என் மலர்tooltip icon

    கோயம்புத்தூர்

    • பக்தர்கள் வசதிக்காக கூடுதல் பஸ்கள் இயக்கம்
    • 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உத்தரவு

    வடவள்ளி,

    கோவை மருதமலையில் முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் பக்தர்களால் முருகனின் ஏழாம் படைவீடு என அழைக்கப்படுகிறது.

    இந்த கோவிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த கோவிலில் வருடந்தோறும் கந்தசஷ்டி விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான கந்த சஷ்டி விழா கடந்த 14-ந் தேதி தொடங்கியது. தொடர்ந்து காலை, மாலை வேளைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது.

    4-வது நாளான இன்று, சுப்பிரமணிய சுவாமி, வள்ளி தெய்வானையுடன் வெள்ளி மயில் வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். முன் மண்டபத்தில் ஆடும் மயில் வாகனத்தில் தண்டா யுதபாணி பக்தர்களுக் காட்சியளித்தார்.

    நாளை கந்த சஷ்டி விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்கிறது. இதனையொட்டி அதிகாலை 5.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு கோ பூஜையுடன் விழா தொடங்குகிறது.

    அதனை தொடர்ந்து 16 வகை திரவியங்களால் சுவாமிக்கு அபிேஷகம், மகா தீபாராதனை காட்டப்படுகிறது. சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். மதியம் 12 மணிக்கு சிறப்பு பூஜை நடக்கிறது.

    பிற்பகல் 3 மணிக்கு சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதனை யொட்டி காலை முதலே கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள்.

    அதிகளவில் பக்தர்கள் கூடுவார்கள் என்பதால் அதற்கான சிறப்பு ஏற்பாடுகளையும் கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.

    மருதமலை முருகன் கோவிலில் சூரசம்ஹா ரத்தை முன்னிட்டு நாளை(சனிக்கிழமை) மற்றும் 19-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை ஆகிய 2 தினங்கள் மலைப்பாதையில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    எனவே பக்தர்கள் கோவில் சார்பில் இய க்கப்படும் வாகனங்களிலும், மலைப்படிக்கட்டுகள் வழியாகவும் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்ய கேட்டுக்கொ ள்ளப்படுகிறார்கள்.

    மருதமலை அடிவாரத்தில் இருந்து 3 வாகனங்கள் மலைக்கோவிலுக்கு இயக்கப்பட்டு வருகிறது. நாளை சூரசம்ஹாரம் என்பதால் பக்தர்களின் வசதியை கருத்தில் கொண்டு கோவில் நிர்வாகம் சார்பில் மேலும் கூடுதல் வாகனங்களை இயக்குவது என முடிவுசெய்யப்பட்டு உள்ளது.

    மேலும் மருதமலை கோவில் வளாகத்தில் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை செய்து தரும் பணிகளில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    சூரசம்காரத்தை முன்னிட்டு கோவில் வளாகத்தில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இதுதவிர மருதமலை முருகன் கோவில் பகுதியில் டிரோன்கள் மூலம் பக்தர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பணிகளும் நடந்து வருகின்றன.

    விழாவிற்கான ஏற்பாடு களை கோவில் அறங்காவலர் குழு தலைவர் ஜெயக்குமார், உறுப்பினர்கள் மகேஷ்குமார், பிரேம்குமார், சொக்கம்புதூர் கனகராஜ், சுகன்யா ராஜரத்தினம் மற்றும் கோவில் இணை

    ஆணையர் ஹர்சினி ஆகியோர் செய்து வருகின்றனர்.

    நாளை மறுநாள் (19-ந் தேதி) திருக்கல்யாண நிகழ்ச்சி நடக்கிறது.

    • வேறு பணிகளை செய்யச் சொல்வதாக குற்றச்சாட்டு
    • மேயர் மற்றும் மாநகராட்சி ஆணையரை நேரில் சந்தித்து முறையிட முடிவு

    கோவை,

    மாநகராட்சியில் பணிபுரிந்து வரும் நிரந்தர தூய்மை பணியாளர்களை பத்தாண்டுகளுக்கு மேலாக தாங்கள் செய்து வந்த பணிகளை தவிர்த்து வேறு பணிகளை செய்யச் சொல்வதாக கூறி உள்ளிருப்பு போராட்டம் 180 க்கும் மேற்பட்டோர் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

    மேலும் குப்பைகளை பிரித்தெடுக்கும் தொழில் செய்து வந்த தங்களை சாக்கடை மலம் அள்ளும் தொழிலுக்கும் தற்போது பணிஅமர்த்துவதாக புகார் தெரிவித்துள்ளனர்.

    மேலும் சாலை நடுவே உள்ள தடுப்புகளில் ஆபத்தான முறையில் மண்ணை அகற்றும் பணியில் ஈடுபடுத்துவதாகவும் ஓய்வு பெறும் வயதில் உள்ள தங்களை வேறு பணிகளுக்கு பணி அமர்த்துவதாக கவலை தெரிவித்தனர். மாநகராட்சி துணை ஆணையர் சிவகுமார் சமாதானம் செய்ய முற்பட்டார்.

    இருப்பினும் மேயர் மற்றும் மாநகராட்சி ஆணையரை நேரில் சந்தித்து தங்கள் குறைகளை முன்வைக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்

    • 14 சோதனை சாவடிகளிலும் கூடுதல் போலீசார் பாதுகாப்பு
    • சோதனைக்கு பின்னரே வாகனங்கள் அனுமதிக்கப்படுகிறது

    கோவை,

    கேரள மாநிலம் வயநாடு பகுதியில் மாவோயிஸ்டுகள் மற்றும் மாவோயிஸ்ட் சிறப்பு பாதுகாப்பு படையினருக்கு இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 2 பெண் மாவோயிஸ்டுகள் குண்டு பாய்ந்து காயம் அடைந்தனர். அவர்கள் 2 பேரும் தப்பி சென்று விட்டனர்.

    அவர்களை தேடும் பணியை சிறப்பு பாதுகாப்பு படையினர் தீவிரப்படுத்தி உள்ளனர். அண்டை மாநிலமான தமிழகத்தையொட்டிய நீலகிரி, கோவை மாவட்ட வனப்பகுதிகளிலும் தமிழக வனத்துறையினர் உதவியுடன் தேடும் பணி நடந்து வருகிறது.

    இந்த நிலையில் குண்டு அடிபட்டு காயம் அடைந்த 2 மாவோயிஸ்டுகள் கோவை மாவட்ட எல்லைபகுதிக்குள் நுழைந்து விடாதபடி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    இதுதொடர்பான ஆலோசனை கூட்டம் இன்று கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் கிராந்திகுமார் பாடி தலைைம தாங்கினார்.

    கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன், எஸ்.பி.சி.ஐ.டி, நுண்ணறிவு பிரிவு, சிறப்பு புலனாய்வு பிரிவு, க்யூ பிரிவு போலீசார் மற்றும் எல்லை பாதுகாப்பு படை மூத்த அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில், தமிழகம்-கேரளா எல்லை பகுதியான வாளையார், பொள்ளாச்சி, ஆனைகட்டி, வேலந்தாவளம், காகா சாவடி காரமடை போன்ற பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரியப்படுத்தப்பட்டது. மேலும் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு பணிகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

    கூட்டத்தில் கலெக் டர் கிராந்திகுமார் பேசிய தாவது:-

    கோவை மாவட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. 14 சோதனை சாவடிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தற்போது அங்கு கூடுதலாக 160 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    அந்த வழியாக வரும் வாகனங்கள் அனைத்தும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. சோதனைக்கு பின் னரே வாகனங்கள் அனும திக்கப்பட்டு வருகின்றன.

    அதேபோன்று நீலகிரி மாவட்டத்திலும் கேரளா மாநிலத்திலிருந்து கோவை மாவட்டத்திற்கு வரும் பயணிகள் முழுமையாக சோதனை செய்து அனுப்பப்பட்டு வருகின்றனர். சந்தேக ப்படும்படியான நபர்கள் இருந்தால் உடனடியாக அவர்களை விசாரணை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • வெண்டை ரூ.60, சின்னவெங்காயம்-ரூ.90க்கு விற்பனை
    • வரத்து குறைவு காரணமாக விலைகள் உயர்ந்தன

    கோவை,

    கோவை காய்கறி மார்க்கெட்டுக்கு ஊட்டி, மேட்டுப்பாளையம், ெதாண்டாமுத்தூர், ஆலாந்துறை, ஓட்டன் சத்திரம் மற்றும் கர்நாடகாவில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.

    கடந்த சில நாட்களாக தமிழகம் மற்றும் பல மாநிலங்களிலும் கனமழை பெய்து வருகிறது. மேலும் தீபாவளியை யொட்டி தொடர்ச்சியாக விடுமுறை இருந்ததால் வாகன போக்குவரத்தும் குறைந்து விட்டது.

    இதனால் கர்நாடகாவில் இருந்து கோவை மார்க்கெட்டுக்கு வழக்கமாக கொண்டு வரப்படும் காய்கறிகள் வரத்து வெகுவாக குறைந்து விட்டது. மேலும் பல காய்கறிகள் வரவே இல்லை.

    இதன் காரணமாக கோவை மார்க்கெட்டுகளில் காய்கறிகளின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. முக்கிய காய்கறிகளின் விலை 20 சதவீதம் விலை அதிகரித்து காணப்படு கிறது.

    சின்னவெங்காயம் கிலோ ரூ.90க்கும், பீன்ஸ் கிலோ ரூ.100க்கு விற்பனையாகிறது. கடந்த சில தினங்க ளாக கிலோ ரூ.15க்கு விற்பனையாகி வந்த வெண்டைக்காய் இன்று கிலோ ரூ.60க்கு விற்பனையாகி வருகிறது.

    கோவை மார்க்கெட்டில் விற்பனையாகும் மற்ற காய்கறிகளின் விலை கிலோவில் வருமாறு:-

    கேரட்-ரூ.40, பீன்ஸ்-ரூ.100, முட்டைகோஸ்-ரூ.20, பீட்ரூட்-ரூ.40, சவ்சவ்-ரூ.20, வெள்ளைபூசணி, அரசாணி-ரூ.15, எலுமிச்சை-ரூ.70, உருளைகிழங்கு-ரூ.50, சேப்பக்கிழங்கு-ரூ.80, சின்னவெங்காயம்-ரூ.90, பெரிய வெங்காயம்-ரூ.60, இஞ்சி-ரூ.100, சிறுகிழங்கு-ரூ.80க்கு விற்பனையாகிறது.

    தக்காளி ரூ.50க்கும், ஆப்பிள் தக்காளி-ரூ.60க்கும், மிளகாய்-ரூ.40, பாகற்காய்-ரூ.40, வெண்டைக்காய்-ரூ.60க்கும், கத்தரி-ரூ.32, அவரை-ரூ.50, முருங்கைக்காய்-ரூ.60க்கு விற்பனையாகி வருகிறது.

    இதுகுறித்து வியாபாரிகள் கூறும்போது, வரத்து குறைவு காரணமாக அனைத்து காய்கறிகளின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. வரும் நாட்களில் விலை குறைய வாய்ப்புள்ளது என தெரிவித்தனர்.

    • சிறுமியை இழுத்து சென்று கோவிலில் கட்டாய திருமணம்
    • பலாத்காரம் செய்ததால் 6 மாதம் கர்ப்பமானாள்

    கோவை,

    கோவை கருமத்தம்பட்டி அருகே உள்ள கிட்டாம்பாளையத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி.

    கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு சிறுமிக்கு அதே பகுதியை சேர்ந்த பிரகாஷ் (வயது23) என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது.

    இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இந்த காதல் விவகாரம் சிறுமியின் வீட்டிற்கு தெரிய வரவே அவரது பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதனையடுத்து பிரகாஷ் சிறுமியை அழைத்து சென்றார். பின்னர் கடந்த ஜனவரி மாதம் 23 -ந் தேதி அந்த பகுதியில் உள்ள ஒரு கோவிலில் வைத்து சிறுமியை திருமணம் செய்தார்.

    திருமணம் முடிந்ததும் அவரது வீட்டிற்கு சிறுமியை அழைத்து சென்றார். அங்கு வைத்து பிரகாஷ் சிறுமியை பலாத்காரம் செய்தார். தற்போது சிறுமி 6 மாத கர்ப்பமாக உள்ளார்.

    இதனை நோட்டமிட்ட அந்த பகுதியை சேர்ந்தவர்கள் இது குறித்து மாவட்ட குழந்தைகள் நல அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அதிகாரிகள் சிறுமியின் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் சிறுமி 17 வயதில் கர்ப்பமானது தெரிய வந்தது. இது குறித்து அதிகாரிகள் கருமத்தம்பட்டி போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் 17 வயது சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய பிரகாஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • அதிகாரிகள் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு
    • நகராட்சி தலைவர் உஷாவெங்கடேஷ் தலையிட்டு சமரசம்


    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் அருகே காரமடை நகராட்சியில் நகர் மன்ற கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைவர் உஷாவெங்கடேஷ் தலைமை வகித்தார். ஆணையாளர் மனோகரன் முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் காரமடை நகராட்சியில் தனியார் ஒப்பந்ததாரர் நிறுவனம் சரியான முறையில் குப்பைகளை அகற்றாததால் அந்த நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில் நடந்த விவாதங்கள் பின்வருமாறு:

    விக்னேஷ் (பா.ஜ.க) : காரமடை நகராட்சியில் குப்பை எடுப்பதில் மிகப்பெரிய அளவில் முறைகேடு நடந்துள்ளது. இதற்கு நகராட்சி அதிகாரிகள் மற்றும் தலைவர் தான் பதில் கூற வேண்டும்.

    வனிதா (அ.தி.மு.க.): தூய்மை பணிகளை சரிவர மேற்கொள்ளவில்லை எனக்கூறி தற்போது தூய்மை பணிகளை மேற் கொண்டு வரும் ஒப்பந்த தாரரின் ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதாக தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. தற்போது பணி புரிந்து வரும் தூய்மை பணியாளர்கள் பலருக்கும் சம்பளம் போடவில்லை. பி.எப், இ.எஸ்.ஐ பிடிக்கப்படவில்லை. அவர்களுக்கு இதெல்லாம் கிடைக்குமா. தூய்மை பணிகளை எவ்வாறு மேற்கொள்ளப் போகிறோம்.

    நித்யா (தி.மு.க.): என் வார்டில் எந்த பணிகளும் நடப்பது இல்லை. எனது வார்டில் கோவில் கும்பாபிஷகம் தொடர்பாக புற்கள் வெட்ட ஆட்கள் வேண்டும் என கேட்டேன். ஆணையாளரிடம் தொலை பேசி வாயிலாக பேசும் போது அவர் தரக்குறைவாக பேசினார்.

    கோபமாக போன் இணைப்பை துண்டித்தார். இதுதான் நாகரீகமா? எப்படி பேசணும்னு தெரியாதா உங்களுக்கு. மேலும் என் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையாளர் மிரட்டுகிறார். நடவடிக்கை எடுங்கள் பார்த்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இதற்கு பதில் அளித்து ஆணையாளர் கூறும்போது, நான் அவரிடம் அநாகரிகமாக எதுவும் பேசவில்லை, அவர்தான் நகராட்சி ஊழியரை மிரட்டினார். கவுன்சிலராக இருந்தாலும் கூட நகராட்சி ஊழியரை எப்படி அவர் மிரட்டலாம். அதை தான் கேட்டேன் என்றார்.

    அப்போது கவுன்சிலர் நித்யாவிற்கு ஆதரவாக தி.மு.க., ம.தி.மு.க, சி.பி.எம் கவுன்சிலர்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். பெண் கவுன்சிலர் வார்டு தேவைக்காக கேட்கும் போது ஆணையாளர் எப்படி இப்படி பேசலாம் என வாக்குவாதம் முற்றியது.

    இதனால் ஆத்திரமடைந்த ஆணையாளர் மனோகரன் நான் பேசியது தவறு என்று நீங்கள் நினைத்தால் நான் இந்த மன்ற கூட்டத்தை விட்டு வெளியேறுகிறேன் என கூறி கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தார்.

    அப்போது இவருடன் சுகாதார ஆய்வாளர் சீனிவாசன், பொறியாளர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளும் வெளிநடப்பு செய்தனர்.

    அதன்பின் நகராட்சி தலைவர் உஷாவெங்கடேஷ் ஆணையாளர் மனோகரன் மற்றும் அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி மீண்டும் மன்ற கூட்டத்திற்கு அழைத்து வந்தார்.

    இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி
    • 20 கி.மீ. சுற்றளவுக்கு நிலத்தடி நீர்மட்டம் உயருமென எதிர்பார்ப்பு

    சரவணம்பட்டி,

    கோவை எஸ்.எஸ்.குளம் ஒன்றியத்துக்கு உட்பட்ட 165 ஏக்கர் பரப்பளவு கொண்ட அக்ரகார சாமகுளம் மற்றும் கொண்டயம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட 120 ஏக்கர் பரப்பளவு கொண்ட காலிங்கராயன் குளம் என இரு குளங்கள் உள்ளன.

    இந்த குளத்திற்கு அக்ரகார சாமக்குளம் பாதுகாப்பு அமைப்பு மற்றும் காலிங்கராயன் குளம் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் கடந்த 2-3 வருடங்களாக மேலாக ஞாயிற்றுக்கிழமை தோறும் குளத்தை தூர்வாரும் பணியை மேற்கொண்டு வந்தனர்.

    நீண்ட காலமாக தண்ணீர் இல்லாமல் குளம் வறண்டு கிடந்தது. தன்னால்வர்கள் அரசு துறைகளின் ஒத்துழைப்புடன் குளத்திற்கு வரும் நீர்வழிப் பாதைகளை எந்திரங்கள் மூலம் தூர்வாரி குளத்தின் கரைகளை பலப்படுத்தி குளத்தில் மண்மேடுகள் அமைத்து குப்பை புதர்களை அகற்றி குலத்திற்கு தண்ணீர் நிரப்பும் சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளனர்.

    இந்தக் குளம் நீர்வள ஆதாரதுறை கட்டு ப்பாட்டில் உள்ளதால் அத்திக்கடவு அவினாசி திட்டத்தின் கீழ் இரு குளங்களும் இணைக்கப்பட்டு தண்ணீர் வருவதற்காக நீரூற்று நிலையங்கள் அமைத்து காத்திருக்கிறது.

    இந்த நிலையில் கோவையில் கடந்த சில தினங்களுக்கு மேலாக பெய்த கனமழையின் காரணமாக குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்தது.

    தற்போது 2 குளங்களும் தங்களது முழு கொள்ளளவை எட்டியுள்ளது. 28 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த இரு குளங்களும் நிரம்பி வழிகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இதுகுறித்து காலிங்கராயன் குளம் பாதுகாப்பு அமைப்பு, அக்ரஹார சாமகுளம் பாதுகாப்பு அமைப்பினர் கூறும்போது, கடந்த 28 ஆண்டுகளுக்கு பிறகு இந்த இரு குளங்களிலும் நீர் நிரம்பியுள்ளது என்றும் இது எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.

    இதன் மூலம் 20 கிலோமீட்டர் சுற்றளவுக்கு நிலத்தடி நீர் மட்டம் உயரும். மேலும் சர்க்கார் சாம குளம் பேரூராட்சி மற்றும் கொண்டையம்பாளையம் ஊராட்சிகளுக்கான நீர் தேவையும் பூர்த்தியாகும். இதுதவிர காலிங்கராயன் குளத்தை சுற்றியுள்ள விவசாயிகளின் வாழ்வாதாரம் உயருவதோடு, குளத்திற்கு பறவைகள் வருகையும் அதிகரிக்கும் என்று தெரிவித்தனர்.

    • கார்த்திகை முதல் நாள் என்பதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது
    • கோவில்களில் சரண கோஷம் விண்ணதிர எதிரொலித்தது

    கோவை,

    சபரிமலை அய்யப்பன் கோவில் மண்டல பூஜை விழா இன்று தொடங்கியது. மாலை அணிந்து விரதம் இருந்து இருமுடி கட்டி அய்யப்பன் கோவிலுக்கு செல்பவர்கள் கார்த்திகை முதல் நாளான இன்று மாலை அணிந்தனர்.

    இதனால் கோவையில் உள்ள பிரபலமான சித்தாபுதூர் அய்யப்பன் கோவிலில் அதிகாலை முதலே மாலை அணிவதற்காக ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர்.

    அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அதிகாலையிலேயே குளிர்ந்த நீரில் குளித்து வழக்கமான ஆடைகளை களைந்து கருப்பு மற்றும் நீல நிற வேட்டி அணிந்து கோவிலுக்கு வந்தனர். அங்கு பக்தர்கள் மாலை அணிந்து கொண்டனர். 50 வயதை கடந்த பெண்கள் மற்றும் 10 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளும் மாலை அணிந்தனர்.

    மாலை அணிந்த போது கோவில்களில் "சுவாமியே சரணம் அய்யப்பா" என்ற சரண கோஷம் விண்ணதிர கேட்டது.

    இன்று முதல் கடுமையான விரதத்தை கடைபிடிக்கும் அய்யப்ப பக்தர்கள் அசைவ உணவு, புகை பிடித்தல், மது குடித்தல், பொய் பேசுதல் ஆகியவற்றை முற்றிலுமாக தவிர்ப்பார்கள். பிரம்மச்சரியத்தை கடை பிடிப்பார்கள். காலை மற்றும் மாலையில் குளிர்ந்த நீரில் குளித்து அய்யப்பன் படத்தின் முன்பு விளக்கேற்றி 18 சரண கோஷம் போடு வார்கள்.

    காலில் செருப்பு அணி வதையும் தவிர்ப்பார்கள். அதே ேபால் இரவில் தரையிேலயே படுத்து தூங்கு வார்கள். விரத காலத்தில் மற்ற அய்யப்ப பக்தர்கள் வீடுகள் மற்றும் கோவில்களில் நடை பெறும் அய்யப்பன் பூஜையில் கலந்து கொண்டு கூட்டு சரணம் போடுவார்கள்.

    தினமும் மாலையில் அய்யப்ப பக்தர்கள் கூடி பஜனை பாடல்களும் பாடுவார்கள். இன்று முதல் ஜனவரி 15-ந்தேதி வரை எங்கும் மாலை அணிந்த பக்தர்களை பார்க்கலாம். சரண கோஷத்தையும் கேட்கலாம்.

    கார்த்திகை முதல் நாள் என்பதால் பக்தர்கள் கூட்டமும் கோவிலில் அதிகமாக காணப்பட்டது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து சென்றனர்.

    இதேபோல் சங்கனூரில் உள்ள அய்யப்பன் கோவில், மேட்டுப்பாளையத்தில் உள்ள அய்யப்பன் கோவிலிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    • நியாய விலைக் கடையில் ஆய்வு செய்து பொருட்களின் இருப்பு விவரம் உள்ளிட்டவற்றை கேட்டறிந்தார்
    • காந்தி பார்க்கில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு

    கோவை,

    கோவை மாவட்டத்தில் கடந்த 10-ந் தேதி பெய்த பலத்த மழை காரணமாக லங்கா கார்னர், அவிநாசி சாலை மேம்பாலப் பகுதிகளில் மழை நீர் தேங்கி, போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால், பொது மக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகி வந்தனர்.

    இதனை, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மாநகராட்சிப் பகுதிகளில் கனமழையின் போது மழை நீர் தேங்கும் பகுதிகளில் உடனடியாக நீரை வெளியேற்ற அதிக இழுவைத் திறன் கொண்ட மோட்டார் தேவைப்படுவதை அறிந்து கோவை மாநகராட்சிக்கு உடனடியாக வழங்க உத்தரவிட்டார்.

    இதையடுத்து, சென்னையில் இருந்து வரப்பெற்ற 100 குதிரை திறன் கொண்ட மோட்டார்களை லங்கா கார்னர், அவிநாசி சாலை மேம்பாலப் பகுதிகளில் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியை, கலெக்டர் கிராந்திகுமார் பாடி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    தொடர்ந்து, பூமார்க்கெட் தெப்பக்குள வீதியில் உள்ள ஸ்ரீ ராமலிங்க சவுடாம்பிகை கூட்டுறவுச் சங்கத்தின் பண்டக சாலை நியாய விலைக் கடையில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர், குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை, விநியோகிக்கப்பட்ட பொருள்களின் விவரம், பொருள்களின் இருப்பு விவரம் உள்ளிட்டவற்றை கேட்டறிந்தார்.

    மேலும், அங்குள்ள அங்கன்வாடி மையத்தில் ஆய்வு மேற்கொண்டு குழந்தைகளின் எண்ணிக்கை, வருகை குறித்து கேட்டறிந்தார்.

    பின்னர், காந்தி பார்க்கில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, மாநகராட்சி மத்திய மண்டல உதவி ஆணையர் செந்தில் குமரன், மாமன்ற உறுப்பினர்கள் சுமா, கார்த்திக் செல்வராஜ், மாவட்ட வழங்கல் அலுவலர் குணசேகரன், வட்ட வழங்கல் அலுவலர் ஷர்மிளா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • கார் சாவியை பறித்து தலையில் வெட்டி துணிகர கொள்ளை
    • 5 பேர் கும்பலுக்கு போலீசார் வலை

    கோவை,

    கோவை சூலூர் அருகே உள்ள நீலாம்பூரை சேர்ந்தவர் பிரசாந் (வயது29). கால்டாக்சி டிரைவர்.

    சம்பவத்தன்று இவர் இரவு பணியில் இருந்த போது கால்டாக்சி ஆப் மூலமாக சின்னியம்பாயைத்தில் இருந்து டீச்சர் காலனி செல்வதற்கு கார் புக்கிங் செய்யப்பட்டது.

    இதனையடுத்து டாக்சி டிரைவர் பிரசாத் புக் செய்யப்பட்ட இடத்துக்கு சென்றார். அங்கு நின்று கொண்டு இருந்த 5 வாலிபர்கள் காரில் ஏறினர்.

    அப்போது அவர்கள் வெங்கடாபுரத்தில் நண்பர் ஒருவரை இறக்க வேண்டும் என்றனர். இதனையடுத்து பிரசாத் காரை ஓட்டிக்கொண்டு மாநராடு மைதானம் அருகே சென்று காரை நிறுத்தினார்.

    அப்போது 5 பேரும் சேர்ந்து திடீரென பிரசாத்தி டம் கார் சாவியை பறித்த னர். அவர்கள் மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து அவரது தலையில் வெட்டினர். பின்னர் பிரசாத்திடம் இருந்து ரூ.6 ஆயிரம் பணம் மற்றும் 3 செல்போன்களை பறித்த னர். அவர்கள் 5 பேரும் சேர்ந்து பிரசாத்தை மிரட்டி காருடன் ராவுத்தூர் ரெயில்வே கேட் அருகே சென்றனர். பின்னர் காரை கொடுத்து மிரட்டி அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து கால்டாக்சி டிரைவர் பிரசாத் சூலூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கால்டாக்சி புக் செய்து டிரைவரை கத்தியால் குத்தி பணம் மற்றும் செல்போனை பறித்து சென்ற 5 வாலிபர்களை தேடி வருகின்றனர்.

    • குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், திருத்துவதற்கு வாய்ப்பு
    • வட்ட வழங்கல் அலுவலகங்களில் மனுக்களாக வழங்கி பயன்பெறலாம்

    கோவை,

    பொது விநியோக திட்டத்தின் மூலம் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில், ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமையன்று கோவை மாவட்ட த்தில் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் செயல்படும், வட்ட வழங்கல் அலுவலகங்களில் சிறப்பு குறைதீர் முகாம்கள் நடைபெற்று வருகின்றன.

    அதன் தொடர்ச்சியாக 18-ந் தேதி(நாளை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை பொது விநியோகத் திட்ட குறைதீர் சிறப்பு முகாம் நடை பெறவுள்ளது.

    இந்த முகாமில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், குடும்ப தலைவர் புகைப்படம் மாற்றம், செல்போன் எண் மாற்றம் மற்றும் நகல் குடும்ப அட்டை பெறுதல் தொடர்பான குறைகளை மனுக்களாக வழங்கி பயன்பெறலாம் என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • பேச்சுமூச்சின்றி அசைவற்று இருந்தவர் சிகிச்சை பலனின்றி சாவு
    • பேரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    கோவை,

    கோவை பேரூர் அருகே உள்ள தீத்திப்பாளையம் அண்ணல் காந்தி வீதியை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மனைவி லட்சுமி (வயது 60).

    தீபாவளியன்று இவர் வீட்டின் அருகே நடந்து சென்றார். அப்போது இவரை நாய் துரத்தியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த லட்சுமிக்கு வலது கையில் காயம் ஏற்பட்டது.

    இதற்காக அந்த பகுதியில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்று வீட்டிற்கு திரும்பினார். இரவு வீட்டில் இருந்த போது அவருக்கு வலி அதிகமானது. வலி தாங்க முடியாமல் லட்சுமி வீட்டில் இருந்த 60-க்கும் மேற்பட்ட மாத்திரைகளை சாப்பிட்டார்.

    சிறிது நேரத்தில் மயங்கிய அவரை அவரது குடும்பத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். இந்தநிலையில் லட்சுமியை அவரது மகன் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளிக்க போவதாக கூறி விட்டு வீட்டிற்கு அழைத்து சென்றார்.

    வீட்டில் இருந்த போது லட்சுமி மூச்சு பேச்சு இல்லாமல் அசைவற்று இருந்தார். உடனடியாக குடும்பத்தினர் 108 ஆம்புலன்சு ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனடியாக அவர்கள் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று மூதாட்டியை பரிசோதனை செய்தனர். அப்போது மூதாட்டி ஏற்கனவே இறந்தது தெரிய வந்தது.

    பின்னர் இது குறித்து பேரூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து பேரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×