என் மலர்
செங்கல்பட்டு
- சிமெண்டு தூண்கள் அதிக எடை கொண்டவை என்பதால் உடனடியாக ஊழியர்களால் அகற்ற முடியவில்லை.
- சென்னையில் இருந்து செல்லும் அனைத்து ரெயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டது.
மதுராந்தகம்:
மேல்மருவத்தூர்- தொழுப்பேடு இடையே தண்டவாளத்தில் உள்ள சிமெண்டு தூண்களை மாற்றும் பணி கடந்த 10 நாட்களுக்கு மேல் நடந்து வருகிறது. இதில் ஏராளமான ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் இன்று காலை 6 மணியளவில் செங்கல்பட்டில் இருந்து சிமெண்டு தூண்களை ஏற்றிக்கொண்டு சரக்கு ரெயில் ஒன்று மேல்மருவத்தூர் நோக்கி சென்று கொண்டு இருந்தது. அச்சரப்பாக்கம்-தொழுப்பேடு இடையே சென்று கொண்டு இருந்த போது சரக்குரெயிலின் மேல் டிராலியில் இருந்த சிமெண்டு தூண்கள் சரிந்தது. மொத்தம் 3 டிராலிகள் முழுவதும் சரிந்ததால் அதில் இருந்த சுமார் 200-க்கும் மேற்பட்ட சிமெண்டு தூண்கள் தண்டவாளத்தில் சரிந்து விழுந்தன.
இதனால் அதிர்ச்சி அடைந்த சரக்கு ரெயில் டிரைவர் உடனடியாக ரெயிலை நடு வழியில் நிறுத்தினார். உடனடியாக ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சுமார் 200-க்கும் மேற்பட்ட ரெயில்வே ஊழியர்கள் விரைந்து வந்தனர்.
சிமெண்டு தூண்கள் அதிக எடை கொண்டவை என்பதால் உடனடியாக ஊழியர்களால் அகற்ற முடியவில்லை. இதைத் தொடர்ந்து ஜே.சி.பி. எந்திரங்கள் வரவழைக்கப்பட்டன. இதனால் மற்ற தண்டவாளம் வழியாக ரெயில்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து காலையில் சென்னையில் இருந்து செல்லும் அனைத்து ரெயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டது. இதே போல் தென்மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி வரும் ரெயில்கள் அனைத்தும் திண்டிவனம், விழுப்புரம் உள்ளிட்ட இடங்களில் வரும் வழியில் நிறுத்தப்பட்டன.
மேல்மருவத்தூர் ரெயில் நிலையத்தில் சென்னையில் இருந்து புறப்பட்ட சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலும், மேல்மருவத்தூர் அருகே பாண்டிச்சேரி-திருப்பதி எக்ஸ்பிரஸ் ரெயில், குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயிலும் நிறுத்தப்பட்டு இருந்தன.
இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். சிலர் ரெயிலில் இருந்து இறங்கி அங்கிருந்து பஸ்களில் புறப்பட்டு சென்றனர். குறித்த நேரத்துக்கு செல்ல முடியாததால் சென்னை நோக்கி வந்த பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
காலை 11.30 மணி அளவில் சிமெண்டு தூண்கள் முழுவதும் அகற்றப்படு சரக்கு ரெயில் அங்கிருந்து சென்றது.
சுமார் 5 மணிநேரத்துக்கு மேல் ரெயில் சேவை பாதிக்கப் பட்டதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
- சென்னையில் இருந்து திண்டிவனம் நோக்கி சென்ற தனியார் பஸ் திடீரென நேதாஜி மீது மோதியது.
- போலீசார் விரைந்து வந்து நேதாஜியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மதுராந்தகம்:
மதுராந்தகம் அடுத்த கருங்குழியைச் சேர்ந்தவர் நேதாஜி (வயது 58). இவர் கருங்குழி பேரூராட்சியில் தொழில்நுட்ப உதவியாளராக தற்காலிகமாக பணியாற்றி வந்தார்.
நேற்று இரவு அவர் கருங்குழி ஜங்ஷன் பகுதியில் சாலையை கடக்க முயன்றார். அப்போது சென்னையில் இருந்து திண்டிவனம் நோக்கி சென்ற தனியார் பஸ் திடீரென நேதாஜி மீது மோதியது. இதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே நோதாஜி பரிதாபமாக உயிரிழந்தார்.
விபத்து பற்றி அறிந்ததும் மதுராந்தகம் போலீசார் விரைந்து வந்து நேதாஜியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட கோவை மாவட்டத்தை சேர்ந்த விஜயகுமார் ஏற்கனவே பலமுறை வாகன திருட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து விடுதலை ஆனவர்.
- பொதுமக்கள் இருசக்கர வாகனங்களை பாதுகாப்பான இடத்தில் நிறுத்த வேண்டும்.
மதுராந்தகம்:
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் உட்கோட்டம் மேல்மருவத்தூர், அச்சரப்பாக்கம், சித்தாமூர், மதுராந்தகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் திருட்டில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்ததோடு அவரிடம் இருந்து ரூ.50 லட்சம் மதிப்பிலான 60 இருசக்கர வாகனங்களை போலீசார் கைப்பற்றினர்.
இந்த வழக்கு குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரதீப் நிருபர்களிடம் கூறியதாவது:-
திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட கோவை மாவட்டத்தை சேர்ந்த விஜயகுமார் ஏற்கனவே பலமுறை வாகன திருட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து விடுதலை ஆனவர். விடுதலைக்கு பின் அவர் வேறொரு மாவட்டத்திற்கு சென்று அங்கு தங்கி ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் தனியாக நிற்கும் இருசக்கர வாகனங்களை திருடி நரிக்குறவர்களுக்கு விற்று வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.
தற்போது செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர், சித்தாமூர், மதுராந்தகம், அச்சரப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இரு சக்கர வாகனங்களை திருடி இதே மாவட்டத்தில் உள்ள நரிக்குறவர்களுக்கு குறைவான விலையில் விற்று வந்துள்ளார். அவரை கைது செய்து அவரிடம் இருந்து ரூ.50 லட்சம் மதிப்பிலான 60 இருசக்கர வாகனங்களை தற்போது பறிமுதல் செய்துள்ளோம். பொதுமக்கள் இருசக்கர வாகனங்களை பாதுகாப்பான இடத்தில் நிறுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கூவத்தூர் அருகே உள்ள காத்தான்கடை கிழக்கு கடற்கரை சாலையில் நள்ளிரவில் கார் சென்று கொண்டிருந்தது.
- விபத்தில் காரில் இருந்த புருஷோத்தமன், முருகானந்தம் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
மாமல்லபுரம்:
சென்னை மாதவரம் பகுதியை சேர்ந்தவர் புருஷோத்தமன் (வயது 30). திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தை சேர்ந்தவர் முருகானந்தம் (30). இவர்கள் இருவரும் நண்பர்கள். முருகானந்தம், புருஷோத்தமனை பார்ப்பதற்காக சென்னை வந்திருந்தார்.
இந்த நிலையில் புருஷோத்தமன், முருகானந்தம் மற்றும் அவர்களது நண்பர்கள் நரேஷ், கிஷோர், நிர்மல், கார்த்திக் ஆகியோர் புதுக்கோட்டையில் உள்ள நண்பரை சந்திக்க சென்னையில் இருந்து நேற்று இரவு காரில் புறப்பட்டு சென்றனர்.
கூவத்தூர் அருகே உள்ள காத்தான்கடை கிழக்கு கடற்கரை சாலையில் நள்ளிரவில் கார் சென்று கொண்டிருந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் தாறுமாறாக ஓடியது. பின்னர் சாலையோரம் இருந்த மேம்பால தடுப்புச் சுவரில் மோதியது. இதில் கார் கவிழ்ந்து விழுந்து உருண்டோடி நொறுங்கியது.
இந்த விபத்தில் காரில் இருந்த புருஷோத்தமன், முருகானந்தம் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இந்த விபத்தில் நரேஷ், கிஷோர், நிர்மல், கார்த்திக் ஆகிய 4 பேரும் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினார்கள்.
தகவல் அறிந்ததும் கூவத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். படுகாயம் அடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் முலம் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- மது போதையில் இருந்த சூர்யா போலீஸ்காரர் கார்த்திக்கை தகாத வார்த்தைகளாலும் அசிங்கமாகவும் பேசினார்.
- போலீசார் கார்த்திக்கை தாக்கிய சூர்யாவை கைது செய்தனர்.
மதுராந்தகம்:
அச்சரப்பாக்கம் அடுத்த மதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் லோகு (வயது 24).அதே கிராமம் செல்லியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சூர்யா (வயது 23). இவர்கள் இருவரும் நேற்றிரவு 8 மணிக்கு அச்சரப்பாக்கம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட வெங்கடேசபுரம் ரெயில்வே கேட் அருகே அச்சரப்பாக்கம் நோக்கி வரும் பகுதியில் இருசக்கர வாகனத்தில் மதுபோதையில் பொதுமக்களிடம் தகாத வார்த்தையால் பேசி வீண் வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்பொழுது, பணிக்கு வந்து கொண்டிருந்த அச்சரப்பாக்கம் போலீஸ்காரர் கார்த்திக், பொதுமக்களிடம் தகராறு செய்யாதீர்கள் என அறிவுறுத்தியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து மது போதையில் இருந்த சூர்யா போலீஸ்காரர் கார்த்திக்கை தகாத வார்த்தைகளாலும் அசிங்கமாகவும் பேசினார். திடீரென்று சூர்யா போலீஸ்காரர் கார்த்திக்கை தாக்கியுள்ளார். இதை கண்ட பொதுமக்கள் அச்சரப்பாக்கம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அங்கு விரைந்து வந்த போலீசார் கார்த்திக்கை தாக்கிய சூர்யாவை கைது செய்தனர்.
- நெம்மேலியில் கடல் அரிப்பை தடுக்கும் வகையில் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மீனவர்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
- தூண்டில் வளைவு மீன் இறங்கு தளம், வலை பின்னும் கூடம் அமைக்கப்படும் என்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அறிவித்தார்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் அருகே உள்ளது நெம்மேலி மீனவ கிராமம். இப்பகுதியில் அடிக்கடி ஏற்படும் கடல் அரிப்பால் மீனவர்கள் கடற்கரையில் மீன்பிடி படகுகளை நிறுத்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.
மேலும் கடல் அரிப்பு காரணமாக கரையில் அமைக்கப்பட்டு இருந்த சாலை முற்றிலும் சேதம் அடைந்து காணப்படுகிறது. இதனால் மீனவர்களின் போக்குவரத்து பாதிக்கப் பட்டு மீன்பிடி தொழில் செய்ய சிரமம் அடைந்து வருகிறார்கள்.
இதையடுத்து நெம்மேலியில் கடல் அரிப்பை தடுக்கும் வகையில் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மீனவர்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்து வந்தனர்.
இதற்கிடையே சட்டசபையில் நடைபெற்ற மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் மானிய கோரிக்கையின் போது நெம்மேலி மீனவ குப்பத்தில் தூண்டில் வளைவு மீன் இறங்கு தளம், வலை பின்னும் கூடம் அமைக்கப்படும் என்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அறிவித்தார்.
இதன்காரணமாக நெம்மேலி மீனவ கிராம மக்களின் நீண்டநாள் பிரச்சினைக்கு தீர்வு கிடைத்து உள்ளது. இதனை மீனவர்கள் பெரிதும் வரவேற்றுள்ளனர்.
- சுமார் 50-க்கும் மேற்பட்டோர் செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தனர்.
- சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மூச்சு திணறல், சுவாச கோளாறு, கொசு தொல்லை மற்றும் சுகாதார சீர்கேடு பாதிப்பு ஏற்படும்.
செங்கல்பட்டு:
காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியம் பெருமாட்டுநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட பாண்டூர் கிராமத்தில் நந்திவரம் கூடுவாஞ்சேரி நகராட்சி நிர்வாகம் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டு உள்ளது. இதற்கான இடத்தை தேர்வு செய்து ஆரம்பக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன.
இதற்கு கிராமமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இதனை வலியுறுத்தி கிராமசபை கூட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் பெரு மாட்டுநல்லூரில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட சுமார் 50-க்கும் மேற்பட்டோர் செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
நந்திவரம் கூடுவாஞ்சேரி நகராட்சி நிர்வாகம் பொதுமக்கள் குடியிருக்கும் பாண்டூர் கிராமத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை அமைக்க கூடாது. இது அமைந்தால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மூச்சு திணறல், சுவாச கோளாறு, கொசு தொல்லை மற்றும் சுகாதார சீர்கேடு பாதிப்பு ஏற்படும்.
இப்பகுதியில் இருந்து 10 மீட்டர் தூரத்தில் அஸ்தினாபுரம் ஏரியும், 20மீட்டர் தூரத்தில் குழந்தைகள் காப்பகம் மற்றும் வழிபாட்டு தலங்கள் உள்ளன.
எனவே பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்காக நந்திவரம் கூடுவாஞ்சேரி நகராட்சி நிர்வாகத்திற்கு நில உரிமை மாற்றம் செய்யக்கூடாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- செங்கல்பட்டு மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளை பராமரிப்பதாக பல இல்லங்களை தொண்டு நிறுவனங்கள் நடத்தி வருகின்றன.
- தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் செங்கல்பட்டு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை அணுகி அதற்கான விண்ணப்பங்களை பெறலாம்.
செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
செங்கல்பட்டு மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளை பராமரிப்பதாக பல இல்லங்களை தொண்டு நிறுவனங்கள் நடத்தி வருகின்றன. உடல் ரீதியாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளோ அல்லது மனநலம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளோ பராமரிக்கப்பட்டு வருகிற அத்தகைய இல்லங்கள் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில், மாற்றுத்திறனாளிகள் உரிமைச்சட்டம் 2016-ன் கீழ் பதிவு செய்யவேண்டும்.
மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கான பல்வேறு வகையான உதவிகளை வழங்கி அவர்களுக்கு சேவை புரிந்து வரும் தொண்டு நிறுவனங்களும், மாற்றுத்திறனாளிகளுக்கான பயிற்சிகளை நடத்தி வரும் நிறுவனங்களும், சிறப்புபள்ளிகளும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில் மாற்றுத்திறனாளிகள் உரிமைச்சட்டம் 2016-இன் கீழ் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டியது கட்டாயமாகும்.
அவ்வாறு இதுவரை பதிவு செய்யாத தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் செங்கல்பட்டு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை அணுகி அதற்கான விண்ணப்பங்களை பெறலாம். மேலும் மாற்றுத்திறனாளிகள் தொடர்பான சேவைகளை செய்துவரும் பதிவு செய்யப்பட்டாத நிறுவனங்கள், இல்லங்கள், சிறப்பு பள்ளிகள் மீது மாற்றுத்திறனாளிகள் உரிமை சட்டம் 2016-இன் படி சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலி பர்கள் முகவரி கேட்பது போல் செந்தமிழ் செல்வியிடம் பேச்சு கொடுத்தனர்.
- நிலைதடுமாறிய செந்தமிழ் செல்வி தவறி கீழே விழுந்தார்.
மதுராந்தகம்:
அச்சரப்பாக்கம் அடுத்த பள்ளிப்பேட்டை மின்வாரிய குடியிருப்பு அருகில் வசிப்பவர் சிவ சண்முகம். இவரது மனைவி செந்தமிழ்செல்வி. படப்பையில் உள்ள அரசு மகளிர் பள்ளியில் ஆங்கில ஆசிரியைாக வேலைபார்த்து வருகிறார்.
நேற்று மாலை அவர்பணி முடிந்ததும் பள்ளியில் இருந்து பஸ் மூலம் அச்சரப்பாக்கம் பஸ்நிலையம் வந்தார். பின்னர் அவர் வீட்டுக்கு நடந்து வந்து கொண்டு இருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலி பர்கள் முகவரி கேட்பது போல் செந்தமிழ் செல்வியிடம் பேச்சு கொடுத்தனர். திடீரென அவர்கள் செந்தமிழ்ச்செல்வி அணிந்து இருந்த 5 பவுன் நகையை பறித்து தப்பி சென்றுவிட்டனர். இதில் நிலைதடுமாறிய செந்தமிழ் செல்வி தவறி கீழே விழுந்தார். இதுகுறித்து அவர் அச்சரப்பாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிரா பதிவு களை வைத்து தீவிர விசா ரணை நடத்தி வருகின்றனர்.
- பலத்த காயம் அடைந்த பிரபின் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
- விபத்து குறித்து தகவல் அறிந்ததும் ஒரத்தி போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மதுராந்தகம்:
கோவூர், லட்சுமி நகரில் உள்ள பாபு கார்டன் பகுதியில் வசித்தவர் பிரபின் (வயது.31). இவர் சென்னை வியாசர்பாடியில் அரசு போக்குவரத்து பணிமனையில் கண்டக்டராக வேலைபார்த்து வந்தார்.
இவர் அச்சரப்பாக்கம் அருகே வசிக்கும் நண்பர் ஒருவரை பார்க்க வந்தார். பின்னர் அவர் நண்பரின் மோட்டார் சைக்கிளை வாங்கிக்கொண்டு படூர் கிராமத்தில் உள்ள அரசு மதுபான கடைக்கு சென்றார்.
பின்னர் திரும்பி வந்து கொண்டு இருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் தாறுமாறாக ஓடி சாலையோர பள்ளத்தில் பாய்ந்தது.
இதில் பலத்த காயம் அடைந்த பிரபின் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்ததும் ஒரத்தி போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விஜயகுமார் மோட்டார் சைக்கிள்களை திருடி குறைந்த விலைக்கு விற்று உல்லாச செலவு செய்து வந்து உள்ளார்.
- கைதான விஜயகுமார் மீது கடலூர், விழுப்புரம், கோயம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்குகள் உள்ளன.
மதுராந்தகம்:
அச்சரப்பாக்கம் மதுராந்தகம், மேல் மருவத்தூர், சித்தாமூர் திருக்கழுக்குன்றம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மோட்டார் சைக்கிள்கள் திருடு போனது.
இதுதொடர்பாக ஏராளமான புகார்கள் போலீசாருக்கு வந்தன. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் சித்தாமூர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரிடம் போலீசார் விசாரித்தனர். அவர் கோயம்புத்தூரை சேர்ந்த விஜயகுமார் என்பதும் அச்சரப்பாக்கத்தில் உள்ள மலை மாதா கோவில் தெருவில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்து தொடர்ந்து மோட்டார் சைக்கிள் திருடி வருவதும் தெரிந்தது. இதையடுத்து விஜயகுமாரை போலீசார் கைது செய்தனர். அவர் மோட்டார் சைக்கிள்களை திருடி குறைந்த விலைக்கு விற்று உல்லாச செலவு செய்து வந்து உள்ளார். அவரிடம் இருந்து மொத்தம் 54 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
கைதான விஜயகுமார் மீது கடலூர், விழுப்புரம், கோயம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்குகள் உள்ளன.
ஒரு இடத்தில் பிடிபட்டதும் சிறையில் இருந்து வெளியே வந்ததும் மீண்டும் வேறு மாவட்டங்களுக்கு சென்று கைவரிசை காட்டுவதை வழக்கமாக கொண்டு உள்ளார். அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- பல்வேறு அரசியல் கட்சிகளின் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.
- கல்பாக்கம் இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மாமல்லபுரம்:
கல்பாக்கம் அணுமின் நிலைய நகரியத்தின் ஜி.எஸ்.ஓ அலுவலகம் அருகில் இன்று கல்பாக்கம் ஆட்டாமிக் எனர்ஜி காண்ட்ராக்ட் ஒர்க்கர்ஸ், லேபர் யூனியன், இந்திய தொழிற்சங்க மைய்யம் அமைப்பினர் மாவட்ட துணை தலைவர் பழனிசாமி தலைமையில் தொடர் முழக்க கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதில் தி.மு.க., அ.தி.மு.க. தவிர்த்து சி.ஐ.டி.யூ, விடுதலை சிறுத்தைகள், மக்கள் வாழ்வுரிமை கட்சி, காங்கிரஸ், பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தொழிற்சங்கத்தினர் கலந்து கொண்டனர்.
கல்பாக்கம் அணுமின் நிலைய ஒப்பந்த தொழிலாளியாக நீண்ட காலம் வேலை செய்யும் ஊழியர்களுக்கு நிரந்தர வேலை வழங்க வேண்டும், தொழில் கூட்டுறவு சங்கம் துவங்க வேண்டும், மருத்துவ வசதி, போனஸ் வேண்டும், பண்டிகைகால விடுமுறை தேவை, பணிநீக்கம் செய்த டிரைவர், கெஸ்ட் அவுஸ் ஊழியர்களுக்கு மீண்டும் வேலை தேவை, உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர். கல்பாக்கம் இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீசார் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் காவல் பணியில் ஈடுபட்டிருந்தனர்.






