என் மலர்tooltip icon

    செங்கல்பட்டு

    மதுராந்தகம் அருகே கஞ்சா வியாபாரி கொன்று புதைக்கப்பட்டார். இது தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
    மதுராந்தகம்:

    சோழிங்கநல்லூரை சேர்ந்தவர் கார்த்திக் என்ற டோரா(வயது 24). கஞ்சா வியாபாரியான இவர் மீது சென்னையில் பல வழக்குகள் உள்ளன. இவர், தனது நண்பர் விக்னேஷ் என்ற விக்கி என்பவருடன் கடந்த 14-ந்தேதி மதுராந்தகத்தை அடுத்த காந்திநகர் பகுதியில் மது குடிக்க வந்ததாக தெரிகிறது.

    அப்போது அவர்களுக்கும், அவர்களது நண்பர்களுக்கும் தொழில் போட்டி காரணமாக பழைய மாம்பாக்கம் பகுதியில் தகராறு ஏற்பட்டது. அவர்கள் கார்த்திக்கை கத்தியால் வெட்டினர். உடனே விக்கி அங்கிருந்து தப்பிச்சென்று விட்டார். அதன்பின்னர் கார்த்திக் என்ன ஆனார் என்பது தெரியவில்லை.

    கார்த்திக் மாயமானது குறித்து விக்னேஷ் மதுராந்தகம் போலீசில் புகார் செய்தார். போலீசார் பழைய மாம்பாக்கம் பகுதியில் கைப்பற்றப்பட்ட கத்தி மற்றும் செல்போன் போன்றவற்றை வைத்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் கார்த்திக்கை கென்டிரசேரியை சேர்ந்த செங்குட்டுவன், அவரது நண்பர்களான சபரிநாதன் (24), நவீன் என்ற சைலக் (20), அஸ்வின் என்ற சைமன்(22) உள்ளிட்ட 6 பேர் கும்பல் வெட்டிக்கொன்று மதுராந்தகத்தை அடுத்த முருக்கம்பாக்கம் காட்டுப்பகுதியில் புதைத்தது தெரியவந்தது. போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் கார்த்திக்கின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் உத்தரவின் பேரில் மதுராந்தகம் துணை போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரன் தலைமையில் மதுராந்தகம் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் உள்ளிட்ட போலீசார் சபரிநாதன், பெலித் (24), நவீன், அவரது அண்ணன் அஸ்வின் ஆகியோரை கைது செய்தனர். மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
    வண்டலூர் அருகே வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கள்ளக்காதலி உள்பட 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வண்டலூர்:

    செங்கல்பட்டு மாவட்டம் மேற்கு தாம்பரத்தை சேர்ந்தவர் நிரஞ்சன் (வயது 20). இவர் கைகளில் பச்சை குத்தும் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் மாலை மோட்டார் சைக்கிளில் காட்டாங்கொளத்தூர் பஸ் நிறுத்தம் அருகே தாம்பரம் நோக்கி செல்லும்போது பின்னால் காரில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் நிரஞ்சனை வழிமறித்து உருட்டுக்கட்டையால் தாக்கி விட்டு தப்பிச்சென்று விட்டனர்.

    இதில் பலத்த காயம் அடைந்த நிரஞ்சன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர்.

    இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடி அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுப்பட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும்படி வந்த ஒரு காரை போலீசார் மடக்கி விசாரித்தபோது காரில் இருந்தவர்கள் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை தெரிவித்தனர்.

    இதையடுத்து காரில் வந்த 4 வாலிபர்கள் மற்றும் டிரைவர் உள்பட 5 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தபோது அவர்கள் மறைமலைநகர் பகுதியை சேர்ந்த சபரிநாதன் (19), தினேஷ் (31), கோகுல் (21), பாலாஜி (19), அருண் (19) என்பதும், இவர்கள்தான் நிரஞ்சனை அடித்துக்கொலை செய்ததும் தெரிந்தது.

    இவர்கள் 5 பேரையும் கைது செய்த போலீசார், இவர்கள் அளித்த தகவலின்பேரில் காட்டாங்கொளத்தூர் ராஜாஜி தெருவில் வசிக்கும் நிரஞ்சனின் கள்ளக்காதலி அமலா(25) என்பவரையும் கைது செய்தனர்.

    இது குறித்து போலீசாரிடம் அமலா கூறியதாவது:-

    ஏற்கனவே திருமணம் ஆன நான், கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த நேரத்தில் நிரஞ்சனுடன் பழக்கம் ஏற்பட்டு கடந்த 3 ஆண்டுகளாக கள்ளக்காதலர்களாக வாழ்ந்து வந்தோம். நிரஞ்சனுக்கு தெரியாமல் மறைமலைநகரை சேர்ந்த தினேஷ் என்ற வாலிபருடன் கள்ளத்தொடர்பு வைத்து பழகி வந்தேன்.

    இதனை அறிந்த நிரஞ்சன் நேற்று முன்தினம் எனது வீட்டுக்கு வந்து என்னை மிரட்டியதால், பயந்து போன நான், இது குறித்து மற்றொரு கள்ளக்காதலன் தினேஷ் மற்றும் அவரது நண்பர் சபரிநாதன் ஆகியோருக்கு செல்போன் மூலம் தெரிவித்தேன். இதையடுத்து தினேஷ், சபரிநாதன் இருவரும் அவர்களது நண்பர்களுடன் சேர்ந்து நிரஞ்சனை உருட்டுக்கட்டையால் அடித்துக்கொலை செய்துவிட்டார்கள்.

    இவ்வாறு அமலா கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

    பின்னர் கைதான அமலா உள்பட 6 பேரையும் செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவர்களை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

    2 வீடுகளின் பூட்டை உடைத்து 24 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இந்த இரு சம்பவங்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    வண்டலூர்:

    செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் வேம்புலி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அர்கேஷ் (வயது 36). ரெயில்வே கார்டாக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி மற்றும் குழந்தைகள் கடந்த மாதம் 31-ந்தேதி சொந்த ஊரான ராஜஸ்தான் மாநிலத்துக்கு சென்றுவிட்டனர். இந்த நிலையில் தனது வீட்டை பூட்டிக்கொண்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை அர்கேஷ் சென்னை எழும்பூரில் இருந்து விழுப்புரம் செல்லும் ரெயிலில் பணிக்கு சென்றார்.

    நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 14 பவுன் தங்க நகைகள், வெள்ளி பொருட்கள், மற்றும் ரூ.10 ஆயிரம் திருட்டு போனது தெரியவந்தது.

    இது குறித்து அர்கேஷ் ஓட்டேரி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    திருவள்ளூரை அடுத்த வேப்பம்பட்டு சுந்தர பாபு நகரை சேர்ந்தவர் கலையரசன் (60). நேற்று முன்தினம் கலையரசன் தனது மனைவி மற்றும் குடும்பத்தாருடன் வீட்டை பூட்டிவிட்டு சென்னை ஆவடியில் உள்ள உறவினர் இல்ல காதணி விழா நிகழ்ச்சிக்கு சென்றார். இரவு வீட்டுக்கு வந்து பார்த்தபோது அவரது வீட்டின் பூட்டு உடைக் கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 10 பவுன் தங்க நகை திருட்டு போனது தெரியவந்தது.

    இது குறித்து கலையரசன் செவ்வாப்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    செங்கல்பட்டு அருகே ஏரியில் குளித்த வாலிபர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
    செங்கல்பட்டு:

    திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை சேர்ந்தவர் சையத் ரஷீத் பாஷா (வயது 20). செங்கல்பட்டு அடுத்த பரனூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு வேலை தேடி வந்தார்.

    இந்த நிலையில் அவர் அருகில் உள்ள ஏரியில் குளித்து கொண்டிருந்தார். நீச்சல் தெரியாத அவர் ஏரியில் மூழ்கினார். அக்கம் பக்கத்தினர் இது குறித்து செங்கல்பட்டு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து அவர்கள் வந்து சையத் ரஷீத் பாஷாவை பிணமாக மீட்டனர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இது குறித்து செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    ஒரகடம் அருகே வாலிபரை கொன்று கிணற்றில் உடல் வீசப்பட்டது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    தாம்பரம்:

    விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் எயில் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவருடைய மகன் பிரதாப் (வயது 19). இவர் காஞ்சீபுரம் மாவட்டம் ஒரகடம் பகுதியில் உள்ள பொன்னியம்மன் கோவில் தெருவில் தங்கியிருந்து அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் 16-ந்தேதி முதல் பிரதாப்பை காணவில்லை என்று அவரது தாயார் சசிகலா (40) ஒரகடம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தினர்.

    இந்த வழக்கு தொடர்பாக பிரதாப்பின் நண்பரான விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் வத்திராயிருப்பு பகுதியை சேர்ந்த பிலிப் என்கிற வினோ (வயது 23), திருவண்ணாமலை மாவட்டம் போளூர் ஒலக்கடை பகுதியை சேர்ந்த நித்தியானந்தன் (23) மற்றும் பூவரசன் (20) ஆகியோரை கைது செய்து விசாரித்தனர்.

    விசாரணையில் மாயமான பிரதாப் மற்றும் இவர்கள் 3 பேரும் ஒரகடம் பகுதியில் தங்கியிருந்து அதே பகுதியில் உள்ள நிறுவனங்களில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வந்தது தெரிய வருகிறது. சம்பவத்தன்று அவர்கள் 3 பேரும் சேர்ந்து பிரதாப்பை கத்தியால் வெட்டிக்கொலை செய்து உடலில் கல்லைக்கட்டி சேந்தமங்கலம் பகுதியில் உள்ள கிணற்றில் வீசியதும் தெரியவந்தது. மேலும் நடத்தப்பட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்ட பிரதாப்பிற்கும் நித்தியானந்தத்தின் மனைவிக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததால் கொலை செய்ததாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சேந்தமங்கலம் பகுதிக்கு சென்று கிணற்றில் உள்ள நீரை வெளியேற்றி அழுகிய நிலையில் கிடந்த பிரதாப்பின் உடலை கைப்பற்றினர்.

    பிரதாப்பின் உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கைதான 3 பேரையும் போலீசார் ஸ்ரீபெரும்புதூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதி அவர்களை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

    செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று 157 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21,308 ஆக உள்ளது.
    செங்கல்பட்டு:

    தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 3,46,945 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 2,83,937 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,886-ஆக அதிகரித்துள்ளது.
     
    அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1,17,839 ஆக அதிகரித்துள்ளது.
     
    இந்நிலையில் கொரோனா பாதிப்பில் சென்னைக்கு அடுத்தபடியாக உள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏற்கனவே 21,151 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று மேலும் 157 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21,308 ஆக உயர்ந்துள்ளது.

    இதுவரை 18,002 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 349 பேர் உயிரிழந்துள்ளனர்.
    தாம்பரம் அருகே சேலையூரில் அலமாரியில் இருந்த டி.வி. விழுந்ததில் 3 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
    தாம்பரம்:

    தாம்பரம் அருகே சேலையூரில் அகரம் பகுதியில் வசிப்பவர் பாலாஜி. இவரது 3 வயது குழந்தை கவியரசு. நேற்று இரவு பாலாஜியின் செல்போன் சார்ஜரில் போடப்பட்ட நிலையில் இருந்துள்ளது.

    அப்போது திடீரென செல்போன் அழைப்பு காரணமாக செல்போன் ஒலிக்க, குழந்தை கவியரசு ஓடிபோய் செல்போனை எடுக்க முயன்றுள்ளான். அப்போது செல்போன் சார்ஜர் வயர் மாட்டி அலமாரியில் இருந்த டிவி குழந்தை தலையில் விழுந்துள்ளது. இதனால் பலத்த காயமடைந்த குழந்தையை ஆம்புலன்ஸ் உதவியுடன் தந்தை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சேலையூர் போலீசார் குழந்தை இறந்தது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    கூடுவாஞ்சேரியை அடுத்த ஒரத்தூர், நீலமங்கலம், அம்மணம்பாக்கம், ஆரம்பாக்கம், ஆதனூர், மாடம்பாக்கம் போன்ற பகுதியில் வசிக்கும் 68 குடும்பத்தினருக்கு ஸ்மார்ட் ரேஷன்கார்டு வழங்கப்பட்டது.
    வண்டலூர்:

    கூடுவாஞ்சேரியை அடுத்த ஒரத்தூர், நீலமங்கலம், அம்மணம்பாக்கம், ஆரம்பாக்கம், ஆதனூர், மாடம்பாக்கம் போன்ற பகுதியில் வசிக்கும் 68 குடும்பத்தினர் நீண்ட காலமாக ரேஷன் கார்டு இல்லாமல் அவதிப்பட்டு வந்தனர். இது குறித்து அந்த பகுதி மக்கள் அ.தி.மு.க.வை சேர்ந்த ஒரத்தூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கற்பகம் சுந்தரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அவர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம், 68 குடும்பத்தினருக்கு புதிதாக ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்க கோரிக்கை விடுத்தார். இதையடுத்து 68 குடும்பத்தினருக்கும் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டது.

    முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கற்பகம் சுந்தர், படப்பை, மணிமங்கலம் வேளாண்மை கூட்டுறவு வங்கி இயக்குனர் என்.டி.சுந்தர் ஆகியோர் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளை வழங்கினார்கள். அப்போது நீலமங்கலம் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் என்.டி.எஸ்.சுபாஷ் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதித்தோர் எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டியது.
    வண்டலூர்:

    செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உள்பட்ட கீழக்கரணை வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் வசிக்கும் 4 பேர் உள்பட 18 பேர், நத்திவரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உள்பட்ட ஜெய்பீம் நகரை சேர்ந்த 4 பேர் உள்பட 42 பேர், ஒத்திவாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உள்பட்ட கொளப்பாக்கம் பகுதியில் வசிக்கும் 4 பெண்கள் உள்பட 7 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுடன் செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 376 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20 ஆயிரத்து 465 ஆக உயர்ந்து உள்ளது. இவர்களில் 17 ஆயிரத்து 115 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று ஒரே நாளில் 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் செங்கல்பட்டு மாவட்டத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 339 ஆக உயர்ந்தது. 3 ஆயிரத்து 11 பேர் தொடர்ந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    திருவள்ளூர் நகராட்சிக்கு உள்பட்ட ஆசூரி தெரு, நேதாஜி சாலை, பாலாஜி நகர், அம்சாநகர், ராஜாஜிபுரம், கே.ஜி.பி நகர் போன்ற பகுதிகளில் நேற்று கொரோனா தொற்றால் 16 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடம்பத்தூர் ஒன்றியத்தில் மேல்நல்லாத்தூர், கம்மவார்பாளையம், மணவாளநகர் போன்ற பகுதிகளில் 13 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 422 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இதுவரை மாவட்டம் முழுவதும் கொரோனா தொற்றால் 19 ஆயிரத்து 382 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் 15 ஆயிரத்து 158 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். 3 ஆயிரத்து 897 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்றால் மாவட்டம் முழுவதும் 3 பேர் இறந்துள்ளனர். இதுவரை மாவட்டம் முழுவதும் 327 பேர் இறந்துள்ளனர்.

    காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை ஊராட்சியை சேர்ந்த 31, 23, 22, 29 வயதுடைய ஆண்கள் பி.டி.ஒ.ஆபிஸ் சாலை பகுதியை சேர்ந்த 30 வயது ஆண், சாலமங்கலம் பகுதியை சேர்ந்த 28 வயது ஆண் ஆகியோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா தொற்று உறுதியாகி இருப்பது தெரியவந்தது.

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 184 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 13 ஆயிரத்து 576 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 173 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 10 ஆயிரத்து 546 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று நலமுடன் வீடு திரும்பி உள்ளனர்.
    செங்கல்பட்டு அருகே தொழிலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக மகளின் காதலன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மாவட்டம் இருங்குன்றப்பள்ளியை சேர்ந்தவர் தணிகைமணி (வயது 43). கூலித்தொழிலாளி. இவருக்கு 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். அதே பகுதியில் இறைச்சி கடையில் வேலை பார்த்து வந்த வடபாதி பகுதியை சேர்ந்த சிலம்பரசன் (30), தணிகைமணியின் மூத்த மகளை காலித்து வந்ததாக கூறப்படுகிறது.

    இதனால் இரு தரப்பினருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மகளின் காதல் விவகாரம் குறித்து தணிகைமணி, சிலம்பரசனை கண்டித்ததாக கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரம் அடைந்த சிலம்பரசன் மற்றும் அவரது நண்பர்கள் என 6 பேர் இறைச்சி வெட்டும் கத்தியால் தணிகைமணியை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த தணிகைமணியை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து மகளின் காதலன் மற்றும் அவரது நண்பர்களை தேடி வருகின்றனர்.

    இந்த நிலையில் தணிகைமணி கொலை சம்பந்தமாக செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் எதிரே இருகுன்றபள்ளி பொதுமக்கள் ஏராளமானோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யவேண்டும், நியாயமான விசாரணை நடத்த வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர். போலீசாரின் சமரசத்தையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

    இந்த நிலையில் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகளான வடபாதி பகுதியை சேர்ந்த சிலம்பரசன் மற்றும் அதே பகுதியை சேர்ந்த விஜயகுமார் என்ற விஜி (45), பீ.டி. நகர் பகுதியை சேர்ந்த அக்பர் அலி என்ற அக்கு (29) ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

    செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மேலும் 281 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19,921 ஆக அதிகரித்துள்ளது.
    செங்கல்பட்டு:

    தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

    தமிழகத்தில் நேற்று புதிதாக 5 ஆயிரத்து 835 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 20 ஆயிரத்து 355 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 61 ஆயிரத்து 459 ஆக உயர்ந்துள்ளது.

    மற்ற மாவட்டங்களை விட சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று அதிகமாக உள்ளது.

    இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மேலும் 281 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19,921 ஆக அதிகரித்துள்ளது.
    செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் திருட்டு வழக்கில் மகன் சிக்கியதால் அவமானத்தில் தந்தை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    வண்டலூர்:

    செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அம்பேத்கர் நகர் துலுக்காணத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் குமார் (வயது 48). இவரது மகன் நீலகண்டன். இவரை சோமங்கலம் போலீசார் ஒரு திருட்டு வழக்கில் பிடித்து சென்றனர்.

    இதை கேள்விப்பட்ட உடன் தனது மகனின் இந்த செய்கையால் அவமானம் தாங்க முடியாத குமார் நேற்று முன்தினம் தூக்குப்போட்டு கொண்டார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கூடுவாஞ்சேரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    இது குறித்து கூடுவாஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
    ×