என் மலர்tooltip icon

    அரியலூர்

    • மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு நடந்தது
    • காவல் துறை சார்பில் நடந்தது

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் செந்துறை காவல் நிலையம் முன்பு மது விலக்கு ஆயத்தீர்வை துறை சார்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி மதுவிலக்கு தாசில்தார் முத்துகிருஷ்ணன் தலைமையில் நடைப்பெற்றது. இதில் மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்து தப்பாட்டம், கிராமிய பாடல்கள் மூலம் விழிப்புணர்வு கருத்துக்கள் பொதுமக்களுக்கு எடுத்துக் கூறப்பட்டது. கலால் சிறப்பு உதவி ஆய்வாளர் ஆரோக்கியதாஸ், வருவாய் ஆய்வாளர் மனோகரன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்ட இந்நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர். இதே போல் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி பேருந்து நிலையம் , மற்றும் அண்ணாநகர் பிரிவு சாலையில் நடைப்பெற்றது.

    • கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடந்தது
    • கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்றது

    அரியலூர்:

    அரியலூர், ஜெயங்கொண்டம், செந்துறை, ஆண்டி மடம், செந்துறை ஆகிய பகுதிகளில் கிராமநிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் ரத்து செய்யப்பட்ட பட்டப்படிப்பு ஊக்க ஊதியத்தை மீண்டும் வழங்க ே வண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். பயணப்படியை ரூ.2000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். பேரிடர் மேலாண்மை பணிகளை மேற்கொள்ளும் வருவாய்த்துறையின் அனைத்து நிலை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும்.

    நகர நிலவரித் திட்ட கணக்குகளை முழுமையாக கிராம நிர்வாக அலுவலர்களுக்கு வழங்க வேண்டும். முடக்கப்பட்டுள்ள சரண்டர் விடுப்பை உடனடியாக வழங்க வேண்டும். மத்திய அரசுக்கு இணையாக அகவிலைப்படி உயர்வை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

    ஜெயங்கொண்டம் தாசில்தார் அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பா ட்டத்துக்கு மாவட்டத் தலைவர் மணி வண்ணன், செந்துறையில் வட்டாரத் தலைவர் இளையராஜா, ஆண்டிமடத்தில் மாவட்ட துணைச் செயலர் முத்துகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    • பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
    • காலி பணியிடங்களை நிரப்ப கோரி கோஷம்

    அரியலூர்,

    அரியலூர் பேருந்து நிலையம் அண்ணாசிலை அருகில் அங்கன் வாடி ஊழியர்கள் உதவியாளர்கள் சங்கத்தினர் மாவட்ட தலைவி ஜோதிலெட்சுமி தலமையில் சிஐடியூ மாவட்ட தலைவர் சிற்றம்பலம் முன்னிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காலிப் பணியிடங்களை முழுமையாக நிரப்ப வேண்டும், பதிவேடு முறை அல்லது கைப்பேசி முறை இவற்றில் ஒன்றை மட்டும் நடைமுறைபடுத்த வேண்டும், 10 குழந்தைகளுக்கு குறைவாக இருக்கும் பிரதான மையங்களை  சிறிய மையமாக்குவதையும், 5 குழந்தைகளுக்கு குறைவாக இருக்கும் சிறிய மையங்களை பிரதான மையத்தோடு இணைக்கும் திட்டத்தையும் கைவிட வேண்டும், அங்கன்வாடி பணியாளர்களுக்கு கூடுதல் பொறுப்பாக 2 அல்லது 3 மையங்கள் சேர்த்து பார்ப்பதால் மன உளைச்சல் ஏற்படுகிறது. அதனை சரி செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டது. 

    • அரியலூரில் சிறப்பு வாகனச் சோதனையில் சிக்கினர்
    • பெற்றோர்களையும் அழைத்து போலீசார் அறிவுரை

    அரியலூர்,

    அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவு படியும், அரியலூர் உட்கோட்ட துணை கண்காணிப்பாளர் அவர்களின் அறிவுரையின் படியும், அரியலூர் நகரில் 17 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்கள் வாகனம் ஓட்டுவதை தடுக்கும் பொருட்டு சிறப்பு வாகன சோதனை நடத்தப்பட்டது. இதில் 25 சிறுவர்கள் வாகன சோதனையில் பிடிபட்டனர். அவர்களின் வாகனங்கள் போக்குவரத்து காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டு போக்குவரத்து காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. வாகனம் ஓட்டிய சிறுவர்களுக்கு சாலை விதிகள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. பின்னர் மாலை 6 மணிக்கு மாணவர்களின் பெற்றோர்கள் தகுந்த ஆவணங்களை சமர்ப்பித்த பின்னர் வழக்கு பதிவு செய்து அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த வாகன சோதனையில் அரியலூர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் கார்த்திகேயன் மற்றும் உதவி ஆய்வாளர் சங்கர் மற்றும் உலகநாதன் மற்றும் போக்குவரத்து காவலர்கள் ஈடுப்பட்டனர்

    • மக்கள் நலனுக்காக திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்
    • திராவிடர் கழக தலைவர் வீரமணி பேச்சு

    உடையார்பாளையம்

    அரியலூர் மாவட்டம் திராவிடர் கழகம் சார்பாக சமூக நீதிப் பாதுகாப்பு திராவிட மாடல் விளக்க பரப்புரை பயண பொதுக்கூட்டம் ஆண்டிமடம் கடை வீதியில் நடைபெற்றது.கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் நீலமேகன் தலைமை வகித்தார். மண்டல தலைவர் கோவிந்தராஜன், மண்டல செயலாளர் மணிவண்ணன் பொதுக்குழு உறுப்பினர் காமராஜ், திராவிடர் கழக பொதுச்செயலாளர் சந்திரசேகரன், மாவட்ட செயலாளர் சிந்தனைச் செல்வன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.திராவிடர் கழக தலைவர் வீரமணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.அப்பொழுது அவர் பேசியதாவது, திராவிடர் கழகம் என்பது சமூக நீதி, சமூக இயக்கம் எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் சமூக நீதி சமத்துவம் ஆகிய கொள்கை கொண்டது. தந்தை பெரியார் பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்று கூறினார். பெண்களுக்கு 33 சதவீதம் ஒதுக்கீடு செய்து கொடுக்காமல் மூன்றாவது முறையாக பிரதமராக ஆக வேண்டும் என்று மோடி நினைக்கின்றார்.

    ஆனால் கேட்காமலேயே, பெண்கள் போராட்டக் களத்துக்கு வராமலேயே இந்த உள்ளாட்சித் தேர்தலில் ஐம்பது விழுக்காட்டிற்கு மேல் அந்தந்த ஊர்களில் பெண்களை வெற்றி பெறச் செய்து நாற்காலியில் அமர்த்திய பெருமை இன்றைய முதலமைச்சருக்குதான் உண்டு இதுதான் திராவிட மாடல் ஆட்சி.இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும் என்றால் மீண்டும் சேது சமுத்திரத் திட்டம் தொடங்கப்பட வேண்டும். நிதிக்கு ஒன்றிய அரசை நம்பி இருக்க வேண்டியிருக்கிறது, மாநில உரிமைகளை காத்திட வேண்டும், தொலைநோக்கு கொள்கையில் கொண்ட மக்களை வாழவைக்கும் கொள்கைகள் கொண்ட மக்கள் நலனுக்காக திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும் என பேசினார்.கூட்டத்தில் அரியலூர் மாவட்ட, ஒன்றிய திராவிடர் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் தி.மு.க. அதன் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    • இருசக்கர வாகனத்தில் சென்ற போது விபத்து நடைபெற்றது
    • சிகிச்சை பலனின்றி உயிரிழந்த பரிதாபம்

    உடையார் பாளையம்,

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே பொன்பரப்பி கிராமம் காந்தி நகரைச் சேர்ந்தவர் செல்வராசு. இவரது மகன் பரிமேலழகன் (வயது23). இவர் சொந்த வேலை காரணமாக ஜெயங்கொண்டம் வந்துவிட்டு மீண்டும் பொன்பரப்பி செல்ல புதுக்குடி ஏரி ஓடை பாலம் பிரிவு பாதை அருகே சென்று இரு சக்கர வாகனத்தில் கொண்டிருந்தார்.அப்போது எதிரே வந்த இலையூர் கண்டியங்கொல்லை வடக்கு தெருவை சேர்ந்த காசிநாதன் மகன் இளங்கோவன் (27) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும் பரிமேலழகன் ஒட்டி வந்த மோட்டார் சைக்கிளும் எதிர்பாரா விதமாக மோதியது.இதில் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பரிமேலழகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இது குறித்து ஜெயங்கொண்டம் போலீசார் வழக்கு பதிவு விசாரித்து வருகின்றனர்.

    • 13 பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்பு
    • உள்ளார்ந்த திறமைகளை வெளி கொணர இந்த போட்டி நடத்தப்பட்டு உள்ளது

    உடையார்பாளையம்.

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் வட்டார வள மையத்தில் மாணவர்களின் உள்ளார்ந்த திறமைகளை வெளி கொணரும் வகையில் தமிழக அரசால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள கல்வி இணை செயல்பாடுகளில் ஒன்றான தேன்சிட்டு மாணவர்களுக்கான மார்ச் மாத இதழ் பகுதியிலிருந்து வினாடி வினா போட்டிகள் அரியலூர் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் சார்பாக வட்டார அளவில் நடைபெற்றது.போட்டியினை வட்டார கல்வி அலுவலர் ராசாத்தி தலைமையேற்று துவக்கிவைத்தார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் கண்ணதாசன் வரவேற்றார். போட்டிகளின் நடுவர்களாக புதுச்சாவடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அறிவியல் பட்டதாரி ஆசிரியர் செங்குட்டுவன், உதயநத்தம் அரசினர் மேல்நிலைப்பள்ளி ஓவிய ஆசிரியர் அறிவுச்செல்வன், உடையார்பாளையம் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி தமிழாசிரியர் ராமலிங்கம், ஜெயங்கொண்டம் அரசினர் மகளிர் உயர் நிலைப்பள்ளி தமிழாசிரியர் விஜயலெக்ஷ்மி ஆகியோர் செயல்பட்டனர்.

    அரசு மேல்நிலை , உயர்நிலை, நடுநிலை சார்ந்த 13 பள்ளிகளிலிருந்து 26 மாணவர்கள் கலந்துகொண்டார்கள்.

    மேலகுடியிருப்பு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் சரண்யா, பிரசாத். உடையார்பாளையம் அரசினர் மகளிர் மேல்நிலைப் மாணவிகள் விஜயலட்சுமி , பார்கவி ஆகியோர் போட்டியில் வட்டார அளவில் வெற்றி பெற்று அரியலூரில் நடைபெற இருக்கும் மாவட்ட அளவிலான போட்டியில் கலந்து கொள்ள தேர்வு பெற்றுள்ளார்கள்.

    நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர்கள், பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். நிறைவாக அறிவியல் ஆசிரியர் செங்குட்டுவன் நன்றி கூறினார்.

    • ஒருகட்டத்தில் பரிசுத் தொகையும், பரிசுப் பொருட்களும் வராமல் போகவே, தான் ஏமாந்தது தெரிய வந்தது.
    • மாவட்ட சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்தார்.

    'ஒருவரை ஏமாற்ற வேண்டும் என்றால், அவரது ஆசையை தூண்ட வேண்டும்...'

    இது இயக்குனர் வினோத் இயக்கி, நடராஜ் நடித்து வெளியான திரைப்படத்தில் வெளியான ஒரு வசனம். ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களுக்கு பஞ்சம் இருக்காது என்பதை மெய்ப்பிக்கும் வகையிலான மோசடிகளும், சம்பவங்களும் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக பெருகிக்கொண்டே செல்கிறது.

    காவல் துறையில் எத்தனையோ பிரிவுகள் இருந்தாலும், தற்போது முழு செயல்பாட்டில் எப்போதும் பிஸியாக இருப்பது சைபர் கிரைம் போலீசார்தான். அந்த அளவுக்கு ஒயிட் காலர் ஆன்லைன் மோசடிகள் அதிகரித்துவிட்டன.

    அரசு வேலை வாங்கி தருகிறேன், நான் வங்கி மேலாளர் பேசுகிறேன், உங்களுக்கு மிகப்பெரிய பரிசு விழுந்திருக்கிறது, நீங்கள்தான் நாங்கள் தேடும் அதிர்ஷ்டசாலி... என்று பேசத்தொடங்கும் மோசடிக்காரர்களிடம் சிக்கிக்கொள்ளாதீர்கள். அவர்கள் உங்களை மயக்கி உங்களிடம் இருக்கும் பணத்தை அபகரித்துவிடுவார்கள் என்று சைபர் கிரைம் போலீசாரும் தொடர்ந்து எச்சரித்து, விழிப்புணர்வை ஏற்படுத்தியபோதும், மெத்தப் படித்தவர்களே இதில் அதிகம் மாட்டிக்கொள்கிறார்கள். அவ்வாறு சிக்கியவர்களில் டாக்டர்களும், என்ஜினீயர்களும் இருக்கிறார்கள்.

    அந்த வகையில் அரியலூரை சேர்ந்த அபலைப்பெண் ஒருவர் ரூ.12 லட்சத்தை இழந்துள்ளார். அதுபற்றிய விபரம் வருமாறு:-

    அரியலூர் மாவட்டம் கடுகூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விமல்ராஜ். அதே பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். இவரது தாய் ஜெயந்தி, தந்தை செல்வராஜ். செல்வராஜ் கடந்த சில ஆண்டுகளாக தொண்டை புற்றுநோயால் அவதிப்பட்டு வருகிறார். நடுத்தர குடும்பத்தை சேர்ந்த அவர்களால் புற்றுநோய்க்கு மிகப்பெரிய மருத்துவம் பார்க்க தொகையின்றி தற்போது வீட்டில் வைத்தே மருந்து, மாத்திரைகளை வாங்கி கொடுத்து கவனித்து வருகிறார்கள்.

    இதற்கிடையே கடந்த 5 மாதங்களுக்கு முன்பு ஜெயந்தியின் செல்போனுக்கு வாட்ஸ்அப்பில் ஒரு அழைப்பு வந்துள்ளது. எதிர்முனையில் ஆங்கிலத்தில் ஒரு இளம்பெண் குரல் ஒலித்தது. ஏதோ தவறான அழைப்பாக இருக்கும் என்று எண்ணிய ஜெயந்தி அதனை தவிர்த்துவிட்டார்.

    ஆனால் தொடர்ந்து அடுத்தடுத்து வந்த அழைப்பால் தனது மகனின் உதவியுடன் அந்த அழைப்பை ஏற்று பேசிய ஜெயந்திக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. இங்கிலாந்து நாட்டில் இருந்து பேசுகிறேன் என்று தன்னை அறிமுகப்படுத்திய அந்த பெண், தன்னுடைய மகள் பிறந்தநாளை முன்னிட்டு உங்களுக்கு பரிசு தொகை மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுக்க விரும்புகிறோம். அந்த அதிர்ஷ்டசாலியாக நீங்கள் தேர்வாகி உள்ளீர்கள் என்று கூறியுள்ளார்.

    மேலும் அந்த பரிசுத் தொகையும், பரிசு பொருட்களும் தற்போது விமான நிலையத்தில் உள்ளது எனவும், அதனை பெற ஜி.எஸ்.டி. வரி செலுத்த வேண்டும். அதற்காக முதலில் ரூ.35 ஆயிரம் வேண்டும் எனவும் கூறியுள்ளார். வெளிநாட்டில் இருந்து வரும் பரிசுத்தொகை என்பதால் பல லட்சங்கள் இருக்கும், தங்கள் குடும்ப பிரச்சினை எல்லாம் தீர்ந்துவிடும், தனது கணவரையும் புற்றுநோயில் இருந்து காப்பாற்றி விடலாம் என்று கணக்கு போட்ட ஜெயந்தி தனது மகன் உதவியுடன் ரூ.35 ஆயிரத்தை வங்கியில் செலுத்தியுள்ளார்.

    பின்னர் அவர்கள் வருமான வரி, சுங்கக்கட்டணம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களை கூறி 1 லட்சம், 2 லட்சம் என கொஞ்சம் கொஞ்சமாக ரூ.12 லட்சம் கறந்துள்ளனர். ஆனாலும் பரிசுத்தொகையோ, பரிசு பொருட்களோ வந்தபாடில்லை. இதற்கு மேல் கடன் வாங்க கூட வழியில்லை என்ற நிலைக்கு ஜெயந்தி வந்தார்.

    அக்கம், பக்கத்தினர், உற்றார், உறவினர்கள் என கடன் வாங்காத ஆளே இல்லை. அப்போதுதான் ஆரம்பத்திலேயே உதிக்க வேண்டிய சிந்தனை தற்போது ஜெயந்திக்கு உதித்தது. ஒருவேளை இது ஏமாற்று வேலையாக இருக்குமோ என்று எண்ணினார்.

    ஒருகட்டத்தில் பரிசுத் தொகையும், பரிசுப் பொருட்களும் வராமல் போகவே, தான் ஏமாந்தது தெரிய வந்தது. இழந்தது போதும், இனியாவது விழித்துக்கொள்வோம் என்று கருதிய ஜெயந்தியும், அவரது மகன் விமல்ராஜூம் நடந்தது குறித்து அரியலூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பணத்தை இழந்து பரிதவித்து வரும் ஜெயந்தி இந்த மோசடி பற்றி கூறுகையில், வெளிநாட்டிலிருந்து கூரியர் வந்திருக்குன்னு சொல்லி முதலில் ஒரு குறுந்தகவல் வந்தது. அதன்படி முதல் கட்டமாக வரி செலுத்த ரூ.35 ஆயிரம் அனுப்புமாறு கூறினார்கள். அப்படியே படிப்படியா ரூ.12 லட்சத்து 35 ஆயிரம் அனுப்பினோம். எல்லாம் கிடைக்கும்ங்குற நம்பிக்கையில் அக்கம் பக்கத்துல கடன் வாங்கித் தான் கொடுத்தோம் என்றார். 

    • பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வானதை தொடர்ந்து கொண்டாட்டம்
    • பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் அதிமுகவினர் கொண்டாடினர்

    திருமானூர்,

    அ.தி.மு.க. பொதுச் செயலாளராக பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.அதன்படி அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மேற்கு மற்றும் கிழக்கு ஒன்றியம் சார்பாக கொண்டப்பட்டது. மேற்கு ஒன்றிய செயலாளர் சாமிநாதன் தலைமையில் கீழப்பழூரில் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து , இனிப்பு வழங்கி கொண்டாடினர்.மேற்கு ஒன்றிய சார்பாக அக்பர் சரீப். தனலட்சுமி மருதமுத்து. செந்தில்குமார். கமலக்கண்ணன். மலர்விழி நல்லதம்பி. பாவேந்தன். இலந்தை தேவர். இளையராஜா. மணிவேல். சித்ரா உதயகுமார். அய்யாக்கண்ணு. தில்லை திருவாசகமணி. மற்றும் பல தொண்டர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.இதனைத் தொடர்ந்து திருமானூர் கிழக்கு ஒன்றிய சார்பாக ஒன்றிய செயலாளர் வடிவழகன் தலைமையில் திருமானூரில் அமைந்துள்ள எம்ஜிஆர் திருவுருவ சிலைக்கு ஊர்வலமாக வந்து மாலை அணிவித்து இனிப்பு வழங்கி கொண்டாடினார். நிகழ்ச்சியில் சேட்டு ராஜேந்திரன் டி வி ஆர் கார்த்தி. ஜே கே கார்த்தி. மகாலட்சுமி கருணாநிதி. நடராஜன். சரவணன், முருகேசன், சௌந்தர், சபரிநாதன் , தவமணி, சாமிநாதன், மாரியப்பன். பிரதீவு ராஜ் மற்றும் பொறுப்பாளர்கள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    • 20 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
    • நகராட்சி, மாசு கட்டுப்பாட்டு துறையினர் நடவடிக்கை

    உடையார்பாளையம்,

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என நகராட்சி சுகாதார ஆய்வாளர் ஷ்யாம் கானல் மற்றும் மாசு கட்டுப்பாட்டு துறை சார்ந்த சுற்றுச்சூழல் துணை பொறியாளர் அகல்யா உள்ளிட்ட நகராட்சி குழுவினர் கடைவீதி பகுதிகளில் திடீர் சோதனை செய்தனர். அப்போது அரசால் தடை செய்யப்பட்ட கப்பு பிளாஸ்டிக் பை உள்ளிட்ட 20 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் கடை வீதியில் உள்ள கடைகளில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் ஒரு கடைக்கு 1000 மும் மற்றொரு கடைக்கு 500 என இரண்டு கடைகளுக்கும் சேர்த்து 1500 ரூபாய் அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டது.

    • நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
    • விழாக்காலங்களில் சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு

    அரியலூர்,

    அரியலூர் அருகே கல்லங்குறிச்சி கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற பழமையான அருள்மிகுகலியுகவரதராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. ஒவ்வொருஆண்டும் 10 நாட்கள் பெருந்திருவிழா நடை பெறுவது வழக்கம்.இந்த ஆண்டு நாளை (வியாழக்கிழமை) ராமநவமி அன்று கொடிஏற்றத்துடன் திருவிழா தொடங்குகிறது. முக்கிய நிகழ்ச்சியான தேர்த் திருவிழா வரும் 7-ந் தேதியும், 8-ந் தேதி ஏகாந்தசேவையும் மிகசிறப்பாக நடைபெறும். திருவிழா காலங்களில் தினசரி நாதசுர இசை, திருமஞ்சனம், கிளாரினட், பொய்க்கால் குதிரைஆட்டம், நாட்டியம், வேதபாரண்யம், பஜனைகள், கிராமியகலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.பக்தர்கள் வருகையை முன்னிட்டு தண்ணீர்பந்தல், அன்னதானம், தங்கும் வசதி, குடிநீர்வசதி, மருத்துவவசதிகள் அமைத்து தரப்படுகிறது. அரசுபோக்குவரத்துகழகம் சார்பில் திருச்சி, தஞ்சை, கும்பகோணம், சேலம், துறையூர், ஜெயங்கொண்டம், விருத்தாசலம், திட்டகுடி, ஆகிய பகுதிகளிலிருந்து விழாக்கால சிறப்பு பஸ் இயக்கப்படவுள்ளது.ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்ளும் திருவிழாவினை முன்னிட்டு மாவட்டகலெக்டர் பெ.ரமணசரஸ்வதி உத்தரவின் பேரில் உள்ளுர் விடுமுறை அறிவிக்கப்படும். அரியலூர் மாவட்டபோலீஸ் எஸ்.பி. பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவின் பேரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. விழாவிற்கான சிறப்பு ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டு வருகின்றது.

    • 13 வயது சிறுமியை ஏமாற்றி பாலியல் தொடர்பு கொண்ட வாலிபருக்கு சிறை தண்டனை
    • சிறுமிக்கு 7 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க நீதிமன்றம் உத்தரவு

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே பள்ளிச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அரியலூர் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.செந்துறை அருகேயுள்ள சன்னாசி நல்லூர், நடுத் தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் மணிகண்டன்(வயது32). இவர் ஈச்சங்காடு, பெருமாள் கோயில் தெருவில் வசிக்கும் தனது சித்தப்பா வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்ற போது, 13 வயது சிறுமியை காதலித்து, அச்சிறுமியை கடந்த 15.07.2021 அன்று திருப்பூர் மற்றும் ஈச்சங்காடுக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.இது குறித்து புகாரின் பேரில் அரியலூர் மகளிர் காவல் துறையினர் வழக்குப் பதிந்து மணிகண்டனை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை அரியலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இறுதி விசாரணை முடிந்து தீர்ப்பளிக்கப்பட்டது. இதில் குற்றவாளி மணிகண்டனுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், அவற்றை ஏகா காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஆனந்தன் தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ.7 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இதையடுத்து மணிகண்டன் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். அரசு தரப்பில் வழக்குரைஞர் ராஜா ஆஜராகி வாதாடினார்.

    ×