என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பெண்களின் உள்ளாடைகளை திருடுவதில் அதிக விருப்பம் கொண்ட திருடன்... நோட்டமிட்டு பிடித்த போலீஸ்
- அழைப்பு மணியை அடித்து வீட்டில் இருந்து பெண்கள் வெளியே வந்தால் உடனடியாக தலை முடியை பிடித்து கொள்வான்.
- வீட்டில் இருக்கும் நகை, பணம், விலை உயர்ந்த பொருட்கள் எதன் மீதும் ஆசை கிடையாது.
தாம்பரம்:
பெண்களின் உள்ளத்தை திருடும் இளைஞர்களை கேள்விப்பட்டு இருப்போம். உள்ளாடைகளை திருடும் இளைஞர்களை பார்த்து இருப்போமா? இப்படியும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
தாம்பரத்தை அடுத்த சேலையூர் எம்.இ.சாலை, முருகன் தெரு, வீரபத்திரன் தெரு ஆகிய பகுதிகளில் இரவு நேரத்தில் வீடுகளில் தனியாக இருக்கும் பெண்களிடம் கத்திமுனையில் பாலியல் சீண்டல்களில் ஒரு மர்ம மனிதன் ஈடுபட்டு வருவதாக சேலையூர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
அவமானம் என நினைத்து புகார் கொடுக்க எந்த பெண்ணும் முன் வரவில்லை. ஆனாலும் போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராக்களை ஆய்வு செய்து தேடிக்கொண்டிருந்தனர்.
இதற்கிடையில் பாதிக்கப்பட்ட வீடுகளில் உள்ளவர்களும் இரவு நேரத்தில் ரகசியமாக கண்காணித்து கொண்டிருந்தனர். நேற்று முன்தினம் நள்ளிரவில் சந்தேகப்படும்படி அந்த பகுதியில் சுற்றிக் கொண்டிருந்த ஒரு வாலிபரை பார்த்ததும் அவரை பிடித்து விசாரித்துள்ளனர். அவன் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் அவனை வெளுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
அவனிடம் விசாரித்த போது அந்த நள்ளிரவு ரோமியோ அவன்தான் என்பது தெரியவந்தது. அவனது பெயர் தமிழ் பிரபு (28). கார் டிரைவராக வேலை பார்க்கிறான். சொந்த ஊர் தஞ்சாவூர். சேலையூரில் தான் வாடகை வீட்டில் தங்கி உள்ளான். இவருக்கு ஒரு வினோதமான ஆசை. பெண்களின் உள்ளாடைகளை திருடி தனது அறைக்கு கொண்டு சென்று தன் அருகே வைத்து கொண்டு தூங்குவான். மறுநாள் அதை குப்பையில் வீசி விடுவான்.
மீண்டும் அதே போல் திருடுவான். ஒரு கட்டத்தில் பெண்களை பாலியல் ரீதியாக சீண்டி பார்க்க ஆசைப்பட்டுள்ளான். அதற்காக அவர் வீடுகளில் தனியாக இருக்கும் பெண்களை தேட தொடங்கி இருக்கிறான்.
இரவில் தெருவில் சாதாரணமாக நடந்து செல்வது போல் செல்வான். அப்போது பூட்டியிருக்கும் வீடுகளை நோட்டமிடுவான். அந்த வீட்டின் முன்பு பெண்கள் செருப்பு மட்டும் கிடந்தால் பெண்கள்தான் தனியாக இருக்கிறார்கள் என்று உறுதி செய்வான்.
பின்னர் அழைப்பு மணியை அடித்து வீட்டில் இருந்து பெண்கள் வெளியே வந்தால் உடனடியாக தலை முடியை பிடித்து கொள்வான். சத்தம் போடாமல் இருப்பதற்காக தயாராக இருக்கும் கத்தியை எடுத்து கழுத்தில் வைத்து கொள்வான். அப்படியே வீட்டுக்குள் தள்ளி சென்று பாலியல் சில்மிஷத்தில் ஈடுபடுவான். வேறு அந்த வீட்டில் இருக்கும் நகை, பணம், விலை உயர்ந்த பொருட்கள் எதன் மீதும் அவருக்கு ஆசை கிடையாது. சத்தமின்றி தனது ஆசை தீர சில்மிஷம் செய்து விட்டு சத்தமில்லாமல் வீட்டை விட்டு வெளியேறி விடுவான்.
இப்படி பத்துக்கும் மேற்பட்ட பெண்களிடம் நடந்துள்ளதாக கூறியிருக்கிறார். ஆனால் இதுவரை போலீஸ் கையில் சிக்கியது இல்லை. அதற்கு முக்கிய காரணம் பெண்கள் புகார் கொடுக்க முன் வராததுதான். இப்போதுதான் முதல் முறையாக போலீசிடம் சிக்கி இருக்கிறார்.
தமிழ்பிரபுவை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.






