search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மாடம்பாக்கம் ஏரி தண்ணீர் குடிநீருக்கு ஏற்றது- தாம்பரம் மாநகராட்சி தகவல்
    X

    மாடம்பாக்கம் ஏரி தண்ணீர் குடிநீருக்கு ஏற்றது- தாம்பரம் மாநகராட்சி தகவல்

    • குடிநீரின் தரம்குறித்து வதந்தி பரப்பினால் அவர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
    • தண்ணீரின் தரம் குறித்து முழுமையான அறிக்கையை வெளியிட வேண்டும்.

    தாம்பரம்:

    மாடம்பாக்கம் ஏரியில் உள்ள 5 கிணறுகளில் இருந்து சிட்லபாக்கம் மற்றும் மாடம்பாக்கத்தில் உள்ள சுமார் 3,300 வீடுகளுக்கு தினமும் 1.5 மில்லியன் லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

    இதில் சிட்லபாக்கம் பகுதியில் வினியோகம் செய்யப்படும் குடிநீர் தரமற்று பயன்படுத்த முடியாத அளவுக்கு இருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.இதைத்தொடர்ந்து தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகள் மாடம்பாக்கம் ஏரியில் உள்ள தண்ணீரை ஆய்வுக்கு அனுப்பினர். இதன் முடிவில் மாடம்பாக்கம் ஏரியில் இருந்து வினியோகிக்கப்படும் தண்ணீர் குடிநீருக்கு உகந்தவை என்பது உறுதியானது.

    இதையடுத்து குடிநீரின் தரம்குறித்து வதந்தி பரப்பினால் அவர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று தாம்பரம் மாநகராட்சி எச்சரித்து உள்ளது. இது தொடர்பாக தாம்பரம் மாநகராட்சி வெளியிட்ட அறிவிப்பில், பொதுமக்களிடம் சிலர் மாடம்பாக்கம் ஏரி தண்ணீர் குடிப்பதற்கு ஏற்ற நிலையில் இல்லை என்று தவறான தகவல் தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து சிட்லபாக்கம் பகுதியில் பொதுக்குழாயில் குடிநீர் மாதிரிகள் எடுக்கப்பட்டு காட்டாங்கொளத்தூரில் உள்ள குடிநீர் வடிகால் வாரிய ஆய்வகத்தில் குடிநீர் பகுப்பாய்வு செய்யப்பட்டது. இதில் இந்த குடிநீரானது குடிப்பதற்கு ஏற்றதாக உள்ளது என்று சான்றழிக்கப்பட்டு உள்ளது. மேலும் மாடம்பாக்கம் ஏரியில் அமைக்கப்பட்டு உள்ள கிணறுகளில் எடுக்கப்பட்ட மாதிரி தண்ணீரும் பொதுமக்கள் குடிப்பதற்கு ஏற்றது என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. எனவே குடிநீர் குறித்து பொதுமக்களிடம் தவறான தகவல்கள் தெரிவிப்பவர்கள் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டு உரிய குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டு உள்ளது.

    எனினும் ஏரியில் இருந்து வினியோகிக்கும் தண்ணீர் குடிநீருக்கு ஏற்றது இல்லை என்று பொதுமக்கள் தொடர்ந்து மறுத்து வருகிறார்கள். இதுதொடர்பாக சிட்லபாக்கத்தைச் சேர்ந்த ஒருவர் கூறும்போது, தண்ணீரின் தரம் குறித்து முழுமையான அறிக்கையை வெளியிட வேண்டும். ஏரியில் இருந்து சேகரிக்கப்பட்ட தண்ணீர் மாதிரிகளில் கோலிபார்ம் பாக்டீரியா இருப்பதை அறிக்கைகள் உறுதிப்படுத்தி உள்ளன என்றார்.

    இதுகுறித்து தாம்பரம் மாநகராட்சி கமிஷனர் அழகுமீனா கூறும்போது, "மாடம்பாக்கம் ஏரியில் இருந்து வினியோகிக்கப்படும் தண்ணீர் பற்றி கண்காணித்து வருகிறோம். தண்ணீரின் தரம் குறித்த சோதனையில் எந்த குறைபாடுகளும் இல்லை. பொதுமக்கள் அச்சம் அடைய தேவையில்லை. மாடம்பாக்கம் ஏரி அருகே புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும். ரூ.1,500 கோடியில் இப்பகுதியில் பாதாள சாக்கடை அமைக்கவும் அரசு திட்டமிட்டு உள்ளது என்றார்.

    Next Story
    ×