என் மலர்tooltip icon

    செங்கல்பட்டு

    தாம்பரம் அருகே ரூ.5 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட ஓட்டல் உரிமையாளர் மகனை மீட்ட போலீசார், இது தொடர்பாக 3 பேரை கைது செய்தனர்.
    தாம்பரம்:

    சென்னையை அடுத்த தாம்பரம் அருகே உள்ள முடிச்சூர், மதனபுரம், சுராஜ் அவென்யூ பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 44). இவர், மதனபுரம் பிரதான சாலையில் ஓட்டல் வைத்து உள்ளார். இவருக்கு நவஜீவன் (16) என்ற மகன் உள்ளார். இவர், அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    நேற்று நவஜீவன், ஓட்டல் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றபோது, அவரை வழிமறித்த சிலர் அவரை காரில் ஏற்றி கடத்திச் சென்றனர். பின்னர் தங்கராஜை செல்போனில் தொடர்பு கொண்ட மர்மநபர்கள், நவஜீவனை கடத்தி விட்டதாகவும், ரூ.5 லட்சம் கொடுத்தால் மட்டுமே அவரை திரும்ப ஒப்படைப்பதாகவும் மிரட்டினர்.

    இதனால் அதிர்ச்சியடைந்த தங்கராஜ், சம்பவம் குறித்து பீர்க்கன்காரணை போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தாம்பரம் போலீஸ் கூடுதல் துணை கமிஷனர் அசோகன் தலைமையில், சேலையூர் உதவி கமிஷனர் சகாதேவன் மற்றும் போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்தும், அதில் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரின் எண் மற்றும் மர்மநபர் பேசிய செல்போன் எண் சிக்னலை வைத்தும் விசாரணை நடத்தினர்.

    அதில் நவஜீவனை கடத்திச்சென்ற கார், செங்கல்பட்டு நோக்கி சென்றுகொண்டிருந்தது தெரியவந்தது. இதுபற்றி செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் மற்றும் மறைமலைநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் ஆகியோருக்கு தகவல் கொடுத்துவிட்டு, கூடுதல் துணை கமிஷனர் அசோகன் தலைமையிலான போலீசார் செங்கல்பட்டு நோக்கி சென்றனர்.

    அப்போது மறைமலைநகர் பகுதியில் போலீசார், நவஜீவனை கடத்திச் சென்ற கும்பலை காரோடு மடக்கி பிடித்தனர். அதில் கடத்தப்பட்ட நவஜீவனை போலீசார் பத்திரமாக மீட்டனர்.

    பின்னர் கடத்தலில் ஈடுபட்டவர்களை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். அதில் கடத்தலில் ஈடுபட்டது தங்கராஜின் ஓட்டலில் வேலை பார்த்த முன்னாள் ஊழியர் ஹரிகரன் (21) என்பது தெரிந்தது.

    கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு தங்கராஜின் ஓட்டலில் வேலை பார்த்து வந்த ஹரிகரன், தங்கராஜின் உறவினர் பெண்ணை ஒருதலைபட்சமாக காதலித்து வந்ததாகவும், இதையறிந்த தங்கராஜ், ஹரிகரனை வேலையில் இருந்து நிறுத்திவிட்டார். இதனால் ஆத்திரத்தில் அவரது மகனை கடத்தியதும் தெரிந்தது.

    இதையடுத்து ஹரிகரன், அவருக்கு உடந்தையாக இருந்த அவரது நண்பர் விக்னேஷ் (20) மற்றும் வாடகை கார் டிரைவர் சரத்குமார் (29) ஆகியோரை கைது செய்த போலீசார், கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர்.
    கொரோனா தனிமைப்படுத்தல் முகாமில் டிரைவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தாம்பரம்:

    புதுச்சேரி மாநிலம் காரைக்காலை சேர்ந்தவர் பாலாஜி (வயது 32). குவைத்தில் டிரைவராக வேலை செய்து வந்தார். கடந்த பிப்ரவரி மாதம் இவருக்கு திருமண நிச்சயதார்த்தம் முடிந்து குவைத்துக்கு சென்றார். அடுத்த மாதம் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இந்த நிலையில் பாலாஜி நேற்று அதிகாலை குவைத்தில் இருந்து சென்னைக்கு சிறப்பு விமானத்தில் வந்தார். விமான நிலையத்தில் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு ஸ்ரீபெரும்புதூரை அடுத்த தண்டலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி மற்றும் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா தனிமைப்படுத்தல் முகாமில் தங்க வைக்கப்பட்டார்.

    சிறிது நேரத்தில் தான் தங்கி இருந்த முதல் மாடி கட்டிடத்தில் ‘லிப்ட்’ அமைப்பதற்காக கட்டுமான பணி நடந்து வரும் வழியாக கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
    திருப்போரூரில் நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் வாலிபரின் கை சிதறியது. மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.
    திருப்போரூர்:

    செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பேரூராட்சி எதிரே பயங்கர சத்தத்துடன் நாட்டு வெடிகுண்டு வெடித்தது. சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், திருப்போரூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் சாலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்தனர்.

    அதில் ஒருவருக்கு கை சிதறியது. மற்றொருவர் முகத்தில் படுகாயம் அடைந்தார். விசாரணையில் அவர்கள் செங்கல்பட்டு ராமபாளையம் பகுதியை சேர்ந்த விக்டர் மற்றும் அன்வர் என்பதும், செங்கல்பட்டில் இருந்து திருப்போரூர் வழியாக கேளம்பாக்கம் சென்றபோது மர்மநபர்கள் நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்ய முயற்சித்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

    படுகாயம் அடைந்த இருவரையும் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இது குறித்து போலீசார் மேலும் விசாரித்தபோது, விக்டர் மற்றும் அன்வர் இருவரும் குற்ற பின்னணி உள்ளவர்கள் என்பதும், இவர்கள் யாரையோ கொலை செய்வதற்காக டிபன் பாக்ஸ் வெடிகுண்டுகள் தயார் செய்து எடுத்துச்செல்லும் போது அதில் ஒரு வெடிகுண்டு தவறி வெடித்துள்ளதும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மேலும் 283 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 24,711 ஆக உயர்ந்துள்ளது.
    செங்கல்பட்டு:

    தமிழகத்தில் நேற்று 5 ஆயிரத்து 958 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 97 ஆயிரத்து 261 ஆக அதிகரித்துள்ளது.

    கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று ஒரே நாளில் 5 ஆயிரத்து 606 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 38 ஆயிரத்து 060 ஆக உயர்ந்துள்ளது.

    மற்ற மாவட்டங்களை விட சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று அதிகமாக உள்ளது.

    இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மேலும் 283 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 24,711 ஆக உயர்ந்துள்ளது.
    டாஸ்மாக் கடை மேற்பார்வையாளரை தாக்கி ரூ.2 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வண்டலூர்:

    செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் டாஸ்மாக் கடை மேற்பார்வையாளராக பணி புரிந்து வருபவர் சரவணன் (வயது 51), இவர் நேற்று முன்தினம் இரவு டாஸ்மாக் கடையில் வியாபாரம் முடிந்த பிறகு மது விற்பனை செய்த ரூ.2 லட்சத்து 15 ஆயிரத்து 860-ஐ பையில் போட்டு தனது மொபட்டில் உள்ள கொக்கியில் மாட்டி கொண்டு கொரோனா தொற்றுக்கு கிருமி நாசினி தெளிக்கும் கருணாமூர்த்தி என்பவருடன் வந்து கொண்டிருந்தார்.

    வண்டலூர் ஏரிக்கரை அருகே வரும் போது திடீரென மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் சரவணனை வழி மறித்து உருட்டுக்கட்டையால் தாக்கி அவர் வைத்திருந்த ரூ.2 லட்சத்து 15 ஆயிரத்து 860 -ஐ பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர்.

    இது குறித்து சரவணன் ஓட்டேரி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    கொரோனா சிகிச்சை முடிந்து வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நபரின் வீட்டு வாசலை அதிகாரிகள் இரும்பு தகடுகளால் அடைத்தனர்.
    தாம்பரம்:

    குரோம்பேட்டையில் கொரோனா சிகிச்சை முடிந்து வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நபரின் வீட்டு வாசலை அதிகாரிகள் இரும்பு தகடுகளால் அடைத்தனர். சமூக வலைதளங்களில் வீடியோ காட்சி பரவியதால் நகராட்சி அதிகாரிகள் தகரத்தை அகற்றினர்.

    குரோம்பேட்டை அஸ்தினாபுரம் புருஷோத்தமன் நகரில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்த ஒருவர் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்ட நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். அதன் பின்னர், அவர் 15 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்படுத்தி கொள்ள அறிவுறுத்தப்பட்டு அனுப்பப்பட்டார். இந்த நிலையில் அந்த குடியிருப்பு வளாகத்தின் ஒரு பகுதியை இரும்பு தகடுகள் அமைத்து தடுப்புகள் அமைக்க நகராட்சி அதிகாரிகள் அங்கு சென்றனர்.

    அப்போது அங்கு வசிக்கும் இதர குடியிருப்புவாசிகள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் செய்ததன் காரணமாக பாதிக்கப்பட்டவரின் வீட்டின் வாசலை மட்டும் அடைத்து சென்றார்கள்.

    அங்குள்ள ஊழியர்களிடம் தடுப்புகள் அமைக்க வேண்டாம் என்று குடியிருப்புவாசிகள் கோரிக்கை விடுத்தும், வீட்டில் உள்ளவர்கள் வெளியே வரமுடியாத வகையில் அடைத்து விட்டார்கள். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இதனால் நகராட்சி அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று, அந்த வீட்டில் தடுப்புகளால் அடைக்கப்பட்ட இரும்பு தகரத்தை உடனே அகற்றினர். கொரோனா சிகிச்சை பெற்ற அந்த வீட்டின் நபர் தனிமைப்படுத்தப்பட்டுள்ள காலம் முடிவதற்கு முன்பே, வெளியில் நடமாடுவதாக பொதுமக்கள் சார்பில் புகார் வந்ததால் வீட்டு வாசலை தகடு வைத்து அடைத்ததாகவும், அவர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வாங்கித்தர ஏற்பாடு செய்யப்பட்டு இருந்ததாகவும் நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
    செங்கல்பட்டு அருகே நெடுஞ்சாலையில் கார் தீப்பிடித்து எரிந்தது. இதனால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    செங்கல்பட்டு:

    சென்னை மதுரவாயல் பகுதியை சேர்ந்தவர் குமார். இவர் தனது மனைவியின் சகோதரி திருமணத்தில் கலந்துகொண்டுவிட்டு குடும்பத்துடன் உளுந்தூர்பேட்டையில் இருந்து நேற்று மாலை காரில் சென்னை திரும்பி வந்தார். செங்கல்பட்டு அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பழவேலி என்ற பகுதியில் வந்தபோது திடீரென காரின் முன் பகுதியில் இருந்து புகை வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், காரை சாலையோரமாக நிறுத்திவிட்டு குடும்பத்தினருடன் கீழே இறங்கிவிட்டார்.

    அதற்குள் கார் முழுவதும் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதுபற்றி தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள், காரில் எரிந்த தீயை அணைத்தனர். எனினும் கார் முற்றிலும் எரிந்து நாசமானது. உடனடியாக அனைவரும் காரில் இருந்து இறங்கி விட்டதால் குமார் உள்பட 6 பேரும் அதிஷ்டவசமாக உயிர்தப்பினர்.

    இந்த தீ விபத்து காரணமாக சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் சுமார் 2 கிலோமீட்டர் தொலைவுக்கு அணிவகுத்து நின்றன. இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
    கேளம்பாக்கம் அருகே வாலிபர் கொலை வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
    திருப்போரூர்:

    செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தை அடுத்த தையூர் பெரிய பிள்ளேரி துலுக்கானத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஹரிஷ் (வயது 21). கல்லூரி படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டதாக கூறப்படுகிறது. இவர் தனது நண்பர்கள் வெங்கடேசன், அஜித் ஆகியோருடன் ஒரே மோட்டார் சைக்கிளில் சென்று பானிபூரி வாங்கிக்கொண்டு பெரிய பிள்ளேரி ஏரிக்கரையில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தார். அப்போது ஆட்டோவில் வந்த மர்மநபர்கள் ஹரிசை சரமாரியாக வெட்டி கொன்றனர்.

    இது குறித்து செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன், மாமல்லபுரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    கொலையாளிகளை பிடிக்க கேளம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. கஞ்சா விற்கும் மோதலில் ஏற்பட்ட தகராறில் ஹரிஷ் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் சம்பவம் தொடர்பாக கேளம்பாக்கம் ஜோதி நகரை சேர்ந்த பச்சை என்ற தமிழ்மாறன் (21), சக்தி (20), தீபக் (20), சாகுல் அமீது (20), ஆட்டோ வினோத் (20) ஆகியோரை கைது செய்தனர். பின்னர் அவர்களை செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
    காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையை அடுத்த மணிமங்கலம் ஊராட்சியில் கொரோனா தொற்று தடுப்பு முகாம் நடைபெற்றது.
    படப்பை:

    காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையை அடுத்த மணிமங்கலம் ஊராட்சியில் கொரோனா தொற்று பரவுவதை தடுக்கும் நடவடிக்கையாக குன்றத்தூர் ஒனறிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜசேகரன், அப்துல் நைம் பாஷா ஆகியோர் ஏற்பாட்டின் பேரில் கொரோனா தொற்று தடுப்பு முகாம் நடந்தது.

    முகாமில் பொதுமக்களுக்கு உடல் வெப்பநிலை, சளி மாதிரி பரிசோதனை செய்யப்பட்டது. கபசுரகுடிநீரும் வழங்கப்பட்டது. இதில் மணிமங்கலம் ஊராட்சி செயலாளர் கோபால் மற்றும் சுகாதாரத்துறையினர் கலந்து கொண்டனர்.
    தாம்பரத்தில் பட்டப்பகலில்வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசிராணை நடத்தி வருகின்றனர்.
    தாம்பரம்:

    சென்னை தாம்பரம் அடுத்த முடிச்சூர் லட்சுமி நகர் 2-வது தெருவில் வசிப்பவர் சீனிவாசன். பட்டப்பகலில் இவரது வீட்டின் பூட்டை 2 பேர் பூட்டை உடைக்கும் சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்ததால் தப்பி ஓடிவிட்டனர். அவர்கள் கொண்டு வந்த இருசக்கர வாகனத்தை அங்கேயே விட்டுச்சென்றனர்.

    இதுபற்றி தகவல் அறிந்துவந்த பீர்க்கன்காரணை போலீசார், அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் மர்மநபர் ஒருவர் பட்டப்பகலில் சீனவாசன் வீட்டின் பூட்டை சிறிய கடப்பாரையால் உடைக்க முயற்சி செய்கிறார். நீண்டநேரம் முயற்சி செய்தும் பூட்டை உடைக்க முடியாமல் திணறும் அவர், பொதுமக்கள் சத்தம்கேட்டு அங்கிருந்து தப்பிச்சென்று விடுவது தெரிந்தது.

    இதற்கிடையில் திருடர்கள் விட்டுச்சென்ற இருசக்கர வாகனத்தை எடுக்க வந்த அவர்களது நண்பரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அவர் அளித்த தகவலின்பேரில் அம்பத்தூரை சேர்ந்த பழைய குற்றவாளி கலைச்செல்வன்(வயது 29), அவரது கூட்டாளியான எண்ணூரைச் சேர்ந்த பாபி என்ற சஞ்சய்(21) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதில் கலைச்செல்வன், கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பாக திருட்டு வழக்கில் சிறைக்கு சென்று வந்தது தெரிந்தது. 
    செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று 338 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23,483 ஆக உள்ளது.
    செங்கல்பட்டு:

    தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 3,73,410 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 3,13,280 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 6,420-ஆக அதிகரித்துள்ளது.
     
    அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1,24,071 ஆக அதிகரித்துள்ளது.
     
    இந்நிலையில் கொரோனா பாதிப்பில் சென்னைக்கு அடுத்தபடியாக உள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏற்கனவே 23,145 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று காலை நிலவரப்படி மேலும் 338 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23,483 ஆக உயர்ந்துள்ளது.

    இதுவரை 20,136 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 372 பேர் உயிரிழந்துள்ளனர்.
    செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 430 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாயினர். கொரோனா தொற்று வேகமெடுக்கும் நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 23 ஆயிரத்தை நெருங்குகிறது.
    வண்டலூர்:

    செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட ஊரப்பாக்கம், ஓட்டேரி, மண்ணிவாக்கம், கூடுவாஞ்சேரி ஆகிய பகுதியில் வசிக்கும் 36 பேர், ஒத்திவாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட ஆலப்பாக்கம் எஸ்.எஸ்.எம்.நகர் பகுதியில் வசிக்கும் 70 வயது மூதாட்டி, 51 வயது ஆண், ரத்தினமங்கலம், கண்டிகை பகுதிகை சேர்ந்த 7 பேர், மறைமலைநகர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட வடமேல்பாக்கம் கிராமத்தை சேர்ந்த 18 வயது வாலிபர், கீழக்கரணை பஜனை கோவில் தெருவை சேர்ந்த 17 வயது சிறுவன் உள்பட 2 பேர் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களுடன் செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 430 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 22 ஆயிரத்து 737 ஆக உயர்ந்து உள்ளது. இவர்களில் 19 ஆயிரத்து 743 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் செங்கல்பட்டு மாவட்டத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 366 ஆக உயர்ந்தது. 2 ஆயிரத்து 628 பேர் தொடர்ந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 220 பேர் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15 ஆயிரத்து 31 ஆக உள்ளது. இவர்களில் 12 ஆயிரத்து 413 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.

    நேற்று 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததைத்தொடர்ந்து, மாவட்டத்தில் பலியானோரின் எண்ணிக்கை 200 ஆக உயர்ந்துள்ளது. 2 ஆயிரத்து 418 பேர் ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை ஊராட்சி பகுதியை சேர்ந்த 48 வயது ஆண், மாடம்பாக்கம் பகுதியை சேர்ந்த 51 வயது ஆண், 27 வயது வாலிபர், ஒரகடம் பகுதியை சேர்ந்த 23, 21, 23 மற்றும் 25, வயதுடைய வாலிபர்கள், வரதராஜபுரம் ஊராட்சி பகுதியை சேர்ந்த 37 வயதுடைய ஆண் ஆகியோருக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

    திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 369 பேர் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21 ஆயிரத்து 756 ஆக உள்ளது. இவர்களில் 17 ஆயிரத்து 467 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.

    நேற்று 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால், மாவட்டத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 366 ஆக உயர்ந்துள்ளது. 3 ஆயிரத்து 923 பேர் ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.


    ×