என் மலர்tooltip icon

    அரியலூர்

    • நெல் அறுவடை எந்திரங்கள் வாடகைக்கு உழவன் செயலியை பயன்படுத்த வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தினார்
    • விவசாயிகள் உழவன் செயலிக்குள் சென்று நேரடியாக உரிமையாளரை தொடர்பு கொண்டு இடைத்தரகர் இன்றி நெல் அறுவடை எந்திரங்களை பெற்று பயனடைய வேண்டும்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தில் நெல் அறுவடை எந்திரங்களை வாடகைக்கு உழவன் செயலியை பயன்படுத்த வேண்டும் கலெக்டர் ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளார். வேளாண்மை பொறியியல் துறை மூலம் அறுவடை எந்திரங்களை நேரடியாக உரிமையாளர்களிடம் இருந்து பெற உரிமையாளர் பெயர், விலாசம், கைப்பேசி எண்ணுடன் மாவட்ட வாரியாக, வட்டார வாரியாக உழவன் செயலியின் மூலம் வேளாண் எந்திரங்கள் வாடகைக்கு என்ற முகப்பை தேர்வு செய்து அறுவடை எந்திரங்கள் பற்றி அறிய என்ற துணை முகப்பின் மூலம் அரியலூர் மாவட்டத்தில் அதன் தொடர்புடைய வட்டாரத்தை உள்ளீடு செய்து தெரிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் உழவன் செயலிக்குள் சென்று நேரடியாக உரிமையாளரை தொடர்பு கொண்டு இடைத்தரகர் இன்றி நெல் அறுவடை எந்திரங்களை பெற்று பயனடைய வேண்டும் கலெக்டர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    • அரசுப் பள்ளியில் மன வள, தற்காப்பு கலைப் பயிற்சி வகுப்பு தொடக்கப்பட்டது
    • இந்த பயிற்சியானது 3 மாதம் நடைபெற உள்ளது.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அடுத்த புதுச்சாவடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மனவள மற்றும் தற்காப்பு கலை பயிற்சி வகுப்புகள் தொடங்கியது. இந்த பயிற்சி வகுப்புக்கு ஜெயங்கொண்டம் வட்டார கல்வி அலுவலர் ராசாத்தி தொடங்கி வைத்து பேசும்போது, பள்ளிகளில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு ,மன வளத்தை பெருக்கவும், மன பயம் போக்கவும், மன இறுக்கம், மன அழுத்தம் குறைத்து மன தைரியத்தை உருவாக்கி நற்சிந்தனையுடன் கற்றலில் மேம்படுத்திக்கொள்ள இந்த மனவள மற்றும் தற்காப்புகலை பயிற்சியானது வழங்கப்படுகிறது என்றார்.வட்டார கல்வி அலுவலர் மதலைராஜ், வட்டார வளமைய மேற்பார்வையாளர் கண்ணதாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மனவள மற்றும் தற்காப்பு கலை பயிற்சிகளை பொன்னுசாமி அளித்து வருகிறார். முன்னதாக பள்ளியின் தலைமை ஆசிரியர் சாந்தி வரவேற்றார்.முடிவில் அறிவியல் பட்டதாரி ஆசிரியர் செங்குட்டுவன் நன்றி தெரிவித்தார். இந்த பயிற்சியானது 3 மாதம் நடைபெற உள்ளது.

    • அரியலுாரில் புதிய பாலத்திற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது
    • பாலம் அமைக்கும் பணிக்கு ரூ.40.91 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், கழுவந்தோண்டி ஊராட்சியில் ரூ.40.91 இலட்சம் மதிப்பில் சிறு பாலம் அமைக்கும் பணிக்கு மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி அடிக்கல் நாட்டினார். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பாலம் அமைக்கும் பணிக்கு ரூ.40.91 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் கண்ணன், ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர் ஈஸ்வரன், செயற்பெறியாளர் பிரபாகரன், ஊராட்சி மன்ற தலைவர்மகாலிங்கம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


    • அரியலூரில் வக்கீல் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது
    • கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    அரியலூர்:

    அரியலூர் நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட வக்கீல் சங்க பொதுக் குழு கூட்டம் சங்கத் தலைவர் மனோகரன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், அரியலூர் மாவட்டத்தில் பாரபட்சமற்ற முறையில் விரைவாக நீதி வழங்கும் வகையில் செயல்பட்டு வரும் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தை மிரட்டும் வகையில் செயல்பட்டு வரும் நபர் மீது காவல் துறையினரும், மாவட்ட ஆட்சியரும் நடவடிக்கை எடுக்க வேண்டும், நுகர்வோர் குறைதீர் ஆணையத் தலைவருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • அரியலூர் மாவட்டத்தில் புதுமைபெண் திட்டத்தில் 1355 மாணவிகள் பயனடைந்தனர் என கலெக்டர் ரமணசரஸ்வதி தகவல் தெரிவித்தார்
    • புதுமைப் பெண் இரண்டாம் கட்டத் திட்டத்தில் 445 மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வீதம் பெறுவதற்கு உதவித்தொகைக்கான வங்கி பற்று அட்டை வழங்கப்பட்டுள்ளது.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் இதுவரை 1,355 மாணவிகள் பயனடைந்த வருவதாக மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது,அரியலூர் மாவட்டத்தில், ஏற்கனவே சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டத்தின் கீழ் முதற் கட்டமாக 910 மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வீதம் பெறுவதற்கு உதவித்தொகைக்கான வங்கி பற்று அட்டை வழங்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, புதுமைப் பெண் இரண்டாம் கட்டத் திட்டத்தில் 445 மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வீதம் பெறுவதற்கு உதவித்தொகைக்கான வங்கி பற்று அட்டை வழங்கப்பட்டுள்ளது. எனவே இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாணவி கள் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்து தமிழ்நாட்டில் உயர்கல்வி பயில்பவராக இருத்தல் வேண்டும் அல்லது தனியார் பள்ளிகளில் கல்வி உரிமைத் திட்டத்தின் கீழ் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயின்று 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்த மாணவியர்களாக இருத்தல் வேண்டும்.மாணவிகள் 8 அல்லது 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்புகளில் படித்து பின்னர், முதன்முறையாக உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் படிப்புக்கு மட்டுமே இத்திட்டம் பொருந்தும். புதுமைப் பெண் திட்டத்தில், சான்றிதழ் படிப்பு, பட்டயப் படிப்பு, இளங்கலைப் பட்டம், தொழில் சார்ந்த படிப்பு மற்றும் பாரா மெடிக்கல் படிப்பு போன்ற படிப்புகளை பயிலும் மாணவிகளுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படும். மேலும், முதலாம் ஆண்டிலிருந்து இரண்டாம் ஆண்டு செல்லும் மாணவியரும், இரண்டாம் ஆண்டிலிருந்து மூன்றாம் ஆண்டு செல்லும் இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் மாணவியர்களும், தொழிற்கல்வியைப் பொருத்தமட்டில், மூன்றாம் ஆண்டிலிருந்து நான்காம் ஆண்டிற்குச் செல்லும் மாணவிகளுக்கும். மருத்துவக் கல்வியைப் பொருத்தமட்டில், நான்காம் ஆண்டிலிருந்து ஐந்தாம் ஆண்டு செல்லும் மாணவியர்களும் இத்திட்டத்தின் கீழ் பயனடைவர் என்று அவர் கூறினார்.

    • நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்
    • போராட்டத்துக்கு ஏஐடியுசி பொதுச் செயலர் தண்டபாணி தலைமை வகித்தார்.

    அரியலூர்:

    ஜனவரி மாதத்துக்கான ஊதியத்தை வழங்க கோரி அரியலூர் நகராட்சி அலுவலகம் முன்பு தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊதியம் வழங்கப்படாததைக் கண்டித்தும், உடனடியாக ஊதியம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர். தகவலறிந்து வந்த நகராட்சி ஆணையர்(பொ)தமயந்தி, மதியத்துக்குள் ஊதியம் வழங்கப்பட்டுவிடும் என்று தெரிவித்ததையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு சென்றனர். போராட்டத்துக்கு ஏஐடியுசி பொதுச் செயலர் தண்டபாணி தலைமை வகித்தார்.


    • கலெக்டர் அலுவலகம் முன்பு வாலிபர் இறப்பிற்கு நடவடிக்கை எடுக்க கோரி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்
    • அழகர் அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 14-ந் தேதி உயிரிழந்தார்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், நாகமங்கலம் அடுத்த கணக்கம்பாளையம் கிரமத்தை சேர்ந்தவர் மதியழகன் மகன் அழகர்(வயது32). விவசாயி. இவரது மனைவி ராஜலட்சுமி(25). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில், ராஜலட்சுமி தனது கணவர் அழகரிடம் அவரது சகோதரிடமிருந்து சொத்தை பிரித்து வாங்குமாறு கூறியுள்ளார். அதற்கு அவர் சிறிது காலம் போகட்டும் என்று தெரிவித்துள்ளார். இதனால் அவர்களிடையே கடந்த சில மாதங்களாக பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து ராஜலட்சுமி ரெட்டிப்பாளையத்தில் வசிக்கும் தனது தந்தை செல்வத்திடம் கூறியுள்ளார். இதையடுத்து செல்வம் கடந்த மாதம் 30-ச் தேதி தனது ஆதரவாளர்கள் 8 பேருடன் சேர்ந்து சொத்தை பிரித்துவரக்கோரி அழகரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த அழகர் அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அங்கு கடந்த 14-ந் தேதி உயிரிழந்தார். இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், அழகர் இறப்பு காரணமான செல்வம் உள்பட 8 பேரை கைது செய்யக் கோரி அழகர் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கலெக்ட் அலுவலகம் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த அரியலூர் காவல் துறையினர், தங்களது கோரிக்கைகளை மனுவாக எழுதி ஆட்சியரிடம் அளிக்குமாறு கூறியதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலெக்டரிடம் அளித்துவிட்டுச் சென்றனர்.


    • அரியலூர் மாவட்ட அளவிலான கபடி போட்டியில் காவலர் அணி முதலிடம் பிடித்தனர்
    • வெற்றி பெற்ற காவலர்கள் அணிக்கு ஊக்குத் தொகையாக ரூ.36 ஆயிரம் வழங்கப்பட்டது.

    ஜெயங்கொண்டம்:

    தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பாக தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் தமிழ்நாடு முழுவதும் அரசு துறை சார்ந்தவர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் என ஐந்து பிரிவுகளில் ஆண்கள், பெண்கள் என 50 போட்டிகள் நடைபெற்றது. தற்போது ஜனவரி, பிப்ரவரி மாதம் மாவட்ட அளவிலான போட்டிகள், மே மாதம் மாநில அளவிலான போட்டிகளும் நடைபெறும் என அறிவித்துள்ளது. அதன் அடிப்படையில் தற்போது மாவட்ட அளவிலான போட்டி நடைபெற்று முடிந்தது. இதில் ஜெயங்கொண்டம் மகளிர் காவல் ஆய்வாளர் சுமதி, போக்குவரத்து ஆய்வாளர் சாஹிரா பானு தலைமையிலான கபடி போட்டியில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்தனர். தொடர்ந்து எரிதல் போட்டியில் போக்குவரத்து காவலர் அஞ்சலி முதல் இடமும், வாலிபாலில் மூன்றாம் இடமும் பிடித்துள்ளனர். வெற்றி பெற்ற காவலர்கள் அணிக்கு ஊக்குத் தொகையாக ரூ.36 ஆயிரம் வழங்கப்பட்டது. மேலும் ஜெயங்கொண்டம் டி.எஸ்.பி. ராஜா, சோமசுந்தரிடம் வாழ்த்து பெற்றார்.

    • அரியலூர், தேளூர், நடுவலூர், செந்துறை பகுதிளில் நாளை மின்தடை ெசய்யபடுகிறது
    • காலை 9மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின்விநியோகம் இருக்காது

    அரியலூர்:

    அரியலூர், தேளூர், நடுவலூர், செந்துறை துணை மின் நிலையங்களில் நாளை (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மேற்கண்ட துணை மின்நிலையங்களில் இருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான அரியலூர் சில பகுதிகள், கயர்லாபாத், ராஜீவ்நகர், லிங்கத்தடிமேடு, வாலாஜநகரம், வெங்கடகிருஷ்ணாபுரம், அஸ்தினாபுரம், காட்டுப்பிரிங்கியம், பெரியநாகலூர், மண்ணுழி, புதுப்பாளையம், குறிச்சிநத்தம், சிறுவளூர், பாலம்பாடி, பார்ப்பனச்சேரி ஒரு பகுதி கிருஷ்ணாபுரம், ரெங்கசமுத்திரம், கல்லங்குறிச்சி, மணக்குடி, கடுகூர், கோப்பிலியன்குடிக்காடு, அயன்ஆத்தூர், ஆனந்தவாடி, சீனிவாசபுரம், பொய்யாதநல்லூர், கொளப்பாடி, ஓட்டக்கோவில், கோவிந்தபுரம், மங்களம், தாமரைக்குளம், குறுமஞ்சாவடி, வி.கைக்காட்டி, தேளுர், கா.அம்பாபூர், பாளையக்குடி, காத்தான்குடிகாடு, காவனூர், விளாங்குடி, ஆதிச்சனூர், மணகெதி, நாச்சியார்பேட்டை, நாகமங்கலம், ஒரத்தூர், அம்பவலர் கட்டளை, உடையவர்தீயனூர், விக்கிரமங்கலம், குணமங்கலம், கடம்பூர், ஓரியூர், ஆண்டிப்பட்டாக்காடு, சுண்டக்குடி, வாழைக்குழி, வெளிப்பிரிங்கியம், நெரிஞ்சிக்கோரை, நாக்கியர்பாளையம், மைல்லாண்டகோட்டை, சுத்தமல்லி, காசான்கோட்டை, கோட்டியால், கோரைக்குழி, நத்தவெளி, புளியங்குழி, கொலையனூர், சுந்தரேசபுரம், காக்காபாளையம், பருக்கல், அழிச்சுக்குழி , செந்துறை, ராயம்புரம், பொன்பரப்பி, குழுமூர், நின்னியூர், சோழன்குறிச்சி, அயன்தத்தனூர், வங்காரம், மரூதூர், மருவத்தூர், வீராக்கண், நாகல்குழி, உஞ்சினி, நல்லாம்பாளையம், ஆனந்தவாடி, அயன்ஆத்தூர் ஆகிய பகுதிகளில் காலை 9 முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின்விநியோகம் இருக்காது என்று உதவி செயற்பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.


    • செந்துறை அருகே கஞ்சா விற்றவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யபட்டார்
    • இவர் மீது ஏற்கனவே குவாகம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் கஞ்சா விற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் செந்துறை அடுத்த சித்துடையார் கிராமத்தைச் சேர்ந்தவர் ரத்தினம் மகன் பால்ராஜ்(வயது48). கடந்த மாதம் இவர் உடையார்பாளையம் சாலை திரௌபதி அம்மன் கோயில் செல்லும் வழியில் கஞ்சா விற்றுக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக ரோந்துப் பணியில் ஈடுபட்டு வந்த செந்துறை காவல் உதவி ஆய்வாளர் சாமிதுரை தலைமையிலான காவல் துறையினர் பால்ராஜை கைது செய்து புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர். மேலும் அவரிடமிருந்து 1,100 கிலோ கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இவர் மீது ஏற்கனவே குவாகம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் கஞ்சா விற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் பால்ராஜை குண்டர் சட்டத்தில் கைது செய்ய ஆணையிடுமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா பரிந்துரையை அடுத்து கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி உத்தரவிட்டார். இைதயைடுத்து பால்ராஜை குண்டர் சட்டத்தில் கைது செய்து திருச்சி மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார்.

    • கிடேரி கன்றுகளுக்கு கருச்சிதைவு நோய் தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது
    • 20 கிடேரி கன்றுகளுக்கு அடையாள காது வில்லைகள் அணிவிக்கப்பட்டன.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், கடுகூர் அடுத்த கோப்பிலியன் குடிகாடு கிராமத்தில் கிடேரி கன்றுகளுக்கு கருச்சிதைவு நோய் திடுப்பூசி செல்லுத்தும் முகாம் நடைபெற்றது. கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் நடைபெற்ற முகாமை, ஊராட்சித் தலைவர் தர்மலிங்கம் தொடக்கி வைத்தார். அரியலூர் மண்டல இணை இயக்குநர்(பொ)சுரேஷ்கிரிஸ்டோபர், கோட்ட உதவி இயக்குநர் சொக்கலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கடுகூர் கால்நடை உதவி மருத்துவர் குமார், கால்நடை ஆய்வாளர் மாலதி ஆகியோர் தலைமையிலான குழுவினர் கலந்து கொண்டு, 4 முதல் முதல் 8 மாதம் வரை உடைய 20 கிடேரி கன்றுகளுக்கு அடையாள காது வில்லைகள் அணிவிக்கப்பட்டு கருச் சிதைவு நோய் தடுப்பூசிகளை செலுத்தினர்.மேலும் இம்முகாமில், மாடுகளில் கருச்சிதைவு நோய் பற்றிய விழிப்புணர்வு கையேடுகள் வழங்கப்பட்டது.


    • அரியலுாரில் 2 1/2 லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்க நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது
    • குடற்புழு தொற்றினால் உடல் வளர்ச்சி முன்னேற்றம் பாதிக்கப்படுகிறது.

    அரியலூர்:

    குடற்புழு தொற்றினால் இரும்புச்சத்து இழப்பு, ரத்தசோகை, ஊட்டச்சத்துக் குறைபாடு, விட்டமின் ஏ சத்து குறைபாடு, உடல் வளர்ச்சி முன்னேற்றம் பாதிக்கப்படுகிறது. எனவே தேசிய குடற்புழு நீக்க நாள் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி, ஆகஸ்டு மாதங்களில் நடைபெறும். இந்த மாதம் குடற்புழு மாத்திரை வழங்கும் முகாம் கடந்த செவ்வாய் கிழமை முதற்கட்டமாக அரியலுார் மாவட்டத்தில் நடந்து முடிந்தது. வரும் 21-ம் தேதி நடைபெற உள்ள முகாமில் விடுபட்டவர்களுக்கு குடற்புழு மாத்திரைகள் வழங்கப்படும். இந்த திட்டத்தின் கீழ் 1 முதல் 2 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு அரை மாத்திரையும், 2 முதல் 19 வயது வரை உள்ளவர்களுக்கு 1 மாத்திரையும், 20 முதல் 30 வயது வரை உள்ள கர்ப்பம் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் அல்லாத பெண்களுக்கும் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படும். அரியலூர் மாவட்டதில் உள்ள 6 ஊராட்சி ஒன்றியங்களில் 741 பள்ளிகள் மற்றும் 774 அங்கன்வாடி மையங்கள் 15 கல்லூரிகள், 7 தொழிற்பயிற்சி மையங்கள் மூலம் 1 முதல் 19 வயது வரை உள்ள 2 லட்சத்து 11 ஆயிரத்து 168 பேருக்கும், 20 வயது முதல் 30 வயது வரை உள்ள கர்ப்பம் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் அல்லாத பெண்கள் 54 ஆயிரத்து 465 பேருக்கும் என மொத்தம் 2 லட்சத்து 65 ஆயிரத்துக்கும் 633 பேருக்கும் மாத்திரைகள் வழங்கப்படும். மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை, பள்ளி கல்வித்துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டம் ஆகிய துறைகள் மூலம் இந்த மாத்திரைகள் வழங்கப்படும் என அரியலுார் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.


    ×