என் மலர்tooltip icon

    கோயம்புத்தூர்

    • ஜான்சன் ஆலயத்துக்கு செல்வதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றுள்ளனர்.
    • ரத்தினபுரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    கோவை,

    கோவை ரத்தினபுரி பூம்புகார் நகரைச் சேர்ந்தவர் ஜான்சன் (வயது 35). வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆனதால் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் ஆலயத்திற்கு சென்றார்.

    அங்கு பிரார்த்தனை முடிந்து ஜான்சன் மற்றும் குடும்பத்தினர் மாமியார் வீட்டுக்கு சென்றனர். அந்த சமயம் வீட்டு உரிமையாளர் ஜான்சனுக்கு செல்போனில் பேசினார்.

    உங்கள் வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடக்கிறது. எனவே சந்தேகமாக இருப்பதாக அவர் தெரிவித்தார். உடனே ஜான்சன் வீட்டுக்கு விரைந்து வந்தார். வீட்டுக்குள் சென்று பார்த்த போது வீட்டில் இருந்த பொருட்கள் சிதறிக்கிடந்தன. மேலும் வீட்டில் இருந்த 17.4 பவுன் நகை மற்றும் ரூ.2 லட்சம் ரொக்கப்பணம் கொள்ளை போய் இருந்தது.

    ஜான்சன் ஆலயத்துக்கு செல்வதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். பின்னர் நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. இந்த கொள்ளையில் உள்ளூர் நபர்கள் ஈடுபட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் ரத்தினபுரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    ஏற்கனவே கோவையில் கடந்த சில நாட்களாக வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது பட்டப்பகலில் வீடு புகுந்து நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பயங்கர வெடி சத்தம் கேட்டவுடன் அந்த பகுதியை சேர்ந்தவர்களும் அங்கு திரண்டனர்.
    • கோவையில் டேங்கர் லாரி வெடித்து வடமாநில வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    குனியமுத்தூர்:

    கோவை மலுமிச்சம்பட்டி போடிபாளையம் ரோட்டில் சண்முகம் என்பவருக்கு சொந்தமான வெல்டிங் ஒர்க்ஷாப் செயல்பட்டு வருகிறது.

    இங்கு உத்தரபிரதேசத்தை சேர்ந்த வக்கீஸ் (வயது38), ரவி ஆகியோர் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் ஒர்க்ஷாப் அருகே அறை எடுத்து தங்கி உள்ளனர்.

    இந்த நிலையில் இந்த ஒர்க்ஷாப்பிற்கு நேற்று இரவு ஒரு டேங்கர் லாரி வந்தது. அந்த லாரியை ஓட்டி வந்த நபர் லாரியில் வெல்டிங் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

    இரவாகி விட்டதால் காலையில் வைத்து தருகிறோம் என அங்கிருந்தவர்கள் கூறி உள்ளனர். இதையடுத்து டிரைவரும் டேங்கர் லாரியை அங்கேயே நிறுத்தி விட்டு சென்று விட்டார். இன்று காலை வக்கீஸ் மற்றும் ரவி ஆகியோர் வெல்டிங் ஒர்க்ஷாப்பிற்கு பணிக்கு வந்தனர். பின்னர் வக்கீஸ், ரவி மற்றும் சிலர் சேர்ந்து டேங்கர் லாரியில் உள்ள பழுதை சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது வக்கீஸ் டேங்கர் லாரிக்குள் இறங்கி, வெல்டிங் வைக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது திடீரென டேங்கர் லாரி பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.

    வெடித்த சில நிமிடங்களில் லாரியில் தீயும் பற்றி எரிய தொடங்கியது. லாரி முழுவதும் பற்றி எரிந்த தீயில் வக்கீஸ் சிக்கி கொண்டார்.

    அவர் உடல் முழுவதும் தீப்பிடித்து எரிந்து சம்பவ இடத்திலேயே உடல் கருகி தூக்கி வீசப்பட்டார். மேலும் அவருடன் உதவிக்காக நின்றிருந்த ரவி என்பவரும் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினர்.

    இதற்கிடையே பயங்கர வெடி சத்தம் கேட்டவுடன் அந்த பகுதியை சேர்ந்தவர்களும் அங்கு திரண்டனர்.

    அவர்கள் அங்கு பலத்த காயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்த ரவியை மீட்டு சிகிச்சைக்காக மதுக்கரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    மேலும் அவர்கள் சம்பவம் குறித்து மதுக்கரை போலீசார் மற்றும் கிணத்துக்கடவு தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

    தகவல் அறிந்த போலீசார் தீயணைப்பு துறையினருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் டேங்கர் லாரியில் பற்றி எரிந்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சில மணி நேரத்திற்கு பிறகு முற்றிலும் தீ அணைக்கப்பட்டது.

    இதையடுத்து போலீசார் உடல் கருகி பலியான வக்கீசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து மதுக்கரை போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் வெல்டிங் வைக்கப்பட்ட லாரி பெட்ரோல், ஆயில் உள்ளிட்ட வேதி பொருட்களை ஏற்றி செல்லக்கூடிய லாரியாகும்.

    வெல்டிங் பணிக்கு காலியாக தான் வந்துள்ளது. இருந்த போதிலும் வேதி பொருட்கள் ஏற்றிய லாரி என்பதால், வெல்டிங் வைக்கும் போது தீப்பொறி பட்டு இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.

    தொடர்ந்து மதுக்கரை போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் ரவியின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக தெரியவந்துள்ளது. டாக்டர்கள் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    கோவையில் டேங்கர் லாரி வெடித்து வடமாநில வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

      வடவள்ளி:

      குடிபோதையில் தொழிலாளி ஒருவர் செய்த அட்டகாசத்தால் தொண்டாமுத்தூர் அருகே உள்ள கிராம மக்கள் நேற்று இரவு விடிய, விடிய தூங்காமல் தூக்கத்தை தொலைத்தனர்.

      இந்த பரபரப்பு சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

      தொண்டாமுத்தூர் அருகே உள்ள தாளியூர் பகுதியைச் சேர்ந்தவர் பூபதி (வயது 55). மரம் ஏறும் தொழிலாளி. இவருக்கு மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.

      பூபதி குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர். தினமும் குடித்து விட்டு வந்து ரகளையில் ஈடுபடுவதை வாடிக்கையாக கொண்டு இருந்தார். நேற்று மாலையும் அவர் மதுகுடித்து விட்டு வந்தார். வழக்கத்தை விட அதிக போதையில் இருந்த அவர் அட்டகாசத்தின் உச்சிக்கே சென்றார்.

      முதலில் அந்த பகுதியில் உள்ள நடராஜன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்து வீட்டுக்கு சென்றார். வீட்டின் மேற்கூரையில் போடப்பட்டிருந்த ஓடுகளை பிய்த்து எறிந்து ரகளையில் ஈடுபட்டார். இதை பார்த்து அந்த பகுதி மக்கள் திரண்டனர். அவர்கள் பூபதியை கண்டித்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர். அதன்பிறகும் பூபதியின் அட்டகாசம் தொடர்ந்து கொண்டே இருந்தது. நள்ளிரவு 12 மணி அளவில் பூபதியின் தொல்லை அதிகரிக்கவே எரிச்சல் அடைந்த ஒருவர் அவசர போலீஸ் எண் 100-க்கு போன் செய்தார்.

      உடனே தொண்டாமுத்தூர் போலீசாரும், ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்களிடமும் பூபதி, சண்டித்தனத்தை காட்டினார். அவர் போதையில் இருந்ததால் போலீசார் எச்சரித்து வீட்டில் போய் படுக்குமாறு கூறி விட்டு சென்றுவிட்டனர். போலீசாரை கண்டதும் பூபதி நல்லபிள்ளையாய் மாறி வீட்டில் போய் படுத்துக் கொண்டார். போலீசார் சென்ற சில நிமிடங்களில் மீண்டும் வீட்டில் இருந்து வெளியே வந்தார்.

      அந்த பகுதியில் உள்ள மின்கம்பத்தில் ஏறினார். மரம் ஏறும் தொழிலாளி என்பதால் சர, சரவென மின்கம்பத்தில் ஏறிவிட்டார். இதை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தார். அவரை கீழே இறங்கும்படி கூறி சத்தம் போட்டனர். யார் சொல்வதையும் கேட்காமல் மின் கம்பத்தில் ஏறினார். சுதாரித்துக் கொண்ட பொதுமக்கள் மின்வாரிய அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அந்த பகுதியில் மின்சாரம் தடை செய்யப்பட்டது. இதனால் அதிர்ஷ்டவசமாக பூபதி தப்பினார். மின்கம்பத்தின் உச்சியில் அமர்ந்து கொண்டு கீழே இறங்க மாட்டேன் என அடம்பிடித்தார்.

      மீண்டும் போலீசுக்கு தகவல் பறக்க போலீசாரும் அங்கு வந்தனர். அவர்கள் பூபதியிடம் நைசாக பேசி அவரை கீழே வரச் செய்தனர். அதற்குள் விடிந்து அதிகாலை 3 மணி ஆகிவிட்டது. பின்னர் பூபதியை போலீசார் தொண்டாமுத்தூர் போலீஸ்நிலையம் கொண்டு சென்றனர்.

      இந்த சம்பவத்தால் பூபதி மட்டுமல்லாமல் அந்த பகுதி மக்களும் விடிய, விடிய தூங்காமல் தவிப்புக்கு ஆளானார்கள். பூபதியிடம் போலீசார் இன்று காலையில் விசாரணை மேற்கொண்டனர். 

      • எம்.எல்.ஏ.வானதி சீனிவாசன் நடனம் ஆடி ஓணம் பண்டிகையை கொண்டாடினார்.
      • தி.மு.க. ஆட்சிக்கு வருகிற போது எல்லாம் மக்களை மிரட்டுவது, சட்டத்தை தங்களுக்கு சாதமாக மாற்றுவது சர்வசாதாரணமாகி விட்டது.

      கோவை,

      கோவை பீளமேட்டில் நடந்த ஓணம் விழாவில் கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வானதி சீனிவாசன் பங்கேற்றார்.

      அப்போது அவர் அங்குள்ள மக்களுக்கு ஓணம் வாழ்த்து தெரிவித்தார். மேலும் அவர்களுடன் சேர்ந்து நடனம் ஆடி ஓணம் பண்டிகையை கொண்டாடினார்.

      பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

      மலையாள சகோதர, சகோதரிகளுக்கு ஓணம் பண்டிகை வாழ்த்துக்கள். தமிழக முதல்-அமைச்சர் கூட மலையாளத்தில் வாழ்த்து சொல்லி இருக்கிறார்.

      அதுபோல, தீபாவளிக்கும் முதல்-அமைச்சர் வாழ்த்து கூறினால் அவர் அனைவருக்குமான முதல்-அமைச்சராக செயல்படுவார் என்பதற்கு அத்தாட்சியாக இருக்கும்.

      ஓணத்திற்கு வாழ்த்து சொல்கின்ற நீங்கள் தீபாவளிக்கும் வாழ்த்து சொல்ல வேண்டும் என்பதே எங்களுடைய எதிர்பார்ப்பு. கோவை மாநகராட்சி மேயர் மற்றும் குடும்பத்தினர் மீது இளம்பெண் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.

      அரசின் முதன்மையான பதவியில் இருப்பவரின் குடும்பத்தின் மீது இது போன்ற புகார்கள் வருகிற போது, மாநில அரசு இதனை தீவிரமாக விசாரிக்க வேண்டும்.

      தி.மு.க. ஆட்சிக்கு வருகிற போது எல்லாம் மக்களை மிரட்டுவது, சட்டத்தை தங்களுக்கு சாதமாக மாற்றுவது சர்வசாதாரணமாகி விட்டது.

      கோவை மேயர் குடும்பத்தினர் மீது கூறப்பட்டுள்ள புகார் தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

      ஊழலுக்கு எதிராக மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கை என்பது கட்சி சார்பற்றது. ஆதாரங்கள், சாட்சியங்கள் இருப்பதை வைத்து மத்திய அரசின் துறைகள் நடவடிக்கை எடுத்து வருகிறது.

      மத்திய அரசு கட்சி பாகுபாடு பார்ப்பது கிடையாது. ஆதாரத்தின் அடிப்படையிலேயே நட வடிக்கை எடுக்கப்படுகிறது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

      • லாட்ஜில் சட்டவிரோதமாக சூதாட்டம் நடைபெறுவதாக மேட்டுப்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
      • கைதானவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

      மேட்டுப்பாளையம்,

      மேட்டுப்பாளையம் - காரமடை சாலையில் உள்ள ஒரு லாட்ஜில் சட்டவிரோதமாக சூதாட்டம் நடைபெறுவதாக மேட்டுப்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

      அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் மற்றும் போலீசார் அந்த லாட்ஜில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

      அவர்களிடம் இருந்து ரூ.20 ஆயிரத்து 320 பணத்தை பறிமுதல் செய்தனர். கைதானவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.  

      • சண்முகசுந்தரத்தின் கை அருகே சென்ற மின்சார கம்பியில் எதிர்பாராத விதமாக பட்டதில் அவர் தூக்கி வீசப்பட்டார்.
      • காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

      மேட்டுப்பாளையம்,

      மேட்டுப்பாளையம் அருகே காளம்பாளையம் சீலியூர் விநாயகர் கோவில் வீதியைச்சேர்ந்தவர் சின்னச்சாமி.இவரது மகன் சண்முகசுந்தரம் (வயது 47). சென்ட்ரிங் வேலை செய்து வருகிறார். நேற்று மருதூர் சந்தைக்கடை தோட்டத்தில் உள்ள சுகந்தி என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில் சென்டிரிங் பலகைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு இருந்தார்.

      அப்போது, சண்முகசுந்தரத்தின் கை அருகே சென்ற மின்சார கம்பியில் எதிர்பாராத விதமாக பட்டதில் அவர் தூக்கி வீசப்பட்டார். அவரின் கழுத்துக்கு கீழ் உள்ள உடல் முழுவதும் படுகாயம் அடைந்தார். சண்முக சுந்தரத்தை அங்கிருந்தவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

      சண்முகசுந்தரம் கொடுத்த புகாரின் பேரில் விபத்து நிகழ்ந்த கட்டிடத்தின் உரிமையாளர் மருதூர் சந்தைக்கடை தோட்டத்தைச்சேர்ந்த வீரபத்திரசாமி (54), அவரது மனைவி சுகந்தி (47) மீது காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  

      • காயம் அடைந்த சைலேஷ்குமாரை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
      • குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிக்கந்தர் பாட்சாவை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

      கோவை,

      கேரளம் மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் சைலேஷ்குமார் (37). இவர் கோவைப்புதூரில் தங்கி கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு அதே பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் காதலாக மாறி 2 பேரும் காதலித்து வந்தனர்.

      இதற்கிடையே இளம்பெண்ணை மதுக்கரையை சேர்ந்த சிக்கந்தர் பாட்சா (30) என்பவர் ஒருதலையாக காதலித்து வந்தார்.

      இது தொடர்பாக 2 பேருக்கும் தகராறு இருந்ததாக தெரிகிறது. சம்பவத்தன்று, சிக்கந்தர் பாட்ஷா, சைலேஷ் குமார் தங்கியிருந்த இடத்திற்கு சென்று தகராறில் ஈடுபட்டார்.

      வாக்குவாதம் முற்றவே ஆத்திரம் அடைந்த சிக்கந்தர் பாட்ஷா, சைலேஷ்குமாரை கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். காயம் அடைந்த சைலேஷ்குமாரை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

      இதுகுறித்து குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிக்கந்தர் பாட்சாவை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

      • ஏ.கே.செல்வராஜ் எம்.எல்.ஏ தலைமை தாங்கி பணிகளை தொடங்கி வைத்தார்.
      • விஜயநகரம் அரசு ஆரம்ப தொடக்கப்பள்ளியில் ரூ.5.60 லட்சம் மதிப்பில் புதிய கழிவறைகள் கட்ட பூமி பூஜை போட்டப்பட்டது.

      மேட்டுப்பாளையம்,

      மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டி ஐ.டி.சி நிறுவனம், கிராமிய அபிவிருத்தி இயக்கம் சார்பில் வெள்ளியங்காடு ஊராட்சியில் ஆதிமாதையனூர் கிராமத்தில் ரூ.7.49 லட்சம் மதிப்பிலும், பங்களா மேடு பகுதியில் ரூ.8.78 லட்சம், கெம்மாரம்பாளையம் ஊராட்சியில் மேடூர் பகுததியில் ரூ.8.15 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய கழிவறைகள் திறப்பு விழாவும், சாலைவேம்பு அரசு ஆரம்ப தொடக்கப்பள்ளயில் ரூ.4.90 லட்சம் மதிப்பில், விஜயநகரம் அரசு ஆரம்ப தொடக்கப்பள்ளியில் ரூ.5.60 லட்சம் மதிப்பில் புதிய கழிவறைகள் கட்ட பூமி பூஜை போட்டப்பட்டது.

      இதற்கு ஏ.கே.செல்வராஜ் எம்.எல்.ஏ தலைமை தாங்கி பணிகளை தொடங்கி வைத்தார். தேக்கம்பட்டி ஐ.டி.சி பி.எஸ்.பி.டி தொழிற்சாலை தலைமை பொறுப்பாளர் வெங்கட்ராவ், நிர்வாக தலைவர் மகிந்தர்பாபு, கிராமிய அபிவிருத்தி இயக்க தலைவர் பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

      இதில் காரமடை ஊராட்சி ஒன்றியக்குக்குழு தலைவர் மணிமேகலை மகேந்திரன் ஊராட்சி தலைவர்கள் ஜெயமணி (வெள்ளியங்காடு), செல்வி நிர்மலா (கெம்மாரம்பாளையம்) உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கிராமிய அபிவிருத்தி இயக்க மேலாளர் அபிநந்தன் செய்திருந்தார்.

      • கடந்த 26-ந் தேதி அமிர்தகவுரி, தனது கணவருடன் கோவையில் உள்ள தனது மகள் வீட்டிற்கு வந்தார்.
      • கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.

      கோவை,

      கோவை நா.மூ.சுங்கம்-உடுமலை ரோட்டில் உள்ள வாத்தியார் பார்ம் ஹவுஸ் பகுதியில் வசித்து வருபர் அமிர்த கவுரி(வயது75).

      இவர் தனது கணவருடன் அந்த பகுதியில் உள்ள தோட்டத்தில் கடந்த 20 வருடங்களாக தங்கி விவசாயம் செய்து வருகிறார்.

      இவர்களுக்கு 1 மகன், 2 மகள்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் கோவையில் வசித்து வருகின்றனர். தோட்டத்தில் அமிர்தகவுரியும், அவரது கணவரும் மட்டும் தனியாக வசித்து வருகிறார்கள்.

      இந்த நிலையில் கடந்த 26-ந் தேதி அமிர்தகவுரி, தனது கணவருடன் கோவையில் உள்ள தனது மகள் வீட்டிற்கு வந்தார். தற்போது இங்கு தான் தங்கி உள்ளார்.

      சம்பவத்தன்று காலை தோட்டத்தில் வேலை பார்த்து வரும் வீரன் என்பவர் தோட்டத்திற்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.

      இதனை பார்த்து அதிர்ச்சியான அவர் சம்பவம் குறித்து உடனே அமிர்தகவுரிக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து அமிர்தகவுரி உடனடியாக வீட்டிற்கு வந்து பார்த்தார்.

      அப்போது வீட்டிற்குள் மிளகாய் பொடிகள் ஆங்காங்கே கொட்டப்பட்டு கிடந்தது. மேலும் வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு, திறந்து கிடந்தது.

      அதனை பார்த்த போது அதில் வைத்திருந்த 5 பவுன் தங்க செயின், 3 பவுன் தங்க செயின், 4 மற்றும் 5 பவுன் தங்க வளையல்கள், அரை பவுன் தங்க மோதிரம், கம்மல் என 20 பவுன் நகைகள் மற்றும் ஒரு வைர கம்மல் ஆகியவை கொள்ளை போயிருந்தது.

      இவர்கள் வெளியில் சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள் வீட்டில் ஆள் இல்லாத நேரத்தில் புகுந்து வீட்டின் கதவை உடைத்து நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.

      இதுகுறித்து அவர் ஆழியார் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வை யிட்டனர். அப்போது கொள்ளையர்கள் போலீசாரிடம் சிக்காமல் இருப்பதற்காக அங்கு மிளகாய் பொடியையும் தூவி சென்றது தெரிய வந்தது.

      மேலும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிராக்களை ஆய்வு செய்து நகையை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

      • தாய் படுகாயத்துடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
      • கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

      கிணத்துக்கடவு,

      கேரள மாநிலம் பாலக்காடு, மீனாட்சிபுரம் அருகே உள்ள மன்னூரை சேர்ந்தவர் பரமேஸ்வரன்(வயது45).

      இவரது மனைவி சித்ரா தேவி(39). இவர்களுக்கு மோதிஷ்(19) என்ற மகன் உள்ளார். இவர்கள்கோவை யில் வசித்து வருகின்றனர்.

      இந்த நிலையில் இவர்கள் இன்று அதிகாலை கோவை யில் இருந்து கேரளாவுக்கு காரில் புறப்பட்டனர். காரை மோதீஷ் ஓட்டினார். முன் இருக்கையில் அவரது தந்தை பரமேஸ்வரனும், பின்னால் அவரது தாய் சித்ராதேவியும் இருந்தனர்.

      இவர்களது கார், கிணத்துக்கடவு அருகே உள்ள தாமரைக்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்தது.

      அப்போது அங்குள்ள பேக்கரி முன்பு உள்ள வளைவையொட்டிய பகுதியில் மரம் ஏற்றி வந்த லாரி ஒன்று சாலையோரம் நின்று கொண்டிருந்தது.

      அப்போது எதிர்பாராத விதமாக கார், லாரி மீது பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் கார் சில அடி தூரம் தூக்கி வீசப்பட்டது.

      காரில் இருந்த 3 பேரும் படுகாயத்துடன் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிருக்கு போராடி கொண்டிருந்தனர். இதனை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பார்த்து கிணத்துக்கடவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

      போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து, காரில் சிக்கிய 3 பேரையும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது, மோதிசும், அவரது தந்தை பரமேஸ்வ ரனும் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டது தெரிய வந்தது. சித்ரா தேவி மட்டும் படுகாயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.

      உடனடியாக போலீசார் உயிருக்கு போராடிய சித்ரா தேவியை மீட்டு பொள்ளாச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

      மேலும் இறந்த 2 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

      • கூட்டத்திற்கு தலைவர் ரங்கசாமி தலைமை தாங்கினார்.
      • கூட்டத்தில் சுற்று வட்டார விவசாயிகள் 200-க்கு மேற்ப்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

      மேட்டுப்பாளையம்,

      மேட்டுப்பாளையம் அருகே பவானிசாகர் அணை நீர் பரப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

      கூட்டத்திற்கு தலைவர் ரங்கசாமி தலைமை தாங்கினார்.செயலாளர் வேலுமணி, துணை தலைவர் ரங்கசாமி, துணை செயலாளர் அருணாசலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

      கனகராஜ் அனைவரையும் வரவேற்றார். இரும்பறை ஊராட்சி தலைவர் ராஜேஸ்வரி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

      இங்கு விவசாயம் செய்வதால் வன உயிரினங்களுக்கு அச்சுறுத்தல் என சிலர் பொதுநல வழக்கு தொடுத்துள்ளனர். நாங்கள் வன விலங்குக ளுக்கு காவலாளிதானே தவிர தொல்லை கொடுப்பவர்கள் இல்லை என்பதை களத்தில் வந்து பார்த்தால் தெரியும்.

      மேலும் இந்த வழக்குகளால் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு விவசாயம் பாதிக்கப்படுவதுடன் அதனை நம்பியுள்ள 5 ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட விவசாய குடும்பங்களின் வாழ்வாதாரம் இழக்கும் நிலை உருவாகும்.

      இப்பகுதியில் விவசாயம் செய்தால் காட்டு யானைகள் ஊருக்குள் வராது என்பதையும் அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசனை செய்யப்பட்டது.

      கூட்டத்தில் சுற்று வட்டார விவசாயிகள் 200-க்கு மேற்ப்பட்டவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் செல்வராஜ் நன்றி கூறினார்.

      • கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் இன்று ஏராளமான பக்தர்கள் வருகை தந்து வழிபட்டனர்.
      • குன்னூர் ரெயில் நிலையம், வெலிங்டன், ராணுவ மையம் போன்றவற்றிலும் ஓணம் பண்டிகை விமரிசையாக நடந்தது.

      கோவை:

      கேரள மக்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை ஓணம் திருவிழா. இந்த பண்டிகை 10 நாட்கள் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படும்.

      இந்த ஆண்டு ஓணப்பண்டிகை கடந்த 20-ந் தேதி அத்தப்பூ கோலமிடுதலுடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து கேரள மக்கள் தங்கள் வீடுகள் முன்பு அத்தப்பூ கோலமிட்டு கொண்டாட தொடங்கினர். 10 நாட்களிலும் 10 வகை பூக்களை வைத்தும் அத்தப்பூ கோலம் போட்டும் பெண்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள்.

      10-வது நாளான இன்று ஓணம் பண்டிகை வெகுவிமரிசையாக கேரள மக்களால் கொண்டாடப்பட்டது.

      கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள கோவை, நீலகிரியிலும் ஓணம் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

      கோவை மாவட்டத்தில் வாளையார், பொள்ளாச்சி மீனாட்சிபுரம், ஆனைக்கட்டி மற்றும் நீலகிரி மாவட்டத்தில் கூடலூர், பந்தலூர், தேவாலா உள்ளிட்ட பகுதி கேரள எல்லையில் உள்ள பகுதிகளாகும். இங்கு கேரள மக்கள் அதிகம் வசித்து வருகிறார்கள்.

      கோவை மாநகரில் சித்தாபுதூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அதிகளவிலான கேரள மக்கள் வசித்து வருகின்றனர். இதுதவிர அங்கு மிகவும் பிரசித்தி பெற்ற ஐயப்பன் கோவிலும் உள்ளது.

      இன்று இங்குள்ள மக்கள் அதிகாலையிலேயே எழுந்து, தங்கள் வீடுகள் முன்பு பெரிய அளவிலான பூக்கோலங்களை வரைந்து, மாவேலி மன்னனை வரவேற்று ஓணம் பண்டிகையை கொண்டாடினர். தொடர்ந்து தங்கள் பாரம்பரிய உடையணிந்து வீட்டில் பல வகை உணவுகளை தயாரித்து சுவாமிக்கு படையல் வைத்து சாமி கும்பிட்டனர்.

      தொடர்ந்து அவர்கள் அருகில் உள்ள ஆலயங்களுக்கு சென்று வழிபட்டனர். கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் இன்று ஏராளமான பக்தர்கள் வருகை தந்து வழிபட்டனர். அங்கு வந்திருந்த அவர்களது உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் ஓணம் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

      ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு 500 கிலோ பூக்களை கொண்டு அத்தப்பூ கோலம் மற்றும் கோவில் முழுவதும் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இது அங்கு வந்திருந்தவர்களை மிகவும் கவர்ந்தது. பக்தர்கள் அத்தப்பூ கோலத்தை பார்வையிட்டனர்.

      மேலும், தங்களது சொந்தபந்தங்கள், அக்கம்பக்கத்தினருக்கு உணவு, உடை மற்றும் பரிசு பொருட்களை அளித்து மகிழ்ச்சியையும், வாழ்த்துக்களையும் பரிமாறி கொண்டனர். "கானம் விற்றாவது ஓணம் உண்" என்பது கேரளா பழமொழி. அதற்கேற்ப, அறுசுவைகளில் கசப்பை தவிர மற்ற காய்கறிகளை வைத்து 64 வித உணவு வகைகளை கேரள மக்கள் தயாரித்து பரிமாறி மகிழ்ந்தனர்.

      இதுதவிர திருவாதிரைக் களி நடனம், ஊஞ்சல் கட்டி ஆடுவது, கயிறு இழுத்தல், பாடல்களை இசைக்க விட்டு அதற்கு ஏற்ப நடனம் ஆடுவது, புலி வேஷமிட்டு நடனமாடுவது என பல வகைகளிலும் ஓணம் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

      பல்வேறு பாடல்களுக்கு ஆயிரக்கணக்கான மகளிர் ஒன்றாக இணைந்து ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சாதி, மத வேறுபாடு இல்லாமல் அனைவரும் ஒன்றாக ஓணம் திருவிழாவை கொண்டாடியது மகிழ்ச்சி அளிப்பதாக மாணவிகள் தெரிவித்தனர். இதேபோல மாவட்டம் முழுவதும் ஓணம் பண்டிகைகளை கட்டி உள்ளது.

      இதேபோல் நீலகிரி மாவட்டத்திலும் ஓணம் பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் ஓணம் பண்டிகைகளை கட்டியது. குன்னூர் ரெயில் நிலையம், வெலிங்டன், ராணுவ மையம் போன்றவற்றிலும் ஓணம் பண்டிகை விமரிசையாக நடந்தது.

      பூக்கோலமிட்டு, மாவேலி அரசரை பொதுமக்கள் வரவேற்றனர். தொடர்ந்து தங்கள் பாரம்பரிய நடனமான திருவாதிரை நடனமாடினர்.

      கேரளாவில் தொடர் விடுமுறை என்பதால் நீலகிரிக்கு கேரள மாநிலத்தை சேர்ந்த ஏராளமானோர் வந்துள்ளனர். அவர்கள் சுற்றுலா தலங்களில் ஓணம் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர்.

      ×