என் மலர்tooltip icon

    அரியலூர்

    • மது விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்
    • 35 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள இரும்புலிக்குறிச்சி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக மது விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து இரும்புலிக்குறிச்சி போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி உள்ளிட்ட போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மது விற்றது தொடர்பாக பரணம் கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ்குமார்(வயது 38), ஆனந்தவாடி கிராமத்தை சேர்ந்த இளவரசன்(40), இரும்புலிக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த லதா ஆகியோரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 35 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை செந்துறை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான விளையாட்டு போட்டி நடைபெற்றது.
    • 50 அரசு பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டத்துக்கு உட்பட்ட அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான புத்தாக்க விளையாட்டு போட்டி நடைபெற்றது. செந்துறை அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் செந்துறை தாலுகாவில் உள்ள 50 அரசு பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இவர்களுக்கு நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், ஈட்டி எரிதல் உள்ளிட்ட தடகள போட்டிகளும், கபடி உள்ளிட்ட குழு போட்டிகளும் நடைபெற்றன. இதில் ஆசிரியர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தி, வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற ஆசிரியர்கள் மாவட்ட அளவில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

    • கோவிலில் குத்துவிளக்கு பூஜை நடந்தது.
    • 16 வகையான பொருட்களால் அபிஷேகம்

    அரியலூர்:

    உடையார்பாளையம் சித்தேரிக்கரையில் உள்ள சசீதளாதேவி என்ற மகா மாரியம்மன் கோவிலில் ஆடி மாத 2-வது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு குத்துவிளக்கு பூஜை நடந்தது. இதைத்தொடர்ந்து மகா மாரியம்மனுக்கு 16 வகையான பொருட்களால் அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் திருமானூரை சேர்ந்த சுருளிராஜனின் மனைவி பிரியா(வயது 30). இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. சம்பவத்தன்று ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக சுருளிராஜன், பிரியாவை திட்டியுள்ளார். இதில் கோபித்துக் கொண்டு அதே கிராமத்தில் இருந்த அவரது தாய் வீட்டிற்கு பிரியா சென்றுவிட்டார். அங்கு அவரது தாய் கடைக்கு சென்றிருந்த நேரத்தில் புடவையால் பிரியா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த தகவல் அறிந்த திருமானூர் போலீசார் அங்கு சென்று பிரியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காவல்துறை சார்பில் விழிப்புணர்வு விளம்பரம் செய்யப்பட்டது
    • போக்குவரத்து விதிகளை கடைப்பிடிக்க வலியுறுத்தி செய்யப்பட்டது

    அரியலுர்:

    மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் நேற்று தொடங்கியநிலையில், போக்குவரத்து விதிகளை கடைப்பிடிக்க வலியுறுத்தி,செஸ் பலகை மற்றும் சாலை விதிகளை தொடர்புபடுத்தி, அரிலூர் மாவட்ட காவல் துறை சார்பில் விழிப்புணர்வு விளம்பரம் வெளியிடப்பட்டது. சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அந்த விளம்பரத்தில் ராணி உள்ளிட்ட சில காய்களுடன் கூடிய ஸெ் பலகையில், செஸ் பலகையோ அல்லது சாலையோ, தவறான சிறிய நகர்வும் பெரிய விளைவை ஏற்படுத்தும் என்றும், தவளான திசையில் வாகனங்களை இயக்ககூடாது என்று அச்சிடப்பட்டுள்ளது.

    • உலக கல்லீரல் தின விழிப்புணர்வு வாகன பேரணி நடந்தது
    • கிராமம் தோறும் வாகனங்களில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் திருமானூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக கல்லீரல் அலட்சிய தின விழிப்புணர்வு வாகன பேரணி நடைபெற்றது. நிகழ்ச்சியில் அனைத்து கர்ப்பிணித் தாய்மார்களுக்கும் மஞ்சள் காமாலை உள்ளதா என பரிசோதித்தல். பணியாளர்கள் அனைவருக்கும் மஞ்சள்காமாலை தடுப்பூசி போடுதல். நடமாடும் மருத்துவக்குழு மூலம் பரிசோதித்தல் மற்றும் விழிப்புணர்வு வழங்கல். மருத்துவ நிலையங்களிலும் கிராமங்களிலும் மஞ்சள்காமாலை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல். கிராமம் தோறும் வாகனங்களில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சியில் வட்டார மருத்துவ அலுவலர் தமிழ்ச்செல்வன், மருத்துவ அலுவலர் பார்த்திபன் தலைமை வகித்தனர். வட்டார சுகாதார மேற்பார்வையாளர், சுகாதார ஆய்வாளர் ராமமூர்த்தி மற்றும் சுகாதார ஆய்வாளர்கள், பகுதி சுகாதார செவிலியர், கிராம சுகாதார செவிலியர்கள், கலந்து கொண்டனர்.

    • ஜி.எஸ்.டி.யை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது
    • மார்சிஸ்ட் கட்சியினர் ஈடுபட்டனர்.

    அரியலுர்:

    அரிசி, பருப்பு, போதுமை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் மீது ஜிஎஸ்டி விதிக்கப்பட்டதை கண்டித்து, அரியலூர் அண்ணா சிலை அருகே மார்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் ஒன்றிய செயலாளர் அருணன் தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் வாலண்டினா, மாவட்ட செயலாளர் இளங்கோவன் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மணிவேல், அம்பிகா, கிருஷ்ணன் உட்பட பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

    • புதுபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் வீரப்பிள்ளை மகன் கண்ணன்(வயது47). கடந்த 2020 ஆம் ஆண்டு இவர், தனது 14 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
    • இது தொடர்பான வழக்கு அரியலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இறுதி விசாரணை முடிந்து தீர்ப்பளிக்கப்பட்டது.

    அரியலூர் :

    அரியலூர் மாவட்டம், புதுபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் வீரப்பிள்ளை மகன் கண்ணன்(வயது47). கடந்த 2020 ஆம் ஆண்டு இவர், தனது 14 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

    இது குறித்து அச்சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் அரியலூர் மகளிர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு கண்ணனை போக்சோ சட்டத்தில் கைதுசெய்தனர்.

    இது தொடர்பான வழக்கு அரியலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இறுதி விசாரணை முடிந்து தீர்ப்பளிக்கப்பட்டது.

    வழக்கை விசாரித்த நீதிபதி, சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த கண்ணனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபாதமும் விதித்து தீர்ப்பளித்து உள்ளார்.

    • விடுதிகள் அனைத்தும், தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகள் தங்கும் விடுதிகள் மற்றும் இல்லங்கள் (ஒழுங்குமுறை) சட்டம் 2014 மற்றும் விதிகள் 2015படி தங்களது விடுதிகளை பதிவு செய்துக்கொள்ள தெரிவிக்கப்படுகிறது.
    • பதிவு செய்வதற்கான விண்ணப்பத்தினை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, 2வது தளம், அரசு பல்துறை வளாகம், அரியலூர் - 621704, தொலைப்பேசி எண் 04329-296239 என்ற முகவரியில் பெற்றுக்கொள்ளலாம்

    அரியலூர் :

    அரியலூர் மாவட்டத்தில் தனியார் கல்வி நிறுவனங்களினால் நடத்தப்பட்டு வரும் 18 வயதிற்குட்பட்வர்களுக்கான தங்கும் இல்லங்கள் மற்றம் விடுதிகள் அனைத்தும், தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகள் தங்கும் விடுதிகள் மற்றும் இல்லங்கள் (ஒழுங்குமுறை) சட்டம் 2014 மற்றும் விதிகள் 2015படி தங்களது விடுதிகளை பதிவு செய்துக்கொள்ள தெரிவிக்கப்படுகிறது.

    மேலும் இல்லங்கள் பதிவு செய்வதற்கு பதிவு கட்டணமாக ரூ.3000/- மாவட்ட கலெக்டர், அரியலூர் என்ற பெயரில் வரைவேலை எடுத்து வழங்கப்பட வேண்டும் எனவும்,

    பதிவு செய்வதற்கான விண்ணப்பத்தினை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, 2வது தளம், அரசு பல்துறை வளாகம், அரியலூர் - 621704, தொலைப்பேசி எண் 04329-296239 என்ற முகவரியில் பெற்றுக்கொள்ளலாம்.

    பதிவு பெறாமல்நடத்தப்படும் விடுதிகள் கண்டறியப்பட்டால் சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இத் தகவலை அரியலூர் மாவட்ட கலெக்டர்ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

    • 24 மணி நேரமும் இயங்கும் அரசு பொது மருத்துவமனையில் நர்ஸ் மட்டுமே பணியில் இருந்த போது வாலிபர் ஒருவர் மருத்துவமனைக்குள் வந்து அவரை பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    • நர்ஸ் கொடுத்த புகாரின் பேரில் செந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயபாரதியை கைது செய்தனர்.

    செந்துறை:

    அரியலூர் மாவட்டம் செந்துறை அரசு பொது மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வருபவர் ராதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது, வயது 35). ஆண்டிமடம் பகுதியைச் சேர்ந்த இவர் இரவு பணியில் இருந்தபோது செந்துறை ரெயில்வே ஸ்டேஷன் பகுதி சேர்ந்த விஜயபாரதி என்பவர் அங்கு வந்தார்.

    பணியில் இருந்தவர்கள் கேட்டபோது, தனது அண்ணன் மருத்துவமனையில் உள் நோயாளியாக தங்கி சிகிச்சை பெற்று வருவதாகவும், அவரை பார்க்க வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அப்போது பணியில் இருந்த நர்சு ராதா, ஏற்கனவே அவரை சிகிச்சை முடிந்து வீட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டதாக கூறியுள்ளார்.

    இந்த நிலையில் மீண்டும் நள்ளிரவு மருத்துவமனைக்கு வந்த விஜயபாரதி மருத்துவமனையின் வாயில் கதவை மூடினார். இதைப்பார்த்த ராதா அவரை தடுத்து தட்டிக்கேட்டுள்ளார். உடனே ராதாவின் கையை பிடித்து இழுத்து அவரை பலாத்காரம் செய்ய முயற்சி செய்துள்ளார். மேலும் அவருக்கு பாலியல் தொல்லையும் அளித்துள்ளார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கதவை திறந்து விட்டு கூச்சல் போட்டுள்ளார். உடனடியாக அங்கு பணியில் இருந்த உதவியாளர்கள் வந்து ராதாவை காப்பாற்றி மீட்டு உள்ளனர். இதுகுறித்து ராதா கொடுத்த புகாரின் பேரில் செந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயபாரதியை கைது செய்தனர்.

    பின்னர் செந்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை சிறையில் அடைத்தனர். 24 மணி நேரமும் இயங்கும் அரசு பொது மருத்துவமனையில் நர்ஸ் மட்டுமே பணியில் இருந்த போது வாலிபர் ஒருவர் மருத்துவமனைக்குள் வந்து அவரை பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் செந்துறை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • அரியலூர் பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகில் தேமுதிக சார்பில் உணவுப் பொருட்கள் மீது ஜிஎஸ்டி வரி உயர்வு, கேஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் அவைத்தலைவர் மதி, மாவட்ட பொருளாளர் வேல்முருகன், மாவட்ட துணைச் செயலாளர் தெய்வசிகாமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    அரியலூர் :

    அரியலூர் பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகில் தேமுதிக சார்பில் மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும், உணவுப் பொருட்கள் மீது ஜிஎஸ்டி வரி உயர்வு, கேஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து மாவட்ட செயலாளர் இராம ஜெயவேல் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இளைஞர் அணி துணைச் செயலாளரும், அரியலூர் மாவட்ட தேர்தல் ஆணையாளர் பாலமுருகன் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்,

    இந்த நிகழ்ச்சியில் அவைத்தலைவர் மதி, மாவட்ட பொருளாளர் வேல்முருகன், மாவட்ட துணைச் செயலாளர் தெய்வசிகாமணி, தங்கஜெயபாலன், தேன்மொழி சம்பத், தலைமை செயற்குழு உறுப்பினர் ஆனந்தன், முத்து, பொதுக்குழு உறுப்பினர் ஜேக்கப், தொழிற்சங்க செயலாளர் பாண்டியன்,

    ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், ஜெகதீசன், அறிவழகன், குமாரதேவன், செல்வராஜ், நகரச் செயலாளர் சின்னபாண்டு, முனியசாமி, தாமஸ் ஏசுதாஸ், உட்பட அனைத்து பிரிவு பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர். கண்டன ஆர்ப்பாட்டம் முடிவில் ஒன்றிய செயலாளர் மணிகண்டன் நன்றி கூறினார்.

    • ஓட்டல்கள் மற்றும் உணவகங்களில் தானாகவோ அல்லது உணவுக்கான கட்டணத்துடன் இணைத்தோ சேவை கட்டணம் வசூலிக்கக்கூடாது,
    • 1915 என்ற தேசிய நுகர்வோர் உதவிஎண் மூலமாகவோ அல்லது தேசிய நுகர்வோர் ஹெல்ப்லைன் மொபைல் செயலிலோ மூலமாகவோ புகார்அளிக்கலாம்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    உணவகங்கள் மற்றும் ஓட்டல்களில் சேவைக் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக நியாயமற்ற வர்த்தக நடைமுறைகள் மற்றும் நுகர்வோர் உரிமை மீறல்களை தடுப்பதற்கான வழிகாட்டுதல்களை மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் வெளியிட்டுள்ளது.

    அதன்படி ஓட்டல்கள் மற்றும் உணவகங்களில் தானாகவோ அல்லது உணவுக்கான கட்டணத்துடன் இணைத்தோ சேவை கட்டணம் வசூலிக்கக்கூடாது, அத்துடன் வேறு பெயர்களிலும் சேவைக் கட்டணம் வசூலிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.சேவைக் கட்டணம் செலுத்துமாறு வாடிக்கையாளரை ஓட்டல்கள் நிர்பந்திக்கக்கூடாது. சேவைக் கட்டணம் என்பது விருப்பத்தின் பேரிலானது அல்லது நுகர்வோரின் விருப்பத்தை சார்ந்தது என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும்.

    சேவைக் கட்டணத்தின் அடிப்படையில் சேவைகளை வழங்குவதில் எந்தத் தடையும் நுகர்வோர் மீது விதிக்கக்கூடாது.மேலும் உணவு கட்டணத்துடன் சேர்த்தோ அல்லது மொத்த தொகைக்கு ஜி.எஸ்.டி. விதிப்பதன் மூலமோ சேவைக் கட்டணத்தை வசூலிக்க முடியாது. இந்த வழிகாட்டுதல்களை மாறாக எந்தவொரு உணவகமோ, ஓட்டலோ சேவைக் கட்டணம் வசூலித்தால் பில் கட்டணத்தில் இருந்து அதை நீக்குமாறு சம்பந்தப்பட்ட நிர்வாகத்திடம் வாடிக்கையாளர் அறிவுறத்தலாம்.

    அத்துடன் 1915 என்ற தேசிய நுகர்வோர் உதவிஎண் மூலமாகவோ அல்லது தேசிய நுகர்வோர் ஹெல்ப்லைன் மொபைல் செயலிலோ மூலமாகவோ புகார்அளிக்கலாம்.விரைவான குறைதீர்வு நடவடிக்கைகளுக்கு நுகர்வோர் ஆணையத்தின் இணையதளம் மூலம் புகார் அளிக்கலாம். மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் புகார் அளிக்கலாம். மேலும் என்ற மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு நுகர்வோர் மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்திற்கு நேரடியாக புகார் அளிக்கலாம்.

    அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து உணவகங்களும் மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்தால் வெளியிட்டுள்ள அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் முறையாக கடைபிடிக்குமாறும், இதனை மீறும் உணவகங்கள் மீது சட்டபடி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

    மேலும் உணவகங்கள் வழிகாட்டு நெறிமுறைகளை மீறினால் நுகர்வோர்கள் தங்களது புகார்களை தெரிவிக்க மேற்குறிப்பிட்ட வழிமுறைகளை பின்பற்றிடவும் மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

    ×