என் மலர்
சென்னை
- 2-வது முதல் 8-வது தளங்கள் வரை அலுவலக பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட்டு உள்ளன.
- பிராட்வே பஸ் நிலையம் மாநகரப் பஸ்களுக்கான நிலையமாக மாற்றப்பட்டு தற்பொழுது பயன்பாட்டில் உள்ளது.
சென்னை மாநகரின் முக்கிய இடத்தில் பிராட்வே நிலையம் அமைந்துள்ளதாலும், மக்கள் தொகை பெருக்கத்தினாலும், இட நெருக்கடியால் வெளியூர் செல்லும் பஸ்கள் 2002-ம் ஆண்டு நவம்பரில் கோயம்பேட்டிற்கு மாற்றப்பட்டது.
இதன் பின்னர், பிராட்வே பஸ் நிலையம் மாநகரப் பஸ்களுக்கான நிலையமாக மாற்றப்பட்டு தற்பொழுது பயன்பாட்டில் உள்ளது. பிராட்வே பஸ் நிலையத்தில் சிறுகடைகள் அதிகமாக உள்ளதாலும், இடநெருக்கடியாலும், இப்பஸ் நிலையத்தை நவீனப்படுத்த ஏற்கனவே பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வந்தன.
அதன்படி, பிராட்வே பஸ் நிலையத்தில் 822 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் புதிதாக கட்டப்படவுள்ள பல்நோக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து பஸ் நிலையம் மற்றும் குறளகம் கட்டடத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார்.
இத்திட்டம் உயர் நீதிமன்றம் மெட்ரோ நிலையம், குறளகம் மற்றும் புறநகர் ரெயில் நிலையம் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் ஒரு மையமாக திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக 9 தளங்களைக் கொண்ட காம்ப்ளக்ஸ் கட்டடம் மற்றும் 10 தளங்களைக் கொண்ட குறளகம் கட்டடம் ஆகியவை திட்டமிடப்பட்டுள்ளது. இவை 73 பஸ் நிறுத்தங்களும், பயணிகள் கூடம், சில்லறை வணிக தளங்கள், அலுவலகப் பகுதிகள், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கான நிறுத்துமிட வசதிகள் ஆகியவற்றை உள்ளடக்கியது.
இந்த திட்டமானது 26,240 சதுர மீட்டர் பரப்பளவு உள்ள இடத்தில் மொத்தம் 1,36,580 சதுர மீட்டர் கட்டடம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டம் மூன்று முக்கிய கட்டட பிரிவுகளைக் கொண்டு உள்ளது.
இத்திட்டத்தின் மொத்த பரப்பளவு 1,08,290 சதுர மீட்டர் ஆகும். இதில் இரண்டு அடித்தளங்கள் ஒரு தரைத்தளம் மற்றும் எட்டு மேல் தளங்கள் கொண்டதாகும். பயணிகள் நேரடியாக உயர்நீதிமன்றம் மெட்ரோ நிலையம், என்.எஸ்.சி. போஸ் ரோடு, எஸ்பிளேடு ரோடு மற்றும் டி.என்.பி.எஸ்.சி. ரோடு நுழைவு மற்றும் வெளி யேற்று அமைப்பு வழியாக பஸ் நிலையம் முதல் அடித்தளத்தில் அமைந்து உள்ள பயணிகள் கூடத்தின் வழியாக தரை மற்றும் முதல் பஸ் நிலையங்களுக்கு செல்லும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த வடிவமைப்பின்படி பயணிகளுக்கும் பஸ்களுக்கும் ஏற்படும் இடையூறுகள் முற்றிலுமாக தவிர்க்கப்படும். 2-வது அடித்தளம் கார் நிறுத்துமிடத்திற்காக ஒதுக்கப்பட்டு உள்ளது.
இதில் 2 அடுக்கு கார் நிறுத்தும் அமைப்பு உள்ளது. தரை மற்றும் முதல் தளம் பஸ் நிலையத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் 73 பஸ் நிறுத்தங்கள் மற்றும் பயணிகளுக்கு தேவையான வசதிகளும் ஏற்படுத்தப்படும். 2-வது முதல் 8-வது தளங்கள் வரை அலுவலக பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட்டு உள்ளன.
22,794 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட குறளகம் கட்டடம் 2 அடித்தளங்கள், தரைத்தளம் மற்றும் 9 மேல்தளங்களை கொண்ட கட்டடமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. முதல் அடித்தளத்தில் இருந்து பயணிகளை கட்டடத்தின் பயணிகள் கூடத்திற்கும், கார் நிறுத்து மிடத்திற்கும் நேரடியாக செல்லும் வகையில் வடி வமைக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில், அமைச் சர்கள் கே.என். நேரு, ராஜகண்ணப்பன், .பி.கே. சேகர்பாபு, மேயர் ஆர். பிரியா, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- திராவிட மாடல் ஆட்சி அமைந்த 5 வருடத்தில் சென்னையின் வளர்ச்சிக்காக நாம் செய்துள்ள திட்டங்களை எண்ணிப் பார்க்கிறேன்.
- நீர் நிலைகள் புனரமைப்பு, மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள், பூங்காக்கள், விளையாட்டு திடல் என நிறைய செய்து கொண்டே இருக்கிறோம்.
சென்னை:
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று திரு.வி.க. நகர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பெரம்பூர் நெடுஞ்சாலையில் வட சென்னை வளர்ச்சித் திட்டத்தின்கீழ், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் ரூ.21 கோடியே 50 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள 'அண்ணல் அம்பேத்கர் திருமண மாளிகையை' திறந்து வைத்தார். அங்கு 10 தம்பதிகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்து, சீர்வரிசைப் பொருட்களை வழங்கி மணமக்களை வாழ்த்தினார்.
சென்னையின் கட்டமைப்பு வசதியை பெருக்கிட வேண்டும். அதை நல்ல வகையில் உருவாக்கிட வேண்டும் என்பதில் அக்கறை எடுத்துக் கொண்டு அந்த பணியை நிறைவேற்றி கொண்டிருப்பதில், நம்முடைய திராவிட மாடல் அரசு சிறப்பாக செயல்படுவது உங்கள் அனைவருக்கும் நன்றாக தெரியும்.
தமிழ்நாட்டின் தலைநகரம் சென்னை. இங்கு ஏராளமான மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு உரிய வசதியை, நல்ல சுகாதாரத்தை உருவாக்கி தர வேண்டும் என்பதற்காக எத்தனையோ திட்டங்களை அதற்காக பல கோடி ரூபாய் செலவு செய்து பல்வேறு திட்டங்களை நம்முடைய அரசு உருவாக்கி கொண்டிருக்கிறது.
தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்கிற நேரங்களில் எல்லாம் ஏராளமான திட்டங்களை தமிழ்நாட்டிற்கு, குறிப்பாக சென்னை மாநகரத்திற்கு, நாம் கொண்டு வந்திருக்கிறோம்.
இன்றைக்கு சென்னையில் உள்ள மேம்பாலங்களை பார்த்தால், உங்களுக்கு நன்றாக தெரியும். சுரங்கப் பாதைகளாக இருந்தாலும் சரி, பூங்காக்களாக இருந்தாலும், மெட்ரோ ரெயில் வசதியாக இருந்தாலும் எல்லாமே தி.மு.க. ஆட்சியில் தான் கொண்டு வந்திருக்கிறோம்.
இந்த வளர்ச்சிப் பணியில் ஏதாவது விட்டுவிடக்கூடாது என்று கவனமாக பார்த்து பார்த்து உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி கொண்டிருக்கிறோம்.
திராவிட மாடல் ஆட்சி அமைந்த 5 வருடத்தில் சென்னையின் வளர்ச்சிக்காக நாம் செய்துள்ள திட்டங்களை எண்ணிப் பார்க்கிறேன். வடசென்னை பகுதியில் மேயர் சிட்டிபாபு பாலம், தென் சென்னை பகுதியில் தியாகராயநகர் பகுதியில் ஆகாய நடை மேம்பாலம் ஜெ.அன்பழகன் மேம்பாலம், வடசென்னை யில் செங்கை சிவம் பெயரில் ரூ.500 கோடி மதிப்பீட் டில் பல்வேறு பாலங்களை அமைத்துள்ளோம்.
அதுமட்டுமின்றி 516 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இன்னும் 19 பாலங்கள், சென்னை மாநகருக்கு உருவாக்கி தர பணிகள் நடந்து கொண்டிருக்கிறது.
சாலைப் பணிகளை எடுத்துக் கொண்டால், ரூ.2,359 கோடியே 73 லட்சம் மதிப்பீட்டில், 3455 கி.மீ. நீளத்திற்கு 19 ஆயிரத்து 849 பஸ் சாலைகள் மற்றும் உட்புற சாலைகளை அமைத்து உள்ளோம்.
இன்னும் 196 கி.மீட்டருக்கான 1315 சாலைப் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. முன்பெல்லாம் மழை பெய்தால், என்ன நிலைமை என்பது உங்களுக்குத் தெரியும். ஆனால் அது இப்போது எந்த அளவுக்கு மாற்றப்பட்டுள்ளது என்பதும் உங்களுக்கு நன்றாக புரியும்.
குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், 2015-ல் செயற்கை வெள்ளம். அது சாதாரணமானதல்ல. செயற்கையாக உருவாக்கப்பட்ட வெள்ளம். அதனால் மக்கள் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டார்கள் என்பதை இந்த சென்னை மறந்திடாது.
ஆனால் இன்றைக்கு இயற்கையாகவே சாதாரண மழை அல்ல. எவ்வளவு பெரிய மழை வந்தாலும் அதை சமாளிக்கிற ஆற்றல் சென்னை மாநகருக்கு கிடைத்துள்ளது என்றால், அது நாம் ஆட்சிக்கு வந்து நிறைவேற்றி இருக்கிற திட்டங்கள் தான் என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது. ரூ.6495 கோடி மதிப்பீட்டில், 1422 கி.மீ. நீளத்திற்கு மழை நீர் வடிகால் அமைக்க பணிகள் மேற்கொண்டு அதில், ரூ.4309 கோடிக்கு 1026 கி.மீ. நீளத்திற்கு பணிகள் முடித்து உள்ளோம். இது மட்டுமல்ல நீர் நிலைகள் புனரமைப்பு, மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள், பூங்காக்கள், விளையாட்டு திடல் என நிறைய செய்து கொண்டே இருக்கிறோம்.
அந்த வகையில் இன்று திரு.வி.க.நகர் தொகுதியில், திறந்து வைக்கப்பட்டுள்ள அண்ணல் அம்பேத்கர் திருமண மாளிகை இதனால் இந்த பகுதி மக்களுக்கு மட்டுமல்ல, சுற்று வட்டார பகுதி மக்களுக்கும் நிச்சயமாக இந்த மண்டபம் பயன்பெற போகிறது.
இந்த திருமண மண்டபத்தில் 10 ஜோடிக்கு திருமணம் நடைபெறுகிறது. திருமணத்தை காணும் மணமக்களுக்கு நான் சொல்லும் அறிவுரை, உங்களுக்கு பிறக்கப் போகும் குழந்தைகளுக்கு அழகான தமிழ்ப் பெயர் களை சூட்டுங்கள். ஏனென்றால் யாரையும் விமர்சனம் செய்து பேசவில்லை. யாரையும் கொச்சைப்படுத்தி பேசுவதாக நினைக்க வேண்டாம்.
ஆங்கிலத்தில், வடமொழியில் பெயர் என்பதை பார்க்கிறோம். இதை சொல்கிறபோது என் பெயர் ஸ்டாலின் இது தமிழ் பெயர் இல்லை. இருந்தாலும் அந்த பெயர் வைத்ததற்கு காரணம் உண்டு. அது உங்களுக்கு தெரியும்.
ரஷியாவில் புரட்சி செய்த ஸ்டாலின் நினைவு கொண்டு கம்யூனிஸ்டு சித்தாந்தத்தின் மீது தலைவர் கலைஞர் கொண்ட நம்பிக்கையின் அடிப்படையில், அந்த பெயரை எனக்கு சூட்டி தலைவர் கலைஞர் மகிழ்ந்தாரே தவிர வேறு எதுவும் கிடையாது. அதனால் உங்களை நான் கேட்டுக் கொள்வது அழகான தமிழ் பெயர்களை உங்களுக்கு பிறக்கும் குழந் தைகளுக்கு மணமக்களுக்கு மட்டுமல்ல, வரக்கூடிய காலக் கட்டத்திலே, பேரன், பேத்தி வரும்போது அந்த குழந்தைகளுக்கும் தமிழ்ப் பெயர்களை சூட்டுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.என்.நேரு, பி.கே.சேகர்பாபு, மேயர் ஆர்.பிரியா, தாயகம் கவி எம்.எல்.ஏ., வெற்றியழகன், ஜோசப் சாமுவேல், தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தின் தலைவர் ப.ரங்கநாதன், கூடுதல் தலைமைச் செயலாளர் காகர்லா உஷா, சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் உறுப்பினர் செயலர் பிரகாஷ், மாநகராட்சி ஆணையாளர் குமரகுருபரன், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் முதன்மை செயல் அலுவலர் சிவஞானம், மாநகராட்சி மத்திய வட்டார துணை ஆணையாளர் கவுஷிக், மண்டல குழுத் தலைவர் சரிதா மகேஷ்குமார் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் பெயரை சேர்க்க வாய்ப்பு கொடுக்கப்பட்டது.
- பிப்ரவரி 17-ந்தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.
சென்னை:
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்த பணிகள் நடைபெற்று வருகின்றன. நவம்பர் 4-ந் தேதி இந்த பணி தொடங்கப்பட்டன. கடந்த டிசம்பர் மாதம் 19 -ந்தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் தமிழகத்தில் 97.38 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். இதனால் 6 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரத்து 587-ஆக இருந்த தமிழக மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 5 கோடியே 43 லட்சத்து 76 ஆயிரத்து 756-ஆக குறைந்தது.
வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் பெயரை சேர்க்க வாய்ப்பு கொடுக்கப்பட்டது. மேலும் 18 வயது பூர்த்தி செய்தவர்கள் புதிதாக வாக்காளர் பட்டியல் பெயர்களை சேர்க்கவும் கடந்த டிசம்பர் மாதம் 19-ந்தேதி முதல் இந்த மாதம் 18-ந்தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டது.
ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இடம் மாறி சென்றவர்கள், விடுபட்டவர்கள் விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து கொடுத்தனர். அனைத்து மாவட்டங்களிலும் வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்கும் பணி தீவிரமாக நடைபெற்றது. ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு படிவங்கள் பெறப்படவில்லை. அதனால் ஜனவரி 30-ந்தேதி வரை பெயர் சேர்க்க அவகாசம் கொடுக்கப்பட்டு இருந்தது. இந்த அவகாசம் நாளையுடன் முடிவடைகிறது. இதுவரையில் பெயர் சேர்க்காதவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
சட்டசபை தேர்தல் ஏப்ரல் இறுதி அல்லது மே முதல் வாரத்தில் நடைபெற இருப்பதால் அதில் வாக்களிக்கும் உரிமையை பெறுவதற்கான வாய்ப்பு இதுவாகும். சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளில் 40 லட்சம் வாக்காளர்கள் இருந்தனர். வரைவு வாக்காளர் பட்டியலில் இந்த எண்ணிக்கை 25 லட்சமாக குறைந்தது. அதாவது 15 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். இதில் இறந்தவர்கள் 1.50 லட்சம் பேர் எனவும் 2.50 லட்சம் பேர் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இதுவரையில் 2 லட்சத்து 11 ஆயிரம் பேர் மட்டுமே படிவங்களை பூர்த்தி செய்து பெயர்களை சேர்க்க கொடுத்துள்ளனர்.
இதன் மூலம் சென்னை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றவர்களின் எண்ணிக்கை 10 லட்சம் பேர் குறைய வாய்ப்புள்ளது. அதாவது 10 லட்சம் பேர் பட்டியலில் இருந்து நீக்கப்படுகிறார்கள்.
நாளையுடன் நிறைவடையும் இந்த பணியை தொடர்ந்து பெறப்பட்ட படிவங்கள் சரிபார்க்கப்பட்டு பதிவேற்றம் செய்யப்படும். பிப்ரவரி 17-ந்தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.
- வெளி மார்க்கெட்டில் உள்ள காய்கறி மற்றும் மளிகை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.70 வரை விற்கப்பட்டது.
- இன்று 50-க்கும் மேற்பட்ட லாரிகளில் தக்காளி விற்பனைக்கு குவிந்தது.
கோயம்பேடு சந்தைக்கு ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்து தினசரி தக்காளி விற்பனைக்கு வருகிறது. பரவலாக அவ்வப்போது பெய்த மழை மற்றும் வெளி மாநில வியாபாரிகளின் கொள்முதல் காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரும் தக்காளியின் வரத்து தினசரி 30 லாரிகளாக குறைந்துபோனது.
இதனால் வெளி மார்க்கெட்டில் உள்ள காய்கறி மற்றும் மளிகை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.70 வரை விற்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே தக்காளியின் வரத்து படிப்படியாக அதிகரித்து வந்தது. இன்று 50-க்கும் மேற்பட்ட லாரிகளில் தக்காளி விற்பனைக்கு குவிந்தது. இதையடுத்து மொத்த விற்பனையில் தக்காளியின் விலை கடும் வீழ்ச்சி அடைந்து ஒரு கிலோ ரூ.6-க்கு விற்கப்பட்டது.
கடந்த வாரம் வரை மார்க்கெட்டில் உள்ள சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ ரூ.40-வரை விற்கப்பட்ட தக்காளி இன்று ரூ.15 ஆக குறைந்து உள்ளது. வரத்து அதிகரிப்பால் தக்காளி விலை கடந்த 3 மாதங்களுக்கு பிறகு வீழ்ச்சி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் இல்லத்தரசிகள் நிம்மதி அடைந்து உள்ளனர்.
- உணவகத்தில் வேலை செய்த 22 வயது பெண்ணை கல்லூரி வளாகத்தில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
- பாலியல் வன்கொடுமை செய்த மற்ற நபர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை:
சென்னை நந்தனம் அரசு கலைக் கல்லூரியில் 22 வயது பெண்ணை 5 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது பற்றிய பரபரப்பான தகவல்கள் வருமாறு:-
சென்னை நந்தனத்தில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் ஆண், பெண் இருபாலரும் படித்து வருகிறார்கள். இந்த கல்லூரியில் உள்ள உணவகத்தில் புதுக்கோட்டையை சேர்ந்த 56 வயது நபரான குணசேகர் என்பவர் பணியாற்றி வருகிறார்.
இதே உணவகத்தில் வேலை செய்த 22 வயது பெண்ணை குணசேகர் கல்லூரி வளாகத்திலேயே வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
மேலும் 5 பேரும் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட பெண் அழுதுகொண்டே கல்லூரியில் உள்ள காவலாளியிடம் வேதனையுடன் தெரிவித்து உள்ளார்.
இதனையடுத்து உடனடியாக சைதாப்பேட்டை போலீசில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, குணசேகர் கைது செய்யப்பட்டார். உணவக உரிமையாளரான அரசியல் பிரமுகர் செல்வம், டீ மாஸ்டர் ஆகியோரும் இந்த வழக்கில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் ஏற்கனவே மாணவி ஒருவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுத்தப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அதேபோன்று நந்தனம் அரசு கலைக் கல்லூரியிலும் இளம்பெண் கல்லூரி வளாகத்தில் வைத்தே கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இருப்பது புதிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த பாலியல் விவகாரம் தொடர்பாக மேலும் 2 பேரை போலீசார் தேடி வரும் நிலையில் இளம்பெண் வேறு யாருக்கும் இவர்களால் விருந்தாக்கப்பட்டாரா? என்பது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதற்கிடையே நந்தனம் கலைக்கல்லூரியில் இளம்பெண் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுத்தப்பட்ட சம்பவத்தை கண்டித்து இன்று மாணவர் அமைப்பினர் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
சென்னையில் கல்விக் கூடங்களில் இதுபோன்று பாலியல் அத்துமீறல் நடைபெறுவது தொடர் கதையாகி வருவதாக அவர்கள் குற்றம் சாட்டினார்கள்.
இது போன்ற பாலியல் சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்களை எழுப்பினார்கள்.
இந்தப் போராட்டம் காரணமாக நந்தனம் கலைக் கல்லூரி வளாகத்தில் இன்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு ஏராளமான போலீசாரும் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு உள்ளனர்.
சென்னையில் பிரபலமான நந்தனம் அரசு கலைக்கல்லூரியில் அரங்கேறி இருக்கும் இந்த பாலியல் சம்பவம் கல்வியாளர்கள் மத்தியிலும் பெற்றோர்கள் மத்தியிலும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
- சிலர் வடமொழி பெயர்களை குழந்தைகளுக்கு சூட்டுகிறார்கள். யாரையும் நான் குறைகூறவில்லை.
- ஸ்டாலின் என்பது தமிழ் பெயர் இல்லை என சிலர் கூறும் நிலையில் அது குறித்து முதலமைச்சர் விளக்கம் அளித்தார்.
சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் திரு.வி.க. நகரில் ரூ.21.50 கோடியில் கட்டப்பட்டுள்ள அண்ணல் அம்பேத்கர் திருமண மாளிகையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
அண்ணல் அம்பேத்கர் திருமண மாளிகையை திறந்துவைத்த முதலமைச்சர் 10 இணையருக்கு திருமணம் நடத்தி வைத்து சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயரை சூட்டுங்கள்.
* சிலர் வடமொழி பெயர்களை குழந்தைகளுக்கு சூட்டுகிறார்கள். யாரையும் நான் குறைகூறவில்லை.
* கம்யூனிச சித்தாந்தத்தின் பேரில் கலைஞர் வைத்திருந்த நம்பிக்கையில் தான் எனக்கு ஸ்டாலின் என பெயர் சூட்டப்பட்டது.
ஸ்டாலின் என்பது தமிழ் பெயர் இல்லை என சிலர் கூறும் நிலையில் அது குறித்து முதலமைச்சர் விளக்கம் அளித்தார்.
- சென்னையில் கட்டமைப்பு வசதியை சிறந்த முறையில் உருவாக்கிட திராவிட மாடல் அரசு செயல்படுகிறது.
- சென்னையில் ரூ.516 கோடி மதிப்பீட்டில் மேலும் 19 பாலங்களை கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் திரு.வி.க. நகரில் ரூ.21.50 கோடியில் கட்டப்பட்டுள்ள அண்ணல் அம்பேத்கர் திருமண மாளிகையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
அண்ணல் அம்பேத்கர் திருமண மாளிகையை திறந்துவைத்த முதலமைச்சர் 10 இணையருக்கு திருமணம் நடத்தி வைத்து சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* சென்னையில் கட்டமைப்பு வசதியை சிறந்த முறையில் உருவாக்கிட திராவிட மாடல் அரசு செயல்படுகிறது.
* சென்னையில் மேம்பாலங்கள், சுரங்கங்கள், மெட்ரோ ரெயில் என அனைத்தும் கொண்டுவரப்பட்டது தி.மு.க. ஆட்சியில் தான்.
* சென்னையில் ரூ.516 கோடி மதிப்பீட்டில் மேலும் 19 பாலங்களை கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
* பார்த்து பார்த்து வடசென்னைப் பகுதியில் உட்கட்டமைப்புகளை செயல்படுத்தி வருகிறோம்.
* சென்னையில் 2015-ம் ஆண்டில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பொதுமக்கள் எவ்வளவு பாதிக்கப்பட்டனர் என்பது நமக்கு தெரியும்.
* தற்போது எப்படிப்பட்ட மழை வந்தாலும் சமாளிக்கும் வகையில் திட்டங்களை செயல்படுத்தி உள்ளோம்.
* மாநிலம் முழுவதும் தி.மு.க. ஆட்சியில் ரூ.2,359 கோடி மதிப்பில் 19,000-க்கும் மேற்பட்ட சாலைகள் போடப்பட்டுள்ளது.
* சென்னை வெள்ளத்தில் தத்தளிக்காமல் இருப்பதற்கு தி.மு.க. கொண்டுவந்த திட்டங்கள் தான் காரணம் என்பதை மறந்துவிடாதீர்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தங்கம் விலை கிராமுக்கு ரூ.1,190 உயர்ந்து ரூ.16,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- தங்கத்தை தொடர்ந்து வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது.
சென்னை:
தங்கம் விலை கட்டுக்கடங்காத காளையை போல துள்ளிக்குதித்து எகிறி உச்சத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. முன்பெல்லாம் பெரிய அளவில் உயர்வு என்பது எப்போதாவது ஒரு நாள் இருக்கும்.
ஆனால் சமீப நாட்களாக தினமும் காலை மற்றும் பிற்பகலில் விலை மாற்றம் கண்டு, சவரனுக்கு ரூ.2 ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரம் வரையில் உயர்ந்து வருவதையே பார்க்க முடிகிறது. நேற்று இதையெல்லாம் தூக்கி சாப்பிடும் அளவுக்கு தங்கம் விலை ஏற்றம் கண்டது.
இப்படியாக விலை ஏறிச்சென்றால், தங்கம் எட்டாக்கனியாகிவிடுமோ? என்ற அச்சம் நடுத்தர வர்க்கத்தினரிடையே நிலவி வருகிறது. இனிவரும் நாட்களிலும் விலை ஏற்றம் இருந்தாலும், அவ்வப்போது விலை சற்று குறையும் என்றே சொல்லப்படுகிறது.
நேற்று ஒரே நாளில் தங்கம் விலை இதுவரை இல்லாத வகையில் தாறுமாறாக உயர்ந்திருக்கிறது. அதன்படி நேற்று காலையில் கிராமுக்கு ரூ.370-ம், சவரனுக்கு ரூ.2 ஆயிரத்து 960-ம் உயர்ந்து இருந்தது.
பின்னர் பிற்பகலில் மேலும் கிராமுக்கு ரூ.280-ம், சவரனுக்கு ரூ.2 ஆயிரத்து 240-ம் அதிகரித்தது. ஆக ஒரே நாளில் இதுவரை இல்லாத வகையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.650-ம், சவரனுக்கு ரூ.5 ஆயிரத்து 200-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.15 ஆயிரத்து 610-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 24 ஆயிரத்து 880-க்கும் விற்பனை ஆனது.
இதன்மூலம் தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை நேற்று பதிவு செய்துவிட்டது. கடந்த 10 நாட்களில் மட்டும் தங்கம் விலை கிராமுக்கு ரூ.2 ஆயிரத்து 330-ம், சவரனுக்கு ரூ.18 ஆயிரத்து 640-ம் உயர்ந்துள்ளது.
இந்நிலையில் தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.9,520 அதிரடியாக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.9,520 உயர்ந்து ரூ.1,34,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.1,190 உயர்ந்து ரூ.16,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தை தொடர்ந்து வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.425-க்கும் பார் வெள்ளி 4 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
28-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,24,880
27-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,19,680
26-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,20,200
25-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,18,000
24-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,18,000
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
28-1-2026- ஒரு கிராம் ரூ.400
27-1-2026- ஒரு கிராம் ரூ.387
26-1-2026- ஒரு கிராம் ரூ.375
25-1-2026- ஒரு கிராம் ரூ.365
24-1-2026- ஒரு கிராம் ரூ.365
- UGC கொண்டு வந்துள்ள புதிய விதிகள் தாமதமானது என்றாலும் வரவேற்கத்தக்கது.
- மாணவர்களை குறிவைத்து மீண்டும் மீண்டும் தாக்குதல்கள் நடந்துள்ளன.
சென்னை:
சாதி பாகுபாட்டை களைய பல்கலைக்கழக மானியக்குழு கொண்டு வந்துள்ள புதிய விதிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில்,
சாதிய பாகுபாடுகளை களையும் வகையில் UGC கொண்டு வந்துள்ள புதிய விதிகள் தாமதமானது என்றாலும் வரவேற்கத்தக்கது. பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பின்னர் உயர்கல்வி நிறுவனங்களில் குறிப்பாக SC, ST மாணவர்கள் தற்கொலை அதிகரித்து வருகின்றன. தென்னிந்தியா, காஷ்மீர் மற்றும் சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களை குறிவைத்து மீண்டும் மீண்டும் தாக்குதல்கள் மற்றும் சித்ரவதைகள் நடந்துள்ளன. இந்த சூழலில், சமத்துவ பாதுகாப்புகள் என்பது தவிர்க்க முடியாத ஒன்று.
மாணவர் இறப்புகளைத் தடுப்பது, பாகுபாட்டை முடிவுக்குக் கொண்டுவருவது மற்றும் பின்தங்கிய சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களிடையே இடைநிற்றல் விகிதங்களைக் குறைப்பதில் மத்திய பாஜக அரசு தீவிரமாக இருந்தால், இந்த விதிமுறைகள் வலுப்படுத்தப்படுவது மட்டுமல்லாமல், அவற்றின் கட்டமைப்பு இடைவெளிகளை நிவர்த்தி செய்யும் வகையில் திருத்தப்பட்டு, உண்மையான பொறுப்புணர்வுடன் செயல்படுத்தப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.
- கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது எம்.எல்.ஏ.க்கள் விவாதித்தனர்.
- ஆளும் கட்சியான தி.மு.க. இந்த இடைக்கால பட்ஜெட்டை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி மக்களை கவரும் அறிவிப்புகளை வெளியிட வாய்ப்பு உள்ளது.
சென்னை:
தமிழ்நாடு சட்டசபையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் கடந்த 20-ந்தேதி தொடங்கியது. முதல் நாளான 20-ந்தேதி கவர்னர் உரை நிகழ்ச்சி நடைபெற்றது. கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது எம்.எல்.ஏ.க்கள் விவாதித்தனர்.
அவர்களுக்கு கடந்த 24-ந்தேதி பதிலளித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். அதைத்தொடர்ந்து, தேதி குறிப்பிடாமல் சட்டசபை அலுவல்கள் தள்ளிவைக்கப்பட்டன.
தி.மு.க. அரசின் பதவிக்காலம் முடிந்து சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடரை நடத்துவது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது. எனவே, இந்த பட்ஜெட், இடைக்கால பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்படும்.
தேர்தலை கருத்தில் கொண்டு ஆளும் கட்சியான தி.மு.க. இந்த இடைக்கால பட்ஜெட்டை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி மக்களை கவரும் அறிவிப்புகளை வெளியிட வாய்ப்பு உள்ளது.
எனவே இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.
தமிழக சட்டசபையில் இடைக்கால பட்ஜெட்டை பிப்ரவரி 13 அல்லது 14-ந்தேதியன்று தாக்கல் செய்யலாமா? என ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இல்லாதபட்சத்தில் பிப்ரவரி 3-ம் வாரத்தில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து 4 நாட்கள் அவையை நடத்தி முடிக்கலாமா? என்றும் ஆலோசனை மேற்கொள்ளப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
- பரந்தூரில் விமான நிலையம் அமைந்தால் சென்னை வெள்ள பாதிப்பில் சிக்கிக்கொள்ளும்.
- நிபுணர் குழு அறிக்கையை வெளியிடவேண்டும்.
சென்னை:
சென்னை சேப்பாக்கம் பத்திரிகையாளர் மன்றத்தில் உவகை ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் விதுபாலா நிருபர்களிடம் கூறியதாவது:-
பரந்தூரில் விமான நிலையம் அமைக்க அப்பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மக்களின் எதிர்ப்பை தொடர்ந்து 2023-ம் ஆண்டு விமான நிலையம் அமைக்க பரந்தூர் தகுந்த இடமா என்பதை கண்டறிந்து சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்க மச்சேந்திரநாதன் ஐ.ஏ.எஸ். தலைமையில் தமிழ்நாடு அரசு குழு அமைத்தது. இந்த குழுவின் நீரியல் மற்றும் சுற்றுச்சூழல் அறிக்கை இதுவரை பொதுமக்கள் முன்பு வெளியிடப்படவில்லை. சாத்தியக்கூறு ஆய்வு செய்வதற்கு முன்பாகவே தமிழ்நாடு அரசு 5,746 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த அரசாணை வெளியிட்டது.
பரந்தூர் விமான நிலையம் அமைய உள்ள பகுதி குறித்து பல வல்லுநர்களை வைத்து ஆய்வு ஒன்றை நடத்தினோம். அதில், 26.5 சதவீதம் நீர்நிலைகளாக இருக்கிறது. தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகத்தின் அறிக்கையில் இதுகுறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. பரந்தூரில் விமான நிலையம் அமைந்தால் சென்னை வெள்ள பாதிப்பில் சிக்கிக்கொள்ளும். போதுமான நீரியல் ஆய்வுகள் இல்லாமல் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
எனவே, தமிழ்நாடு அரசு அனுமதிகள் வழங்குவதையும், நிலப்பயன்பாடு மாற்றத்தையும் உடனடியாக நிறுத்த வேண்டும். நிபுணர் குழு அறிக்கையை வெளியிடவேண்டும். மாற்றுவழிகள் குறித்து ஆய்வு செய்திட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும்.
- கோவிலம்பாக்கம், மடிப்பாக்கம், கீழ்க்கட்டளை, மயிலை பாலாஜி நகர்.
சென்னை:
சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (30.01.2026) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,
முடிச்சூர்: பரத்வாஜ் நகர், தனசெல்வி நகர், PTC அடுக்குமாடி குடியிருப்புகள், வரதராஜபுரம், ராயப்பா நகர், தர்கா ரோடு, நடுவீரப்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
செம்பியம்: கண்ணபிரான் கோவில் தெரு, அம்பேத்கர் நகர், அண்ணா நகர், பிரான்சிஸ் காலனி, முத்துமாரியம்மன் கோவில் தெரு, திருவள்ளுவர் தெரு, பாண்டியன் தெரு, கேகேஆர் எஸ்டேட், மிக்டிக் காலனி, கேகேஆர் நகர், கல்கத்தா கடை, விஓசி தெரு, நவின் அடுக்குமாடி குடியிருப்பு, ஆர்சி கிங்ஸ்டன் தெரு, உடையார் தோட்டம், டி.வி.கே. தெரு.
முகப்பேர்: முகப்பேர் கிழக்கு, பன்னீர் நகர், திருவள்ளுவர் நகர், ஸ்பார்டன் நகர் மற்றும் அவென்யூ, கார்டன் அவென்யூ, மகிழ்ச்சி காலனி, கோல்டன் பிளாட் மற்றும் காலனி, மேற்கு முனை காலனி, சீனிவாசா நகர், சத்யா நகர், ஆபிசர் காலனி, இளங்கோ நகர், மூர்த்தி நகர், குமரன் நகர், டிவிஎஸ் காலனி மற்றும் அவென்யூ, கலெக்டர் நகர், ரெடியல் ஹவுஸ், ஜீவன் பீமா நகர், கிருஷ்ணா நகர்.
மாத்தூர்: சின்னசாமி நகர், எம்எம்டிஏ மெயின் ரோடு, ஓமக்குளம் தெரு, சக்தி நகர், நேரு நகர், பெருமாள் கோவில் தெரு, டெலிகாம் நகர், பெரிய மாத்தூர், புதுநகர், மஞ்சம்பாக்கம் அசிஸ் நகர், அகர்சன் கல்லூரி சாலை.
பள்ளிக்கரணை: கோவிலம்பாக்கம், மடிப்பாக்கம், கீழ்க்கட்டளை, மயிலை பாலாஜி நகர், பாலாஜி பல் மருத்துவக் கல்லூரி, ஆதிபுரீவரர், NIOT, பவானியம்மன் கோவில், கிருஷ்ணா நகர், மணிமேகலை நகர், குபேரன் நகர், ராம் நகர்.
பல்லாவரம்: பாலமுருகன் நகர், ரோஸ் நகர், அம்பாள் நகர், சுபம் நகர், பெருமாள் நகர், பல்லவ கார்டன், தேன்மொழி நகர், பூபதி நகர், சௌந்தரராஜன் நகர், குமரன் நகர், திருவள்ளுவர் நகர், கீழ்க்கட்டளை பேருந்து நிலையம், இங்கிலீஷ் எலெக்ட்ரிக் நகர், 200 அடி ரேடியல் சாலை, ரோஸ் நகர், எம்.கே.நகர், கணபதி நகர், ஈச்சங்காடு சிக்னல், இன்ஜினீயர்ஸ் அவென்யூ, பாக்கியலட்சுமி நகர், ராஜா நகர், S. கொளத்தூர், மணிகண்டன் நகர், வீரமணி நகர், அன்பு நகர், Self Help இண்டஸ்ட்ரீஸ்.
புழல்: சேந்திரம்பாக்கம், தீயபாக்கம், கொசப்பூர், தியாக விவதாசி நகர், கானம் பாளையம், வெங்கடேஸ்வரா நகர், ஏவி டைல்ஸ், பெரியார் நகர், நாகாத்தம்மன் கோவில்.






