என் மலர்
அரியலூர்
- அடையாளம் தெரியாத மூதாட்டி உயிரிழப்பு
- யார் இவர்? போலீசார் விசாரணை
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பஸ் நிலையத்தில் மூதாட்டி ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக பயணிகள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் அவரை மீட்டு 108 மூலம் அரியலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் நேற்று மதியம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இவர் யார்? எதற்காக பஸ் நிலையத்திற்கு வந்தார்? எந்த ஊரைச் சார்ந்தவர் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த மூதாட்டியின் கையில் அமிர்தம் என்ற பெயர் பச்சை குத்தப்பட்டுள்ளது.
- பாம்பு கடித்து விவசாயி உயிரிழந்தார்
- வயலுக்கு சென்ற போது சம்பவம்
அரியலூர்:
அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள அணைக்குடம் கிராமத்தை சேர்ந்தவர் ராமர்(வயது 42). விவசாயி. இவருக்கு சொந்தமான மாடுகளை அவரது வயலில் மேய்ச்சலில் விட்டுவிட்டு அதே வயலில் இருக்கும் கொட்டகையில் மாலை நேரத்தில் கட்டி வைப்பது வழக்கம். அதுபோல் நேற்று முன்தினமும் மேய்ச்சல் முடிந்து, மாடுகளை மாட்டு கொட்டகையில் கட்டுவதற்கு ராமர் வயலுக்கு சென்றுள்ளார். மாடுகள் கட்டசென்ற ராமர் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த அவரது மனைவி சுந்தரி வயல் பகுதிக்கு சென்று பார்த்தார். அப்போது ராமர் அங்கு சுயநினைவு இல்லாமல் கிடந்துள்ளார். இதையடுத்து அப்பகுதி மக்கள் உதவியுடன் ராமரை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு உடனடியாக அழைத்துச்சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் பாம்பு கடித்து ராமர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இதனை அடுத்து சுந்தரி தா.பழூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- கொடி நாள் வசூல் பணி தொடங்கப்பட்டுள்ளது
- நடப்பாண்டு ரூ.34.60 லட்சம் இலக்கு
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் கொடி நாள் வசூல் பணியை கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி தொடக்கி வைத்தார். ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கொடிநாள் வசூல் உண்டியலில் நிதியை அளித்து அவர் தெரிவித்தாவது:-
நமது தாயகத்தைக் காக்கும் முப்படைகளிலும் பணிகளில் ஈடுபட்டுள்ள படைவீரர்கள் மற்றும் படைப்பணியிலிருந்து ஓய்வு பெற்றுள்ள முன்னாள் படைவீரர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் கெரவிக்கும் வகையில் ஆண்டுதோறும் டிசம்பர் 7-ம் நாளன்று படைவீரர் கொடிநாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்நாளன்று அரசால் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு கொடி நாள் நிதி வசூல் தொடக்கப்படுகிறது.
அதன் படி அரியலூர் மாவட்டத்தில் கடந்தாண்டு கொடிநாள் நிதி வசூல் இலக்கு ரூ.32,75,000 நிர்ணயிக்கப்பட்டது . ஆனால் அனைத்து துறை அலுவலர்களின் ஒத்து ழைப்போடு நிர்ணயித்த இலக்கைவிட கூடுதலாக ரூ.40,75,000 நிதி வசூலித்து சாதனையை எட்டியுள்ளது.
அதே போல நிகழாண்டு ரூ.34,60,000 லட்சம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை போல கொடிநாள் நிதி வசூலில் அனைத்து றைகளின் ஒத்துழை ப்புடன் நிர்ணயி க்கப்பட்டுள்ள இலக்கைவிட கூடுதலாக வசூலித்து, சாதனை படைக்க வேண்டும் என்றார். முன்னதாக அவர், முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர்களுக்கு கல்வி உதவித்தொகை, கண்கண்ணாடி, திரும ணநிதியுதவி உள்ளிட்ட திட்டத்தின் கீழ் 29 நபருக்கு ரூ.5,61,000 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், முன்னாள் படைவீரர் நல அலுவலக கண்காணி ப்பாளர் ம.கலையரசி காந்திமதி, முன்னாள் படைவீரர் நல அமைப்பாளர் சி.சடையன் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.
- நாட்டு நலப்பணித் திட்ட முகாம் நடைபெற்றது
- வாலாஜா ஊராட்சியில்
அரியலூர்:
அரியலூர் அடுத்த வாலாஜா நகர ஊராட்சியில், அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப் பணித் திட்டம் சார்பில் கடந்த ஒருவாரமாக நடைபெற்று வந்த சிறப்பு முகாம் நிறைவுப்பெற்றது.
நிறைவு நாள் நிகழ்ச்சிக்கு அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் சாமிதுரை தலைமை வகித்தார். மாவடட முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் ஏ.குணசேகரன் கலந்து கொண்டு, முகாமில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கி, மாணவர்கள் அனைவரும் சமுதாய தொண்டாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். பள்ளி துணை ஆய்வாளர் ஆர்.பழனிசாமி வாழ்த்துரை வழங்கினார்.
முன்னதாக நாட்டு நலப் பணித் திட்ட அலுவலர் கோவிந்தசாமி வரவேற்றார். முடிவில் சிறப்பாசிரியர் ஜெ.சார்லஸ் நன்றி தெரிவித்தார். இந்த ஏழு நாள்கள் நடைபெற்ற முகாமில், மரக்கன்றுகள் நடுதல், கோயில் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தூய்மைப் பணி, பொது மருத்துவம் மற்றும் கால்நடை மருத்துவ முகாம், போதை ஓழிப்பு, சுற்றுச்சூழல் விழிப்புணர்வுப் பேரணி, கருத்தரங்கம் உள்ளிட்டவைகள் நடைபெற்றது.
- அடிப்படை வசதி கேட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
- தா.பழூர் ஒன்றிய கிராம மக்களுக்கு
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கிராம மக்களுக்கு அடிப்படை வசதிக் கேட்டு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் , இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாதர் சங்க ஒன்றிய செயலாளர் உமாதேவி தலைமை வகித்தார். இந்திய ஜனநாயக வாலிபர் சங்க கிளைத் தலைவர் விக்னேஷ்வரன் முன்னிலை வகித்தார். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநிலத் தலைவர் வாலண்டினா உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் பாலசுந்தரபுரம், தாதம்பேட்டை, கூத்தங்குடி கிரா மக்களுக்கு சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். ஜெயங்கொண்டத்திலிருந்து தா,பழூர், தாதம்பேட்டை வழியாக அடிக்காமலை கிராமத்துக்கு நகரப் பேருந்து இயக்க வே்ண்டும். உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
- அரியலூரில் 39 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளது
- துணை கலெக்டர் தலைமையில் 5 குழுக்கள்
அரியலூர்:
தமிழகத்தில் இன்று முதல் மூன்று நாள்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கைவிடு த்ததையடுத்து, அரியலூர் மாவட்டத்தில் 39 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளதாக கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: அரியலூர் மாவட்டத்தில் இன்று முதல் 3 நாள்களுக்கு கனமழை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக அரியலூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்படும் பகுதிகளாக கண்டறியக்யப்பட்டுள்ள 29 பதற்றமான பகுதிகளை கண்காணித்திட துணை ஆட்சியர் தலைமையில் பல்வேறு துறைகளைச் சார்ந்த12 அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, இவர்கள் மூலம் 5 குழுக்களாக அமைக்கப்பட்டுள்ளது.
இவர்கள் பதற்றமான பகுதிகளை 24 மணி நேரமும் தொடர்ந்து கண்காணித்து, தேவையான முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு நடவடிக்கை எடுத்திட உத்தரவிடப்பட்டுள்ளது.
பதற்றமான பகுதிகளில் பாதிக்கப்படும் மக்களை தங்க வைக்க ஏதுவாக அடிப்படை வசதிகளுடன் 39 நிவாரண மையங்கள் தயார் நிலையில் உள்ளது. பிற இடங்களில் பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் கூடுதலாக நிவாரண முகாம்கள் ஏற்படுத்திட வட்டாட்சியர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பாதிக்கப்படும் பகுதிகளில் உள்ள 28 நியாய விலை கடைகளில் பொதுவிநியோகத்திட்ட உணவுப்பொருள்களை கூடுதலாக நகர்வு செய்து இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
மேலும், மீட்பு உபகரணங்கள் தயார் நிலையில் வைத்திட நகராட்சி ஆணையர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.வடகிழக்கு பருவமழையின் போது பேரிடர் தொடர்பாக தகவல் தெரிவிக்க ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணிநேரமும் செயல்பட்டு வரும் கட்டுப்பாட்டு மையத்தை தொடர்புக் கொள்ளலாம்.
இம்மையத்தினை தொடர்பு கொள்ள கட்டணமில்லா தொலைபேசி எண்.1077 மற்றும் 04329 - 228709 என்ற தொலைபேசி எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம். கைப்பேசி எண் 9384056231 என்ற எண்ணுக்கு கட்ச்செவி மூலம் புகார் மற்றும் தகவல் அளிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் திருக்கார்த்திகை தீபத்திருநாளையொட்டி முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது
- இன்று மாலை 5 மணியளவில் கோவிலில் உள்ள உற்சவர் மூர்த்திக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்று, 27 தீபங்கள் ஏற்றப்பட்டு பூஜை நடைபெறும்
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை அடுத்த கங்கைகொண்ட சோழபுரத்தில் அமைந்துள்ள பிரகதீஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருநாளையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் முருகப்பெருமானுக்கு நேற்று மாலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. அபிஷேகத்தின் போது திரவிய பொடி, மாவு பொடி, திருநீறு, மஞ்சள், சந்தனம், இளநீர், தயிர், பால், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் அபிஷேகங்கள் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறையினர், தொல்லியல் துறையினர், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இன்று (7-ந்தேதி) மாலை 5 மணியளவில் கோவிலில் உள்ள உற்சவர் மூர்த்திக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்று, 27 தீபங்கள் ஏற்றப்பட்டு பூஜை நடைபெறும்.
தொடர்ந்து மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்பட்டு கோவிலை வலம் வந்து ஏழு மணி அளவில் சொக்கப்பனை ஏற்றும் நிகழ்வு நடைபெறுகிறது.
பிறகு சுடர் (சாம்பல்) எடுத்து வந்து சுவாமிக்கு அபிஷேக ஆராதனை செய்து பிரசாதம் வழங்கப்படுகிறது. கார்த்திகை தீபத் திருநாளை ஒட்டி முழு ஏற்பாடுகளையும் இந்து சமய அறநிலையத்துறையினர் செய்து வருகின்றனர்.
- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் ரத்த சோகை குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி பஸ் நிலையத்தில் நடைபெற்றது
- ரத்த சோகை ஏற்படுவதை தவிர்க்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் உணவு முறைகள் அதற்கான சிகிச்சை முறைகள் குறித்து விளக்கப்பட்டது
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பஸ் நிலையத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் ரத்த சோகை குறித்த விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் சார் நிலா தொடங்கி வைத்தார்.
ரத்த சோகை பற்றிய விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நாமக்கல் ஸ்ரீ ஜெயந்தி நாடக சபா கலைக்குழுவினர் மூலம் கரகாட்டம், நாடகம் மற்றும், பாடல் பாடியும் கலை நிகழ்ச்சி நடத்தினர். இதில் ரத்த சோகையினால் ஏற்படும் பாதிப்புகள் ரத்த சோகை ஏற்படுவதை தவிர்க்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் உணவு முறைகள் அதற்கான சிகிச்சை முறைகள் குறித்து விளக்கப்பட்டது.
விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியை பஸ் நிலையத்தில் உள்ள ஏராளமான பொதுமக்கள் மற்றும் மற்றும் பயணிகள் கண்டு களித்தனர்.
மேலும் ரத்த சோகையை தடுப்பதற்கான பல்வேறு வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது.
- ஜெயங்கொண்டம் அருகே பெய்த தொடர் மழையால் சாலையில் தண்ணீர் தேங்கி பொதுமக்கள் பெரும் அவதிக்கு ஆளாகி உள்ளனர்
- மேலும் சாலையின் இரண்டு புறமும் மழைநீர் வடிகால் வாய்க்கால் அமைப்பதுடன், சுமார் 100 மீட்டர் தொலைவிற்கு தார்ச் சாலை அமைத்து தர கோரிக்கை எழுந்துள்ளது
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள தேவமங்கலம் வடக்குத் தெருவில் சுமார் 100 மீட்டர் தொலைவில் உள்ள சிமெண்ட் சாலையில் நேற்று முன்தினம் பெய்த மழையால் சாலையில் முழுவதும் மழை நீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது.
மேலும் இதனால் சில வீடுகளில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்து இரவில் தூங்க முடியாத சூழல் ஏற்பட்டது.
தேங்கி நிற்கும் மழை நீரால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. மக்கள் வெளியில் வர முடியாமல் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர்.
அவ்வழியாக குடியிருப்பு வாசிகள், பாதசாரிகள், இருசக்கர வாகனம், ஆடு, மாடுகள் உள்ளிட்டவைகள் செல்லும்போது மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.
மேலும் குடியிருப்பு பகுதியில் உள்ள வீடுகளில் ஓதம் காத்து வீட்டில் படுக்க முடியாத சூழல் உள்ளது. இதனால் குழந்தைகளுக்கு காய்ச்சல் வந்து மருத்துவமனை சென்று திரும்பிய சம்பவமும் நடந்துள்ளது.
மேலும் இதனால் அப்பகுதியில் குடியிருப்பு வாசிகளுக்கு அதிவிரைவில் நோய் தொற்று பரவும் அபாயமும் இருப்பதால் அந்த மழை நீரை உடனடியாக அப்புறப்படுத்தி சாலையில் சரலை மண் கொட்டி மேடாக்கி சாலையை உயர்த்த கோரிக்கை எழுந்துள்ளது.
மேலும் சாலையின் இரண்டு புறமும் மழைநீர் வடிகால் வாய்க்கால் அமைப்பதுடன், சுமார் 100 மீட்டர் தொலைவிற்கு தார்ச் சாலை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- ஜெயங்கொண்டம் அருகே அரசு ஊராட்சி தொடக்கப்பள்ளியில் சிதிலமடைந்த மேற்கூரை பூச்சுகள் அடிக்கடி பெயர்ந்து மாணவர்கள் மீது விழுவதாக புகார் எழுந்துள்ளது
- ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் அனைவரையும் ஒரே வகுப்பாறையில் அமர வைத்து மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கல்வி பயிற்றுவித்தனர்
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே சிலால் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது.
கடந்த 2008 ஆம் ஆண்டு இந்த பள்ளி தொடங்கப்பட்டது. இப்பள்ளியில் 56 மாணவிகளும், 35 மாணவர்களும் என மொத்தம் 91 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் நான்கு ஆசிரியர்கள் பணியில் உள்ளனர்.
கடந்த சில மாதங்களாகவே பள்ளியின் வகுப்பறையில் மேற்கூரை சிமெண்ட் பூச்சுகள் அடிக்கடி கீழே பெயர்ந்து விழுந்து வருகிறது.
மேலும் பள்ளியைச் சுற்றி குளம் போல் மழை நீர் தேங்கியுள்ளதோடு, அதில் கொசுக்கள் உற்பத்தியாக பல்வேறு தொற்று நோய்களுக்கும் வழிவகுக்கிறது.
இது குறித்து பள்ளி நிர்வாகம் சட்டமன்ற உறுப்பினர், வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் கல்வித்துறை சார்ந்த அதிகாரிகளிடம் தொடர்ந்து மனு அளித்தும், நேரில் சென்று தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்காத நிலையில்உள்ளதாக ஆசிரியர்கள் வேதனை தெரிவித்தனர்.
மேலும் நேற்று இரவு பெய்த கனமழையின் காரணமாக பள்ளியின் மேற்கூரை சிமெண்ட் பூச்சுகள் மீண்டும் உதிர்ந்து விழுந்துள்ளது. மேலும் அனைத்து வகுப்பறைகளிலும் தண்ணீர் குளம் போல் தேங்கி உள்ளது.
அதனால் பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் வகுப்பறையில் தண்ணீர் தேங்கி இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
வகுப்பறையில் தேங்கியிருந்த தண்ணீரை ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் அனைவரும் சேர்ந்து அப்புறப்படுத்தினர். இந்நிலையில் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் அனைவரையும் ஒரே வகுப்பாறையில் அமர வைத்து மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கல்வி பயிற்றுவித்தனர்.
மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் போர்க்கால அடிப்படையில் பள்ளியின் மேற்கூரை பூச்சுகள் கீழே விழாதவாறு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர்கள் மீது சிமெண்டு பூச்சு உடைந்து விழும் நிலையும் உள்ளதால் உடனடியாக சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
மேலும் பள்ளியில் கட்டிடம் பெரும் அளவில் சேதம் அடைந்து உள்ளதால் பள்ளியை வேறு இடத்திற்கு மாற்ற பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கை எடுத்துள்ளனர்.
- கூலித் தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்
- சிறுமிக்கு பாலியல் தொல்லை புகாரில்
அரியலூர்
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகேயுள்ள இலையூர் கண்டியங்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் ஜெகநாதன் மகன் ஜெயக்குமார் (வயது22) . கூலித் தொழிலாளியான இவர், 17 வயது சிறுமியை கடத்திச் சென்று கரைமேடு முந்திரி காட்டிலுள்ள தமக்கு சொந்த வீட்டில் அடைத்து வைத்து, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து அச்சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்டு வந்த ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் துறையினர், ஜெயக்குமாரை போக்சோ சட்டத்தில் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் ஜெயக்குமாருக்கு உடந்தையாக இருந்தாக அவரது தாய் சாந்தியையும் காவல் துறையினர் கைது செய்து திருச்சி காந்திசந்தையிலுள்ள மகளிர் சிறையில் அடைத்தனர்.
- இரைதேடி கூட்டம் கூட்டமாக கொக்குகள் சுற்றி திரிகின்றன
- புழு பூச்சிகள் தண்ணீரில் மிதந்து சென்றன.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள ஸ்ரீபுரந்தான் கிராமத்தில் தற்போது நடவு விவசாய பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் உழவு செய்யும் போது சிற உயிரினங்களான புழு பூச்சிகள் தண்ணீரில் மிதந்து சென்றன. இதனை உணவாக உண்ணகூடிய கொக்குகள் கூட்டம் கூட்டமாக பறந்து சென்று இரைைய தேடி அலைந்து உண்டுவருகின்றன. இது பார்ப்பவர்கள் கண்களை கவரும் விதமாக உள்ளது.






