என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    கோவை அருகே வெல்டிங் வைத்தபோது விபத்து- டேங்கர் லாரி வெடித்து வடமாநில வாலிபர் பலி
    X

    கோவை அருகே வெல்டிங் வைத்தபோது விபத்து- டேங்கர் லாரி வெடித்து வடமாநில வாலிபர் பலி

    • பயங்கர வெடி சத்தம் கேட்டவுடன் அந்த பகுதியை சேர்ந்தவர்களும் அங்கு திரண்டனர்.
    • கோவையில் டேங்கர் லாரி வெடித்து வடமாநில வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    குனியமுத்தூர்:

    கோவை மலுமிச்சம்பட்டி போடிபாளையம் ரோட்டில் சண்முகம் என்பவருக்கு சொந்தமான வெல்டிங் ஒர்க்ஷாப் செயல்பட்டு வருகிறது.

    இங்கு உத்தரபிரதேசத்தை சேர்ந்த வக்கீஸ் (வயது38), ரவி ஆகியோர் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் ஒர்க்ஷாப் அருகே அறை எடுத்து தங்கி உள்ளனர்.

    இந்த நிலையில் இந்த ஒர்க்ஷாப்பிற்கு நேற்று இரவு ஒரு டேங்கர் லாரி வந்தது. அந்த லாரியை ஓட்டி வந்த நபர் லாரியில் வெல்டிங் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

    இரவாகி விட்டதால் காலையில் வைத்து தருகிறோம் என அங்கிருந்தவர்கள் கூறி உள்ளனர். இதையடுத்து டிரைவரும் டேங்கர் லாரியை அங்கேயே நிறுத்தி விட்டு சென்று விட்டார். இன்று காலை வக்கீஸ் மற்றும் ரவி ஆகியோர் வெல்டிங் ஒர்க்ஷாப்பிற்கு பணிக்கு வந்தனர். பின்னர் வக்கீஸ், ரவி மற்றும் சிலர் சேர்ந்து டேங்கர் லாரியில் உள்ள பழுதை சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது வக்கீஸ் டேங்கர் லாரிக்குள் இறங்கி, வெல்டிங் வைக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது திடீரென டேங்கர் லாரி பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.

    வெடித்த சில நிமிடங்களில் லாரியில் தீயும் பற்றி எரிய தொடங்கியது. லாரி முழுவதும் பற்றி எரிந்த தீயில் வக்கீஸ் சிக்கி கொண்டார்.

    அவர் உடல் முழுவதும் தீப்பிடித்து எரிந்து சம்பவ இடத்திலேயே உடல் கருகி தூக்கி வீசப்பட்டார். மேலும் அவருடன் உதவிக்காக நின்றிருந்த ரவி என்பவரும் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினர்.

    இதற்கிடையே பயங்கர வெடி சத்தம் கேட்டவுடன் அந்த பகுதியை சேர்ந்தவர்களும் அங்கு திரண்டனர்.

    அவர்கள் அங்கு பலத்த காயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்த ரவியை மீட்டு சிகிச்சைக்காக மதுக்கரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    மேலும் அவர்கள் சம்பவம் குறித்து மதுக்கரை போலீசார் மற்றும் கிணத்துக்கடவு தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

    தகவல் அறிந்த போலீசார் தீயணைப்பு துறையினருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் டேங்கர் லாரியில் பற்றி எரிந்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சில மணி நேரத்திற்கு பிறகு முற்றிலும் தீ அணைக்கப்பட்டது.

    இதையடுத்து போலீசார் உடல் கருகி பலியான வக்கீசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து மதுக்கரை போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் வெல்டிங் வைக்கப்பட்ட லாரி பெட்ரோல், ஆயில் உள்ளிட்ட வேதி பொருட்களை ஏற்றி செல்லக்கூடிய லாரியாகும்.

    வெல்டிங் பணிக்கு காலியாக தான் வந்துள்ளது. இருந்த போதிலும் வேதி பொருட்கள் ஏற்றிய லாரி என்பதால், வெல்டிங் வைக்கும் போது தீப்பொறி பட்டு இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.

    தொடர்ந்து மதுக்கரை போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் ரவியின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக தெரியவந்துள்ளது. டாக்டர்கள் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    கோவையில் டேங்கர் லாரி வெடித்து வடமாநில வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×