என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "inspecion"

    • நியாய விலைக் கடையில் ஆய்வு செய்து பொருட்களின் இருப்பு விவரம் உள்ளிட்டவற்றை கேட்டறிந்தார்
    • காந்தி பார்க்கில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு

    கோவை,

    கோவை மாவட்டத்தில் கடந்த 10-ந் தேதி பெய்த பலத்த மழை காரணமாக லங்கா கார்னர், அவிநாசி சாலை மேம்பாலப் பகுதிகளில் மழை நீர் தேங்கி, போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால், பொது மக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகி வந்தனர்.

    இதனை, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மாநகராட்சிப் பகுதிகளில் கனமழையின் போது மழை நீர் தேங்கும் பகுதிகளில் உடனடியாக நீரை வெளியேற்ற அதிக இழுவைத் திறன் கொண்ட மோட்டார் தேவைப்படுவதை அறிந்து கோவை மாநகராட்சிக்கு உடனடியாக வழங்க உத்தரவிட்டார்.

    இதையடுத்து, சென்னையில் இருந்து வரப்பெற்ற 100 குதிரை திறன் கொண்ட மோட்டார்களை லங்கா கார்னர், அவிநாசி சாலை மேம்பாலப் பகுதிகளில் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியை, கலெக்டர் கிராந்திகுமார் பாடி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    தொடர்ந்து, பூமார்க்கெட் தெப்பக்குள வீதியில் உள்ள ஸ்ரீ ராமலிங்க சவுடாம்பிகை கூட்டுறவுச் சங்கத்தின் பண்டக சாலை நியாய விலைக் கடையில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர், குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை, விநியோகிக்கப்பட்ட பொருள்களின் விவரம், பொருள்களின் இருப்பு விவரம் உள்ளிட்டவற்றை கேட்டறிந்தார்.

    மேலும், அங்குள்ள அங்கன்வாடி மையத்தில் ஆய்வு மேற்கொண்டு குழந்தைகளின் எண்ணிக்கை, வருகை குறித்து கேட்டறிந்தார்.

    பின்னர், காந்தி பார்க்கில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, மாநகராட்சி மத்திய மண்டல உதவி ஆணையர் செந்தில் குமரன், மாமன்ற உறுப்பினர்கள் சுமா, கார்த்திக் செல்வராஜ், மாவட்ட வழங்கல் அலுவலர் குணசேகரன், வட்ட வழங்கல் அலுவலர் ஷர்மிளா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    ×