என் மலர்tooltip icon

    செங்கல்பட்டு

    • நிறைவு நாளான 18-ந் தேதி இரவு தென்மாட வீதியில் சூரசம்ஹாரம் நடத்தப்படுகிறது.
    • 19-ந் தேதி மாலை சந்தனக்காப்பும், 20-ந் தேதி பாலாபிஷேகமும் நடைபெறுகிறது.

    மாமல்லபுரம்:

    திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரர் கோவில் ஆறுமுக சுவாமி கந்த சஷ்டி உற்சவம் நாளை மறுநாள் துவங்குகிறது. இந்த உற்சவம் வரும் 18-ந் தேதி வரை நடைபெறுகிறது. தினமும் அபிஷேகம், சிறப்பு அலங்காரத்துடன் வழிபாடுகள் நடைபெறுகிறது. நிறைவு நாளான 18-ந் தேதி இரவு தென்மாட வீதியில் சூரசம்ஹாரம் நடத்தப்படுகிறது.

    19-ந் தேதி மாலை சந்தனக்காப்பும், 20-ந் தேதி பாலாபிஷேகமும் நடைபெறுகிறது. இந்து சமய அறநிலையத்துறையினர் கந்த சஷ்டி உற்சவவிழா ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மதுராந்தகம் அருகே தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டு உள்ளது.
    • வீடுகளை பயனாளிகளுக்கு ஒப்படைக்கும் நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற இருந்தது.

    மதுராந்தகம்:

    நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து சமீபத்தில் வெளியான மாவீரன் திரைப்படத்தில் அரசு சார்பில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பின் கட்டுமான தரம் மிகவும் மோசமாக இருப்பதாக காட்சி இருக்கும். தொட்டாலே அவ்வப்போது இடிந்து விழும் சிமெண்ட் பூச்சுகளை சரிசெய்யும் ஊழியராக காமெடி நடிகர் யோகிபாபுவும் நடித்து இருப்பார்.

    திரைப்பட பாணியில் இதேபோல் மதுராந்தகம் அருகே தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டு உள்ளது. திறப்பு விழாவுக்கு முன்னதாகவே அதன் சிமெண்டு பூச்சுகள் கைகளால் தொட்டால் மணலாக பெயர்ந்து விழுகின்றன. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

    மதுராந்தகம் அருகே உள்ள கொடூர் ஊராட்சிக்குட்பட்ட ஆட்சிவிளாகம் பகுதியில் இருளர்களுக்கு மத்திய மாநில அரசு நிதியின் கீழ் 30 வீடுகளும், தமிழ்நாடு அரசு மற்றும் மொபிஸ் இந்தியா பவுண்டேஷன் சார்பாக திருநங்கைகளுக்கு 50 வீடுகளும் கட்டப்பட்டு உள்ளன. இதன் மதிப்பீடு ரூ.5 கோடியே 24 லட்சத்து 96 ஆயிரம் ஆகும்.

    இந்த வீடுகளை பயனாளிகளுக்கு ஒப்படைக்கும் நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற இருந்தது. ஆனால் இந்த வீடுகள் தரமற்றதாகவும் கை வைத்தாலே சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுவதாகவும் பயனாளிகள் குற்றம் சாட்டினர்.

    இதைத்தொடர்ந்து அதிகாரிகள் தொகுப்பு வீடுகளை சமீபத்தில் ஆய்வு செய்தனர். மேலும் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்த இடத்தில் பேட்ச் ஒர்க் மட்டும் செய்ததாக கூறப்படுகிறது. அதுவும் தொடர்ந்து பெயர்ந்து விழுந்து வருகின்றன. இதற்கிடையே இந்த தரமற்ற வீடுகள் தொடர்பாக வீடியோ ஒன்று சமூகவலைதளத்தில் வெளியானது. அந்த வீடியோவில் புதிதாக கட்டப்பட்ட வீட்டின் சுவற்றில் ஒருவர் கை வைத்து தேய்க்கும் போது சிமெண்டுகள் அப்படியே மணலாக திரிந்து விழுகின்றன. இதேபோல் பல வீடுகள் திறப்பு விழாவுக்கு முன்னதாகவே பழுதடைந்து பழைய வீடுகள் போல் காட்சி அளிக்கிறது. இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் தற்போது வைரலாக பரவி வருகின்றன.

    தொகுப்பு வீடுகள் மீண்டும் சரிபார்த்து பயனாளிகளுக்கு அளிக்கப்படும் என்று அதிகாரிகள் வாக்குறுதி அளித்து இருப்பதாக தெரிகிறது. தரமற்ற கட்டுமான பொருட்களை பயன்படுத்தி தொகுப்பு வீடுகளை கட்டியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயனாளிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    இது தொடர்பாக பயனாளியான அப்பகுதியைச் சேர்ந்த திருநங்கை ஒருவர் கூறும்போது, திருநங்கைகளுக்கான தொகுப்பு வீடுகளை தரமற்ற முறையில் கட்டி உள்ளனர். தொட்டாலே சிமெண்டுகள் பெயர்ந்து விழுகின்றன. ஏற்கனவே இது தொடர்பாக மாவட்ட கலெக்டரிடம் நேரடியாக புகார் அளித்தோம். தற்போது மோசமான நிலையில் கட்டப்பட்ட வீட்டை சரி செய்யும் பேட்ஜ ஒர்க் பணி மட்டுமே நடைபெறுகிறது. அதிகாரிகள் நேரடியாக முழு ஆய்வு செய்ய வேண்டும். மேலும் தரமான புதிய வீடுகள் கட்டி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    சென்னை புளியந்தோப்பில் உள்ள கே.பி. பார்க் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு கட்ட கட்டிடமும் இதே நிலையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

    • குடிநீரின் தரம்குறித்து வதந்தி பரப்பினால் அவர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
    • தண்ணீரின் தரம் குறித்து முழுமையான அறிக்கையை வெளியிட வேண்டும்.

    தாம்பரம்:

    மாடம்பாக்கம் ஏரியில் உள்ள 5 கிணறுகளில் இருந்து சிட்லபாக்கம் மற்றும் மாடம்பாக்கத்தில் உள்ள சுமார் 3,300 வீடுகளுக்கு தினமும் 1.5 மில்லியன் லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

    இதில் சிட்லபாக்கம் பகுதியில் வினியோகம் செய்யப்படும் குடிநீர் தரமற்று பயன்படுத்த முடியாத அளவுக்கு இருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.இதைத்தொடர்ந்து தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகள் மாடம்பாக்கம் ஏரியில் உள்ள தண்ணீரை ஆய்வுக்கு அனுப்பினர். இதன் முடிவில் மாடம்பாக்கம் ஏரியில் இருந்து வினியோகிக்கப்படும் தண்ணீர் குடிநீருக்கு உகந்தவை என்பது உறுதியானது.

    இதையடுத்து குடிநீரின் தரம்குறித்து வதந்தி பரப்பினால் அவர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று தாம்பரம் மாநகராட்சி எச்சரித்து உள்ளது. இது தொடர்பாக தாம்பரம் மாநகராட்சி வெளியிட்ட அறிவிப்பில், பொதுமக்களிடம் சிலர் மாடம்பாக்கம் ஏரி தண்ணீர் குடிப்பதற்கு ஏற்ற நிலையில் இல்லை என்று தவறான தகவல் தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து சிட்லபாக்கம் பகுதியில் பொதுக்குழாயில் குடிநீர் மாதிரிகள் எடுக்கப்பட்டு காட்டாங்கொளத்தூரில் உள்ள குடிநீர் வடிகால் வாரிய ஆய்வகத்தில் குடிநீர் பகுப்பாய்வு செய்யப்பட்டது. இதில் இந்த குடிநீரானது குடிப்பதற்கு ஏற்றதாக உள்ளது என்று சான்றழிக்கப்பட்டு உள்ளது. மேலும் மாடம்பாக்கம் ஏரியில் அமைக்கப்பட்டு உள்ள கிணறுகளில் எடுக்கப்பட்ட மாதிரி தண்ணீரும் பொதுமக்கள் குடிப்பதற்கு ஏற்றது என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. எனவே குடிநீர் குறித்து பொதுமக்களிடம் தவறான தகவல்கள் தெரிவிப்பவர்கள் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டு உரிய குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டு உள்ளது.

    எனினும் ஏரியில் இருந்து வினியோகிக்கும் தண்ணீர் குடிநீருக்கு ஏற்றது இல்லை என்று பொதுமக்கள் தொடர்ந்து மறுத்து வருகிறார்கள். இதுதொடர்பாக சிட்லபாக்கத்தைச் சேர்ந்த ஒருவர் கூறும்போது, தண்ணீரின் தரம் குறித்து முழுமையான அறிக்கையை வெளியிட வேண்டும். ஏரியில் இருந்து சேகரிக்கப்பட்ட தண்ணீர் மாதிரிகளில் கோலிபார்ம் பாக்டீரியா இருப்பதை அறிக்கைகள் உறுதிப்படுத்தி உள்ளன என்றார்.

    இதுகுறித்து தாம்பரம் மாநகராட்சி கமிஷனர் அழகுமீனா கூறும்போது, "மாடம்பாக்கம் ஏரியில் இருந்து வினியோகிக்கப்படும் தண்ணீர் பற்றி கண்காணித்து வருகிறோம். தண்ணீரின் தரம் குறித்த சோதனையில் எந்த குறைபாடுகளும் இல்லை. பொதுமக்கள் அச்சம் அடைய தேவையில்லை. மாடம்பாக்கம் ஏரி அருகே புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும். ரூ.1,500 கோடியில் இப்பகுதியில் பாதாள சாக்கடை அமைக்கவும் அரசு திட்டமிட்டு உள்ளது என்றார்.

    • ராஜேஸ்வரி ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள குடியிருப்பில் தங்கி வேலை பார்த்து வந்தார்
    • சம்பவத்தன்று உடன் தங்கி இருந்த 3 பெண் ஊழியர்கள் பணிக்கு சென்றனர்.

    வண்டலூர்:

    நந்திவரம் கூடுவாஞ்சேரியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு விழுப்புரத்தை சேர்ந்த ராஜேஸ்வரி (வயது20) நர்சாக வேலை பார்த்து வந்தார். இவர் ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள குடியிருப்பில் தங்கி வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று உடன் தங்கி இருந்த 3 பெண் ஊழியர்கள் பணிக்கு சென்றனர். ராஜேஸ்வரி மட்டும் தனியாக இருந்தார்.

    இந்த நிலையில் ராஜேஸ்வரி அறையில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 240கிலோ எடை கொண்ட கிறிஸ்துமஸ் கேக் தயாரிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • 50க்கும் மேற்பட்டோர் கேக் மிக்ஸிங் செய்தனர்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள "கால்டன் சமுத்திரா" நட்சத்திர ஹோட்டலில் 240கிலோ எடை கொண்ட கிறிஸ்துமஸ் கேக் தயாரிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    கேக் தயாரிப்பதற்காக திராட்சை, ஜெரி, பப்பாளி, ஸ்டாபரி, பைனாப்பிள் உள்ளிட்ட பலவகை டிரை புரூட்ஸ் 120கிலோவும், விஸ்கி, பிராந்தி, உட்கா, ஜின், ரம், பக்காடி உள்ளிட்ட மதுபானங்கள் 60லிட்டரும் சேர்க்கப்பட்டது.

    சின்னத்திரை பிரபலங்கள், பிரபல சமையல் கலைஞர்கள், சுற்றுலா விருந்தினர்கள், ஹோட்டல் பணியார்கள் என 50க்கும் மேற்பட்டோர் கேக் மிக்ஸிங் செய்தனர். பின் அவைகளை 3 பேரல்களில் மூடி வைக்கப்பட்டது. 40நாட்கள் கழித்து ஊரவைக்கப்பட்ட டிரை புரூட்ஸ், மதுபான கலவையை எடுத்து அதில் 240கிலோ கேக் செய்யப்பட உள்ளது.

    • மற்றொருவரின் உடல் முழுவதும் சிதைந்து கிடந்ததால் அவரை பற்றிய விபரம் உடனடியாக தெரியவில்லை.
    • இரண்டு பேரின் உடல்களும் தண்டவாளத்தின் இருபுறத்திலும் தனித்தனியாக கிடந்தது.

    மதுராந்தகம்:

    மதுராந்தகம் அடுத்த அச்சரப்பாக்கம் அருகே ரெயில் தண்டவாளத்தில் இன்று காலை 2 வாலிபர்கள் பிணமாக கிடந்தனர்.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் ரெயில்வே போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பிணமாக கிடந்தவர்களில் ஒருவரது செல்போன் எண்ணை வைத்து அவர் ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்தவர் என்பது தெரிந்தது. மற்றொருவரின் உடல் முழுவதும் சிதைந்து கிடந்ததால் அவரை பற்றிய விபரம் உடனடியாக தெரியவில்லை.

    உடல்கள் கிடந்த இடம் அருகே தண்டவாளத்தை கடந்து செல்ல பாதை இல்லை. மேலும் இரண்டு பேரின் உடல்களும் தண்டவாளத்தின் இருபுறத்திலும் தனித்தனியாக கிடந்தது. எனவே அவர்கள் ஓடும் ரெயிலில் இருந்து விழுந்ததில் இறந்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    ரெயிலில் பயணம் செய்த போது ஏற்பட்ட தகராறில் அவர்கள் தள்ளிவிடப்பட்டு கொலை செய்யப்பட்டனரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
    • தற்கொலை சம்பவம் தொடர்பாக திருக்கழுக்குன்றம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாமல்லபுரம்:

    திருக்கழுக்குன்றம் அடுத்த கொத்திமங்கலத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி சரிதா(வயது35). இவர்களுக்கு திருமணம் ஆகி 15 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் மன வேதனை அடைந்த சரிதா கணவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து திருக்கழுக்குன்றம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • எந்தவித சிறு விபத்தும் ஏற்படாமல் இருக்க முக்கிய சந்திப்புகளில் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.
    • அனைத்து வழிபாட்டு தலங்கள் அருகிலும் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய் பிரணீத் நிருபர்களிடம் பேசும்போது கூறியதாவது:-

    தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு பயணம் செய்யும் மக்கள், ஜி.எஸ்.டி. சாலை வழியாக செல்வதற்கு ஏதுவாக போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்கவும், எந்தவித சிறு விபத்தும் ஏற்படாமல் இருக்கவும் முக்கிய சந்திப்புகளில் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 20 போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட முக்கிய சந்திப்பு பகுதிகள் மற்றும் மாவட்ட எல்லைகளில் வாகன சோதனை சாவடிகளில் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க 24 இடங்களில் வாகன சோதனை பணிக்காக போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பஸ்நிலையம், மார்கெட் மற்றும் அனைத்து வழிபாட்டு தலங்கள் அருகிலும் குற்றம் எதுவும் நடைபெறாமல் இருக்க கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 20 போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட அனைத்து பகுதியிலும் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க 33 இடங்களில் குற்ற ரோந்து பணிக்காக போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 3 உட்கோட்டத்திலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்கவும், குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கவும் ட்ரோன் சர்வலைன்ஸ் பணிக்காக போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    செங்கல்பட்டு மாவட்ட போலீஸ்சூப்பிரண்டு சாய் பிரணீத் தலைமையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு, 5 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 20 போலீஸ் சூப்பிரண்டுகள், 90 சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் என சுமார் 500 போலீசார் சுழற்சி முறையில் பணியமர்த்தப்பட உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ரெயிலில் பணம் கடத்தப்படுவதாக ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • போலீசார் அவரிடம் விசாரித்த போது பணத்திற்கான எந்த ஆவணங்களும் இல்லை.

    செங்கல்பட்டு:

    சென்னையில் இருந்து திருச்சிக்கு இன்று காலை சோழன் எக்ஸ்பிரஸ் ரெயில் வழக்கம்போல் புறப்பட்டு சென்றது. இந்த ரெயிலில் பணம் கடத்தப்படுவதாக ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதைத்தொடர்ந்து சோழன் எக்ஸ்பிரஸ் ரெயில் செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் நின்றபோது போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது முன்பதிவு செய்த பெட்டியில் பயணம் செய்த தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தை சேர்ந்த காஜா மொய்தீன்(36) என்பவர் தனது பையில் கட்டு, கட்டாக பணம் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் மொத்தம் ரூ.10 லட்சம் இருந்தது.

    இதுபற்றி போலீசார் அவரிடம் விசாரித்த போது பணத்திற்கான எந்த ஆவணங்களும் இல்லை. மேலும் முன்னுக்குபின் முரணாக பதில் கூறினார்.

    இதையடுத்து போலீசார் ரூ.10 லட்சத்தை பறிமுதல் செய்தனர். பணம் எங்கிருந்து யாருக்கு கொண்டு செல்லப்படுகிறது? ஹவாலா பணமா? என்பது குறித்து காஜா மொய்தீனிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு விருகம்பாக்கத்தில் காரில் வந்த இலங்கை தமிழர் உள்பட 4 பேரிடம் ரூ.1 கோடி சிக்கியது குறிப்பிடத்தக்கது.

    • அழைப்பு மணியை அடித்து வீட்டில் இருந்து பெண்கள் வெளியே வந்தால் உடனடியாக தலை முடியை பிடித்து கொள்வான்.
    • வீட்டில் இருக்கும் நகை, பணம், விலை உயர்ந்த பொருட்கள் எதன் மீதும் ஆசை கிடையாது.

    தாம்பரம்:

    பெண்களின் உள்ளத்தை திருடும் இளைஞர்களை கேள்விப்பட்டு இருப்போம். உள்ளாடைகளை திருடும் இளைஞர்களை பார்த்து இருப்போமா? இப்படியும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

    தாம்பரத்தை அடுத்த சேலையூர் எம்.இ.சாலை, முருகன் தெரு, வீரபத்திரன் தெரு ஆகிய பகுதிகளில் இரவு நேரத்தில் வீடுகளில் தனியாக இருக்கும் பெண்களிடம் கத்திமுனையில் பாலியல் சீண்டல்களில் ஒரு மர்ம மனிதன் ஈடுபட்டு வருவதாக சேலையூர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

    அவமானம் என நினைத்து புகார் கொடுக்க எந்த பெண்ணும் முன் வரவில்லை. ஆனாலும் போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராக்களை ஆய்வு செய்து தேடிக்கொண்டிருந்தனர்.

    இதற்கிடையில் பாதிக்கப்பட்ட வீடுகளில் உள்ளவர்களும் இரவு நேரத்தில் ரகசியமாக கண்காணித்து கொண்டிருந்தனர். நேற்று முன்தினம் நள்ளிரவில் சந்தேகப்படும்படி அந்த பகுதியில் சுற்றிக் கொண்டிருந்த ஒரு வாலிபரை பார்த்ததும் அவரை பிடித்து விசாரித்துள்ளனர். அவன் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் அவனை வெளுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    அவனிடம் விசாரித்த போது அந்த நள்ளிரவு ரோமியோ அவன்தான் என்பது தெரியவந்தது. அவனது பெயர் தமிழ் பிரபு (28). கார் டிரைவராக வேலை பார்க்கிறான். சொந்த ஊர் தஞ்சாவூர். சேலையூரில் தான் வாடகை வீட்டில் தங்கி உள்ளான். இவருக்கு ஒரு வினோதமான ஆசை. பெண்களின் உள்ளாடைகளை திருடி தனது அறைக்கு கொண்டு சென்று தன் அருகே வைத்து கொண்டு தூங்குவான். மறுநாள் அதை குப்பையில் வீசி விடுவான்.

    மீண்டும் அதே போல் திருடுவான். ஒரு கட்டத்தில் பெண்களை பாலியல் ரீதியாக சீண்டி பார்க்க ஆசைப்பட்டுள்ளான். அதற்காக அவர் வீடுகளில் தனியாக இருக்கும் பெண்களை தேட தொடங்கி இருக்கிறான்.

    இரவில் தெருவில் சாதாரணமாக நடந்து செல்வது போல் செல்வான். அப்போது பூட்டியிருக்கும் வீடுகளை நோட்டமிடுவான். அந்த வீட்டின் முன்பு பெண்கள் செருப்பு மட்டும் கிடந்தால் பெண்கள்தான் தனியாக இருக்கிறார்கள் என்று உறுதி செய்வான்.

    பின்னர் அழைப்பு மணியை அடித்து வீட்டில் இருந்து பெண்கள் வெளியே வந்தால் உடனடியாக தலை முடியை பிடித்து கொள்வான். சத்தம் போடாமல் இருப்பதற்காக தயாராக இருக்கும் கத்தியை எடுத்து கழுத்தில் வைத்து கொள்வான். அப்படியே வீட்டுக்குள் தள்ளி சென்று பாலியல் சில்மிஷத்தில் ஈடுபடுவான். வேறு அந்த வீட்டில் இருக்கும் நகை, பணம், விலை உயர்ந்த பொருட்கள் எதன் மீதும் அவருக்கு ஆசை கிடையாது. சத்தமின்றி தனது ஆசை தீர சில்மிஷம் செய்து விட்டு சத்தமில்லாமல் வீட்டை விட்டு வெளியேறி விடுவான்.

    இப்படி பத்துக்கும் மேற்பட்ட பெண்களிடம் நடந்துள்ளதாக கூறியிருக்கிறார். ஆனால் இதுவரை போலீஸ் கையில் சிக்கியது இல்லை. அதற்கு முக்கிய காரணம் பெண்கள் புகார் கொடுக்க முன் வராததுதான். இப்போதுதான் முதல் முறையாக போலீசிடம் சிக்கி இருக்கிறார்.

    தமிழ்பிரபுவை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    • மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    • போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாந்தகன், ஊராட்சி தலைவர் சாமுண்டீஸ்வரி உடன் இருந்தனர்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் அடுத்த கொக்கிலமேடு பகுதியில் கடல் அரிப்பை தடுக்க ரூ.9.62கோடி செலவில், 60மீட்டர் நீளத்தில் தடுப்புகற்கள் மற்றும் மீன் இறங்குதளம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது மீன்வளத்துறை உதவி இயக்குனர் ஜனார்த்தனன், திருக்கழுகுன்றம் தாசில்தார் ராஜேஸ்வரி, மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாந்தகன், ஊராட்சி தலைவர் சாமுண்டீஸ்வரி உடன் இருந்தனர்.

    • பழைய மாமல்லபுரம் சாலையில் மழைநீர் கால்வாய்க்காக பள்ளங்கள் தோண்டப்பட்டு உள்ளது.
    • கால்தவறி கால்வாய் பள்ளத்திற்குள் விழுந்து விட்டார்.

    திருப்போரூர்:

    திருப்போரூரில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக ஆங்காங்கே சாலையோரத்தில் பள்ளங்கள் தோண்டப்பட்டு உள்ளன.

    இதேபோல் திருப்போரூர் பழைய மாமல்லபுரம் சாலையில் மழைநீர் கால்வாய்க்காக பள்ளங்கள் தோண்டப்பட்டு உள்ளது. பணிகள் பாதி முடிந்து உள்ள நிலையில் கான்கிரீட் கம்பிகள் அப்படியே நீட்டிக்கொண்டு உள்ளன. அந்த இடத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் எதுவும் செய்யப்படவில்லை.

    இந்த நிலையில் திருப்போரூர் பகுதியில் தங்கி கொத்தனார். வேலை பார்த்து வரும் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ரமேஷ் (35) என்பவர் நேற்று இரவு பழைய மாமல்லபுரம் சாலையில் மழைநீர்கால்வாய் பணி நடைபெற்ற இடம் வழியாக நடந்து வந்தார்.

    அப்போது அவர் கால்தவறி கால்வாய் பள்ளத்திற்குள் விழுந்து விட்டார். இதில் அவரது வயிற்றில் கம்பி குத்தி ரத்தம் வெளியேறியது. இரவு நேரத்தில் அந்த பகுதி வழியாக மக்கள் நடமாட்டம் இல்லாததால் வயிற்றில் கம்பி குத்திய நிலையில் கிடந்த ரமேசை யாரும் கவனிக்கவில்லை. அவர் விடிய, விடிய அப்படியே உயிருக்கு போராடியபடி கிடந்தார்.

    இன்று அதிகாலை அவ்வழியே சென்றவர்கள் கால்வாய் பள்ளத்துக்குள் ரமேஷ் உயிருக்கு போராடியபடி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவரை அக்கம்பக்கத்தினர் உதவியோடு மீட்டு மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து திருப்போரூர் போலீசார் விசாரித்து வருகின்றனர். மழைநீர் வடிகால்வாய் பணி நடைபெறும் இடத்தில் பாதுகாப்புக்காக அடைப்புகள் எதுவும் வைக்காமல் ஆபத்தான நிலையில் காணப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

    ×