என் மலர்tooltip icon

    அரியலூர்

    • கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்ப பெறும் முகாமை கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா ஆய்வு செய்தார்.
    • அலுவலர்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற அறிவுறுத்தல்

    அரியலூர், 

    அரியலூரில் முதல் கட்டமாக தொடங்கிய கலைஞர் மகளிர் உரிமைத் திட்டவிண்ணப்ப பெறும் முகாமை ஆட்சியர் ஜா.ஆனிமேரி ஸ்வர்ணா ஆய்வு செய்தார்.வாலாஜாநகரம் ஊராட்சி அலுவலகம், அரசு கலைக் கல்லூரி, ஆர்.சி.நிர்மலா காந்திநடுநிலைப்பள்ளி ஆகிய மையங்களில் நடைபெற்ற கலைஞர் மகளிர் உரிமைத் திட்டவிண்ணப்ப பெறும் முகாமை ஆய்வு செய்த அவர், அங்கு அடிப்படை வசதிகள்,பொதுமக்கள் மற்றும் அலுவலர்களுக்கான இருக்கை வசதிகள், கைரேகை பதிவுசெய்யும் கருவிகள், டோக்கன் விநியோகம், மின்னணு சாதனங்களின் செயல்பாடுஉள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்து கேட்டறிந்தார். மேலும், மகளிரிடமிருந்துவிண்ணப்பங்களை உடனுக்குடன் பெற்று அவர்களை தாமதமின்றி வீடுகளுக்குஅனுப்பி வைக்கவும் தேவையான வசதிகளை ஏற்படுத்தவும் சம்மந்தப்பட்டஅலுவலர்களுக்கு அறிவுறுத்தியதுடன் மாவட்டத்தில் தகுதியுள்ள அனைத்துபயனாளிகளுக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை சென்றடையும் வகையில் அரசுஅலுவலர்கள் ஒருங்கிணைந்து சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்றார். இந்தஆய்வில் அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன், அரியலூர்வட்டாட்சியர் கண்ணன், அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • வங்கி முன்பு வாடிக்கையாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்
    • நகை கடன் தள்ளுபடி கேட்டு சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் தாலுகா கொடுகூர் கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி உள்ளது. இந்த வங்கியில் கொடுகூர் கிராமத்தை சேர்ந்த ஏராளமான மக்கள் நகைக்கடன் பெற்றிருந்தனர்.திமுக தேர்தல் சமயத்தில் வாக்குறுதியாக அளித்த ஐந்து சவரன் நகை கடன் தள்ளுபடி பெறுவதற்கான பட்டியல் தயாரிக்கப்பட்டு அவர்களில் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் நகைகள் திருப்பி கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மீதமுள்ளவர்கள் பட்டியலில் பெயர் வெளியிடப்பட்டும் நீண்ட நாட்களாக நகை திரும்ப கிடைக்காத நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள் விரைவில் அவர்களது நகைகள் திரும்ப கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.தொடர்ந்து வங்கிக்கு நகையை பெறுவதற்காக அலையாய் அலைந்த மக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.சம்பவம் குறித்து தகவல் அறிந்த குவாகம் போலீசார் போராட்டம் நடத்தியவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்தினர்.இதனை அடுத்து அங்கிருந்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன்பு முற்றுகை போராட்டத்தில் போராட்டக்காரர்கள் ஈடுபட்டனர்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து வங்கி அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி விரைவில் உரிய நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்ததன் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    • மரத்தில் இருந்து விழுந்த வாலிபர் பலியானார்
    • மாங்காய் பறித்து கொண்டிருந்த போது விபரீத முடிவு

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள காரைக்குறிச்சி கீழத்தெருவை சேர்ந்தவர் கேசவன். இவருடைய மகன் இளையராஜா (வயது 28). இவர் கடந்த மே மாதம் 19-ந் தேதி மாலை தனது வீட்டின் அருகே இருந்த மரத்தில் ஏறி மாங்காய் பறித்து கொண்டிருந்தார். அப்போது மரத்தின் கிளை முறிந்து கீழே விழுந்ததில் பலத்த காயம் அடைந்தார். இதையடுத்து அவரது அண்ணன் கலியமூர்த்தி, இளையராஜாவை மீட்டு திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி இளையராஜா நேற்று பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து தா.பழூர் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • வெங்கனூர் கிராமத்து விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்
    • குடும்ப தகராறில் விபரீத முடிவு

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்குட்பட்ட வெங்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 40), விவசாயி. இவரது முதல் மனைவி இறந்ததால் அதே ஊரை சேர்ந்த பெருமாள் என்பவரது மகள் சசிகலாவை கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இந்தநிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனவேதனை அடைந்த பழனிச்சாமி நேற்று முன்தினம் விஷம் குடித்துவிட்டு வாந்தி எடுத்துள்ளார். இதையடுத்து அருகே இருந்தவர்கள் அவரை மீட்டு தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை ெசய்த டாக்டர்கள் பழனிச்சாமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து வெங்கனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அகரம்சீகூர் அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி பலி
    • மங்களமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அகரம்சீகூர்,

    பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூர் அடுத்துள்ள முருக்கன்குடி கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் (வயது 45), விவசாயி. இவர் தனது உறவினர்களுடன் வயலில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள மின் மோட்டாரை ஆன் செய்தபோது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். இதையடுத்து, அவரது உறவினர்கள் அவரை மீட்டு அருகே உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் சரவணன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து மங்களமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • திமுக ஊராட்சி செயலாளர் உள்பட 5 பேருக்கு போலீஸ் வலைவீச்சு
    • போலீஸ் நிலையம் முன்பு தலித் இளைஞரை காலில் விழ வைத்த விவகாரம்

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டம் வாளரக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் அன்பரசன். பாஜக ஒன்றிய செயலாளராக இருக்கும் இவர் தலித் சமூகத்தை சேர்ந்தவர். இவரது மகளுக்கு கடந்த 8-ம் தேதி மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது. இதற்கு அங்குள்ள ஆதிச்சன நல்லூர் கிராமத்தில் இருந்து தாய்மாமன் சீர்வரிசை எடுத்து வரப்பட்டது. அப்போது அன்பரசன் தரப்பினர் அங்குள்ள ஒரு தெருவில் பட்டாசு வெடித்துள்ளனர்.மறுநாள் அன்பரசனின் இளைய சகோதரர் திருநாவுக்கரசு போதையில் மேற்கண்ட தெருவில் பெட்டிக்கடையில் நின்று கொண்டு சிகரெட் வாங்கி பற்ற வைத்ததாக கூறப்படுகிறது.அப்போது அங்கிருந்த ஒருவர் என்னடா வெடி வெடிக்கிறீங்க. சிகரெட் வாங்கி குடிக்கிறீங்க பெரிய ஆள் ஆகி விட்டீர்களா என கேட்டு தகராறு செய்தார. இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.இதுகுறித்த தகவல் அறிந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும் திமுக ஊராட்சி செயலாளருமான கண்ணன் போலீசுக்கு தகவல் கொடுத்தார். போலீசார் விரைந்து வந்து கூட்டத்தை கலைத்தனர்.மறுநாள் காவல் நிலையம் முன்பு திருநாவுக்கரசு ஊர் மக்கள் முன்பு காலில் விழுந்து மன்னிப்பு கேட்டதாக கூறப்படுகிறது.இதை அறிந்த அன்பரசன் அதிர்ச்சி அடைந்தார்.பாஜக தெற்கு ஒன்றிய கழகச் செயலாளராக இருக்கும் அவர் காவல் நிலையம் முன்பு காலனி தெருவை சேர்ந்தவரை காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்தது தீண்டாமை அல்லவா என பதிவிட்டு பதிவு தபால் மூலம் குடியரசுத் தலைவர், தமிழக கவர்னர்,மாவட்ட காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட 14 பேர்களுக்கு புகார் மனு அனுப்பினார்.இதைத்தொடர்ந்து அன்பரசன் கொடுத்த புகாரின் பேரில் மாற்று சமூகத்தைச் சேர்ந்த திமுக ஊராட்சி செயலாளர் கண்ணன், ராஜேஷ் ,ராமச்சந்திரன், ரமேஷ் ,அருண், வேலுச்சாமி, உள்ளிட்டவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் ராஜேஷ் கைது செய்து ஜெயங்கொண்டம் கிளை சிறையில் அடைத்தனர். அவர் மீது எஸ்சி எஸ்டி தீண்டாமை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    மேலும் தலைமறைவாக உள்ள திமுக ஊராட்சி செயலாளர் கண்ணன் உள்ளிட்ட 5 பேரை இரண்டு தனிப்படை போலீசார் வலைவீசி தேடுகின்றனர். இந்த சம்பவம் மேற்கண்ட பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • ஜெயங்கொண்டத்தில் ரோட்டரி சங்கம் சார்பில் ரத்த தான முகாம்
    • ஏராளமானவர்கள் கலந்து கொண்டு ரத்ததானம் அளித்தனர்

    அரியலூர், 

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் ரோட்டரி சங்கம் சார்பில் மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது.முகாமினை ரோட்டரி சங்க முன்னாள் துணை ஆளுநர் குமணன் தொடங்கி வைத்தார். முன்னாள் தலைவர் விஜயகுமார் வரவேற்றார்.தலைவர் சுரேஷ்குமார் முன்னுரை ஆற்றினார். போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சுமதி, போலீஸ் ஏட்டு அனிதா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். முன்னாள் தலைவர்கள் அன்புராஜ், செந்தில்வேல் , கிருபாநிதி, ஜெயராமன், பொருளாளர் கார்த்திகேயன்மற்றும் உறுப்பினர்கள் சுரேஷ்குமார், சுப்பிரமணியன், ராஜேந்திரன், ஸ்டுடியோ கார்த்திகேயன், உடையார்பாளையம் சரவணன், அடிகள் சிவபெருமான், பணிநிறைவு தலைமையாசிரியர் அரங்கநாதன், சிவராமகிருஷ்ணன், மெடிக்கல் விஜயகுமார்,மேல்நிலைப்பள்ளி உதவித் தலைமை ஆசிரியர் இளங்கோவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.இதில் அரியலூர் அரசினர் ரத்த வங்கி டாக்டர் கண்மணி தலைமையில் செவிலியர்கள் உட்பட மருத்துவக் குழுவினர் 34 நன்கொடையாளர்களிடம் ரத்தம் சேகரித்தனர்.ரத்த தானம் வழங்கியவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.முகாமுக்கான ஏற்பாடுகளை திட்ட தலைவர் பொறியாளர் அன்புராஜ், ஒருங்கிணைப்பாளர் அனந்த பத்மநாபன் ஆகியோர் செய்திருந்தனர்.முடிவில் செயலாளர் முருகன் நன்றி கூறினார்.ரோட்டரி சங்க முன்னாள் துணை ஆளுநர் குமணன் முகாமை தொடங்கி வைத்த போது எடுத்த படம். அருகில் தலைவர் சுரேஷ்குமார்,முன்னாள் தலைவர் விஜயகுமார், போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சுமதி மற்றும் பலர் உள்ளனர்.

    • அரியலூரில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
    • தி.மு.க. அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

    அரியலூர், 

    தி.மு.க. அரசைக் கண்டித்து அரியலூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஆர்ப்பாட்டத்தில், திமுக அரசு தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். மணல், கனிம வள கொள்ளைகளை தடுத்து நிறுத்த வேண்டும். டாஸ்மாக் கடைகளை மூடவேண்டும். கஞ்சா, கள்ளச் சாராய விற்பனையை தடுத்து நிறுத்த வேண்டும். ஆறுகளின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும். அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை, அரசு மருத்துவமனைகளாக மேம்படுத்த வேண்டும். மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்களை தடுத்து நிறுத்த கூடாது. மத்திய, மாநில அரசு திட்டங்களில் ஊழல் செய்யக்கூடாது.பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியர் பணியிடங்களை உடனே நிரப்பிட வேண்டும். உணவு பொருள்களின் விலைவாசி உயர்வை கட்டுபடுத்த வேண்டும். மின்வெட்டை தவிர்த்து, மின் கட்டணத்தை குறைத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.இதில் அரியலூர் அண்ணாசிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு அக்கட்சியின் நகர தலைவர் மணிவண்ணன் தலைமை வகித்தார். மாநில அமைப்புச் சாரா செயலர் மாரியப்பன் குமார். கட்சியின் மாவட்ட மகளிர் அணி தலைவி அனிதா முன்னிலை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் சுமதி உள்ளிட்டோர் கலந்து கொண்டு முழக்கமிட்டனர்.திருமானூர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் மாவட்டச் செயலர் காளிராஜ் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் நடராஜன், கிழக்கு மண்டலத் தலைவர் சுரேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதே போல் செந்துறை, கீழப்பழுவூர், தா.பழூர், ஆண்டிமடம், மீன்சுருட்டி, ஜெயங்கொண்டம் உள்ளிட்ட பகுதிகளிலும் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    • அரியலூரில் கணவன்-மனைவிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது
    • கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது

    உடையார்பாளையம்,

    அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே உள்ள தத்தனூர் கீழவெளி கிராமத்தை சேர்ந்தவர் அன்புச்செல்வன். இவரது மனைவி கவிதா (வயது 48). இவர்கள் வீட்டிலேயே டீக்கடை நடத்தி வருகின்றனர். இந்த கடைக்கு, அதே பகுதியில் வசிக்கும் செல்வராஜின் மகன் பிரேம்ராஜ் (32) என்பவர் வந்து தகராறு செய்துள்ளார். அதை தட்டிக்கேட்ட தம்பதியை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் கவிதா புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரேம்ராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஜெயங்கொண்டம் மின்சார துணை மின் நிலையத்தில்புதிய இணைப்புகள் வழங்கப்படவில்லை
    • மீட்டர்கள் 3மாதம் வரவில்லை என மின் அதிகாரிகள் அலட்சிய பதில்

    ஜெயங்கொண்டம், 

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் மின்சார வாரிய துணைமின் நிலையத்தில் மூலமாக சுமார் 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின் இணைப்புகள் வழங்கப்பட்டு பல்வேறு விவசாயிகள் சிறு குறு தொழிலாளிகள் சுய தொழில் செய்பவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பல்வேறு மின்சார இணைப்புகள் மூலம் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் ஜெயங்கொண்டம் சுற்று வட்டார பகுதியில் இருந்து சுமார் 120க்கும் மேற்பட்ட புதிய இணைப்புகளுக்கான விண்ணப்பங்கள் புதிய வீடு கட்டுபவர்கள் தொழில் செய்பவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் புதிய இணைப்பு ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்பட்டு ஜெயங்கொண்டம் துணை மின் நிலையத்தில் படிவங்கள் அளிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் சுமார் மூன்று மாதத்திற்கு மேலாக மீட்டர் (மின் அளவி) இதுவரை வழங்கப்படவில்லை இதனால் மூன்று மாதங்களாக புதிய மின் இணைப்பு பெற முடியாமல் சுய தொழில் செய்பவர்கள், பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாவதாக தெரிவித்தனர். மேலும் புதிய இணைப்பு படிவம் கொடுத்தவர்கள் துணை மின் நிலையத்திற்கு சென்று அலைக்கழிக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் புதிய மின் இணைப்பு கேட்டுவருபவர்களிடம் அலட்சியப்படுத்தும் விதமாக பதில் அளித்து வருவதாகவும் புதிய மின் நுகர்வோர் வேதனை தெரிவித்துள்ளனர். பொதுமக்களுடைய அவசியத்தை மனதில் கொண்டு மின்சாரத்துறை சார்ந்த அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கீழக்கொளத்தூரில் டெங்கு தடுப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது
    • 56 பேருக்கு டெங்கு பரிசோதனை

    அரியலூர்,

    தேசிய டெங்கு மாதத்தையொட்டி அரியலூர் மாவட்டம், திருமானூர் அடுத்த கீழக்கொளத்தூர் கிராமத்தில் இலவச மருத்துவ முகாம் மற்றும் டெங்கு தடுப்பு நடவடிக்கை பணிகள் நடைபெற்றது.மாவட்ட மலேரியா அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, மருத்துவ அலுவலர், ஃபிர்தெஸ்பானு ஆகியோர் மேற்பார்வையில் நடைபெற்ற முகாமில், 7 கர்ப்பிணிப் பெண்கள் உட்பட 56 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 234 பேருக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. 7 பேருக்கு ரத்த மாதிரிகள் மற்றும் 3 இடங்களில் குடிநீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பொது சுகாதாரத் துறை ஆய்வகத்துக்கு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.தொடர்ந்து, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வகீல், சமுதாய சுகாதார செவிலியர் முருகேஸ்வரி, இளநிலை பூச்சியியல் வல்லுநர் சுப்பிரமணி மற்றும் சுகாதார ஆய்வாளர்கள், கிராமப்புற சுகாதார செவிலியர்கள், நடமாடு மருத்துவக் குழுவினர், டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

    • அரியலூரில் பெண்கள் வங்கி கணக்கு தொடங்க கூட்டுறவு வங்கி ஏற்பாடு செய்துள்ளது
    • கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்காக வங்கி கணக்கு தொடங்க ஏற்பாடு

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்காக கூட்டுறவு வங்கியில் முன்வைப்பு தொகை செலுத்தாமல் சேமிப்பு கணக்கு தொடங்க ஏற்பாடு செய்யப்பபட்டுள்ளதாக திருச்சிராப்பள்ளி மத்திய கூட்டுறவு வங்கி அறிவித்துள்ளது.

    இதுகுறித்து அந்த வங்கி நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தின் கீழ், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாம்கள் நாளை(24 ஆம் தேதி) தொடங்குகின்றன.இந்த திட்டத்தில் பயன்பெற ஒவ்வொரு குடும்பத்திலும் ரேஷன் கார்டில் பெயர் உள்ளவர்களில் 21 வயது நிரம்பிய பெண் ஒருவர் விண்ணப்பிக்கலாம். தகுதியுள்ளவர்களுக்கு உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க, வீடு தேடி வழங்கப்படும் விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து அதனை முகாம் நடக்கும் நாளில் கொடுக்க வேண்டும். விண்ணப்பத்துடன் ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கிக் கணக்கு புத்தகம், மின் கட்டண அட்டை ஆகியவற்றின் அசல் எடுத்துச்செல்ல வேண்டும்.இந்த திட்டத்தில் வங்கி கணக்கு கட்டாயம் இருக்க வேண்டும். வங்கிக் கணக்கு இல்லாதவர்கள் சேமிப்பு கணக்கு தொடங்குவதற்காக அரியலூர் மாவட்டத்தில் திருமானூர், கீழப்பழுவூர், தா.பழூர், ஆண்டிமடம், அரியலூர், வி.கைகாட்டி, ஜெயங்கொண்டம், மீன்சுருட்டி, செந்துறை ஆகிய 9 இடங்களில் திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளில் சார்பில் முகாம் நடத்தப்படுகிறது. முன்வைப்பு தொகை இல்லாமல் இந்த சேமிப்பு கணக்கு தொடங்குவதற்கு 3 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள், ஆதார் அட்டை, ரேஷன் கார்டு ஆகியவற்றின் நகல் மற்றும் அசல் ஆகியவற்றை எடுத்துச் செல்ல வேண்டும். கட்டணமோ, குறைந்தபட்ச இருப்புத் தொகையோ செலுத்தாமல் சேமிப்பு கணக்கு தொடங்கலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது 

    ×