என் மலர்
அரியலூர்
- சனிப் பெயர்ச்சியை முன்னிட்டு சனி பகவானுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது
- உலக நன்மைக்காக 27 நட்சத்திரங்கள், 12 ராசிகளுக்கு சங்கல்பம் செய்யப்பட்டு சிறப்பு ஆராதனை நடந்தது
அரியலூர்:
இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை சனிப்பகவான் ஓரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பிரவேசிப்பார். அதன்படி நடப்பாண்டு நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணிக்கு மகரராசியில் இருந்து கும்பராசிக்கு சனிப்பகவான் பிரவேசித்தார். இதையொட்டி அரியலூர் மாவட்டத்தில் கோயில்களிலுள்ள சனிஸ்வர பகவானுக்கு நல்லெண்ணை, மஞ்சள், திரவியப்பொடிகள், சந்தனம், பன்னீர், பழங்கள், பஞ்சாமிர்தம், தேன், பால், தயிர் போன்றவைகளால் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது,
அதன் பின்னர் கருப்பு வண்ண ஆடை அணிவித்து, மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதன் பின்னர் சகஸ்ரநாம அர்ச்சனை நடைபெற்றது. இதனை தொடர்ந்து உலக நன்மைக்காக 27 நட்சத்திரங்கள், 12 ராசிகளுக்கு சங்கல்பம் செய்யப்பட்டு சிறப்பு ஆராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, எள்தீபமிட்டு சனி பகவானை தரிசனம் செய்தனர். தொடர்ந்து, பக்தர்களுக்கு விபூதி மற்றும் எள் சாதம் பிரசாதமாக வழங்கப்பட்டது.
குறிப்பாக திருமானூரிலுள்ள காமாட்சியம்மன் உடனாய கைலாசநாதர் திருக்கோயில், திருமழபாடி வைத்தியநாத திருக்கோயில், விக்கிரமங்கலம் சோழிஸ்வரர் திருக்கோயில், அரியலூர் ஆலந்துரையார், செந்துறை சிவதாண்டீஸ்வரர் கோயில் மற்றும் ஆண்டிமடம், ெஜயங்கொண்டம், பொன்பரப்பி, தா.பழூர், மீன்சுருட்டி உள்ளிட்ட பகுதி சிவன் ஆலயங்களிலுள்ள சனிபகவானுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றது.
- உழவர் திருநாளில் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது
- பெருவுடையார் கோயிலில் வழக்கத்தைவிட மக்களின் கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது.
அரியலூர்:
அரியலூர் மாவட்ட முழுவதும் உழவர் திருநாள் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. உழவர் திருநாளையொட்டி, அலங்காரத்துடன் தொழுவத்தில் அடைக்கப்பட்டிருந்த காளைகள், பசுமாடுகள், எருமைகள் உள்ளிட்ட மாடுகளும், ஆடுகளும் அவிழ்த்து விடப்பட்டன. சிறுவர் சிறுமியர்களுக்கு ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், சாக்கு ஓட்டம், எலுமிச்சை கரண்டி, பாட்டுப்போட்டி, கவிதை போட்டி, பேச்சுப்போட்டிகள் நடைபெற்றன.
இதே போன்று இளைஞர்களுக்கு கபடி, மட்டைப்பந்து, ஓட்டப்பந்தயம், சைக்கிள் போட்டி, வழுக்கு மரம் ஏறுதல், பானை உடைத்தல் போட்டி களும்,பெண்களுக்கு கோ கோ, கும்மியடித்தல் உள்ளிட்ட போட்டிகளும் நடைப்பெற்றது. முன்னதாக பெண்கள், சிறுவர், சிறுமியர்கள் அனைவரும் புத்தாடை அணிந்து, பெரியவர்களிடம் ஆசி வழங்கி தங்களுக்கு அருகிலுள்ள விளையாட்டு திடல்களில் சென்று உழவர் திருநாளை சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர். காணும் பொங்கலையொட்டி, ெஜயங்கொண்டம் அருகேயுள்ள கங்கை கொண்ட சோழபுரத்திலுள்ள சுற்றுலா தலமான பெருவுடையார் கோயிலில் வழக்கத்தைவிட மக்களின் கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது.
பெல்ஜியம், இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிகமாக வந்திருந்து காணும் பொங்கலை கொண்டாடினர். இதே போல் திருமானூர் அருகேயுள்ள கரைவேட்டி பறவைகள் சரணாலயத்தில் மக்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. அரியலூர் செட்டி ஏரி பூங்கா, கல்லங்குறிச்சி கலியுக வரதராசப் பெருமாள் கோயில், அணைக்கரை, உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு, பொதுமக்கள் தங்களது குடும்பத்தினருடன் சென்று காணும் பொங்கலை கொண்டாடினர்.
- விஷம் குடித்த விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்.
- விசாரணை நடத்தும் போலீசார்
அரியலூர்
அரியலூர் மாவட்டம் வல்லக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் பழனிசாமி(வயது 60). விவசாயியான இவர் சம்பவத்தன்று வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை (விஷம்) குடித்துவிட்டு வாந்தி எடுத்துள்ளார். இதனை அறிந்த அவரது குடும்பத்தினர் அவரை உடனே மீட்டு சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்தவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து கீழப்பழுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சுவர் ஏறி குதித்து ஓட்டம்
- வழக்கு பதிந்து தேடி வரும் போலீசார்
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் கரடிகுளம் மேலத்தெருவை சேர்ந்தவர் நாராயணன் மகன் ஞானசுந்தர்(வயது 24). மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. இவர் கடந்த மாதம் ஜெயங்கொண்டம் மகளிர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுமதி மூலம் சிகிச்சைக்காக விளாங்குடி வேலா கருணை இல்லத்தில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் ஞானசுந்தர் நேற்று முன்தினம் வேலா கருணை இல்லத்தில் இருந்து சுவர் ஏறி குதித்து தப்பித்து சென்றுவிட்டாராம். இதுகுறித்து விடுதி காப்பாளர் கயர்லாபாத் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கலெக்டர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்
- மானிய விலையில் விவசாய நிலம் பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரியலூர்,
அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது,ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) நிறுவனம் மூலமாக பல்வேறு சிறப்பு திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. 2022-2023 ஆம் ஆண்டு மானிய கோரிக்கையின் போது ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மக்களின் சமூக பொருளாதார நிலை மேன்மையடைய, சொந்தமாக விவசாய நிலம் வாங்க நிலத்தின் சந்தை மதிப்பு விலையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.5 லட்சம் மானியம் வழங்குவதற்கான திட்டம் அறிவிக்கப்பட்டது.இத்திட்டத்தில் பயன்பெற 18 வயது முதல் 65 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அவர்களின், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.விண்ணப்பதாரர்கள் 2.5 ஏக்கர் நஞ்சை அல்லது 5 ஏக்கர் புஞ்சை நிலத்திற்குள் வாங்கலாம். நிலத்தின் சந்தை மதிப்பில் 50 சதவீதம் அல்லது அதிக பட்சமாக ரூ.5 லட்சம் ஒரு பயனாளிக்கு இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும். நிலம் விற்பனை செய்பவர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் அல்லாத பிற இனத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும். மேலும் வாங்கப்படும் நிலங்களுக்கு 100 சதவீதம் முத்திரைத்தாள் மற்றும் பதிவு கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்படும்.இத்திட்டத்தில் இணையதளத்தில் விண்ணப்பித்து பயனடையலாம் என தெரிவித்துள்ளார்.
- கலெக்டர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு
- பயிற்சிக்கு பின் நிச்சய வேலை
அரியலூர்:
அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது,தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) நிறுவனமானது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனைத்தை சார்ந்த இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சியினை வழங்கி வருகிறது. அதன் தொடர்ச்சியாக, தற்போது பி.டி.சி ஏவிஷேசன் அகடாமி நிறுவனம் மூலமாக விமான நிலையத்தில் விமான வாடிக்கையாளர் சேவை மற்றும் அதன் தொடர்புடைய நிறுவனங்களில் பணிபுரிய பயிற்சியினை அளிக்கப்படவுள்ளது.18 முதல் 25 வயது நிரம்பிய, பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும் மற்றும் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்.இப்பயிற்சி மூன்று மாதம் விடுதியில் தங்கி படிக்க வசதியும், இப்பயிற்சிக்கான மொத்த செலவுத் தொகையான ரூ.20,000த்தை தாட்கோ வழங்கப்படவுள்ளது. இப்பயிற்சியினை வெற்றிகரமாக முடிப்பவர்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட தர சான்றிதழ் வழங்கப்படும்.மேலும், இப்பயிற்சியினை பெற்றவர்கள் புகழ் வாய்ந்த தனியார் விமான நிறுவனங்களில் பணிபுரிய 100 சதவீதம் வேலை வாய்ப்பு அளிக்கப்படும்.எனவே இத்திட்டத்தில் தகுதியுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்கள் தாட்கோ இணையதளத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.
- சிகிச்சை பலனின்றி உயிரிழந்த பரிதாபம்
- நேருக்கு நேர் மோதி விபத்து
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் கடுகூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் ராஜதுரை, மனைவி பூங்கோதை (வயது 43). இவர்களது மகன் சதீஷ்(23). இவர்கள் கால்நடைகளுக்கு தீவனம் எடுப்பதற்காக கடுகூர் அயன் சாலையிலுள்ள வயலுக்கு இரு சக்கர வாகனத்தில் மூன்று பேரும் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே அஸ்தினாபுரம் பிரதானச் சாலையில் வசித்து வரும் சின்னப்பா மகன் வேல்முருகன்(31) என்பவர் ஓட்டி வந்த இரு சக்கர வாகனம் எதிர்பாரத விதமாக இவர்கள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த 3 பேரும் அரியலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வந்த சதீஷ், திங்கள்கிழமை உயிரிழந்தார். இது குறித்து கயர்லாபாத் காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
- புதிய மதகு அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- விவசாயிகள் சுமார் 12 அடி ஆழத்திற்கு நீரில் மூழ்கி மிகுந்த சிரமத்துடன் பலகைகள் வைத்து தண்ணீரை தேவைக்கேற்ப திறந்து மூடி வருகிறோம்.
பெரம்பலூர்
மூங்கில்பாடி பகுதியில் உள்ள ஏரிகள் பல ஆண்டுகளாக பராமரிக்கப்படவில்லை. மக்காச்சோளத்தையே சாகுபடி செய்து வந்த நாங்கள், கடந்த 2021-ம் பெரிய ஏரி நிரம்பியதன் காரணமாக நெல் சாகுபடியில் ஈடுபட்டோம். விவசாயிகள் இணைந்து பாசன வாய்க்கால்களை சீரமைத்தோம். மேலும் ஏரியில் உள்ள மதகு பல வருடங்களாக சீரமைக்கப்படாததால், விவசாயிகள் சுமார் 12 அடி ஆழத்திற்கு நீரில் மூழ்கி மிகுந்த சிரமத்துடன் பலகைகள் வைத்து தண்ணீரை தேவைக்கேற்ப திறந்து மூடி வருகிறோம். நீர் அதிகமாக இருக்கும்போது உயிருக்கு ஆபத்தான முறையில் நீரில் மூழ்கி பலகை வைத்து தண்ணீரை திறப்பது சிரமமாக உள்ளது. இதை கருத்தில் கொண்டு இந்த ஏரியில் புதிய மதகை வரும் கோடைக்குள் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பெரிய ஏரியின் கரைகளில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றி, ஏரியை முறையாக ஆழப்படுத்தி, கூடுதல் நீரைத் தேக்கி வைக்கவும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பணம் கேட்டு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது
- கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்தவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அரியலூர்
அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே அண்ணங்கார குப்பம் வன்னியர் தெருவை சேர்ந்தவர் முஜ்மல்(வயது 63). இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார். இந்நிலையில் முஜ்மல் ஆண்டிமடம் நான்கு ரோடு சந்திப்பில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த இடையக்குறிச்சி கிராமம் வடக்கு தெருவை சேர்ந்த சிட்டு என்ற இளையராஜா(36) என்பவர் முஜ்மலிடம் கத்தியை காட்டி பணம் கேட்டு மிரட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து முஜ்மல் ஆண்டிமடம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் சிட்டு என்ற இளையராஜா மீது போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
- பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
- சிவன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம், தா.பழூரில் உள்ள விசாலாட்சி அம்மன் உடனுறை விஸ்வநாதர் கோவிலில் மார்கழி மாதத்தில் தினமும் அதிகாலையில் சுவாமிக்கு பிரம்ம முகூர்த்தத்தில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும். தேவர்கள் வழிபாடு செய்வதாக கருதப்படுவதால் இந்த மாதம் முழுவதும் பக்தர்கள் அதிகாலையில் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்வது வழக்கம். பன்னிரு திருமுறைகள் அருளிச்செய்த 63 நாயன்மார்களில் முக்கியத்துவம் வாய்ந்தவர்களும், சமயக்குரவர்கள் என்று அழைக்கப்படுபவர்களுமான திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நான்கு நாயன்மார்களை போற்றும் வகையில் மார்கழி மாதத்தின் கடைசி நாளான நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி நால்வருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இதைத்தொடர்ந்து வேத பாராயணம் மற்றும் பன்னிரு திருமுறைகள் ஓதப்பட்டு மகாதீபாராதனை நடைபெற்றது. பின்னர் நால்வர் உற்சவர் திருமேனிகளுக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டு கோவில் பிரகார உலா மங்கல இசையுடன் நடைபெற்றது. விழாவில் தா.பழூர் மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு வழிபட்டனர்.
- போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்
- மது விற்ற பெண் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் காங்குழி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து, விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில், போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். இதில் காங்குழி காலனி தெருவை சேர்ந்த பரஞ்சோதி(வயது 65), காமராஜர் நகரை சேர்ந்த புனித வள்ளி(48) ஆகியோர் பதுக்கி வைத்து மதுபாட்டில்களை விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிந்து, அவர்களை கைது செய்து, விற்பனைக்காக வைத்திருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.இதேபோல் அழகாபுரம் கிராமத்தில் ஒருவர் மோட்டார் சைக்கிளில் மது பாட்டில்களை வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த போலீசாரை கண்டதும், அவர் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், தப்பி ஓடியவர் கடலூர் மாவட்டம் திட்டக்குடி தாலுகா பாசிக்குளம் பகுதியை சேர்ந்த கலாமணி(45) என்பது தெரியவந்தது. இதையடுத்து மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஜெப வழிபாடு நடைபெற்றது
- அடைக்கல அன்னை ஆலயத்தில் பொங்கல் விழா நடைபெற்றது
அரியலூர்
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்திற்குட்பட்ட திருகருக்காவூர் எனும் ஏலாக்குறிச்சியில் 300 ஆண்டுகளுக்கு முன்பு வீரமாமுனிவரால் கட்டப்பட்ட அடைக்கல அன்னை ஆலயம் உள்ளது. தமிழக அரசின் ஆன்மீக தலங்களின் ஒன்றான பிரசித்தி பெற்ற அடைக்கல அன்னை ஆலயத்தில்நேற்று வேண்டுதல் பொங்கல் விழா நடைபெற்றது. இதில் தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, பாண்டிச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் இருந்து வந்திருந்த அனைத்து மதத்தினை சார்ந்தவர்களும் கலந்து கொண்டனர். கும்பகோணம் மறை மாவட்ட ஆயர் அந்தோணி சாமி சிறப்பு திருப்பலி நிறைவேற்றினார். அதன் பின்னர் வட்டார அதிபரும் பேராலய பங்குத்தந்தையுமான தங்கசாமி பொங்கல் பானை, அடுப்புகளை மந்திரித்து குத்துவிளக்கேற்றி துவங்கி பொங்கல் விழாவை தொடங்கி வைத்தார் அதன் பின்னர் பெண்கள் 70-க்கும் மேற்பட்ட மண்பானையில் பொங்கலிட்டனர். பொங்கல் பொங்கி வழிந்ததை தொடர்ந்து உதவி பங்குத்தந்தை ஞான அருள்தாஸ் சிறப்பு பிரார்த்தனை நடத்தி பொங்கிய பொங்கலை அர்ச்சித்தார். பின்னர் ஆலயத்தில் மாதா சொரூபம் முன்பு பொங்கல் படைக்கப்பட்டு சிறப்பு, ஜெப வழிபாடு நடைபெற்றது. அதன் பின்னர் சமைக்கப்பட்ட பொங்கலை அனைவருக்கும் வேண்டுதல் பொங்கல் வைத்தவர்களால் வினியோகிக்கப்பட்டது.






