search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கோவை, நீலகிரியில் ஓணம் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்: நண்பர்களுக்கு விருந்து கொடுத்து ஆரவாரம்
    X

    கோவை, நீலகிரியில் ஓணம் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்: நண்பர்களுக்கு விருந்து கொடுத்து ஆரவாரம்

    • கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் இன்று ஏராளமான பக்தர்கள் வருகை தந்து வழிபட்டனர்.
    • குன்னூர் ரெயில் நிலையம், வெலிங்டன், ராணுவ மையம் போன்றவற்றிலும் ஓணம் பண்டிகை விமரிசையாக நடந்தது.

    கோவை:

    கேரள மக்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை ஓணம் திருவிழா. இந்த பண்டிகை 10 நாட்கள் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படும்.

    இந்த ஆண்டு ஓணப்பண்டிகை கடந்த 20-ந் தேதி அத்தப்பூ கோலமிடுதலுடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து கேரள மக்கள் தங்கள் வீடுகள் முன்பு அத்தப்பூ கோலமிட்டு கொண்டாட தொடங்கினர். 10 நாட்களிலும் 10 வகை பூக்களை வைத்தும் அத்தப்பூ கோலம் போட்டும் பெண்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள்.

    10-வது நாளான இன்று ஓணம் பண்டிகை வெகுவிமரிசையாக கேரள மக்களால் கொண்டாடப்பட்டது.

    கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள கோவை, நீலகிரியிலும் ஓணம் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

    கோவை மாவட்டத்தில் வாளையார், பொள்ளாச்சி மீனாட்சிபுரம், ஆனைக்கட்டி மற்றும் நீலகிரி மாவட்டத்தில் கூடலூர், பந்தலூர், தேவாலா உள்ளிட்ட பகுதி கேரள எல்லையில் உள்ள பகுதிகளாகும். இங்கு கேரள மக்கள் அதிகம் வசித்து வருகிறார்கள்.

    கோவை மாநகரில் சித்தாபுதூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அதிகளவிலான கேரள மக்கள் வசித்து வருகின்றனர். இதுதவிர அங்கு மிகவும் பிரசித்தி பெற்ற ஐயப்பன் கோவிலும் உள்ளது.

    இன்று இங்குள்ள மக்கள் அதிகாலையிலேயே எழுந்து, தங்கள் வீடுகள் முன்பு பெரிய அளவிலான பூக்கோலங்களை வரைந்து, மாவேலி மன்னனை வரவேற்று ஓணம் பண்டிகையை கொண்டாடினர். தொடர்ந்து தங்கள் பாரம்பரிய உடையணிந்து வீட்டில் பல வகை உணவுகளை தயாரித்து சுவாமிக்கு படையல் வைத்து சாமி கும்பிட்டனர்.

    தொடர்ந்து அவர்கள் அருகில் உள்ள ஆலயங்களுக்கு சென்று வழிபட்டனர். கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் இன்று ஏராளமான பக்தர்கள் வருகை தந்து வழிபட்டனர். அங்கு வந்திருந்த அவர்களது உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் ஓணம் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

    ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு 500 கிலோ பூக்களை கொண்டு அத்தப்பூ கோலம் மற்றும் கோவில் முழுவதும் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இது அங்கு வந்திருந்தவர்களை மிகவும் கவர்ந்தது. பக்தர்கள் அத்தப்பூ கோலத்தை பார்வையிட்டனர்.

    மேலும், தங்களது சொந்தபந்தங்கள், அக்கம்பக்கத்தினருக்கு உணவு, உடை மற்றும் பரிசு பொருட்களை அளித்து மகிழ்ச்சியையும், வாழ்த்துக்களையும் பரிமாறி கொண்டனர். "கானம் விற்றாவது ஓணம் உண்" என்பது கேரளா பழமொழி. அதற்கேற்ப, அறுசுவைகளில் கசப்பை தவிர மற்ற காய்கறிகளை வைத்து 64 வித உணவு வகைகளை கேரள மக்கள் தயாரித்து பரிமாறி மகிழ்ந்தனர்.

    இதுதவிர திருவாதிரைக் களி நடனம், ஊஞ்சல் கட்டி ஆடுவது, கயிறு இழுத்தல், பாடல்களை இசைக்க விட்டு அதற்கு ஏற்ப நடனம் ஆடுவது, புலி வேஷமிட்டு நடனமாடுவது என பல வகைகளிலும் ஓணம் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

    பல்வேறு பாடல்களுக்கு ஆயிரக்கணக்கான மகளிர் ஒன்றாக இணைந்து ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சாதி, மத வேறுபாடு இல்லாமல் அனைவரும் ஒன்றாக ஓணம் திருவிழாவை கொண்டாடியது மகிழ்ச்சி அளிப்பதாக மாணவிகள் தெரிவித்தனர். இதேபோல மாவட்டம் முழுவதும் ஓணம் பண்டிகைகளை கட்டி உள்ளது.

    இதேபோல் நீலகிரி மாவட்டத்திலும் ஓணம் பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் ஓணம் பண்டிகைகளை கட்டியது. குன்னூர் ரெயில் நிலையம், வெலிங்டன், ராணுவ மையம் போன்றவற்றிலும் ஓணம் பண்டிகை விமரிசையாக நடந்தது.

    பூக்கோலமிட்டு, மாவேலி அரசரை பொதுமக்கள் வரவேற்றனர். தொடர்ந்து தங்கள் பாரம்பரிய நடனமான திருவாதிரை நடனமாடினர்.

    கேரளாவில் தொடர் விடுமுறை என்பதால் நீலகிரிக்கு கேரள மாநிலத்தை சேர்ந்த ஏராளமானோர் வந்துள்ளனர். அவர்கள் சுற்றுலா தலங்களில் ஓணம் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர்.

    Next Story
    ×