என் மலர்tooltip icon

    கர்நாடகா தேர்தல்

    • காரில் இருந்த 2 பேரிடம் விசாரித்த போது சரியான தகவல்களை தெரிவிக்கவில்லை.
    • வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பெங்களூரு :

    கர்நாடக சட்டசபை தேர்தல் வருகிற 10-ந் தேதி நடைபெற உள்ளதால் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க தேர்தல் அதிகாரிகள் மற்றும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில், பெலகாவி மாவட்டம் ராமதுர்காவில் பா.ஜனதா வேட்பாளரான சிக்க ரேவண்ணாவின் ஆதரவாளர்கள், ராமதுர்காவில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியது.

    மேலும் தேர்தல் அதிகாரிகளுக்கும் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, ராமதுர்கா அருகே துரனூரு கிராமத்தில் போலீசார் மற்றும் தேர்தல் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டார்கள். அப்போது அங்கு வந்த ஒரு காரை வழிமறித்து சோதனை நடத்தினார்கள். அந்த காரில் கட்டுக்கட்டாக பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஒட்டு மொத்தமாக ரூ.1 கோடியே 54 லட்சம் இருந்தது.

    அதுபற்றி காரில் இருந்த டிரைவர் உள்பட 2 பேரிடம் விசாரித்த போது சரியான தகவல்களை தெரிவிக்கவில்லை. அந்த பணத்திற்கு உரிய ஆவணங்களும் 2 பேரிடமும் இல்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து, ரூ.1.54 கோடியையும் தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தார்கள்.

    அந்த பணம் பா.ஜனதா வேட்பாளருக்கு சொந்தமானதா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இதுதொடர்பாக ராமதுர்கா போலீஸ் நிலையத்தில் கார் டிரைவர் உள்பட 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.1.54 கோடியையும், வருமான வரித்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக வருமானவரித் துறையினரும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • அரசியல் புனிதமானது. ஆனால் தற்போது அரசியலில் நேர்மையானவர்கள் யாரும் இல்லை.
    • ஷாபி தனது முகவர் மூலம் புத்தூர் தொகுதியில் போட்டியிட வேட்பு மனுதாக்கல் செய்துள்ளார்.

    பெங்களூரு:

    கர்நாடக சட்டசபைக்கு வருகிற 10-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனுதாக்கல் இன்று நிறைவடைகிறது. பா.ஜ.க., காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

    விஜயாப்புரா மாவட்டம் பசவனபாகேவாடி தாலுகா சங்கதாலா கிராமத்தை சேர்ந்த சுபாஷ்சந்திரா ராத்தோடு. நீதிபதியான இவர் கலபுரகி மாவட்டம் சித்தாப்புரா தாலுகா கோர்ட்டில் 4 ஆண்டுகளும், விஜயாப்புராவில் 2 ஆண்டுகளும் பணியாற்றி இருந்தார். கடந்த ஒரு ஆண்டாக கதக்கில் அவர் பணியாற்றினார்.

    இந்நிலையில் அரசியலில் ஈடுபட நீதிபதி சுபாஷ் சந்திரா முடிவு செய்தார். இதையடுத்து, தனது நீதிபதி பதவியை ராஜினாமா செய்துவிட்டு, ஜனதாதளம்(எஸ்) கட்சியில் அவர் இணைந்தார். அவருக்கு கட்சியில் சித்தாப்புரா தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது.

    இதுபற்றி அவர் கூறுகையில், அரசியல் புனிதமானது. ஆனால் தற்போது அரசியலில் நேர்மையானவர்கள் யாரும் இல்லை. ஜனநாயகத்தின் முக்கிய தூண் சரிந்து கொண்டே வருவதை பார்த்து கொண்டு என்னால் சும்மா இருக்க முடியவில்லை.

    அரசியல் மூலமாக சமூகத்தில் மாற்றங்களையும், பலதரப்பட்ட மக்களுக்காக குரல் கொடுக்கவும் முடியும். அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நம்பிக்கையில், என்னுடைய நீதிபதி பதவியை ராஜினாமா செய்துவிட்டு சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறேன்' என்றார்.

    தட்சிண கன்னடா மாவட்டம் சுள்ளியா தாலுகா பெல்லாரே அருகே நெட்டார் பகுதியை சேர்ந்த பா.ஜனதா இளைஞர் அணி நிர்வாகி பிரவீன் நெட்டார் படுகொலை செய்யப்பட்டார். கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை 26-ந்தேதி நடந்தது. இந்த கொலை சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

    இந்த கொலை சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த ஷாபி என்பவர் உள்பட 8 பேரை என்.ஐ.ஏ. கைது செய்தது. அனைவரும் சிறையில் விசாரணை கைதியாக இருந்து வருகிறார்கள். இந்நிலையில் விசாரணை கைதியாக சிறையில் உள்ள ஷாபி எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

    அதைத்தொடர்ந்து நேற்று ஷாபி தனது முகவர் மூலம் புத்தூர் தொகுதியில் போட்டியிட வேட்பு மனுதாக்கல் செய்துள்ளார். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கட்சியிலேயே இல்லாதவர் எப்படி கட்சி வேட்பாளரை அறிவிக்க முடியும்?
    • அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக களம் இறக்கப்பட்டவருக்கே இரட்டை இலை சின்னமும் கிடைக்கும்.

    சென்னை:

    கர்நாடக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு தமிழர்கள் அதிகமாக உள்ள புலிகேசி நகர் தொகுதியில் அ.தி.மு.க. போட்டியிடுகிறது. அந்த மாநில அவைத் தலைவர் டி.அன்பரசனை வேட்பாளராக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

    இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வமும் வேட்பாளரை அறிவித்துள்ளார். டி.அன்பரசனை எதிர்த்து அந்த மாநில மாணவர் அணி செயலாளர் நெடுஞ்செழியன் நிறுத்தப்பட்டுள்ளார்.

    இதுபற்றி டி.ஜெயக்குமார் கூறியதாவது:-

    அ.தி.மு.க. வேட்பாளரை ஆட்சிமன்ற குழு கூடி தேர்வு செய்தது. ஆட்சிமன்ற குழு முடிவின் படி புலிகேசி நகர் தொகுதி வேட்பாளராக டி.அன்பரசன் போட்டியிடுவார் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்து விட்டார். அவர்தான் அதிகாரப்பூர்வ வேட்பாளர் ஆவார்.

    ஓ.பன்னீர்செல்வம் வேட்பாளரை அறிவித்து இருப்பது பற்றி கவலை இல்லை. ஏனெனில் அவர் அ.தி.மு.க.வில் இல்லை. கட்சியிலேயே இல்லாதவர் எப்படி கட்சி வேட்பாளரை அறிவிக்க முடியும்?

    அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக களம் இறக்கப்பட்டவருக்கே இரட்டை இலை சின்னமும் கிடைக்கும். ஓ.பன்னீர் செல்வம் சுயேட்சையாக போட்டியிடுவார் என்று நினைக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 5 நாட்களில் 2,968 பேர் வேட்புமனு வழங்கினர்.
    • வேட்புமனுக்களை தாக்கல் இன்று (வியாழக்கிழமை) மதியம் 3 மணியுடன் நிறைவடைகிறது.

    பெங்களூரு:

    கர்நாடக சட்டசபைக்கு வருகிற மே 10-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 13-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆளும் பா.ஜனதா, காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் பெரும்பாலான தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துவிட்டன.

    மனுதாக்கலின் 5-வது நாளான நேற்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை சிக்காவி தொகுதியில் மனு தாக்கல் செய்தார். ஏற்கனவே நல்ல நாள் என கருதி பசவராஜ் பொம்மை கடந்த 15-ந் தேதி மனு தாக்கல் செய்தார். நேற்று 2-வது முறையாக மனு தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா வருணா தொகுதியில், உப்பள்ளி-தார்வார் தொகுதியில் முன்னாள் முதல்-மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர் ஆகியோரும் நேற்று மனு தாக்கல் செய்தனர். நேற்று ஒரே நாளில் 935 பேர் 1,110 மனுக்களை தாக்கல் செய்தனர்.

    வேட்பாளர்களில் ஆண்கள் 873 பேரும், பெண்கள் 62 பேரும் உள்ளனர். ஆம் ஆத்மி கட்சி 91 மனுக்களையும், பா.ஜனதா 164 மனுக்களையும், காங்கிரஸ் 147 மனுக்களையும், ஜனதா தளம்(எஸ்) 108 மனுக்களையும், பகுஜன் சமாஜ் கட்சி 46 மனுக்களையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒரு மனுவையும் தாக்கல் செய்துள்ளன.

    பதிவு செய்த மற்றும் பதிவு செய்யப்படாத கட்சிகள் சார்பில் 193 மனுக்களும், சுயேச்சைகள் 359 மனுக்களையும் தாக்கல் செய்துள்ளனர். மொத்தத்தில் இதுவரை 5 நாட்களில் 2,968 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

    வேட்பு மனுக்களை தாக்கல் இன்று (வியாழக்கிழமை) மதியம் 3 மணியுடன் நிறைவடைகிறது. இதனால் இன்று அதிகம் பேர் மனுக்களை தாக்கல் செய்ய அலுவலகங்களில் குவிந்தனர்.

    பலர் மேள, தாளத்துடன் ஆரவாரமாக வந்ததால் மனுதாக்கல் அலுவலகங்கள் விழா கோலமாக காட்சியளித்தன.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்புக்கு போட்டியாக புலிகேசி நகர் தொகுதியில் ஓ.பி.எஸ்.சும் தனது அணி சார்பில் வேட்பாளரை நிறுத்துவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
    • கர்நாடக சட்டமன்ற பேரவை பொதுத்தேர்தலில் புலிகேசி நகர் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக நெடுஞ்செழியன் நிறுத்தப்படுகிறார்.

    சென்னை:

    கர்நாடக சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. ஒரே ஒரு தொகுதியில் போட்டியிடுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று அறிவிப்பு வெளியிட்டார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிவிப்பில் அ.தி.மு.க. ஆட்சிமன்ற குழுவில் எடுக்கப்பட்ட முடிவின்படி கர்நாடக மாநிலம் புலிகேசி நகர் தொகுதியில் அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக டி.அன்பரசன் போட்டியிடுவார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இவர் கர்நாடக மாநில அ.தி.மு.க. அவைத்தலைவராக உள்ளார். இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்புக்கு போட்டியாக அதே புலிகேசி நகர் தொகுதி உள்பட 3 தொகுதிகளில் ஓ.பி.எஸ்.சும் தனது அணி சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

    இதுதொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் இன்று காலை வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

    அடுத்த மாதம் 10-ந்தேதி நடைபெற உள்ள கர்நாடக சட்டமன்ற பேரவை பொதுத்தேர்தலில் புலிகேசி நகர் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக நெடுஞ்செழியன் நிறுத்தப்படுகிறார்.

    கோலார் தங்கவயல் சட்டமன்ற தொகுதியில் கர்நாடக மாநில தலைவர் அனந்தராஜ், காந்திநகர் சட்டமன்ற தொகுதியில் மாநில செயலாளர் குமார் ஆகியோர் நிறுத்தப்படுகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • பிரமோத் முத்தாலிக்கிற்கு அசையா சொத்துகள் இல்லை.
    • பிரமோத் முத்தாலிக்கிற்கு வாகனமும் கிடையாது, கடனும் இல்லை

    உடுப்பி :

    ஸ்ரீராமசேனை சார்பில் அக்கட்சியின் தலைவர் பிரமோத் முத்தாலிக் உடுப்பி மாவட்டம் கார்கலா தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுகிறார். இதற்காக அவர் நேற்று முன்தினம் கார்கலா தாலுகா அலுவலகத்தில் வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார். இதையொட்டி தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் தனது சொத்து மதிப்புகளையும் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

    அதாவது பிரமோத் முத்தாலிக்கிற்கு அசையா சொத்துகள் இல்லை. வாகனமும் கிடையாது, கடனும் இல்லை. தற்போது அவரது கையில் வெறும் ரூ.10,500 மட்டுமே இருப்பு உள்ளது. 2 வங்கிகளில் ரூ.2.63 லட்சம் இருப்பு உள்ளது.

    அவருக்கு சொத்தை விட வழக்குகள் தான் அதிகமாக உள்ளது. மாநிலத்தில் உள்ள 7 போலீஸ் நிலையங்களில் மத நல்லிணக்கத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவதாக வழக்குகள் பதிவாகி உள்ளது. அத்துடன் ஆத்திரமூட்டும் பேச்சு, ஆயுதச்சட்டத்தை மீறுதல், அவதூறு வழக்கு, கொலை மிரட்டல், மதங்கள் இடையே வெறுப்பு உணர்வை ஏற்படுத்தல், மதவாத கலவரம், அவமதிப்பு உள்ளிட்ட வழக்குகள் பதிவாகி இருப்பது தெரியவந்துள்ளது.

    • காங்கிரஸ் கட்சி 141 முதல் 150 தொகுதிகளில் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது.
    • எடியூரப்பாவின் கண்ணீரை துடைக்க பா.ஜனதாவால் முடியவில்லை.

    பெங்களூரு :

    கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் மற்றும் எங்கள் கட்சிக்கு ஆதரவு தெரிவிப்பவர்களின் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்துகிறார்கள். காங்கிரசின் ஒற்றுமை யாத்திரைக்கு நீங்கள் (தொழில் அதிபர்கள்) கோடிக்கணக்கில் பணம் கொடுத்ததாக என்னை அந்த அதிகாரிகள் மிரட்டுகிறார்கள். கர்நாடகத்தில் காங்கிரஸ் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. அதனால் பா.ஜனதா வருமான வரித்துறையை தவறாக பயன்படுத்தி காங்கிரசாரை மிரட்ட முயற்சி செய்கிறது. வருமான வரித்துறையினர் எவ்வளவு மிரட்டினாலும் நாங்கள் மக்களுக்கு கொடுத்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றி நல்லாட்சி நிர்வாகத்தை நடத்துவோம்.

    பா.ஜனதாவின் மோசமான ஆட்சி நிர்வாகத்தால் வெறுப்பில் உள்ள கர்நாடக மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். மே 10-ந் தேதி தேர்தல் நாள் மட்டுமல்ல, மாற்றத்தை ஏற்படுத்த கூடிய நாள். ஊழலை விரட்டியடிக்கும் நாள். குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் வழங்கும் நாள், வீடுகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் நாள், படித்த வேலையில்லா பட்டதாரிகளுக்கு உதவித்தொகை கிடைக்கும் நாள் ஆகும்.

    காங்கிரஸ் கட்சி 141 முதல் 150 தொகுதிகளில் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் முதல் மந்திரிசபை கூட்டத்திலேயே இந்த திட்டங்கள் குறித்து முடிவு எடுத்து அமல்படுத்துவோம். எங்கள் கட்சியின் மூத்த தலைவர் எஸ்.ஆர்.பட்டீலை இழுக்க பா.ஜனதா கடந்த 3 மாதங்களாக தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. அவரிடம் நான் பேசியுள்ளேன்.

    எடியூரப்பாவை முதல்-மந்திரி பதவியில் இருந்து நீக்கினர். அவரை பா.ஜனதா சரியான முறையில் நடத்தவில்லை. நாங்கள் லிங்காயத் சமூகத்திற்கு உரிய முக்கியத்துவத்தை கொடுக்கிறோம். லிங்காயத் சமூகங்களின் மடாதிபதிளை பா.ஜனதா தவறாக பயன்படுத்த முடியாது. எடியூரப்பாவின் கண்ணீரை துடைக்க பா.ஜனதாவால் முடியவில்லை. எடியூரப்பாவின் ஆதரவாளர்கள் அனைவரும் பா.ஜனதாவை விட்டு விலகியுள்ளனர். பசவண்ணரின் கொள்கையே காங்கிரசின் கொள்கை.

    இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.

    • காங்கிரஸ் கட்சி இன்று 5-வது கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.
    • மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி இதுவரை மொத்தம் 220 வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

    பெங்களூரு:

    கர்நாடகாவில் அடுத்த மாதம் 10-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வேட்பு மனு தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    வேட்பு மனு தாக்கல் நாளை நிறைவடைய உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி இன்று ஐந்தாவது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் 4 வேட்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.

    பா.ஜ.க. முதல் மந்திரி பசவராஜ் பொம்மை போட்டியிடும் ஷிகோன் தொகுதியில் போட்டியிட யாசிர் அகமது கான் பதானுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி இதுவரை மொத்தம் 220 வேட்பாளர்களை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், சோனியா காந்தி, ராகுல் காந்தி, தற்போதைய தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, அசோக் கெலாட் உள்பட 40 நட்சத்திர பேச்சாளர்களின் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. சச்சின் பைலட் பெயர் இந்தப் பட்டியலில் இடம்பெறவில்லை.

    • கர்நாடக மாநிலத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய ஏப்ரல் 20 கடைசி நாள்.
    • காங்கிரஸ், பாஜக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்து பிரசாராத்தை தொடங்கியுள்ளனர்.

    கர்நாடக மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. வாக்குப் பதிவு மே 10 ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை மே 13 ஆம் தேதியும் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே நேரடி போட்டி நிலவுகிறது. வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்து பிரசாரத்தை துவங்கியுள்ளனர்.

    அம்மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் காரணமாக பல்வேறு தொகுதிகளில் விழா கோலம் பூண்டுள்ளது. தேர்தலை ஒட்டி இருகட்சி மட்டுமின்றி சுயேட்சை வேட்பாளர்களும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இந்த நிலையில், ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஷாமனூர் சிவசங்கரப்பா தேர்தலில் போட்டியிடுவார் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

     

    91 வயதான சிவசங்கரப்பா தேர்தலில் போட்டியிடுவது பற்றி கூறும் போது, "எனக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கும், கடவுள் அருளும் உள்ளது. வேறென்ன வேண்டும்? இந்த தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவேன்" என்று நம்பிக்கையுடன் தெரிவித்து இருக்கிறார்.

    கர்நாடக மாநிலத்தின் தேவாங்கரெ தெற்கு தொகுதியில் போட்டியிடும் சிவசங்கரப்பா, இந்த தேர்தலில் போட்டியிடும் மூத்த வேட்பாளர் ஆவார். தேவாங்கரெ வடக்கு தொகுதியில் சிவசங்கரப்பாவின் மகனும், முன்னாள் அமைச்சருமான எஸ்எஸ் மல்லிகார்ஜூன் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கர்நாடக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 10-ம் தேதி நடைபெறுகிறது.
    • பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் முதல் மந்திரி வேட்பு மனு தாக்கல் செய்தார்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநில சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 10-ம் தேதி நடைபெற உள்ளது.

    சட்டசபை தேர்தலை முன்னிட்டு அங்கு வேட்புமனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது. மனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள் ஆகும். முதல் மந்திரி பசவராஜ் பொம்மை கடந்த 15-ம் தேதி சிக்காவி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார்.

    இந்நிலையில், கர்நாடக மாநிலத்தின் ஷிகான் தொகுதியில் முதல் மந்திரி பசவராஜ் பொம்மை இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். மனு தாக்கலுக்கு முன்பு அவர் ஆயிரக்கணக்கான பா.ஜ.க. தொண்டர்களுடன் ஊர்வலமாக சென்றார்.

    மனு தாக்கலின் போது பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, நடிகர் சுதீப் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • ஸ்ரீவத்சவா மிகவும் எளிமையாக வாழ்ந்து வருகிறார்.
    • சிறிய ஓட்டு வீட்டிலேயே அவர் வசித்து வருகிறார்.

    கர்நாடக சட்டசபைக்கு வருகிற 10-ந்தேதி தேர்தல் நடக்க உள்ளது. இதையொட்டி அரசியல் கட்சியினர் வேட்பாளர்களை அறிவித்து வருகிறார்கள். வேட்புமனு தாக்கல் செய்ய நாளை(வியாழக்கிழமை) கடைசி நாளாகும். பா.ஜனதா இன்னும் 2 தொகுதிகளுக்கும், காங்கிரஸ் 15 தொகுதிகளுக்கும், ஜனதாதளம்(எஸ்) கட்சி இன்னும் 84 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவிக்க வேண்டி உள்ளது.

    நேற்று முன்தினம் பா.ஜனதா 10 தொகுதிகளுக்கு 3-ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது. இதில், மைசூரு கிருஷ்ணராஜா தொகுதியில் முன்னாள் மந்திரியும், தற்போதைய எம்.எல்.ஏ.வுமான ராமதாசுக்கு டிக்கெட் மறுக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக ஸ்ரீவத்சவா என்பவருக்கு பா.ஜனதா வாய்ப்பு வழங்கி உள்ளது.

    சங்பாரிவார் பின்னணி மற்றும் கட்சியின் விசுவாசியான ஸ்ரீவத்சவா தேர்வு செய்யப்பட்டிருப்பது தொண்டர்களின் உற்சாகத்தை அதிகரித்துள்ளது. ஏனெனில் ஸ்ரீவத்சவா மிகவும் எளிமையாக வாழ்ந்து வருகிறார். சிறிய ஓட்டு வீட்டிலேயே அவர் வசித்து வருகிறார். இந்த நிலையில் எளிமையான பா.ஜனதா வேட்பாளர் ஸ்ரீவத்சவாவின் வீட்டின் படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    • கர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் பலர் கோடீஸ்வரர்களாக உள்ளனர்.
    • தேர்தல் அலுவலக ஊழியர்கள் சில்லரை காசுகளை எண்ணி முடிப்பதற்குள் திணறிவிட்டனர்.

    கர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் பலர் கோடீஸ்வரர்களாக உள்ளனர். காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் டி.கே.சிவக்குமார், பா.ஜனதா வேட்பாளர் எம்.டி.பி.நாகராஜ் ஆகியோர் சுமார் 1,500 கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ளனர்.

    இந்த நிலையில் கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டம் ராணிபென்னூரில் வேட்பாளர் ஒருவர் டெபாசிட் தொகையான ரூ.10 ஆயிரத்தை நாணயங்களாக கொண்டு வந்து வேட்பு மனு தாக்கல் செய்த ருசிகர சம்பவம் நடந்துள்ளது.

    ராணி பென்னூர் தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் ஹனமந்தப்பா கப்பாரா என்பவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இவர் தங்களது கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுடன் ஊர்வலமாக சென்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அப்போது அவர் டெபாசிட் தொகைக்கான ரூ.10 ஆயிரத்தை ஒரு பாத்திரத்தில் நாணயங்களாக கொண்டு சென்றிருந்தார்.

    இதை பார்த்து முதலில் கிண்டலாக பார்த்த தேர்தல் அலுவலக ஊழியர்கள், அந்த சில்லரை காசுகளை எண்ணி முடிப்பதற்குள் திணறிவிட்டனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது.

    ×