என் மலர்
உள்ளூர் செய்திகள்

உணவகங்களில் சேவை கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை - கலெக்டர் ரமண சரஸ்வதி எச்சரிக்கை
- ஓட்டல்கள் மற்றும் உணவகங்களில் தானாகவோ அல்லது உணவுக்கான கட்டணத்துடன் இணைத்தோ சேவை கட்டணம் வசூலிக்கக்கூடாது,
- 1915 என்ற தேசிய நுகர்வோர் உதவிஎண் மூலமாகவோ அல்லது தேசிய நுகர்வோர் ஹெல்ப்லைன் மொபைல் செயலிலோ மூலமாகவோ புகார்அளிக்கலாம்.
அரியலூர்:
அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
உணவகங்கள் மற்றும் ஓட்டல்களில் சேவைக் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக நியாயமற்ற வர்த்தக நடைமுறைகள் மற்றும் நுகர்வோர் உரிமை மீறல்களை தடுப்பதற்கான வழிகாட்டுதல்களை மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் வெளியிட்டுள்ளது.
அதன்படி ஓட்டல்கள் மற்றும் உணவகங்களில் தானாகவோ அல்லது உணவுக்கான கட்டணத்துடன் இணைத்தோ சேவை கட்டணம் வசூலிக்கக்கூடாது, அத்துடன் வேறு பெயர்களிலும் சேவைக் கட்டணம் வசூலிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.சேவைக் கட்டணம் செலுத்துமாறு வாடிக்கையாளரை ஓட்டல்கள் நிர்பந்திக்கக்கூடாது. சேவைக் கட்டணம் என்பது விருப்பத்தின் பேரிலானது அல்லது நுகர்வோரின் விருப்பத்தை சார்ந்தது என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும்.
சேவைக் கட்டணத்தின் அடிப்படையில் சேவைகளை வழங்குவதில் எந்தத் தடையும் நுகர்வோர் மீது விதிக்கக்கூடாது.மேலும் உணவு கட்டணத்துடன் சேர்த்தோ அல்லது மொத்த தொகைக்கு ஜி.எஸ்.டி. விதிப்பதன் மூலமோ சேவைக் கட்டணத்தை வசூலிக்க முடியாது. இந்த வழிகாட்டுதல்களை மாறாக எந்தவொரு உணவகமோ, ஓட்டலோ சேவைக் கட்டணம் வசூலித்தால் பில் கட்டணத்தில் இருந்து அதை நீக்குமாறு சம்பந்தப்பட்ட நிர்வாகத்திடம் வாடிக்கையாளர் அறிவுறத்தலாம்.
அத்துடன் 1915 என்ற தேசிய நுகர்வோர் உதவிஎண் மூலமாகவோ அல்லது தேசிய நுகர்வோர் ஹெல்ப்லைன் மொபைல் செயலிலோ மூலமாகவோ புகார்அளிக்கலாம்.விரைவான குறைதீர்வு நடவடிக்கைகளுக்கு நுகர்வோர் ஆணையத்தின் இணையதளம் மூலம் புகார் அளிக்கலாம். மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் புகார் அளிக்கலாம். மேலும் என்ற மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு நுகர்வோர் மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்திற்கு நேரடியாக புகார் அளிக்கலாம்.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து உணவகங்களும் மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்தால் வெளியிட்டுள்ள அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் முறையாக கடைபிடிக்குமாறும், இதனை மீறும் உணவகங்கள் மீது சட்டபடி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
மேலும் உணவகங்கள் வழிகாட்டு நெறிமுறைகளை மீறினால் நுகர்வோர்கள் தங்களது புகார்களை தெரிவிக்க மேற்குறிப்பிட்ட வழிமுறைகளை பின்பற்றிடவும் மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.