என் மலர்
செங்கல்பட்டு
- நெல்லிக்குப்பம் சாலை காமராஜபுரத்தில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது.
- கூடுவாஞ்சேரி நகர மன்ற தலைவர் எம்.கே.டி. கார்த்திக் தண்டபாணி உடன் இருந்தார்.
வண்டலூர்:
நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சி, நந்திவரம் நெல்லிக்குப்பம் சாலை காமராஜபுரத்தில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. நேற்று சென்னையில் இருந்து செங்கல்பட்டுக்கு பயணம் மெற்கொண்ட அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எந்தவித முன் அறிவிப்பும் இன்றி திடீரென காமராஜபுரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு வந்தார்.
அப்போது மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை குறித்து கேட்டறிந்து, உணவின் தரத்தை பரிசோதித்தார். அப்போது கூடுவாஞ்சேரி நகர மன்ற தலைவர் எம்.கே.டி. கார்த்திக் தண்டபாணி உடன் இருந்தார்.
- முற்றிலும் இலவசமாக மருத்துவ வசதியை ஏற்படுத்த அரசு முன்வர வேண்டும்.
- குறைந்த விலையில் உணவு சாப்பிடும் வகையில் அம்மா உணவகம் திறந்தால் வசதியாக இருக்கும்.
வண்டலூர்:
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் கட்டப்பட்ட புதிய பஸ்நிலையம் கடந்த சில நாட்களுக்கு முன்பு பயன்பாட்டுக்கு வந்தது. பயணிகளின் தேவைக்கு ஏற்ப கூடுதல் வசதிகள் படிப்படியாக செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் கிளாம்பாக்கம் பஸ்நிலையத்தில் பயணிகளின் அவசர சிகிச்சைக்கு நிரந்தரமாக 108 ஆம்புலன்ஸ் சேவை நேற்று முதல் கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்கு பயணிகள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.
இதுகுறித்து பயணிகள் கூறும்போது, புதிய பஸ் நிலையத்தில் இலவச தனியார் மருத்துவ மையம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் மருத்துவர் ஆலோசனை, மட்டுமே இலவசமாக வழங்கப்படும் என்றும், மற்ற அனைத்துக்கும் கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. எனவே முற்றிலும் இலவசமாக மருத்துவ வசதியை ஏற்படுத்த அரசு முன்வர வேண்டும். அல்லது, அரசு மருத்துவமனை ஒன்றை இங்கு அமைக்க வேண்டும்.
இதேபோல் ஏழை, எளியோர் குறைந்த விலையில் உணவு சாப்பிடும் வகையில் அம்மா உணவகம் திறந்தால் வசதியாக இருக்கும் என்றனர்.
- புலிக்குகை உள்ளிட்ட கலைச் சிற்பங்களை, மத்திய தொல்லியல்துறை பாதுகாத்து பராமரித்து வருகிறது.
- புத்தாண்டை முன்னிட்டு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்தது
மாமல்லபுரம்:
மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களான அர்ச்சுனன்தபசு, கடற்கரை கோவில், ஐந்துரதம், வெண்ணை உருண்டை பாறை, புலிக்குகை உள்ளிட்ட கலைச் சிற்பங்களை, மத்திய தொல்லியல்துறை பாதுகாத்து பராமரித்து வருகிறது.இதை அருகில் சென்று தொட்டு பார்த்து ரசிப்பதற்கு வெளிநாட்டு பயணிகளுக்கு ரூ.600, இந்தியருக்கு ரூ.40 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கடந்த வாரத்தில் பள்ளிக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை மற்றும் புத்தாண்டை முன்னிட்டு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்தது. இதில் கடந்த ஒருவாரத்தில் சுற்றுலா பயணிகளின் வருகையால் தொல்லியல் துறைக்கு ரூ.8லட்சம் வரை வருவாய் கிடைத்து இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
- பேருந்து முனையத்தில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் அரசு பேருந்துகள் புறப்பட்டு செல்கின்றன.
- பேருந்து முனையத்தில் பொதுமக்களுக்கான வசதிகள் குறைவாக உள்ளதாக புகார் எழுந்தது.
கிளாம்பாக்கம்:
கிளாம்பாக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய பேருந்து முனையத்தில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் அரசு பேருந்துகள் புறப்பட்டு செல்கின்றன. இதனால் பொதுமக்கள் இவ்வழித்தடத்தில் வந்து சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர்.
இந்நிலையில் பேருந்து முனையத்தில் பொதுமக்களுக்கான வசதிகள் குறைவாக உள்ளதாக புகார் எழுந்தது. இதுகுறித்து அமைச்சர் சேகர்பாபு இன்று கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
வெளியூர்களில் இருந்து வரும் பயணிகளுக்கு போதுமான மாநகர பேருந்துகள் இயக்கப்படுவது குறித்தும் பேருந்து முனையத்தில் மேற்கொள்ள உள்ள பணிகள் குறித்தும் அதிகாரிகளுடன் அமைச்சர் சேகர்பாபு ஆலோசனை மேற்கொண்டார்.
- இந்த ஆண்டின் இறுதிக்குள் பணிகளை நிறைவு செய்ய ரெயில்வே வாரியத்திற்கு சிஎம்டிஏ கோரிக்கை விடுத்துள்ளது.
- அடுத்தடுத்து ஆகும் செலவை கணக்கில் கொண்டு மற்ற தொகைகள் ஒதுக்கீடு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கிளாம்பாக்கம்:
வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள பேருந்து முனையத்தை பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். கிளாம்பாக்கத்தில் இருந்து கோயம்பேடு, தாம்பரம், கிண்டி பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல வசதியாக மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இதையடுத்து கிளாம்பாக்கத்தில் பொதுமக்களின் வசதிக்காக ரெயில் நிலையம் அமைக்கப்படும் என கூறப்பட்ட நிலையில் அதற்கான பணிகள் தொடங்கியுள்ளது.
முதற்கட்டமாக கிளாம்பாக்கத்தில் புதிய ரெயில் நிலையம் அமைக்க 20 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து ரெயில்வே வாரியத்திற்கு சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் வழங்கியுள்ளது. இந்த ஆண்டின் இறுதிக்குள் பணிகளை நிறைவு செய்ய ரெயில்வே வாரியத்திற்கு சிஎம்டிஏ கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும், அடுத்தடுத்து ஆகும் செலவை கணக்கில் கொண்டு மற்ற தொகைகள் ஒதுக்கீடு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஓராண்டுக்குள் பணிகளை நிறைவு செய்யும் வகையில் இந்த வாரத்தில் ரெயில்வே வாரியம் டெண்டர் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வழக்கமாக ரெயில்வே திட்டங்களுக்கு ரெயில்வே துறை நிதி ஒதுக்கும் நிலையில், தமிழ்நாட்டிற்கான தேவை என்பதால் சிஎம்டிஏ நிதி ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
- கிளாம்பாக்கத்தில் இருந்து கோயம்பேடு, தாம்பரம், கிண்டி பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல வசதியாக மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
- போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுடன் கூடுவாஞ்சேரி போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
கிளாம்பாக்கம்:
வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில் ரூ.400 கோடி செலவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பேருந்து முனையத்தை பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். தென்மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய பேருந்துகள் அனைத்தும் கிளாம்பாக்கத்தில் இருந்து புறப்படுகிறது. இதையடுத்து கிளாம்பாக்கத்தில் இருந்து கோயம்பேடு, தாம்பரம், கிண்டி பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல வசதியாக மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து புறப்படும் பேருந்துகள் அனைத்தும் சர்வீஸ் சாலை வழியாக சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செல்கிறது. இதனால் சர்வீஸ் சாலையை பயன்படுத்தும் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில், கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து வெளியேறும் பேருந்துகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பேருந்துகள் செல்வதால் சர்வீஸ் சாலையை பயன்படுத்த முடியவில்லை எனவும் சிரமம் ஏற்படுவதாகவும் பொதுக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுடன் கூடுவாஞ்சேரி போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
- 'தோழி' என்ற பெயரிலான பணிபுரியும் மகளிருக்கான விடுதி தமிழ்நாட்டின் 9 இடங்களில் செயல்பட்டுவருகிறது.
- தாம்பரத்தில் திறந்து வைக்க உள்ளது 10-வது விடுதியாகும்.
தாம்பரம்:
பணியாற்றும் மகளிரின் வசதியை கருத்தில் கொண்டு மாநிலம் முழுவதும் தோழி விடுதிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், சென்னை அடுத்த தாம்பரத்தில் ரூ.18 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள 'தோழி' விடுதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 4-ந்தேதி திறந்து வைக்க உள்ளார்.
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மூலம் இயங்கி வரும் 'தோழி' என்ற பெயரிலான பணிபுரியும் மகளிருக்கான விடுதி தமிழ்நாட்டின் 9 இடங்களில் செயல்பட்டுவருகிறது. தாம்பரத்தில் திறந்து வைக்க உள்ளது 10-வது விடுதியாகும்.
- குண்டர் சட்டத்தில் சிறையில் இருக்கும் ரவுடி சிலம்பரசன் தனது கூட்டாளிகள் மூலம் கொலை திட்டத்தை அரங்கேற்றி இருப்பது போலீசார் விசாரணையில் தெரிந்தது.
- தப்பி ஓட முயன்ற போது அவர்கள் வழுக்கி விழுந்ததில் கை, காலில் முறிவு ஏற்பட்டது.
வண்டலூர்:
வண்டலூரை அடுத்த மண்ணிவாக்கம் பகுதியில் வசித்து வந்தவர் வினோத் (வயது45). இவர் அதே பகுதியில் 2 மெடிக்கல் கடைகளை நடத்தி வந்தார். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு வினோத்தை மர்ம கும்பல் சரமாரியா வெட்டி கொலை செய்து தப்பி சென்றுவிட்டனர். இதுகுறித்து ஓட்டேரி போலீசார் நடத்திய விசாரணையில் ஓட்டேரி பகுதியைச் சேர்ந்த ரவுடியான சிலம்பு என்ற சிலம்பரசன் என்பவர் மாமூல் கேட்டு மிரட்டிய தகராறில் போலீசில் புகார் செய்ததால் வினோத் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரிந்தது. தற்போது குண்டர் சட்டத்தில் சிறையில் இருக்கும் ரவுடி சிலம்பரசன் தனது கூட்டாளிகள் மூலம் கொலை திட்டத்தை அரங்கேற்றி இருப்பது போலீசார் விசாரணையில் தெரிந்தது.
இந்நிலையில் மண்ணிவாக்கம் பகுதியில் பதுங்கி இருந்த கொலையாளிகளான சிலம்பரசனின் உறவினர் சூர்யா, திருவேற்காடு பகுதியை சேர்ந்த மணிகண்டன், புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த சரத் ஆகியோரை போலீசார் மடக்கி பிடித்தனர்.
அப்போது தப்பி ஓட முயன்ற போது அவர்கள் வழுக்கி விழுந்ததில் கை, காலில் முறிவு ஏற்பட்டது. இதையடுத்து கைதான 3 பேருக்கும் கை, காலில் மாவு கட்டு போடப்பட்டு உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பும் ரவுடி சிலம்பரசன் மீது கொடுத்த புகாரை திரும்ப பெற கோரி ரவுடி கும்பல் வினோத்தை மிரட்டி உள்ளது. இதன் தொடர்ச்சியாக வினோத் கொலை செய்யப்பட்டு உள்ளார்.
வினோத்குமாரை, ரவுடி சிலம்பரசன் மிரட்டியதாக ஆரம்பத்தில் போலீஸ்நிலையத்தில் புகார் கொடுத்த போதே போலீசார் ரவுடி கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுத்து இருந்தால் வினோத் கொலையை தடுத்து நிறுத்தி இருக்கலாம் என்று வியாபாரிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.
- இரவு சிறிய முதலை குட்டி ஒன்று சாலையில் நடந்து சென்றது.
- பெருங்களத்தூரில் காணப்பட்ட 5-வது முதலை இது என்பது குறிப்பிடத்தக்கது.
தாம்பரம்:
பெருங்களத்தூர் சாலையில் நேற்று இரவு சிறிய முதலை குட்டி ஒன்று சாலையில் நடந்து சென்றது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
வனத்துறை அதிகாரிகள் விரைந்து வந்து இரவு 10 மணியளவில் சாலை ஓரத்தில் முட்புதரில் பதுங்கி இருந்த சுமார் 8 ஒன்றரை அடி நீள முதலை குட்டியை லாவகமாக பிடித்தனர். பின்னர் அதனை கிண்டி பூங்காவிற்கு கொண்டு சென்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு மழை வெள்ளத்தின் போது பெருங்களத்தூர் அடுத்த நெடுங்குன்றம் சாலையில் சுமார் 10 அடி நீளமுள்ள பெரிய முதலை சாலையில் நடந்து சென்றது. பின்னர் ஆலப்பாக்கத்தில் சுமார் அடிநீளமுள்ள பெரிய முதலை பிடிபட்டது. தற்போது பெருங்களத்தூரில முதலை குட்டி சிக்கி உள்ளது. பெருங்களத்தூரில் காணப்பட்ட 5-வது முதலை இது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, பிடிபட்ட முதலை குட்டி சதுப்பு நிலப் பகுதிகளில் காணப்படும் மக்கர் இனத்தைச் சேர்ந்தது. பெருங்களத்தூரில் காணப்பட்ட 5-வது முதலை இதுவாகும். நெடுங்குன்றம் ஏரி, ஆலப்பாக்கம் ஏரிகளில் முதலைகள் உள்ளன என்றார்.
- கொளவாய் ஏரியை ஆழப்படுத்தி கரைகளை சீரமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
- வருகிற 2025-ம் ஆண்டின் மத்தியில் கொளவாய் ஏரி சுற்றுலா தலமாக காட்சி அளிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு ரெயில் நிலையம் அருகே கொளவாய் ஏரி உள்ளது. இந்த ஏரி 2,179 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து கடல்போல் காட்சி அளிக்கிறது. இந்த ஏரியில் எப்போதும் தண்ணீர் நிரம்பி இருக்கும்.
இந்த நிலையில் கொளவாய் ஏரியை மேலும் சீரமைத்து சுற்றுலாத் தலமாக மாற்ற நீர்வளத்துறையினர் திட்டமிட்டு உள்ளனர்.
ஏரியின் நடுவில் செயற்கை தீவு, படகு சவாரி, பூங்கா, உணவு விடுதிகள் மற்றும் பொழுது போக்கு அம்சத்துடன் சிறந்த சுற்றுலா தலமாக மாற்றும் பணி ரூ.60 கோடி மதிப்பில் தொடங்க இருக்கிறது.
கொளவாய் ஏரி சுற்றுலா தலமாக மாறும்போது சென்னை புறநகர் பகுதியில் உள்ளவர்களுக்கு சிறந்த பொழுது போக்கு மையமாக அது மாறும்.
ஏற்கனவே கொளவாய் ஏரியை ஆழப்படுத்தி கரைகளை சீரமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதன்பின்னர் சுற்றுலா தலமாக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று தெரிகிறது. வருகிற 2025-ம் ஆண்டின் மத்தியில் கொளவாய் ஏரி சுற்றுலா தலமாக காட்சி அளிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
இதுகுறித்து அதிகாரிகளில் ஒருவர் கூறும்போது, கொளவாய் ஏரியை ஆழப்படுத்தி கரைகளை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.
ஏரியின் கொள்ளளவை 476 மில்லியன் கன அடியில் இருந்து 650 மில்லியன் கன அடியாக அதிகரிக்க உள்ளோம். மேலும் கொளவாய் ஏரியை சுற்றுலா தலமாக்கும் திட்டம் உள்ளது. இங்கு படகு சவாரி பொழுது போக்கு மையம் அமையும் என்றார்.
- ஆத்தூர் சுங்கச்சாவடியில் சுங்க கட்டணம் வசூல் 90 சதவீதம் பாஸ்டேக் மூலம் வசூலிக்கப்படுகிறது.
- ஏராளமான வாகனங்கள் சென்னை நோக்கி வந்ததால் சுங்கச்சாவடியில் நீண்ட நேரம் காத்திருந்து சென்றன.
மதுராந்தகம்:
பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை மற்றும் புத்தாண்டு விடுமுறையை தொடர்ந்து விடுமுறை நாட்கள் வந்ததால் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் வசித்த ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு சென்று இருந்தனர்.
இந்த நிலையில் விடுமுறை முடிந்து இன்று முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளன. இதையடுத்து தென்மாவட்டத்தை சேர்ந்தவர்கள் நேற்று மாலை முதல் சென்னைக்கு திரும்பி வரத்தொடங்கினர். கார் மற்றும் வாகனங்களில் ஏராளமானோர் ஒரே நாளில் சென்னை நோக்கி வந்ததால் நேற்று மாலை முதல் திருச்சி-சென்னை நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டத்தின் தொடக்க எல்லையான திருச்சி-சென்னை நெடுஞ்சாலையின் ஆத்தூர் சுங்கச்சாவடியில் சென்னை நோக்கி வரும் வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சுங்கச்சாவடியில் சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்று மெதுவாக சென்றன.
ஆத்தூர் சுங்கச்சாவடியில் சுங்க கட்டணம் வசூல் 90 சதவீதம் பாஸ்டேக் மூலம் வசூலிக்கப்படுகிறது. பாஸ்டாக்கை ஸ்கேன் செய்யும் எந்திரம் வேகமாக செயல்படாததால் மேலும் கூடுதல் காலதாமதம் ஏற்பட்டது. கூடுதலாக இரண்டு சுங்க கட்டணம் வசூல் மையங்கள் திறந்தும் வாகனங்கள் வருகை அதிகரித்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நேற்று மாலை தொடங்கிய போக்குவரத்து நெரிசல் இன்று காலை வரை நீடித்தது.
இதேபோல் சென்னையின் நுழைவு வாயிலான பரனூர் சுங்கச்சாவடியில் நேற்று மாலை 4 மணி முதல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சுமார் 30-க்கும் மேற்பட்ட போலீசார் சுங்கச்சாவடியில் போக்குவரத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.
ஏராளமான வாகனங்கள் சென்னை நோக்கி வந்ததால் சுங்கச்சாவடியில் நீண்ட நேரம் காத்திருந்து சென்றன. இதனால் அப்பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டது. இன்று அதிகாலை வரை வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி சென்றன. பரனூர் சுங்கச்சாவடி பகுதியில் 10 மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து போலீசார் பணியில் தொடர்ந்து ஈடுபட்டனர்.
தென்மாவட்டங்களில் இருந்து வரும் விரைவு பஸ்கள் கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையத்திற்கு சென்றதால் கோயம்பேடு வரும் பயணிகள் சிரமம் அடைந்தனர். அவர்கள் அங்கிருந்து உடமைகளுடன் மாநகர பஸ் நிலையத்திற்கு நீண்ட தூரம் நடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இன்று காலை வெளியூர்களில் இருந்து வந்த பயணிகளால் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. எனினும் அங்கிருந்து செல்ல போதிய வசதிகள் இல்லை என்று பயணிகள் குற்றம்சாட்டினர்.
- ஜி.எஸ்.டி. சாலையில் ஆட்டோக்கள், கார்கள் நிறுத்த இடம் ஒதுக்கப்பட வேண்டும்.
- நடைமேம்பாலம் அமைக்கும் பணி விரைவில் தொடங்க உள்ளது.
வண்டலூர்:
சென்னை நகருக்குள் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய பஸ் நிலையம் திறக்கப்பட்டு உள்ளது.
அதிநவீன வசதியுடன் அழகிய வடிவத்தில் கட்டப்பட்டு உள்ள இந்த பஸ் நிலையத்தில் இருந்து தென்மாவட்டத்துக்கு செல்லும் அனைத்து பஸ்களும் இயக்கப்படுகிறது.
பஸ் நிலையத்தின் உள்ளே நுழைய மாநகர பஸ்கள் மற்றும் வெளியூர்களில் இருந்து வரும் விரைவு பஸ்களுக்கு தனித்தனி வாயில்கள் உள்ளன. மேலும் இந்த 2 பஸ்களும் நிறுத்தும் இடங்களுக்கு இடையேயான தூரம் அதிகம் உள்ளதால் வெளியூர்களில் இருந்து அதிக உடைமைகளை கொண்டு வரும் பயணிகள் மாநகர பஸ்கள் இருக்கும் இடத்திற்கு செல்ல கடும் சிரமம் அடைந்து வருகிறார்கள். அவர்கள் குடும்பத்தினருடன் எங்கே செல்வது என்று தெரியாமல் கஷ்டப்பட்டு நடந்து செல்லும் நிலை உள்ளது.
பஸ் நிலையத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள் எளிதில் செல்லும் வகையில் பேட்டரி கார் வசதி உள்ள நிலையில் அவை அதிகாலை நேரத்தில் பயன்பாட்டில் இல்லை. இதனால் பயணிகள் அவதி அடையும் நிலை உள்ளது.
மேலும் சில பயணிகள் விரைவு பஸ்களில் ஏற்கனவே கோயம்பேடு வரை டிக்கெட் முன்பதிவு செய்து உள்ள நிலையில் கிளாம்பாக்கத்தில் இறக்கி விடப்படுவதால் அவர்கள் டிரைவர், கண்டக்டர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இன்று காலையில் 2-வது நாளாக சில பயணிகள் கண்டக்டரிடம் இதுபற்றி கேட்டு கேள்வி எழுப்பினர்.
இதேபோல் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இறங்கிய பயணிகள் ஓட்டேரி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளுக்கு செல்ல எப்போதும் பரபரப்பாக காணப்படும் ஜி.எஸ்.டி. சாலையை ஆபத்தான முறையில் கடந்து செல்கின்றனர். இதனால் விபத்து அபாயம் ஏற்பட்டு உள்ளது. எனவே இந்த பகுதியில் நடை மேம்பாலம் உடனடியாக அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள், பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
மேலும் ஜி.எஸ்.டி. சாலையில் ஆட்டோக்கள், கார்கள் நிறுத்த இடம் ஒதுக்கப்பட வேண்டும். இல்லையெனில், பஸ் நிலையம் முழுமையாக செயல்படும்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படும் நிலை ஏற்படும்.
இதேபோல் சர்வீஸ் சாலையில் இருந்து வரும் வாகனங்கள் மற்றும் வண்டலூர் மேம்பாலத்தில் இருந்து இறங்கும் வாகனங்கள் ஒரே நேரத்தில் பஸ் நிலையத்திற்குள் நுழைவதால் வரும் நாட்களில் அதிக அளவில் போக்குவரத்து ஸ்தம்பிக்கும் நிலை ஏற்படும். இதில் தேவையான நடவடிக்கை எடுக்காவிட்டால் அந்த இடம் மற்றொரு பெருங்களத்தூர் சந்திப்பாக மாறிவிடும் என்று பயணி ஒருவர் தெரிவித்தார்.
இதுகுறித்து போக்குவரத்து அதிகாரி ஒருவர் கூறும்போது, கோயம்பேடு வரை செல்ல கவுண்டரில் நேரடியாக டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கு கூடுதல் பணம் பஸ்சிலேயே கண்ட க்டர் மூலம் திரும்ப வழங்கப்படும். 'ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்களுக்கு பணத்தைத் திரும்பப்பெற சில நாட்கள் ஆகும் என்றார்.
பயணிகள் கூறும்போது, கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையம் விமான நிலையம் போன்று கட்டப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டின் கலாச்சாரத்தை சித்தரிக்கும் ஓவியங்கள் அனைவரையும் கவர்ந்து உள்ளது. இங்குள்ள ஒரு சில உணவகங்களைத் தவிர பெரும்பாலான கடைகள் இன்னும் திறக்கப்படவில்லை.
இதனால் உணவு மற்றும் அடிப்படை தேவைகளுக்கு தவிக்கும் நிலை உள்ளது. குடிநீர் குழாய்களிலும் தண்ணீர் வரவில்லை. புதிய பஸ் நிலையம் இன்னும் முழுமையாக செயல்பாட்டுக்கு வராத நிலையில் தொடரும் குழப்பத்தால் பொதுமக்களும், பயணிகளும் தவித்து வருகிறார்கள். பஸ் நிலையத்தில் இறங்குபவர்கள் விரைந்து மாநகர பஸ்களுக்கு செல்ல ஏற்பாடு செய்யவேண்டும். இல்லையெனில் வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் மிகவும் கஷ்டப்படுவார்கள் என்றனர்.
சி.எம்.டி.ஏ.அதிகாரி ஒருவர் கூறும்போது, பஸ் நிலையம் அருகே உள்ள சர்வீஸ் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு பஸ்கள் எளிதில் சென்று வர ஏற்பாடு செய்யப்படும். ஜி.எஸ்.டி. சாலையில் பயணிகள் சாலையைக் கடக்கவும், பஸ்நிலையத்திற்கு பயணிகள் பாதுகாப்பாக வந்து சேரவும் அப்பகுதியில் போக்குவரத்து காவலர் நியமிக்கப்படுவார். அப்பகுதியில் நடைமேம்பாலம் அமைக்கும் பணி விரைவில் தொடங்க உள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகளும் விரைவில் நடைமுறைக்கு வரும் என்றார்.






