என் மலர்
அரியலூர்
- ஜெயங்கொண்டத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நடைபெற்றது
- போக்குவரத்து சிக்னலை மதித்து செல்ல வேண்டும் உள்ளிட்ட விதிமுறைகளை பற்றி விளக்கினார்
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான விபத்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஏராளமான இளைஞர்கள் குடிபோதையில் வாகனம் ஓட்டி வருவதால் எதிரே வருபவர்களுக்கு கூட விபத்து நடக்க வாய்ப்பு உள்ளது. எனவே விபத்தை தடுக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரோஸ் கான் அப்துல்லா உத்தரவின் பேரில் விபத்து தடுப்பு நடவடிக்கையாக வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் சாஹிரா பானு உள்ளிட்ட போலீசார் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் கார் டிரைவர்கள் உள்ளிட்டவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். விபத்து நடக்காமல் தடுக்க வேண்டும் என்றால் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது, வாகனத்தில் அதிக ஆட்களை ஏற்றி செல்லக்கூடாது, போக்குவரத்து சிக்னலை மதித்து செல்ல வேண்டும் உள்ளிட்ட விதிமுறைகளை பற்றி விளக்கினார்.
- அரியலூரில் ஆளுநரை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
- ஆர்ப்பாட்டத்தில் ஆளுநரை குடியரசுத் தலைவர் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தினர்
அரியலூர்:
அரியலூர் காமராஜர் சிலை அருகே அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராகத் தொடர்ந்து செயல்பட்டு வருவதாக ஆளுநர் ஆர்.என்.ரவியைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு அரசுக்கு எதிராகவும், ஆர்.எஸ்.எஸ்.சித்தாந்தத்தை புகுத்துவதாக ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்தும், உடனடியாக ஆளுநரை குடியரசுத் தலைவர் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு அக்கட்சியின் மாவட்டத் தலைவர் சங்கர் தலைமை வகித்தார். நகர தலைவர் சிவக்குமார் முன்னிலை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர்கள் சந்தானம், பழனிசாமி, கலைச்செல்வன், மாநில பொதுக் குழு உறுப்பினர் சந்திரசேகர், மகளிர் அணி மாரியம்மாள் மற்றும் வட்டாரத் தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- அரியலூரில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது
- கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அரியலூர்:
அரியலூர் மாவட்ட ஊராட்சி மன்ற கூட்ட மன்றத்தில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் கூட்டம் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சந்திரசேகர் தலைமையில், மாவட்ட ஊராட்சி செயலாளர் சிவக்குமார் முன்னிலையில் நடைபெற்றது. மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் அம்பிகா, ராமச்சந்திரன், நல்லமுத்து, குலக்கொடி, வசந்தமணி, சகிலாதேவி, ராஜேந்திரன், அன்பழகன், தனசெல்வி, கீதா, புள்ளியியல் ஆய்வாளர் முகிலன், அலுவலக இளநிலை உதவியாளர் ரமேஷ், உதவியாளர் சிவகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நிலை குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். வரவு செலவு கணக்குகள், வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அரியலூர் மாவட்டத்தை இணைக்கும் வெள்ளாற்றில் கட்டப்பட்டு வரும் பாலப் பணிகளை விரைவில் முடிக்க வேண்டும் உள்ளிட்ட 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- அரியலூர் அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது
- குற்றவாளி சுந்தரத்துக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.60 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஆனந்தன் தீர்ப்பளித்தார்
அரியலூர்:
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகேயுள்ள உட்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரம்(வயது80). இவர் சைக்கிள் பஞ்சர் பார்க்கும் கடை வைத்திருந்தார். இந்நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு 10 வயது சிறுமி தனது சைக்கிளுக்கு பஞ்சர் ஒட்ட வந்தபோது சிறுமியை சுந்தரம் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் துறையினர் சுந்தரத்தை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். இந்த வழக்கு அரியலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இறுதி விசாரணை முடிந்து தீர்ப்பளித்தது. இதில் குற்றவாளி சுந்தரத்துக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.60 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஆனந்தன் தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ.2 லட்சம் இழப்பீடாக வழங்கவும் அவர் உத்தரவிட்டார். இதையடுத்து சுந்தரம் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் அரசு வழக்குரைஞர் ராஜா ஆஜரானார்.
- அரியலூரில் நாளை நடைபெறும் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொள்கிறார்
- கூட்டத்தில் அனைத்து பிரிவு பொறுப்பாளர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என மாவட்ட செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அரியலூர்:
அரியலூர் பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகில் நாளை (வெள்ளிக்கிழமை) மாலை அ.தி.மு.க. நிறுவன தலைவரும், முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சருமான எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அ.இ.அ.தி.மு.க இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு சிறப்பு உரையாற்றுகிறார்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள், இந்நாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கிளைக் கழக பொறுப்பாளர்கள், சார்பு அணி பொறுப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் மற்றும் அனைத்து பிரிவு பொறுப்பாளர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என மாவட்ட செயலாளரும் முன்னாள் அரசு கொறடாவுமான தாமரை எஸ்.ராஜேந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
- ஆண்டிமடம் அருகே ரூ.34.55 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
- இந்நிகழ்வில் 143 பயனாளிகளுக்கு அனைத்து துறை திட்டத்தின் மூலம் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றியம், ஸ்ரீராமன் ஊராட்சியில், அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, மாவட்ட நிர்வாகம் சார்பில் மக்கள் குறைதீர்ப்பு முகாம் நடைபெற்றது. முகாம் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தலைமையில், எம்.எல்.ஏ.கண்ணன் முன்னிலையில் நடைபெற்றது. இதில் உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் பரிமளம் வரவேற்று பேசினார். இந்நிகழ்வில் 143 பயனாளிகளுக்கு அனைத்து துறை திட்டத்தின் மூலம் ரூ.34.55 இலட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
இதில் சமூக பாதுகாப்புத் திட்ட துணை ஆட்சியர் குமார், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் பழனிசாமி, தோட்டக் கலைத்துறை துணை இயக்குநர் ஆனந்தன், கூட்டுறவுத்துறை இணை இயக்குனர் தீபாசங்கரி, கால்நடை பராமரிப்புத்துறை துணை இயக்குநர் டாக்டர் சொக்கலிங்கம், மாவட்ட வழங்கல் அலுவலர் ரவிசந்திரன், ஒருங்கினைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட துணை இயக்குநர் அன்பரசி, மருத்துவ பணிகள் துணை இயக்குநர் கீதாராணி, மகளிர்திட்ட இணை இயக்குநர் முருகண்ணன், மாவட்ட தொழில்மைய மேலாளர் லெட்சுமி, ஆண்டிமடம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் ரெங்க.முருகன், மாவட்ட பிரதிநிதிகள் உதயகுமார், குணசேகரன், சிவஜோதி, ஊராட்சி மன்றத்தலைவர் சரஸ்வதி, ஒன்றிய குழு உறுப்பினர் இராமலிங்கம் மற்றும் அனைத்துதுறை அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். முடிவில் வட்டாட்சியர் ரகுமான் நன்றி கூறினார்.
- தனியார் காப்பீட்டு நிறுவன இயக்குனருக்கு பிடிவாரண்ட் ஆணை அரியலூர் நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டுள்ளது
- சிகிச்சைக்கான செலவை மருத்துவ காப்பீட்டு நிறுவனம் முழுவதுமாக தர மறுத்துவிட்டதால் அந்நிறுவனத்தின் மீது கடந்த 2020ம் ஆண்டில் பாரதி அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடுத்தார்
அரியலூர்:
ஜெயங்கொண்டம் அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருபவர் பாரதி (வயது43). இவர் எம்.டி. இந்தியா ஹெல்த் இன்சூரன்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற தனியார் திட்டத்திற்கான காப்பீட்டு சேவையான யுனைட்டட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தில் சந்ததாராக உள்ளார். இந்நிலையில், பாரதியின் கணவர் சுவாமிநாதனுக்கு சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இதையடுத்து மருத்துவ சிகிச்சைக்கான செலவை மருத்துவ காப்பீட்டு நிறுவனம் முழுவதுமாக தர மறுத்துவிட்டதால் அந்நிறுவனத்தின் மீது கடந்த 2020ம் ஆண்டில் பாரதி அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடுத்தார். கடந்த ஜூலை மாதம் இந்த வழக்கில் தீர்ப்பளித்த அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம், புகார்தாரருக்கு மருத்துவ சிகிச்சைக்காக ஏற்பட்ட செலவில் அளிக்க வேண்டிய தொகை ரூ.1லட்சத்து 98 ஆயிரத்து 308 மற்றும் சேவை குறைபாட்டால் ஏற்பட்ட சிரமங்களுக்கு இழப்பீடாக ரூ.50 ஆயிரத்தை தமிழக அரசின் சார்பில் புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தை நிர்வகிக்கும் தனியார் நிறுவனம் கடந்த ஆகஸ்ட் மாதத்துக்குள் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.
ஆனால், தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டபடி பணத்தை வழங்காததால் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாரதி கடந்த நவம்பர் மாதம் அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அறிவிப்பை பெற்று கொண்டு விசாரணை நாளில் நிறுவனத்தின் சார்பில் ஆணையத்தில் யாரும் ஆஜராகததால், எம்டி இந்தியா ஹெல்த் இன்சூரன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிர்வாக இயக்குனருக்கு அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய நீதிபதி ராமராஜ் தலைமையிலான அமர்வு பிடி வாரன்ட் ஆணை பிறப்பித்து உத்தரவிட்டார்.
- அரியலூர் மாவட்டத்தில் காலாவதியான விதைகளை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கபடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
- விதைகளை வாங்கும் போது விற்பனையாளர்களிடம் அவசியம் விற்பனை ரசீதை கேட்டு பெறவேண்டும்
அரியலூர்:
திருச்சி விதை ஆய்வு இயக்குநர் கோவிந்தராசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-அரியலூர் மாவட்டத்தில் நெல் அறுவடைக்கு பின் பாசன வசதிஉள்ள இடங்களில் பருத்தி, எள், உளுந்துஆகிய பயிர்கள் சாகுபடிசெய்யப்படுகின்றன. விவசாயிகள் தங்களுக்கு தேவையான மேற்கண்ட விதைகளை வாங்கும் போது அரசினால் விதை விற்பனை உரிமம் வழங்கப்பட்ட விதை விற்பனை நிலையங்களில் மட்டுமே தங்களுக்கு தேவையான விதைகளை வாங்க வேண்டும்.
அப்படி விதைகளை வாங்கும் போது விற்பனையாளர்களிடம் அவசியம் விற்பனை ரசீதை கேட்டு பெறவேண்டும். இதை பயிர் அறுவடை முடியும் வரை பத்திரமாக வைத்திருக்க வேண்டும். விதை விற்பனையாளர்கள் விவசாயிகளுக்கு வழங்கும் விற்பனை ரசீதில் விவசாயின் பெயர், ரகம், நிலை, குவியல் எண், காலாவதி நாள் ஆகியவற்றை ரசீதில் குறிப்பிட்டு விவசாயிடம் கையொப்பம் பெற்று விற்பனைச் செய்யவேண்டும்.
காலாவதியான விதைகளை விற்பனைசெய்யக் கூடாது. பருவத்திற்கு ஏற்ற விதைகளை விற்பனை செய்ய வேண்டும்.இதில் ஏதேனும் குறைகள் காணப்பட்டால் விதை விற்பனையாளர்கள் மீது விதைச் சட்டபடி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் விவரங்களுக்கு திருச்சி மன்னார்புரத்திலுள்ள விதை ஆய்வு இயக்குநர் அலுவலக தொலைப்பேசி 0431-2420587 என்ற எண்ணில் தொடர்புக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
- அரியலூரில் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது
- கூட்டத்தில் 23 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
அரியலூர்:
அரியலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக மன்றத்தில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது, நிகழ்ச்சி யூனியன் சேர்மன் செந்தமிழ் செல்வி தலைமையில், ஒன்றிய குழு துணை தலைவர் சரஸ்வதி ஜெயவேல் முன்னிலையில் நடைபெற்றது. இதில் யூனியன் கமிஷனர் குணசேகரன், ஸ்ரீதேவி, ஒன்றிய குழு உறுப்பினர்கள் வெள்ளைச்சாமி, பாப்பாள், சரவணன், ராணி, செந்தமிழ்செல்வி, முருகேசன், சுந்தரவடிவேல், கண்ணகி ரேவதி, மாலா, சிவபெருமாள், ராதாகிருஷ்ணவேணி, சுரேஷ்குமார், அலுவலக மேலாளர் ஆனந்தன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முரளி, சகாயராஜ், தமிழ்ஒளி உட்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் 23 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
- கால்நடைகளை தாக்கும் அம்மை நோயால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
- இந்த நோயால் கால்நடைகள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் கால்நடை மருத்துவ முகாம் நடத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அரியலூர்
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம், கழுமங்கலம், கச்சிப்பெருமால், துலாரங்குறிச்சி, இடையார், சூரியமணல், கல்லாங்குளம், வாணத்திைரயான்பட்டிணம், காடுவெட்டங்குறிச்சி, சோழங்குறிச்சி, பருக்கல், கீழமைக்கால்பெட்டி, பாண்டிபஜார், சுத்தமல்லி, உல்லியகுடி, வெண்மான்கொண்டான், தத்தனூர், மனகெதி, நாச்சியார்பேட்டை உள்ளிட்ட கிராமங்களில் வாழும் விவசாயிகள் ஒவ்வொருவரும் ஆடுகள் மற்றும் மாடுகள் வளர்த்து தங்களின் அன்றாட பிழைப்பை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த 2 மாதங்களாக பருவ நிலை மாற்றத்தினால் மாடுகளை அம்மை நோய் தாக்கி வருகிறது. இந்த மாட்டு அம்மை ஆரம்பத்தில் கொசு கடி, ஈ கடி போல் தெரிகிறது. பின்னர் ஒரு வாரத்தில் உடம்பு முழுவதும் சின்ன கட்டிகள் மற்றும் காலில் பெரிய கட்டிகள் தோன்றி மாடுகள் மேயமுடியாமலும், நடந்து செல்லமுடியாமலும் அவதிப்படுகிறது. இதனால் இப்பகுதி விவசாயிகள், கால்நடை வளர்ப்பவர்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:- கழுமங்கலத்தை சேர்ந்த விவசாயி கலியபெருமாள்:- என்னிடம் 4 மாடுகள் இருக்கிறது. இதில் 2 மாடுகளுக்கு அம்மை நோய் வந்ததால் நான் ரொம்ப சிரமப்பட்டேன். மாட்டின் உடம்பு முழுவதும் கட்டிகள் மற்றும் வீக்கம் இருந்தது.
உடனே கால்நடை மருத்துவரை அணுகி விவரத்தை சொல்லி தடுப்பூசி போட்டேன். அதன் பிறகு இயற்கை முறையில் வேப்பிலை, குப்பைமேனி, மஞ்சள் மற்றும் உப்பு சேர்த்து தண்ணீரில் கொதிக்க வைத்து வீக்கம் உள்ள இடத்தில் ஒத்தடம் கொடுத்தேன். பிறகு படிப்படியாக நோயின் தாக்கம் குறைந்து பழைய நிலைக்கு வருவதற்கு 15 நாட்களுக்கு மேல் ஆகிறது. பிளாக்குறிச்சியை சேர்ந்த கொளஞ்சிநாதன்:- எனது ஊரில் உள்ள விவசாயிகளின் மாடுகளுக்கு அம்மை நோய் வந்து மாடுகள் கஷ்டப்படுவதை நேரில் பார்த்தேன். அதனால் எனது மாடுகளுக்கு அம்மை நோய் வந்தால் நம்மால் தாக்கு பிடிக்க முடியாது. அதனால் எனது 4 மாடுகளையும் விற்றுவிட்டேன்.
அம்மை நோய் முடிந்த பிறகு மாடுகள் வாங்கி கொள்ளலாம் என்று இருக்கிறேன். பொதுவாக இந்த நோயை ஆரம்பத்திலேயே விவசாயிகள், கால்நடை வளர்பவர்கள் கண்டு பிடித்து தடுப்பூசி மற்றும் இயற்கை முறையில் மஞ்சள், வேப்பிலை, குப்பைமேனி ஆகியவற்றை சேர்த்து அரைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் பூசினால் சரியாகிவிடுகிறது. இந்த மாட்டம்மை நோயை ஆரம்பத்தில் கண்டு பிடிக்காத விவசாயிகளின் மாடுகள் மற்றும் கன்றுகள் இறந்து விடுகின்றன. ஆனந்தகிருஷ்ணன்:- என்னிடம் 3 மாடுகள் உள்ளது. அம்மை நோய் வருவதற்கான அறிகுறிகள் தெரிந்தவுடன் கால்நடை மருத்துவரை அணுகி தடுப்பூசி செலுத்தி விட்டேன். அதனால் எனக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் போய்விட்டது.
நான் இருந்ததால் உடனே தடுப்பூசி செலுத்திவிட்டேன். வசதி இல்லாத ஏழை விவசாயிகள் அவர்கள் மாடுகளுக்கு அம்மை நோய் வந்தால் அவர்களால் தடுப்பூசி செலுத்த முடியாது. இந்த சூழ்நிலையில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு ஒவ்வொரு ஊராட்சியிலும் கால்நடை மருத்துவ முகாம் அமைத்து தடுப்பூசி போடுதல் வேண்டும், ஒரு சில ஊராட்சியில் தடுப்பூசி முகாம் போடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர். எனவே மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து கால்நடைகளை தாக்கும் பெரியஅம்மை, மாட்டு அம்மை, இதனை சேர்ந்த தோல் கழலை நோய் உள்ளிட்ட நோய்களை தடுத்து கால்நடைகளை பாதுகாக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- இடப்பிரச்சினை குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
- இரு தரப்பினரும் தனித்தனியாக உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அரியலூர்
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே தத்தனூர் கீழவெளி காலனி தெருவை சேர்ந்தவர் கோவிந்தசாமி மனைவி பிச்சையம்மாள். இவரது மகன் பாலமுருகனுக்கும், அதே பகுதியில் வசிக்கும் பெருமாள் மகன்கள் தம்பிதுரை, நெடுமாறன், தர்மலிங்கம் ஆகியோருக்கும் இடையே இடம் சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வருகிறது.
இதற்கிடையில் பாலமுருகன் தனது இடத்தினை சுத்தம் செய்து சர்வேயர் வைத்து இடத்தை அளக்கும்போது, எதிர் தரப்பினர்களான தம்பிதுரை, நெடுமாறன், தர்மலிங்கம் ஆகியோர் சேர்ந்து இடம் சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது எப்படி அளக்கலாம் எனக்கூறி கேட்டுள்ளனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
பின்னர் இரு தரப்பினரும் தனித்தனியாக உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் இருதரப்பினரையும் அழைத்து விசாரணை நடத்தி, இடப்பிரச்சினை என்பதால் நீதிமன்றம் மூலம் தான் தீர்வு கிடைக்கும், அதனால் நீங்கள் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து தீர்ப்பு வரும் வரை காத்திருங்கள் எனக்கூறி அனுப்பி வைத்தார்.
- மாயமான இளம் பெண் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- குடும்ப பிரச்சினை சம்பந்தமாக கணவன்-மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது
அரியலூர்
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள தட்டான்சாவடி கிராமத்தை சேர்ந்தவர் கனகராஜ்(வயது 25). இவரது மனைவி காமாட்சி(22). இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிறது. இந்நிலையில் கடந்த 12-ந் தேதி குடும்ப பிரச்சினை சம்பந்தமாக கணவன்-மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனை அறிந்த காமாட்சியின் தந்தை நாகரெத்தினம் தனது மகளை சொந்த ஊரான வாணத்திரையான்பட்டினம் கிராமத்திற்கு அழைத்து வந்து விட்டார்.இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியே சென்ற காமாட்சி மீண்டும் வீடு திரும்பவில்லை. பின்னர் அவர் எங்கு தேடியும் கிடைக்காததால் இதுகுறித்து உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான காமாட்சியை தேடி வருகின்றனர்.






