என் மலர்tooltip icon

    கர்நாடகா தேர்தல்

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வேட்பாளர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
    • பிரதாப் கவுடா பட்டீலை தோற்கடிக்க காங்கிரஸ் கட்சி அவரை போல் முகதோற்றம் கொண்ட ஈஷப்பாவை இறக்கிவிட்டு இருப்பதாக பா.ஜனதாவினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

    பெங்களூரு:

    கர்நாடக சட்டசபைக்கு வருகிற 10-ந்தேதி தேர்தல் நடக்கிறது. இதையொட்டி வேட்பாளர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

    இதில் ராய்ச்சூர் மாவட்டம் மாஸ்கி தொகுதியில் பா.ஜ.க. சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. பிரதாப் கவுடா பட்டீல் (வயது 68) போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் பசவனகவுடா துர்விகால் களமிறங்கியுள்ளார். மேலும் இதே தொகுதியில் ஈஷப்பா என்பவர் சுயேச்சையாக போட்டியிடுகிறார்.

    அவர் தனது பெயரையும் ஈஷப்பா கவுடா பட்டீல் என மாற்றியுள்ளார். இவர் பிரதாப் கவுடா பட்டீல் போல் தோற்றத்தில் நெற்றியில் திருநீரு பூசி இருப்பதுடன் அவரை போல் மீசையும் வைத்துள்ளார்.

    பிரதாப் கவுடா பட்டீலை தோற்கடிக்க காங்கிரஸ் கட்சி அவரை போல் முகதோற்றம் கொண்ட ஈஷப்பாவை இறக்கிவிட்டு இருப்பதாக பா.ஜனதாவினர் குற்றம்சாட்டியுள்ளனர். ஒரே தோற்றம் கொண்ட 2 வேட்பாளர்களால் வாக்காளர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

    • வருகிற 3-ந் தேதி மங்களூரு அருகே மூடபித்ரி, கார்வார், பெலகாவி மாவட்டம் கித்தூரில் நடக்கும் பா.ஜனதா பொதுக்கூட்டங்களில் பிரதமர் மோடி பங்கேற்று பேச உள்ளர்.
    • வருகிற 29-ந் தேதி பெங்களூருவில் நடைபெறும் பிரமாண்ட ரோடு ஷோவிலும் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

    பெங்களூரு:

    224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு வருகிற 10-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியானதை தொடர்ந்து அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தீவிர பிரசாரம் செய்து வருகிறார்கள். சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று கர்நாடகத்தில் மீண்டும் ஆட்சி அமைக்க பா.ஜனதா தலைவர்கள் தீவிரம் காட்டி வருகிறார்கள். இதற்காக பா.ஜனதா தலைவர்கள் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் கர்நாடகத்தில் சூறாவளி பிரசாரம் செய்து வருகிறார்கள்.

    இந்த நிலையில், சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று பா.ஜனதா ஆட்சியை பிடித்தே தீர வேண்டும் என்பதால், பிரதமர் மோடி மாநிலத்தில் தொடர் பிரசாரம் மேற்கொள்ள வேண்டும் என்று பசவராஜ் பொம்மை, எடியூரப்பா உள்ளிட்ட தலைவர்கள் வலியுறுத்தினார்கள். இதையடுத்து, சட்டசபை தேர்தலுக்கு முன்பாகவே 7 முறை கர்நாடகத்திற்கு வருகை தந்த பிரதமர் மோடி பல ஆயிரம் கோடி ரூபாய் வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்திருந்தார். இந்த நிலையில், சட்டசபை தேர்தலுக்காக கர்நாடகத்தில் பிரதமர் மோடி 6 நாட்கள் பிரசாரம் செய்ய உள்ளார்.

    குறிப்பாக 16 மாவட்டங்களுக்கு செல்லும் அவர், 23 இடங்களில் பொதுக்கூட்டம் மற்றும் ரோடு ஷோ உள்ளிட்டவற்றில் பங்கேற்று பா.ஜனதாவுக்கு ஆதரவு திரட்ட உள்ளார். இந்த 6 நாட்களும் 3 கட்டங்களாக பிரதமர் மோடி பிரசாரம் செய்ய உள்ளார். முதற்கட்டமாக வருகிற 29-ந் தேதி கர்நாடகத்திற்கு வருகை தரும் பிரதமர் மோடி, அன்றைய தினம் பீதர் மாவட்டம் உம்னாபாத், பெலகாவி மாவட்டம் குடச்சி, விஜயாப்புரா மாவட்டத்தில் நடைபெறும் பா.ஜனதா பொதுக்கூட்டங்களில் பேச உள்ளார்

    மேலும் வருகிற 29-ந் தேதி பெங்களூருவில் நடைபெறும் பிரமாண்ட ரோடு ஷோவிலும் பிரதமர் மோடி பங்கேற்கிறார். அன்றைய தினம் இரவு அவர் பெங்களூருவில் உள்ள கவர்னர் மாளிகையில் தங்கி ஓய்வெடுக்கிறார். பின்னர் வருகிற 30-ந் தேதி கோலார், ராமநகர் மாவட்டம் சென்னப்பட்டணா, ஹாசன் மாவட்டம் பேளூருவில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் பிரதமர் மோடி பேசுகிறார்.

    அன்றைய தினம் மைசூருவில் நடைபெறும் பிரமாண்ட ரோடு ஷோவிலும் அவர் பங்கேற்கிறார். அதைத்தொடர்ந்து, 2-வது கட்டமாக வருகிற 2-ந் தேதி சித்ரதுர்கா மாவட்டம், விஜயநகர் மாவட்டம், ராய்ச்சூர் மாவட்டம் சிந்தனூருவில் பொதுக்கூட்டங்களிலும், கலபுரகியில் ரோடு ஷோவிலும் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

    பின்னர் வருகிற 3-ந் தேதி மங்களூரு அருகே மூடபித்ரி, கார்வார், பெலகாவி மாவட்டம் கித்தூரில் நடக்கும் பா.ஜனதா பொதுக்கூட்டங்களில் பிரதமர் மோடி பங்கேற்று பேச உள்ளர். அதைத்தொடர்ந்து, 3-வது கட்டமாக மே மாதம் 6-ந் தேதி கலபுரகி மாவட்டம் சித்தாபுரா, மைசூரு மாவட்டம் நஞ்சன்கூடு, துமகூரு, பெங்களூரு தெற்கு தொகுதியில் நடக்கும் பொதுக்கூட்டங்களில் பிரதமர் பங்கேற்கிறார். மறுநாள் (7-ந் தேதி) பாகல்கோட்டை மாவட்டம் பாதாமி, ஹாவேரி, சிவமொக்கா மற்றும் பெங்களூருவில் நடக்கும் பொதுக்கூட்டங்களில் பிரதமர் மோடி பங்கேற்று பேசுகிறார்.

    இதற்கிடையில், சட்டசபை தேர்தலையொட்டி மாநிலத்தில் உள்ள 50 லட்சம் பா.ஜனதா தொண்டர்கள், பூத் மட்டத்திலான தலைவர்களுடன் இன்று காலை (வியாழக்கிழமை) ஆன்லைன் மூலமாக பிரதமர் மோடி பேசுகிறார். அதாவது மாநிலத்தில் உள்ள 58 ஆயிரத்து 112 பூத் மட்டத்திலான தொண்டர்கள், 1,680 மாவட்ட பஞ்சாயத்து மட்டத்திலான தலைவர்களுடன் பிரதமர் மோடி பேச உள்ளார்.

    • நாங்கள் யாருக்கும் பணம் கொடுத்து கருத்து கணிப்பு நடத்தவில்லை.
    • தேசிய கட்சிகளுக்கு பண பலம் உள்ளது.

    பெங்களூரு :

    பெங்களூருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குமாரசாமி முன்னிலையில் முன்னாள் மந்திரி ஆல்கோட் ஹனுமந்தப்பா ஜனதா தளம் (எஸ்) கட்சியில் சேர்ந்தார். அதன் பிறகு குமாரசாமி நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    முன்னாள் மந்திரி ஆல்கோட் ஹனுமந்தப்பா மீண்டும் தனது சொந்த வீட்டிற்கு வந்துள்ளார். காங்கிரசில் அவரது சக்தியை பயன்படுத்தி கொள்ளவில்லை. நேற்று வரை அவரது உடல் காங்கிரசிலும், மனது ஜனதா தளம் (எஸ்) கட்சியிலும் இருந்தது. அவர் என்னுடன் தொடர்பில் தான் இருந்தார். காங்கிரஸ் அவருக்கு உரிய மரியாதை வழங்காததால், அவர் மீண்டும் இங்கு வந்துள்ளார். அவருக்கு மாநில அளவில் கட்சியின் செயல் தலைவர் பதவி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    அவரை போல் இன்னும் ஏராளமான காங்கிரஸ் தலைவர்கள் எங்கள் கட்சிக்கு வரவுள்ளனர். துமகூருவில் 11 தொகுதிகளிலும் எங்கள் கட்சி வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. 123 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்துள்ளோம்.

    தேசிய கட்சிகளுக்கு பண பலம் உள்ளது. எங்களுக்கு பண பலம் இல்லை. எங்கள் கட்சியின் வேட்பாளரை இழுக்க மந்திரி சோமண்ணா முயற்சி செய்துள்ளார். இதை நான் கண்டிக்கிறேன். நாங்கள் யாருக்கும் பணம் கொடுத்து கருத்து கணிப்பு நடத்தவில்லை. 150 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெறும் என்று ரத்தத்தில் எழுதி கொடுப்பதாக டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார். பாவம் அவர் ரத்தத்தில் எழுதி கொடுக்க வேண்டாம். அவ்வாறு செய்தால் அவரது உடலில் ரத்தம் குறைந்துவிடும்.

    அதே போல் ஜெகதீஷ் ஷெட்டரை தோற்கடிப்பதாக ரத்தத்தில் எழுதி கொடுப்பதாக எடியூரப்பா சொல்கிறார். யாரும் ரத்தத்தில் எழுதி கொடுக்க வேண்டாம். 150 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று காங்கிரஸ், பா.ஜனதா கட்சிகள் சொல்கின்றன. எந்த ஆதாரத்தின் அடிப்படையில் அவர்கள் இவ்வாறு கூறுகிறார்கள் என்பதை கூற வேண்டும்.

    நான் பஞ்சரத்னா யாத்திரை மூலம் தொகுதிகளில் சுற்றுப்பயணம் செய்தேன். மக்கள் நல்ல வரவேற்பு அளித்தனர். அதனால் மக்களின் ஆதரவு எங்களுக்கு நிச்சயம் கிடைக்கும்.

    இவ்வாறு குமாரசாமி கூறினார்.

    • எடியூரப்பாவுக்கு அழுத்தம் கொடுத்து எனக்கு எதிராக பேச வைத்துள்ளனர்.
    • எடியூரப்பா எனக்கு டிக்கெட் கிடைக்க கடைசி வரை போராடினார்.

    உப்பள்ளி :

    உப்பள்ளி டவுனில் நேற்று உப்பள்ளி-தார்வார் மத்திய தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜெகதீஷ் ஷெட்டர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஒரு லிங்காயத் தலைவரை ஒழிக்க இன்னொரு லிங்காயத் தலைவர் முதுகில் துப்பாக்கி வைத்து மிரட்டும் வேலையை பா.ஜனதா தற்போது செய்து வருகிறது. இவ்வாறு எடியூரப்பாவுக்கு அழுத்தம் கொடுத்து எனக்கு எதிராக பேச வைத்துள்ளனர். பா.ஜனதா சமுதாயத்தில் பிரிவினையை உருவாக்கும் வேலையை செய்து வருகிறது.

    எனக்கு பா.ஜனதாவில் டிக்கெட் கிடைக்காமல் போனதற்கு பி.எல்.சந்தோஷ் தான் காரணம் என்றேன். இதுவரை அவர் இதற்கு மறுப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் வேறொருவர் மூலம் என்னை விமர்சிக்க வைக்கிறார். போர் என்றால் அவர் என்னுடன் நேருக்குநேர் மோத வரட்டும்.

    எடியூரப்பா எனக்கு டிக்கெட் கிடைக்க கடைசி வரை போராடினார். எனக்கு சீட் கொடுக்காவிட்டால் கட்சிக்கு பாதிப்பு வரும் என கூறினார். அவர் மீது எனக்கு எப்போதும் மரியாதை உண்டு. அவர் பற்றி நான் ஒரு போதும் தவறாக பேசவில்லை. இதை எடியூரப்பா புரிந்துகொள்ள வேண்டும். உப்பள்ளியில் 50-60 உறுப்பினர்களை கூட்டி எடியூரப்பா என்னை விமர்சித்துள்ளார். அதை நான் ஆசீர்வாதமாக தான் எடுத்துக்கொள்கிறேன். ஏனெனில் நான் இந்த அளவுக்கு வளர்வதற்கு அவரும் காரணம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பா.ஜனதாவின் கொள்கைகளை மறைக்க ஒன்றும் இல்லை.
    • சாதி, மத அடிப்படையிலான பாகுபாட்டை பா.ஜனதா நம்புவது இல்லை.

    பெங்களூரு :

    கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் நேற்று பெலகாவி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து பா.ஜனதா தேர்தல் பிரசார பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு ஓட்டு சேகரித்தார். காக்வாட் தொகுதியில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

    இந்திய வரலாற்றில் மத ஆதரவுடன் ஆட்சிக்கு வந்த கட்சி என்று ஒன்று இருந்தால் அது காங்கிரஸ். அக்கட்சி இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் பெயரில் அரசியல் செய்கிறது. இத்தகைய குறுகிய மனப்பான்மையுடன் அரசியல் செய்யவே கூடாது. முஸ்லிம் சமுதாயத்தை கவரும் நோக்கத்தில் அவர்களுக்கு மத அடிப்படையில் 4 சதவீத இட ஒதுக்கீட்டை காங்கிரஸ் வழங்கியது.

    பொருளாதாரத்தில் நலிவடைந்த முஸ்லிம், கிறிஸ்தவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கி இருந்தால் அதை நாங்கள் வரவேற்று இருப்போம். ஆனால் இந்திய அரசியல் சாசனம், மத அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை அனுமதிப்பது இல்லை. பா.ஜனதாவின் கொள்கைகளை மறைக்க ஒன்றும் இல்லை. ஒட்டுமொத்த உலகத்திற்கும் எங்கள் கட்சியின் குணம் என்னவென்று தெரியும்.

    சாதி, மத அடிப்படையிலான பாகுபாட்டை பா.ஜனதா நம்புவது இல்லை. நாங்கள் நீதி மற்றும் மனித தன்மையில் நம்பிக்கை கொண்டுள்ளோம். 12-வது நூற்றாண்டின் சமூக சீர்திருத்தவாதி பசவண்ணரின் கொள்கைகளை நாங்கள் பின்பற்றுகிறோம். அந்த கொள்கைகள் அடிப்படையில் தான் பா.ஜனதா செயல்பட்டு வருகிறது. கர்நாடக மக்கள் பா.ஜனதாவுக்கு மூன்றில் 2 பங்கு இடங்களை வழங்கி தனிப்பெரும்பான்மை பலத்தை வழங்க வேண்டும்.

    இவ்வாறு ராஜ்நாத்சிங் பேசினார்.

    • கா்நாடக சட்டசபை தேர்தல் மிக முக்கியமானது.
    • கர்நாடகத்துடன் இந்தியாவை வளர்ச்சியை நோக்கி மோடி அழைத்து செல்கிறார்.

    பெங்களூரு :

    கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் கலபுரயில் நேற்று பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    கா்நாடக சட்டசபை தேர்தல் மிக முக்கியமானது. வருகிற 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற இலக்கு நிர்ணயித்து செயல்பட்டு வருகிறோம். நாங்கள் அனைவரையும் உள்ளக்கிய வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறோம். பிரதமர் மோடி வளர்ச்சி பணிகள் தொடர்பாக மாதந்தோறும் ஆய்வு நடத்துகிறார்.

    மத்திய அரசின் திட்டங்கள் மாவட்டங்களை சென்றடைகிறதா? என்பது குறித்து சம்பந்தப்பட்ட கலெக்டர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்துகிறார். கர்நாடகத்துடன் இந்தியாவை வளர்ச்சியை நோக்கி மோடி அழைத்து செல்கிறார். பா.ஜனதா வெற்றி பெற்றால் சட்டசபை தேர்தலுக்கு பிறகு எம்.எல்.ஏ.க்கள் கூடி புதிய முதல்-மந்திரியை தேர்வு செய்வார்கள். தற்போது உள்ள முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தேர்தலில் போட்டியிட்டுள்ளார். அவரை மீண்டும் முதல்-மந்திரியாக தேர்ந்தெடுப்பது குறித்து இப்போதும் எதுவும் கூற முடியாது.

    இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.

    • கட்சிக்கு துரோகம் செய்தவருக்கு தோல்வி கொடுக்க வேண்டும்.
    • மே 13-ந்தேதியுடன் பா.ஜனதாவுக்கு இறுதிச்சடங்கு நடக்கும்.

    மைசூரு :

    கர்நாடக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல்கட்சி தலைவர்கள் சவால் விடுவதும், குற்றச்சாட்டுகளை கூறும் சம்பவங்களும் நாள்தோறும் அரங்கேறி வருகிறது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் உப்பள்ளியில் நடந்த வீரசைவ-லிங்காயத் சமுதாய தலைவர்கள் கூட்டத்தில் முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா பேசுகையில், சிலர் பா.ஜனதாவில் அனைத்து பதவிகளையும், அதிகாரத்தையும் பெற்றுக்கொண்டு வேறு கட்சிக்கு சென்றுள்ளனர். பா.ஜனதாவுக்கு துரோகம் செய்துவிட்டு சென்ற ஜெகதீஷ் ஷெட்டரை வெற்றி பெற விடக்கூடாது. அவருக்கு நாம் யார் என்று பாடம் புகட்ட வேண்டும். இனி அவரது பெயரை நான் குறிப்பிட மாட்டேன். துரோகி என கூறுவேன். கட்சிக்கு துரோகம் செய்தவருக்கு தோல்வி கொடுக்க வேண்டும். நான் எனது ரத்தத்தில் எழுதி தருகிறேன், கர்நாடகத்தில் இந்த முறை பா.ஜனதா தனி மெஜாரிட்டியுடன் ஆட்சிக்கு வரும் என்று பேசினார்.

    இந்த நிலையில் நேற்று காலை மைசூருவில் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் எடியூரப்பாவின் பேச்சுக்கு பதிலடி கொடுத்து கூறியதாவது:-

    எடியூரப்பா இந்த முறை பா.ஜனதா ஆட்சியை பிடிக்கும் ரத்ததால் எழுதி தருவதாக கூறியுள்ளார். அந்த கட்சி 40 சதவீத கமிஷன் பெற்றுள்ளது. இதனால் 40 சதவீத கமிஷன் போல் 40 இடங்களில் பா.ஜனதா வெற்றி பெறும். கர்நாடகத்தில் இந்த தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என நான் எனது ரத்தத்தில் எழுதி கொடுக்கிறேன்.

    இரட்டை என்ஜின் அரசு இட ஒதுக்கீடு விவகாரத்தில் மோசடி நாடகத்தை அரங்கேற்றியுள்ளது. பா.ஜனதா ஒரு துரோக கட்சி என்பது சுப்ரீம் கோர்ட்டுக்கு தெரியும். தேர்தல் நேரத்தில் இடஒதுக்கீடு விவகாரத்தில் தேன் கூட்டில் கைவைத்து பா.ஜனதாவினர் ஏமாற்றியுள்ளனர்.

    அமித்ஷாவும், நீங்களும் இடஒதுக்கீடு விவகாரத்தில் உறுதியாக இருக்கிறீர்களா? அல்லது பொய் சொல்லி ஏமாற்றுகிறீர்களா?. லிங்காயத்துகளும், ஒக்கலிகர்களும் பிச்சைக்காரர்களா?. அந்த சமுதாயத்தினருக்கு தலா 2 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதாக நீங்கள் நாடகமாடுகிறீர்கள்.

    வருகிற மே 13-ந்தேதியுடன் பா.ஜனதாவுக்கு இறுதிச்சடங்கு நடக்கும். அனைவருக்கும் சம பங்கீடு கொடுப்போம். இதையே நாங்கள் செய்வோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தேர்தல் விதிமீறல் தொடர்பாக 673 வழக்குகள் பதிவாகி உள்ளது.
    • புதியதாக 16 லட்சம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

    பெங்களூரு :

    கர்நாடக சட்டசபைக்கு வருகிற 10-ந் தேதி தேர்தல் நடக்கிறது.

    224 தொகுதிகளுக்கு 2 ஆயிரத்து 615 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இந்த தேர்தலுக்கு இன்னும் 13 நாட்கள் மட்டுமே உள்ளன.

    இதனால் அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரம் தீவிரம் அடைந்துள்ளது. பண பட்டுவாடாவை தடுக்க தேர்தல் ஆணையம் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. வாகன சோதனையும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் சட்டசபை தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து கர்நாடக மாநில தலைமை தேர்தல் அதிகாரி மனோஜ்குமார் மீனா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    கர்நாடக சட்டசபைக்கு வருகிற 10-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான தேர்தல் கால அட்டவணை கடந்த மார்ச் மாதம் 29-ந் தேதி வெளியிடப்பட்டது. அன்றைய தினம் முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. அன்று முதல் பறக்கும் படைகள், தற்காலிக சோதனை சாவடிகளை அமைத்து வாகன சோதனை நடத்தி வருகிறோம்.

    இந்த சோதனையில் இதுவரை ரூ.88 கோடியே 3 லட்சத்து 2 ஆயிரத்து 632 ரொக்கம், ரூ.20 கோடியே 62 லட்சத்து 10 ஆயிரத்து 64 மதிப்புள்ள பரிசு பொருட்கள், ரூ.59 கோடியே 92 லட்சத்து 49 ஆயிரத்து 246 மதிப்புள்ள மதுபானம், ரூ.17 கோடியே 14 லட்சத்து 78 ஆயிரத்து 171 மதிப்புள்ள போதைப்பொருள், ரூ.75 கோடியே 15 லட்சத்து 3 ஆயிரத்து 492 மதிப்புள்ள தங்க நகைகள், ரூ.4 கோடியே 32 லட்சத்து 61 ஆயிரத்து 97 மதிப்புள்ள வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ள ரொக்கம் மற்றும் இதர பொருட்களின் மதிப்பு ரூ.265 கோடியே 20 லட்சத்து 4 ஆயிரத்து 702 ஆகும்.

    தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக 673 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது மட்டுமின்றி ரொக்கம், பரிசு பொருட்கள், மதுபானங்கள் பறிமுதல் தொடர்பாக 2 ஆயிரத்து 36 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பல்லாரி நகர், ஒசக்கோட்டை, சித்ரதுர்கா, எலகங்கா ஆகிய தொகுதிகளில் அதிக வேட்பாளர்களும், யமகனமரடி, தேவதுர்கா, தீர்த்தஹள்ளி, குந்தாப்புரா, காபு, மங்களூரு, பண்ட்வால் ஆகிய தொகுதிகளில் குறைந்த அளவில் வேட்பாளர்களும் போட்டியில் உள்ளனர்.

    சட்டசபை தேர்தலையொட்டி இறுதி வேட்பாளர் பட்டியல் கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்டது. அதன் பிறகு கடந்த 20-ந் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அனுமதி அளிக்கப்பட்டது. இதில் புதிதாக 16 லட்சத்து 4 ஆயிரத்து 285 பேரின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

    இதன் மூலம் மாநிலத்தில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 5 கோடியே 31 லட்சத்து 33 ஆயிரத்து 54 ஆக அதிகரித்துள்ளது. இதில் ஆண் வாக்காளர்கள் 2 கோடியே 67 லட்சத்து 28 ஆயிரத்து 53 பேரும், பெண் வாக்காளர்கள் 2 கோடியே 64 லட்சத்து 74 பேரும், பிற வாக்காளர்கள் 4 ஆயிரத்து 927 பேரும் உள்ளனர்.

    இவற்றில் இளம் வாக்காளர்களின் எண்ணிக்கை 11 லட்சத்து 71 ஆயிரத்து 558 ஆக உள்ளது. 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் 12 லட்சத்து 15 ஆயிரத்து 920 பேரும், வெளிநாட்டு வாழ் கர்நாடக வாக்காளர்கள் 3 ஆயிரத்து 48 பேரும் உள்ளனர். தேர்தல் பணியில் ஈடுபட மொத்தம் 3 லட்சத்து 59 ஆயிரத்து 253 அலுவலர்கள் தயாராக உள்ளனர். ஆனால் தேர்தல் பணிக்கு தேவைப்படும் அலுவலர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 79 ஆயிரத்து 752 ஆகும்.

    தேர்தல் பணியை மேற்கொள்ள அலுவலர்கள், தேவையை விட அதிகமாக உள்ளனர். அதே போல் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும் தேவையை விட அதிகமாக தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.

    இவ்வாறு மனோஜ்குமார் மீனா கூறினார்.

    பேட்டியின்போது கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரிகள் ராஜேந்திர சோழன், வெங்கடேஷ்குமார் உடன் இருந்தனர்.

    • எங்கள் குடும்பம் பிரச்சினைகளில் சிக்கி தடுமாறுகிறது.
    • நாங்கள் உண்மைக்காகவும், மக்களின் நலனுக்காகவும் போராடுகிறோம்.

    பெங்களூரு :

    கர்நாடக மாநிலம் சிக்கமகளூருவில் நடந்த தேர்தல் கூட்டத்தில் பிரியங்கா காந்தி பேசும்போது கூறியதாவது:-

    சிக்கமகளூரு மாவட்டம் எனது பாட்டி இந்திரா காந்திக்கு மறுவாழ்வு அளித்த இடமாகும். ரம்பாபுரி மற்றும் சாரதம்மன் கோவில்களுக்கு எனது தந்தை ராஜீவ்காந்தி வந்து சென்றுள்ளார். எனது சகோதரர் ராகுல்காந்தியும் இங்கு வந்து சென்றிருக்கிறார். எனது பாட்டிக்கு மறுவாழ்வு கொடுத்த இந்த மண்ணில் என்னுடைய அண்ணன் ராகுல்காந்திக்கும் நல்லது நடக்க வேண்டும். இந்த வேண்டுதலை நான் கடவுளிடம் கேட்டிருக்கிறேன்.

    கர்நாடகாவில் பா.ஜனதா அரசு இதுவரை பொதுமக்களுக்கு ஒரு நலத்திட்டத்தையும் செய்யவில்லை. அதுபோல் மத்திய அரசு 2 கோடி இளைஞர்களுக்கு வேலை தருவதாக கூறி எந்தவொரு வேலைவாய்ப்பையும் வழங்கவில்லை.

    ஒரு காலத்தில் எனது பாட்டி இந்திரா காந்தியையும் மத்திய அரசு இதுபோல் பாராளுமன்றத்தை விட்டு துரத்தியது. அவரது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ரத்து செய்தது. எனது அண்ணனுக்கும் அதே நிலை ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவர் மீதும் ஒரே மாதிரியான பொய் வழக்கு தொடரப்பட்டு இருக்கிறது. தற்போது எங்கள் குடும்பம் பிரச்சினைகளில் சிக்கி தடுமாறுகிறது. எங்கள் குடும்பம் மட்டுமல்ல உங்கள்(மக்கள்) குடும்பமும் தான். இந்த பிரச்சினைகளில் இருந்து மீண்டும் எனது அண்ணனும், நீங்களும்(மக்கள்) வெற்றி காண வேண்டும் என்றால் அது உங்கள் கையில் தான் உள்ளது. நாங்கள் கடவுள் ஆசியுடன் உண்மைக்காகவும், மக்களின் நலனுக்காகவும் போராடுகிறோம்.

    1978-ம் ஆண்டு எனது பாட்டி இந்திரா காந்தியும், எங்கள் குடும்பமும் பிரச்சினைகளில் சிக்கி தடுமாறியது. அப்போது அவருடன் சிக்கமகளூரு மக்கள் துணை நின்றனர். அவசர சட்ட காலத்துக்கு பிறகு நடந்த தேர்தலில் எனது பாட்டி இந்திரா காந்தி தோற்கடிக்கப்பட்டார். அதையடுத்து தான் அவர் சிக்கமகளூரு பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு 77 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி அடைந்தார். அதற்காக இந்த தருணத்தில் எங்கள் குடும்பத்தின் 3 தலைமுறையினர் சார்பில் முழுமனதுடன் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

    பொய் வழக்கை முறியடித்து எனது பாட்டி இந்திரா காந்தி மீண்டும் பாராளுமன்றத்துக்கு சென்றதுபோல் எனது அண்ணன் ராகுல் காந்திக்கும் நீங்கள் வாய்ப்பளிக்க வேண்டும். ராகுல் காந்தியும், எங்களது மொத்த குடும்பமும் இந்நாட்டு மக்கள் எங்கள் பின்னால் நிற்பார்கள் என்று முழு நம்பிக்கையுடன் இருக்கிறோம். கர்நாடக தேர்தல் உண்மைக்காக நடைபெறும் போர் ஆகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கர்நாடக தேர்தல் பிரசாரத்தின்போது பிரியங்கா காந்தி ஓட்டலில் தோசை சுட்டார்.
    • அப்போது பிரியங்கா காந்தி, அதன் செய்முறையை கற்றுக்கொண்டேன் என கூறியுள்ளார்.

    பெங்களூரு:

    கர்நாடக சட்டசபைக்கு மே 10-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் வெற்றி பெறுவதற்காக ஆளும் பா.ஜ.க., காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாதளம் ஆகிய கட்சிகள் இடையே கடுமையான போட்டி காணப்படுகிறது. கட்சிகள் தங்களது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு, தீவிர பிரசார பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

    இதற்கிடையே, காங்கிரஸ் கட்சியின் உத்தர பிரதேச கிழக்கு பகுதி பொதுச் செயலாளரான பிரியங்கா காந்தி தேர்தலை முன்னிட்டு பிரசாரத்தில் கலந்து கொள்ள கர்நாடகாவுக்கு வந்துள்ளார்.

    அவருடன் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் கர்நாடக பொது செயலாளர் பொறுப்பு வகிக்கும் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா மற்றும் கர்நாடக பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர் டி.கே. சிவக்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    இந்நிலையில், சுற்றுப்பயணத்தின்போது மைசூருவில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் பிரியங்கா காந்தி காலை உணவு சாப்பிட்டார். அப்போது இட்லி மற்றும் தோசை ஆர்டர் செய்து வாங்கினார். அது நன்றாக இருந்தது எனக்கூறிய அவர், தோசை சுடுவது எப்படி என்று கற்றுக் கொண்டேன் என்றும் வெளியே காத்திருந்த நிருபர்களிடம் கூறியுள்ளார்.

    ஓட்டலின் சமையலறை பகுதிக்குச் சென்ற பிரியங்கா காந்தி, அவரே விரும்பி தோசையை கல்லில் வார்த்து, தோசை சுடும் முறையை கற்றுக்கொண்டார்.

    • கர்நாடக சட்ட சபைக்கு வருகிற 10-ந் தேதி பொதுத்தேர்தல் நடக்கிறது.
    • தேர்தல் வேளையில் அரசியல் கட்சியினர், வேட்பாளர்கள் ஜாதகம் பார்த்து வெற்றி தோல்வியை கணிப்பது வழக்கம்.

    கர்நாடக சட்ட சபைக்கு வருகிற 10-ந் தேதி பொதுத்தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 13-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை நடந்தது. நேற்று முன்தினம் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியான நிலையில், தற்போது வேட்பாளர்கள் அனைவரும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    தேர்தல் வந்துவிட்டாலே கருத்து கணிப்புகளும் வர தொடங்கி விடும். அடுத்த முதல்-மந்திரி யார்? ஆட்சியை பிடிப்பது எந்த கட்சி என்ற கருத்து கணிப்புகள் கர்நாடகாவிலும் வர தொடங்கி உள்ளன. தேர்தல் வேளையில் அரசியல் கட்சியினர், வேட்பாளர்கள் ஜாதகம் பார்த்து வெற்றி தோல்வியை கணிப்பது வழக்கம்.

    அந்த வழக்கப்படி கர்நாடகாவிலும் வேட்பாளர்கள் சிலர் ஜோதிடர்களை பார்த்து கணித்த பின்பே வேட்பு மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர்.

    பொதுவாக மனிதர்களான ஜோதிடர்களிடமிருந்து வரும் கணிப்புகளை நாம் அடிக்கடி பார்த்திருப்போம். ஆனால் மாண்டியாவில் ஒரு நாய் எதிர்காலத்தை சொல்கிறது, அது இதுவரை கூறிய கணிப்புகள் பொய்யல்ல என்கிறார்கள் அங்குள்ள மக்கள்.

    இந்த நாயை மாண்டியாவை சேர்ந்த கோபி என்பவர் வளர்த்து வருகிறார். பைரவர் பெயரையே இந்த நாய்க்கு சூட்டியுள்ளனர். கோபியின் குடும்பத்தினர் ஒவ்வொரு திங்கட்கிழமையும் காலபைரவரை வழிபட்டு வருகின்றனர்.

    கடந்த 2 ஆண்டுகளாக இந்த பைரவா நாயின் கணிப்புகள் உண்மையாகி வருவதாக நம்பிக்கை நிலவுகிறது. இந்த நிலையில் கோபி அடுத்த கர்நாடக முதல்-மந்திரி யார் என்று பைரவா மூலம் கணிக்க திட்டமிட்டார். இதற்காக சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பைரவா நாய்க்கு வழிபாடு நடத்தப்பட்டது. பின்பு தற்போதைய முதல்-மந்திரி பசவராஜ பொம்மை, முன்னாள் முதல்-மந்திரி எச்.டி. குமாரசாமி மற்றும் டி.கே.சிவகுமார் ஆகியோரின் புகைப்படங்களை பைரவா முன்பு வைத்தார்.

    பிறகு, கோபி பைரவரிடம் இந்த முறை யார் முதல்வர் என்று கேட்கிறார். இதில் எச்.டி.குமாரசாமியின் புகைப்படத்தை நாய் வாயில் கவ்வி எடுத்தது. இதுகுறித்து நாயின் உரிமையாளர் கோபி கூறியதாவது:-

    இந்த பைரவா நாய்க்கு சிறப்பு சக்தி உள்ளது. பைரவா சொன்ன அறிவுரைகள் நிறைவேறும் என்பது அவர்களின் நம்பிக்கை.

    சில மாதங்களுக்கு முன்பு எனது தாயார் இதயம் தொடர்பான நோயால் பாதிக்கப்பட்டு ஜெயதேவா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் தாயின் உயிர் குறித்து மருத்துவர்கள் எந்த உறுதிமொழியும் அளிக்கவில்லை. வீட்டில் நாய் சாப்பிடாமல் கலங்கியது. கடைசியாக ஒரு நாள் காரில் ஜெயதேவா மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன். மருத்துவமனையில் நாய்கள் அனுமதிக்கப்படாததால், சக்கர நாற்காலியில் என் தாயை மருத்துவமனைக்கு வெளியே அழைத்துச் சென்றேன். அப்போது அந்த நாய் அம்மாவை மூன்று முறை நக்கி முத்தமிட்டது. அதன் பிறகு எங்கள் அம்மாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

    வீட்டில் பூஜை செய்யும் போதும், பூஜை அறையில் பைரவா இரண்டு கால்களையும் நீட்டி அமர்ந்திருக்கும். கடந்த இரண்டு ஆண்டுகளாக பைரவா கணிப்பு உண்மையாகி வருவதாக கூறப்படுகிறது, எனவே இந்த சட்டசபை தேர்தலில் பைரவரின் கணிப்பு நிறைவேறுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

    • கர்நாடக சட்டசபை தேர்தலில் வேட்பாளர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
    • மலவள்ளி தொகுதியில் ஜனதா தளம்(எஸ்) கட்சி சார்பில் தற்போதைய எம்.எல்.ஏ. அன்னதாணி போட்டியிடுகிறார்.

    பெங்களூரு:

    கர்நாடக சட்டசபை தேர்தலில் வேட்பாளர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மண்டியா மாவட்டம் மலவள்ளி தொகுதியில் ஜனதா தளம்(எஸ்) கட்சி சார்பில் தற்போதைய எம்.எல்.ஏ. அன்னதாணி போட்டியிடுகிறார். நேற்று அவர் ஹலகூர் அருகே உள்ள மலவள்ளி தொகுதிக்கு உட்பட்ட பாலேஹொன்னி கிராமத்தில் பிரசாரம் மேற்கொண்டார்.

    முன்னதாக அவர் அங்குள்ள பசவேஸ்வரா கோவிலில் 101 தேங்காய்களை உடைத்து சிறப்பு பூஜைகள் செய்து சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் பிரசாரம் மேற்கொண்டபோது அவருக்கு கிராம மக்களும், ஜனதா தளம்(எஸ்) கட்சி தொண்டர்களும் சேர்ந்து பாலாபிஷேகம் செய்தனர். மேலும் அவருக்கு 108 தேங்காய்களை சுற்றி உடைத்து பூரண கும்ப மரியாதை வழங்கினர்.

    இதைப்பார்த்த கிராம மக்கள் பலரும் வியந்தனர். பின்னர் அவர்கள் இதை செல்போனில் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். தற்போது அவை சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    ×