என் மலர்
அரியலூர்
- சிறுமியை கடத்திய டிரைவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
- திருமணம் செய்வதற்காக கூறி
அரியலூர்
பெரம்பலூர் மாவட்டம் பீல்வாடி காலனி தெருவை சேர்ந்தவர் ஆனந்தராஜ் (வயது 27), லாரி டிரைவர். இவர் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 17 வயது சிறுமியை கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் அந்த சிறுமி திடீரென மாயமானார். இதுகுறித்து அவரது பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் சிறுமியை திருமணம் செய்வதற்காக ஆனந்தராஜ் கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் ஜெகநாத் தலைமையிலான போலீசார் ஆனந்தராஜை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். மேலும் அந்த சிறுமியை மீட்டு அவருடைய பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
- வாகன விபத்தில் என்ஜினீயர் பலியானார்
- மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதியது
அரியலூர்
குரும்பலூர் காமராஜர் தெருவை சேர்ந்தவர் மதிவாணன் (வயது 27). சிவில் என்ஜினீயர் படிப்பை முடித்து விட்டு வீட்டில் இருந்து வந்த மதிவாணன் நேற்று இரவு தனது தாயிடம் மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் நிரப்பி வருவதாக கூறிவிட்டு ஈச்சம்பட்டியில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்துக்கு சென்றார். அப்போது அவர் பெரம்பலூர்-துறையூர் மாநில நெடுஞ்சாலையில் ஈச்சம்பட்டியில் சென்று கொண்டிருந்த போது அதே சாலையில் எதிரே வந்த வேன் இவர் மீது மோதியது.
இதில் படுகாயமடைந்த மதிவாணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பெட்டிக் கடையில் புகையிலை பொருட்களை விற்றவர் கைது செய்யப்பட்டார்.
- போலீசார் ரோந்து பணியில் நடவடிக்கை
அரியலூர்
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் முத்துவாஞ்சேரி பகுதிகளில் உள்ள கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என சோதனை நடத்தினர். அப்போது முத்துவாஞ்சேரி பஸ் நிறுத்தம் அருகே உள்ள மதியழகன் (வயது 52) என்பவரது பெட்டிக்கடையில் சோதனை செய்தபோது அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் விற்பனைக்காக வைத்திருந்த புகையிலை பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
- அரியலூர் அடுத்த எருத்துக்காரன் பட்டி ஊராட்சியில், இந்தியன் செஞ்சிலுவைச் சங்க புதிய கட்டிடத்திற்க்கான பூமி பூஜை நடைபெற்றது.
- 25 ஆண்டு காலமாக வாடகைக் கட்டடத்தில் இயங்கி வந்த அலுவலகத்துக்கு சொந்தமாக இடம் வாங்கி,புதிய கட்டிடத்திற்க்கான கட்டுமானப் பணிகள் தொடங்கியது.
அரியலூர்,
அரியலூர் அடுத்த எருத்துக்காரன் பட்டி ஊராட்சியில், இந்தியன் செஞ்சிலுவைச் சங்க கட்டுமானப் பணிக்கான பூமி பூஜை புதன்கிழமை நடைபெற்றது.25 ஆண்டு காலமாக வாடகைக் கட்டடத்தில் இயங்கி வந்த அலுவலகத்துக்கு சொந்தமாக இடம் வாங்கி, கட்டடம் கட்ட வேண்டும் என்று சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அதற்கான பணிகளை சங்க நிர்வாகிகள் மேற்கொண்டு வந்தனர்.இந்நிலையில், இறுதியாக எருத்துக்காரன்பட்டி ஊராட்சி, ராஜகணபதி நகரில், தேர்வு செய்யப்பட்ட இடத்தில், கட்டுமானப் பணிகள் புதன்கிழமை தொடங்கியது.இதற்காக நடைபெற்ற பூமி பூஜைக்கு, அச்சங்கத்தின் மாவட்ட கிளைத் தலைவர் ஜெயராமன் தலைமை வகித்தார். இடம் வழங்கிய எருத்துக்காரன்பட்டி ஊராட்சித் தலைவர் சிவா, புரவலர் சீத்தாராம சுப்பிரமணியன், பேராசிரியர் அருள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இந்நிகழ்வில், செந்துறை ஒன்றிய நிர்வாக குழு உறுப்பினர்களான தங்கசிவமூர்த்தி, சிவசக்தி ஆகியோர் சேர்ந்து கட்டட நிதியாக ரூ.1 லட்சத்தை கிளைத் தலைவர் ஜெயராமனிடம் வழங்கினார்.நிகழ்ச்சியில் துணைத் தலைவர்கள் எஸ்.எம். சந்திரசேகர், செல்வராஜ், பொருளாளர் எழில், செயலர் ஸ்டீபன், துணை புரவலர் சகானா காமராஜ், முன்னாள் தலைவர் நல்லப்பன், மாநில பொதுக் குழு உறுப்பினர் செல்வராஜ், நிர்வாகக் குழு உறுப்பினர் சுமங்கலி ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- உதயநத்ததில் நெசவாளர்களுக்கு முத்ரா கடன் வழங்குதல் மற்றும் மரக்கன்று நடுதல்
- தேவாங்கா கைத்தறி நெசவாளர் கூட்டுறவு கடன் சங்கத்தில், கூட்டுறவுத் துறை சார்பில் மரக்கன்று நடுதல் மற்றும் நெசவாளர்களுக்கு முத்ரா கடன் வழங்கும் விழா நடைபெற்றது.
அரியலூர்,
அரியலூர் மாவட்டம், தா.பழூர் அடுத்த உதயநத்தம் தேவாங்கா கைத்தறி நெசவாளர் கூட்டுறவு கடன் சங்கத்தில், கூட்டுறவுத் துறை சார்பில் மரக்கன்று நடுதல் மற்றும் நெசவாளர்களுக்கு முத்ரா கடன் வழங்கும் விழா நடைபெற்றது. மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட ஜெயங்கொண்டம் சட்டப் பேரவை உறுப்பினர் க.சொ.க.கண்ணன் கலந்து கொண்டு, பயனாளிகளுக்கு முத்ரா கடனை வழங்கி தொடக்கி வைத்தார். முன்னதாக அவர் வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டுவைத்தார். இந்நிகழ்வில் கைத்தறித்துறை உதவி இயக்குநர் கே.மோகன், கும்பகோணம் சரக அலுவலர் பூபதி, கைத்தறி ஆய்வாளர் செல்வகுமார், மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் வெ.பாலசுப்ரமணியன் மற்றும் கைத்தறி கூட்டுறவு சங்க நிர்வாகிகள், நெசவாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
- அரியலூர் மாவட்டத்தில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த வாலிபர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்
- கடலூர் ,சேலம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் கைவரிசை
அரியலூர்,
அரியலூர் ராஜாஜி நகர், ஆர்.கே.காலனித் தெருவைச் சேர்ந்த பொன்சேகர் மனைவி பொன்ராணி என்பவர் கடந்த 18 ஆம் தேதி பிற்பகல் ஓ. கிருஷ்ணாபுரம் பகுதியில் இரு ஸ்கூட்டரில் சென்ற போது, பின்னால் இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர், பொன்ராணி கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தாலிச் சங்கிலியை பறித்துத்துக் கொண்டு தப்பியோடினர். இதுகுறித்து அவர் அரியலூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிந்து, அரியலூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் சங்கர்கணேஷ் தலைமையில் அரியலூர் காவல் நிலைய ஆய்வாளர் சகாய அன்பரசு, உதவி ஆய்வாளர் ராஜவேலு உள்ளிட்டோர் அடங்கிய தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் புதன்கிழமை அவர்கள் அம்மாக்குளம் பிரிவுப் பாதையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்ட போது, சந்தேகப்படும் வகையில் நம்பர் பிளேட் பாதி அழிக்கப்பட்ட கருப்பு மற்றும் சிவப்பு நிறங்கள் கலந்த பல்சர் இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் பெரம்பலூர் வடக்குமாதவி சாலை, ஏரிக்கரையைச் சேர்ந்த கலியபெருமாள் மகன் வெங்கடேஷ்(22), அதே பகுதி சமத்துவப் புரத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் அஜித்(19) ஆகியோர் என்பதும், இவர்கள் கடந்த 18 ஆம தேதி பொன்ராணியின் கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தாலிச் சங்கிலியை பறித்துச் சென்றவர்கள் என்பதும், தொடர்ந்து இவர்கள் கடலூர் மாவட்டத்தில் இரண்டு, பெரம்பலூர் மாவட்டத்தில் இரண்டு, சேலத்தில் ஒரு செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினர் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். குறுகிய காலத்தில் விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை கைது செய்த தனிப்படையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கா.பெரோஸ்கான் அப்துல்லா பாராட்டினார்.
- அரியலூர் அருகே விவசாயி கொலை வழக்கில் அவரது தம்பி மகன் இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்
- சொத்து பிரச்சனை காரணமாக கொலை செய்தனர் என விசாரணையில் தெரிய வந்தது
அரியலூர்,
அரியலூர் மாவட்டம், வாரணவாசி அருகே விவசாயி கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது தம்பி மகன்கள் இருவர் நேற்று கைது செய்யப்பட்டனர்.கீழப்பழுவூரை அடுத்த வாரணவாசி அருகேயுள்ள கரையான்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் ரா. மணி (63). விவசாயியான இவர், செவ்வாய்க்கிழமை அதிகாலை தனது தோட்டத்தில் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து கீழப்பழுவூர் காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டதில், மணியின் தம்பி கணேசன் மகன்களான அருண்குமார்(29), மோகன்ராஜ்(27) ஆகிய இருவரும் மணியை கொலை செய்தது தெரியவந்தது.மேலும் விசாரணையில், மணியின் இரண்டாவது மனைவியான பிரேமாவும், மணியின் தம்பி கணேசனின் மனைவியான மோகனவள்ளியும் அக்கா, தங்கை என்பதும், திருச்சி புள்ளம்பாடி அடுத்த விரகாலூர் கிராமத்தில் உள்ள அவர்களது பெயரிலுள்ள கூட்டுப் பட்டாவை பிரித்துத்தர மணி மறுத்துள்ளதாகவும், இதனால் ஆத்திரமடைந்த மோகனவள்ளியின் மகன் அருண்குமார், மணியை கொலை செய்ததும், இக்கொலைக்கு மோகன்ராஜ் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினர் இருவரையும் கைது செய்து அரியலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- கங்கைகொண்ட சோழபுரம் ஆதிதிராவிட நலப் பள்ளியில் சரியில்லாத உணவை மாணவ மாணவிகளுக்கு கொடுத்ததால் வாந்தி, மயக்கம்
- பாதிக்கப்பட்ட மாணவர்களை எம்எல்ஏ கண்ணன் நேரில் பார்வையிட்டு நலம் விசாரித்தார்.
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கங்கைகொண்ட சோழபுரம் ஆதிதிராவிடர் நல துவக்கப்பள்ளியில் மதிய உணவு புளி சாதம் முட்டை சாப்பிட்ட மாணவர்கள் வாந்தி மயக்கம் போட்டு விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கங்கைகொண்ட சோழபுரம் ஆதிதிராவிடர் நலப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை 32 மாணவிகள் 30 மாணவர்களும் பயின்று வருகின்றனர் இவர்களில் 55பேர் மதிய உணவு சாப்பிட்டு வருகின்றனர்.வழக்கம்போல் இன்று மதிய உணவு சமைப்பதற்கு தயார் செய்தபோது அரிசி சரியில்லை என்று சமையல் செய்பவர் தலைமை ஆசிரியர் புஷ்பவல்லியிடம் தெரிவித்தனர். பரவாயில்லை நாளை பார்த்துக் கொள்ளலாம் அதை சமையல் செய்து மாணவர்களுக்கு கொடுங்கள் எனக் கூறியதாக தெரியவந்துள்ளது. மதியம் மாணவர்களுக்கு புளி சாதமும் முட்டையும் வழங்கப்பட்டன. சத்துணவு அமைப்பாளர் இளமதி சமையலர் சரஸ்வதியும் சமையல் உதவியாளர் சபிதாவும் சமையல் செய்து மாணவர்களுக்கு வழங்கினர். ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவி சாப்பிட்ட சில மணி நேரத்தில் திடீரென்று வாந்தி எடுத்து மயக்கம் போட்டு கீழே விழுந்துள்ளார் உடனடியாக ஆசிரியர் தலைமை ஆசிரியரிடம் தெரிவித்தனர். அவர் வந்து பார்த்து கொண்டிருந்தபோது திடீரென அனைத்து பள்ளி மாணவ மாணவிகளும் வாந்தி மயக்கம் எடுத்துள்ளனர் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் தகவல் தெரிவித்து அதில் 25 மாணவர்கள் வாந்தி மயக்கம் ஏற்பட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அங்கு மாணவ மாணவிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் எம் எல் ஏ கண்ணன் உடையார்பாளையம் ஆர்டிஓ பரிமளம் தாசில்தார் துறை மற்றும் மீன்சுருட்டி காவல் ஆய்வாளர் பாஸ்கரன் உள்ளிட்டோர் சென்று தீவிர சிகிச்சை அளிக்க மருத்துவர்களிடம் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் பள்ளி மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் அரசு மருத்துவமனையில் கதறி அழுவது பெரும் சோகத்தை அந்த பகுதியில் ஏற்படுத்தி உள்ளது.
- அம்மா குளம் பிரிவு சாலை அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
- சேலத்தில் ஒரு சங்கிலி பறிப்பு சம்பவத்திலும் ஈடுபட்டது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.
அரியலூர்:
அரியலூர் ராஜாஜி நகர் பி.கே. காலனியை சேர்ந்தவர் பொன்ராணி. இவர் தனது இரு சக்கர வாகனத்தில் ஓ.கிருஷ்ணாபுரம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம ஆசாமிகள் பொன்ராணியின் கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தாலி சங்கிலியை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி அவர்களை தேடி வந்தனர்.
இந்நிலையில் அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவின்படி, அரியலூர் சரக போலீஸ் துணை சூப்பிரண்டு சங்கர் கணேஷ் தலைமையில் தனிப்படை போலீஸ் இன்ஸ்பெ க்டர் சகாய அன்பரசு தலைமையில் அம்மா குளம் பிரிவு சாலை அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும் படியாக இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் பெரம்பலூர்-வடக்கு மாதவி ரோடு ஏரிக்கரையை சேர்ந்த வெங்கடேஷ் (வயது 22), பெரம்பலூர்-வடக்கு மாதவி ரோடு எளம்பலூர் சமத்துவபுரத்தை சேர்ந்த அஜீத் (19) என்பது தெரிய வந்தது.
மேலும் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததால் போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் அவர்கள் பொன்ராணியின் தாலி சங்கிலியை பறித்தது தெரியவந்தது. மேலும் அவர்கள் கடலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் தலா 2 சங்கிலி பறிப்பு சம்பவங்களிலும், சேலத்தில் ஒரு சங்கிலி பறிப்பு சம்பவத்திலும் ஈடுபட்டது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து வெங்கடேஷ், அஜீத்தை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து ரூ.2 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பிலான தங்க நகைகளை மீட்டனர். குறுகிய காலத்தில் புலன் விசாரணை செய்து குற்றவாளிகளை கைது செய்த தனிப்படை போலீசாரை அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோ ஸ்கான் அப்துல்லா வெகுவாக பாராட்டினார்.
- தலையாரி குடிக்காடு கிராமத்தில் தோல் கழலை நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது
- 99 மாடுகளுக்கு தோல் கழலை நோய் தடுப்பூசியை செலுத்தினர்
அரியலூர்,
அரியலூர் மாவட்டம், கடுகூர் ஊராட்சிக்கு உட்பட்ட தலையாரி குடிக்காடு கிராமத்தில் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் மாடுகளுக்கு தோல் கழலை நோய் தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது.முகாமை கடுகூர் ஊராட்சி மன்ற தலைவர் தர்மலிங்கம் தொடக்கி வைத்தார். அரியலூர் கோட்ட உதவி இயக்குநர் சொக்கலிங்கம் முன்னிலையில், கடுகூர் கால்நடை உதவி மருத்துவர் குமார், கால்நடை பராமரிப்பு உதவியாளர் மாரிமுத்து உள்ளிட்டோர் அடங்கிய மருத்துவக் குழுவினர் கலந்து கொண்டு, 99 மாடுகளுக்கு தோல் கழலை நோய் தடுப்பூசியை செலுத்தினர். மேலும் இந்த முகாமில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு தோல் கழலை நோய் குறித்த விழிப்புணர்வு கையேடுகள் வழங்கப்பட்டன.
- ஜெயங்கொண்டம் வரதராஜ பெருமாள் கோவிலில் வருடாபிஷேக விழா, திருக்கல்யாண விழா நடைபெற்றது
- வரதராஜ பெருமாளுக்கு வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் திருச்சி சாலையில் அமைந்துள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் வருஷ அபிஷேக விழா மற்றும் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு வரதராஜ பெருமாளுக்கு வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. பட்டாச்சாரியார் மந்திரங்கள் ஓத, ஸ்ரீதேவி மற்றும் பூதேவியருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாரதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். கோவில் செயல் அலுவலர் முரளிதரன் மற்றும் கணக்கர் கந்தவேல் உள்ளிட்டோர் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
- அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்றுவரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் ஆய்வு நடைபெற்றது
- மாவட்ட கலெக்டர்ஆனி மேரி ஸ்வர்ணா ஆய்வு மேற்கொண்டார்
அரியலூர்,
அரியலூர் மாவட்டம், செந்துறை ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.இந்த ஆய்வில் செந்துறை ஒன்றியம், குழுமூர் ஊராட்சியில் விரிவுபடுத்தப்பட்ட முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ள சிற்றுண்டிகளை தயார் செய்யும் சமையல் கூடத்தினை பார்வையிட்டு பொருட்களின் தரம் மற்றும் இருப்பு, சமையல் செய்வதற்கு பயன்படுத்தப்படும் தளவாட பொருட்கள் விவரம் உள்ளிட்ட பல்வேறு தகவல் குறித்து கேட்டறிந்தார்.குழுமூர் ஊராட்சியில் ரூ.8.67 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கதிரடிக்கும் களம் அமைத்தல், ரூ.16.97 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கு, குழுமூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிதிட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் 100 எண்ணிக்கையிலான புளி, வேம்பு உள்ளிட்ட மரங்கள் நடும் பணிகள், அதனைத் தொடர்ந்து ரூ.216 லட்சம் மதிப்பீட்டில் மணப்பத்தூர் - படைவெட்டிகுடிகாடு வரை 4.6 கி.மீ நீளத்திற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை அமைக்கும் பணி,தொடர்ந்து படைவெட்டிகுடிகாடு மணப்பத்தூர் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிதிட்டத்தின் கீழ் ரூ.13.57 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் அங்கன்வாடி மைய கட்டட கட்டுமான பணி, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.18.95 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பள்ளி கட்டட கட்டுமான பணியினையும் பார்வையிட்டு கட்டுமான பொருட்களின் தரம் குறித்து ஆய்வு செய்ததுடன் பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.இந்த ஆய்வில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரபாகரன், ஜாகிர்உசைன், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.






