என் மலர்
கர்நாடகா தேர்தல்
- ராகுல் காந்தி கர்நாடகாவில் இரண்டு சுற்றுப்பயணம் செய்து கோலாரில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்றார்.
- ராகுல் காந்தி நாளை பெலகாவியில் ராம்துர்க்கில் கரும்பு விவசாயிகளுடன் கலந்துரையாடுகிறார்.
பெங்களூரு:
கர்நாடக மாநிலத்தில் வருகிற மே 10-ந்தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. அங்கு அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்றும், நாளையும் கர்நாடகாவில் சுற்றுப்பயணம் செய்கிறார்.
ஏற்கனவே அவர் கர்நாடகாவில் இரண்டு சுற்றுப்பயணம் செய்து கோலாரில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்றார். இதற்கிடையே இன்று மீண்டும் கர்நாடகாவுக்கு செல்கிறார்.
டெல்லியில் இருந்து ஹுப்பள்ளிக்கு செல்லும் ராகுல்காந்தி, சங்கமநாதர் கோவில் மற்றும் ஐக்ய லிங்கத்தை தரிசனம் செய்ய ஹெலிகாப்டரில் கூடல் சங்கமத்துக்கு செல்கிறார். 12-ம் நூற்றாண்டின் கவிஞரும் சமூக சீர்திருத்தவாதியுமான ப.சவேஸ்வரா நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறார். அவரது பிறந்தநாளான பசவ ஜெயந்தி கொண்டாட்டத்தில் கலந்து கொள்கிறார். மாலை விஜயபுராவுக்கு செல்லும் அவர் அங்கு ரோடு ஷோ நடத்துகிறார். பின்னர் பொதுக்கூட்டத்தில் பேச உள்ளார்.
நாளை பெலகாவியில் ராம்துர்க்கில் கரும்பு விவசாயிகளுடன் கலந்துரையாடுகிறார். பின்னர் ஹங்கலில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். அதன்பின் ராகுல்காந்தி டெல்லிக்கு புறப்படுவார்.
- எலகங்கா தொகுதியில் இருந்து இன்று முதல் பிரசாரத்தை தொடங்க உள்ளேன்.
- நடிகர் சுதீப் பா.ஜனதாவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வார்.
பெங்களூரு :
பெங்களூருவில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
பா.ஜனதாவின் அணை உடைந்து, தண்ணீர் காலியாகி இருப்பதாக டி.கே.சிவக்குமார் கூறி இருக்கிறார். முதலில் காங்கிரஸ் குளத்தில் தண்ணீர் இல்லை. அப்படி இருக்கும் பட்சத்தில் தண்ணீர் எப்படி பாய்ந்து ஓடும். முதலில் காங்கிரசில் என்ன நடக்கிறது என்பதை டி.கே.சிவக்குமார் தெரிந்து கொள்ள வேண்டும். பா.ஜனதா கட்சி பற்றி அவர் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை.
எங்கள் கட்சியின் மேலிடம் மிகவும் பலம் வாய்ந்ததாக உள்ளது. கட்சிக்குள் எந்த பிரச்சினை வந்தாலும், அதனை சரிசெய்யும் சாமர்த்தியம் இருக்கிறது. எடியூரப்பா மற்றும் மத்திய மந்திரி ஷோபாவை கட்சியில் இருந்து ஒழிக்க சதி நடப்பதாக டி.கே.சிவக்குமார் கூறி இருப்பது வேடிக்கையாக உள்ளது. சித்தராமையாவை காங்கிரஸ் கட்சியினர் எப்படி முடக்கினார்கள் என்பது தெரியவில்லையா?.
கடந்த சட்டசபை தேர்தலில் சாமுண்டீஸ்வரி தொகுதியில் சித்தராமையா தோல்வி அடைய காங்கிரஸ் கட்சியே காரணம். தற்போது கூட வருணா தொகுதியில் சித்தராமையாவை தோற்கடிக்க டி.கே.சிவக்குமார், அக்கட்சியின் தலைவர்கள் முயற்சிக்கிறார்கள். இது இந்த நாட்டுக்கே தெரிந்த விஷயம். கடந்த 2013-ம் ஆண்டு லிங்காயத் சமூகத்தை அழிப்பதற்காக, தனி மத அங்கீகாரம் கொடுப்பதாக கூறினார்கள். தேர்தல் முடிவுகள் என்ன ஆனது என்பது காங்கிரஸ் தலைவர்களுக்கு நன்கு தெரியும்.
டி.கே.சிவக்குமாரின் பேச்சு காரணமாக இந்த முறை லிங்காயத் சமூகத்தினர் விழிப்புணர்வுடன் இருக்கின்றனர். லிங்காயத் சமூகத்தை பலப்படுத்தும் வேலையை காங்கிரசாரே செய்கின்றனர். அதுபற்றி பா.ஜனதா கவலைப்படவில்லை.
சவதத்தி-எல்லம்மா தொகுதியில் பா.ஜனதா வேட்பாளரின் வேட்பு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டுள்ளது. யாருடைய வேட்பு மனுவை ஏற்க வேண்டும், யாருடைய வேட்பு மனுவை நிராகரிக்க வேண்டும் என்பது தேர்தல் ஆணையம், அதிகாரிகளின் பணியாகும். இந்த விவகாரத்தில் அரசியல் கட்சிகள் எதுவும் செய்ய சாத்தியமில்லை.
டி.கே.சிவக்குமார், தனது வேட்பு மனு விவகாரத்தை 2 நாட்கள் கையில் எடுத்து அரசியல் செய்தார். நாளை முதல் (அதாவது இன்று) எலகங்கா தொகுதியில் இருந்து பிரசாரத்தை தொடங்க உள்ளேன். நடிகர் சுதீப் பா.ஜனதாவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வார். சுதீப் எங்கெல்லாம் பிரசாரம் செய்ய உள்ளார் என்ற தகவல்கள் இன்னும் ஓரிரு நாட்களில் வெளியிடப்படும்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.
- கர்நாடக சட்டசபை தேர்தல் மே 10-ம் தேதி நடக்கிறது.
- வருணா தொகுதி வாக்காளர்களை நம்பி களமிறங்கி உள்ளேன்.
சாம்ராஜ்நகர் :
சாம்ராஜ்நகரில் சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சாம்ராஜ்நகர் மக்களவை தொகுதியில் பிரசாரம் செய்ய பிரதாப் சிம்ஹா எம்.பி. வருகிறார்?. அவர் மைசூரு-குடகு தொகுதியில் பிரசாரம் செய்யாமல் தோல்வி பயத்தில் இங்கே வந்து சுற்றித்திரிகிறார்.
வருணா தொகுதியில் என்னை தோற்கடிக்க பா.ஜனதா- ஜனதாதளம் (எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து சதி செய்து வருகிறது. ஆனால் நாங்கள் யாருடனும் கூட்டணி வைக்கவில்லை. வருணா தொகுதி வாக்காளர்களை நம்பி களமிறங்கி உள்ளேன். வருணா மக்கள் என் மீது முன்பைவிட தற்போது அதீத அன்பை வெளிப்படுத்தி வருகிறார்கள். இதனால் தேர்தலில் நான் தோல்வி அடைய மாட்டேன்.
வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளது. என்னை வீழ்த்த பா.ஜனதா கங்கணம் கட்டிக்கொண்டு இருக்கிறது. பி.எல்.சந்தோசுக்கும், வருணா தொகுதிக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது. அவர் இங்கு வந்து பிரசாரம் செய்கிறார். என்னை வீழ்த்த நினைக்கும் அவர்களது தந்திரம் எதுவும் பலிக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.
- கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவராக இருந்து வருபவர் டி.கே.சிவக்குமார்.
- சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா.
பெங்களூரு :
கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவராக இருந்து வருபவர் டி.கே.சிவக்குமார். சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா. இருவரும் ஒரே கட்சியில் முக்கிய தலைவர்களாக இருந்தாலும், முதல்-மந்திரி பதவிக்காக 2 தலைவர்களும் மோதிக் கொள்வதாக கூறப்படுகிறது. இதனால் காங்கிரஸ் கட்சியில் சித்தராமையா தலைமையில் ஒரு பிரிவினரும், டி.கே.சிவக்குமார் தலைமையில் மற்றொரு பிரிவினரும் இருப்பதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக காங்கிரஸ் கட்சி சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றால் யார் முதல்-மந்திரி ஆவார்கள்? என்பதில் தான் 2 தலைவர்களும் மோதிக் கொள்கிறார்கள். இதனால் காங்கிரஸ் தலைவர்கள் இடையே ஒற்றுமை இல்லை என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளது.
சமீபத்தில் கோலாரில் நடந்த பொதுக்கூட்டத்தில் கூட முதலில் காங்கிரஸ் கட்சி சட்டசபை தேர்தலில் வெற்றி பெற தலைவர்கள் ஒற்றுமையாக இருந்து பணியாற்ற வேண்டும், முதல்-மந்திரி யார்? என்பதை கட்சி மேலிடம் முடிவு செய்யும் என்று மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், பெங்களூருவில் தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்ற சித்தராமையாவும், டி.கே.சிவக்குமார் தங்களது ஒற்றுமையை வெளிப்படுத்தினார்கள். டி.கே.சிவக்குமார் தோள் மீது சித்தராமையா கைபோட்டு நிற்பது, சித்தராமையாவின் சட்டையில் டி.கே.சிவக்குமார் காங்கிரஸ் சின்னம் இருந்த பேட்ஜை மாட்டியது போன்ற புகைப்படங்கள் வெளியானது. சட்டசபை தேர்தலையொட்டி தாங்கள் 2 பேரும் ஒற்றுமையாக இருப்பது போல் இந்த புகைப்படங்களை அவர்கள் வெளியிட்டு இருப்பதாக பா.ஜனதா குற்றம்சாட்டியுள்ளது.
- கர்நாடக மாநிலத்தில் கடந்த மார்ச் 29 ஆம் தேதியில் இருந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன.
- தேர்தல் ஆணையம் சார்பில் ரூ. 253 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கர்நாடாக சட்டமன்ற தேர்தலில் பாஜக சார்பில் பில்கி தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் முருகேஷ் நிரானி மீது சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்த விவகாரம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.
அமைச்சர் நிரானி சர்க்கரை ஆலை ஊழியர் குடியிருப்பில் இருந்து ரூ. 21 லட்சத்து 45 ஆயிரம் மதிப்புள்ள சில்வர் விளக்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கர்நாடக தொழில்துறை அமைச்சரான முருகேஷ் நிரானி மீது காவல் துறையினர் இந்திய தண்டனை சட்டம் 171 H பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
"நாங்கள் முருகேஷ் நிரானி மீது வழக்குப் பதிவு செய்து இருக்கிறோம். குற்றவாளிகள் பாஜக கட்சியை சேர்ந்தவர்கள் ஆவர். இவர்கள் நிரானி சர்க்கரை ஆலை ஊழியர் குடியிருப்பில் வசிக்கின்றனர்." என்று முதோல் காவல் நிலைய காவல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

போலீசாரிடம் இருந்து 28 கிலோ மதிப்புள்ள சில்வர் பொருட்களை பறிமுதல் செய்திருக்கிறோம் என்று மூத்த தேர்தல் அதிகாரி மனோஜ் குமார் மீனா தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் முருகேஷ் நிரானி கருத்து தெரிவிக்கவில்லை.
கர்நாடக மாநிலத்தில் கடந்த மார்ச் 29 ஆம் தேதியில் இருந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. அன்று முதல் இதுவரை தேர்தல் ஆணையம் சார்பில் ரூ. 253 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கடந்த வெள்ளி கிழமை மட்டும் நிரானி சர்க்கரை ஆலையில் இருந்து ரூ. 1 கோடியே 82 லட்சம் ரொக்கம், ரூ. 37 லட்சத்து 64 ஆயிரம் மதிப்புள்ள இலவச பொருட்கள், ரூ. 45 லட்சத்து 25 ஆயிரம் மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
முன்னதாக ரூ. 82 கோடியே 05 லட்சம் ரொக்கம், ரூ. 19 கோடியே 69 லட்சம் மதிப்பிலான இலவச பொருட்கள், ரூ. 56 கோடியே 67 லட்சம் மதிப்புள்ள மதுபானங்கள், ரூ. 16 கோடியே 55 லட்சம் மதிப்புள்ள போதை பொருட்கள், ரூ. 73 கோடியே 8 லட்சம் மதிப்புள்ள 145.55 கிலோ தங்கம், ரூ. 4 கோடியே 28 லட்சம் மதிபபுள்ள 610 கிலோ சில்வர் பொருட்கள் தேர்தல் நடைபெற இருக்கும் கர்நாடக மாநிலத்தில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
- அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது.
- இரட்டை இலை சின்னம் ஒதுக்குவதற்கான படிவத்தில் கையெழுத்திட எடப்பாடி பழனிசாமிக்கு மட்டுமே அதிகாரம் உண்டு.
சென்னை:
கர்நாடக மாநிலத்தில் உள்ள 224 சட்டமன்ற தொகுதிகளுக்கான பொதுத்தேர்தல் வருகிற மே மாதம் 10-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பெங்களூரு புலிகேசி தொகுதியில் அ.தி.மு.க. தரப்பில் அன்பரசன் போட்டியிடுவதாக அறிவித்தார்.
அதேபோல் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் 3 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். அதன்படி, புலிகேசி நகர் தொகுதியின் வேட்பாளராக நெடுஞ்செழியன், காந்தி நகர் தொகுதியில் கே.குமார், கோலார் தங்கவயல் தொகுதியில் அனந்தராஜா என்பவரும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.
இவர்கள் மூவரும் அந்தந்த தொகுதியில் போட்டியிட வேட்புமனுக்களை நேற்று முன்தினம் தாக்கல் செய்தனர். நேற்று மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது. அப்போது, ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வேட்பாளர்கள் 2 பேரின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
இந்நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக மாநில தலைமை தேர்தல் அதிகாரிக்கு அதிமுக தரப்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. அதில் தவறான புரிதலால் தேர்தல் நடத்தும் அலுவலர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களின் மனுவை ஏற்றுள்ளார் எனவும் இரட்டை இலை சின்னம் ஒதுக்குவதற்கான படிவத்தில் கையெழுத்திட எடப்பாடி பழனிசாமிக்கு மட்டுமே அதிகாரம் உண்டு எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- ஓபிஎஸ் சார்பில் புலிகேசி நகர், கோலார் தங்கவயல், காந்தி நகர் தொகுதிகளுக்கு வேட்பு மனுதாக்கல் செய்தனர்.
- புலிகேசி நகர், கோலாரில் ஓபிஎஸ் தரப்பு வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
பெங்களூரு:
கர்நாடக சட்டசபை தேர்தலில் புலிகேசி நகர் தொகுதியில் அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக டி.அன்பரசன் போட்டியிடுவார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இவர் கர்நாடக மாநில அ.தி.மு.க. அவைத்தலைவராக உள்ளார். இதையடுத்து எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்புக்கு போட்டியாக அதே புலிகேசி நகர் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வமும் தனது அணி சார்பில் வேட்பாளரை நிறுத்துவதாக அறிவிப்பு வெளியிட்டார்.
ஓபிஎஸ் தரப்பு சார்பில் புலிகேசி நகர் மற்றும் கோலார் தங்கவயல் தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். இந்த வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இன்று வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டன.
இதில் அ.தி.மு.க. சார்பில் புலிகேசி நகர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் அன்பரசனின் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது. ஓ.பி.எஸ். தரப்பில் கோலார் தங்க வயல், புலிகேசி நகர் தொகுதியில் நிறுத்தப்பட்ட ஓ.பி.எஸ். தரப்பு வேட்பாளர்கள் மனு நிராகரிக்கப்பட்டது.
இந்நிலையில், கர்நாடகாவின் காந்திநகர் தொகுதியில் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் குமார் தாக்கல் செய்த மனுவை அதிமுக பெயரில் தேர்தல் ஆணையம் ஏற்றது.
ஓ.பி.எஸ். தரப்பில் தாக்கல் செய்த ஆனந்தராஜ் கோலார் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடுகிறார்.
- 75 வயதான சித்தராமையா, இது தான் தனக்கு கடைசி தேர்தல் என்று தெரிவித்து இருந்தார்.
- முதல்வர் பதவியை யார் பெறுவது என்ற விஷயத்தில் சித்தராமையா மற்றும் டிகே சிவகுமார் இடையே போட்டி நிலவி வருகிறது.
கர்நாடக மாநிலத்தில் அடுத்த மாதம் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் மோடி அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தாது என்று காங்கிரஸ் மூத்த தலைவர், முன்னாள் முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். மாநிலத்தில் காங்கிரஸ் வெற்றி பெற முஸ்லீம்கள் உத்தியுடன் செயல்பட்டு வாக்களிக்க வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறும் பட்சத்தில் அது 2024 ஆண்டு நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலின் போது, தேசிய அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தும். மாநில நலன் சார்ந்த பிரச்சினைகளை சார்ந்து இந்த தேர்தலை காங்கிரஸ் எதிர்கொள்கிறது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

கர்நாடக சட்டமன்றத்தில் எதிர்கட்சி தலைவராக இருக்கும் 75 வயதான சித்தராமையா, இது தான் தனக்கு கடைசி தேர்தல் என்று தெரிவித்து இருந்தார். இந்த தேர்தலில் மாநிலத்தின் 90 சதவீத முஸ்லீம் வாக்காளர்கள் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக வாக்களிப்பர் என்று சித்தராமையா நம்பிக்கை தெரிவித்துள்ளார். மாநிலத்தில் ஆளும்கட்சியாக இருக்கும் பாஜக மீது மக்களிடையே அதிருப்தி நிலவுகிறது என்று மேலும் தெரிவித்தார்.
தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறும் பட்சத்தில் முதல்வர் பதவியை யார் பெறுவது என்ற விஷயத்தில் சித்தராமையா மற்றும் டிகே சிவகுமார் இடையே போட்டி நிலவி வருகிறது. இதுபற்றி சித்தராமையா கூறும் போது, எனக்கும் அவருக்கும் இடையே எவ்வித போட்டியும் இல்லை. யார் வேண்டுமானாலும் அந்த பதவிக்கு போட்டியிடலாம் என்று தெரிவித்தார்.
- மனுக்களை வாபஸ் பெற வருகிற 24-ந் தேதி கடைசி நாள் ஆகும்.
- தினமும் ஏராளமானவர்கள் ஆர்வத்துடன் மனுக்களை தாக்கல் செய்து வந்தனர்.
பெங்களூரு:
கர்நாடகத்தில் பசவராஜ்பொம்மை தலைமையிலான பா.ஜனதா அரசின் பதவிக்காலம் மே மாதத்துடன் நிறைவடைகிறது. இதனால் புதியதாக 16-வது சட்டசபை தேர்வு செய்வதற்காக கர்நாடக சட்டசபைக்கு வருகிற 10-ந்தேதி தேர்தல் நடக்கிறது.
தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 13-ந் தேதி தொடங்கியது. தினமும் ஏராளமானவர்கள் ஆர்வத்துடன் மனுக்களை தாக்கல் செய்து வந்தனர்.
வேட்பு மனு தாக்கலுக்கு நேற்று கடைசி நாள் என்பதால் அரசியல் கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்களும், சுயேச்சை வேட்பாளர்கள் தொண்டர்களுடன் படையெடுத்தனர்.
காலை 11 மணிக்கு தொடங்கிய வேட்புமனு தாக்கல் மாலை 3 மணியுடன் நிறைவடைந்தது. கடைசி நாளில் மனு தாக்கல் செய்ய ஏராளமானோர் குவிந்ததால், 3 மணிக்குள் வந்தவர்களுக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய அனுமதி வழங்கப்பட்டது.
நேற்று மட்டும் 1,691 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். மொத்தம் 3,632 பேர் 5,102 மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
இதில் 3,327 ஆண்களும், 304 பெண்களும், ஒரு திருநங்கையும் அடங்குவர். இன்று (வெள்ளிக்கிழமை) மனுக்கள் பரிசீலனை நடக்கிறது.
மனுக்களை வாபஸ் பெற வருகிற 24-ந் தேதி கடைசி நாள் ஆகும். அன்றைய தினம் மாலையில் இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும். அதன் பிறகு தேர்தல் களத்தில் தலைவர்கள், வேட்பாளர்கள் தீவிரமான பிரசாரத்தில் ஈடுபட தொடங்குவார்கள்.
- ஒரு கட்சிக்கு எதிராக மற்றொரு கட்சி இருக்கத்தான் செய்யும்.
- எமகனமரடி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
பெங்களூரு :
கர்நாடக மாநில காங்கிரஸ் செயல் தலைவராக இருந்து வருபவர் சதீஸ் ஜார்கிகோளி. இவர், மூடநம்பிக்கைகளுக்கு எதிரானவர் ஆவார். மக்களிடையே மூடநம்பிக்கைகள் குறித்து அவர் விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகிறார். நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்கான பிரசாரத்தை கூட மயானத்தில் இருந்தே சதீஸ் ஜார்கிகோளி தொடங்கி இருந்தார்.
சதீஸ் ஜார்கிகோளி, பெலகாவி மாவட்டம் எமகனமரடி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, நேற்று தனது வேட்பு மனுவை அவர் தாக்கல் செய்தார். அப்போது ராகு காலம் மற்றும் சூரிய கிரகண நேரத்தில் தேர்தல் அலுவலகத்திற்கு தனது மகனுடன் சென்று சதீஸ் ஜார்கிகோளி எமகனமரடி தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
இதுபற்றி சதீஸ் ஜார்கிகோளி நிருபர்களிடம் கூறுகையில், ஒரு கட்சிக்கு எதிராக மற்றொரு கட்சி இருக்கத்தான் செய்யும். இந்த முறை எத்தனை ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுகிறேன் என்பதை மே மாதம் 13-ந் தேதி அனைவரும் தெரிந்து கொள்ளலாம். எனக்கு ஆதரவாக இந்துகள் எத்தனை பேர் ஓட்டுப்போட்டு உள்ளனர் என்பதும் அன்றைய தினம் தெரிந்து விடும், என்றார்.
- டி.கே.சிவக்குமாருக்கு எதிராக பா.ஜனதாவினர் சதி செய்கிறார்கள்.
- கடந்த 5 ஆண்டுகளில் டி.கே.சிவக்குமாரின் சொத்து மதிப்பு 68 சதவீதம் அதிகரித்துள்ளது.
பெங்களூரு :
மே 10-ந்தேதி நடைபெறும் கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 13-ந்தேதி தொடங்கியது. நேற்று வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி நாள் ஆகும். இதனால் தேர்தல் அலுவலகங்களில் அரசியல் கட்சி வேட்பாளர்கள், சுயேச்சைகள் வேட்பு மனு தாக்கல் செய்ய குவிந்தனர்.
இந்த நிலையில் ராமநகர் மாவட்டம் கனகபுரா தொகுதியில் மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கடந்த 17-ந்தேதி மனு தாக்கல் செய்துள்ளார். அவரை எதிர்த்து பா.ஜனதா சார்பில் அந்த தொகுதியில் போட்டியிடும் வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் மனு தாக்கல் செய்துள்ளார். இதனால் ஆர்.அசோக்கின் சொந்த தொகுதியான பத்மநாபநகரில் அவரை எதிர்த்து டி.கே.சிவக்குமாரின் சகோதரர் டி.கே.சுரேஷ் எம்.பி. போட்டியிடுவார் என்று பேசப்பட்டது.
கடைசி நாளான நேற்று அவர் அந்த தொகுதியில் மனு தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திடீர் திருப்பமாக டி.கே.சுரேஷ் கனகபுரா தொகுதியில் நேற்று மனு தாக்கல் செய்துள்ளார். இதன் மூலம் பத்மநாபநகரில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட காங்கிரஸ் வேட்பாளர் ரகுநாத் நாயுடு மாற்றப்படாமல் போட்டியில் நீடிப்பது உறுதியாகியுள்ளது.
கனகபுராவில் மனு தாக்கல் செய்தது குறித்து டி.கே.சுரேஷ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், "டி.கே.சிவக்குமாருக்கு எதிராக பா.ஜனதாவினர் சதி செய்கிறார்கள். இந்த சதியை முறியடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் முன்எச்சரிக்கையாக நான் கனகபுராவில் மனு தாக்கல் செய்துள்ளேன். வருமான வரித்துறை மூலம் எங்களுக்கு தொடர்ந்து தொல்லை கொடுக்கிறார்கள்.
வருமான வரித்துறை கடந்த 4, 5 நாட்களுக்கு முன்பு எங்களுக்கு நோட்டீசு அனுப்பி உடனே நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பியது. அதற்கு நாங்கள், தற்போது தேர்தல் நடைபெறவதால், அதில் நாங்கள் பரபரப்பாக இயங்கி வருகிறோம், அதனால் தேர்தலுக்கு பிறகு நேரில் ஆஜராவதாக தெரிவித்துள்ளோம்" என்றார்.
இதற்கிடையே கனகபுரா தொகுதியில் டி.கே.சிவக்குமாரின் வேட்பு மனு தள்ளுபடி செய்ய வாய்ப்பு உள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது கடந்த 17-ந்தேதி டி.கே.சிவக்குமார் தாக்கல் செய்த வேட்பு மனுவுடன் தனது சொத்து விவரங்கள் அடங்கிய பிரமாண பத்திரமும் தாக்கல் செய்துள்ளார். அதில் அவருக்கு ரூ.1,414 கோடி சொத்துக்கள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 5 ஆண்டுகளில் அவரது சொத்து மதிப்பு 68 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் அவர் வருமான வரி கணக்கில் காட்டியுள்ள வருவாய்க்கும், தற்போது பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டுள்ள சொத்து விவரங்களுக்கும் இடையே வித்தியாசம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் வருமான வரித்துறை அதிகாரிகள், டி.கே.சிவக்குமாரின் சொத்து விவரங்களையும், அவர் தாக்கல் செய்த வருவாய் விவரங்களையும் ஆய்வு செய்து வருகிறார்கள்.
இதில் ஏதாவது வித்தியாசம் இருப்பது கண்டறியப்பட்டால், டி.கே.சிவக்குமாரின் வேட்புமனு தள்ளுபடி செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் தான் கனகபுரா தொகுதியில் அவருக்கு மாற்று வேட்பாளராக அவரது சகோதரர் டி.கே.சுரேஷ் எம்.பி. நேற்று கடைசி நாளில் மனு தாக்கல் செய்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் கர்நாடக அரசியல் மற்றும் தேர்தல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- இன்று மனுக்கள் பரிசீலனை நடக்கிறது.
- மனுக்களை வாபஸ் பெற 24-ந்தேதி கடைசி நாள்.
பெங்களூரு :
கர்நாடக சட்டசபைக்கு அடுத்த மாதம் (மே) 10-ந்தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 13-ந்தேதி தொடங்கியது. ஏராளமானவர்கள் மனுக்களை தாக்கல் செய்து வந்தனர்.
இந்த நிலையில் வேட்பு மனு தாக்கலுக்கு நேற்று கடைசி நாள் ஆகும். கடைசி நாளில் மனு தாக்கல் செய்ய ஏராளமானோர் குவிந்ததால், 3 மணிக்குள் வந்தவர்களுக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. அவர்கள் மனு தாக்கல் செய்தனர். அத்துடன் வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்தது.
கா்நாடகத்தில் ஒட்டுமொத்த மொத்தம் 3,632 பேர் 5,102 மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். பா.ஜனதா சார்பில் 707 மனுக்களும், காங்கிரஸ் சார்பில் 651 மனுக்களும், ஜனதாதளம் (எஸ்) கட்சி சார்பில் 455 மனுக்களும், ஆம் ஆத்மி கட்சி சார்பில் 373 மனுக்களும், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் 179 மனுக்களும் தாக்கல் ஆகியுள்ளன.
இதில் 3,327 ஆண்களும், 304 பெண்களும், ஒரு திருநங்கையும் அடங்குவர். ஒட்டுமொத்தமாக 1,720 சுயேச்சைகளும், அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில் 1,007 பேரும் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இன்று (வெள்ளிக்கிழமை) மனுக்கள் பரிசீலனை நடக்கிறது. இதில் சட்டப்படி நிரப்பப்பட்டுள்ள மனுக்கள் ஏற்று கொள்ளப்படும். விதிகளுக்கு உட்படாத மனுக்கள் தள்ளுபடி செய்யப்படும்.
மனுக்களை வாபஸ் பெற வருகிற 24-ந்தேதி கடைசி நாள் ஆகும். அன்றைய தினம் மாலையில் இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும். அதன் பிறகு தேர்தல் களத்தில் தலைவர்கள், வேட்பாளர்கள் தீவிரமான பிரசாரத்தில் ஈடுபட தொடங்குவார்கள்.






