என் மலர்tooltip icon

    செங்கல்பட்டு

    • நூதனமுறையில் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர்கள் கூடுவாஞ்சேரி போலீசில் புகார் செய்தனர்.
    • செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    வண்டலூர்:

    செங்கல்பட்டு பகுதியை சேர்ந்தவர் கார்த்திக்(34). டிப்ளமோ படித்து உள்ள இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர், வண்டலூர் அடுத்துள்ள நெடுகுன்றம் பகுதியை சேர்ந்தவர்களிடம் தனிநபர் கடன் பெற்று தருவதாக ஆசை வார்த்தைகள் கூறினார். இதனை நம்பி அப்பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட 10-க்கும் மேற்பட்டோரிடம் வங்கியில் தனிநபர் கடன் வாங்கி தருவதாக ஆதார் கார்டு, பான் கார்டு, வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றை வாங்கினார்.

    பின்னர் கார்த்திக், அவர்களிடம் கடன் பெறுவதில் சிக்கல் உள்ளது. எனவே செல்போன் கடையில் இ.எம்.ஐ.யில் ஐபோன் வாங்கி விட்டு அதனை விற்று உடனடியாக பணம் தருவதாக தெரிவித்தார். இதனை நம்பிய 10 பேரையும் கூடுவாஞ்சேரியில் உள்ள பிரபல தனியார் செல்போன் விற்பனை கடைக்கு அழைத்து சென்று ரூ.58 ஆயிரம் மதிப்பில் 10 ஐபோன்கள் வாங்கினார். பின்னர் மாதாமாதம் பணம் கட்டுவதாக கூறி கடன் வாங்க கொடுத்தவர்களின் வங்கிகணக்கு உள்ளிட்ட ஆவணங்களை கடையில் கொடுத்தார்.

    இதைத்தொடர்ந்து 10 ஐபோன்களையும் நல்ல விலைக்கு விற்று உடனடியாக பணம் தருவதாக கூறி செல்போனுடன் அங்கிருந்து சென்று விட்டார். பின்னர் அவர் திரும்பி வரவில்லை. கூறியபடி பணத்தையும் கொடுக்கவில்லை.

    இதற்கிடையே செல்போன் கடைக்கு கட்ட வேண்டிய இ.எம்.ஐ. கடன் தொகை பற்றி ஆவணங்கள் கொடுத்த 10 பேருக்கும் வங்கியில் இருந்து குறுஞ்செய்தி வந்தது. இதனால் நூதனமுறையில் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர்கள் கூடுவாஞ்சேரி போலீசில் புகார் செய்தனர்.

    இன்ஸ்பெக்டர் ஆனந்ததாண்டவம் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த கார்த்திகை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு கார்த்திக்கை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • பல்வேறு இடங்களில் பூட்டி கிடக்கும் வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையில் ஈடுபட்டு வந்ததும் தெரிந்தது.
    • சுமனை போலீசார் கைது செய்து 24 பவுன் நகையை பறிமுதல் செய்தனர்.

    கூடுவாஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்த தாண்டவம், சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மற்றும் போலீசார் காரனை புதுச்சேரி கூட்டு ரோட்டில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக சுற்றிய வாலிபரை பிடித்து விசாரித்தனர். அவர், கேளம்பாக்கம், ஜோதி நகரை சேர்ந்த சுமன்(45) என்பதும், கூடுவாஞ்சேரி, காயரம்பேடு உட்பட பல்வேறு இடங்களில் பூட்டி கிடக்கும் வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையில் ஈடுபட்டு வந்ததும் தெரிந்தது. இதையடுத்து சுமனை போலீசார் கைது செய்து 24 பவுன் நகையை பறிமுதல் செய்தனர்.

    • டிக்கெட் வாங்க வந்த பயணிகள் எந்தவித சலனமும் இல்லாமல் உடல் அருகேயே வரிசையில் நின்றபடி டிக்கெட்டுகளை வாங்கிச் சென்றனர்.
    • ரெயில் நிலையத்தில் இருந்த உடலை அகற்றி விசாரணை நடத்துவதிலும் எல்லைப் பிரச்சனை தலை தூக்கியது.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு ரெயில் நிலையம் எப்போதும் பயணிகள் கூட்டத்தால் பரபரப்பாக காணப்படும். சென்னை மற்றும் புறநகர் பகுதியில் பணி செய்பவர்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் அதிக அளவில் ரெயில் பயணத்தை பயன்படுத்துவதால் அதிகாலை முதலே ரெயில் நிலைய கவுண்டர்களில் டிக்கெட் எடுக்க பயணிகள் கூட்டம் இருக்கும்.

    இந்த நிலையில் நேற்று காலை வழக்கம் போல் செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் கவுண்டர்கள் திறக்கப்பட்டு டிக்கெட்டுகள் வினியோகிக்கப்பட்டன. பயணிகள் வரிசையில் நின்றபடி டிக்கெட் வாங்கி சென்றனர்.

    அப்போது டிக்கெட் கவுண்டர் அருகே தரையில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் படுத்த நிலையில் இருந்தார். அந்த நபர் தூங்குவதாக நினைத்து பயணிகள் சென்றனர்.

    நீண்ட நேரம் ஆகியும் அவர் எழாததால் சந்தேகம் அடைந்த சில பயணிகள் அந்த நபரை கவனித்த போது அவர் இறந்து கிடப்பது தெரிந்தது.

    எனினும் டிக்கெட் வாங்க வந்த பயணிகள் எந்தவித சலனமும் இல்லாமல் உடல் அருகேயே வரிசையில் நின்றபடி டிக்கெட்டுகளை வாங்கிச் சென்றனர்.

    காலை 6 மணி முதல் மதியம் 11 மணி வரை டிக்கெட் கவுண்டர் அருகேயே உடல் அப்படியே கிடந்தது. இறந்த நபரின் உடலை அகற்றுவதற்கு பயணிகளும், பொதுமக்களும், ரெயில் நிலைய அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனை பார்க்கும் போது மனிதாபிமானம் மரித்து போனதாகவே தோன்றியது. இதற்கிடையே ரெயில் நிலையத்தில் இருந்த உடலை அகற்றி விசாரணை நடத்துவதிலும் எல்லைப் பிரச்சனை தலை தூக்கியது. செங்கல்பட்டு நகர போலீசார், ரெயில்வே எல்லைக்குள் சம்பவம் நடந்ததால் ரெயில்வே போலீசார் தான் விசாரிக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

    ஆனால் ரெயில்வே போலீசார், இது பற்றி நகர போலீசார் தான் விசாரிக்க வேண்டும் என்று கூறினர்.

    இதன் பின்னர் ஒரு வழியாக முடிவுக்கு வந்த ரெயில்வே போலீசார் 5 மணி நேர காத்திருப்புக்கு பின்னர் டிக்கெட் கவுண்டர் அருகே இருந்த உடலை அகற்றி பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து இறந்த நபர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையம் அமைக்க முதலில் கூறப்பட்ட தொகையை விட ரூ.100 கோடிக்கு பணிகள் கூடுதலாக நடந்துள்ளது.
    • மக்களின் நலனுக்காக ஆஸ்பத்திரி என பல்வேறு பணிகள் முடிக்கப்பட்டு விரைவில் முதலமைச்சரால் திறந்து வைக்கப்படும்.

    வண்டலூர்:

    சென்னையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் ஜி.எஸ்.டி சாலையையொட்டி புதிய பஸ்நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. ரூ.394 கோடி செலவில் 88.50 ஏக்கர் பரப்பளவில் நவீன வசதிகளுடன் இந்த பஸ்நிலையம் அமைய உள்ளது. சுமார் 6.40 லட்சம் சதுரஅடி பரப்பளவில் பஸ்நிலைய கட்டுமான பணிகள் 90 சதவீதத்துக்குமேல் முடிந்து உள்ளன. இந்த புதிய பஸ் நிலையத்துக்கு கலைஞர் நூற்றாண்டு பஸ்நிலையம் என்று பெயரிடப்பட்டு உள்ளது.

    சமீபத்தில் பெய்த மழையின் போது பஸ்நிலைய முன்பகுதியில் தண்ணீர் தேங்கியதால் அப்பகுதியில் புதிதாக மழைநீர்கால்வாய் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. விரைவில் பணிகள் முழுவதும் முடிந்து திறப்பு விழா நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    இந்தநிலையில் இன்று காலை கிளாம்பாக்கம் புதிய பஸ்நிலையத்தில் நடைபெற்று வரும் பணிகளை அமைச்சர் சேகர் பாபு ஆய்வு செய்தார். அப்போது பஸ்நிலையத்துக்குள் பணிகள் முடிந்த பகுதிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

    மேலும் தற்போது நடந்து வரும் மழைநீர் வடிகால்வாய் மற்றும் மீதமுள்ள பணிகளை அடுத்த மாதம் (நவம்பர்) 15-ந் தேதிக்குள் முடிக்க உத்தரவிட்டார்.

    பின்னர் அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-

    கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையம் அமைக்க முதலில் கூறப்பட்ட தொகையை விட ரூ.100 கோடிக்கு பணிகள் கூடுதலாக நடந்துள்ளது. இதற்காக 3-க்கும் மேற்பட்ட சாலைகள் விரிவாக்கப்பட்டுள்ளன. கூடுவாஞ்சேரி முதல் மாடம்பாக்கம் வரையிலும், மாடம்பாக்கத்தில் இருந்து ஆதனூர் சாலை, ஆதனூரில் இருந்து வண்டலூர்-வாலாஜா சாலை இணைப்பு, அய்யஞ்சேரி முதல் மீனாட்சிபுரம் வரை, போலீஸ் அகாடமி, வனத்துறைக்கு சொந்தமான இரண்டு கிலோமீட்டர் சாலை அமைக்கும் பணிகள் புதிதாக மேற்கொள்ளப்பட்டது.

    தினமும் 450 பஸ்கள் வந்து செல்லும் வகையிலும், 5ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்ல ஏதுவாகவும் பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். ஆம்னி பஸ்களுக்கான பஸ்நிலையம் முடிச்சூரில் கட்டப்பட்டு வருகிறது. மேலும் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்காத வண்ணம் இருக்க ரூ.17 கோடி செலவில்1250 மீட்டர் நீளத்திற்கு மழை நீர் வடிகால் பணிகள் நடைபெறுகின்றன. இதில் 750 மீட்டர் பணிகள் முடிவடைந்த நிலையில் இன்னும் சில நாட்களில் அந்த பணிகளும் முடிந்து விடும்.

    வாகனங்கள் பஸ் நிலையத்திற்கு வந்து செல்வதற்கும் புதிய நுழைவு வாயில்கள் அமைக்கப்படும். பயணிகள் பொழுது போக்கிற்கு பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பஸ் நிலையம் பயன்பாட்டிற்கு வந்த பிறகு எந்தவித போக்குவரத்து நெரிசலும் ஏற்படாதபடி அனைத்து நடவடிக்கைகளும் அதற்கான பணிகளும் நடந்து வருகின்றன. பயணிகளின் பாதுகாப்பை கருதி ரூ.13 கோடியில் நவீன காவல் நிலையம் அமைக்கப்படும். தொடர்ந்து மக்களின் நலனுக்காக ஆஸ்பத்திரி என பல்வேறு பணிகள் முடிக்கப்பட்டு விரைவில் முதலமைச்சரால் திறந்து வைக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின் போது சென்னை பெருநகர வளர்ச்சி குழும செயலாளர் சமய மூர்த்தி, சென்னை பெருநகர வளர்ச்சி குழும உறுப்பினர் செயலாளர் அன்சுல் மிஸ்ரா, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் திடீரென வேலுவின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாமல்லபுரம்:

    திருக்கழுகுன்றம் அடுத்த கொத்திமங்கலம் பகுதியை சேர்ந்தவர் வேலு(வயது49). கொத்தனார். இவர் நீலமங்கலத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்து கொண்டிருந்தார்.

    அகத்தீஸ்வரமங்கலம் ரோட்டில் வந்தபோது பெட்ரோல் இல்லாமல் மோட்டார் சைக்கிள் நின்றது. இதையடுத்து வேலு மோட்டார் சைக்கிளை தள்ளிக்கொண்டு வந்தார். அப்போது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் திடீரென வேலுவின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த வேலு பலியானார். இதுகுறித்து திருக்கழுகுன்றம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாமல்லபுரத்தில் இன்று அதிகாலை முதலே பலத்த இடியுடன் கனமழை கொட்டியது.
    • மழை காரணமாக புராதன சின்ன பகுதிகளான ஐந்துரதம், அர்ச்சுனன் தபசு, வெண்ணெய் உருண்டை பாறை உள்ளிட்ட இடங்கள் சுற்றுலா பயணிகள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.

    மாமல்லபுரம்:

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் விட்டு, விட்டு பரவலாக மழை பெய்து வருகிறது. மாமல்லபுரத்தில் இன்று அதிகாலை முதலே பலத்த இடியுடன் கனமழை கொட்டியது.

    இதனால் கடற்கரை ரிசார்ட்டுகளில் தங்கியிருந்த வெளிநாட்டு, உள்நாட்டு சுற்றுலா பயணிகள் கடற்கரையில் நடைபயிற்சி சென்று கடற்கரை கோவிலை ரசித்து பார்க்க முடியாமல் அறைகளில் முடங்கினர். மேலும் மழை காரணமாக புராதன சின்ன பகுதிகளான ஐந்துரதம், அர்ச்சுனன் தபசு, வெண்ணெய் உருண்டை பாறை உள்ளிட்ட இடங்கள் சுற்றுலா பயணிகள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.

    • விலங்குகளுக்கு உணவாக கூடுதலாக பழங்கள் வழங்கப்பட உள்ளது.
    • தற்போது விலங்குகளுக்கு உணவளிக்க இங்குள்ள தோட்டங்களில் இருந்து 197.2 கிலோ பழங்கள், 400 கிலோ காய்கறிகள் கிடைக்கின்றன.

    சென்னை:

    சென்னை வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் ஏராளமான விலங்குகள், பறவைகள் உள்ளன. தற்போதைய நிலவரப்படி அங்கு 172 இனங்களை சேர்ந்த 2,368 உயிரினங்கள் உள்ளன. இங்குள்ள பெரும்பாலான விலங்குகளுக்கு பழங்கள் உணவாக வழங்கப்படுகின்றன.

    இந்நிலையில் வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளுக்கு உணவாக கூடுதலாக பழங்கள் வழங்கப்பட உள்ளது. இதுகுறித்து வண்டலூர் உயிரியல் பூங்கா அதிகாரிகள் கூறியதாவது:- வண்டலூர் உயிரியல் பூங்காவில் விலங்குகளுக்கு பழங்களை உணவளிப்பதற்காக தனியாக பழத்தோட்டம் உள்ளது. விலங்குகளுக்கு கூடுதல் பழங்களை உணவாக வழங்குவதற்காக பழத்தோட்டத்தில் அதிகமாக பழ மரங்கள் நடப்பட உள்ளன. கொய்யா, நாவல், பப்பாளி மற்றும் வாழை மரங்கள் அதிகம் நடப்பட உள்ளன. இந்த வாரம் மட்டும் 150 கொய்யா மரங்களை நட முடிவு செய்துள்ளோம். தற்போது விலங்குகளுக்கு உணவளிக்க இங்குள்ள தோட்டங்களில் இருந்து 197.2 கிலோ பழங்கள், 400 கிலோ காய்கறிகள் கிடைக்கின்றன. கோடை காலத்தில் விலங்குகளின் உணவில் ஒரு பகுதியாக தர்பூசணி மற்றும் வெள்ளரி ஆகியவை சேர்க்கப்படுகிறது.

    தற்போது பழத்தோட்டம் விரிவு படுத்தப்படுவதால் விலங்குகளுக்கு தேவையான பழம், காய்கறிகள் உள்ளிட்ட உணவுகளை இங்கேயே உற்பத்தி செய்ய முடியும்.

    மேலும் உயிரியல் பூங்காவில் உள்ள நீர்ப்பறவைகள் மற்றும் முதலைகளுக்கு உணவளிக்க 602 ஹெக்டேர் பரப்பளவில் மீன்கள் வளர்க்கப்படுகின்றன.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • தீபாவளி பண்டிக்கைக்கு முன்பு திட்டமிட்டப்படி புதிய பஸ்நிலையத்தை திறக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.
    • அடுத்த மாதம் இறுதியில் கிளாம்பாக்கம் பஸ்நிலையம் திறப்பு விழாவுக்கு தயாராகிவிடும்.

    வண்டலூர்:

    சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் வண்டலூர் அருகே உள்ள கிளாம்பாக்கத்தில் புதிய பஸ்நிலையம் சுமார் 40 ஏக்கர் நிலத்தில் கட்டப்பட்டு உள்ளது. ரூ.400 கோடி செலவில் நவீன வசதிகளுடன் இந்த பஸ்நிலையம் அமைகிறது.

    திறப்பு விழாவுக்கு தயார் நிலையில் இருந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையின் போது தண்ணீர் செல்ல வழியில்லாமல் பஸ்நிலையம் முன்பு குளம்போல் தேங்கியது. இதைத்தொடர்ந்து மழைநீர் கால்வாய் புதிதாக அமைத்த பின்னர் பஸ்நிலையத்தை திறக்க முடிவு செய்யப்பட்டது.

    மேலும் இணைப்புச் சாலை மற்றும் வடிகால் அமைப்புகள் முடியாததால் தீபாவளி பண்டிக்கைக்கு முன்பு திட்டமிட்டப்படி புதிய பஸ்நிலையத்தை திறக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில் பஸ்நிலையம் அருகே மழைநீர் வடிகால்வாய் மற்றும் இணைப்பு சாலை பணிகளை அடுத்த மாதம் 15-ந்தேதிக்குள் முடிக்க அதிகாரிகள் ஒப்பந்ததாரர்களுக்கு கெடு விதித்து உள்ளனர். ஏற்கனவே பஸ்நிலையத்தில் 90 சதவீத பணிகள் முடிந்து உள்ளன. மீதி உள்ள பணிகள் மட்டுமே முடிக்கப்பட வேண்டும். இந்த பணிகளும் விரைவில் முடிக்கப்பட்டு பொங்கல் பண்டிகைக்கு முன்பு கிளாம்பாக்கம் பஸ்நிலையம் திறக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    எனினும் கிளாம்பாக்கம் பஸ்நிலைய முகப்பில் ஜி.எஸ்.டி.சாலையில் குறுக்காக மழைநீர்கால்வாய் அமைக்கும் பணி 90 சதவீதம் மட்டுமே முடிந்து உள்ளன. இதேபோல் கிளாம்பாக்கம் பஸ்நிலையத்தில் இருந்து பின்புறம் உள்ள அய்யஞ்சேரி வழியாக பஸ் வெளியேறி ஊரப்பாக்கம் வழியாக வரும் பாதையும் குறுகலாக உள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, பஸ்நிலையம் முன்பு கால்வாய் அமைக்கும் பணி இன்னும் 10 சதவீதம் மட்டுமே முடிக்க வேண்டும். இது விரைவில் முடிக்கப்படும். அய்யஞ்சேரி இணைப்பு சாலை பணிகளும் 90 சதவீதம் முடிக்கப்பட்டு உள்ளன. மீதம் உள்ள பணிகளை அடுத்த மாதம் (நவம்பர்)15-ந்தேதிக்குள் பணிகளை முடித்து ஒப்படைக்க வேண்டும் என்று ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இறுதிகட்ட பணிகளை கண்காணித்து வருகிறோம். அடுத்த மாதம் இறுதியில் கிளாம்பாக்கம் பஸ்நிலையம் திறப்பு விழாவுக்கு தயாராகிவிடும். பொங்கல் பண்டிகைக்கு முன்பு திறக்க திட்டமிடப்பட்டு உள்ளது என்றார். இதைத்தொடர்ந்து பொங்கல் பண்டிகையின் போது வெளியூர் செல்வோர் கிளாம்பாக்கம் பஸ்நிலையத்தில் இருந்து செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • காலையில் எழுந்து பார்த்தபோது காண்டீபன் மயங்கிய நிலையில் கிடந்தார்.
    • பரிசோதித்த டாக்டர்கள் காண்டீபன் ஏற்கனவே மாரடைப்பால் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    வண்டலூர்:

    வண்டலூரை அடுத்த கீரப்பாக்கம் ஊராட்சி துலுக்கானத்தம்மன் தெருவில் வசித்து வந்தவர் காண்டீபன் (வயது 36). இவரது மனைவி சூர்யா. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

    சம்பவத்தன்று இரவு குடும்பத்துடன் காண்டீபன் தூங்கினார். காலையில் எழுந்து பார்த்தபோது காண்டீபன் மயங்கிய நிலையில் கிடந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி அக்கம்பக்கத்தினர் உதவியுடன் காண்டீபனை மீடுடு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பரிசோதித்த டாக்டர்கள் காண்டீபன் ஏற்கனவே மாரடைப்பால் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து காயார் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சொகுசு கார் மோதியதில் கார், மோட்டார் சைக்கிள், ஆட்டோ சேதமடைந்தது.
    • விபத்து காரணமாக சென்னை-திருச்சி சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    தாம்பரம்:

    கேரள மாநிலம், கொல்லம் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித் (28). டிரைவர். இவர் அடையாறில் உள்ள தொழில் அதிபர் ஒருவரிடம் கார் டிரைவராக சமீபத்தில் வேலைக்கு சேர்ந்தார்.

    இந்த நிலையில் இன்று காலை தொழிலதிபர் சொகுசு காரில் பல்லாவரத்தில் உள்ள தனது உறவினரை பார்ப்பதற்காக புறப்பட்டார். காரை ரஞ்சித் ஓட்டினார்.

    திரிசூலம் சிக்னலில் நின்று விட்டு மீண்டும் கார் புறப்பட்டபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கார் அதிவேகமாக சென்றது.

    தறிகெட்டு ஓடிய கார், சென்னை விமான நிலையம் அருகே உள்ள மேம்பால சுவரில் இடிப்பது போல் சென்றதால் டிரைவர் ரஞ்சித் வண்டியை திருப்பினார்.

    இதனால் தறிகெட்டு ஓடிய கார், சாலையோரம் நின்று கொண்டிருந்த கார், ஆட்டோ, மற்றும் மோட்டார் சைக்கிள்கள் மீது அடுத்தடுத்து பயங்கரமாக மோதியது. மேலும் அருகில் உள்ள பஸ் நிறுத்தத்தில் காத்திருந்த பயணிகள் கூட்டத்துக்குள் புகுந்து நின்றது.

    இதில் திரிசூலம் கண்ணபிரான் கோயில் தெருவை சேர்ந்த சண்முக நாதன் (50), சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியை சேர்ந்த பிரபு(29) மற்றும் பஸ்சுக்கு காத்திருந்த பயணிகள் என மொத்தம் 7 பேர் படுகாயம் அடைந்தனர். இதில் 5 பேர் பெண்கள் ஆவர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவ்வழியே சென்றவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீசார் விரைந்து வந்து படுகாயமடைந்தவர்களை மீட்டு, உடனடியாக சிகிச்சைக்காக குரோம்பேட்டை மற்றும் தாம்பரத்தில் உள்ள ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்தில் காரில் இருந்த ரஞ்சித், மற்றும் தொழிலதிபர் காயமின்றி உயிர்தப்பினர். டிரைவர் ரஞ்சித்துக்கு இந்த சொகுசு காரை ஓட்டி பழக்கம் இல்லை என்று தெரிகிறது. விபத்து ஏற்படுத்திய டிரைவர் ரஞ்சித் இன்று தான் முதல் முறையாக அந்த காரை இயக்கியது குறிப்பிடத்தக்கது. விபத்து தொடர்பாக அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    விடுமுறை நாளான இன்று காலை நேரம் என்பதால் அந்த சாலையில் வாகன போக்குவரத்தும் பஸ் நிறுத்தத்தில் பயணிகளும் குறைந்த அளவில் இருந்தனர். அதிர்ஷ்டவசமாக உயிர் பலி ஏற்படவில்லை. விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • நான் வளர்க்கும் நாய்க்கு இது ஒரு ஆன்மீக சுற்றுலா போன்றும் உள்ளது.
    • பல்வேறு மாநில உணவுகளை ரசித்து உண்ணவும், மாநில கலாச்சாரங்களை பார்க்கவும் முடிந்தது.

    மாமல்லபுரம்:

    சிக்கிம் மாநிலத்தை சேர்ந்தவர் ஜக்கீஸ் (வயது 28), பட்டதாரி வாலிபரும், "யூடியூப்" பிரபலமானவருமான இவர், தான் வளர்க்கும் செல்ல பிராணியான பட்டர் என்ற நாயை ஆன்மீக நடைபயணமாக ராமேஸ்வரம் வரை 7,500கி.மீ., அழைத்து செல்ல முடிவு செய்தார். இதற்காக பயண திட்டம் தீட்டி, நாய்க்கான பாதுகாப்பு உபகரணங்கள், சத்துணவு, மருந்துகள் உள்ளிட்டவை எடுத்துக்கொண்டு அங்கிருந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அங்கிருந்து புறப்பட்டார்.

    சிக்கிம், லக்னோ, ஜெய்ப்பூர், மத்தியபிரதேசம், தெலுங்கானா, ஆந்திரா, விசாகப்பட்டினம் வழியாக சென்னை வந்து தமிழ்நாட்டின் கிழக்கு கடற்கரை சாலையான மாமல்லபுரம், பாண்டிச்சேரி, வேளாங்கண்ணி, ராமநாதபுரம் வழியாக அழைத்து செல்கிறார். 

    இதுகுறித்து அவரிடம் கேட்டபோது நான் வளர்க்கும் நாய்க்கு இது ஒரு ஆன்மீக சுற்றுலா போன்றும் உள்ளது. கால்நடைகள் மீது பாசமும் வேண்டும் என்பதையும் வழிநெடுக பார்ப்போரிடம் உணர்த்துகிறேன், இதனால் பல்வேறு மாநில உணவுகளை ரசித்து உண்ணவும், மாநில கலாச்சாரங்களை பார்க்கவும் முடிந்தது. ராமேஸ்வரம் சென்றடைந்ததும் கோயில் வழிபாடுகளை முடித்து விட்டு இருவரும் ரெயிலில் ஊர் திரும்புவோம் என்றார்.

    • கோவை வ.உ.சி. உயிரியல் பூங்காவின் அங்கீகாரத்தை மத்திய உயிரியல் பூங்கா ஆணையம் ரத்து செய்தது.
    • பறவைகள், பாலூட்டிகள் மற்றும் ஊர்வனவற்றை கொண்டு செல்வதற்காக மொத்தம் 15 பெட்டிகள் தயார் செய்யப்பட்டுள்ளன.

    கோவையில் வ.உ.சி. மினி உயிரியல் பூங்கா உள்ளது. இங்கு ஏராளமான விலங்குகள் மற்றும் பறவைகள் உள்ளன. இந்த நிலையில் கோவை வ.உ.சி. உயிரியல் பூங்காவின் அங்கீகாரத்தை மத்திய உயிரியல் பூங்கா ஆணையம் ரத்து செய்தது.

    இதையடுத்து அங்கிருக்கும் விலங்குகள் மற்றும் பறவைகள் மற்ற உயிரியல் பூங்காக்களுக்கு மாற்றப்படுகின்றன. இதில் 10-க்கும் மேற்பட்ட விலங்குகள் சென்னை வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவுக்கு கொண்டு வரப்படுகின்றன.

    இதுகுறித்து வண்டலூர் உயிரியல் பூங்கா இயக்குனர் ஸ்ரீனிவாஸ் ஆர்.ரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது:-

    கோவையில் உள்ள வ.உ.சி. உயிரியல் பூங்காவில் உள்ள 10-க்கும் மேற்பட்ட விலங்குகள் வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவுக்கு கொண்டு வரப்பட்டு மறுவாழ்வு அளிக்கப்பட உள்ளன. கோவை மாநகராட்சி நடத்தும் உயிரியல் பூங்காவின் அங்கீகாரத்தை மத்திய உயிரியல் பூங்கா ஆணையம் ரத்து செய்ததால், அவை சென்னைக்கு கொண்டு வரப்படுகின்றன.

    கோவை உயிரியல் பூங்காவில் 487 பறவைகள், 62 ஊர்வன பிராணிகள், 8 நாகப்பாம்புகள், 8 சாதாரண வகை பாம்புகள், 5 கட்டு விரியன் பாம்புகள், 11 மலைப்பாம்புகள், 86 பாலூட்டி விலங்குகள் உள்ளன. இதில் கொக்கு, கிளிகள் போன்றவையும் அடங்கும்.

    பாம்பு போன்ற ஊர்வன பிராணிகள் வனப்பகுதியில் விடப்படும் நிலையில், அவற்றில் சில சேலத்தில் உள்ள குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவிற்கும், மற்றொரு வகை விலங்குகள் மற்றும் ஊர்வன பிராணிகள் வேலூரில் உள்ள அமிர்தி உயிரியல் பூங்காவிற்கும் அனுப்பப்படும். பறவைகள், பாலூட்டிகள் மற்றும் ஊர்வனவற்றை கொண்டு செல்வதற்காக மொத்தம் 15 பெட்டிகள் தயார் செய்யப்பட்டுள்ளன. இந்த விலங்குகள் 45 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படும். புதிதாக வரும் விலங்குகளை தனிமைப்படுத்துதல் மற்றும் காட்சிப்படுத்துதல் ஆகிய இரண்டிற்கும் தேவையான வசதிகள் மிருகக்காட்சி சாலையில் தயாராக உள்ளன. வண்டலூர் உயிரியல் பூங்கா ஊழியர்கள் பறவைகள், ஊர்வன மற்றும் பாலூட்டிகளை கோவையில் இருந்து வண்டலூருக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள். இதற்கு 3 அல்லது 4 நாட்கள் ஆகும்.

    ஜம்மு-காஷ்மீர் உயிரியல் பூங்காவில் இருந்து ஒரு ஜோடி இமயமலை கருப்பு கரடிகளும் வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு வருகின்றன. ஜம்மு-காஷ்மீரில் இருந்து கரடிகளை கொண்டுவர ஒப்புதல் கிடைத்துள்ளது. கரடிகள் ரெயில் மூலம் சென்னைக்கு வரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×