என் மலர்
அரியலூர்
- ஜெயங்கொண்டம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் குண்டும் குழியுமான சாலைகள் சீரமைப்பு பணி நடைபெற்றன
- கண்ணன் எம்.எல்.ஏ. தொடங்கிவைத்தார்
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதாக பொதுமக்கள் சட்டமன்ற உறுப்பினரிடம் மனு அளித்தனர். அதன் அடிப்படையில் முதல் கட்டமாக தூரிய நடவடிக்கை எடுக்கும் விதமாக
8-வது வார்டு ராஜகொல்லை தெருவில், சட்ட மன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணியை, சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் துவங்கி வைத்தார்.
உடன் நகராட்சி தலைவர் சுமதி சிவகுமார், நகராட்சி துணைத் தலைவரும், திமுக நகர கழக செயலாளருமான வெ.கொ.கருணாநி, நகர் மன்ற உறுப்பினர்கள் எஸ்.ராஜமாணிக்கம் பிள்ளை, வார்டு கழக செயலாளர் மருதை.விஜயன், வீர.புகழேந்தி வாசு மற்றும் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
- டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளது
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூரில் மனித உரிமைகள் கழக தொழிற்சங்கத்தின் கலந்தாய்வு கூட்டம் மண்டல தலைவர் மருதமுத்து தலைமையில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் ராமச்சந்திரன், மாவட்ட செயலாளர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தா.பழூர் சுத்தமல்லி பிரிவு சாலையில் பொதுமக்களுக்கு இடையூறாக அமைந்துள்ள அரசு டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய வேண்டும். தா.பழூரில் பஸ் நிறுத்தம் அமைந்துள்ள இடங்களில் கழிவறை வசதி அமைத்து தர வேண்டும். அரசு புறம்போக்கு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். விவசாயிகளுக்கு தட்டுப்பாடு இல்லாத யூரியா வழங்க வேண்டும். மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும். தொழிலாளர்கள் நலவாரிய சான்றிதழ்களுக்கு கிராம நிர்வாக அலுவலர்கள் காலதாமதப்படுத்தாமல் சான்றிதழ் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.
- தீராத வயிற்று வலி இருந்து வந்துள்ளது
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்குட்பட்ட கீழவண்ணம் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவருடைய மனைவி செல்வி (வயது 42). இவருக்கு கடந்த சில மாதங்களாகவே தீராத வயிற்று வலி இருந்து வந்துள்ளது. அதற்கான சிகிச்சையும் பெற்று வந்துள்ளார். இந்தநிலையில் வயிற்று வலி அதிகமானதால் விஷம் குடித்தார். இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை உறவினர்கள் மீட்டு அரியலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி செல்வி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து கீழப்பழுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பெண்ணை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
- 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அரியலூர்
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள திராவிடநல்லூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மனைவி மல்லிகா (வயது 39). இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் பழனியம்மாள். இவரது வீட்டின் கட்டுமான பணியின்போது சிமெண்டு சாந்து மல்லிகாவின் வீட்டு தொட்டியில் விழுந்து தண்ணீர் அழுக்கானது. இதனை கண்ட மல்லிகா, பழனியம்மாளிடம் தொட்டியை மூடி விட்டு சிமெண்டு பூச வேண்டியது தானே என்று கேட்டுள்ளார். இதில் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பழனியம்மாள், அவரது மகள் துர்காதேவி மற்றும் ஞானப்பிரகாசம் (வயது 30) ஆகியோர் மல்லிகாவை இரும்பு மட்ட பலகையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதில் காயமடைந்த மல்லிகா மயங்கி கீழே விழுந்தார். இதையடுத்து, அவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து மல்லிகா அளித்த புகாரின் பேரில் ஆண்டிமடம் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் வழக்குப்பதிவு செய்து பெண்ணை தாக்கிய ஞானப்பிரகாசத்தை கைது செய்தார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக பழனியம்மாள், துர்காதேவி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- விசாலாட்சி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
- விசாலாட்சி அம்மன் எழுந்தருளி வீதி உலா வந்தார்
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூரில் உள்ள விசாலாட்சி அம்மன் உடனுறை விஸ்வநாதர் கோவிலில் ஆடிப்பூரத்தையொட்டி சுவாமி, அம்பாள் மற்றும் துர்க்கை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் விஸ்வநாதர் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விசாலாட்சி அம்மன் அகிலாண்டேஸ்வரி கோலத்தில் அலங்காரம் செய்யப்பட்டு, வளையல், மாலை அணிவிக்கப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் விசாலாட்சி அம்மன் ராஜ வீதிகளில் ஆடிப்பூரத்து அம்மனாக எழுந்தருளி வீதி உலா வந்தார். விடையாற்றி உற்சவத்துக்கு பிறகு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- மாட்டு வண்டியில் மணல் கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.
- கிராம நிர்வாக அலுவலர் போலீசில் ஒப்படைத்தார்
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூர் உதயநத்தம் கிராம நிர்வாக அலுவலர் சிவகுமார் தனது உதவியாளருடன் உதயநத்தம் தினக்குடி பிரிவு சாலை அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது தினக்குடி ஓடையில் இருந்து உதயநத்தம் காலனி தெருவை சேர்ந்த ரவி (வயது 50) என்பவர் மாட்டு வண்டியில் மணல் கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை கிராம நிர்வாக அலுவலர் தா.பழூர் போலீசில் ஒப்படைத்தார். இதையடுத்து ரவியை போலீசார் கைது செய்தனர். மேலும் மாட்டு வண்டியும் பறிமுதல் செய்யப்பட்டது.
- அந்த வழியாக 2 மாட்டு வண்டிகளில் மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது.
- இதையடுத்து மாட்டு வண்டியில் மணல் கடத்தி வந்ததாக கார்குடி காலனி தெருவை சேர்ந்த பரமசிவம்(வயது 55), காசிநாதன்(53) ஆகியோரை தா.பழூர் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் கைது செய்து, மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தார்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள கார்குடி கிராம நிர்வாக அலுவலர் அறிவழகன், தா.பழூர் -சுத்தமல்லி சாலையில் இருந்து கார்குடி பிரிவு சாலையில் வந்தபோது, அந்த வழியாக 2 மாட்டு வண்டிகளில் மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது.
அந்த வண்டிகளை ஓட்டி வந்தவர்களிடம் விசாரித்தபோது, அனுமதியின்றி கொள்ளிடம் ஆற்றில் இருந்து மணல் ஏற்றி கடத்தி வந்தது தெரியவந்தது.
இது குறித்து தா.பழூர் போலீசில், கிராம நிர்வாக அலுவலர் புகார் செய்தார். இதையடுத்து மாட்டு வண்டியில் மணல் கடத்தி வந்ததாக கார்குடி காலனி தெருவை சேர்ந்த பரமசிவம்(வயது 55), காசிநாதன்(53) ஆகியோரை தா.பழூர் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் கைது செய்து, மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தார்.
- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் செவிலியர் கூட்டமைப்பு சார்பில் மாநில பொதுக்குழு கூட்டம் மற்றும் மாநாடு நடைபெற்றது
- கொரோனா தடுப்பூசி பணி ஞாயிற்றுக்கிழமை நடத்துவதை மாற்றி வேலை நாட்களில் தடுப்பூசி செலுத்த வேண்டும்
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தனியார் திருமண மண்டபத்தில் சுகாதார செவிலியர் சங்கம் மற்றும் செவிலியர் கூட்டமைப்பு சார்பாக மாநில பொதுக் குழு கூட்டம் மற்றும் மாநாடு நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் மீனாட்சி தலைமை தாங்கினார். முன்னதாக மாநில துணை தலைவர் வசந்தா வரவேற்று பேசினார்.
கூட்டத்தில் கிராமப் பகுதி சமுதாய சுகாதார செவிலியர் காலி பணியிடங்கள் உடனடியாக நிரப்ப வேண்டும், பணி விதியினை திருத்தம் செய்ய வேண்டும், கொரோனா தடுப்பூசி பணி ஞாயிற்றுக்கிழமை நடத்துவதை மாற்றி வேலை நாட்களில் தடுப்பூசி செலுத்த வேண்டும், அவசர கால பணிகள் தவிர மற்ற நேரங்களில் 8 மணி நேரம் மட்டுமே பணி செய்ய உத்தரவிட வேண்டும்.
கோவிட்-19 ஊக்கத்தொகை விடுபட்ட துணை கிராம பகுதி சுகாதார செவிலியர்களுக்கு உடனே வழங்க வேண்டும், சுகாதார துறை அறிக்கைகளை பதிவேற்றம் செய்ய டேட்டா கார்டு வழங்க வேண்டும், ஏழாவது ஊதிய குழுவின் பரிந்துரைப்படி 21 மாத நிலுவை தொகையினை உடனே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தீர்மானமாக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் செயல் தலைவர் கோமதி, மாநில தலைவர் மீனாட்சி, பொருளாளர் காயத்ரிஉள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட துணைத் தலைவர் எஸ்தர் ராஜகுமாரி நன்றி கூறினார்.
- நமது போராட்டங்கள் பல சமுதாய புரட்சியை ஏற்படுத்தி உள்ளன. இது ஆயுதம் ஏந்திய புரட்சி இல்லை.
- நீட் தேர்வு, தேசிய கல்விக்கொள்கை குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவோம். வெற்றி சற்று தாமதம் ஆகலாம். ஆனால் வெற்றி பெற்றே தீருவோம்.
அரியலூர்:
அரியலூரில் நடைபெற்ற திராவிடர் கழக இளைஞரணி மாநாட்டில், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கலந்து கொண்டு மேலும் பேசியது:
அரியலூர் காவிக்கோட்டை என்பதை மறக்க வேண்டும். இன்றைய தினம் திராவிடர் கழகத்தினரின் கூட்டத்தை பார்த்திருப்பீர்கள். இனி அரியலூரை யாரும் காவிக் கோட்டை என சொல்ல மாட்டார்கள். திராவிட மாடல் என்பது அனைவரும் தேர்லில் துண்டு போட்டு செல்வது தான். அதைத்தான் திராவிட இயக்கங்கள் செய்து வருகிறது. அக்காலத்தில் செங்கல் கொண்டு வீடுகட்ட கூடாது, வீட்டில் கிணறு வெட்டக்கூடாது என இருந்ததை திராவிடர் இயக்கம் மாற்றியுள்ளது.
திராவிடர் கழகத்தினால் மேற்கொண்ட போராட்டங்களினால் இன்று நாடு முழுவதும் அனைத்து சாதிகளை சேர்ந்தவர்கள், பெண்கள் மருத்துவர்களாகவும், மேயராகவும் இருக்கிறார்கள். பல்வேறு துறைகளிலும் பணியாற்றி வருகிறார்கள். நமது போராட்டங்கள் பல சமுதாய புரட்சியை ஏற்படுத்தி உள்ளன. இது ஆயுதம் ஏந்திய புரட்சி இல்லை.
அறிவுப் புரட்சியால், சமத்துவ புரட்சியால் மக்களை சிந்திக்க வைத்துள்ளது. ஆளும் பாஜக கொண்டு வந்துள்ள தேசிய கல்விக்கொள்கை என்பது நேஷனல் எஜூகேசன் பாலிசி என்று கூறப்படுகிறது. ஆனால் உண்மையில் அது நோ எஜூகேசன் பாலிசியாக அதாவது பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட பாமர மக்களுக்கு கல்வி இல்லை என்று கூறும் திட்டமாக இருக்கிறது.
3 ஆம் வகுப்பு, 5 ஆம், வகுப்பு, 8 ஆம் வகுப்புகளில் பொதுத்தேர்வு நடத்தி கல்வியை சீர்குலைக்க முயற்சிக்கிறது.
எனவே இதையும் நாம் எதிர்க்கிறோம். வெற்றி பெறுவோம் திராவிடர் கழகமும், பெரியாரும் எடுத்த எந்த போராட்டமும் வெற்றி பெறாமல் போனது இல்லை. அதன்படி இந்த போராட்டத்தை கையில் எடுத்து இருக்கிறோம். கண்டிப்பாக ெவற்றி கிடைக்கும். நீட் தேர்வு, தேசிய கல்விக்கொள்கை குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவோம். வெற்றி சற்று தாமதம் ஆகலாம். ஆனால் வெற்றி பெற்றே தீருவோம்.
மாநாட்டில், துணைத் தலைவர் கலி.பூங்குன்றன்,போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ. கணேசன் சட்டப் பேரவை உறுப்பினர்கள் கு.சின்னப்பா, க.சொ.க.கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
முன்னதாக பேரணியை சிறப்பான மேற்கொண்ட நாகைக்கு முதல் பரிசு மற்றும் சான்றிதழ், தஞ்சாவூருக்கு 2 ஆவது பரிசும், சான்றிதழ், விருத்தாசலத்துக்கு 3 ஆவது பரிசும், சான்றிதழும் வழங்கப்பட்டது.
- ஜெயங்கொண்டம் நகராட்சி கூட்டத்தில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரி அ.தி.மு.க. கவுன்சிலர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்
- கீழக்குடியிருப்பு மூன்றாவது மற்றும் நான்காவது வார்டுகளில் மயானத்திற்கும், கொம்மேடு பகுதியில் வேட்டைக்கார தெருவில் தார் சாலை, மின்விளக்கு வசதி செய்த தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர்
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகர்மன்ற சாதாரண கூட்டம் தலைவர் சுமதி சிவகுமார் தலைமையில் நடைபெற்றது. நகராட்சி ஆணையர் சித்ரா (பொறுப்பு) வரவேற்றார். துணைத் தலைவர் கருணாநிதி முன்னிலை வகித்தார்.
தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் சாலை வசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி, ஏரி, குளங்கள் தூர்வாருதல் உள்ளிட்ட பொதுமக்களின் அடிப்படை தேவை மற்றும் வசதிகள் நிறைவேற்றுவது குறித்து உறுப்பினர்கள் வலியுறுத்தி பேசினர். இந்த கூட்டத்தில் நகராட்சியின் செலவினங்கள் உள்ளிட்ட 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக இளநிலை உதவியாளர் சாவித்திரி தீர்மானங்களை வாசித்தார். கூட்டத்தில் நகராட்சி உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கவுன்சிலர் ரங்கநாதன் பேசுகையில், ஜெயங்கொண்டம் பஸ் நிலையத்தில் ராஜேந்திர சோழன் நினைவு வளைவு வைக்க வேண்டும், நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குத்தகைக்காரர்கள் நகராட்சி அனுமதி இன்றி போலி ரசீது தயாரித்து வாரச்சந்தை மற்றும் தினசரி வசூல் செய்து வருவதை தடுத்து நிறுத்த வேண்டும்.
சந்தையை மறு குத்தகைக்கு ஏலம் விட வேண்டும், குத்தகைக்காரர்கள் செலுத்த வேண்டிய பணத்தை வசூல் செய்ய வேண்டும்.
கீழக்குடியிருப்பு மூன்றாவது மற்றும் நான்காவது வார்டுகளில் மயானத்திற்கும், கொம்மேடு பகுதியில் வேட்டைக்கார தெருவில் தார் சாலை, மின்விளக்கு வசதி செய்த தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து பேசினார்.
6-வது வார்டு கவுன்சிலர் செல்வராஜ், பஸ் நிலையத்தில் ஆவின் பால்கடை ஏலம் விட வேண்டும், 5-வது வார்டு குஞ்சிதபாதபுரம் பகுதியில் மின்விளக்கு வசதியும், கழிவுநீர் வாய்க்காலும் அமைத்து தர வேண்டும், 18-வது வார்டு கவுன்சிலர் கிருபாநிதி, தூய்மை பணியாளர்கள் தூய்மை பணி முறையாக மேற்கொள்ள வேண்டும் கீழத்தெருவிற்கு நீர்த்தேக்க தொட்டி ஒன்று அமைத்து குடிநீர் வசதி செய்து தர வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
ஒரு கட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் கோரிக்கைகள் கால தாமதம் ஆவதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சுதந்திர தினத்தன்று வீடுகள் தோறும் கொடியேற்றுவதற்கு கவுன்சிலர்கள் தாங்களுக்கு நகராட்சி வழங்கிய படிப்பணத்தை கொடுத்து உதவினர்.
- போதைப் பொருள்களை முற்றிலுமாக ஒழிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி அரியலூர் அண்ணாசிலை அருகே பாட்டாளி மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
- ஆர்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் மாவட்டத் தலைவர் சின்னதுரை தலைமை வகித்தார்
அரியலூர் :
தமிழகத்தில் போதைப் பொருள்களை முற்றிலுமாக ஒழிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி அரியலூர் அண்ணாசிலை அருகே பாட்டாளி மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், இளைய தலைமுறையினரை சீரழிக்கும் கஞ்சா, குட்கா, ஹான்ஸ், பான்மசாலா உள்ளிட்ட போதைப் பொருள்களை முற்றிலுமாக ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். போதைப் பொருள் வணிகத்தைத் தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் மாவட்டத் தலைவர் சின்னதுரை தலைமை வகித்தார். செயலர் காடுவெட்டி ரவி, மாநில துணைப் பொதுச் செயலர் திருமாவளவன், நகரச் செயலர்கள் விஜி,பரசுராமன், ஒன்றியச் செயலாளர்கள் சக்திவேல்,சங்கர், குரு, செம்மலை மற்றும் வன்னியர் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு போதைப் பொருள்களுக்கு எதிராக முழக்கமிட்டனர்.
- மதுவில் விஷம் கலந்து குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
- சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சாத்தமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் உத்திராபதி(வயது 55). கூலித் தொழிலாளி. இவர் சம்பவத்தன்று வழக்கம்போல் மது குடித்து விட்டு கீழே கிடந்துள்ளார். அவரது மனைவி பார்த்தபோது, அவர் ரத்த வாந்தி எடுத்துள்ளார். இது குறித்து கேட்டபோது, வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை(விஷம்) மதுவுடன் கலந்து குடித்துவிட்டதாக கூறியுள்ளார். இதையடுத்து அவரை சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து கீழப்பழூவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






