என் மலர்tooltip icon

    அரியலூர்

    இறுதி வாக்காளர் பட்டியலின்படி, அரியலூர்-ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 5,30, 025 வாக்காளர்கள் உள்ளனர்
    அரியலூர்:

    இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, அரியலூர் மாவட்டம் அரியலூர், ஜெயங்கொண்டம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை கலெக்டர் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் கலெக்டரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான ரத்னா நேற்று வெளியிட்டார்.

    அப்போது அவர் கூறுகையில், கடந்த நவம்பர் மாதம் 16-ந்தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலின்படி, அரியலூர், ஜெயங்கொண்டம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் 2,54,807 ஆண் வாக்காளர்களும், 2,56,813 பெண் வாக்காளர்களும், 7 மூன்றாம் பாலின வாக்காளர்களும் என மொத்தம் 5,11, 627 வாக்காளர்கள் இருந்தனர்.

    அதன் பின்னர் கடந்த டிசம்பர் 15-ந்தேதி வரை நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்ததின்படி பொது வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் தொடர்பாக பெறப்பட்ட படிவங்களின் அடிப்படையில் அரியலூர் சட்டமன்ற தொகுதியில் 10,348 வாக்காளர்களும், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் 9,837 வாக்காளர்கள் என மொத்தம் 20,185 வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

    இறப்பு, இரட்டை பதிவு மற்றும் இடப்பெயர்ச்சி காரணமாக அரியலூர் சட்டமன்ற தொகுதியில் 896 வாக்காளர்களும், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் 891 வாக்காளர்களும் என மொத்தம் 1,787 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

    தற்போது வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி அரியலூர் சட்டமன்ற தொகுதியில் 1,31,335 ஆண் வாக்காளர்களும், 1,32,670 பெண் வாக்காளர்களும், 7 மூன்றாம் பாலின வாக்காளர்களும், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் 1,31,663 ஆண் வாக்காளர்களும், 1,34,347 பெண் வாக்காளர்களும், 3 மூன்றாம் பாலின வாக்காளர்களும் என மொத்தம் 5,30,025 வாக்காளர்கள் உள்ளனர் என்றார்.

    அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்னுலாப்தீன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ரவிச்சந்திரன், கோட்டாட்சியர்கள் ஜோதி (அரியலூர்), பூங்கோதை (உடையார்பாளையம்), தேர்தல் தாசில்தார் குமரையா மற்றும் தாசில்தார்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் உடனிருந்தனர்.
    ஜெயங்கொண்டம் அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஜெயங்கொண்டம் :

    அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் கீழத்தெருவை சேர்ந்தவர் சண்முகம். கூலித் தொழிலாளி. இவரது மனைவி இந்திரா (வயது 30). இவர்களுக்கு 4 வயதில் மைதிலி என்ற பெண் குழந்தை உள்ளது. இந்தநிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இந்திரா தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். 

    இதுகுறித்து அவரது தாய் தங்கம்மாள், ஜெயங்கொண்டம் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிந்து இந்திரா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்திராவிற்கு திருமணமாகி 5 ஆண்டுகளே ஆவதால், வரதட்சணை கொடுமை காரணமா? என்று உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.
    உடையார்பாளையம் அருகே மது விற்ற பெண் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    உடையார்பாளையம்:

    அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாசிலாமணி மற்றும் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தத்தனூர் கீழவெளியை சேர்ந்த சுப்பிரமணியன்(வயது 62), தத்தனூர் குடிகாட்டை சேர்ந்த உலகநாதன்(45), வானத்திரையான்பட்டிணத்தை சேர்ந்த வெண்ணிலா(40), காடுவெட்டாங்குறிச்சியை சேர்ந்த கோவிந்தசாமி(45) ஆகிய 4 பேரும் மதுபாட்டில்களை பதுக்கி விற்றது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து 4 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    கீழப்பழுவூர் அருகே ஆட்டு வியாபாரி கொலை வழக்கில் அவருடைய நண்பரை போலீசார் கைது செய்தனர்.
    கீழப்பழுவூர்:

    அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மேலவண்ணம் கிராமத்தை சேர்ந்த தர்மராஜின் மகன் பழனிசாமி(வயது 35). ஆட்டு வியாபாரியான இவர் ஆடுகள் வளர்த்து வந்தார். அந்த ஆடுகளை, அவர் தினமும் மேய்ச்சலுக்கு ஓட்டிச்செல்வது வழக்கம். இதேபோல் நேற்று முன்தினம் மேலேவண்ணம் கிராமத்தில் இருந்து கீழப்பழுவூர் செல்லும் சாலைகளின் இடையே உள்ள தரிசு நிலங்களுக்கு ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்றார்கீழப்பழுவூர் அருகே ஆட்டு வியாபாரி கொலை வழக்கில் அவருடைய நண்பரை போலீசார் கைது செய்தனர்.
    .
    கீழப்பழுவூர் அருகே ஆட்டு வியாபாரி கொலை வழக்கில் அவருடைய நண்பரை போலீசார் கைது செய்தனர்.

    நேற்று முன்தினம் மாலை அங்கு அவரது நண்பருடன் சேர்ந்து மது குடித்தார். அப்போது அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதில் பழனிசாமியின் கழுத்தை அறுத்து விட்டு, அவருடைய நண்பர் தப்பிச்சென்றார். இதில் உயிருக்கு போராடிய பழனிசாமியை, அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து கீழப்பழுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இதில் பழனிசாமி, தனது நண்பரான அதே கிராமத்தை சேர்ந்த நாகராஜனின் மகன் பழனிவேலுடன்(40) சேர்ந்து மது குடித்து தெரியவந்தது. இதையடுத்து பழனிவேலை பிடித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில், பழனிசாமியிடம் பழனிவேல் கடந்த நவம்பர் மாதம் தீபாவளியன்று ஆடு வாங்கி, அதற்கான பணத்தை கொடுக்காமல் இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பொங்கல் பண்டிகைக்காக மற்றொரு ஆடு கொடுக்குமாறு பழனிவேல் கேட்டுள்ளார். அதற்கு பழனிசாமி தீபாவளியின்போது கொடுத்த ஆட்டிற்கான பணத்தை கொடுக்குமாறு கேட்டுள்ளார். இது தொடர்பாக அவர்களுக்கு இடையே பிரச்சினை இருந்துள்ளது.

    இந்நிலையில் நேற்று முன்தினம் அவர்கள் மது குடித்தபோது, அந்த பிரச்சினை தொடர்பாக அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பாக மாறியுள்ளது. அப்போது பழனிவேல் தான் வைத்திருந்த கத்தியால் பழனிசாமியின் கழுத்தை அறுத்து விட்டு தப்பிச்சென்றுவிட்டது, விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதனையடுத்து போலீசார், பழனிவேலை கைது செய்து அரியலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி நேற்று சிறையில் அடைத்தனர்.

    முன்னதாக இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் மற்றும் துணை சூப்பிரண்டு மதன் ஆகியோர் உத்தரவின்பேரில் கீழப்பழுவூர் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் விரைந்து விசாரணை நடத்தி, பழனிவேலை கைது செய்தனர். இதையடுத்து நேற்று துணை சூப்பிரண்டு மதன், தனிப்படை போலீசாரை பாராட்டி, சான்றிதழும் ஊக்கத் தொகையும் வழங்கினார்.
    செந்துறை அருகே விளையாடியபோது தவறி விழுந்த சிறுமி ஏரியில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.
    செந்துறை:

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள உஞ்சினி கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன். இவருடைய மனைவி ஜான்சிராணி. இவர்களுக்கு ஹன்சிகா(வயது 6), தனவர்தினி(5) என 2 மகள்கள்.

    இந்த நிலையில் நேற்று மாலை அவர்களது வீட்டின் அருகே உள்ள சமாதிகுட்டை ஏரிக்கரையில் ஹன்சிகா, குணபிரியன்(5), ராஜபிரகதி(5), தனவர்தினி ஆகிய 4 பேர் விளையாடிக் கொண்டிருந்தனர். அதில் ஹன்சிகா, குணபிரியன், ராஜபிரகதி ஆகியோர் ஒருவர் பின் ஒருவராக ஏரியில் தவறி விழுந்து மூழ்கினர். இதைக்கண்ட தனவர்தினி ஓடி வந்து கிராம மக்களிடம் கூறினார்.

    இதைத்தொடர்ந்து கிராம மக்கள் விரைந்து வந்து ஏரியில் குதித்து 3 பேரையும் மீட்டு செந்துறையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதில் ஹன்சிகாவை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். குணபிரியன், ராஜபிரகதி ஆகியோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த இரும்புலிகுறிச்சி போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கீழப்பழுவூர் அருகே ஆடு மேய்க்க சென்ற வாலிபர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார்.
    கீழப்பழுவூர்:

    அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மேல வண்ணம் கிராமத்தை சேர்ந்த தர்மராஜின் மகன் பழனிசாமி(வயது 35). இவர் ஆடுகள் வளர்த்து வருகிறார். அந்த ஆடுகளை அவர் தினமும் மேய்ச்சலுக்கு ஓட்டிச்செல்வது வழக்கம்.

    அதேபோல் நேற்று மேலவண்ணம் கிராமத்தில் இருந்து கீழப்பழுவூர் செல்லும் சாலைகளின் இடையே உள்ள தரிசு நிலங்களுக்கு ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச்சென்றார். அங்கு நேற்று மாலை அவரது நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது. அப்போது அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.

    இதில் அவர்கள், பழனிசாமியின் கழுத்தை அறுத்து விட்டு தப்பிச் சென்றனர். அவ்வழியே சென்றவர்கள், உயிருக்கு போராடிய நிலையில் கிடந்த பழனிசாமியை மீட்டு சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பழனிசாமி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து கீழப்பழுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பழனிசாமியை கொலை செய்தது யார்? என்ன காரணத்திற்காக அவர் கொலை செய்யப்பட்டார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    ஜெயங்கொண்டம் அருகே கஞ்சா வைத்திருந்த 3 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பஸ் நிலைய பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சூர்யா மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று கண்காணித்தனர். 

    அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் சீனிவாச நகரை சேர்ந்த கணேஷ்(வயது 29), காமராஜபுரத்தை சேர்ந்த ராகுல்தாஸ்(22), அய்யனார் கோவில் தெருவை சேர்ந்த ஜெயராமன்(21) என்பதும், அவர்கள் கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தொடர் மழையால் தண்ணீரில் மூழ்கிய பயிர்களை கணக்கெடுத்து நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள ஆமணக்கந்தோண்டி, கடாரங்கொண்டான், ஆயுதகளம் (வடக்கு) (தெற்கு), உட்கோட்டை, இடைக்கட்டு, கொக்கரனை தொட்டிக்குளம், யுத்தப்பள்ளம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் நெல், கடலை, சம்மங்கி, மிளகாய், துவரை, காய்கறிகள் என பல்வேறு பயிர்கள் பென்னேரி பாசனம் மூலம் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. இதில் தற்போது பெய்து வரும் தொடர்மழையின் காரணமாக அறுவடைக்கு தயாரான நெல்கதிர்கள் நீரில் மூழ்கியும், சில வயல்களில் கதிர்களில் உள்ள நெல்மணிகள் மீண்டும் முளைத்தும் வீணாகியுள்ளது.

    இதேபோல் சம்மங்கி, கடலை, மிளகாய் உள்ளிட்ட பயிர்களும் வீணாகி கருகியும், கடலை செடிகள் முளைக்காமலும் உள்ளன. எனவே இந்த பாதிப்புகள் குறித்து அதிகாரிகள் முறையாக கணக்கெடுப்பு நடத்தி ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை நிவாரணம் வழங்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மேலும் கொரோனா ஊரடங்கு, புரெவி மற்றும் நிவர் புயல், மழை என பல்வேறு விதங்களில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் வாழ்வாதாரம் இழந்து மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். அவர்கள் கூறுகையில், டெல்டா மாவட்டங்களில் ஏற்படும் பாதிப்புகளை மட்டும் பார்வையிடுவதை அதிகாரிகள் வழக்கமாக கொண்டுள்ளனர். அதேபோல் மழையை நம்பியும், பொன்னேரி பாசனம் மூலமும் விவசாயம் செய்து வரும் விவசாயிகளின் நிலங்களையும் பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    உடையார்பாளையத்தில் பழக்கடை தீப்பற்றி எரிந்ததில் ரூ.60 ஆயிரம் மற்றும் பொருட்கள் நாசமாயின. மற்றொரு சம்பவத்தில் கார் தீக்கிரையானது.
    உடையார்பாளையம்:

    அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பழைய போலீஸ் நிலைய தெருவை சேர்ந்தவர் தங்கராசு(வயது 70). இவர் உடையார்பாளையம் கடைவீதியில் பழக்கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்த பின்னர் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். இந்நிலையில் நேற்று அதிகாலை அந்த கடை தீப்பற்றி எரிவதாக அருகில் இருந்தவர்கள், தங்கராசுக்கு தகவல் கொடுத்தனர்.

    இதையடுத்து அங்கு வந்து பார்த்த தங்கராசு, இது பற்றி ஜெயங்கொண்டம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் அங்கு வந்து கடையில் எரிந்த தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் பழங்கள், ஏ.சி. எந்திரம், டி.வி. என சுமார் ரூ.1½ லட்சம் மதிப்பிலான பொருட்கள் மற்றும் கடையில் வைத்திருந்த ரூ.60 ஆயிரம் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது.

    உடையார்பாளையம் லயன் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன்(45). மரங்கள் அறுக்கும் பட்டறை நடத்தி வருகிறார். இவர் தனது காரை வீட்டின் முன்பு நிறுத்திவிட்டு நேற்று முன்தினம் விசேஷ நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தனது குடும்பத்துடன் பஸ்சில் காரைக்கால் சென்றுவிட்டார். நேற்று அதிகாலை அந்த கார் மர்மமான முறையில் தீப்பற்றி எரிந்தது. இது பற்றி தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் தீயணைப்பு வீரர்கள் அங்கு வந்து தீயை அணைத்தனர்.

    இந்த சம்பவங்களில் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் என்ன? என்பது குறித்து உடையார்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
    ஜெயங்கொண்டத்தில் சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் திருச்சி - சிதம்பரம் சாலையில் அரசு மேல்நிலைப்பள்ளி முன்பு வேகத்தடைக்கு அருகே ஒரு சிறிய பள்ளம் இருந்தது. தற்போது பெய்து வரும் தொடர் மழை காரணமாகவும், அதிக வாகனங்கள் சென்று வருவதாலும் அந்த பள்ளம் அகலமாகி குழி போன்று மாறியுள்ளது. 

    அந்த வழியாக குழி இருப்பது தெரியாமல் நடந்து சென்றவர்களும், வாகனத்தில் ெசன்றவர்களும் கீழே விழுந்து அடிபட்டு மருத்துவமனை சென்று திரும்பிய சம்பவம் நடந்துள்ளது. மேலும் விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படும் முன்பு அந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    பொன்னேரியில் குளித்தபோது தகராறில் ஈடுபட்டதை தட்டிக்கேட்ட பொதுப்பணித்துறை தற்காலிக ஊழியரை தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
    மீன்சுருட்டி:

    அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரம் அருகே குருவாலப்பர் கோவில் கிராமத்தில் உள்ள சோழகங்கம் என்றழைக்கப்படும் பொன்னேரி, கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் நிரம்பியது. இதையடுத்து ஏரியில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தினமும் ஏராளமானவர்கள் வந்து ஏரியை பார்த்து செல்கின்றனர். இதில் வாலிபர்கள் சிலர் குடிபோதையில் ஆபத்தான முறையில் செல்பி எடுத்து வருகின்றனர்.

    இந்நிலையில் ஆமணக்கம் தோண்டியை சேர்ந்த 20 பேர் பொன்னேரியில் குளித்து கும்மாளமிட்டு கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அந்த வாலிபர்களுக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டதால், பொதுப்பணித்துறையில் தற்காலிக ஊழியராக பணியாற்றும் குருவாலப்பர் கோவில் கிராமத்தை சேர்ந்த கோபால்சாமி(வயது 55) என்பவர், அந்த வாலிபர்களை தட்டிக்கேட்டு, அங்கு குளிக்க வேண்டாம் என்று கூறியதாக தெரிகிறது.

    இதில் ஆத்திரமடைந்த ஆமணக்கன் தோண்டி கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் மகன் ரஞ்சித் (வயது 23), கலியமூர்த்தி மகன் விக்னேஷ்(23), ரவி மகன் ரகு(22) ஆகியோர் கோபால்சாமியை தகாத வார்த்தைகளால் திட்டி கட்டையால் தாக்கினர். இதையடுத்து அவர் அலுவலகத்திற்குள் சென்று, கதவை பூட்டிக்கொண்டார். அந்த வாலிபர்கள் அலுவலக கதவையும், ஜன்னலையும் உடைத்து சேதப்படுத்தி விட்டு அங்கிருந்து சென்று விட்டனர்.

    இதில் காயமடைந்த கோபால்சாமியை அக்கம், பக்கத்தினர் மீட்டு மீன்சுருட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து அவர் கொடுத்த புகாரின்பேரில் மீன்சுருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுபா வழக்குப்பதிவு செய்து ரஞ்சித், விக்னேஷ், ரகு ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே நீரில் மூழ்கிய நெற்பயிருக்கு நிவாரணம் வழங்க கோரி வயலில் இறங்கி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    மீன்சுருட்டி:

    அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள பிள்ளையார்பாளையம் கிராமத்தில் 3 ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. சில வயல்களில் நெற்பயிர்கள் முளைத்து வீணானது.

    இந்நிலையில் சேதத்தை அதிகாரிகள் கணக்கெடுத்து ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் நிவாரணம் வழங்க கோரி விவசாயிகள் வயலில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் மகாராஜன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் தியாகராஜன் மற்றும் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    பொங்கல் பண்டிகையை கொண்டாட வேண்டிய நேரத்தில், தற்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என்று விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.
    ×