித்தி பெற்ற கோனியம்மன் கோவிலில் உண்டியல் உடைத்து கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • நேற்றுமுன்தினம் இரவு தெய்வானையம்மாள் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
    • தெய்வானையம்மாளின் கை, தலை பகுதியில் காயங்கள் இருந்தது.

    பொள்ளாச்சி,

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி வடுகபாளையத்தைச் சேர்ந்தவர் தெய்வானையம்மாள் (வயது 75). இவரது கணவர் இறந்து விட்டார். தெய்வானையம்மாள் தனியாக வசித்து வந்தார்.

    நேற்றுமுன்தினம் இரவு தெய்வானையம்மாள் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதைப்பார்த்த உறவினர் ஒருவர் பொள்ளாச்சி மேற்கு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    அப்போது தெய்வானையம்மாளின் கை, தலை பகுதியில் காயங்கள் இருந்தது. அவரை மர்மநபர்கள் கழுத்தை நெரித்து கொலை செய்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அவரது வீட்டில் இருந்த 7 அரை பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.21 ஆயிரம் பணமும் கொள்ளைபோய் இருந்தது. இதனால் நகை, பணத்துக்காக தெய்வானையை யாராவது கொலை செய்து விட்டு தப்பிச் சென்றது தெரியவந்தது.

    தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரி (40) என்ற பெண் தெய்வானையம்மாள் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்தது தெரியவந்தது. அவரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.

    அப்போது ஈஸ்வரியுடன் அவரது மகன் சஞ்சய் பழனி (19), அவரது நண்பர் கவுதமன் (19) மற்றும் 16 வயது சிறுவன் ஆகியோர் சேர்ந்து மூதாட்டியை கொலை செய்து விட்டு நகை, பணத்தை எடுத்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து ஈஸ்வரி உள்பட 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். மூதாட்டியிடம் இருந்த நகை, பணத்தை அபகரிக்க பல நாட்கள் திட்டமிட்டு இருந்ததாகவும், சம்பவத்தன்று மாலை அவர் தூங்கிக் கொண்டு இருந்த போது கழுத்தை நெரித்து கொள்ளையடித்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

    இவர்கள் தவிர பானுமதி (30) என்ற பெண்ணையும் போலீசார் கைது செய்தனர். கொலையாளிகள் பற்றிய விவரம் தெரிந்தும் அதனை மறைத்து அவர்களுக்கு உதவியதாக பானுமதி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கைதான 5 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    • ஸ்ரீதர் வாட்ஸ்-அப் கால் மூலமே போதைப்பொருள் கும்பலுடன் பேசி இருக்கிறார்.
    • இந்தநிலையில் நேற்று ஸ்ரீதர் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

    கோவை,

    கோவையில் கஞ்சா, போதை மாத்திரரை, மருந்து சப்ளையில் ஈடுபட்ட கும்பலை போலீசார் தேடி வந்தனர். அந்த கும்பல் பெங்களூருவில் பதுங்கி இருந்தது. இதையடுத்து கோவை போலீசார் பெங்களூர் சென்று சுஜிமோகன் (26) உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனர்.

    இந்த போதைப்பொருள் விற்பனை கும்பலுக்கு ரேஸ்கோர்ஸ் போலீஸ்நிலையத்தில் கான்ஸ்டபிளாக வேலை பார்த்த ஸ்ரீதர் (29) என்பவர் பல்வேறு வகையில் உதவி செய்தது விசாரணையில் தெரியவந்தது. சுந்தராபுரம் அஷ்டலட்சுமி நகரைச் சேர்ந்த ஸ்ரீதர் பண ஆசையில் போதைப்பொருளை எப்படி கடத்துவது, எந்த பகுதியில் போலீஸ் சோதனை செய்கிறார்கள்? என்பது போன்ற பல்வேறு தகவல்களை அந்த கும்பலுக்கு அவ்வப்போது அளித்துள்ளார்.

    ஸ்ரீதர் ஆலோசனையின் பேரில் போதைப்பொருள் கடத்தல் கும்பலும் போலீசாரிடம் சிக்காமல் கோவையில் சமூக விரோத செயலில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

    ஸ்ரீதர் தான் எந்தவகையிலும் பிரச்சினையில் சிக்கி விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்துள்ளார். இதனால் வாட்ஸ்-அப் கால் மூலமே போதைப்பொருள் கும்பலுடன் பேசி இருக்கிறார். ஆனால் ஸ்ரீதர் பேசுவதை அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் பதிவு செய்து வைத்திருந்துள்ளனர்.

    போலீசாரிடம் அந்த கும்பல் சிக்கியதும் அவர்களின் செல்போனை ஆய்வு செய்தனர். அப்போது செல்போனில் போலீஸ்காரர் ஸ்ரீதர், அவர்களுடன் பேசிய ஆடியோக்கள் ஏராளமான இருந்தன. அந்த உரையாடல்களை கேட்ட போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதைத்தொடர்ந்து போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்கு உதவியதாக வழக்குப்பதிவு செய்து ஸ்ரீதரை கைது செய்தனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் ஜெயிலில் அடைக்கப்பட்டார். இந்தநிலையில் நேற்று ஸ்ரீதர் சஸ்பெண்டு செய்யப்பட்டார். துறை ரீதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    இந்தநிலையில் ஸ்ரீதரை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக போலீசார் கோவை கோர்ட்டில் நாளை மனுத் தாக்கல் செய்ய உள்ளனர்.

    • கொரோனா பரவல் காரணமாக, பழனிவேலால் வெளிநாடு செல்ல முடியவில்லை.
    • வாழ்க்கையில் விரக்தி அடைந்த பழனிவேல் விஷத்தை எடுத்து குடித்தார்.

    கோவை,

    கோவை சுந்தராபுரம் அருகே குறிச்சி ஹவுசிங் யூனிட் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி (வயது57). இவருக்கு 3 மகன்கள் உள்ளனர். இவரது மூத்த மகன் பழனிவேல் (26).

    இவர் என்ஜினீயரிங் படித்து விட்டு ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் பழனிவேலை அவரது தந்தை வெளிநாட்டிற்கு வேலைக்காக செல்ல கடன் வாங்கி ஏற்பாடு செய்துள்ளார். கொரோனா பரவல் காரணமாக, பழனிவேலால் வெளிநாடு செல்ல முடியவில்லை. இதனால் அவரது தந்தைக்கு பணம் இழப்பு ஏற்பட்டது.

    இந்நிலையில் பழனிசாமி மீண்டும் தனது மகனை வேலைக்காக வெளிநாட்டிற்கு செல்ல ஏற்பாடு செய்தார். இதனால் பழனிவேல் தனது தந்தையின் கஷ்டத்தை எண்ணி கவலைப்பட்டார். இந்த நிலையில், பழனிசாமி அவரது மனைவி மற்றும் அவர்களது 2 மகன்களுடன் வெளியே சென்றார். இந்நிலையில் பழனிவேல் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த பழனிவேல் விஷத்தை எடுத்து குடித்தார்.

    இதையடுத்து பழனிவேல் தாயார் வீடு திரும்பியபோது அவரது மகன் பழனிவேல் விஷம் குடித்து விட்டு வீட்டில் மயக்கம் அடைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அவரது கணவர் பழனிசாமிக்கு தகவல் தெரிவித்தார்.

    இதை அறிந்த பழனிசாமி அங்கு விரைந்து சென்று அவரை மீட்டு தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றார். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் பழனிவேல் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து போத்தனூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தமிழக அரசு இந்த பஸ் நிலையத்தை புனரமைக்க ரூ.4 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டது.
    • நகராட்சி நிர்வாகம் சார்பில் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றப்பட்டன.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையத்தில் 40 ஆண்டுகள் பழமையான பஸ் நிலையம் செயல்பட்டு வருகிறது. நீலகிரி, கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களின் நுழைவு வாயிலான மேட்டுப்பாளையம் பஸ் நிலையத்தை நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக கல்விக்காகவும், பணிகளுக்காகவும், கோவை, திருப்பூர், நீலகிரி செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் நாள்தோறும் அதிகளவில் இந்த பஸ் நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் சுமார் 40 ஆண்டு கால பழமையான மேட்டுப்பாளையம் பஸ் நிலையத்தின் பல்வேறு பகுதிகள் இடிந்து விழும் நிலையில் இருந்து வருகின்றன. இதனால் தமிழக அரசு இந்த பஸ் நிலையத்தை புனரமைக்க ரூ.4 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உத்தர விட்டது.

    இந்த நிலையில் இந்த பஸ் நிலையத்தில் காரமடை, வெள்ளியங்காடு, அன்னூர், புளியம்பட்டி செல்லும் பஸ்கள் நிற்கும் நிறுத்தத்தில் இருக்கும் கட்டிடத்தின் மேற்கூரைகள் இடிந்து விழும் நிலையில் இருந்தன.

    இதனை அறிந்த மேட்டுப்பாளையம் நகர் மன்றத்தலைவர் மெஹரீபா பர்வீன் அஷ்ரப் அலி, நகராட்சி பொறியாளர் சோமசுந்தரம், வருவாய் ஆய்வாளர் ஆரிப் உள்ளிட் டோர் கட்டிடங்களின் மேல் தளத்தை ஆய்வு மேற்கொண்டனர். பின்னர், இடிந்து விழும் நிலையில் இருந்த கட்டிடங்களின் மேல் தளத்தை பயணிகளின் பாதுகாப்பு கருதி நகராட்சி நிர்வாகம் சார்பில் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றப்பட்டன. முன்னதாக இந்த கட்டிடத்தின் வழியாக பொதுமக்கள் மற்றும் பயணிகள் செல்லாதவாறு கயிறுகளை கட்டி நகராட்சி பணியாளர்கள் மூலம் எச்சரிக்கை விடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • விஷாலை அரிவாளை காட்டி மிரட்டி பணத்தை கொள்ளையடிக்க முயன்றார்.
    • கொள்ளையனை பெரிய கடை வீதி போலீசில் ஒப்படைத்தனர்.

    கோவை,

    கோவை அருகே பொன்னையராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் விஷால் (வயது31). இவர் அந்த பகுதியில் தங்கப்பட்டறை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் அவர் தனது மாமா ரவி மற்றும் ஜிதேந்தர் ஆகியோருடன் பட்டறையில் வேலை செய்து கொண்டு இருந்தார்.

    அப்போது, தலைக்கு கருப்பு முகமூடி மற்றும் கையுறைகளால் தலையை மூடி கொண்ட ஒருவர், திடீரென நகை பட்டறைக்குள் நுழைந்தார். அங்கு இருந்த விஷாலை அரிவாளை காட்டி மிரட்டி பணத்தை கொள்ளையடிக்க முயன்றார். இதையடுத்து பட்டறையில் வேலை பார்த்து கொண்டு இருந்த விஷால், மாமா ரவி மற்றும் ஜிதேந்தர் ஆகியோர் உதவியுடன் முகமூடி கொள்ளையனை மடக்கி பிடித்தனர்.

    இதையடுத்து முகமூடி கொள்ளையனை பெரிய கடை வீதி போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அந்த முகமூடி கொள்ளையன் கோவை ராஜா நகரை சேர்ந்த சுரேஷ் (53) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    • கருத்துக் கணிப்புகளின் அடிப்படையில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.
    • கோவையில் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட அரசுப் பொருள் காட்சியை இரண்டரை லட்சம் மக்கள் பார்வையிட்டனர்.

    கோவை,

    கோவை காந்திபுரம் மத்திய சிறை மைதானத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ளன அரசுப் பொருட்காட்சியை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திறந்து வைத்து பார்வையிட்டார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அரசின் பல்வேறு துறைகளில் மக்களுக்காக ஆற்றி வரும் பணிகள் குறித்து மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் பொருள் காட்சி அமைக்கப்பட்டுள்ளது. கோவையில் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட அரசுப் பொருள் காட்சியை இரண்டரை லட்சம் மக்கள் பார்வையிட்டனர். இதன் மூலம் ரூ.36 லட்சம் வருவாய் அரசுக்கு கிடைத்தது. இந்தப் பொருட்காட்சி மூலம் அரசுத் திட்டத்தை மக்கள் எவ்வாறு பெற வேண்டும் என்ற தெளிவு கிடைக்கிறது. இதனால், பொருள்காட்சி மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

    தற்போது பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் மாணவ, மாணவிகள், குழந்தைகள் குடும்பத்தோடு வந்து காணும் விதமாக பொருள்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் ஏற்கெனவே கூறப்பட்ட கருத்துக் கணிப்புகளின் அடிப்படையில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. தமிழகத்தில் தி.மு.க. அறிவித்த வாக்குறுதிகள் கர்நாடகத்தில் எதிரொலித்துள்ளது. இதேபோல, மற்ற மாநிலங்களிலும் மாற்றம் ஏற்படும். தென்மாநிலங்கள் பாஜகவைப் புறக்கணித்துள்ளதைப் போல மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் போது, வடக்கு மாநிலங்களிலும் மாற்றம் ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி ஆணையர் பிரதாப், கோவை மாநகர மாவட்ட தி.மு.க. செயலாளர் நா.கார்த்திக், மேயர் கல்பனா, துணை மேயர் வெற்றிச்செல்வன் உள்ளிட்டடோர் கலந்து கொண்டனர்.

    • கடந்த 2 மாதங்களில் 110 மில்லி மீட்டருக்கு மேல் மழை பெய்துள்ளது.
    • ஒருங்கிணைந்த பூச்சி, நோய் மேலாண்மையில் கோடை உழவு முக்கிய தொழில்நுட்பமாகும்.

    கோவை,

    கோவையில் தற்போது பெய்து வரும் மழையைப் பயன்படுத்தி கோடை உழவு மேற்கொள்ள விவசாயிகளுக்கு வேளாண்மைத் துறை இணை இயக்குநர் கா.முத்துலட்சுமி அறிவுறுத்தியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கோவை மாவட்டத்தில் கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கடந்த இரண்டு மாதங்களில் 110 மில்லி மீட்டருக்கு மேல் மழை பெய்துள்ளது. தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக நிலங்கள் ஈரத்தன்மையுடன் காணப்படுகின்றன. இதனைப் பயன்படுத்தி விவசாயிகள் கோடை உழவு மேற்கொள்ளலாம்.

    கோடை உழவு மேற்கொள்ளப்படும் போது மண்ணில் புதையுண்டு கிடக்கும் பூச்சிகளின் கூட்டுப்புழுக்கள் வெளியே கொண்டுவரப்பட்டு அழிக்கப்படுகின்றன.

    தீமை செய்யும் பூச்சிகளின் கூட்டுப்புழுக்களும், முட்டைகளும் அழிக்கப்படுவதால் அடுத்து சாகுபடி செய்யப்படும் பயிர்களில் நோய், பூச்சி தாக்குதல் குறைந்து பயிர்களின் வளர்ச்சியும், மகசூலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

    ஒருங்கிணைந்த பூச்சி, நோய் மேலாண்மையில் கோடை உழவு முக்கிய தொழில்நுட்பமாகும். அதேபோல, உழவின் போது களைச்செடிகளும், அதன் விதைகளும் அழிக்கப்படுவதால் பயிர் சாகுபடியின் போது களைகள் பிரச்சனையும் குறைகிறது. கோடை உழவின் மூலம் கிடைக்கும் மழைநீரை வீணாக்காமல் நிலத்துக்குள் சேகரிக்க முடியும். இது மண்ணின் தன்மையை அதிகரித்து காற்றோட்டத்தை ஏற்படுத்தி, நுண்ணுயிரிகளின் வளர்ச்சியை அதிகரிக்க செய்கிறது.

    கோடை உழவை சரிவுக்கு குறுக்கே உழவு செய்ய வேண்டும். இதனால், மண் அரிமானம் கட்டுப்படுத்தப்படுகிறது. கோடை உழவு செய்யாத வயல்களில் நீர் வேகமாக வழிந்ேதாடி மண் அரிமானம் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. எனவே, கோடை உழவு செய்வது விவசாயிகளுக்கு பல்வேறு வழிகளில் பயன்களைத் தருகிறது.

    கோடை உழவின் போது ஏக்கருக்கு 100 முதல் 150 கிலோ வேப்பம் புண்ணாக்கு இட்டு உழவு செய்வதன் மூலம் விவசாயிகளுக்கு மேலும் பல நன்மைகள் கிடைக்கும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தேர்தல் முடிவை வைத்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கனவு கொண்டிருக்கிறார்.
    • கர்நாடகாவில் பிரதான எதிர்கட்சி வாய்ப்பை பா.ஜ.க.விற்கு மக்கள் கொடுத்துள்ளனர்.

    கோவை:

    கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வும், பாரதிய ஜனதா தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் கோவையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    கர்நாடக தேர்தலில் மக்களின் தீர்ப்பை பாரதிய ஜனதா ஏற்கிறது. அங்கு ஆட்சி அமைக்க முடியாமல் போனது குறித்து கட்சி தலைமை கண்டிப்பாக ஆராயும். மக்களிடம் நெருக்கமான அனுகுமுறையை ஏற்படுத்த கர்நாடக தேர்தலை பார்க்கிறோம்.

    அந்த தேர்தல் முடிவை வைத்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கனவு கொண்டிருக்கிறார்.

    நிறைய முறை திராவிடத்தையும் மக்கள் புறக்கணித்துள்ளனர். கர்நாடகாவில் பிரதான எதிர்கட்சி வாய்ப்பை பா.ஜ.க.விற்கு மக்கள் கொடுத்துள்ளனர்.

    தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, கர்நாடக தேர்தலில் அவருடைய பங்களிப்பை நன்றாகவே செய்துள்ளார். கர்நாடக தேர்தல் முடிவு பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.விற்கு சவாலாக இருக்காது. பா.ஜ.க. வெற்றிக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கோவை மாநகரில் 286 அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஆய்வு செய்யப்பட்டதில் 894 மாணவ-மாணவிகள் தங்களது படிப்பை பாதியில் கைவிட்டது தெரியவந்தது.
    • 91 மாணவர்கள் மீண்டும் பள்ளிக்கு செல்ல தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.

    கோவை:

    கோவை மாநகர போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    கோவை மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிக்களில் உள்ள பள்ளிகளில் படித்து பல்வேறு சூழ்நிலைகள் காரணமாக பள்ளி படிப்பை பாதியில் விட்டு இடைநின்ற மாணவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மாணவர்களுக்கு தேவையான மருத்துவ வசதி, கல்வி உள்ளிட்ட அடிப்படை உதவிகள் குறித்து மாநகர போலீஸ் துறையின் தனி சிறுவர் காவல் உதவி பிரிவு, சட்டம் ஒழுங்கு பிரிவு ஆகியவை ஒருங்கிணைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    கோவை மாநகரில் 286 அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஆய்வு செய்யப்பட்டதில் 894 மாணவ-மாணவிகள் தங்களது படிப்பை பாதியில் கைவிட்டது தெரியவந்தது. இதில், 226 மாணவர்கள் சம்பந்தப்பட்ட போலீசார் நேரில் சந்தித்து படிப்பை பாதியில் விட்டதற்கான காரணம் குறித்து கேட்டறிந்தனர். தொடர்ந்து அவர்களுக்கு தகுந்த கவுன்சிலிங் வழங்கப்பட்டது.

    இதில், 91 மாணவர்கள் மீண்டும் பள்ளிக்கு செல்ல தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. இவர்கள் நடந்து முடிந்த முழு ஆண்டு தேர்வையும் எழுதினர். இதில் 12 பேருக்கு பள்ளி கட்டண உதவியும், 4 பேருக்கு மருத்துவ உதவியும் தன்னார்வ அமைப்புகள் மூலம் வழங்கப்பட்டன.

    கோவை மாநகரில் 702 மாற்றுத்திறனாளி மாணவ-மாணவிகள் உள்ளது கண்டறியப்பட்டது. இவர்களில் 316 பேரை சம்பந்தப்பட்ட போலீசார் கடந்த மார்ச் 1-ந் தேதி முதல் கடந்த 10-ந் தேதி வரை நேரில் சந்தித்து அவர்களின் குறைகள் குறித்து கேட்டறிந்தனர். இதில் 43 பேருக்கு பள்ளி கட்டணம், 5 பேருக்கு மருத்துவ உதவி செய்யப்பட்டதுடன், 2 பேரின் பெற்றோருக்கு வேலை வாய்ப்பும் வழங்கப்பட்டது.

    இதுதவிர குழந்தைகள் பாதுகாப்பு,இணை வழி குற்றங்கள் குறித்து பள்ளிகளுக்கு நேரடியாக சென்று போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதுதவிர கொலை குற்ற வழக்குகள், சாலை விபத்து வழக்குகள், போக்சோ வழக்குகள், குடும்ப பிரச்சினைகள் உள்ளிட்டவற்றில் பாதிக்கப்பட்டவர்களுக்கும், அவர்களது குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கும் கடந்த 2022-ம் ஆண்டு முதல் மனநல ஆலோசகர்கள் உதவியுடன் 131 பேருக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

    இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • உண்டியலை உடைக்க உலி மற்றும் கம்பிகளை பயன்படுத்தி உள்ளது தெரியவந்தது.
    • வடவள்ளி போலீசார் கைரேகைகள் மற்றும் சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

    வடவள்ளி,

    கோவை மருதமலை சாலை முள்ளை நகர் அருகே கருப்பராயன் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கீழ் இக்கோவில் செயல்பட்டு வருகிறது. இந்த கோவிலில் பாதுகாப்பு பணியில் கோவிந்தராஜ் என்பவர் உள்ளார். இந்நிலையில் இன்று அதிகாலையில் கோவிலில் ஏதோ? உடைப்பது போல் சத்தம் கேட்டது. சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்த பாதுகாவலர் கோவிந்தராஜ் கோவில் அருகே சென்று பார்த்தார். அப்போது கோவில் முன்பு உள்ள உண்டியல் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    அதே சமயத்தில் கோவில் பூசாரி கோவில் நடை திறப்பதற்காக வந்து உள்ளார். அவரிடம் நடந்ததை கோவிந்தராஜ் கூறினார். இதையடுத்து இருவரும் வடவள்ளி போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் 3 ேபர் கோவில் உண்டியலை உடைத்து துணியில பணத்தை சுற்றி எடுத்து செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. மேலும் உண்டியலை உடைக்க உலி மற்றும் கம்பிகளை பயன்படுத்தி உள்ளது தெரியவந்தது. இதனால் கோவில் மதில் சுவர் வரையில் பணம் மற்றும் சில்லைறை காசுகள் சிதறி கிடந்தது. இதையடுத்து போலீசார் கோவிலில் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். விசாரணை நடத்தி வருகின்றனர். 3 மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    இதேபோல் கோவை நியூ தில்லைநகரில் விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நேற்று இரவு புகுந்த மர்ம நபர்கள் பித்தளை விளக்குகள் மற்றும் பித்தளை சொம்புகள் உள்ளிட்ட பொருட்களை திருடி சென்றனர். இதனை அவ்வழியாக சென்றவர்கள் கோவில் கதவு உடைக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இதுகுறித்து வடவள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அவர்கள் கோவிலில் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

    ஆய்வில் கோவிலுக்குள் புகுந்து பித்தளை விளக்கு மற்றும் பித்தளை சொம்புகள் உள்ளிட்ட பொருட்களை திருடியது சம்பந்தமாக அந்த பகுதியை சேர்ந்த 4 சிறுவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இவர்கள் கருப்பராயன் கோவிலில் உள்ள உண்டியல் திருட்டில் ஈடுபட்டுள்ளார்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

    • தெய்வானையம்மாளின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • அந்த பெண் பிடிபட்டால் தான் தெய்வானையம்மாள் மரணத்தில் உள்ள மர்மங்கள் விலகும் என போலீசார் தெரிவித்தனர்.

    பொள்ளாச்சி,

    பொள்ளாச்சி அருகே உள்ள வடுகப்பாளையம் மணிமேகலை தெருவைச் சேர்ந்தவர் தெய்வானையம்மாள் (வயது 75). இவரது கணவர் மற்றும் 2 மகன்கள் இறந்து விட்டனர். இதனால் தெய்வானையம்மாள் தனியாக வசித்து வந்தார்.

    தெய்வானையம்மாளின் மற்றொரு வீட்டில் கேரளாவைச் சேர்ந்த 55 வயது பெண் ஒருவர் வாடகைக்கு இருந்தார். அவர் தெய்வானையம்மாளுக்கு தேவையான சில உதவிகளை செய்து வந்தார்.

    இந்தநிலையில் நேற்று மாலை அந்த கேரளா பெண், வீட்டு அருகே உள்ள பர்னீச்சர் கடைக்கு சென்று அங்குள்ளவர்களிடம் தெய்வானையம்மாள் வீட்டில் பேச்சு மூச்சின்றி கிடப்பதாக தெரிவித்தார். மேலும் தன்னுடைய மகளுக்கு பிரசவம் என்பதால் தான் கேரளா புறப்பட்டுச் செல்வதாகவும் கூறி விட்டு அங்கிருந்து சென்றார்.

    பொள்ளாச்சி சேரன் நகரில் வசித்து வரும் தெய்வானையம்மாளின் மருமகளுக்கு அக்கம்பக்கத்தினர் தகவல் தெரிவித்தனர். அவரும், அக்கம்பக்கத்தினரும் தெய்வானையம்மாளின் வீட்டுக்கு நேரில் சென்று பார்த்தனர். அங்கு தெய்வானையம்மாள் இறந்து கிடந்தார்.

    அதேசமயம் அவர் அணிந்திருந்த 7 பவுன் தங்கச் செயின், அரை பவுன் மோதிரம், ஒரு ஜோடி கம்மல் ஆகியவை மாயமாகி இருந்தது. இதுபற்றி போலீசார் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். தெய்வானையம்மாளின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    தெய்வானையம்மாள் வீட்டில் வசித்து வந்த கேரள பெண் யார், அவர் எதற்காக அவசரம், அவசரமாக அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்? என்பது பற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள். தெய்வானையம்மாள் இயற்கையாக இறந்தாரா அல்லது அவரை கொலை செய்து விட்டு அந்த பெண் நகைகளுடன் தப்பிச் சென்றாரா என்பது பற்றி போலீசார் விசாரிக்கிறார்கள். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். அந்த பெண் பிடிபட்டால் தான் தெய்வானையம்மாள் மரணத்தில் உள்ள மர்மங்கள் விலகும் என போலீசார் தெரிவித்தனர்.

    ×