என் மலர்
செங்கல்பட்டு
- மேல்மருவத்தூர் அருகே உள்ள பொலம்பாக்கம் ஏரி உள்ளிட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகள் நடைபெற உள்ளது.
- கீழ்கத்தளை ஏரியில் சட்டவிரோதமாக தண்ணீர் எடுக்கும் இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
செங்கல்பட்டு:
சென்னை புறநகரில் பயன்பாட்டில் இல்லாத கல்குவாரி தண்ணீர் மற்றும் ஏரி, குளங்களின் தண்ணீரை சுத்திகரித்து குடிநீருக்கு கொண்டு வர திட்டங்கள் தீட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஏரிகள் நிறைந்த செங்கல்பட்டு மாவட்டத்தில் குடிநீர் ஆதாரத்தை அதிகரிக்க மாவட்ட நிர்வாகம் தன்னார்வ அமைப்பினருடன் இணைந்து திட்டமிட்டு உள்ளது.
இதையொட்டி மாவட்டத்தில் உள்ள சுமார் 1000 நீர்நிலைகளை முதல் கட்டமாக அடையாளம் காணப்பட்டு உள்ளது. இதில் பெரும்பாலன ஏரி, குளங்கள் ஆக்கிரமிப்பு மற்றும் தூர்வாராமல் அப்படியே உள்ளன. இதையடுத்து அந்த நீர்நிலைகள் அனைத்தையும் படிப்படியாக சீரமைப்பு செய்து குடிநீர் மற்றும் பிற தேவைகளுக்கு பயன்பாட்டிற்கு கொண்டு வர பணிகள் தொடங்கப்பட்டுஉள்ளன. இதில் கீழ்கட்டளை, ஒட்டியம்பாக்கம், திருப்போரூர் அருகே உள்ள செம்பாக்கம் ஏரி, வளையபு தூர்ஏரி, மேல்மருவத்தூர் அருகே உள்ள பொலம்பாக்கம் ஏரி உள்ளிட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகள் நடைபெற உள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, கிராமப்புறங்களில் உள்ள சிறிய குளங்களை தூர்வாருவதும், புறநகர் பகுதிகளில் நீர்நிலை ஆக்கிரமிப்பு பெரும் சவாலாக உள்ளது. சில பெரிய ஏரிகளில் மதகுகள் பிரச்சினை உள்ளது. இதனை சீரமைக்க தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீர்நிலைகளை மீட்டெடுப்பதே தற்போதைய இலக்கு. திருநீர்மலை போன்ற சில ஏரிகளை குடிநீர் ஆதாரமாக மாற்றுவதற்கு வாய்ப்பு உள்ளது. கீழ்கத்தளை ஏரியில் சட்டவிரோதமாக தண்ணீர் எடுக்கும் இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
ஏரி, குளங்களுக்க எல்லை நிர்ணயம், பாதைகளை உருவாக்குதல், குப்பை கொட்டுவதைத் தடுக்க சுற்றுச்சுவர் கட்டுதல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. மேடவாக்கம் சந்திப்பு அருகே நீர்நிலையை சுத்தம் செய்து, சுற்றுச்சூழல் பூங்காவை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளோம் என்றார்.
- தனியார் கடற்கரை ரிசார்ட் ஒன்றில் ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த மருந்து கம்பெனி 2 நாட்கள் மருத்துவர்கள் சந்திப்பு கூட்டம் நடத்தியது.
- டாக்டர் புத்ததேஷ்வா உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மாமல்லபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரத்தில் உள்ள தனியார் கடற்கரை ரிசார்ட் ஒன்றில் ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த மருந்து கம்பெனி 2 நாட்கள் மருத்துவர்கள் சந்திப்பு கூட்டம் நடத்தியது. இதில் பங்கேற்பதற்காக கல்கத்தாவை சேர்ந்த டாக்டர் புத்ததேஷ்வா (வயது70) வந்திருந்தார். அவர் தனது அறையில் இருந்தபோது திடீரென இறந்தார்.
இதுகுறித்து மாமல்லபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- ஆலத்தூரில் சந்தேகத்திற்கிடமாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர்.
- தேவநாதன் என்பவரை போலீசார் கைது செய்து காருடன் மதுபாட்டில்களை பறிமுதல்செய்தனர்.
மாமல்லபுரம்:
பாண்டிச்சேரியில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக மதுபாட்டில் கடத்தப்படுவதாக செங்கல்பட்டு மாவட்ட போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து சூனாம்பேடு அடுத்த ஆலத்தூரில் சந்தேகத்திற்கிடமாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் பெட்டி, பெட்டியாக 2352 பாண்டிச்சேரி மது பாட்டில்கள் கடத்திவந்திருப்பது தெரியவந்தது. இதன்மதிப்பு ரூ.6 லட்சம் ஆகும். இதையடுத்து மதுபாட்டில் கடத்தலில் ஈடுபட்ட பாண்டிச்சேரி கரிக்காலம்பாக்கம் பகுதியை சேர்ந்த தேவநாதன் என்பவரை போலீசார் கைது செய்து காருடன் மதுபாட்டில்களை பறிமுதல்செய்தனர்.
- கொலை தொடர்பாக மேற்கு பொத்தேரி பகுதியை சேர்ந்த சுரேஷ், கந்தன், ஜெயச்சந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
- தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததால் கைதானவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமுல்ராஜ் உத்தரவிட்டார்.
வண்டலூர்:
மறைமலைநகர், மேற்கு பொத்தேரியை சேர்ந்தவர் கார்த்திகேயன்(22). அ.தி.மு.க.பிரமுகர். இவரை கடந்த 2 மாதத்திற்கு முன்பு அதே பகுதியில் மர்ம கும்பல் வெட்டி கொலை செய்தனர்.
இந்த கொலை தொடர்பாக மேற்கு பொத்தேரி பகுதியை சேர்ந்த சுரேஷ், கந்தன், ஜெயச்சந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததால் அவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமுல்ராஜ் உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து சுரேஷ் உள்பட 3 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
- சென்னை உயர்நீதிமன்றம் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை எவ்வித சமரசமும் இன்றி அகற்றுமாறு அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
- பதட்டத்தை தணிக்க சிறப்பு அதிரடிப்படை போலீசார் ஏராளமானோர் குவிக்கப்பட்டுள்ளனர்.
தாம்பரம்:
சென்னை அனகாபுத்தூரில் அடையாறு ஆற்றின் கரையை ஆக்கிரமித்து 700 வீடுகள் கட்டப்பட்டு இருந்தன. அவற்றில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வந்தனர். இந்த நிலையில், கடந்த 2015-ம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட பெருவெள்ளத்திற்கு பிறகு நீர் நிலைகளை பாதுகாப்பதன் அவசியம் குறித்து தமிழக அரசு பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
சென்னை உயர்நீதிமன்றமும் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை எவ்வித சமரசமும் இன்றி அகற்றுமாறு அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. அடையாறு ஆற்றின் கரையோரம் அரசுக்கு சொந்தமான நீர்நிலை புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகளை ஏற்கனவே இருமுறை வருவாய் துறை அதிகாரிகள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் இன்று காலை மீண்டும் அனகாபுத்தூர் அடையாறு ஆற்றின் கரையோரம் உள்ள டோபிகானா தெருவில் ஆக்கிரமிப்பு வீடுகளை ஜேசிபி எந்திரங்கள் கொண்டு அகற்றும் பணிகளை பல்லாவரம் தாசில்தார் ஆறுமுகம் தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள் மேற்கொண்டனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியை சேர்ந்த ஆண்கள், பெண்கள் என 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டு வந்து எதிர்ப்பு தெரிவித்தனர். ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகளில் ஈடுபட்ட வருவாய் துறை அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இருந்த போதிலும் தொடர்ந்து ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
அங்கு பதட்டத்தை தணிக்க சிறப்பு அதிரடிப்படை போலீசார் ஏராளமானோர் குவிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே ஆக்கிரமிப்புகள் அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது பெண் ஒருவர் திடீரென மயங்கி விழுந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து மறியலில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்டோர் பல்லாவரம்- குன்றத்தூர் சாலையில் அனகாபுத்தூர் பஸ் நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
- பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மாவட்டம் முழுவதும் நடத்தி வருகின்றனர்.
- பிட் நோட்டீஸ்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
மாமல்லபுரம்:
செங்கல்பட்டு மாவட்ட தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறை சார்பில் தீபாவளி பட்டாசுகளை பாதுகாப்பாக வெடித்து கொண்டாட வேண்டும் என "விபத்தில்லா தீபாவளி வீடுதோறும் மகிழ்ச்சி" என்ற பெயரில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மாவட்டம் முழுவதும் நடத்தி வருகின்றனர்.
மாமல்லபுரம் தீயணைப்பு நிலைய ரமேஸ்பாபு அதிகாரி தலைமையில் மாமல்லபுரம் பேருந்து நிலையத்தில் உள்ளூர் மக்கள் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகளிடம் பட்டாசுகளை வெடிக்க தவிர்க்க வேண்டிய இடங்கள், வெடிக்கும் முறை, அதற்கான இடம், நேரம், பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து பிரச்சாரம் செய்தனர், பின்னர் அதற்கான விபரங்கள் அடங்கிய பிட் நோட்டீஸ்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
- அருண் தங்கி இருந்த வீட்டில் அருணும், மாணவியும் தூக்கில் பிணமாக தொங்கினார்கள்.
- வேறு யாராவது கொலை செய்து தூக்கில் தொங்க விட்டார்களா என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுராந்தகம்:
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் கரிப்பாளையம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் குணசேகர். இவரது மகன் அருண் (வயது 22). இவர் கடந்த 6 வருடங்களாக மதுராந்தகத்தில் உள்ள மோட்டார் காயில் கட்டும் ஒர்க் ஷாப்பில் வேலை செய்து வந்தார். இவர் மதுராந்தகம் அருகே உள்ள புது மாம்பாக்கத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்தார்.
மரக்காணம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த 17 வயது சிறுமி, சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் நர்சிங் படித்து வந்தார். இந்நிலையில் அருணும், 17 வயது மாணவியும் காதலித்து வந்தனர். இந்த தகவல் அவர்களின் பெற்றோருக்கு தெரியவந்தது. அவர்களின் காதலுக்கு இரு வீட்டிலும் எதிர்ப்பு தெரிவித்தாக கூறப்படுகிறது.
இதனால் அருண், மாணவி இருவரும் மனம் உடைந்தனர். அருண் தங்கி இருந்த வீட்டில் அருணும், மாணவியும் தூக்கில் பிணமாக தொங்கினார்கள். அவர்கள் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. தகவல் அறிந்ததும் மதுராந்தகம் போலீசார் விரைந்து அவர்களின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மதுராந்தகம் போலீசார் வழக்கு பதிவு காதலர்கள் தற்கொலை செய்து கொண்டார்களா? அல்லது வேறு யாராவது கொலை செய்து தூக்கில் தொங்க விட்டார்களா என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவுக்கும், வேலூர் மாவட்டத்தில் உள்ள அமிர்தி உயிரியல் பூங்காவுக்கும் மாற்றப்பட்டன.
- 23 முதலைகள் வேலூர் மாவட்டத்தில் உள்ள அமிர்தி உயிரியல் பூங்கா, மோயார் ஆறு, முதுமலை புலிகள் காப்பகம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஆகிய இடங்களுக்கு மாற்றப்படுகின்றன.
சென்னை:
கோவையில் உள்ள வ.உ.சி. உயிரியல் பூங்காவின் அங்கீகாரத்தை மத்திய உயிரியல் பூங்கா ஆணையம் கடந்த 2022-ம் ஆண்டு ஜனவரி மாதம் ரத்து செய்தது. இதையடுத்து அப்போது முதல் அங்கு பார்வையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை.
இந்நிலையில் கோவை வ.உ.சி. பூங்கா மூடப்பட்டது. இதையடுத்து அங்குள்ள பறவைகள், விலங்குகள், ஊர்வன போன்ற பிராணிகள் மற்ற உயிரியல் பூங்காக்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கோவை உயிரியல் பூங்காவில் உள்ள பறவைகள், பாம்புகள், ஆமைகள் போன்றவை சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவுக்கும், வேலூர் மாவட்டத்தில் உள்ள அமிர்தி உயிரியல் பூங்காவுக்கும் மாற்றப்பட்டன.
இடமாற்றம் செய்யப்பட்ட பறவைகள் மற்றும் ஊர்வன போன்றவற்றில் 51 ரோஸ் வளையம் கொண்ட கிளிகள், 27 அலெக்சாண்ரிட்ன் கிளிகள், 18 சிவப்பு மார்பக கிளிகள், 1 சரஸ் கொக்கு, 8 பாம்புகள், 3 இந்திய நட்சத்திர ஆமைகள் உள்ளிட்டவை அடங்கும். மேலும் 22 பிளாக் கைட்ஸ், 88 நைட்ஸ் ஹெரோன்ஸ், 30 போனெட் மக்காக்ஸ், 11 இந்திய மலைப்பாம்புகள், 26 புள்ளிமான்கள், 25 சாம்பார் மான்கள், 10 கோப்ரா பாம்புகள் ஆகியவை சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு அனுப்பப்பட உள்ளன.
23 முதலைகள் வேலூர் மாவட்டத்தில் உள்ள அமிர்தி உயிரியல் பூங்கா, மோயார் ஆறு, முதுமலை புலிகள் காப்பகம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஆகிய இடங்களுக்கு மாற்றப்படுகின்றன. இதுகுறித்து வண்டலூர் உயிரியல் பூங்கா அதிகாரி ஒருவர் கூறுகையில், 'கோவை உயிரியல் பூங்காவில் உள்ள பறவைகள், விலங்குகள் மற்றும் பாம்புகள் வேறு வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டு உள்ளன. இதற்காக கூண்டுகள் அமைத்து மாற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பறவைகள் மற்றும் பாம்புகளின் மன அழுத்தத்தை குறைக்க அவற்றை ஏற்றி வந்த லாரிகள் ஒவ்வொரு 3 மணி நேரத்துக்கும் ஒருமுறை நிறுத்தப்பட்டு சிறிது நேரம் கழித்தே மீண்டும் இயக்கப்பட்டன' என்றார்.
- நவம்பர் 1-ம் நாள் தொடங்கி 3 நாட்களுக்கு தமிழ்ப் பண்பாட்டு நிகழ்வு நடத்துகின்றனர்.
- கிளேர்வுட் தமிழ்க் கல்வியாலயத்தில் மல்லை தமிழ்ச் சங்கத்தின் தலைவர் மல்லை சி.இ.சத்யா, துர்கா சத்யா மற்றும் மலேசியாவிலிருந்து பல்வேறு தமிழ் அறிஞர்கள் கலந்து கொண்டனர்.
சென்னை:
தென்ஆப்பிரிக்கா டர்பனில் உள்ள உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கமும், கிளேர்வுட் தமிழ்க் கல்வியாலயம் மற்றும் வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கமும் இணைந்து, நவம்பர் 1-ம் நாள் தொடங்கி 3 நாட்களுக்கு தமிழ்ப் பண்பாட்டு நிகழ்வு நடத்துகின்றனர்.
இவ்விழாவில், வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கத்தின் 157-வது சிலையை தென்ஆப்பிக்கா நாட்டின் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் தலைவர் பெருந்தமிழன் டாக்டர் மிக்கி செட்டி தலைமையில் கிளேர்வுட் தமிழ்க் கல்வியாலயத்தின் தலைவர் பெருந்தமிழன் மாஸ்டர் ஹீகான் மெர்வின் ரெட்டி முன்னிலையில் வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் நிறுவனர் டாக்டர் வி.ஜி.சந்தோசம் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.
கிளேர்வுட் தமிழ்க் கல்வியாலயத்தில் மல்லை தமிழ்ச் சங்கத்தின் தலைவர் மல்லை சி.இ.சத்யா, துர்கா சத்யா மற்றும் மலேசியாவிலிருந்து பல்வேறு தமிழ் அறிஞர்கள் கலந்து கொண்டனர்.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக விட்டுவிட்டு கனமழை கொட்டுகிறது.
- ஐந்து மண்டலங்களிலும் ரூ.37.59 கோடி மதிப்பீட்டில் 12.461 கிலோ மீட்டர் நீளத்திற்கு மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது.
தாம்பரம்:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. கடந்த சில நாட்களாக அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக விட்டுவிட்டு கனமழை கொட்டுகிறது. இன்று காலையும் பல்வேறு இடங்களில் மழைவெளுத்து வாங்கியது.
கன மழை பெய்யும் போது புறநகர் பகுதியான தாம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான பெருங்களத்தூர், சமத்துவபெரியார்நகர், அன்னை அஞ்சுகம் நகர், சிட்லபாக்கம், திருமலை நகர் மற்றும் முடிச்சூர், வரதராஜபுரம் ஆகிய இடங்கள் வெள்ளத்தில் மிதப்பது வாடிக்கையாக உள்ளது. இதைத்தொடர்ந்து தற்போது மழை வெள்ள பாதிப்பை தடுக்க தாம்பரம் மாநகராட்சி தீவிர நடவடிக்ைக எடுத்து உள்ளது.
மழை வெள்ள பாதிப்பு மற்றும் தண்ணீர் தேக்கம் குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்க தனியாக தொலை பேசி எண்கள், வாட்ஸ்அப் எண்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இது தொடர்பாக தாம்பரம் மாநகராட்சி கமிஷனர் அழகுமீனா வெளியிட்டு உள்ள செய்திக்குறிப் பில் கூறியிருப்பதாவது:-
தாம்பரம் மாநகராட்சிப் பகுதிகளில் மழை வெள்ள காலங்களில் பொது மக்களுக்குப் பாதிப்பின்றியும், போக்கு வரத்திற்கு இடையூறின்றி செல்லும் வகையிலும், மழைநீரானது சாலைகள் மற்றும் தெருக்களில் தேங்காமல் வடிந்து செல்லும் வகையில் மாநகராட்சிக்குட்பட்ட ஐந்து மண்டலங்களிலும் ரூ.37.59 கோடி மதிப்பீட்டில் 12.461 கிலோ மீட்டர் நீளத்திற்கு மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சிக்கு உட்பட்ட 5 மண்டலங்களில் 785 கி.மீ. நீளமுள்ள மழைநீர் வடிகால்கள், 62.75 கி.மீ நீளமுள்ள வரவு கால்வாய்கள் மற்றும் 6930 சிறுபாலங்கள் உள்ளன. இவற்றில் மழைநீர் தங்கு தடையின்றி செல்ல மழைநீர் வடிகால்கள், வரவு கால்வாய்கள் மற்றும் சிறுபாலங்களில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் தூர்வாருதல் பணிகள் முடிக்கப் பட்டுள்ளது. மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள சுரங்கப்பா தைகள் மற்றும் கடந்த காலங்க ளில் மழைநீர் தேங்கிய இடங்களில் மோட்டார் பம்புகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. சுரங்கப்பாதைகளில் நீரினை உடனடியாக வெளியேற்றும் வகையில் 6 மோட்டார் பம்புகள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சியில் உள்ள தாழ்வான பகுதிகளில் 80 எண்ணிக்கையிலான டீசல் மோட்டார் பம்புகள் மற்றும் மின் மோட்டார் பம்புகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தடுப்பு பணிகளை மேற்கொள்ளத் தேவையான மணல் மூட்டைகள், மீட்பு பணிகளை மேற்கொள்ள 21 ஜே.சி.பி. எயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளது. கழிவு நீரேற்று நிலையங்களில் உள்ள மோட்டார் பம்புகள் பராமரிக்கப்பட்டு 24 மணிநேரமும் இயங்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தாம்பரம் மாநகராட்சி யுடன் வருவாய் துறை, நெடுஞ்சாலை துறை, மின்சார வாரியம், காவல் துறை, தீயணைப்பு துறை, நீர்வளத்துறை உள்ளிட்ட பிற சேவை துறைகளுடன் ஒருங்கிணைந்து வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு பணிகளை மேற் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாநகராட்சியில் மழை தொடர்பான புகார் அளிக்க 24 மணி நேரம் இயங்கும் கட்டுப்பாட்டு அறை அமைத்து கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளவும், மீட்புப் பணிகளை மேற்கொள் ளவும் பணியா ளர்கள் மற்றும் அலுவலர்கள் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் பொதுமக்கள் கட்டுப்பாட்டு அறையினைத் தொடர்புகொள்ள கட்ட ணமில்லா தொலைப்பேசி எண் 18004254355, 18004251600, வாட்ஸ்அப் எண். 8438353355 மற்றும் துணை ஆணையாளர் 9677257153 உதவி ஆணை யாளர்கள் 7397382213, 7397382214 எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
தாம்பரம் மாநகராட்சி செம்பாக்கம் மண்டலத்தில் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் புதிய தண்ணீர் இரைக்கும் எந்திரங்கள், அதற்கான பைப்புகள்,மரம் அறுக்கும் எந்திரம், டார்ச் லைட், குடை கள் புதிய மண்வெட்டிகள், மீட்பு பணிக்காக கயிறுகள் மழையில் பயன்படுத்த ஊழியர்களுக்கான உடைகள், முதலுதவி உபகரணங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. இவற்றை மண்டல தலைவர் ஜெய் பிரதீப் சந்திரன் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது உதவி பொறியாளர் பழனி, சுகாதார ஆய்வாளர் நாகராஜன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
- வெங்கடேசன் அடிக்கடி மது குடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்தார்.
- பலத்த காயம் அடைந்த அனிதா ரத்த வெள்ளத்தில் அலறியபடி வீட்டில் இருந்து வெளியே சாலையில் ஓடினார்.
திருப்போரூர்:
திருப்போரூர், கன்னியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் வெங்கடேசன். சென்ட்ரிங் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி அனிதா (வயது 29). இவர்களுக்கு ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது. வெங்கடேசனுக்கு மனைவி அனிதாவின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு வந்தது. இதனால் அவர் அடிக்கடி மது குடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்தார். இது தொடர்பாக அவர்களுக்கு இடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வந்தது.
இதன்காரணமாக அனிதா கணவருடன் கோபித்துக் கொண்டு திருப்போரூர் அடுத்த சிறுதாவூரில் உள்ள தன்னுடைய தாய்வீட்டிற்கு அடிக்கடி செல்வதும் பின்னர் வெங்கடேசன் சமாதானப்படுத்தி மீண்டும் குடும்பம் நடத்த அழைத்தும் வந்தார்.
இந்த நிலையில் நேற்று மாலை மதுபோதையில் வீட்டுக்கு வந்த வெங்கடேசன் மீண்டும் மனைவி அனிதாவிடம் நடத்தை தொடர்பாக பேசி தகராறில் ஈடுபட்டார். இதில் அவர்களுக்கிடையே பயங்கர மோதல் ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த வெங்கடேசன் கத்தியால் மனைவி அனிதாவின் கழுத்தில் சரமாரியாக குத்தினார். இதில் பலத்த காயம் அடைந்த அனிதா ரத்த வெள்ளத்தில் அலறியபடி வீட்டில் இருந்து வெளியே சாலையில் ஓடினார். இதனை கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். சிறிது நேரத்தில் அனிதா மயங்கி விழுந்தார்.
இதுகுறித்து திருப்போரூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து உயிருக்கு போராடிய அனிதாவை மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அனிதா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதற்கிடையே வெங்கடேசனை திருப்போரூர் போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
- மாமல்லபுரம் பேரூராட்சியை அ.தி.மு.க. கைப்பற்றியது. அ.தி.மு.க.வை சேர்ந்த வளர்மதி எஸ்வந்தராவ் தலைவராகவும், ராகவன் துணைத்தலைவராகவும் பொறுப்பேற்றனர்.
- அ.தி.மு.க.வில் இணைந்த கவுன்சிலர்கள் 3 பேரும் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற உள்ளனர்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. கடந்த ஆண்டு நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.-9, தி.மு.க-4, ம.தி.மு.க-1, சுயேச்சை-1 வெற்றி பெற்றனர். இதைத்தொடர்ந்து மாமல்லபுரம் பேரூராட்சியை அ.தி.மு.க. கைப்பற்றியது. அ.தி.மு.க.வை சேர்ந்த வளர்மதி எஸ்வந்தராவ் தலைவராகவும், ராகவன் துணைத்தலைவராகவும் பொறுப்பேற்றனர்.
இந்த நிலையில் தி.மு.க.வை சேர்ந்த கவுன்சிலர்கள் சீனிவாசன், சரிதா கோவிந்தராஜ், கெஜலட்சுமி ஆகிய 3 பேரும் தி.மு.க.வினரின் செயல்பாடுகள் சரியில்லை எனக்கூறி திருக்கழுகுன்றம் கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளரும் மாமல்லபுரம் பேரூராட்சி துணைத்தலைவருமான ராகவன் முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர். இவர்களில் கவுன்சிலர்கள் சீனிவாசன், சரிதா கோவிந்தராஜ் ஏற்கனவே அ.தி.மு.க.வில் இருந்து கடந்த மார்ச் மாதம் தி.மு.க.வில் இணைந்தவர்கள் ஆவர். தற்போது அவர்கள் மீண்டும் அ.தி.மு.க.விற்கு திரும்பி உள்ளனர். அ.தி.மு.க.வில் இணைந்த கவுன்சிலர்கள் 3 பேரும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற உள்ளனர்.






