என் மலர்tooltip icon

    உத்தரப் பிரதேசம்

    • குடிமகன்கள் 2 கோஷ்டிகளாக சண்டை போட்ட வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
    • வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள கார்டன்ஸ் கேலரியா மாலில் மது பார் ஒன்று உள்ளது. அங்கு குடிமகன்கள் 2 கோஷ்டிகளாக சண்டை போட்ட வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    அந்த வீடியோவில், மது போதையில் குடிமகன்கள் ஒருவரையொருவர் தள்ளுவது, தாக்குவது, அடித்து உதைப்பது போன்ற காட்சிகளும், மதுபாட்டில்களை ஒருவர் மீது ஒருவர் வீசி சண்டைபோடும் காட்சிகளும் உள்ளன.

    பார் ஊழியர்கள் உள்பட பலரும் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்த முயன்றும் அந்த கோஷ்டியினர் அதனை கண்டுகொள்ளாமல் சண்டைபோடுவதை வீடியோவில் காண முடிகிறது.

    இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 2011-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
    • மாறாக புதிதாக ஏதாவது செய்ய வேண்டும் என கருதிய இர்பான் சினிமா பாணியில் பூமிக்கு அடியில் பாதாள வீட்டை கட்ட முடிவு செய்துள்ளார்.

    உத்தரபிரதேச மாநிலம் ஹர்தோய் பகுதியை சேர்ந்தவர் இர்பான். விவசாயியான இவர் கடந்த 2010-ம் ஆண்டு வரை குடும்பத்துடன் வாழ்ந்து வந்தார். இந்நிலையில் அவரது தந்தை மரணத்திற்கு பிறகு அவரது வாழ்க்கையில் திருப்பம் ஏற்பட்டது.

    2011-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்ட இவர் தோல்வி அடைந்தார். ஆனாலும் இவர் மனமுடைந்து போகவில்லை. மாறாக புதிதாக ஏதாவது செய்ய வேண்டும் என கருதிய இவர் சினிமா பாணியில் பூமிக்கு அடியில் பாதாள வீட்டை கட்ட முடிவு செய்துள்ளார். அதன்படி தரிசாக கிடந்த நிலத்தில் பூமிக்கு அடியில் தனிநபராக கடந்த 11 ஆண்டுகளாக வீடு கட்டும் பணியில் ஈடுபட்ட இவர் ஒரு மசூதி, 11 அறைகள், படிக்கட்டுகள் மற்றும் கேலரி, ஒரு சித்திர அறையுடன் கூடிய பிரமாண்ட மாளிகையை கட்டியுள்ளார்.

    இதன் சுவர்களில் பண்டைய கால வேலைபாடுகளையும் செதுக்கியுள்ளார். அவர் தனது வாழ்க்கையில் பெரும் பகுதியை இந்த மாளிகையிலேயே கழித்து வந்துள்ளார். இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

    • பயணிகள் வேண்டுகோள் விடுத்ததால் இரண்டு நிமிடம் பேருந்து நிறுத்தம்
    • ஒப்பந்த ஊழியராக செயல்பட்டவருக்கு வேலை கிடைக்கவில்லை என்ற விரக்தி

    உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் மோஹித் யாதவ். இவர் அம்மாநில போக்குவரத்து கழகத்தில் ஒப்பந்த கண்டக்டராக வேலைபார்த்து வந்துள்ளார். கடந்த ஜூன் மாதம் பெரேலியில் இருந்து டெல்லி ஜன்ராத் சென்ற பேருந்தில் கண்டக்டர் பணியில் இருந்துள்ளார்.

    அப்போது தொழுகைக்காக தேசிய நெடுஞ்சாலையில் பேருந்தை நிறுத்தியதாக தெரிகிறது. சில பயணிகள் தொழுகை நடத்துவதற்காக பேருந்தை நிறுத்த கேட்டுக்கொண்டுள்ளனர். இதனால் டிரைவர் மற்றும் கண்டக்டர் ஆகியோர் பேருந்தை நிறுத்தியுள்ளனர். இதனால் நிர்வாகம் வேலையில் இருந்து நீக்கியுள்ளது.

    மோஹித் யாதவ்தான் அவரது வீட்டிற்கு மூத்த பிள்ளை. அவருடைய 17 ஆயிரம் சம்பளத்தில்தான் குடும்பம் வாழ்ந்து வந்துள்ளது.

    கண்டக்டர் வேலையில் இருந்து நீக்கியதும் பல இடங்களில் வேலை தேடி அழைந்துள்ளார். ஆனால் எங்கும் வேலை கிடைக்கவில்லை. மேலும், மண்டல மானேஜரிடம் நிலைமை குறித்து விளக்கம் அளிக்க முயற்சி செய்துள்ளார். அதற்கும் பலன் கிடைக்கவில்லை. இதனால் மனமுடைந்த அவர், கடந்த திங்கட்கிழமை ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதனால் அவரது குடும்பர் செய்வதறியாமல் உள்ளது.

    மோஹித் யாதவின் மனைவி ரிங்கி யாதவ் ''உத்தர பிரதேச போக்குவரத்து துறை எனது கணவரின் கோரிக்கையை கேட்காத வண்ணம் செவிடாகிவிட்டது. பெரேலி மண்டல மானேஜரை தொடர்ந்து அழைத்து வந்தார். ஆனால், எனது கணவர் தரப்பு வாதங்களை அவர் கேட்கவில்லை'' என்றார்.

    பேருந்தை மோஹித் யாதவ் நிறுத்துவதற்கு முன், அவர் பேசிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் ''நாங்களும் இந்துக்கள்... இந்து, முஸ்லிம் இடையே எந்த பிரச்சனையும் இல்லை. இரண்டு நிமிடங்கள் பேருந்தை நிறுத்தினால், என்ன நடக்கும்'' என்பதுபோல் அந்த வீடியோ விவரிக்கிறது.

    • கற்களை செதுக்கி அறைகளை உருவாக்கியுள்ளார்
    • பண்டை காலத்து பதுங்கு குழி போன்று உள்ளது

    வீடு கட்டுவது எளிதானது அல்ல. அதுவும் தனக்கு பிடித்தமான வீட்டை உருவாக்குவது மிகவும் கடினம். எவ்வளவு பணம் செலவழித்தாலும், சில நேரங்களில் மனதிற்கு ஏற்றவாறு அமைவது கடினம்.

    ஆனால், உத்தர பிரதேச மாநிலத்தில் ஒரு நபர் 12 வருடங்களாக பூமிக்கடியில் 11 அறைகளுடன் இரண்டு மாடி வீட்டை கட்டியுள்ளார்.

    இது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது. வீடியோவை பார்க்கும் போது, செயற்கையாக உருவாக்கப்பட்ட செங்கல் உள்ளிட்ட கட்டுமான பொருட்களை கொண்டு கட்டியதாக தெரியவில்லை.

    முழுவதும் பாறையிலான பகுதியை கொஞ்சம் கொஞ்சமாக செதுக்கி, அழகாக வடிவமைத்துள்ளார். அந்த நபரின் வீட்டை பார்க்கும் போது, மன்னர்கள் பயன்படுத்திய ரகசிய அறைகள் போன்று உள்ளது.

    • அக்கம் பக்கத்தில் உள்ளவர்களும் பிரார்த்தனையில் கலந்துகொண்டனர்.
    • ஒரு கணம், நான் உயிர் பிழைக்க மாட்டேன் என்று நினைத்தேன்.

    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலம் தஹரா கிராமம் மஹோபா பகுதியைச் சேர்ந்தவர் மித்லேஷ் யாதவ் எனும் பெண்மணி. அவரது கணவர் வெளியூரில் கூலி வேலை பார்த்து வரும் நிலையில் மித்லேஷ் தனது இரண்டு குழந்தைகளுடன் அங்குள்ள தனது தாய் வீட்டில் வசித்து வந்தார்.

    நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் தூங்க சென்ற அவர் தனி அறையில் படுத்திருந்தார். நேற்று காலை கண் விழித்தார். அப்போது அவரது காலில் அதிக விஷத்தன்மை கொண்ட உலகிலேயே மிக நீளமான ராஜ நாகப்பாம்பு அவரது காலை சுற்றியிருந்தது.

    இதனை சற்றும் எதிர்பாராத அவர் அதிர்ச்சியில் உறைந்தார். சத்தம் போட்டால் ராஜநாகம் தன்னை தீண்டி விடுமோ என்ற அச்சத்தில் மவுனமாக யோசித்தார். ஆனால் அப்போது வரை அந்த ராஜநாகம் அவரை எதுவும் செய்யாமல் காலை சுற்றி சுருண்ட நிலையிலேயே இருந்தது.

    கடவுள் நம்பிக்கை அதிகம் கொண்ட மித்லேஷ் யாதவ், இந்த பாம்பு தன் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தாமல் தானாகவே சென்றுவிட வேண்டும் என்று இறைவனிடம் மனமுருகி வேண்டி பிரார்த்தனை செய்தார். இதற்காக அவர் தொடர்ந்து 3 மணி நேரம் கண்களை மூடி வேண்டியபடியே இருந்தார்.

    இதற்கிடையே நீண்ட நேரம் ஆகியும் மகள் எழுந்து வராததால் அவரது தாய் அவரை தேடி வந்தார். அப்போது மகளின் காலை பாம்பு சுற்றியிருந்ததும், மகள் பிரார்த்தனையில் ஈடுபட்டிருப்பதையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    பின்னர் அவர் அருகில் இருந்தவர்களிடம் தகவல் கொடுத்தார். இதையடுத்து அங்கு போலீசார் மற்றும் வனத்துறையினர் வரவழைக்கப்பட்டனர். மேலும் பாம்பு பிடிக்கும் நிபுணருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.

    போலீசார், வனத்துறையினர் மற்றும் பொதுமக்கள் மித்லேஷ் யாதவுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் ராஜநாகத்தை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அதற்குள் மித்லேஷ் யாதவின் காலை சுற்றியிருந்த ராஜநாகம் தானாகவே தனது பிடியை தளர்த்தியது.

    இது அங்கிருந்தவர்களை பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. பின்னர் அந்த பாம்பு அங்கிருந்து மெதுவாக யாருக்கும் அச்சத்தை ஏற்படுத்தாமல் ஒரு புதருக்குள் சென்று மறைந்தது. உடனே மித்லேஷ் மற்றும் அங்கிருந்தவர்கள் கடவுளுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டனர்.

    இதுகுறித்து மித்லேஷ் யாதவ் கூறியதாவது:-

    நான் எனது இரண்டு குழந்தைகளுடன் தூங்கிக் கொண்டிருந்தேன். நான் விழித்தபோது, என் காலில் பாம்பு சுற்றியிருந்தது. என்னிடம் வந்த என் தாயிடம் குழந்தைகளை அழைத்துச் செல்லும்படி கேட்டுக் கொண்டேன். அது வெளியேறும் வரை பல மணி நேரம் காத்திருந்தேன்.

    சுமார் 3 மணி நேரமாக பாம்புகளை தன்னுடைய தலையைில் சுமந்திருக்கும் இந்து கடவுளான சிவபெருமானிடம் பிரார்த்தனை செய்தேன். எல்லா நேரமும் நான் போலேநாத்திடம் (சிவபெருமான்) பிரார்த்தனை செய்து கொண்டிருந்தேன். அவர் எனக்கு பல்வேறு கட்டங்களில் அருள் புரிந்ததை போன்று என்னை விட்டு அந்த பாம்பு வெளியேறும்படி கேட்டுக் கொண்டேன்.

    ஒரு கணம், நான் உயிர் பிழைக்க மாட்டேன் என்று நினைத்தேன். என் குழந்தைகளைப் பற்றியும், நான் இறந்தால் அவர்களை யார் கவனிப்பார்கள் என்றும் நினைத்தேன். தொடர்ந்து 3 மணி நேரமாக பிரார்த்தனை செய்து கொண்டிருந்தேன். எனது நலனுக்காக எனது குடும்பத்தினரும் பிரார்த்தனை செய்யத் தொடங்கினர். அக்கம் பக்கத்தில் உள்ளவர்களும் பிரார்த்தனையில் கலந்துகொண்டனர்.

    இவ்வாறு அவர் பிரமிப்புடன் கூறினார்.

    பாம்பு பிடிக்கும் நிபுணர் வருவதற்குள் அந்த ராஜநாக பாம்பு யாருக்கும் தீங்கு விளைவிக்காமல் வீட்டிற்கு வெளியே சென்றதால் மித்லேஷ் யாதவ் மற்றும் அவரது குடும்பத்தினரும் நிம்மதி அடைந்தனர். இந்த சம்பவம் உத்தரப்பிரதேச மாநிலம் முழுவதும் பேசுபொருளாக மாறியுள்ளது.

    • பள்ளியில் ஆசிரியை ஒருவர் இஸ்லாமிய மாணவரை வேகமாக அடிக்குமாறு கூறுவது போன்ற அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    • வீடியோவில் உள்ள ஆசிரியையின் பெயர் திரிப்தா தியாகி என்று தெரியவந்துள்ளது.

    புதுடெல்லி:

    உத்தரபிரதேச மாநிலம் முசாபர் நகர் பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர்.

    இந்த பள்ளியில் ஆசிரியை ஒருவர் இஸ்லாமிய மாணவரை வேகமாக அடிக்குமாறு கூறுவது போன்ற அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    அதில், ஒரு மாணவர் நின்று கொண்டிருந்த இஸ்லாமிய மாணவரின் கன்னத்தில் அடித்து விட்டு செல்கிறார். அப்போது மேலும் 2 மாணவர்கள் அவரது கன்னத்தில் பின்புறத்தில் பளார் என அடிக்கின்றனர்.

    ஏன் இவ்வளவு மெதுவாக அடிக்கிறீர்கள்? வேகமாக அடியுங்கள் என ஆசிரியை சொல்வது போன்று வீடியோவில் காட்சி இடம்பெற்றுள்ளது. இந்த வீடியோ வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் இது தொடர்பாக கல்வி அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வீடியோவில் உள்ள ஆசிரியையின் பெயர் திரிப்தா தியாகி என்று தெரியவந்துள்ளது. அவர் நடந்த சம்பவத்திற்காக போலீசார் முன்பு மன்னிப்பு கேட்டுள்ளார்.

    இதற்கிடையே இந்த வீடியோ தொடர்பாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி டுவிட்டரில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில், அப்பாவி குழந்தைகளின் மனதில் பாகுபாடு என்ற விஷத்தை விதைத்து பள்ளி போன்ற புனித இடத்தை நெருப்பின் சந்தையாக மாற்றுவது மோசமான செயல்.

    இதை விட மோசமாக ஒரு ஆசிரியரால் நாட்டுக்கு எதுவும் செய்ய முடியாது. குழந்தைகள் இந்தியாவின் எதிர்காலம். அவர்களை வெறுக்காதீர்கள். நாம் அனைவரும் அன்பை கற்பிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

    • தாரா சிங் ஜிந்தாபாத் என கூறியவாறே இன்க்கை தெளித்து விட்டு ஓடி விட்டார்
    • இரு கட்சிகளும் பரஸ்பரம் குற்றம் சாட்டி வருகின்றனர்

    உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள மவு மாவட்டத்தின் கோசி சட்டமன்ற தொகுதிக்கு செப்டம்பர் 5-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது.

    இதற்காக இரு தினங்களுக்கு முன்பு பா.ஜ.க.வின் வேட்பாளர் தாரா சிங் சவுகன் அங்குள்ள அடாரி பகுதியில் தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்திருந்தார்.

    அப்போது அங்கு வரவேற்பளிக்க காத்திருந்த பா.ஜ.க. பிரமுகர்கள் மற்றும் தொண்டர்களுக்கு இடையே இருந்த ஒருவர் "தாரா சிங் ஜிந்தாபாத்" என உரத்த குரலில் கூறியவாறே தாரா சிங்கை நெருங்கி வந்து அவர் மீது இன்க்-ஐ ஊற்றி விட்டு அங்கிருந்து ஓடி விட்டார்.

    "இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் புகழும், உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் நற்பெயரும் சமாஜ்வாதி கட்சியின் தலைமைக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. அதனால் அவர்கள் இது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்," என தாரா சிங் கூறினார்.

    இச்சம்பவத்தில் ஈடுபட்ட நபரை காவல்துறை தேடி வந்தது.

    இந்நிலையில் இக்குற்றத்தை செய்ததாக அபிமன்யு யாதவ் என்பவர் கோசி காவலதுறையிடம் தானாக சரணடைந்துள்ளார். ஆனால், தாக்குதல் நடத்திய காரணம் குறித்து அபிமன்யு அதிர்ச்சியளிக்கும் விதமாக கருத்து கூறியுள்ளார்.

    "இடைத்தேர்தல் மிகவும் முக்கியமான நிலையில் இருக்கிறது என்பதால் இதை செய்ய சொல்லி பா.ஜ.க.வின் கமிட்டி உறுப்பினர் பிரின்ஸ் யாதவ் கேட்டு கொண்டார். அதனால் இச்செயலை நான் செய்தேன். என்னை காப்பாற்றுவதாகவும் அவர் உறுதியளித்தார்," என்று கூறியிருப்பதாக தெரிகிறது.

    இவர் சரணடைந்துள்ளதை உறுதி செய்துள்ள நகர காவல்துறை அதிகாரி தனஞ்சய் மிஸ்ரா, அபிமன்யு மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

    இந்த சம்பவம் முதலில் சமாஜ்வாதி கட்சியினரால் தூண்டப்பட்டு நடைபெற்றதாக நம்பப்பட்டது. பிறகு பா.ஜ.க.-வினரே செய்ய சொன்னார்கள் என்று இப்போது தகவல் வெளியாகியிருக்கிறது.

    • காருக்கு அடியில் சிக்கிய மோட்டார் சைக்கிளை தர தரவென்று சுமார் 30 கிலோ மீட்டர் தூரம் வரை இழுத்து சென்றுள்ளது.
    • வீடியோ வைரலாக பரவியதை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    உத்தரபிரதேச மாநிலம் அசம்கர் மாவட்டத்தில் உள்ள ஷியாம்பூர் நகரில் இரவு நேரத்தில் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு கார் எதிர்பாராத விதமாக அவரது மோட்டார் சைக்கிளின் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது.

    அப்போது விபத்தில் சிக்கியவரின் மோட்டார் சைக்கிள், விபத்தை ஏற்படுத்திய காருக்கு அடியில் சிக்கி கொண்டது. ஆனால் இதை கார் டிரைவர் கவனிக்கவில்லை என கூறப்படுகிறது. அவர் காரை நிறுத்தாமல் தொடர்ந்து ஓட்டி அங்கிருந்து தப்பியுள்ளார். இந்த விபத்தை பார்த்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிலர் காரை துரத்தி உள்ளனர்.

    அப்போது காருக்கு அடியில் சிக்கிய மோட்டார் சைக்கிளை தர தரவென்று சுமார் 30 கிலோ மீட்டர் தூரம் வரை இழுத்து சென்றுள்ளது. மேலும் கார் சென்ற பாதைகளில் நெருப்பு பொறியுடன் மோட்டார் சைக்கிளை இழுத்து சென்ற வீடியோக்கள் தற்போது சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.

    இதற்கிடையே சுமார் 30 கிலோ மீட்டர் தூரம் காரை ஓட்டி சென்ற டிரைவர் ஒரு கட்டத்தில் காரை நிறுத்தி விட்டு அங்கிருந்து தப்பியோடி உள்ளார். அவரை துரத்தி வந்தவர்கள் அந்த காரை உடைத்து சேதப்படுத்தி உள்ளனர். இந்நிலையில் இந்த வீடியோ வைரலாக பரவியதை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ராம ஜென்ம பூமியில் யோகி ஆதித்யநாத் வழிபாடும் மேற்கொண்டார்.
    • ராமர் கோவில் கட்டுமானப்பணியின் முன்னேற்றம் குறித்து அதன் அறக்கட்டளை செயலாளர் சம்பத் ராயிடம் யோகி ஆதித்யநாத் கேட்டறிந்தார்.

    அயோத்தி:

    உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ஓட்டல் ஒன்றில், பல்வேறு மேம்பாட்டுப்பணிகள் தொடர்பாக மூத்த அதிகாரிகளுடன் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் ஆலோசனை நடத்தினார்.

    அப்போது அவர், அயோத்தியில் நடைபெறும் தீப உற்சவ விழாவுக்கான ஏற்பாடுகளை சிறப்பாக மேற்கொள்ளும்படியும், பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்துகொடுக்கும்படியும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    மேலும் யோகி ஆதித்யநாத், அயோத்தி ராமர் கோவில் கட்டுமானப்பணியை திட்டமிட்ட காலத்தில், உயர்ந்த தரத்தில் முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

    ராம ஜென்ம பூமியில் யோகி ஆதித்யநாத் வழிபாடும் மேற்கொண்டார்.

    பின்னர், ராமர் கோவில் கட்டுமானப்பணியின் முன்னேற்றம் குறித்து அதன் அறக்கட்டளை செயலாளர் சம்பத் ராயிடம் யோகி ஆதித்யநாத் கேட்டறிந்தார்.

    இதுதொடர்பாக அலுவலர்களிடமும் விவரங்களை கேட்டு தெரிந்துகொண்ட முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், கட்டுமானப்பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுடனும் உரையாடினார். 

    • ரஜினியை முதல்வர் யோகி ஆதித்யநாத் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
    • நடிகர் ரஜினி நாளை அயோத்தியாவில் உள்ள ராமர் கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார்.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான ரஜினி நடிப்பில் சமீபத்தில் வெளியான 'ஜெயிலர்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

    'ஜெயிலர்' படத்தின் ரிலீஸுக்கு முன்பே இமயமலைக்கு சென்ற நடிகர் ரஜினி ரிஷிகேஷில் உள்ள தயானந்த சரஸ்வதி ஆசிரமம், ராஞ்சியில் உள்ள யோகதா சத்சங்க ஆசிரமம், பத்ரிநாத் கோவில் போன்ற பல இடங்களுக்கு சென்றார்.

    பின்னர், உத்தரப் பிரதேசத்தில் சிறப்பு காட்சியாக வெளியிடப்பட்ட ஜெயிலர் படத்தை நடிகர் ரஜினி, அம்மாநில துணை முதல்வர் கேஷவ் பிரசாத் மவுரியாவுடன் பார்த்தார். இவர்களுடன் லதா ரஜினிகாந்தும் இருந்தார்.

    இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை லக்னோவில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்தார்.

    அங்கு, யோகி ஆதித்யநாத்தின் காலில் விழுந்து ரஜினி காந்த் ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டார். ரஜினியை முதல்வர் யோகி ஆதித்யநாத் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அவருடன், ரஜினியின் மனைவி லதா ரஜினி காந்தும் உடன் இருந்தார்.

    நடிகர் ரஜினி நாளை அயோத்தியாவில் உள்ள ராமர் கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார்.

    • ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் இதுவரை ரூ. 350 கோடிக்கும் அதிக வசூலை பெற்றுள்ளது.
    • ஜெயிலர் படத்தில் மோகன் லால், சிவராஜ்குமார், வசந்த ரவி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வரும் புதிய திரைப்படம் ஜெயிலர். வர்த்தக ரீதியிலும், விமர்சன ரீதியிலும் ஜெயிலர் பட்டையை கிளப்பி வருகிறது. இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் படம் வெளியாவதற்கு முன்பே இமய மலை பயணம் சென்றுவிட்டார்.

     

    இமய மலை பயணத்தை தொடர்ந்து உத்திர பிரேதச மாநிலத்தில் இருக்கும் ரஜினிகாந்த் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், உத்திர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உடன் நாளை ஜெயிலர் படத்தை பார்க்க இருப்பதாக தெரிவித்து இருக்கிறார்.

    ஜெயிலர் படம் பாக்ஸ் ஆஃபீசில் நல்ல வரவேற்பை பெற்று வருவது பற்றிய கேள்விக்கு பதில் அளித்த ரஜினிகாந்த், இவை அனைத்தும் கடவுளின் ஆசீர்வாதம் என்று தெரிவித்தார். ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி இருக்கும் ஜெயிலர் படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கி உள்ளார். இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், தமன்னா, ஜாக்கி ஷராஃப், மோகன் லால், சிவராஜ்குமார், வசந்த ரவி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    • இச்சம்பவம் ஆகஸ்ட் 11 அன்று நடந்துள்ளது
    • ஹைதர் கடைக்கு சென்ற போது மீண்டும் அவரை சூழ்ந்து கொண்டு தாக்கியுள்ளனர்

    சமீபத்தில் வைரலான ஒரு வீடியோவில் உத்தர பிரதேசத்திலுள்ள ஹர்டோய் பகுதியில், ரெயில் தண்டவாளத்திற்கு அருகே ஒரு மனிதரை பல ஆண்கள் சேர்ந்து தாக்கும் காட்சிகள் இருந்தன.

    இதனை பகிர்ந்தவர்களில் ஒரு பயனர் பகிரும் போது அவ்வீடியோவுடன், "ரெயில்வே கேட் காவலாளியை ஜிஹாதிகள் தாக்குகிறார்கள். அதை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் அவர்கள் பகிர்ந்து கொள்கிறார்கள்." என குறிப்பிட்டு ஒரு குறுஞ்செய்தியும் அத்துடன் இணைத்திருந்தார்.

    ஆனால், விசாரணையில் அந்த வீடியோவில் உள்ள சம்பவம், ஆகஸ்ட் 11 அன்று, உத்தர பிரதேச ஹர்டோய் பகுதியில் உள்ள பிஹானி கோட்வாலி வட்டாரத்தில் உள்ள மஹ்முத்புர் சரயா கிராமத்தில் ஒரு விபத்து குறித்து நடந்த வாக்குவாதம், முற்றி கைகலப்பாக மாறிய போது எடுக்கப்பட்டது என தெரிய வந்துள்ளது.

    மஹ்முத்புரில் வசிக்கும் சபா ஹைதர் என்பவர் மோட்டார்சைக்கிளில் சென்ற போது பர்வீன் என்பவர் மீது மோதி விட்டு, அவரது மோட்டார்சைக்கிளை அங்கேயே விட்டு விட்டு ஓடி விட்டார். ஆனால், அவர்தான் மோதியது என்பதை அறிந்து கொண்ட பர்வீன் வீட்டை சேர்ந்தவர்கள், சபா வீட்டிற்கு செல்லும் முன்பே அவர் வீட்டிற்கு சென்று விட்டனர்.

    இரு குடும்பத்து பெரியவர்களும் தங்களுக்குள் பேசி சமாதானப்படுத்தியதால் பர்வீன் வீட்டை சேர்ந்தவர்கள் திரும்பி சென்றனர். இதையடுத்து ஹைதர் தன் கடைக்கு சென்றார். அப்போது பர்வீன் வீட்டை சேர்ந்தவர்கள் மீண்டும் அவரை சூழ்ந்து கொண்டு ரெயில்வே கிராசிங்கிற்கு அருகே அவரை அடித்தனர். இந்த சம்பவம் வீடியோவாக அப்போதே வெளியிடப்பட்டது.

    இச்சம்பவத்தில் ரெயில்வே கேட்மேனுக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்றும் இதில் எந்தவிதத்திலும் மத சம்பந்தமான காரணங்கள் இல்லை என ரெயில்வே உயர் அதிகாரிகளும், காவல்துறையினரும் உறுதி செய்துள்ளனர்.

    ×