என் மலர்
கோயம்புத்தூர்
- சாலையில் தேங்கி நிற்கும் மழை நீரால் வாகன ஓட்டிகள் விபத்துக்கு உள்ளாகும் அபாயமும் உள்ளது.
- வடிகால் கால்வாய் அமைக்க வலியுறுத்தல்.
கருமத்தம்பட்டி,
கோவையில் கருமத்தம் பட்டி கிருஷ்ணாபுரம் பவர்ஹவுஸ் ஆகிய பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தரைமட்ட பாலம் கட்டப்பட்டது, அங்கு நேற்று மாலை கனமழை பெய்தது. இதனால் அங்கு உள்ள சாலைகளில் மழைநீர் குளம்போல தேங்கி நின்றது. எனவே அந்த வழியாக நடந்து செல்வோர் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
இதுகுறித்து அந்த பகுதியில் வசிக்கும் பொது மக்கள் கூறியதாவது:-
கிருஷ்ணாபுரம் பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புவரை மழைநீர் சாலையில் தேங்கியதால் அங்கு உள்ள சாலை பழுதடைந்தது. இதனால் அந்த பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகளும் நடந்தன.
இதனை தொடர்ந்து அந்தபகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மழைநீர் செல்லும் வகையில் தரைமட்ட பாலம் கட்டப்பட்டது. ஆனால் அங்கு மழைநீர் செல்வதற்கான வாய்க்கால் அமைக்கப்படவில்லை. இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் மழை நீர் வடிகால் அமைக்க கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால் இந்நாள் வரை எவ்வித நடவடிக்கையும் இல்லை.
கருமத்தம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை காரணமாக கிருஷ்ணாபுரம், பவர்ஹவுஸ், சோமனூர் ஆகிய பகுதிகளில் உள்ள சாலையில் தற்போது மழைநீர் குளம் போல தேங்கி நிற்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் இருசக்கர-நான்கு சக்கர வாகன ஓட்டிகள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர்.
மேலும் செந்தில் நகர் பகுதியில் இருந்து வரும் மழைநீர், கிருஷ்ணாபுரம் பஸ் நிறுத்தம் பகுதியில் முழங்கால் அளவுக்கு தேங்கி நிற்பதால், அங்கு உள்ள கடைகளுக்குள் சாக்கடை கழிவு நீர் புகுந்து உள்ளது. எனவே அங்கு உள்ள ஊழியர்கள் கடைக்குள் புகுந்த மழை நீரை வாளி மூலம் இறைத்து வெளியேற்றி வருகின்றனர்.
இதுதவிர சாலையில் தேங்கி நிற்கும் மழை நீரால் வாகன ஓட்டிகள் விபத்துக்கு உள்ளாகும் அபாயமும் உள்ளது. எனவே கருமத்தம்பட்டி நகராட்சி நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, அந்த பகுதியில் மழைநீர் செல்ல ஏதுவாக வடிகால் கால்வாய் அமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- மொபட் ராமபட்டிணம் பிரிவு அருகே சென்ற போது முருகன் மொபட்டில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
- பொள்ளாச்சி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை,
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அகே உள்ள டி. நல்லி கவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 40). பெயிண்டர்.
சம்பவத்தன்று இவர் தனது மொபட்டில் பெயிண்டிங் வேலைக்கு சென்றார். வேலை முடிந்ததும் வீட்டிற்கு புறப்பட்டார்.
மொபட் ராமபட்டிணம் பிரிவு அருகே சென்ற போது முருகன் மொபட்டில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் தலை மற்றும் உடலில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிய அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் முருகன் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து பொள்ளாச்சி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கோவை பேரூர் போலீசார் அந்த பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தனர்.
- மொபட் மற்றும் 50 கிலோ ரேசன் அரிசி ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கோவை,
கோவை பேரூர் போலீசார் அந்த பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக மொபட்டில் வந்த வாலிபரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது அந்த வாலிபர் மொபட்டில் 50 கிலோ ரேசன் அரிசியை கேரள மாநிலத்துக்கு விற்பனை செய்வதற்காக கடத்தி சென்றது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் அந்த வாலிபரை கைது செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் பி.கே. புதூரை சேர்ந்த விஜய் (வயது 23) என்பது தெரிய வந்தது. அவரிடம் இருந்த மொபட் மற்றும் 50 கிலோ ரேசன் அரிசி ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
- தீவனம் போடுவதற்காக சென்று பார்த்த போது அங்கு கட்டப்பட்டு இருந்த 2 பசு மாடுகளை காணவில்லை.
- இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்தனர்.
கோவை,
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பாக்குகார வீதியை சேர்ந்தவர் பழனியப்பன். இவரது மனைவி சரஸ்வதி (வயது 60). இவர் சொந்தமாக 3 பசுமாடுகளை வளர்த்து பால் வியாபாரம் செய்து வருகிறார்.
சம்பவத்தன்று இரவு இவர் 3 பசுமாடுகளையும் வீட்டு முன்பு கட்டி இருந்தார். தீவனம் போடுவதற்காக சென்று பார்த்த போது அங்கு கட்டப்பட்டு இருந்த 2 பசு மாடுகளை காணவில்லை.
இதில் அதிர்ச்சியடைந்த சரஸ்வதி அக்கம் பக்கத்தில் தேடி பார்த்தும் பசு மாடுகளை கண்டு பிடிக்க முடியவில்லை. யாரோ மர்மநபர் 2 பசு மாடுகளை திருடி சென்றது தெரிய வந்தது. இதேபோல கோவிந்தசாமி நகரை சேர்ந்தவர் பிரபு (31). இவர் 2 பசு மாடுகளை வைத்து பால் வியாபாரம் செய்து வருகிறார். வீட்டின் பின்புறம் கட்டப்பட்டு இருந்த இவரது 2 பசு மாடுகளையும் மர்மநபர்கள் திருடி சென்றனர்.
இது குறித்து இவர்கள் 2 பேரும் இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பால் வியாபரிகளின் 4 பசு மாடுகளை திருடி சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
- புகாரின்பேரில் போலீசார் தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அபிலாஷ் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
- கைதான அபிலாஷ் கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்தவர்.
கோவை:
கோவை ராம்நகரை சேர்ந்தவர் 24 வயது இளம்பெண். சம்பவத்தன்று இவர் வீட்டில் உள்ள குளியல் அறையில் குளித்துக்கொண்டு இருந்தார்.
அப்போது அருகே உள்ள வீட்டில் வசிக்கும் அபிலாஷ் (வயது 41) என்பவர் இளம்பெண் குளிப்பதை மறைந்து இருந்து செல்போன் மூலம் வீடியோ எடுத்து ரசித்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த இளம்பெண் சத்தம் போட்டார்.
உடனடியாக அபிலாஷ் அங்கு இருந்து தப்பி ஓடினார். இதுகுறித்து இளம்பெண் அவரது பெற்றோரிடம் கூறி கதறி அழுதார். இளம்பெண்ணின் பெற்றோர் மற்றும் அவரது உறவினர்கள் அபிலாஷின் வீட்டிற்கு சென்று அவரிடம் இருந்து செல்போனை பறிமுதல் செய்தனர். அப்போது தெரியாமல் நடந்து விட்டது. மன்னித்து விடுங்கள் என கூறினார்.
ஆத்திரம் அடைந்த இளம்பெண்ணின் பெற்றோர் இதுகுறித்து காட்டூர் போலீசில் புகார் செய்தனர். புகாரின்பேரில் போலீசார் தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அபிலாஷ் மீது வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
கைதான அபிலாஷ் கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்தவர். மத்திய புள்ளியியல் துறையில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.
- கொரோனா தொற்று அறிகுறிகள் இருந்ததால் அவருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
- வானதி சீனிவாசனுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கோவை, தனியார் மருத்துவமனையில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வானதி சீனிவாசனுக்கு கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அறிகுறிகள் இருந்ததால் அவருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், கொரோனா உறுதியானதை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், அவர் இன்னும் சில தினங்களில் வீடு திரும்புவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
- அனுமதியையும் மீறி பா.ஜ.கவினர் ஒன்று கூடி கொடி கம்பம் நடும் பணியில் ஈடுபட்டனர்.
- போலீசாருக்கும், பா.ஜ.கவினருக்கும் இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
பீளமேடு:
சென்னை பனையூரில் உள்ள பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலையின் வீட்டின் முன்பு இருந்த பா.ஜ.க கொடிக்கம்பம் கடந்த சில நாட்களுக்கு முன்பு அகற்றப்பட்டது.
இதையடுத்து, தமிழகம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கொடிக்கம்பங்கள் நடப்படும் என பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்தார். அதன்படி பா.ஜ.கவினர் தமிழகம் முழுவதும் கொடிகம்பங்கள் நட்டு பா.ஜ.க கொடியேற்றி வருகிறார்கள்.
அந்த வகையில் கோவை மாவட்டத்திலும் பா.ஜ.க கொடிக்கம்பங்கள் நடப்பட்டு வருகிறது. மாநகர் மாவட்ட பா.ஜ.க சார்பில், கோவை பீளமேடு அருகே மசக்காளி பாளையத்தில் இன்று பா.ஜ.க. கொடியேற்றும் விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்காக அந்த பகுதியில் பா.ஜ.க மாநில துணைத்தலைவர் கனகசபாபதி, மாநகர் மாவட்ட தலைவர் பாலாஜி, உத்தமராமசாமி தலைமையில் ஏராளமான பா.ஜ.கவினர் திரண்டிருந்தனர். அவர்கள் அங்கு கொடிக்கம்பம் நடும் பணியில் ஈடுபட்டனர்.
கொடிக்கம்பம் நடுவதற்கு போலீசார் அனுமதி மறுத்திருந்தனர். ஆனால் அனுமதியையும் மீறி பா.ஜ.கவினர் ஒன்று கூடி கொடி கம்பம் நடும் பணியில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை அங்கிருந்து செல்லுமாறு அறிவுறுத்தினர்.
ஆனால் அவர்கள் செல்ல மறுத்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் போலீசாருக்கும், பா.ஜ.கவினருக்கும் இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதையடுத்து போலீசார் அனுமதியின்றி ஒன்று கூடிய பா.ஜ.க மாநில துணைத்தலைவர் கனகசபாபதி, பொதுச்செயலாளர் லட்சுமி கோபிநாத், மாநகர் மாவட்ட தலைவர் பாலாஜி உத்தமராமசாமி, துணை செயலாளர் மோகன்ராஜ் உள்பட 45 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களை வேனில் ஏற்றி சென்று அந்த பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- 10-ந் தேதிக்கு பிறகு வாகனங்களை அனுமதிக்க நடவடிக்கை
- கந்த சஷ்டி விழா 13-ந் தேதி நடப்பதால் அதிகாரிகள் மும்முரம்
வடவள்ளி,
கோவை மருதமலையில் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவில் பக்தர்களால் 7-ம் படை வீடு என அழைக்கப்படுகிறது.
இந்த கோவிலுக்கு கோவை மட்டுமின்றி, பல்வேறு மாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்து பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.
முக்கிய விழா நாட்கள், விஷேச தினங்களில் இந்த கோவிலுக்கு பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.
மலைக்கோவில் பகுதியில் கடந்த 5-ந் தேதி லிப்ட் அமைப்பது, தார்சாலை அமைப்பது உள்பட பல்வேறு வளர்ச்சி பணிகள் தொடங்கியது.
இதன் காரணமாக மலைப்பாதையில் வாகனங்கள் செல்வதற்கு ஒரு மாதத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் கோவிலுக்கு செல்பவர்கள் படிப்பாதை வழியாக கோவிலுக்கு செல்லலாம் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து பக்தர்கள் படிப்பாதை வழியாக கோவிலுக்க சென்று வருகின்றனர்.
தற்போது இந்த பணிகள் விறு, விறுப்பாக நடைபெற்று வருகிறது. மலைப்பாதையில் 2.27 கிலோ மீட்டர் சாலை அமைக்கும் பணி நடந்துள்ளது. மீதி 300 மீட்டர் தூரம் வரையிலான சாலை அமைக்கும் பணி மட்டுமே உள்ளது. அந்த பணியும் விறு, விறுப்பாக நடைபெற்று வருகிறது.
வருகிற 13-ந் தேதி கந்த சஷ்டி விழா தொடங்க உள்ளது. இந்த விழாவில் கோவை மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்களும் அதிகளவில் கலந்து கொள்வார்கள். அன்றைய தினம் கோவிலில் கூட்டம் அதிகமாக இருக்கும்.
கந்த சஷ்டி விழா தொடங்குவதற்குள், மருத மலை மலைப்பாதையில் நடந்து வரும் பணிகள் அனைத்தும் முடிந்து, வருகிற 10-ந் தேதிக்குள், வாகனங்கள் மீண்டும் மலைப்பாதையில் இயக்கப்படலாம் என தெரிகிறது.
இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கோவில் நிர்வாகம் சார்பில் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, சாலைபணி கள் விறு, விறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் பணிகள் முடிந்து வாகனங்கள் செல்ல அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
- 100 வார்டுகளிலும் பாதாள சாக்கடை திட்டம், சாலை பணி போன்ற பல்வேறு பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
- ரூ.60 லட்சம் மதிப்பில் 150 புதிய வாக்கி டாக்கிகள் வாங்க ஒப்புதல்
கோவை.
கோவை மாநகராட்சியில் இன்று மாமன்ற சாதாரண கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாநகராட்சி மேயர் கல்பனா தலைமை தாங்கினார். துணை மேயர் வெற்றி செல்வன் முன்னிலை வகித்தார்.
இந்த கூட்டத்தில் பாதாள சாக்கடை பணி, சாலை பணி மேற்கொள்ளுதல் உள்பட 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கோவை மாநகராட்சிக்குட்பட்ட 33-வது வார்டு அலுவலகத்தில் பணியாற்றி வரும் ஊழியரான மாணிக்கம் என்பவர், அலுவலகத்தில் இருந்த முதல்-அமைச்சரின் போட்டோவை அங்கிருந்து அண்மையில் அகற்றியதாக தெரிகிறது.
இந்த விவகாரம் இன்று நடந்த கூட்டத்தில் தி.மு.க. கவுன்சிலர்களால் எழுப்பப்பட்டது. அப்போது பேசிய கவுன்சிலர்கள் முதல்-அமைச்சரின் போட்டோவை அகற்றிய ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
அதற்கு பதில் அளித்து மேயர் கல்பனா பேசும்போது, இது தொடர்பாக மாநகராட்சி ஊழியரிடம் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. கடிதம் வந்தவுடன் அவர் மீது எந்த மாதிரி நடவடிக்கை வேண்டும் என்பது குறித்து கலந்தாலோசித்து முடிவெடுக்கப்படும் என்றார். ஆனால் கவுன்சிலர்கள், முதல்-அமைச்சர் போட்டோவை அகற்றியவரை பணியில் இருந்து நீக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தினர்.
இதனை தொடர்ந்து, வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது பெரும்பாலான கவுன்சிலர்கள், முதல்-அமைச்சரின் போட்டோவை அகற்றிய மாநகராட்சி ஊழியரை பணியில் இருந்து நீக்க வேண்டும் என்பதற்கு ஆதரவு தெரிவித்தனர்.
இதுதொடர்பாக விரிவாக ஆலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மேயர் தெரிவித்தார். அதனை தொடர்ந்து, பேசிய கவுன்சிலர்கள், மாநகராட்சியில் உள்ள மண்டல சுகாதார அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள், சுகாதார மேற்பார்வையாளர்கள 300க்கும் மேற்பட்டோர் வாக்கி டாக்கிகளை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த வாக்கி டாக்கிகள் அவ்வப்போது பழுதாகி வருகிறது.
எனவே இதை மாற்றி தர கேட்டிருந்தனர். அதன் அடிப்படையில் இந்த கூட்டத்தில் ரூ.60 லட்சம் மதிப்பில் 150 புதிய வாக்கி டாக்கிகள் வாங்கி கொள்ள கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது.
கோவை மாநகராட்சி 100 வார்டுகளிலும் பாதாள சாக்கடை திட்டம், சாலை பணி போன்ற பல்வேறு பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
அ.தி.மு.க கவுன்சிலர்களுக்கு 3 கூட்டத்தில் பங்கேற்க தடைவிதிக்கப்பட்டதால் இன்று நடந்த கூட்டத்தில் அ.தி.மு.க.வை சேர்ந்த 3 கவுன்சிலர்களும் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கூட்டத்தில், மாநகராட்சி துணை ஆணையாளர்கள் செல்வசுரபி, சிவக்குமார், மண்டல குழு தலைவர்கள், நிலைக்குழு தலைவர்கள், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
- சிறப்பு கிராம சபை கூட்டம், ஊராட்சி மன்ற தலைவர் வேலுச்சாமி தலைமையில் நடைபெற்றது.
- விவசாயிகள் கண்டிப்பாக கிசான் கிரெடிட் கார்டு பயன்படுத்த வேண்டும்.
கருமத்தம்பட்டி,
கோவை மாவட்டம் சூலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கணியூர் ஊராட்சியில் உள்ளாட்சி தினத்தையொட்டி சிறப்பு கிராம சபை கூட்டம், ஊராட்சி மன்ற தலைவர் வேலுச்சாமி தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் கிரந்திகுமார் பாடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பின்னர் நடந்த கூட்டத்தில் சிறப்பு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன். தொடர்ந்து ஊராட்சியில் சிறப்பாக செயலாற்றிய காவலர்கள் கவுரவிக்கப்பட்டனர்.
கிராம சபை கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பேசுகையில் கூறியதாவது:-
2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது கிராமத்துக்கான ஒதுக்கீடு அதிகரித்து உள்ளது. இதற்கான சவால்களும் அதிகமாக உள்ளன. இருந்தபோதிலும் அதை நோக்கி செல்ல வேண்டிய சூழல் உள்ளது.
கோவையில் கூட்டு குடிநீர் திட்டங்கள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் நிலத்தடி நீரை சேமிக்க ஏதுவாக மழைநீர் பாதுகாப்பு திட்டங்கள் மேம்படுத்த ப்பட்டு வருகிறது. தனியார் கட்டிடமாக இருந்தாலும் அரசு கட்டிடமாக இருந்தாலும் மழை நீரை கட்டாயம் சேமிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
திடக்கழிவு மேலாண்மையை பொருத்தவரை மக்கும்-மக்காத குப்பை என தனித்தனியாக பிரித்து குப்பைகளை அகற்றி வருகிறோம்.
இதற்காக மாவட்டம் முழுவதும் உள்ள ஊராட்சிகளில் முன்னெடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
விவசாயிகள் கண்டிப்பாக கிசான் கிரெடிட் கார்டு பயன்படுத்த வேண்டும். இதன்மூலம் அவர்களுக்கு பயிர் கடன் வாங்குவதற்கான பல்வேறு பயன்கள் கிடைக்கும். மேலும் எந்தவிதமான அடமானமும் இன்றி ரூ.60 ஆயிரம் வரை கடன் பெற இயலும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் சூலூர் எம்.எல்.ஏ வி.பி.கந்தசாமி மற்றும் அரசு அதிகாரிகள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- ஊட்டி மருந்தகத்தில் 4659 காப்பீட்டாளர்கள் பலன்பெறுகின்றனர்
- ரூ.21 ஆயிரம் வரை ஊதியம் பெறுவோர் பதிவு செய்து கொள்ளலாம்
கோவை,
கோவை சார் மண்டலத்தின்கீழ் கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் 18 இ.எஸ்.ஐ கிளை அலுவலகங்கள் மூலம் காப்பீட்டாளர்களுக்கு பயன்கள் வழங்கப்படுகின்றன.
இதன் ஒருபகுதியாக ஊட்டியில் 2 மருத்துவர்களுடன் கூடிய இ.எஸ்.ஐ மருந்தகத்தில் 4659 காப்பீட்டாளர்கள் மருத்துவ சிகிச்சைக்காக இணைக்கப்பட்டு பலன் அடைந்து வருகின்றனர்.
இந்த நிலையில் மத்தியஅரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் வெளியிட்டு உள்ள அறிவிப்பின்படி தமிழகத்தில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பகுதிகள் மட்டுமின்றி கூடுதலாக நீலகிரி மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் இன்று முதல் இ.எஸ்.ஐ திட்டம் அமலுக்கு வருகிறது.
இதன்படி 10 அல்லது அதற்கும் மேற்பட்ட ஊழியர்களுடன் இயங்கும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து தொழிற்சாலைகள், நிறுவனங்கள் ஆகியவற்றில் இன்று முதல் மேற்கண்ட காப்பீட்டு திட்டம் அமலுக்கு வந்து உள்ளது.
இந்த திட்டத்தின்கீழ் பலன்பெற விரும்பும் மாதம் ரூ.21 ஆயிரம் வரை ஊதியம் பெறும் தொழிலாளர்கள் தங்களை பதிவு செய்து கொள்ளலாம்.
இதுதொடர்பாக மேலும் தகவலுக்கு ஊட்டி இ.எஸ்.ஐ காப்பீட்டு கழகம் (0423-2447933), கோவை மண்டல சார் அலுவலகம் (0422-2362329) ஆகியவற்றின் தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.
மேற்கண்ட தகவலை கோவை சார்மண்டல இ.எஸ்.ஐ இணை இயக்குநர் (பொறுப்பு) ரவிக்குமார் தெரிவித்து உள்ளார்.
- வளைகாப்பு நிகழ்ச்சிக்கு அழைக்காததால் ஆத்திரம்
- தாய் வீட்டிற்கு சென்று சரமாரி தாக்குதல்
கோவை,
கோவை வடவள்ளி அருகே உள்ள பொங்காளியூர் பகுதியை சேர்ந்தவர் சாந்தி (வயது 53). இவரது மகள் ரேவதி (31). தாய்-மகள் இடையில் ஏற்கனவே கருத்து வேறுபாடு உள்ளது. இந்த நிலையில் சாந்தி தனது மருமகளுக்கு சமீபத்தில் வளைகாப்பு நடத்தினார். இதற்கு அவர் ரேவதியை அழைக்கவில்லை.
எனவே ஆத்திரம் அடைந்தவர் தாய் வீட்டிற்கு சென்று சரமாரியாக தாக்கினார். இதில் காயம் அடைந்த சாந்திக்கு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுதொடர்பாக வடவள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






