என் மலர்
உள்ளூர் செய்திகள்

பொள்ளாச்சி அருகே விவசாயி வீட்டின் கதவை உடைத்து 20 பவுன் நகை கொள்ளை
- கடந்த 26-ந் தேதி அமிர்தகவுரி, தனது கணவருடன் கோவையில் உள்ள தனது மகள் வீட்டிற்கு வந்தார்.
- கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.
கோவை,
கோவை நா.மூ.சுங்கம்-உடுமலை ரோட்டில் உள்ள வாத்தியார் பார்ம் ஹவுஸ் பகுதியில் வசித்து வருபர் அமிர்த கவுரி(வயது75).
இவர் தனது கணவருடன் அந்த பகுதியில் உள்ள தோட்டத்தில் கடந்த 20 வருடங்களாக தங்கி விவசாயம் செய்து வருகிறார்.
இவர்களுக்கு 1 மகன், 2 மகள்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் கோவையில் வசித்து வருகின்றனர். தோட்டத்தில் அமிர்தகவுரியும், அவரது கணவரும் மட்டும் தனியாக வசித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் கடந்த 26-ந் தேதி அமிர்தகவுரி, தனது கணவருடன் கோவையில் உள்ள தனது மகள் வீட்டிற்கு வந்தார். தற்போது இங்கு தான் தங்கி உள்ளார்.
சம்பவத்தன்று காலை தோட்டத்தில் வேலை பார்த்து வரும் வீரன் என்பவர் தோட்டத்திற்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.
இதனை பார்த்து அதிர்ச்சியான அவர் சம்பவம் குறித்து உடனே அமிர்தகவுரிக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து அமிர்தகவுரி உடனடியாக வீட்டிற்கு வந்து பார்த்தார்.
அப்போது வீட்டிற்குள் மிளகாய் பொடிகள் ஆங்காங்கே கொட்டப்பட்டு கிடந்தது. மேலும் வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு, திறந்து கிடந்தது.
அதனை பார்த்த போது அதில் வைத்திருந்த 5 பவுன் தங்க செயின், 3 பவுன் தங்க செயின், 4 மற்றும் 5 பவுன் தங்க வளையல்கள், அரை பவுன் தங்க மோதிரம், கம்மல் என 20 பவுன் நகைகள் மற்றும் ஒரு வைர கம்மல் ஆகியவை கொள்ளை போயிருந்தது.
இவர்கள் வெளியில் சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள் வீட்டில் ஆள் இல்லாத நேரத்தில் புகுந்து வீட்டின் கதவை உடைத்து நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.
இதுகுறித்து அவர் ஆழியார் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வை யிட்டனர். அப்போது கொள்ளையர்கள் போலீசாரிடம் சிக்காமல் இருப்பதற்காக அங்கு மிளகாய் பொடியையும் தூவி சென்றது தெரிய வந்தது.
மேலும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிராக்களை ஆய்வு செய்து நகையை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்.