என் மலர்
கர்நாடகா தேர்தல்
- எங்களுக்கு வாக்களிப்பவர்கள் தேசிய பாதுகாவலர்கள்.
- காங்கிரசுக்கு வாக்களிப்பவர்கள் தேசதுரோகிகள்.
சிவமொக்கா :
கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி சிவமொக்கா வினோபா நகரில் உள்ள முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா வீட்டில் நேற்று வீரசைவ-லிங்காயத் சமுதாய தலைவர்கள் ஏற்பாடு செய்திருந்த நட்புறவு கூட்டம் நடந்தது. இதில் எடியூரப்பா, முன்னாள் மந்திரி ஈசுவரப்பா ஆகியோர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் ஈஸ்வரப்பா பேசியதாவது:-
சாலை, சாக்கடை, குடிநீர் வசதிக்காக முஸ்லிம்கள் பா.ஜனதாவுக்கு வாக்களிக்க மாட்டார்கள். இருப்பினும் கல்வி, சுகாதாரம் உள்ளிட்டவற்றில் எங்களிடம் நிவாரணம் பெறும் முஸ்லிம்கள் எங்களுக்கு வாக்களிக்கின்றனர். எங்களுக்கு முஸ்லிம்கள் ஓட்டுகள் தேவை இல்லை. எங்களுக்கு வாக்களிப்பவர்கள் தேசிய பாதுகாவலர்கள். காங்கிரசுக்கு வாக்களிப்பவர்கள் தேசதுரோகிகள்.
லிங்காயத் உள்ளிட்ட இந்து சமுதாயத்தினருக்கு எடியூரப்பா முன்மாதிரி தலைவர். சிவமொக்கா தொகுதியில் போட்டியிடும் சென்னபசப்பா இந்து சமுதாயத்தை கட்டியெழுப்பக்கூடிய வலிமையான தலைவர். பா.ஜனதாவை தவிர வேறு கட்சி மாநிலத்தில் வெற்றி பெற்றால், இந்துக்களுக்கு பிழைப்பு இல்லை என சிலர் கூறி வருகிறார்கள். எனவே கர்நாடகத்தில் மீண்டும் பா.ஜனதா ஆட்சிக்கு வர வேண்டும்.
சிவமொக்காவில் 56 ஆயிரம் முஸ்லிம்கள் வசிப்பதாக சொல்கிறார்கள். அவர்களின் ஒரு ஓட்டுக்கூட எங்களுக்கு தேவையில்லை. பஜ்ரங்தள பிரமுகர் ஹர்ஷா கொல்லப்பட்ட சமயத்தில் காங்கிரஸ் மவுனமாக இருந்தது. லவ் ஹிகாத் குறித்து புகார் அளிக்க பெண்கள் தயங்குகின்றனர். இந்து பெண்களை முஸ்லிம்கள் தாக்கும் போது காங்கிரஸ் வேடிக்கை பார்க்கும். அந்த கட்சி உதவிக்கு வராது.
இவ்வாறு அவர் பேசினார்.
- பா.ஜனதாவில் இருந்து வந்த தலைவர்களை வைத்து காங்கிரஸ் ஓட்டு கேட்கிறது.
- பா.ஜனதாவை சேர்ந்த ஒருவர் தான் கர்நாடக முதல்-மந்திரியாக வருவார்.
பெங்களூரு
கா்நாடக சட்டசபை தேர்தலையொட்டி உள்துறை மந்திரி அமித்ஷா 2 நாட்கள் பயணமாக நேற்று முன்தினம் கர்நாடகம் வந்தார். அவர் நேற்று 2-வது நாளாக பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார். பாகல்கோட்டையில் நேற்று நடைபெற்ற பா.ஜனதா தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் அமித்ஷா கலந்து கொண்டு பேசியதாவது:-
கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் வளர்ச்சி பின்னோக்கி செவ்லும். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் குடும்ப அரசியல் இதுவரை இல்லாத அளவுக்கு முன்னிலைக்கு வரும். ஊழல் அதிகமாக நடைபெறும். குறிப்பிட்ட சமூகத்தை கவரும் அரசியலை அக்கட்சி செய்யும். காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் வன்முறையால் கர்நாடகம் பாதிக்கப்படும். பா.ஜனதாவில் இருந்து விலகி காங்கிரசில் சேர்ந்துள்ள முன்னாள் முதல்-மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர், முன்னாள் துணை முதல்-மந்திரி லட்சுமண் சவதி ஆகியோரால் காங்கிரசுக்கு எந்த பலனும் கிடைக்காது.
கர்நாடகத்தில் லிங்காயத் தலைவர்களை காங்கிரஸ் எப்போதும் அவமதித்து வந்துள்ளது. லிங்காயத் சமூகத்தில் வீரேந்திர பட்டீல், நிஜலிங்கப்பா ஆகிய 2 தலைவர்களுக்கு மட்டுமே காங்கிரஸ் கட்சி முதல்-மந்திரி பதவி வழங்கியது. அவர்களையும் அக்கட்சி அவமதித்து கட்சியை விட்டு நீக்கியது. அக்கட்சி நீண்ட காலம் ஆட்சி செய்தது.
பா.ஜனதாவில் இருந்து வந்த தலைவர்களை வைத்து காங்கிரஸ் ஓட்டு கேட்கிறது. இதை பார்க்கும்போது, அக்கட்சியில் தலைவர்கள் இல்லாமல் திவாலாகிவிட்டதை காட்டுகிறது. ஜனதா தளம்(எஸ்) கட்சியை பயன்படுத்தி காங்கிரஸ் கட்சி எடியூரப்பாவை முதல்-மந்திரி பதவியை விட்டு அகற்றியது. இப்போது காங்கிரஸ் கட்சி எங்கள் கட்சியின் சில தலைவர்களுடன் ஆட்சியை பிடிக்க பார்க்கிறது. ஆனால் இதை வட கர்நாடக மக்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்.
மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இருந்தபோது வட கர்நாடகத்தில் கலசா-பண்டூரி திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை. காங்கிரஸ் கட்சி நாட்டை 60 ஆண்டு காலம் ஆட்சி செய்தது. மத்தியில் பா.ஜனதா ஆட்சி வந்த பிறகு நாங்கள் செய்த பணிகளில் 10 சதவீதத்தை காங்கிரஸ் 60 ஆண்டுகளில் செய்யவில்லை.
கர்நாடகத்தில் லம்பானி, குருபா மலைவாழ் மக்களுக்கு வீட்டு உரிமை பத்திரத்தை வழங்கினோம். அந்த மக்கள் வசித்த குக்கிராமங்களை வருவாய் கிராமங்களாக மாற்றியுள்ளோம். இதை இந்த இரட்டை என்ஜின் அரசு தான் செய்து காட்டியுள்ளது. காங்கிரசில் முதல்-மந்திரி பதவிக்காக சித்தராமையா, டி.கே.சிவக்குமார் சண்டை போட்டு கொள்கிறார்கள். காங்கிரஸ் ஆட்சிக்கு வராது.
பா.ஜனதாவை சேர்ந்த ஒருவர் தான் கர்நாடக முதல்-மந்திரியாக வருவார். ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு வாக்களிக்க வேண்டாம். அந்த கட்சிக்கு நீங்கள் போடும் ஓட்டு காங்கிரசுக்கு செல்லும். காங்கிரசுக்கு வாக்களிக்க விரும்பாதவர்கள் பா.ஜனதாவை ஆதரிக்க வேண்டும். அவ்வாறு செய்தால், கர்நாடகத்தை மேலும் வளர்ச்சி அடைய செய்வோம். பிரதமர் மோடி, சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வந்த பி.எப்.ஐ. அமைப்பை தடை செய்துள்ளார்.
இவ்வாறு அமித்ஷா பேசினார்.
- கர்நாடகாவில் சட்டசபை தேர்தல் வருகிற 10-ந் தேதி நடைபெறுகிறது.
- பா.ஜனதா ஜெயிக்க போவது இல்லை.
மைசூரு :
கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 15 நாட்களே உள்ளன. இதையொட்டி அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தநிலையில் ஜனதா தளம்(எஸ்) கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான குமாரசாமி நேற்று மைசூரு மாவட்டத்தில் உள்ள சாமுண்டீஸ்வரி கோவிலுக்கு வந்தார். அங்கு சாமி தரிசனம் செய்தார். பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கர்நாடகாவில் சட்டசபை தேர்தல் வருகிற 10-ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி அமித்ஷா, ராகுல்காந்தி, பிரியங்காகாந்தி ஆகியோர் பிரசாரம் செய்து வருகிறார்கள். இதனால் எங்களுக்கு எந்தவித பாதிப்பும் கிடையாது. அவர்கள் பிரசாரம் செய்வதால் இங்கு ஒன்றும் நடக்க போவது இல்லை. ஏன் பிரதமர் மோடியே கர்நாடகத்திற்கு பிரசாரம் செய்ய வந்தாலும் பா.ஜனதா ஜெயிக்க போவது இல்லை. வருகிற சட்டசபை தேர்தலில் ஜனதா தளம்(எஸ்) கட்சி யாருடனும் கூட்டணி இல்லாமல் தனி பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்கும்.
மாநிலத்தில் பிரதமர்நரேந்திர மோடி, அமித்ஷா, முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ஆகியோருக்கு பொதுமக்களிடம் வரவேற்பு இல்லை. பா.ஜனதாவினர் நடத்தும் மாநாடு, பொதுக்கூட்டங்களில் மக்கள் கூட்டம் இல்லை.மாற்று கட்சிகளில் இருந்து ஜனதா தளம் (எஸ்) கட்சிக்கு வந்த 20 பேருக்கு டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரையும் வெற்றி பெற செய்வோம்.
ஓய்வில்லாமல் தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொண்டதால் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலம் பாதி்ப்பு ஏற்பட்டது. தற்போது நலமாக உள்ளேன். தொடர்ச்சியாக 10 நாட்கள் ஓய்வில்லாமல் பிரசாரத்தில் கலந்து கொள்கிறேன். அதன் பிறகு ஓய்வு எடுக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- துமகூரு மாவட்டம் மதுகிரி தொகுதியில் தேவகவுடா கலந்துகொண்டு உருக்கமாக பேசினார்.
- துமகூரு மாவட்டத்தில் 10 தொகுதிகளில் எங்களுக்கு வெற்றியை மக்கள் தர வேண்டும்.
துமகூரு :
துமகூரு மாவட்டம் மதுகிரி தொகுதி ஜனதாதளம் (எஸ்) கட்சி வேட்பாளரை ஆதரித்து டி.கைமாராவில் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் அக்கட்சிவேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் தேசிய தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடா கலந்துகொண்டு உருக்கமாக பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
கடந்த 1995-ம் ஆண்டு நான் முதல்-மந்திரியாக இருந்தபோது துமகூரு மாவட்டத்தில் 9 இடங்களில் வெற்றியை இந்த மக்கள் வழங்கினார்கள். மாநிலத்தின் வளர்ச்சிக்காக பஞ்சரத்ன யோஜனா திட்டத்தைசெயல்படுத்த நினைக்கும் குமாரசாமி, இனி முதல்-மந்திரி ஆவார். துமகூரு மாவட்டத்தில் 10 தொகுதிகளில் எங்களுக்கு வெற்றியை மக்கள் தர வேண்டும்.
ஜனதாதளம் (எஸ்) கட்சிக்கு ஒட்டு மொத்தமாக இந்த தேர்தலில் 20 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்று காங்கிரஸ், பா.ஜனதாவினர் கூறிவருகிறார்கள். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மூட்டு வலியால் எழுந்து கூட நிற்க முடியாத நிலையில் இருந்தேன். ஆனால் சிலர் என்னை துமகூரு நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும்படி வற்புறுத்தினர். இதனால் நான் இங்கு வந்து போட்டியிட்டேன்.
ஆனால் தோல்வி அடைந்தேன். என்னை தேர்தலில் தோற்கடித்ததை நினைத்து நான் கண்ணீர்விட்டேன். என்னை அழவைத்தவர்களை இந்த தேர்தலில் ஜனதாதளம் (எஸ்) கட்சிக்கு வாக்களித்து அழ வைக்க வேண்டும். அப்போது தான் என் ஆன்மா சாந்தி அடையும்.
இவ்வாறு அவர் உருக்கமாக பேசினார்.
அதாவது, மதுகிரி காங்கிரஸ் வேட்பாளர் ராஜண்ணாவை வீழ்த்த தேவகவுடா மறைமுகமாக இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.
- பா.ஜனதா எம்.எல்.ஏ. மகன் வீட்டில் இருந்து ரூ.8 கோடி பணம் சிக்கியது.
- கர்நாடகத்திற்கு கிடைக்க வேண்டிய நிதிகளை மத்திய அரசு வழங்கவில்லை.
பெங்களூரு :
கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி நேற்று சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹனூர் மற்றும் மைசூரு மாவட்டம் டி.நரசிப்புராவில் காங்கிரஸ் கட்சி சார்பில் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. இதில் அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
கர்நாடகத்தில் 40 சதவீத கமிஷன் பெறப்படுகிறது. எந்த வெட்கமும் இல்லாமல் இந்த கமிஷன் அரசு உங்களிடம் (மக்களிடம்) கொள்ளையடிக்கிறது. 40 சதவீத கமிஷன் தர முடியாமல் ஒரு ஒப்பந்ததாரர் தற்கொலை செய்து கொண்டார். கர்நாடக அரசு ஒப்பந்ததாரர்கள் சங்கத்தினர் இதுகுறித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினர். ஆனால் பிரதமர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஏனெனில் இதில் தவறு செய்தவர்கள் பா.ஜனதாவை சேர்ந்தவர்கள். பா.ஜனதா எம்.எல்.ஏ. மகன் வீட்டில் இருந்து ரூ.8 கோடி பணம் சிக்கியது. இதுகுறித்து விசாரணை நடத்துவதற்கு பதிலாக அந்த எம்.எல்.ஏ. தனது ஆதரவாளர்களுடன் ஊர்வலம் நடத்தினார். கர்நாடகத்தில் பா.ஜனதா அரசு ரூ.1½ லட்சம் கோடி கொள்ளையடித்து இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த பணத்தால் ஏராளமான வளர்ச்சி பணிகளை மேற்கொண்டிருக்க முடியும். இதனால் மக்கள் பயன் அடைந்திருப்பார்கள்.
கர்நாடகத்தில் தற்போது நடைபெறும் பா.ஜனதா அரசு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அல்ல. பா.ஜனதா வேறு கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி ஆட்சி அமைத்தது. துரோகத்தின் பேரில் ஆட்சி அமைத்தனர். கடந்த 4 ஆண்டுகளில் இந்த பா.ஜனதா அரசு எந்த பணிகளையும் செய்யவில்லை. கர்நாடகத்திற்கு கிடைக்க வேண்டிய நிதிகளை மத்திய அரசு வழங்கவில்லை.
பா.ஜனதா தலைவர் ஒருவர், நீங்கள் பிரதமர் மோடிக்கு ஓட்டு போடாவிட்டால் மோடியின் ஆசி உங்களுக்கு கிடைக்காது என்று மிரட்டல் விடுக்கிறார். மோடியின் ஆசி வேண்டும் என்று கூறியது கர்நாடகத்திற்கு இழைக்கப்பட்ட அவமானம் ஆகும். பிரதமர் மோடியின் நண்பர் அதானி, அம்பானி ஆகியோர் லட்சக்கணக்கான கோடி ரூபாய் சம்பாதிக்கிறார்கள்.
நிலத்தில் வியர்வை சிந்தும் விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைப்பது இல்லை. சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.1,100 ஆக உயர்த்திவிட்டனர். அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துவிட்டது. உங்களின் பணத்தை கொள்ளையடித்து தொழில் அதிபர்களுக்கு வழங்குகிறார்கள்.
'பிரதமர் மோடி கர்நாடகம் வந்து, காங்கிரசார் தனக்கு கல்லறை கட்டுவதாக சொல்கிறார். இது எத்தகைய பேச்சு. நமது நாட்டில் வேறு யாரும் இவ்வாறு யோசிக்க மாட்டார்கள். நமது பிரதமரின் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். கல்லறை விஷயத்தை முன்வைத்து தேர்தல் நேரத்தில் மோடி பேசுகிறார். இது தான் தேர்தல் விஷயமா?.
இவ்வாறு பிரியங்கா காந்தி கூறினார்.
இதற்கிடையே மைசூரு கிருஷ்ணராஜநகரில் திறந்த வாகனத்தில் நின்றபடி பிரியாங்கா காந்தி பிரசார பேரணி நடத்தினார். அப்போது, தொண்டர்களையும், பொதுமக்களையும் பார்த்து கையசைத்தார். இதில் ஆயிரகணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் பங்கேற்றனர்.
- 17 துணை சமூகங்களுக்கான இட ஒதுக்கீட்டில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.
- இடஒதுக்கீட்டை ரத்து செய்யும் நடவடிக்கையை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டு இருக்கிறது.
கர்நாடக மாநிலத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முஸ்லீம்களுக்கு வழங்கப்பட்டு வந்த நான்கு சதவீத இடஒதுக்கீட்டை பாஜக அரசு ரத்து செய்ய முடிவு செய்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் இதர பிறப்படுத்தப்பட்டோர் பட்டியலில் 2பி பிரிவில் இஸ்லாமியர்களுக்கான 4 சதவீத இடஒதுக்கீட்டை ரத்து செய்வது தொடர்பான பணிகளில் மாநில அரசு தற்போதைக்கு ஈடுபடாது என்று கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

பிரிவு 1 மற்றும் பிரிவு 2-இன் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள மிகவும் பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர்கள் அடங்கிய 17 துணை சமூகங்களுக்கான இட ஒதுக்கீட்டில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.
வழக்கை விசாரணை செய்த உச்சநீதிமன்றம் இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீட்டை ரத்து செய்யும் நடவடிக்கையில் கர்நாடக அரசு மே 9 ஆம் தேதி வரை ஈடுபட கூடாது என்று உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீடு தொடர்பாக இன்று செய்தியாளர்களிடையே பேசிய முதல்வர் பசவராஜ் பொம்மை, "வழக்கு விசாரணை நிறைவுபெறும் வரை இந்த விவகாரத்தை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு செல்லப் போவதில்லை. இது தொடர்பாக நீதிமன்றம் தடை ஏதும் விதிக்கவில்லை. நாங்கள் தான் உச்சநீதிமன்றத்தில், வழக்கை நீங்கள் முழுமையாக விசாரணை செய்யுங்கள். விசாரணை நிறைவுபெறும் வரை அதனை அமல்படுத்த மாட்டோம் என்று கூறியிருக்கிறோம்," என்றார்.
"இஸ்லாமியர்கள் இடையே- பிஞ்சார், டார்சி, சக்கர்பண்ட் உள்பட மொத்தம் 17 துணை சமூகங்கள் உள்ளன. பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் பிரிவு 1 மற்றும் 2ஏ கீழ் இருப்பவர்கள், மிகவும் ஏழ்மை நிலையில் இருப்பவர்கள் இன்னமும் இந்த பிரிவுகளில் உள்ளனர். நான்கு சதவீத இட ஒதுக்கீடு பெற்று வருவோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான பத்து சதவீத இட ஒதுக்கீடு பெறும் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் யாருக்கும் அநீதி இழைக்கப்படவில்லை." என்றும் முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்தார்.
- அதிகாரப்பூர்வ வேட்பாளரான டி. அன்பரசன் அவர்கள் தனது வேட்பு மனுவை திரும்பப் பெற்றுள்ளார்
- கர்நாடகாவில் இன்று இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.
பெங்களூரு:
கர்நாடகாவில் வருகிற 10-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. வேட்பு மனு தாக்கல் கடந்த 13-ந் தேதி தொடங்கி 20-ம் தேதி நிறைவடைந்தது. வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்பட்ட நிலையில் இன்று இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.
இந்த நிலையில், இந்த தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து அதிமுக விலகியதுடன். தனது வேட்பாளரை திரும்ப பெற்றுள்ளது.
இதுதொடர்பாக அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அதிமுக பொதுச் செயலாளரும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி அவர்களை இன்று (24.04.2023 - திங்கட் கிழமை), பாரதிய ஜனதா கட்சியின் மேலிடப் பொறுப்பாளர்கள் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு, கர்நாடக மாநிலத்தில் 10.05.2023 அன்று நடைபெற உள்ள சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தலில், (159) புலிகேசிநகர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுவதற்கு வேட்பு மனு தாக்கல் செய்துள்ள கழக வேட்பாளர் டி.. அன்பரசன் அவர்களை திரும்பப் பெறுமாறு கேட்டுக்கொண்டதற்கு இணங்க, தலைமை பரிசீலனை செய்து, பாரதிய ஜனதா கட்சியின் கோரிக்கையை ஏற்று, கழகத்தின் அதிகாரப்பூர்வ வேட்பாளரான டி. அன்பரசன் அவர்கள் தனது வேட்பு மனுவை திரும்பப் பெற்றுள்ளார் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
இவ்வாறு அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
- கர்நாடக சட்டசபைக்கு ஒரே கட்டமாக அடுத்த மாதம் 10-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
- தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அங்கு அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பெங்களூரு:
224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு ஒரே கட்டமாக அடுத்த மாதம் (மே) 10-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அங்கு அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி (ஏப்ரல் 25, 26) நாளையும், நாளை மறுநாளும் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார். இதற்காக நாளை அவர் கர்நாடகத்திற்கு செல்ல உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்குள்ள தி.நரசிபுரத்தில் உள்ள கெலவரகண்டியில் நாளை (செவ்வாய்க்கிழமை) மதியம் 1 மணி வரை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரியங்கா காந்தி பேசுகிறார்.
அதனை தொடர்ந்து சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹனூரில் உள்ள கவுரிசங்கர் கன்வென்ஷன் ஹாலில் மாலை 3 மணி முதல் மகளிர் மாநாட்டில் பங்கேற்க உள்ளார்.
ராகுல் காந்தியும் 2 நாள் சுற்றுப்பயணமாக கர்நாடகத்திற்குச் சென்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- கோலார் தங்கவயல் தொகுதியில் மனுதாக்கல் செய்த அனந்தராஜ் இன்று தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்றார்.
- சுயேச்சையாக போட்டியிட விரும்பவில்லை என கூறி அவர் வேட்புமனுவை திரும்ப பெற்றார்.
பெங்களூரு:
கர்நாடக சட்டசபை தேர்தலில் கோலார் தங்கவயல் தொகுதியில் போட்டியிட ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வேட்பாளர் அனந்தராஜ் மனுதாக்கல் செய்திருந்தார். ஆனால் அவருக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்க வில்லை. அவர் சுயேச்சையாக போட்டியிட அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் கோலார் தங்கவயல் தொகுதியில் மனுதாக்கல் செய்த அனந்தராஜ் இன்று தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்றார். சுயேச்சையாக போட்டியிட விரும்பவில்லை என கூறி அவர் வேட்புமனுவை திரும்ப பெற்றார்.
- வேட்புமனுக்களை வாபஸ் பெற இன்று கடைசி நாள் ஆகும்.
- சுயேச்சை வேட்பாளர்களுக்கு இன்றே சின்னங்களும் ஒதுக்கப்பட உள்ளன.
பெங்களூரு :
இதற்கான வேட்புமனு தாக்கல் செய்யும் பணி கடந்த 13-ந் தேதி தொடங்கி 20-ந் தேதி வரை நடைபெற்றது. இதில் மொத்தம் 3 ஆயிரத்து 632 வேட்பாளர்கள் 5 ஆயிரத்து 102 மனுக்களை தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் மீதான பரிசீலனை கடந்த 21-ந் தேதி நடைபெற்றது. இதில் 678 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. 3 ஆயிரத்து 44 மனுக்கள் (4 தொகுதிகளை தவிர) ஏற்கப்பட்டுள்ளன.
மனுக்கள் வாபஸ் பெற இன்று(திங்கட்கிழமை) கடைசி நாள் ஆகும். நேற்று ஞாயிற்றுக்கிழமை பொது விடுமுறை என்பதால் இன்று ஒரு நாள் மட்டுமே மனுக்களை வாபஸ் பெற காலஅவகாசம் உள்ளது. போட்டியில் இருந்து விலக விரும்புகிறவர்கள் இன்று மதியம் 3 மணிக்குள் தங்களின் மனுவை வாபஸ் பெற்றுக்கொள்ள வேண்டும். மாநிலத்தின் பல்வேறு தொகுதிகளில் டிக்கெட் கிடைக்காத பா.ஜனதா, காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகளின் வேட்பாளர்கள் சுயேச்சையாக மனு தாக்கல் செய்துள்ளனர்.
இதனால் அந்த கட்சிகளின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதனால் போட்டி வேட்பாளர்களின் மனுவை வாபஸ் பெற வைக்க அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளனர். அதனால் இன்று அதிக எண்ணிக்கையில் வேட்பாளர்கள் தங்களின் மனுக்களை வாபஸ் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் அதிகாரப்பூர்வ இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று மாலையில் வெளியிடப்படுகிறது. இதில் எந்தெந்த தலைவர்களிடையே போட்டி ஏற்படும், தொகுதிகளில் எத்தனை வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர் என்பது போன்ற தகவல்கள் அதிகாரப்பூர்வமாக தெரியவரும். சுயேச்சை வேட்பாளர்களுக்கு இன்றே சின்னங்களும் ஒதுக்கப்பட உள்ளன.
இந்த இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியான பிறகு கர்நாடக சட்டசபை தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கும். பிரதமர் மோடி, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, மத்திய மந்திரிகள் மற்றும் பா.ஜனதா தேசிய தலைவர்கள் தேர்தல் பிரசாரத்திற்காக கர்நாடகத்திற்கு வரவுள்ளனர்.
இதனால் தேர்தல் களத்தில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ராகுல் காந்தி கர்நாடகத்தில் உள்ளார். அவர் இன்று தேர்தல் பிரசார கூட்டங்களில் கலந்து கொள்கிறார். இதற்கிடையே உள்துறை மந்திரி அமித்ஷா இன்று முதல் 3 நாட்கள் கர்நாடகத்தில் பிரசாரம் செய்ய இருக்கிறார்.
இந்த நிலையில் அரசியல் கட்சியினர் மற்றும் வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கு ஓட்டுக்கு பணம், பரிசு பொருட்களை கொடுப்பதை தடுக்க தீவிரமான கண்காணிப்பு நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது.
தற்போது பெரும்பாலானவர்கள் அதிநவீன செல்போன் பயன்படுத்துவதால், அவர்கள் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை மேற்கொள்கிறார்கள். அதனால் வாக்காளர்களுக்கு பணமாக கொடுக்காமல், டிஜிட்டல் முறையில் யு.பி.ஐ. மூலமாக பே-டி-எம்., போன்பே, ஜி-பே போன்ற செயலிகள் வாயிலாக பணம் அனுப்புவதை தடுக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த டிஜிட்டல் பண பரிவர்த்தனையை கண்காணிக்க மாவட்டத்திற்கு ஒரு அதிகாரியை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. டிஜிட்டல் மூலம் வாக்காளர்களுக்கு பணம் அனுப்புவது, மளிகை கடைகள், வணிக வளாகங்கள் வாயிலாக வாக்காளர்களுக்கு பொருட்களை அனுப்பி அதற்கான பணத்தை அந்த கடைகளின் உரிமையாளர்களின் வங்கி கணக்கிற்கு அனுப்புவது போன்ற விஷயங்களை கண்காணித்து வருகிறார்கள்.
மேலும் இதுகுறித்து கண்காணிக்கும்படி ரிசர்வ் வங்கி மற்றும் யு.பி.ஐ. செயலி நிறுவனத்துக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் கடந்த 2 மாதங்களாக இதுபோல் ஏதேனும் பணப்பரிமாற்றம் நடந்ததா? என்பது குறித்து கண்காணித்து தகவல் தெரிவிக்கும்படியும் தேர்தல் ஆணையம் ரிசர்வ் வங்கி மற்றும் யு.பி.ஐ. நிறுவனத்திடம் கேட்டுக் கொண்டுள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள தலைமை தேர்தல் அதிகாரி மனோஜ்குமார் மீனா, 'டிஜிட்டல் மூலம் வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்படுகிறதா? என்பதை கண்காணிக்க அதிகாரிகளை நியமனம் செய்துள்ளோம். இதுகுறித்து ரிசர்வ் வங்கி மற்றும் யு.பி.ஐ. செயலிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளோம். டிஜிட்டலில் வாக்காளர்களுக்கு பணம் வழங்குவதை தடுப்பது என்பது பெரும் சவாலாக உள்ளது' என்றார்.
- அ.தி.மு.க. பெயரில் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் குமார் வேட்புமனு தாக்கல் செய்தார்.
- ஓபிஎஸ் தரப்பு வேட்பாளரிடம் விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.
பெங்களூரு:
கர்நாடக சட்டசபைக்கு மே 10-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 13-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரம் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.
இதற்கிடையே, கர்நாடகா சட்டசபை தேர்தலில் புலிகேசி நகர் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளரை களமிறங்கியுள்ளது.
அதேவேளை, கர்நாடக தேர்தலில் காந்திநகர் தொகுதியில் அ.தி.மு.க பெயரில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வேட்பாளர் குமார் வேட்புமனு தாக்கல் செய்தார். அ.தி.மு.க. பெயரில் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் குமார் தாக்கல் செய்த வேட்புமனுவை தேர்தல் ஆணையம் ஏற்றது.
இதை எதிர்த்து கர்நாடக தேர்தல் ஆணையத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரையடுத்து, ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வேட்பாளர் குமாருக்கு தேர்தல் ஆணையம் இன்று நோட்டீஸ் அனுப்பியது. அ.தி.மு.க. பெயரில் வேட்புமனு தாக்கல் செய்தது தொடர்பாக உரிய விளக்கம் அளிக்கும்படி குமாருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வேட்பாளர் குமார் காந்திநகர் தொகுதியில் போட்டியிட தான் தாக்கல் செய்த வேட்புமனுவை திரும்பப்பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால் பா.ஜ.க.வில் இருந்து விலகினார் ஜெகதீஷ் ஷெட்டர்.
- பா.ஜ.க.வில் இருந்து விலகிய கர்நாடக முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் காங்கிரசில் இணைந்தார்.
பெங்களூரு:
கர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டியிட பா.ஜ.க.வில் சீட் கிடைக்காததால் கடும் அதிருப்தி அடைந்த முன்னாள் முதல்மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். பா.ஜ.க.வில் இருந்தும் விலகுவதாக அவர் அறிவித்தார்.
இதையடுத்து, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், சித்தராமையா முன்னிலையில் ஜெகதீஷ் ஷெட்டர் காங்கிரசில் சமீபத்தில் இணைந்தார்.
இதற்கிடையே, ஜெகதீஷ் ஷெட்டருக்கு ஹூப்ளி-தர்பாத் மத்திய தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தேர்தல் பிரசாரத்துக்காக கர்நாடகா வந்துள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை ஜெகதீஷ் ஷெட்டர்
முதல் முறையாக இன்று சந்தித்தார். அப்போது தேர்தல் நிலவரம் குறித்து இருவரும் உரையாடினர்.






