என் மலர்tooltip icon

    அரியலூர்

    செந்துறை வட்டார வளர்ச்சி அலுவலரை தமிழக ஏரி மற்றும் ஆற்று பாசன விவசாய சங்கத்தினர் முற்றுகையிட்டனர்.
    ஆர்.எஸ்.மாத்தூர்:

    அரியலூர் மாவட்டம் செந்துறையில் தமிழக ஏரி மற்றும் ஆற்று பாசன விவசாய சங்க மாநில தலைவர் விஸ்வநாதன் தலைமையில் செந்துறை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அலுவலரை முற்றுக்கையிட்டனர்.

    ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பரணம், பொன்பரப்பி, மருவத்தூர், வஞ்சனபுரம், ஆலத்தியூர் உள்ளிட பல்வேறு கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர், சாலை வசதி, பாரத பிரதமர் வீடு வழங்கும் திட்டத்திலும் இன்னும்  பல்வேறு  திட்டங்கள் செயல்படாமல் திட்டத்தில் முறைகேடுகள் நடப்பதை கண்டித்து வட்டார வளர்ச்சி அலுவலர் ஜாகிர் உசேனை முற்றுகையிட்டு கோரிக்கை மனுவை அளித்தனர்.

    இதில் மாவட்ட தலைவர் பரமசிவம் ஒன்றிய தலைவர் சின்னபன், கந்தசாமி, பரணம் பழனிச்சாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் செழியன், அண்ணாதுரை, அருணாசலம், சபரி, பாலு  உள்ளிட்ட விவசாயிகளும் கலந்து கொண்டனர்.
    அரியலூர் அருகே மொபட் மீது லாரி எதிர்பாராத விதமாக மோதிய விபத்தில் படுகாயம் அடைந்த தொழிலாளி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
    அரியலூர்:

    அரியலூர் அருகே உள்ள ஜெமீன் ஆத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்னப்பன் (வயது 40). தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு பொருட்கள் வாங்குவதற்கு மொபட்டில் அரியலூருக்கு வந்துள்ளார். ஜெயங்கொண்டம் சாலை சந்தை பேட்டை அருகே வந்த போது அந்த வழியாக வந்த லாரி எதிர்பாராதவிதமாக மொபட் மீது மோதியது. 

    இதில் படுகாயமடைந்த சின்னப்பன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த அரியலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சின்னப்பன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் கருப்பண்ணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அரியலூரில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. மழை பெய்யும் போது சூறாவளி காற்று வீசியதால் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன.
    அரியலூர்:

    தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் என்கிற கத்திரி வெயில் கடந்த 4–ம் தேதி தொடங்கியது. கத்திரி வெயிலால் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்த நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. ஆனால், அரியலூர் மாவட்டத்தில் கத்திரி வெயில் வாட்டி வதைத்தது.

    இந்நிலையில், கடந்த 18–ந்தேதி அரியலூரில் திடீரென்று பலத்த காற்று வீசி இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்தது. இதையடுத்து கடந்த சில நாட்களாக மீண்டும் வெயில் வாட்டி வதைக்க தொடங்கியது. இதனால் பொதுமக்கள் வெளியே வராமல் வீட்டிலேயே முடங்கினர். இந்நிலையில் நேற்று மாலை 5 மணியளவில் அரியலூர் பகுதியில் பலத்த காற்று வீசியது. இதனை தொடர்ந்து சில நிமிடங்கள் ஆலங்கட்டி மழை பெய்தது.

    இதையடுத்து இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்ய தொடங்கியது. இதனால் சாலையில் மழைநீர் வெள்ளம் போல் ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின. மழை பெய்யும் போது பலத்த சூறாவளி காற்றும் வீசியதால் அரியலூர்–செந்துறை சாலையில் இருசுகுட்டை பகுதியில் சாலையோரத்தில் 50 ஆண்டு பழமையான அரசமரம் ஒன்று வேரோடு சாய்ந்து சாலையில் விழுந்தது.

    இதேபோல் கல்லூரி சாலை, அரியலூர் அரசு கலை கல்லூரி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகம் ஆகிய பகுதிகளில் நின்ற சில மரங்கள் வேரோடு சாய்ந்தும், சில மரங்களில் கிளைகள் முறிந்து விழுந்தன. மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்ததில் மின்சார கம்பிகள் மீது பட்டதால் மின்சாரம் கம்பிகளும் தாழ்வாக தொங்கின. இதனால் நிறைய இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    நகராட்சி ஊழியர்கள் சாய்ந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். மேலும் மழை பெய்யும் போது மின் தடை ஏற்பட்டது. இரவு வரை மின்சாரம் வரவில்லை. சுமார் அரை மணிநேரம் மழை நீடித்தது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். நேற்று மாலை பெய்த மழையினால் இரவில் குளிர்ந்த சீதோஷ்ண நிலை ஏற்பட்டது.
    உடையான்குடி ரெயில்வே கேட் தண்டவாளம் அருகே இன்று காலை அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார். அவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஆர்.எஸ்.மாத்தூர்:

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள உடையான்குடி ரெயில்வே கேட் தண்டவாளம் அருகே இன்று காலை அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் காது மற்றும் மூக்கில் ரத்தம் வழிந்த நிலையில் பிணமாக கிடந்தார். இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் விருதாச்சலம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

    அதன் பேரில் சம்பவ இடத்திற்கு ரெயில்வே போலீசார் சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது இறந்த வாலிபரின் சட்டை பையில் ஐ.டி. கார்டு ஒன்று இருந்துள்ளது. அதில் அவரது பெயர் மகேந்திரன் எனவும், தனியார் நிறுவனத்தில் டிரைவராக பணிபுரிந்து வந்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது.

    மேலும்  திண்டுக்கல்லில் இருந்து சென்னை செல்லும் ரெயிலில் தாம்பரம் செல்வதற்காக எடுக்கப்பட்ட டிக்கெட்டும் இருந்தது.  அவர் எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விபரம் தெரியவில்லை. அவரது செல்போனின் முகப்பு படத்தில் இளம்பெண் ஒருவரின் திருமண புகைப்படம் உள்ளது. இதனால் மகேந்திரனுக்கு திருமணமாகி சில மாதங்களே ஆகியிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.  

    மேலும் அவர் எப்படி இறந்தார் என்று தெரியவில்லை. ரெயிலில் பயணம் செய்யும் போது படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து இறந்தாரா? அல்லது யாரேனும் ரெயிலில் இருந்து தள்ளி அவரை கொலை செய்தனரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அரியலூர், வி.கைகாட்டி, செந்துறை துணைமின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
    அரியலூர்:

    தமிழ்நாடு மின்சார வாரியத்தின் அரியலூர் உதவி செயற்பொறியாளர் சாமிதுரை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    அரியலூர் மற்றும் தேளுர் ஆகிய துணைமின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ளது. எனவே இங்கிருந்து மின்சாரம் வினியோகம் பெறும் அரியலூரில் ஒரு சில பகுதிகள், கயர்லாபாத், வாலாஜாநகரம், கல்லங்குறிச்சி, காட்டுப்பிரிங்கியம், பெரியநாகலூர், வாரணவாசி, அஸ்தினாபுரம், கொளப்பாடி.

    ராஜீவ்நகர் மற்றும் மணக் குடி, குறிச்சிநத்தம், புதுப்பாளையம், சிறுவளூர், ஜெமீன்ஆத்தூர், ரசுலாபாத், பாளம்பாடி, பார்ப்பனச்சேரி, தவுத்தாய்குளம், மல்லூர், கடுகூர், கோப்பிலியன்குடிக்காடு, அயன்ஆத்தூர், சீனிவாசபுரம், கிருஷ்ணாபுரம், ரெங்கசமுத்திரம், மண்ணுழி, வி.கைகாட்டி, ரெட்டிபாளையம், விளாங்குடி, தேளூர், நாகமங்கலம், நெரிஞ்சிக்கோரை, வெளிப்பிரிங்கியம், நாயக்கர்பாளையம், பெரியதிருக்கோணம், செட்டித்திருக்கோணம், விக்கிரமங்கலம், முனியங்குறிச்சி, நாச்சியார்பேட்டை, ஆச்சனூர் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    இதேபோல் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் ஜெயங்கொண்டம் உதவி செயற்பொறியாளர் சாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- நடுவலூர் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ளது. எனவே இங்கிருந்து மின்சாரம் வினியோகம் பெறும் சுத்தமல்லி, பருக்கல், காக்காப்பாளையம், சுந்தரேசபுரம், வெண்மாண்கொண்டான், உல்லியக்குடி, சாத்தம்பாடி, காசாங்கோட்டை, தத்தனூர், பொட்டக்கொல்லை மற்றும் மூர்த்தியான் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின்சாரம் இருக்காது.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    தமிழ்நாடு மின்சார வாரியத்தின் செந்துறை உதவி செயற்பொறியாளர் ராஜ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    செந்துறை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ளது. எனவே இங்கிருந்து மின்சாரம் வினியோகம் பெறும் செந்துறை, இலங்கைச்சேரி, ஆதிகுடிக்காடு, உஞ்சினி, நல்லாம்பாளையம், சிறுகடம்பூர், சோழன்குறிச்சி, ஆனந்தவாடி, சென்னிவனம், ராயம்புரம், அகரம், கட்டையன்குடிக்காடு.

    மருவத்தூர், சேடக்குடிக்காடு, விழுப்பணங்குறிச்சி, பொன்பரப்பி, சிறுகளத்தூர், மருதூர், வஞ்சினபுரம், நல்லநாயகபுரம், நக்கம்பாடி, மணப்பத்தூர், சோழன்குடிக்காடு, வங்காரம், அயன்தத்தனூர், முல்லையூர், நத்தகுழி, உகந்தநாயகன்குடிக்காடு, பெரியாகுறிச்சி, இலைக்கடம்பூர், நிண்ணியூர், பிலாக்குறிச்சி, வீராக்கன், செதலவாடி, நாகல்குழி, கீழமாளிகை, மத்துமடக்கி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9.45 முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின்சாரம் இருக்காது.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார். 
    நாம் தமிழர் கட்சியினர் தொடர்ந்து என்னை பற்றி அவதூறு செய்தி பரப்பி வருகின்றனர். இதனால் ம.தி.மு.க. தொண்டர்கள் அமைதி காக்க வேண்டும் என்று வைகோ கூறினார். #Vaiko #MDMK
    திருமானூர்:

    அரியலூர் மாவட்டம் திருமானூரில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கொள்ளிடம் ஆற்றில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக மணல் குவாரி செயல்பட்டுள்ளது. இதில், 3 அடிக்கு பதிலாக 30 அடி ஆழம் வரை மணல் எடுத்ததால் இப்பகுதியில் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு வறட்சி ஏற்பட்டுள்ளது. இந்த கொள்ளிட நீரை நம்பி கல்லணை முதல் கீழணை வரை 40 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயனடைந்து வருகிறது. லட்சக்கணக்கான மக்கள் குடிநீர் பயன்படுத்தி வருகின்றனர்.

    திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் மணல் எடுக்கும் பகுதியின் அருகாமையில் சுடுகாடு உள்ளது. அங்கு திடீர்குப்பத்தை சேர்ந்த மக்கள் வசிக்கிறார்கள். இங்கிருந்து 8 மாவட்டங்களுக்கு கூட்டு குடிநீர் திட்டம் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. தினமும் 17 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கப்படுகிறது. மணல் எடுக்கப்பட்டால் இவைகள் பாதிக்கப்படும். இந்த பகுதி மக்கள் மணல் குவாரி அமைக்க கூடாது என்று அறவழியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். அரசு மணல் குவாரி அமைப்பதை கைவிட வில்லை என்றால் இப்பகுதி மக்களை திரட்டி நாங்களும் சேர்ந்து பெரிய போராட்டம் நடத்துவோம்.

    இவ்வாறு வைகோ கூறினார்.

    பின்னர் நிருபர்கள் திருச்சியில் நாம் தமிழர் கட்சி தொண்டர்களுக்கும், ம.தி.மு.க. கட்சி தொண்டர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் குறித்து வைகோவிடம் கேட்டனர்.

    அதற்கு அவர் பதிலளித்தபோது, “தி.மு.க., அ.தி.மு.க.வை எதிர்த்து அரசியல் செய்து வந்துள்ளேன். ஆனால் ஒரு நாளும் எனக்கு எதிராக இவ்வகையான பிரச்சினைகள் ஏற்பட்டதில்லை. நாம் தமிழர் கட்சியினர் தொடர்ந்து என்னைப்பற்றி அவதூறு செய்திகளை பரப்பி வருகின்றனர். எனினும் அதை பற்றி எனக்கு கவலையில்லை. ம.தி.மு.க. தொண்டர்கள் அமைதிகாக்க வேண்டும்” என்றார்.

    இதனை தொடர்ந்து அவர் திருமானூர் கொள்ளிடம் நீர் ஆதார பாதுகாப்பு குழு, அனைத்து விவசாயிகள் சங்கம், அனைத்து கட்சி ஆகியவற்றின் சார்பில் திருமானூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். #Vaiko #MDMK
    அரியலூர் அருகே வீட்டின் கதவை உடைத்து 90 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    செந்துறை:

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள நாகல்குழி கிராமம் கீழத் தெருவை சேர்ந்தவர் சின்னப்பா. இவரது மனைவி தில்லைநாயகி (வயது 45). இவர்களது மகன் தினேஷ் (21). சின்னப்பா சிங்கப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் சூப்பர்வைசராக கடந்த 20 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். வருடத்திற்கு ஒரு முறை ஊருக்கு வந்து செல்வது வழக்கம். இதனால் தில்லைநாயகி அவரது மகனுடன் நாகல்குழியில் வசித்து வந்தார்.

    இந்தநிலையில் நேற்று அப்பகுதியில் உள்ள கோவில் திருவிழாவையொட்டி இன்னிசை கச்சேரி நடைபெற்றது. அதனை காண்பதற்காக தில்லைநாயகி மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டின் முன்பக்கம் மற்றும் பின்பக்க கதவுகளை பூட்டி விட்டு சென்றனர்.

    இன்னிசை கச்சேரி முடிந்ததையடுத்து நள்ளிரவில் இருவரும் வீடு திரும்பினர். வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்த போது பல்வேறு பொருட்கள் சிதறி கிடந்தது. பின்பக்க கதவு உடைக்கப்பட்டும் கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த தில்லைநாயகி வீட்டின் அறையில் உள்ள பீரோவை பார்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 90 பவுன் நகை கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது. அவற்றின் மதிப்பு ரூ.20 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.


    இது குறித்து இரும்புலிக்குறிச்சி போலீசில் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மோப்பநாய், கைரேகை நிபுணர்கள் மூலம் சோதனை நடத்தப்பட்டது.

    தில்லைநாயகி மற்றும் அவரது மகன் கோவில் திருவிழாவுக்கு சென்றதை நோட்டமிட்டு மர்மநபர்கள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த கொள்ளையில் ஈடுபட்டவர்கள் தெரிந்த நபர்களாகவே இருக்கலாம் என தெரிகிறது. அவர்கள் யாரென்று விசாரணை நடத்தி போலீசார் தேடி வருகின்றனர். மேலும் சம்பவ இடத்திற்கு அரியலூர் மாவட்ட எஸ்.பி. அபினவ்குமார், ஜெயங்கொண்டம் டி.எஸ்.பி. கென்னடி ஆகியோர் சென்று விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Tamilnews
    அரியலூர் மாவட்டத்தில் தேசிய டெங்கு தினத்தை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி தலைமையில் உறுதிமொழி எடுக்கப்பட்டது.
    அரியலூர்:

    அரியலூர் ஊராட்சி ஒன்றியம், ராஜீவ் நகரில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறையின் சார்பில் தேசிய டெங்கு தினத்தை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி தலைமையில் உறுதிமொழி எடுக்கப்பட்டது. சுய உதவிக்குழுக்கள், தூய்மை காவலர்கள், துப்புரவு பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோருக்கு டெங்கு காய்ச்சல் தொடர்பான விழிப்புணர்வு அளிக்கப்பட்டது. 

    மேலும் அப்பகுதிகளில் வீடு வீடாக சென்று பொதுமக்களுக்கு டெங்கு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரம் மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. முன்னதாக நிகழ்ச்சியில் கலெக்டர் விஜயலட்சுமி பேசுகையில், டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளில் முதன்மை பணியான கொசுப்புழு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளும் விதமாக அரியலூர் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் பயனற்ற பெயிண்ட் டப்பாக்கள், உடைந்த பிளாஸ்டிக் பொருட்கள், உடைந்த பானைகள், தேங்காய் ஓடுகள் மற்றும் பழைய டயர்கள் ஆகியவற்றில் தேங்கும் நீரினை உடனடியாக அகற்றி சுற்றுப்புறத்தினை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றார். 

    இதில் திட்ட இயக்குனர் (ஊரக வளர்ச்சி முகமை) லோகேஸ்வரி, துணை இயக்குனர் (சுகாதாரப்பணிகள்) ஹேமசந்த்காந்தி, உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) பழனிசாமி, கடுகூர் வட்டார மருத்துவ அலுவலர் உமா மகேஸ்வரி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜேந்திரன், நல்லமுத்து, சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்டனர். 
    திருமானூர் அருகே அனுமதியின்றி மணல் கடத்திய நபரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து சரக்கு ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.
    திருமானூர்:

    அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே உள்ள பாளையபாடியில் திருமானூர் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த சரக்கு ஆட்டோவை மறித்து சோதனை நடத்தினர். சோதனையில், கொள்ளிடம் ஆற்றில் இருந்து சரக்கு ஆட்டோவில் மணல் கடத்தி வந்தது கரைவெட்டியை சேர்ந்த டிரைவர் சுப்பிரமணியன் (வயது 40) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சுப்பிரமணியனை கைது செய்து, சரக்கு ஆட்டோவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    உடையார்பாளையம் அருகே பள்ளி ஆசிரியை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சாவில் மர்மம் இருப்பதாக கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    உடையார்பாளையம்:

    அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே பாளையம்பாடி அரண்மனைகுறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் சேகர் (வயது 49). விவசாயி. இவருக்கு 3 மகள்கள், 1 மகன் உள்ளனர். இதில் மூத்த மகள் செந்தமிழ்செல்வி (25) மணகெதியில் உள்ள ஒரு தனியார் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாகவும், பள்ளி விடுதியில் காப்பாளராகவும் பணியாற்றி வந்தார். 

    இந்நிலையில் நேற்று காலை செந்தமிழ்செல்வியிடம், அவரது தந்தை செல்போனில் பேசி உள்ளார். அப்போது உனக்கு திருமண ஏற்பாடுகள் செய்து வருவதாக செந்தமிழ்செல்வியிடம் கூறினார். அதற்கு தனக்கு தற்போது திருமணம் வேண்டாம், தம்பி, தங்கைகள் படிப்பு முடிந்த பிறகு பார்த்து கொள்ளலாம் என்று கூறியுள்ளார். இதனால் மனமுடைந்த செந்தமிழ்செல்வி பள்ளி விடுதியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து தகவல் அறிந்த உடையார்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து செந்தமிழ்செல்வி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சேகர் உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    இந்நிலையில் செந்தமிழ்செல்வி சாவில் மர்மம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் நேற்று மாலை அரியலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு அரியலூர்-ஜெயங்கொண்டம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த தாசில்தார் முத்துலட்சுமி, துணை போலீஸ் சூப்பிரண்டு மோகன்தாஸ், இன்ஸ்பெக்டர் ரவிசக்கரவர்த்தி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில், உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் பிரேத பரிசோதனைக்கு பிறகு செந்தமிழ்செல்வி சாவில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்தின் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதையடுத்து அவர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அரியலூர்-ஜெயங்கொண்டம் சாலையில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
    அரியலூரில் கர்ப்பிணி பெண் போலீஸ் தூக்குப்போட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    அரியலூர்:

    தஞ்சை மாவட்டம் கண்டியூர் பகுதியைச் சேர்ந்தவர் வைஷ்ணவி (வயது 28). கடந்த 2013-ம் ஆண்டு காவல் துறையில் பணியில் சேர்ந்த இவர், விழுப்புரத்தில் பயிற்சி முடித்து விட்டு, தஞ்சை, சென்னையில் பணியாற்றினார். பின்னர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு அரியலூர் மாவட்ட ஆயுதப்படையில் பணியாற்றி வந்தார்.

    இந்தநிலையில் வைஷ்ணவிக்கும், மன்னார்குடி மான்கோட்டை பகுதியை சேர்ந்த கார்த்திக் (32) என்பவருக்கும் கடந்த 26.2.2018 அன்று திருமணம் நடைபெற்றது. கார்த்திக் சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்தார். திருமணமாகியதும் தனது மனைவி வைஷ்ணவியுடன் அரியலூர் ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் வசித்து வந்தார். இதனிடையே வைஷ்ணவி கர்ப்பமடைந்தார்.

    நேற்றிரவு கணவன்- மனைவி இருவரும் சாப்பிட்டு விட்டு பேசிக்கொண்டிருந்தனர். பின்னர் வீட்டில் உள்ள தனி அறைக்கு சென்ற வைஷ்ணவி திடீரென சேலையால் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த கார்த்திக், வைஷ்ணவியை மீட்டு அரியலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.

    அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து அரியலூர் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா, டி.எஸ்.பி. மோகன்தாஸ் மற்றும் அரியலூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வைஷ்ணவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. அரியலூர் மாவட்டத்தில் காவிரி விவகாரம் மற்றும் மணல் குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. இதற்கான பாதுகாப்பு பணியில் வைஷ்ணவி ஈடுபட்டு வந்துள்ளார்.

    கர்ப்பிணியாக இருந்த அவர் தொடர்ந்து பணியில் ஈடுபட்டு வந்ததால் வேலைக்கு செல்ல வேண்டாம் என்று கார்த்திக் வற்புறுத்தியதாக தெரிகிறது. மேலும் பணிச்சுமையால் மன உளைச்சலுக்கும் உள்ளாகியிருந்தார். இதன் காரணமாக அவர் தற்கொலைக்கு முயன்றிருக்கலாம் என கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Tamilnews
    அரியலூர் மாவட்ட தே.மு.தி.க அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கல்விகடனை முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட தே.மு.தி.க அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் ஜோசப் சத்தியமூர்த்தி, மாவட்ட பொருளாளர் கவியரசன், மாவட்ட  துணைச் செயலாளர், எழிலரசன்,  தங்கதமிழ்ச் செல்வன், தலைமை செயற்குழு  உறுப்பினர் ஆனந்த், பொதுக்குழு உறுப்பினர் கலிய மூர்த்தி, ராஜா, மாவட்ட தொண்டரணி ராமச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    மாவட்ட செயலாளர் ராம.ஜெயவேல் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் அரியலூர் மாவட்டத்தில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் பாம்பு, நாய், போன்ற விஷகடிகளுக்கு போதிய மருந்துகள் இல்லாததால் உயிர்சேதம் ஏற்படுகின்றது. போதிய மருந்துகளை கையிருப்பில் வைத்திருக்க வேண்டும்  என கேட்டுக் கொள்கின்றோம். அரியலூர் மாவட்டத்தில் அனைத்து மருத்துவமனைகளிலும் 24 மணி நேரமும் டாக்டர்கள், செவிலியர்கள் பணியில் இருக்க வேண்டும் . விவசாய கடன்களையும், கல்வி கடன்களையும் முழுமையாக ரத்து செய்ய வேண்டும் எனவும் மத்திய மாநில அரசை கேட்டுகொள்கின்றோம். 

    அரியலூரில் புதிய பேருந்து நிலையம், அமைத்து தர வேண்டும் , அரியலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளில் கூடுதல் கல்வி கட்டணம் வசூலிக்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும். அரியலூர் மாவட்டத்தில் திருமானூர், தா.பழுர் ஒன்றியத்தை தனி வட்டமாக அறிவிக்க வேண்டும். அரியலூர் மாவட்டத்தில் மணல் திருட்டு, மணல் கொள்ளைக்கு துணை போகும் அரசு வருவாய்துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் மீது தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அரியலூர் ரயில் நிலையத்தில் பொதுமக்கள், ரயில் பயனிகளின் நலன் கருதி கேன்டீன் வசதியை உடனே துவங்க வேண்டும். அரியலூர் மாவட்ட  கொள்ளிடம் ஆற்றில் கல்லனையிலிருந்து அனைக்கரை வரை மணல் குவாரி அமைக்க அனுமதிக்க கூடாது  உள்பட பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. 

    கூட்டமுடிவில் பொதுக்குழு உறுப்பினர் ராஜா நன்றி கூறினார்.
    ×