என் மலர்
அரியலூர்
- இலந்தைக் கூடம் கிராமத்தில் திரவுபதியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது
- ஏராளமான பக்தர்கள் தேர் திருவிழாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம்
அரியலூர்
அரியலூர் மாவட்டம், திருமானூர் அடுத்த இலந்தைக் கூடம் கிராமத்திலுள்ள திரவுபதியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது.
இங்கு கடந்த 3 ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. தொடர்ந்து மகாபாரதம் சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் மலர் அலங்காரத்துடன் திரவுபதியம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.பக்தர்கள் வீடுகள் தோறும் தீபாராதனை காட்டி வணங்கி அம்மனின் அருளை பெற்றனர்.
- மீன் சுருட்டி அருகே காதல் திருமணம் செய்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்
- மது குடித்ததால் கணவன் - மனைவிக்குள் பிரச்சினை ஏற்பட்டு விபரீத முடிவு
அரியலூர்,
அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே உள்ள படைநிலை காலனி தெருவை சேர்ந்தவர் ஆனந்த கிருஷ்ணன் (வயது 29). கூலித்தொழிலாளி. இதே பகுதியை சேர்ந்த வான்மதி என்பவரை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த 15-ந் தேதி ஆனந்த கிருஷ்ணன் மது குடித்துவிட்டு வந்ததாகவும், இதனால் கணவன்-மனைவி இடையே பிரச்சினை ஏற்பட்டதாகவும் தெரிகிறது. இதையடுத்து வான்மதி தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால் மனமுடைந்த ஆனந்த கிருஷ்ணன் வீட்டில் சேலையால் தூக்குப்போட்டு தொங்கினார். அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இறந்தார். இது குறித்து மீன்சுருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மனோகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- அதிமுக நிர்வாகியின் டீசல் காரில் பங்க் ஊழியர் பெட்ரோல் நிரப்பினார்
- கார் டிரைவர் பங்க் ஊழியருடன் வாக்குவாதத்ததால் பரபரப்பு நிலவியது
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகி ஒருவர் மதுரையில் நடைபெறும் அ.தி.மு.க. மாநாட்டிற்கு செல்வதற்காக, இவரது காரில் டீசல் நிரப்புவதற்கு டிரைவர் அப்பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் விற்பனை நிலையத்திற்கு ஓட்டிச்சென்றுள்ளார். அங்கு ஊழியர், அந்த காரில் டீசலுக்கு பதிலாக பெட்ரோல் போட தொடங்கினார். இதை கவனித்த டிரைவர் சத்தம் போட்டதால், அவர் பெட்ரோல் போடுவதை நிறுத்தினார். இது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
- இறந்தவரின் உடலை சாலையோரம் தகனம் செய்ய பொதுமக்கள் முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது
- மாயானம் செல்லும் வழி சேறும், சகதியுமாக இருப்பதை கண்டித்து கிராம மக்கள் சாலையோரம் தகனம் செய்ய முயற்சி
அரியலூர்
செந்துறை அருகே உள்ள இலைக்கடம்பூர் காலனித்தெருவை சேர்ந்தவர் ஆச்சிக்கண்ணு(வயது 70). இவர் வயது முதிர்வு காரணமாக நேற்று அதிகாலை உயிரிழந்தார். இந்நிலையில் இவரது உடலை தகனம் செய்ய மயானத்திற்கு விறகுகளை கொண்டு செல்ல முயன்றபோது, மயானத்துக்கு செல்லும் பாதையில் முழங்கால் அளவுக்கு சேறும், சகதியுமாக இருந்துள்ளது. இதைக்கண்டு ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் செந்துறை - இலைக்கடம்பூர் சாலையின் ஓரத்தில் இறந்தவரின் உடலை தகனம் செய்ய விறகுகளை அடுக்கினர்.இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற செந்துறை தாசில்தார் பாக்கியம் விக்டோரியா, செந்துறை போலீசார், வட்டார வளர்ச்சித்துறை அலுவலர் பிரபாகரன் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் கோகிலா அழகு துரை ஆகியோர் கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பாதையை சீரமைத்து தந்தால் மட்டுமே, இறந்தவர் உடலை மயானத்துக்கு கொண்டு செல்வோம். இல்லையென்றால் இங்குதான் தகனம் செய்வோம் என்று கிராம மக்கள் தெரிவித்தனர்.
மேலும் கடந்த ஒரு ஆண்டாக கிராம மக்கள் அந்த சாலையை சீரமைக்க பல முறை மனு அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்கு மேலும் உங்கள் வார்த்தையை நம்ப மாட்டோம் என்று கூறி அரசு அதிகாரிகளிடம், கிராமமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அங்கு 3 பொக்லைன் எந்திரங்கள் வரவழைக்கப்பட்டு தற்காலிகமாக மயான பாதை சீரமைக்கப்பட்டது. பின்னர் இறந்தவரின் உடலை உறவினர்கள் மயானத்துக்கு கொண்டு சென்று தகனம் செய்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- அரியலூர் அருகே பிறந்து 41 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை விஷம் கொடுத்து கொல்ல முயற்சி நடைபெற்று உள்ளது
- தாய் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே பிறந்து 41 நாளே ஆன பச்சிளம் பெண் குழந்தையை விஷம் கொடுத்து கொல்ல முயன்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உடையார்பாளையம் அருகே உள்ள புளியங்குழி மேல தெருவை சேர்ந்தவர்கள் பெரியசாமி ரதியா (வயது 23) தம்பதி இவர்களது குழந்தை ரித்திகா. பிறந்து 41 நாட்களே ஆகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் ரதியா அப்பகுதியில் உள்ள ரேஷன் கடைக்கு சென்றுள்ளார். பின்னர் வீட்டுக்கு வந்த பார்த்த போது ரித்திகா வாயிலிருந்து நுரை வந்த வண்ணம் இருந்தது. குழந்தை அருகே விஷ பாட்டில் கிடந்ததாக கூறப்படுகிறது. இதைக்கண்ட ரதியா மற்றும் அவரது உறவினர்கள் ரித்திகாவை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ெஜயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் தஞ்சை தனியார் மருத்துவமனையில் குழந்தை ரித்திகாவை மேல் சிகிச்சைக்கு சேர்த்தனர். இது குறித்து உடையார்பாளையம் காவல் நிலையத்தில் ரதியா அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் தனபாலன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
- ெஜயங்கொண்டத்தில் அடுத்தடுத்து 4 கோயில் உண்டியல்களை உடைத்து திருட்டு நடைபெற்று உள்ளது
- திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்
ஜெயங்கொண்டம்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள பூவாய் குளம் கிராமத்தில் மகாசக்தி மாரியம்மன் ஆலயத்தில் உள்ளே புகுந்துள்ள மர்ம நபர்கள், அங்கிருந்த உண்டியலை உடைத்து அதிலிருந்து ரொக்கப்பணம் மற்றும் 2 கிராம் தாலிகள் மூன்றை கொள்ளை அடித்து சென்றுள்ளனர். இதே போல காலனி தெருவில் உள்ள வீரனார் கோயில் உண்டியலை உடைத்தும்,வ ன்னியர் தெருவில் உள்ள விநாயகர் கோயில் உண்டியலை உடைத்தும் அதிலிருந்து பணம் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது. மேலும் கோவில் வைக்கப்பட்டிருந்த ஆம்ப்ளிபயர் உள்ளிட்ட எலக்ட்ரிக்கல் பொருட்களும் திருட்டப்பட்டு உள்ளது. மேலும் வன்னியர் தெருவில் உள்ள காளியம்மன் கோவிலில் ஏழு கிராம் தங்க தாலியும் திருடப்பட்டு உள்ளது. இது குறித்து ஜெயங்கொண்டம் போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். அடுத்தடுத்து நான்கு கோயில்களில் திருடிய சம்பவம் பூவாயிக்குளம் கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
- ஜெயங்கொண்டத்தில் குறுவட்ட அளவிலான கோகோ போட்டிகள் நடைபெற்றது
- குறுவட்ட அளவில் 250 பள்ளி மாணவர்கள் பங்கேற்பு
ஜெயங்கொண்டம்
ஜெயங்கொண்டம் குறுவட்ட அளவிலான த. கீழவெளி அரசு மேல்நிலைப் பள்ளியில் 14 ,17 ,19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான கோகோ போட்டிகள் நடைபெற்றது. பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் அன்புமணி வரவேற்றார். போட்டியினை பள்ளி தலைமை ஆசிரியர் கிருஷ்ணசாமி, ஒன்றிய கவுன்சிலர் சுந்தரபாண்டியன் ஆகியோர் துவக்கி வைத்தனர். த.கீழவெளி ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாணவர் அமைப்பு, கிராம நிர்வாக அலுவலர், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ,பள்ளி மேலாண்மை குழு தலைவர், தன்னார்வலர்கள் ஊர் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர். போட்டியின் நடுவர்களாக நல்லமுத்து, மயில்சாமி, இளவரசன், குமார், மோகன், விஜய்ஆனந்த், ராஜா மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் பலரும் பணியாற்றினர். போட்டியில் சுமார் 250 மாணவர்கள் வெவ்வேறு அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலிருந்து கலந்து கொண்டனர் . போட்டிக்கான ஏற்பாடுகளை ஜெயங்கொண்டம் குறுவட்ட இணை செயலாளர் உடற்கல்வி ஆசிரியர் துரைராஜ் ஏற்பாடு செய்திருந்தார். பட்டதாரி ஆசிரியர் ரவி நன்றி கூறினார்.
- நீர் தேர்வு அனிதா இறப்பின் போது போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கில் சினிமா இயக்குனர் கவுதமனுக்கு பிடிவாரண்ட் பிறபபிக்கப்பட்டு உள்ளது
- பலமுறை வழக்கில் ஆஜராகாததால் நீதிபதி பிடிவாரண்ட் பிறப்பித்தார்
செந்துறை,
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள குழுமூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அனிதா. இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு நீட் தேர்வு காரணமாக மருத்துவர் ஆக முடியாத மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டார். அதனைத் தொடர்ந்து திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் குழுமூர் கிராமத்திற்கு வந்து நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் அனிதாவின் இறுதி சடங்கில் கலந்து கொண்டு சுடுகாடு வரை சென்று அஞ்சலி செலுத்தினார். இதனால் இந்த நீட் எதிர்ப்பு போராட்டம் தமிழகம் மட்டுமின்றி இந்திய அளவில் எதிரொளித்தது.
போராட்டத்தில் ஈடுபட்ட சினிமா இயக்குனர் கவுதமன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மீது வழக்கு பதியப்பட்டது. அந்த வழக்குகள் தற்போது செந்துறை மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் கவுதமன் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர் ஆகாததால் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி ஏக்னஸ் ஜெப கிருபா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
- அரியலூரில் மாவட்டத்தில் ரெடிமேட் ஆடை உற்பத்திக்கு ரூ.3 லட்சம் நிதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது
- அரியலூர் மாவட்ட கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா அறிவித்து உள்ளார்
அரியலூர்,
அரியலூர் மாவட்டத்தில் ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு அமைக்க ரூ.3 லட்சம் நிதியுதவியை பெற பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பை சார்ந்த 10 பேர் கொண்ட குழுவினர் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தெரிவித்ததாவது, அரியலூர் மாவட்டத்தில், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பை சார்ந்த மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதார மேம்பாட்டுக்காக தையல் தொழிலில் ஈடுபட்டு வரும் இருபாலரும் குறைந்தபட்சம் 10 நபர்களை கொண்ட குழுவாக அமைத்து ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு ஏற்படுத்தும் திட்டம் 2022-2023ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தில் தையல் தொழிலுக்கு அத்தியாவசியமாக தேவைப்படும் உபகரணங்கள், இடைநிகழ் செலவு மற்றும் பணி மூலதனம் ஆகியவைகளுக்காக அதிகபட்சமாக குழு ஒன்றுக்கு ரூ.3 லட்சம் வீதம் வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தில் பயன்பெறுவதற்கான தகுதிகள், குழு உறுப்பினர்கள் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தை சார்ந்தவராக இருத்தல் வேண்டும். குழு உறுப்பினர்களின் குறைந்தபட்ச வயது வரம்பு 20 ஆகும். குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் மூலம் பயிற்சி பெற்ற நபர்களை கொண்ட குழுவுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
விதவை, கணவரால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் ஆதரவற்ற விதவை பெண்கள் அமைந்துள்ள குழுவுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும். 10 நபர்களை கொண்ட ஒரு குழுவாக இருத்தல் வேண்டும். 10 நபர்களுக்கும் தையல் தொழில் தெரிந்திருத்தல் வேண்டும். குழுவிலுள்ள பயனாளிகளின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்குள் இருக்க வேண்டும்.
இதற்கான விண்ணப்பப்படிவம், அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகி பெற்றுக்கொள்ளலாம். மாவட்ட கலெக்டர் தலைமையிலான தேர்வு குழுவினரால் பூர்த்தி செய்து வரப்பெறும் விண்ணப்பங்களில் தகுதியான விண்ணப்பங்கள் தேர்தெடுக்கப்பட்டு, மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல இயக்கத்துக்கு அனுப்பி வைக்கப்படும்.
- அரியலூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
- கூடுதல் பணி வழங்குவதை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்
அரியலூர்
தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர் நலச் சங்கம், தமிழ்நாடு அரசு கிராம பகுதி, சமுதாய சுகாதார செவிலியர்கள் கூட்டமைப்பு சார்பில், அரியலூர் அண்ணாசிலை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில், கிராம, பகுதி, சமுதாய சுகாதார செவிலியர்களுக்கு கூடுதலாக கணினி பதிவேற்றாளர் பணியை வழங்கக் கூடாது. அனைத்து தரப்பு மக்களுக்கும் தரமான சுகாதார சேவை உடனடியாக கிடைத்திட கிராம, பகுதி, சமுதாய செவிலியர்களை தாய் சேய் நலம், நலவாழ்வு பணிகளை செய்யவிட வேண்டும். ஒர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு தல ஒருவர் வீதம் டேட்டா என்டரி அலுவலர்களை பணியமர்த்திட வேண்டும்.
திட்டப் பணிகள் தொடங்கும் முன் தொடர்புடைய சங்கங்களை அழைத்து கருத்துக் கேட்க வேண்டும். முதல் குழந்தை கருவுற்ற தாய்மார்களுக்கு இரண்டு தவணைகளில் தலா ரூ.2 ஆயிரத்தை உரிய முறையில் சரியான நேரத்தில் கிடைத்திட வழிவகை செய்ய வேண்டும். நியாய விலைக் கடையில் பதிவேற்றம் செய்ய வேண்டிய பணியை கிராம சுகாதார செவிலியர் மீது திணிக்கக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறத்தப்பட்டன.
ஆர்ப்பாட்டத்துக்கு அச்சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் ப. எஸ்தர் ராஜகுமாரி தலைமை வகித்தார். துணைத் தலைவர் இந்திராணி, பொருளாளர் வான்மதி, செயலர் ஆ.பாலாம்பிகை, தலைமை நிலையச் செயலர் ஆலிஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட நிர்வாகி கோமதி கோரிக்கைகள் குறித்து விளக்க உரையாற்றினார்.
- மின்வேலியில் சிக்கி 2 பேர் பலியான வழக்கில் தந்தை மகனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை
- அரியலூர் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு
அரியலூர்
அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே மின்வேலியில் சிக்கி தந்தை, மகன் இறந்த வழக்கில் அனுமதியின்றி மின்வேலி அமைத்த இருவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி அரியலூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
விக்கிரமங்கலம் அடுத்த சாத்தம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி வேலாயுதம்(95). இவரது மகன் தங்கராசு(60) ஓய்வுபெற்ற விஏஓ. இவர்கள் இருவரும் கடந்த 2017 ஆம் ஆண்டு, கொள்ளிடம் ஆற்றுபடுகை பகுதியில் தனது விவசாய நிலத்துக்கு கால்நடைகளுக்கு தீவனம் எடுக்க சென்ற போது, அதே ஊரைச் சேர்ந்த தேவேந்திரன்(52) தனது வயலில், சோளப்பயிர்களை காட்டுபன்றிகள் சேதபடுத்துவதை கட்டுப்படுத்த அமைத்திருந்த மின்வேலியில் சிக்கியதில் இருவரும் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தனர்.
இதுகுறித்து தங்கராசு மகன் தமிழரசன்(33) அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த விக்கிரமங்கலம் காவல் துறையினர், அனுமதியின்றி மின்வேலி அமைத்ததாக தேவேந்திரன்(52), அவரது மகன் பிரபாகரன்(25), மின்வேலி அமைக்க உடந்தையாக இருந்ததாக அதேகிராமத்தை சேர்ந்த கலியமூர்த்தி மகன் சுரேஷ், ஆறுமுகம் மகன் சுரேஷ் ஆகியோரை கைது செய்தனர்.
இந்த வழக்கு அரியலூர் மாவட்ட கூடுதல் மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்து வந்த நீதிபதி கர்ணன், அனுமதியின்றி மின்வேலி அமைத்த தேவேந்திரன் அவரது மகன் பிரபாகரனுக்கு இரட்டை ஆயுள் தண்டனைகளும், தலா ரூ.10,000 அபராதமும் விதித்து வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தார். மேலும், உடந்தையாக இருந்ததாக கைது செய்யப்பட்ட கலியமூர்த்தி மகன் சுரேஷ், ஆறுமுகம் மகன் சுரேஷ் ஆகியோரை விடுதலை செய்தும் உத்தரவிட்டார். இதையடுத்து தேவேந்திரன், பிரபாகரன் ஆகியோர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
- சிதம்பரம் மக்களவைத் தொகுதி உறுப்பினரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல்.திருமாவளவன் பிறந்த நாள்
- பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினர்
அரியலூர்
சிதம்பரம் மக்களவைத் தொகுதி உறுப்பினரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல்.திருமாவளவன் பிறந்த நாளையொட்டி, அரியலூர் நகரிலுள்ள தலைவர்கள் சிலைகளுக்கு அக்கட்சியினர் மாலை அணிவித்து, பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினர்.
மாவட்டச் செயலர் அங்கனூர் சிவா தலைமையில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு திரண்டிருந்த மண்டல துணைச் செயலர் மாறன், மாநில பொறுப்பாளர்கள் தனக்கோடி, கருப்புசாமி, முன்னாள் மாவட்டச் செயலர் செல்வநம்பி, அரியலூர் தொகுதிச் செயலர் மருதவாணன், மாவட்ட செய்தி தொடர்பாளர் சுதாகர் மற்றும் நகர, ஒன்றிய, கிளை நிர்வாகிகள் உள்ளிட்டோர் அங்கிருந்து ஊர்வலமாகச் சென்று செட்டி ஏரிக்கரையிலுள்ள அம்பேத்கர், பெரியார், காந்தி, காமராஜர் ஆகியோர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் அவர்கள் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினர்.






