என் மலர்
அரியலூர்
உடையார்பாளையம்:
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள பெரியதிருக்கோணம் கிராமத்தை சேர்ந்த பாண்டியன்-மாலா தம்பதியரின் மகள் கிருஷ்ணவேணி (வயது 15). வாய் பேச முடியாத , காது கேளாத மாற்றுத்திறன் மாணவியான இவர் ஜெயங்கொண்டத்தில் உள்ள காது கேளாதோர் தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர் விவசாயத்தை காக்கவேண்டும், கரகாட்டம் உள்ளிட்ட கலைகளை வளர்க்க வேண்டும் என வலியுறுத்தி தலையில் கரகம் வைத்து ஆடிக்கொண்டே வயலில் இறங்கி நாற்றுநடும் பணியில் ஈடுபட்டார். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கரகாட்டம் ஆடிக்கொண்டே மாணவி கிருஷ்ணவேணி நாற்று நட்டதை விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.
மாணவியின் தாய் மாலா கூறுகையில், விவசாயத்தை காக்கவும் கரகாட்டம் உள்ளிட்ட கலைகளை வளர்க்கவும் வலியுறுத்தி கிருஷ்ணவேணி நாற்று நடும் பணியை மேற்கொண்டார். மேலும் இந்தியா புக்ஆப் ரெக்கார்டு பெறவும் இந்த முயற்சி செய்து வருகிறோம் என்றார்.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள அய்யப்ப நாயக்கன் பேட்டை கிராமம் வடக்குத் தெருவை சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி ராஜேஸ்வரி (வயது 45), விவசாய கூலித்தொழிலாளி.
இவர்களுக்கு தினேஷ் குமார் (22) என்ற மகன் உள்ளார். சேகர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் ராஜேஸ்வரி விவசாய தொழிலுக்கு சென்றதுடன் ஆடு, மாடுகளை வைத்து பிழைப்பு நடத்தி வந்தார்.
நேற்று இரவு ராஜேஸ்வரி தனது வீட்டில் படுத்து இருந்தார். இந்தநிலையில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக வீட்டின் மண் சுவர் இன்று அதிகாலை திடீரென இடிந்து விழுந்தது. இதில் ராஜேஸ்வரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
அவர் வளர்த்த 3 மாத ஆட்டுக்குட்டி ஒன்றும் அவர் அருகிலேயே படுத்து இருந்தது. அதுவும் இடிபாடுகளுக்குள் சிக்கி இறந்து போனது. இது குறித்து அறிந்த மீன்சுருட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ராஜேஸ்வரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த னர்.
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் இருந்து நேற்று காலை தஞ்சை நோக்கி சென்ற தனியார் பஸ், மின்கம்பி மீது உரசியதில் அரியலூர் மாவட்டம் விழுப்பணங்குறிச்சியை சேர்ந்த நடராஜன்(வயது 65) உள்பட 4 பேர் மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக இறந்தனர். இந்த விபத்தில் இறந்த நடராஜன் பற்றிய உருக்கமான தகவல்கள் வெளியாகிள்ளன. அதன் விவரம் வருமாறு;-
கூலி தொழிலாளியான நடராஜனுக்கு நீலாம்பாள் என்ற மனைவியும், 4 மகள்களும் உள்ளனர். இதில் மூத்த மகள் தனக்கொடியை தஞ்சை மாவட்டம் வரகூரில் திருமணம் செய்து கொடுத்துள்ளார். அவருக்கு நடராஜன், பொங்கல் சீர் கொடுப்பது வழக்கம்.
இந்நிலையில் நாளை(வியாழக்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவதையொட்டி, தனக்கொடிக்கு பொங்கல் சீர் கொடுப்பதற்காக நடராஜன் பஸ்சில் வரகூருக்கு சென்றார்.
அங்கு தனக்கொடிக்கு பொங்கல் சீர் கொடுத்துவிட்டு, மீண்டும் விழுப்பணங்குறிச்சிக்கு திரும்புவதற்காக அவர் அந்த தனியார் பஸ்சில் பயணம் செய்தார். அப்போதுதான் மின்கம்பி மீது பஸ் உரசியதில் மின்சாரம் பாய்ந்து அவர் பரிதாபமாக இறந்துள்ளார். இந்த சம்பவம் அவருடைய உறவினர்கள் மற்றும் விழுப்பணங்குறிச்சி கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள பெரியவளையம் கிராமத்தை சேர்ந்தவர் தமிழழகன். இவருக்கு சுசீலா(வயது 39) என்ற மனைவியும், அபிநயா(13) என்ற மகளும், பாரதிவேலன்(9) என்ற மகனும் உள்ளனர். தமிழழகன் சென்னையில் ெரயில்வே துறையில் என்ஜின் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இதனால் அவர் குடும்பத்துடன் சென்னையில் வசித்து வருகிறார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு பெரியவளையத்திற்கு வந்து பொங்கல் பரிசு தொகுப்பை பெற்றுக்கொண்ட தமிழழகன், அங்குள்ள வீட்டை பூட்டிவிட்டு மீண்டும் சென்னைக்கு சென்றார்.
இந்நிலையில் நேற்று காலை தமிழழகனின் மாமியார் கொடிஞானம், அந்த வீட்டிற்கு வந்து பார்த்தபோது துணிகள் கலைந்து கிடந்ததோடு, நகைகள் இருந்த கவர் மற்றும் பைகள் கீழே கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து பீரோவில் இருந்த 60 பவுன் நகை மற்றும் ரூ.4 ஆயிரம் ஆகியவை திருட்டு போனதாக போலீசாரிடம் கொடிஞானம் புகார் தெரிவித்தார். அதன்பேரில் ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு தேவராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கதவு, பீரோ உள்ளிட்டவற்றில் பதிவாகியிருந்த கைரேகைகளை பதிவு செய்தனர்.
அரியலூரில் இருந்து வரவழைக்கப்பட்ட போலீஸ் மோப்ப நாய் மலர், வீட்டின் பின்பக்கத்தில் இருந்து மோப்பம் பிடித்தபடி ஓடி வயல்வெளி வழியாக அப்பகுதியில் உள்ள தைல மரக்காட்டிற்குள் சென்றது. அங்கு பைகள், துணிகள் சிதறிக்கிடந்தன. அங்கு சிறிது நேரம் சுற்றிவந்த மோப்ப நாய், அங்கிருந்து மீண்டும் வீட்டிற்கு ஓடி வந்து படுத்துக்கொண்டது. இதையடுத்து போலீசார் வீட்டையும், பீரோவையும் சோதனையிட்டபோது பீரோவில் உள்ள கீழ் அறை ஒன்றில் துணிகளுக்கு இடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 60 பவுன் நகை மற்றும் ரூ.4 ஆயிரம் ஆகியவை அப்படியே இருந்தன.
பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், நேற்று முன்தினம் இரவு தமிழழகனுடைய வீட்டின் முன்பக்க கதவின் பூட்டை மர்ம நபர்கள் உடைக்க முயன்றுள்ளனர். ஆனால் அதனை உடைக்க முடியாததால், பின்பக்கம் உள்ள கிரில் கேட் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த அவர்கள், மரக்கதவை கடப்பாரையால் நெம்பி உடைத்து உள்ளே சென்றுள்ளனர். அங்கிருந்த சிறிய பைகள் மற்றும் பீரோவை உடைத்து, அதில் இருந்த சிறிய பைகள், பெரிய பை, பெட்டி உள்ளிட்டவற்றை தூக்கிக்கொண்டு, சுமார் 400 மீட்டர் தொலைவில் உள்ள தைலமர காட்டிற்கு சென்று, அவற்றை பிரித்து பார்த்துள்ளனர். ஆனால் அதில் நகை மற்றும் பணம் போன்றவை இல்லாததால் அவர்கள் ஏமாற்றமடைந்து, அங்கிருந்து சென்றுள்ளனர். மேலும் அவர்கள் பதற்றத்தில் பீரோவின் கீழே உள்ள அறையில் இருந்த துணிகளை கலைத்து பார்க்காததால், 60 பவுன் நகை மற்றும் பணம் தப்பியுள்ளது, என்பது தெரியவந்தது.
இதையடுத்து நகை மற்றும் பணத்தை, கொடிஞானத்திடம் போலீஸ் துணை சூப்பிரண்டு தேவராஜ் ஒப்படைத்தார். மேலும் அவரிடம் நகைகளையும், பணத்தையும் வீட்டில் யாரும் இல்லாத சூழலில் அங்கு வைக்க வேண்டாம் என்று அறிவுரை வழங்கியதோடு, வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் செல்லும்போது போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும், என்றும் அறிவுறுத்தினார். இந்த சம்பவத்தால் காலை முதல் மதியம் வரை பெரியவளையம் கிராமத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே வீரசோழபுரத்தை அடுத்துள்ள வாணவநல்லூர் கிராமத்தில் சுமார் 20-க்கும் மேற்பட்ட மண்பாண்ட தொழிலாளர்கள் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக மண்பாண்ட தொழிலை குலத்தொழிலாக கருதி பல்வேறு சிரமங்களுக்கு இடையே செய்து வருகின்றனர்.
ஆனால் மண்பாண்டங்கள் செய்வதற்கு மூலப்பொருளான களிமண் எடுத்து வருவதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது. மூலப்பொருள் தட்டுப்பாடு அதிக அளவில் உள்ளதால் குறிப்பிட்ட நேரத்தில் மண்பாண்டங்களை உற்பத்தி செய்ய முடியவில்லை. மேலும் மழை, புயல் போன்ற இயற்கை பேரிடர்கள் காரணமாகவும் தொழிலை மேம்படுத்த முடியவில்லை. மேலும் கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக கடந்த 6 மாத காலமாக மண்பாண்ட தொழில் முற்றிலும் பாதிக்கப்பட்டு விட்டது. இதுபோன்ற பல்வேறு இடர்பாடுகள் உள்ளபோதும், தொழிலாளர்கள் மண்பாண்ட தொழிலை விட்டுவிடவில்லை.
இந்நிலையில் தற்போது பொங்கல் பண்டிகை நெருங்குவதால் பானைகள் உள்ளிட்ட மண்பாண்டங்கள் செய்யும் பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பொங்கலன்று பாரம்பரிய வழக்கப்படி பலர் மண்பானைகளிலேயே பொங்கலிடுவார்கள். இதனால் பானைகள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. மேலும் சட்டிகள், அதற்கான மூடிகள் போன்றவையும் செய்யப்படுகின்றன.
மண்பாண்டங்கள் செய்வதற்கு முக்கிய மூலப்பொருளான களிமண்ணை காய வைத்து, பின்னர் களிமண்ணில் தண்ணீர் விட்டு பிசைந்து சுழற்றப்படும் சக்கரத்தில் வைத்தும், நவீன எந்திரம் மூலமும் பானை உருவாக்கப்படுகிறது. அந்த பானைகள் காயவைத்த பின்னர், சூளையில் வைத்து சுடப்படுகின்றன. இதையடுத்து பானைகள் விற்பனைக்கு தயாராகின்றன.
இதேபோல் அடுப்பு, மண் பொம்மைகள், பூந்தொட்டி, அகல்விளக்கு, கலச பானை, தண்ணீர் பானை, தண்ணீர் தொட்டி, மண் குதிரை உள்ளிட்ட பல்வேறு மண்பாண்ட பொருட்களை உற்பத்தி செய்கின்றனர். அவை மீன்சுருட்டி, உடையார்பாளையம், ஜெயங்கொண்டம் ஆகிய பகுதிகளில் உள்ள சந்தைகளில் மொத்த விலைக்கு விற்கப்படுகிறது. மேலும் உள்ளூர் வியாபாரிகளும் மண்பாண்டங்களை வாங்கி செல்கின்றனர். ஒரு பானை அளவினை பொறுத்து ரூ.50 முதல் ரூ.100 விற்கப்படுகிறது.
மண்பாண்டங்கள் தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளபோதிலும், தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக மண்பாண்டங்கள் உற்பத்தி செய்வதில் தேக்க நிலை ஏற்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் வேதனையுடன் தெரிவித்தனர். மேலும் பானை செய்வதற்கு தேவையான மணல் அள்ளுவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கு தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே இலைக்கடம்பூர் கிராமத்தில் உள்ள முதல் ரெயில்வே கேட் அருகே வாலிபர் ஒருவர் தண்டவாளத்தில் தலை வைத்து படுத்திருந்தார். அப்போது அந்த வழியாக அரியலூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் சிலர், தண்டவாளத்தில் படுத்திருந்த வாலிபரை அங்கிருந்து வருமாறு கூறி கூச்சலிட்டனர். ஆனால் அவர் வரவில்லை.
இதனால் அதிவேகமாக வந்த வைகை எக்ஸ்பிரஸ் ரெயில், அந்த வாலிபர் மீது மோதியது. இதில் வாலிபரின் உடல் துண்டு, துண்டாக சிதறியது. இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் செந்துறை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற செந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், வாலிபரின் உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தி விருத்தாசலம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விருத்தாசலம் ரெயில்வே போலீசார், வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், அந்த வாலிபர் நக்கம்பாடி காலனி தெருவை சேர்ந்த மணிவேலின் மகன் அரவிந்தன்(வயது 26) என்பதும், அவர் என்ஜினீயரிங் படித்துள்ளதும் தெரியவந்தது. மேலும் அவர் கல்லூரியில் படித்தபோது ஏற்பட்ட காதல் தோல்வியால் கடந்த சில நாட்களாக மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்ததாகவும், இதனால் மனமுடைந்து தற்கொலை செய்துள்ளதாகவும், விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். கிராம மக்கள் கண்முன்னே ரெயில் மோதி வாலிபர் உடல் சிதறி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசாருக்கு, மீன்சுருட்டி பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்த போலீசார் ரோந்து சென்றனர். அப்போது மீன்சுருட்டி அருகே உள்ள மேலனிக்குழி செட்டிகுளம் மேற்கு கரையில் சந்தேகப்படும்படியாக இருந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர்.
இதில் அவர், மேலனிக்குழி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஜெயபால் மகன் ஜெயபிரகாஷ்(வயது 23) என்பதும், அவர் 950 கிராம் எடையுள்ள கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






