என் மலர்
அரியலூர்
அரியலூர்,
அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் விதைகளை அதிகபட்ச விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருச்சி விதை ஆய்வு துணை இயக்குநர் கோவிந்தராசு தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டத்தில் நீர் பாசன வசதி உள்ள இடங்களில், வரும் கோடைபருவத்தில் கம்பு, மக்காச் சோளம், பருத்தி, உளுந்து, எள் போன்ற பயிர்கள் பயிரிடப்படுகின்றன.தரமான விதைகளை விவசாயிகளுக்கு கிடைக்க செய்வதே விதை ஆய்வு துறையின் முக்கியநோக்கமாகும்.விவசாயிகள் சான்று பெற்ற தரமான விதைகளை விதைப்பதற்கு பயன்படுத்த வேண்டும். சான்று பெற்ற விதை களைபயன்படுத்தினால் தேவையான பயிர் எண்ணிக்கை பராமரிக்கப்படும், விதையின் அளவுகுறையும். சீரான வேகமான முளைப்பு திறன் உள்ள நாற்றுகள் கிடைக்கும். பூச்சிநோய் தாக்குதல் குறையும், 5 முதல் 20 சதவீதம் கூடுதல் மகசூல் கிடைக்கும். விதை விற்பனையாளர்கள் விதைகளை விற்பனை செய்யும் போது அதிகபட்ச சில்லறை விலைக்கு மிகாமல் விற்பனை செய்யவேண்டும்.
விவ சாயிகள் விதைகளை வாங்கும் போது விற்பனைப் பட்டியல் கேட்டு பெறவேண்டும். இதில் ஏதேனும் குறைபாடு காணப்பட்டால் விற்பனையாளர்கள் மீது விதைச் சட்டம் , விதை விதிகள் , விதை கட்டுப்பாடுஆணையின் படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
- விக்கிரமங்கலம் அருகே மாயமான வாலிபர் ஏரியில் பிணமாக மீட்கப்பட்டார்.
- இந்த சம்பவம் குறித்து சப்-இன்ஸ்பெக்டர் லோகநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
அரியலூர்
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே கோரைக்குழி கிராமம் தெற்கு தெருவை சேர்ந்தவர் அன்பரசன் (வயது 33). சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்த இவர் கடந்த மாதம் கோரைக்குழிக்கு வந்துள்ளார். கடந்த 6-ந் தேதி இரவு வீட்டைவிட்டு வெளியே சென்றவர் அதன் பிறகு வீடு திரும்பவில்லை. இந்தநிலையில் அங்குள்ள பெரிய ஏரியில் அன்பரசன் பிணமாக மிதந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த விக்கிரமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து சப்-இன்ஸ்பெக்டர் லோகநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- தா.பழூர் அருகே அடகு கடைக்காரரை தாக்கிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
- இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரியலூர்
அரியலூர் மாவட்டம் தா.பழூர் உதயநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் கார்த்திகேயன் (வயது 37). இவர் உதயநத்தம் கிராமத்தில் அடகு கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு தனது வீட்டில் குடும்பத்துடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது வீட்டின் முன்பு திடீரென சத்தம் கேட்டதால் அங்கு சென்று பார்த்தார். அப்போது சிலர் அவரது வீட்டின் முன்பு நின்று உருட்டுக்கட்டைகளுடன் ஒருவருக்கொருவர் சண்டைபோட்டுக்கொண்டு இருந்தனர். இதனைகண்டு அதிர்ச்சியடைந்த கார்த்திகேயன் ஏன் இங்கு நின்று சண்டை போட்டுக்கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் எல்லாம் யார் என்று கேட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் கார்த்திகேயனை தகாத வார்த்தைகளால் திட்டி அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, கார்த்திகேயனின் அலறல் சத்தம் கேட்டு அருகே இருந்தவர்கள் ஓடி வந்துள்ளனர். இதையடுத்து அங்கு சண்டை போட்டுக் கொண்டிருந்த நபர்கள் கையில் வைத்திருந்த கட்டையை காட்டி கொலை மிரட்டல் விடுத்து சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அவர்களில் ஒருவரது மோட்டார் சைக்கிள் பழுது ஏற்பட்டதால் அங்கேயே நிறுத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து கார்த்திகேயன் அளித்த புகாரின் பேரில் தா.பழூர் சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தழுதாழைமேடு பகுதியை சேர்ந்த ஜெயமணி, நெடுமாறன், கங்கைகொண்டசோழபுரம் பகுதியை சேர்ந்த ஜெயக்குமார், நெடுமாறன் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்
- நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் போலீசார் சோதனை நடத்தினர்.
- அரியலூர் மாவட்டத்தில் 25 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, அதில் 14 நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.
அரியலூர்
அரியலூர் மாவட்டத்தில் சம்பா நெல் சாகுபடியை தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நெல் அறுவடை நடந்து வருகிறது. தமிழ்நாடு அரசின் உத்தரவுப்படி அரியலூர் மாவட்டத்தில் 25 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, அதில் 14 நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடுகள் ஏதும் நடைபெறாத வண்ணம் தடுக்கும் பொருட்டு, தமிழ்நாடு குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை கூடுதல் இயக்குனர் அருண் உத்தரவின்படி அரியலூர் மாவட்டத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அரியலூர் மாவட்ட குடிமை பொருள் வழங்கல் பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
- பனையடி கிராம கோவில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றது
- கர்ப்ப கிரகத்தில் உள்ள சாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனையும் நடைபெற்றது
அரியலூர் அடுத்த பனையடி கிராமத்திலுள்ள விநாயகர், சப்தகன்னிகள் மற்றும் கருப்புசாமி கோயில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இக்கிராமத்தில் சிதிலமடைந்த நிலையில் இருந்த விநாயகர், சப்தகன்னிகள், கருப்பு சாமி கோவில்கள் பொதுமக்கள் சார்பில் புனரமைக்கப்பட்டது. மேலும் சாமிசிலைகள் சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து சனிக்கிழமை முதல் சிறப்பு யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டது. பின்னர் சிவாச்சாரியார்கள் வேதங்கள் முழங்க, மேளதாளம், வாணவேடிக்கையுடன், கும்பங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் கர்ப்ப கிரகத்தில் உள்ள சாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனையும்நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- அரியலூரில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது
- முகாமில் தண்டுவட பிரச்னைகள், நாள்பட்ட சளி, இளைப்பு, சைனசைடிஸ் ஆஸ்துமா உள்ளிட்ட நோய்களுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட்டு மருந்துகள் வழங்கப்பட்டன.
அரியலூர்:
அகில இந்திய ஆயர்வேத கூட்டமைப்பின் திருச்சி மண்டலம், ஆரோக்கிய ஆயர்வேதிக் மருத்துவமனை, ரோட்டரி சங்கம் ஆகியவை இணைந்து நடத்திய இலவச ஆயர்வேத மருத்துவ முகாம் அரியலூரில் நடைபெற்றது சி.எஸ்.ஐ. மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த முகாமுக்கு ரோட்டரி சங்கச் செயலர் கொளஞ்சி தலைமை வகித்து, குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்தார். தொழிலதிபர்கள் கோவை கிருஷ்ணா, அமுதன், ஏபிஎன் சுதாகர், புலவர் இளங்கோவன், மீரா மகளிர் கல்லூரி தாளாளர் கமலாபாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆயுர்வேத மருத்துவ நிபுணர் இரா.ரேவதி தலைமையில் கார்த்திக், சிவகுரு, ஆகாஷ்,சந்தோஷ்ராஜ் ஆகியோர் கொண்டமருத்துவக் குழுவினர் கலந்து கொண்டு, சிகிச்சை அளித்தனர். முகாமில், மூட்டுவலி, வீக்கம், மூட்டு தேய்மானம், கழுத்து, இடுப்பு மற்றும் தண்டுவட பிரச்னைகள், நாள்பட்ட சளி, இளைப்பு, சைனசைடிஸ் ஆஸ்துமா உள்ளிட்ட நோய்களுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட்டு மருந்துகள் வழங்கப்பட்டன. முன்னதாக ரோட்டரி சங்க நிர்வாகி பிரபு சங்கர் வரவேற்றார். முடிவில், ஆரோக்கிய ஆயுர்வேதிக் மருத்துவமனை நிர்வாகி கௌஷிக் நன்றி தெரிவித்தார்.
- ஜெயங்கொண்டம் அருகே நீரில் மூழ்கி முதியவர் பலியானார்
- சின்னவளையம் அரங்கநேரி படித்துறையில் கால் கழுவுவதற்காக சென்றவர் எதிர்பாராத விதமாக தவறி விழுந்தார்
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடிபள்ளத்தெருவை சேர்ந்தவர் முகமது இப்ராஹிம் மகன் பரகத்துல்லா (வயது47). இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு கை, கால் வராமல் சிரமப்பட்டு வந்தார். இந்நிலையில் சின்னவளையம் அரங்கநேரி படித்துறையில் கால் கழுவுவதற்காக சென்றவர் எதிர்பாராத விதமாக தவறி விழுந்து ஏரி தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அவ்வழியே சென்றவர்கள் பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவல் அறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகன்நாத் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பரகத்துல்லாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவரது உறவினரிடம் உடல் ஒப்படைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. முதியவர் ஏரியில் மூழ்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- அரியலூரில் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
- ஆர்ப்பாட்டத்தில் பல கோரிக்கைகள் வலியுத்தப்பட்டது.
அரியலூர்:
அரியலூரில் மத்திய அரசை கண்டித்து திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்களில் நீதிபதிகளில் நியமனத்தில், உயர் சாதிகளின் ஆதிக்கம் மற்றும் ஒடுக்கப்பட்ட சமூக மூத்த நீதிபதிகள் புறக்கணிக்கப்படுவதைக் கண்டித்தும், நீதிபதிகள் நியமனத்தில் இட ஒதுக்கீடு வழங்கி சமூக நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்துக்கு திராவிட கழகத்தின் மாவட்டத் தலைவர் விடுதலை நீலமேகம் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் சிந்தனைச் செல்வன், மண்டலத் தலைவர் கோவிந்தராஜ், செயலர் மணிவண்ணன், பொதுக் குழு உறுப்பினர் காமராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நடைபெற்றது
- சாலை பாதுகாப்பு மற்றும் தடை செய்யப்பட்ட குட்கா, கஞ்சா முதலிய போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வையும் மேற்கொண்டனர்.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா உத்தரவின் பேரில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷாகீராபானு ஜெயங்கொண்டம் பகுதி பொதுமக்களிடையே சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு விதிகள், மது மற்றும் போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்தும், போதையில் வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபத்துக்கள் குறித்தும் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. தொடர்ந்து வாகன ஓட்டிகள், ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். சாலை பாதுகாப்பு மற்றும் தடை செய்யப்பட்ட குட்கா, கஞ்சா முதலிய போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வையும் மேற்கொண்டனர். தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் உபயோகிப்பவர் குறித்தும், விற்பனை குறித்தும் எவ்வித அச்சமின்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கலாம். தகவல் அளிப்பவர் எண் ரகசியம் பாதுகாக்கப்படும் எனவும் விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார்.
- அரியலூரில் செயல்முறை கிடங்கு கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது
- மாவட்ட கலெக்டர் தொடங்கி வைத்தார்
அரியலூர்:
அரியலூர் அடுத்த கயர்லாபாத் கிராமத்தில், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் சார்பில் புதிய வட்ட செயல்முறை கிடங்கு அமைப்பதற்கான பணியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தவாறு காணொலி காட்சி மூலம் தொடக்கி வைத்தார். இதைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி கலந்து கொண்டு கட்டுமானப் பணியை தொடக்கி வைத்தார். அப்போது அவர் தெரிவிக்கையில்: கயர்லாபாத் கிராமத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் 3ஆயிரம் மெ.டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடங்கு ரூ.496.84 லட்சம் மதிப்பீட்டிலும், ஆண்டிமடம் வட்டம் விளந்தை கிராமத்தில் 2ஆயிரம் மெ.டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடங்கு ரூ.402.52 லட்சம் மதிப்பீட்டிலும் என மொத்தம் 2 கிடங்குகள் ரூ.899.36 லட்சம் மதிப்பீட்டில் தமிழக முதல்வர் காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். தற்போதைய கிடங்குகளின் உணவுப் பொருள் சேமிப்பின் கொள்ளளவு 5,500 மெ.டன் உள்ள நிலையில், கூடுதல் புதிய கிடங்குகளின் கொள்ளளவு திறனுடன் 10,500 மெ.டன் சேமிப்பு கிடங்குகளின் கொள்ளளவாக உயர்த்தப்படவுள்ளது. இதன் மூலமாக அரியலூர் மாவட்டத்திற்கு தேவையான உணவுப் பொருள்களை சேமித்து வைத்து பொதுவிநியோகத் திட்டத்திற்கு வழங்குவதற்கு பயனுள்ளதாக இருக்கும் என்றார். இந்நிகழ்ச்சிக்கு எம்.எல்.ஏ. சின்னப்பா முன்னிலை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி, நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் சிற்றரசு, வருவாய் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன், வட்டாட்சியர் கண்ணன், ஊராட்சித் தலைவர் செளந்தர்ராஜன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
- அரியலூர் தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 13ஆயிரம் வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது
- இதில் 4 மோட்டார் வாகன விபத்து வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது
அரியலூர்:
அரியலூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் மாவட்ட நீதிபதியும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவருமான மகாலட்சுமி தலைமையில் நடைபெற்றது. அரியலூர், ஜெயங்கொண்டம், செந்துறை ஆகிய நீதிமன்றங்களில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. அரியலூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கூடுதல் மாவட்ட நீதிபதி கர்ணன், குடும்ப நல நீதிமன்ற நீதிபதி செல்வம், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி சரவணன், கூடுதல் மாவட்ட மூன்சிப் கோர்ட் நீதிபதி செந்தில்குமார், குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதிகள் அறிவு, செந்தில்குமார், கற்பகவல்லி, ஜெயங்கொண்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சார்பு நீதிபதி வட்ட சட்டப் பணிகள் குழு தலைவர் லதா, கூடுதல் மாவட்ட முன்சீப் கோர்ட் நீதிபதி கணேஷ், குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி ராஜசேகரன், செந்துறையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கூடுதல் முன்சீப் கோர்ட் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி அக்னேஷ்ஜெயகிருபா, அரியலூர் மாவட்ட நுகர்வோர் கோர்ட் நீதிபதி ராமராஜ், சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் அழகேசன், நிர்வாக அலுவலர் வெள்ளைச்சாமி ஆகியோர்கள் கலந்து கொண்டனர். தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 331 சிறு, குறு வழக்கு, 19 சிவில் வழக்கு, 4 மோட்டார் வாகன விபத்து வழக்கு, 1 காசோலை வழக்கு, 2 நுகர்வோர் கோர்ட் வழக்கு, 287 வங்கி வழக்கு, 2 நகராட்சி சம்பந்தப்பட்ட வழக்கு, 6,538 போக்குவரத்து காவல்துறை விதி மீறிய வழக்கு மற்றும் 484 நிலம் கையகப்படுத்துதல் வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. 13,184 வழக்குகளில் ரூ.4.80 கோடிக்கு தீர்வு காணப்பட்டது.
- தந்தை இறந்த சோகத்தில் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
- சம்பவத்தன்று வயலில் பயன்படுத்தும் களைக்கொல்லி மருந்தை (விஷம்) குடித்து விட்டதாக திருமூர்த்தி அவரது சின்னம்மா அபிராமிக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.
அரியலூர் :
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள அணைக்குடம் நடுத்தெருவை சேர்ந்தவர் ராஜதுரை மகன் திருமூர்த்தி (வயது 27). இவர் சிறுவயதாக இருந்தபோதே இவரது தாய் இறந்து விட்டதால் அவரது தந்தை ராஜதுரை 2-வது திருமணம் செய்து கொண்டார். திருமூர்த்தியும் அந்த குடும்பத்திலேயே வளர்ந்து வந்தார். இந்நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமூர்த்தியின் தந்தை ராஜதுரை உடல் நலக்குறைவு காரணமாக இறந்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட துக்கத்தில் திருமூர்த்தி கடந்த சில மாதங்களாக தொடர்ந்து மது அருந்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
சம்பவத்தன்று வயலில் பயன்படுத்தும் களைக்கொல்லி மருந்தை (விஷம்) குடித்து விட்டதாக திருமூர்த்தி அவரது சின்னம்மா அபிராமிக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார். இதை அடுத்து உடனடியாக அவரை மீட்ட உறவினர்கள் ஜெயங்கொண்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து கும்பகோணத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் திருமூர்த்தி சிகிச்சை பலன்இன்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அபிராமி தா.பழூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நிக்கோலஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.






