என் மலர்
தெலுங்கானா
- பிரதமரின் படங்களை வைக்க பாஜகவினரும் அனுமதிக்கப்படவில்லை.
- பிரதமரின் பேனர் அகற்றப்படாமல் இருப்பதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.
தெலுங்கான மாநிலத்தின் ஜஹீராபாத் பாராளுமன்ற தொகுதியில் நேற்று நடைபெற்ற மத்திய அரசின் நலத்திட்ட நிகழ்ச்சியில் மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் பங்கேற்றார். பின்னர் அவர் அங்குள்ள ரேஷன் கடையை ஆய்வு செய்தார்.
அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட காமரெட்டி மாவட்ட ஆட்சியர் ஜிதேஷ் பாட்டீலிடம், ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும் இலவச அரிசியில், மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் எவ்வளவு பங்கு உள்ளது என அவர் கேள்வி எழுப்பினார். அது குறித்து மாவட்ட ஆட்சியர் தடுமாற, பதில் அளிக்க அவருக்கு அரைமணி நேரம் அவகாசம் அளிப்பதாக மத்திய நிதி மந்திரி தெரிவித்தார்.
பின்னர் பேசிய அவர், வெளிச்சந்தையில் தோராயமாக ரூ.35க்கு விற்கப்படும் அரிசி, ரேஷன் கடைகளில் ஒரு ரூபாய்க்கு மக்களுக்கு விநியோகிக்கப்படுகிறது என்றார். இதில் மத்திய அரசு 30 ரூபாயும், மாநில அரசு 4 ரூபாயும் வழங்குவதாகவும், ரேஷன் கடை பயனாளிகளிடம் ஒரு ரூபாய் மட்டும் வசூலிக்கப்படுகிறது என்றும் அவர் கூறினார்.
கடந்த 2020ம் ஆண்டு ஏப்ரல் முதல் மாநில அரசு மற்றும் பயனாளியின் பங்களிப்பு இல்லாமல் அந்த அரிசியை மத்திய அரசு இலவசமாக வழங்கி வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும் ரேஷன் கடையில் பிரதமர் மோடியின் படத்தை ஏன் காணவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ரேஷன் கடைகளில் பிரதமர் மோடியின் படத்தை வைக்க வேண்டும் என்று பாஜக கோரிக்கை வைத்ததாகவும், ஆனால் அதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

பாஜகவினர் பிரதமர் மோடியின் பேனரை ரேஷன் கடைகளில் வைத்தால், அது அகற்றப்படாமலோ அல்லது கிழிக்கப்படாமலோ இருப்பதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியருக்கு நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து, ஏழை மக்களுக்கு பிரதமரின் இலவச தானியங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் 5 கிலோ உணவு தானியங்களுக்கான முழுச் செலவையும் மோடி அரசே ஏற்கிறது என்றும், இதனால் ரேஷன் கடைகளில் பிரதமர் மோடியின் பேனர் அல்லது போஸ்டர்கள் வைக்கப்படுவதில் உங்களுக்கு ஏதாவது ஆட்சேபனை உள்ளதா என்றும் நிதி மந்திரி அலுவலகம் சார்பில் டுவிட் செய்யப்பட்டது.
முன்னதாக பான்ஸ்வாடா பகுதிக்கு சென்ற மத்திய நிதி மந்திரியின் காரை மறித்த காங்கிரஸ் தொண்டர்கள் சிலர், விலைவாசி உயர்வு குறித்து எதிர்ப்பு தெரிவிக்க முயன்றனர். போலீசார் தலையிட்டு அந்த கும்பலை கலைத்தனர்.
- அவரது கருத்துக்களுக்கு எதிரான போராட்டங்களைத் தொடர்ந்து கட்சியால் அவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
- நோட்டீஸ் வந்த நாளிலிருந்து 10 நாட்களுக்குள் ஏன் கட்சியில் இருந்து நீக்கக்கூடாது என்று சிங் காரணம் காட்ட வேண்டும்.
நபிகள் நாயகம் குறிவைத்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக தெலுங்கானா எம்எல்ஏ ராஜா சிங்கை பாஜக இன்று இடைநீக்கம் செய்துள்ளது.
கடுமையான இந்துத்துவா கருத்துக்களுக்கும், இஸ்லாமியர்கள் குறித்த சர்ச்சைக்குரிய கருத்துகள் தெரிவிப்பதில் பெயர் பெற்ற ராஜா சிங், தெலுங்கானா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். அவரது கருத்துக்களுக்கு எதிரான போராட்டங்களைத் தொடர்ந்து கட்சியால் அவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து கட்சியின் மத்திய ஒழுங்குக் குழுவின் செயலாளரான ஓம் பதக் வெளியிட்ட அறிக்கையில், "பல்வேறு விஷயங்களில் கட்சியின் நிலைப்பாட்டிற்கு முரணான கருத்துகளை நீங்கள் வெளிப்படுத்தியுள்ளீர்கள். இது பாரதிய ஜனதாவின் அரசியலமைப்பின் விதியை தெளிவாக மீறுவதாகும். மேலும், விசாரணை நிலுவையில் உள்ளதால், நீங்கள் கட்சியிலிருந்தும், உங்கள் பொறுப்புகள் அல்லது பணிகளில் இருந்து உடனடியாக அமலுக்கு வரும் வகையில் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளீர்கள் என்பதை உங்களுக்குத் தெரிவிக்கும்படி எனக்கு உத்தரவிடப்பட்டுள்ளது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இந்த நோட்டீஸ் வந்த நாளிலிருந்து 10 நாட்களுக்குள் ஏன் கட்சியில் இருந்து நீக்கக்கூடாது என்று சிங் காரணம் காட்ட வேண்டும் என்றும் சிங்கின் விரிவான பதில் செப்டம்பர் 2-ம் தேதி 2022க்குள் தெரிவிக்க வேண்டும்" என்றும் பதக் குறிப்பிட்டுள்ளார்.
- ராஜாசிங் எம்.எல்.ஏ.வின் வீடியோவை கண்டித்து ஐதராபாத்தில் நேற்று இரவு போராட்டங்கள் நடந்தது.
- ராஜாசிங் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன்பு போராட்டம் நடந்தது.
ஐதராபாத்:
பா.ஜனதா கட்சி செய்தி தொடர்பாளராக இருந்த நுபுர்சர்மா, ஒரு டி.வி. விவாத நிகழ்ச்சியில் நபிகள் நாயகம் பற்றி சர்ச்சை கருத்துக்களை தெரிவித்ததால் நாட்டின் பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடந்தது. அவர் பா.ஜனதாவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இந்த நிலையில் நபிகள் நாயகம் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்ததாக பா.ஜனதா எம்.எல்.ஏ. கைது செய்யப்பட்டுள்ளார்.
தெலுங்கானா மாநில பா.ஜனதா எம்.எல்.ஏ. ராஜாசிங். இவர்தான் பேசும் 10 நிமிட வீடியோ ஒன்றை வெளியிட்டார். இதில் அவர் நபிகள் நாயகத்தை பற்றி அவதூறு கருத்துக்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது.
கடந்த வாரம் நகைச்சுவை நிகழ்ச்சி ஒன்றை ராஜாசிங் எம்.எல்.ஏ. தடுக்க முயன்றார். ஆதரவாளர்கள் 50 பேருடன் சென்ற அவரை போலீசார் தடுத்து நிறுத்தி அழைத்து சென்றனர். அதன் பின் இந்த வீடியோவை அவர் வெளியிட்டார்.
ராஜாசிங் எம்.எல்.ஏ.வின் இந்த வீடியோவை கண்டித்து ஐதராபாத்தில் நேற்று இரவு போராட்டங்கள் நடந்தது. அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன்பு போராட்டம் நடந்தது. அதே போல் ஐதராபாத்தில் மற்ற பகுதிகளில் போராட்டம் நடைபெற்றது.
இந்த நிலையில் ராஜாசிங் எம்.எல்.ஏ.வை ஐதராபாத் போலீசார் கைது செய்தனர்.
இது தொடர்பாக ஐதராபாத் தெற்கு மண்டல போலீஸ் துணை கமிஷனர் சாய் சைதன்யா கூறும்போது, மத நம்பிக்கைகளை இழிவுபடுத்துவது தொடர்பான சட்டப்பிரிவுகளின் கீழ் ராஜாசிங் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.
- பாஜக ஆட்சிக்கு வந்தால் தெலுங்கானாவும் மற்ற மாநிலங்களை போல் வளர்ச்சி அடையும்.
- மத்திய அரசு எரிபொருள் விலையை குறைத்தாலும், தெலுங்கானா அரசு வரியை குறைக்கவில்லை.
தெலுங்கானா மாநிலத்திற்கு நேற்று ஒருநாள் பயணமாக சென்ற மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, முனுகோடே தொகுதியில் நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
அண்மையில் பதவியை ராஜினாமா செய்த முனுகோடே சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ராஜகோபால் ரெட்டி, அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். பொதுக் கூட்டத்தில் அமித்ஷா பேசியதாவது:
தெலுங்கானா மாநிலத்திற்கு மத்திய அரசு, 2 லட்சம் கோடி ரூபாய் வழங்கிய பிறகும், மாநிலம் கடனில் மூழ்கியுள்ளது. சந்திரசேகர் ராவ் தலைமையிலான அரசு விவசாயிகளுக்கு எதிரானது. மத்திய அரசின் காப்பீட்டு திட்டத்தில் இருந்து தெலுங்கானா விவசாயிகளை ஒதுக்கி வைப்பதன் மூலம் டிஆர்எஸ் அரசு பாவம் செய்கிறது. இந்த திட்டத்தில் விவசாயிகள் இணைந்திருந்தால் வெள்ள பாதிப்பின் போது இழப்பீடு கிடைத்திருக்கும்.
அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக ஆட்சிக்கு வந்தால், விவசாயிகளிடம் இருந்து ஒவ்வொரு நெல்லும் கொள்முதல் செய்யப்படுவதை உறுதி செய்யும். பாஜக ஆட்சிக்கு வந்தால் தெலுங்கானாவும் மற்ற மாநிலங்களை போல் வளர்ச்சி அடையும் என உறுதியளிக்கிறேன். மத்திய அரசு இரண்டு முறை எரிபொருள் விலையை குறைத்தாலும், தெலுங்கானா அரசு வாட் வரியை குறைக்கவில்லை.

இதனால் நாட்டிலேயே பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகம் உள்ள மாநிலமாக தெலுங்கானா மாறியுள்ளது. இதனால் மாநிலத்தில் பணவீக்கம் அதிகரித்துள்ளது. தலித்துகளுக்கு மூன்று ஏக்கர் நிலம், இரண்டு படுக்கையறை வீடுகள் மற்றும் வேலையற்ற இளைஞர்களுக்கு ரூ.3,000 நிதியுதவி உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தவறி விட்டார். அவரது குடும்ப உறுப்பினர்களைத் தவிர, மாநிலத்தில் எந்த இளைஞருக்கும் வேலை கிடைக்கவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

முன்னதாக உஜ்ஜைனி மகாகாளி கோவிலுக்கு சென்று அமித்ஷா வழிபட்டார். பின்னர், ஐதராபாத்தில் அமித்ஷாவை, தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆரை சந்தித்து பேசினார்.
- தற்போதைய மத்திய அரசு கூட்டாட்சி தத்துவங்களை சீர்குலைக்கிறது.
- மக்கள் நலன்தான் அரசுகளின் முக்கிய கடமை.
ஐதராபாத் :
சுதந்திர தினத்தையொட்டி, தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் தேசிய கொடி ஏற்றி வைத்தார். பிறகு அவர் பேசியதாவது:-
மக்கள் நலன்தான் அரசுகளின் முக்கிய கடமை. ஆனால், அந்த கடமையை செய்யாத மத்திய அரசு, மாநில அரசுகள் வழங்கும் நலத்திட்டங்களை 'இலவசம்' என்று சொல்கிறது. அப்படி சொல்வது தவறு.
மேலும், தற்போதைய மத்திய அரசு கூட்டாட்சி தத்துவங்களை சீர்குலைக்கிறது. மாநில அரசுகளை பொருளாதார ரீதியாக பலவீனப்படுத்த சதி செய்கிறது. மத்திய வரி வருவாயில் மாநிலங்களுக்கு அளிக்க வேண்டிய 41 சதவீத பங்கை 29.6 சதவீதமாக குறைத்துவிட்டது.
பொது பட்டியலில் உள்ள விவகாரங்களை மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்தாமல் தன்னிச்சையாக முடிவு எடுக்கிறது. தனது தவறுகளை மறைக்க வெறுப்பு அரசியல் மூலம் மக்களை பிளவுபடுத்த பார்க்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
- வீட்டில் தூக்கிட்ட நிலையிலிருந்த உமா மகேஸ்வரியின் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உமா மகேஸ்வரியின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் என்.டி.ராமாராவ் மகள் உமா மகேஸ்வரி தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.
ஐதராபாத்தில் உள்ள வீட்டில் தூக்கிட்ட நிலையிலிருந்து உமா மகேஸ்வரியின் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
என்.டி.ஆரின் 12வது மகளான உமா மகேஸ்வரி ஏற்கனவே உடல் ரீதியாக பல பிரச்சினைகளில் இருந்து வந்த நிலையில் தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
உமா மகேஸ்வரியின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. என்.டி.ஆர் மகளின் திடீர் தற்கொலை முடிவு தெலுங்கானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- தாய் மொழியில் கல்வி கற்பது சுயமரியாதையை அதிகரிக்கும்.
- முதன்மை நிலையில்உள்ள பயிற்றுமொழியை தாய்மொழிகளுக்கு மாற்ற வேண்டும்.
ஐதாராபாத்தின் ராமந்தபூர் நகரில் பள்ளி பொன்விழா கொண்டாட்டங்களை தொடங்கி வைத்த குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு உரையாற்றினார். அப்போது பேசிய அவர்,
தேசியக் கல்விக் கொள்கை-ஐ முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஆக்கப்பூர்வமான வகையில் மாணவர்களின் முழு வளர்ச்சி மற்றும் மேம்பாட்டை ஊக்குவிக்க வேண்டும்.
சில பள்ளிகள் மாணவர்களின் தாய்மொழியை இழிவாகப் பார்க்கின்றன, மேலும் ஆங்கிலத்தில் பிரத்தியேகமாகப் பேசவும் கற்கவும் அவர்களை ஊக்குவிக்கின்றன. தாய் மொழியில் கல்வியை கற்றுக் கொள்வது, சுதந்திரமாக தொடர்பு கொள்ள உதவும், சுயமரியாதையை அதிகரிக்கும். சொந்த கலாச்சார உணர்வை மாணவர்களுக்கு வழங்கும்.
முதன்மை நிலையில் உள்ள பயிற்றுமொழியை தாய்மொழிகளுக்கு மாற்றவும், படிப்படியாக உயர்நிலைகளுக்கும் விரிவுபடுத்தவும் வேண்டும். நமது குழந்தைகளின் ஆளுமையை வடிவமைப்பதில் தாய்மொழியின் முக்கியத்துவத்தை தவிர்க்க முடியாது.
நேரம் தவறாமை மற்றும் ஒழுக்கம் ஆகியவை வெற்றிக்கான மிக முக்கியமான பண்புகள். உயர் இலக்கை அடையவும், வாழ்க்கையில் முன்னேறவும் மாணவர்கள் கடினமாக உழைக்க வேண்டும். கடின உழைப்புக்கு ஈடு இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- மதுபோதையில் இளம்பெண் வீட்டிற்கு வந்த ஷர்மாலால் வீட்டு கதவை தட்டினார்.
- தூக்க கலக்கத்தில் இருந்த இளம்பெண் எழுந்து வந்து கதவை திறந்த போது ஷர்மாலால் திடீரென மயக்க ஸ்பிரேவை எடுத்து இளம்பெண் முகத்தில் அடித்தார்.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத், ஷம்ஷாபாத்தில் ராஜீவ் காந்தி விமான நிலையம் உள்ளது. ஷம்ஷாபாத் பகுதியை சேர்ந்தவர் 25 வயது இளம்பெண். இவரது கணவர் இறந்து விட்டார். இளம் பெண்ணுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
இவர் ஷம்ஷாபாத் விமான நிலையத்தில் வேலை செய்து வருகிறார். இவருடன் அதே விமான நிலையத்தில் ஷர்மா லால் (35) என்பவர் வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மதுபோதையில் இளம்பெண் வீட்டிற்கு வந்த ஷர்மாலால் வீட்டு கதவை தட்டினார். தூக்க கலக்கத்தில் இருந்த இளம்பெண் எழுந்து வந்து கதவை திறந்த போது ஷர்மாலால் திடீரென மயக்க ஸ்பிரேவை எடுத்து இளம்பெண் முகத்தில் அடித்தார்.
இதனை சற்றும் எதிர்பார்க்காத இளம்பெண் கத்தி கூச்சலிட முயற்சித்தார். அப்போது ஷர்மாலால் தனது கைக்குட்டையால் இளம்பெண்ணின் வாயை பொத்தி வீட்டிற்குள் தூக்கிச் சென்றார். அதற்குள் இளம்பெண் மயக்கம் அடைந்ததால் அவரை பலாத்காரம் செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்.
மயக்கம் தெளிந்து எழுந்த இளம்பெண் தனக்கு நடந்த கொடுமையை நினைத்து கதறி அழுதார். இதுகுறித்து ஷம்ஷாபாத் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ஷர்மா லாலை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மாநிலம் முழுவதும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட பகுதிகளில் மத்திய குழுவினர் ஹெலிகாப்டர் மூலம் சென்று இழப்பீடு குறித்து ஆய்வு செய்தனர்.
- இழப்பீடு மதிப்பு குறித்து ஆய்வு பணிகள் இன்னும் நிறைவு பெறவில்லை.
திருப்பதி:
பருவமழை காரணமாக தெலுங்கானாவில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக பலத்த மழை கொட்டி வருகிறது. அங்குள்ள கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியதால் பொதுமக்களை மாநில அரசு மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் படகுகள் மூலம் மீட்பு பணிகளில் ஈடுபட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் வீடுகளில் வளர்க்கப்பட்ட ஆடு, மாடு, கோழி உள்ளிட்டவைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த விளை நிலங்கள் தண்ணீரில் மூழ்கியும் சேதம் அடைந்தது.
இந்த நிலையில் தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த நிலையில் மாநிலம் முழுவதும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட பகுதிகளில் மத்திய குழுவினர் ஹெலிகாப்டர் மூலம் சென்று இழப்பீடு குறித்து ஆய்வு செய்தனர். இழப்பீடு மதிப்பு குறித்து ஆய்வு பணிகள் இன்னும் நிறைவு பெறவில்லை.
பின்னர், தலைமை செயலாளர் மற்றும் அமைச்சர்களுடன் மத்திய குழு தலைமைச் செயலாளர் சோமேஷ் குமார் ஆலோசனை நடத்தினார்.
அப்போது அவர்கள் தெலுங்கானாவில் மொத்தம் ரூ 1,400 கோடிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், தற்போது ரூ.1,000 கோடியை உடனடியாக நிவாரணமாக மத்திய அரசு, மாநில அரசுக்கு வழங்க வேண்டும் என தெரிவித்தனர்.
இந்த நிலையில் தெலுங்கானாவில் மேலும் 5 நாட்கள் மழை அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
- அவர் எதிர்பார்த்த அளவிற்கு அவரது ஆன்லைன் விளையாட்டுக்கு வரவேற்பு கிடைக்கவில்லை.
- தீனா கடந்த சில நாட்களாக விரக்தி அடைந்த நிலையில் காணப்பட்டார்.
ஐதராபாத்தில், சைராபாத் பகுதியை சேர்ந்தவர் தீனா (வயது 23). இவர் அங்குள்ள அப்பார்ட்மெண்டில் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். குவாலியரில் உள்ள ஐ.ஐ.டி.யில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். படிப்பில் மிகவும் திறமையான தீனா தன்னுடைய முயற்சியால் ஆன்லைன் கேம் ஒன்றை உருவாக்கி யூ டியூப் சேனலில் பதிவிட்டார். அவர் உருவாக்கிய ஆன்லைன் விளையாட்டை ஒரு சிலர் மட்டுமே விரும்பி விளையாடினர். அவர் எதிர்பார்த்த அளவிற்கு அவரது ஆன்லைன் விளையாட்டுக்கு வரவேற்பு கிடைக்கவில்லை. இதனால் தீனா கடந்த சில நாட்களாக விரக்தி அடைந்த நிலையில் காணப்பட்டார்.
இந்த நிலையில் நேற்று மதியம் 2 மணி அளவில் வீட்டின் 5-வது மாடிக்குச் சென்ற தீனா அங்கிருந்து கீழே குதித்தார். இதில் உடல் சிதறி ரத்த வெள்ளத்தில் துடித்துடித்து சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
- குறுகிய நேரத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மிக மிக அதிக கனமழை பெய்வது மேக வெடிப்பு என்று சொல்லப்படுகிறது.
- மேக வெடிப்பு என்று அழைக்கப்படும் புதிய நிகழ்வு ஆங்காங்கே தற்போது நிகழ்கிறது.
ஐதராபாத் :
மேகவெடிப்பு பிற வெளிநாடுகளால் ஏற்படுத்தப்படும் சதியாக இருக்கலாம் என சந்தேகிப்பதாக தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார். தெலுங்கானா மாநிலத்தில் கடந்த ஒருவாரமாக இடைவிடாது தொடர் மழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக தெலுங்கானாவில் பல இடங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. குறிப்பாக அம்மாநிலத்தின் கோவில் நகரம் என்று அழைக்கப்படும் பத்ராசலம் பகுதியில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
பத்ராசலத்தின் அணையின் நீரின் அளவு 70 அடியை இரு தினங்களுக்கு முன் கடந்தது. 53 அடியை நீர் மட்டம் கடந்த போது இறுதி எச்சரிக்கை விடப்பட்டது. தற்போது அணையின் நீர் மட்டம் 60 அடியாக உள்ளது. இந்த நிலையில், வெள்ளம் பாதித்த பகுதிகளை தெலுங்கானா முதல் மந்திரி சந்திர சேகர் ராவ் இன்று பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சந்திரசேகர் கூறுகையில், "மேக வெடிப்பு என்று அழைக்கப்படும் புதிய நிகழ்வு ஆங்காங்கே தற்போது நிகழ்கிறது. மேக வெடிப்பு சதி செயலாக இருக்கலாம் என்று மக்கள் பேசுகின்றனர். வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் வேண்டும் என்றே மேக வெடிப்பை குறிப்பிட்ட சில இடத்தில் நிகழச் செய்வதாக கூறப்படுகிறது. இது எந்த அளவு உண்மை என்பதை நமக்கு தெரியவில்லை. கடந்த காலங்களில் காஷ்மீர் அருகே இது போன்று மேகவெடிப்பு நடத்தப்பட்டது. பிறகு உத்தரகாண்டிலும் நடந்தது. தற்போது கோதாவரி பகுதியில் மேகவெடிப்பை ஏற்பட செய்து வருவதாக எங்களுக்கு தகவல்கள் வந்து கொண்டு இருக்கின்றன" என்றார்.
குறுகிய நேரத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மிக மிக அதிக கனமழை பெய்வது மேக வெடிப்பு என்று சொல்லப்படுகிறது. அதாவது, திடீரென 100 மி.மீட்டர் (10 செ.மீ) மேல் ஒரு குறிப்பிட்ட பரப்பளவில் மழை கொட்டுவதை மேக வெடிப்பு என்று வானிலை ஆய்வு மையம் வரையறுக்கிறது. சமீபத்தில் அமர்நாத்த்தில் மேக வெடிப்பு ஏற்பட்டு பெரு வெள்ளம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
- கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை முறையாக பின்பற்ற கோரிக்கை.
- மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டுகோள்.
ஐதராபாத்:
நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் இன்று கொரோனா பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்டார். தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில் உள்ள அமீர்பெட் அரசு சுகாதார நிலையத்திற்கு சென்று கொரோனா பூஸ்டர் தடுப்பூசியை போட்டுக் கொண்டதாக தமிழிசை தமது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டு கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை முறையாக பின்பற்றி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.






