என் மலர்tooltip icon

    தெலுங்கானா

    • 27-ந்தேதியில் இருந்து அக்டோபர் 5-ந்தேதி வரை பிரம்மோற்சவம் நடக்கிறது.
    • காலை 8 மணியிலிருந்து இரவு 11.30 மணி வரை அன்னதானம் வழங்கப்பட உள்ளது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 27-ந்தேதியில் இருந்து அடுத்த மாதம் (அக்டோபர்) 5-ந்தேதி வரை 9 நாட்கள் வருடாந்திர பிரம்மோற்சவ விழா 2 ஆண்டுகளுக்கு பிறகு கோலாகலமாக நடக்க உள்ளது.

    அதையொட்டி திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் பல்வேறு துறைகள் சார்பாக பக்தர்களுக்கு மேற்கொள்ளப்பட உள்ள சேவைகள் குறித்து தெரிவித்து வருகிறது. அதன்படி திருமலை-திருப்பதி தேவஸ்தான அன்னதானத்திட்டம் சார்பாக மேற்கொள்ளப்படுகிற சேவைகள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன் விவரம் வருமாறு:-

    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு பசி தெரியாமல் இருக்க, அன்னதானத்தை திருமலை-திருப்பதி தேவஸ்தானம் தொடர்ந்து வழங்கி வருகிறது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்தாலும் அவர்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் அன்னதானம் வழங்கி வருகிறது.

    திருமலையில் ஏழுமலையானுக்கு கைங்கர்யம் செய்து வந்த தரிகொண்டா வெங்கமாம்பா 17-ம் நூற்றாண்டில் பக்தர்களுக்கு அன்னதானத்தை வழங்கினார். திருமலையில் முதல் முதலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கிய பெருமை தரிகொண்டா வெங்கமாம்பாவையே சாரும்.

    திருமலையில் அன்னதான வினியோகத்தின் முன்னோடியான தரிகொண்டா வெங்கமாம்பா பெயரில் புதிதாக அன்னப்பிரசாத பவன கட்டிடத்தை திருமலை-திருப்பதி தேவஸ்தானம் புதிதாக கட்டி திறந்து வைத்தது. அங்கு நவீன வசதிகளுடன் ஒரே நேரத்தில் 4 ஆயிரம் பக்தர்கள் அமர்ந்து உணவு சாப்பிடும் வகையில் 2011-ம் ஆண்டு ஜூலை மாதம் 11-ந்தேதி அப்போதைய குடியரசு தலைவராக இருந்த பிரதீபா பட்டீல் திறந்து வைத்தார்.

    திருமலையில் அன்னதானம் தயாரிப்பதற்காக தினமும் சுமார் 10 முதல் 12 டன் அரிசி மற்றும் 7 முதல் 8 டன் காய்கறிகள் பயன்படுத்தப்படுகின்றன. அன்னதானத்திட்ட அறக்கட்டளைக்கு ரூ.1,502 கோடி காணிக்கை பக்தர்களிடம் இருந்து பெறப்பட்டுள்ளது.

    தற்போது திருமலையில் சாதாரண நாட்களில் 55 ஆயிரம் முதல் 60 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. வார இறுதி நாட்கள் மற்றும் விழா நாட்களில் அன்னதானம் சாப்பிடும் பக்தர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை எட்டும்.

    வருகிற வருடாந்திர பிரம்மோற்சவ விழாவில் பங்கேற்கும் அனைத்துப் பக்தர்களுக்கும் 9 நாட்களுக்கு தினமும் காலை 8 மணியில் இருந்து இரவு 11.30 மணி வரையிலும், கருடசேவை அன்று நள்ளிரவு 1 மணி வரையிலும் ருசியான, தரமான வகையில் அன்னதானம் வழங்கப்பட உள்ளது.

    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு தேவஸ்தான அன்னதானத்திட்டம் ஒரு அட்சய பாத்திரமாக விளங்குகிறது.

    மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தகவல் அறிந்து வந்த போலீசார் ஸ்ரீகாந்த்தை மீட்டனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    அமராவதி :

    தெலுங்கானா மாநிலம், பெத்தப்பள்ளி மாவட்டம் ஸ்வர்ணபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் அகிலா. இவருக்கும் ஸ்ரீகாந்த் என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்தநிலையில் குடும்பத்தகராறில் ஸ்ரீகாந்த் மனைவியை விட்டு பிரிந்து சென்று விட்டார்.

    இதற்கிடையே ஸ்ரீகாந்த் வாரங்கலில் வேறு ஒரு பெண்ணை 2-வது திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி வந்துள்ளார். இதனை அறிந்த அகிலா அதிர்ச்சி அடைந்தார். இதனால், அகிலா தனது குடும்பத்தினர் உதவியுடன் ஸ்ரீகாந்த்தை தனது ஊருக்கு அழைத்து வந்தார். பின்னர் அவரை மின் கம்பத்தில் கட்டி வைத்து செருப்பால் அடித்து செருப்பு மாலை அணிவித்தார். தகவல் அறிந்து வந்த போலீசார் ஸ்ரீகாந்த்தை மீட்டனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கணவரை மனைவி செருப்பால் அடிக்கும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • ஐதராபாத் சமஸ்தான விடுதலைக்கும், பா.ஜனதாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை.
    • தெலுங்கானாவில் ஆட்சியை பிடிக்க வகுப்புவாதத்தை ஊக்குவிக்கிறார்கள்.

    ஐதராபாத் :

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, ஐதராபாத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    ஐதராபாத் சமஸ்தான விடுதலைக்கும், பா.ஜனதாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவர்கள் வரலாற்றை திரிக்க பார்க்கிறார்கள். தெலுங்கானாவில் ஆட்சியை பிடிக்க வகுப்புவாதத்தை ஊக்குவிக்கிறார்கள்.

    அரசியல் சட்டத்தை பாதுகாக்க வேண்டுமானால், உரிமைகள் மக்களுக்கு அளிக்கப்பட வேண்டுமானால், விசாரணை அமைப்புகள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதை தடுக்க வேண்டுமானால், பா.ஜனதாவை அதிகாரத்தில் இருந்து அகற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தெலுங்கானா, ஆந்திர பிரதேசத்தில் என்.ஐ.ஏ. தீவிர சோதனை.
    • டிஜிட்டல் சாதனங்கள், ஆவணங்கள், பணம் பறிமுதல்.

    நிசாமாபாத்:

    பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுவதற்கும், மதத்தின் அடிப்படையில் பகைமையை வளர்ப்பதற்கும் பயிற்சி முகாம்களை நடத்தியதாக பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவுக்கு எதிரான வழக்கு தொடர்பாக தெலங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேச மாநிலங்களில் தேசிய புலனாய்வு நிறுவனம் இன்று சோதனையில் ஈடுபட்டது.

    தெலுங்கானாவில் 38 இடங்களிலும், ஆந்திராவில் 2 இடங்களிலும் நடத்தப்பட்ட சோதனையின் போது டிஜிட்டல் சாதனங்கள், ஆவணங்கள், இரண்டு கத்திகள் மற்றும் ரூ.8.31 லட்சத்திற்கும் அதிகமான பணம் உள்ளிட்டபொருட்கள் கைப்பற்றப்பட்டதாக தேசிய புலனாய்வு நிறுவன அதிகாரி தெரிவித்தார். இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இந்த வழக்கு முதலில் தெலுங்கானாவில் உள்ள நிஜாமாபாத் காவல் நிலையத்தில் ஜூலை 4 ஆம் தேதி பதிவு செய்யப்பட்டது மாநில காவல்துறையின் விசாரணையின் போது, ​அப்துல் காதர், ஷேக் சஹதுல்லா, முகமது இம்ரான் மற்றும் முகமது அப்துல் மொபின் ஆகியோர் கைது செய்யப்பட்டிருந்தனர். பின்னர், மேல் விசாரணைக்காக ஆகஸ்ட் 26 அன்று தேசிய புலனாய்வு நிறுவனத்தின் விசாரணைக்கு வழக்கு மாற்றப்பட்டதாக அதன் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

    • புதிய பாராளுமன்ற கட்டிட பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளன.
    • மத்திய அரசின் மின்சார சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம்.

    ஐதராபாத்:

    தலைநகர் டெல்லியில் கடந்த 2020 ஆண்டு டிசம்பர் மாதம் புதிய பாராளுமன்றத்திற்கான அடிக்கல்லை பிரதமர் நரேந்திர மோடி நாட்டினார். கடந்த மாதம், அந்த கட்டிடத்தின் மேற்கூரையில் அமைக்கப்பட்ட தேசிய சின்னத்தை அவர் திறந்து வைத்தார். தற்போது இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் குளிர்கால கூட்டத்தொடரை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

    இந்நிலையில் தெலுங்கானா மாநில சட்டசபையில் இன்று புதிய பாராளுமன்ற கட்டிடத்திற்கு பி.ஆர்.அம்பேத்கர் பெயரை வைக்க மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக அந்த தீர்மானத்தை முன் மொழிந்த மாநில தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் கே.டி.ராமராவ், அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கரின் பெயரை புதிய பாராளுமன்ற கட்டிடத்திற்கு சூட்டுவது பொருத்தமாக இருக்கும் என்றார்.

    இதேபோல் மத்திய அரசு முன்மொழிந்துள்ள மின்சார சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தெலுங்கானா சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அம்மாநில எரிசக்தி துறை அமைச்சர் ஜெகதீஷ் ரெட்டி, இந்த தீர்மானத்தைக் கொண்டு வந்தார். இந்த மசோதா விவசாயிகள், ஏழைப் பிரிவினர் மற்றும் மின்துறை ஊழியர்களின் நலன்களுக்கு எதிரானது என்று அப்போது அவர் குறிப்பிட்டார்.

    • முதல் இரண்டு தளங்களில் தங்கியிருந்தவர்கள் மூச்சு திணறி உயிரிழந்தனர்.
    • மின்சார வாகன விற்பனை நிலையத்தில் ஏற்பட்ட தீ, தங்கும் விடுதிக்கு பரவியது

    செகந்திராபாத்:

    தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத் நகரில் மின்சார ஸ்கூட்டர் விற்பனை நிலையம் உள்ளது. அங்குள்ள வாகனங்களுக்கு சார்ஜ் செய்யும் பகுதியில் நேற்றிரவு தீ பிடித்தது. இந்த தீ அருகில் இருந்த 4 மாடிகள் கொண்ட தங்கும் விடுதிக்கு பரவியது. அப்போது அங்கு 40 பேர் தங்கியிருந்தனர். தகவல் அறிந்து விரைந்து சென்ற தீயணைப்பு படையினர் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து அந்த விடுதியில் இருந்தவர்களை மீட்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.


    கடும் புகை மூட்டம் காரணமாக அந்த விடுதியின் முதல் 2 தளங்களில் தங்கியிருந்த 7 பேர் மூச்சுத் திணறி உயிரிழந்தனர். பலர் விடுதியில் இருந்து கீழே குதித்தனர். இதில் காயடைந்தவர்கள் உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாகவும், மீட்பு பணி நடைபெற்று வருவதாக ஐதராபாத் வடக்கு மண்டல கூடுதல் டிஜிபி தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு சென்ற தெலுங்கானா மாநில கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் டி. ஸ்ரீனிவாஸ் யாதவ் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை துரிதப்படுத்தினார். 

    • அசாம் முதலமைச்சருக்கு நிகழ்ந்த அவமரியாதை மாநில அரசின் தோல்வியை காட்டுகிறது.
    • தெலுங்கானா முதலமைச்சர், அசாம் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

    ஐதராபாத்:

    பாஜகவைச் சேர்ந்த அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, பிரதமர் மோடியை தீவிரமாக எதிர்த்து வரும் கே.சந்திரசேகரராவ் தலைமையிலான ஆட்சி நடைபெறும் தெலுங்கானா மாநிலத்திற்கு சென்றார்.

    ஐதராபாத் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார். பொதுக் கூட்ட மேடையில் அவர் பாஜக நிர்வாகிகளுடன் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த மேடையில் திடீரென ஏறிய ஒரு நபர்,அங்கிருந்து மைக்கை பிடித்து வளைத்து திருப்பியதுடன் அசாம் முதல்வருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அந்த நபரை பாஜக நிர்வாகிகள் அப்புறப்படுத்தினர். 


    பின்னர் ஹிமந்தா பிஸ்வா சர்மா செய்தியாளர்களிடம் பேசியதாவது:

    முதலமைச்சர் கேசிஆர் பாஜக இல்லாத அரசியல் பற்றி பேசுகிறார், ஆனால் நாங்கள் வாரிசு இல்லாத அரசியல் பற்றி பேசுகிறோம். ஐதராபாத்தில் கேசிஆர் மகன் மற்றும் மகளின் படங்களை மட்டுமே நாங்கள் பார்க்கிறோம். நாடு வாரிசு அரசியலில் இருந்து விடுபட வேண்டும். ஒரு அரசு, நாட்டுக்காக, மக்களுக்காக இருக்க வேண்டும், ஆனால் ஒரு குடும்பத்திற்காக இருக்கக் கூடாது. இவ்வாறு அவர் தெரிவித்தார். 


    இந்த நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் அசாம் முதலமைச்சருக்கு நிகழ்ந்த அவமரியாதை மாநில அரசின் முழு தோல்வியை காட்டுவதாகவும், இந்த சம்பவத்திற்காக தெலுங்கானா முதலமைச்சர் கேசிஆர், அசாம் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், அசாம் சட்டசபை துணை சபாநாயகர் நுமல் மோமின் வலியுறுத்தி உள்ளார். மேடையில் அசாம் முதலமைச்சருடன் மர்மநபர் வாக்குவாதம் செய்தது குறித்து நியாயமான விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார். 

    • காட்டு பகுதியில் மாவோயிஸ்டு பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • கூட்டு அதிரடி படை போலீசார் அங்கு விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    ஐதராபாத்:

    கேரளா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் மாவோயிஸ்டு பயங்கரவாதிகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த கூட்டு அதிரடி படை போலீசார் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

    இதில் தெலுங்கானா மாநிலம் குர்னபள்ளி - போடாநெல்லி காட்டு பகுதியில் மாவோயிஸ்டு பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து கூட்டு அதிரடி படை போலீசார் அங்கு விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    இதில் அங்குள்ள அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் பதுங்கி இருந்த மாவோயிஸ்டு பெண் பயங்கரவாதிகள் 2 பேர் பிடிபட்டனர்.

    இவர்களில் ஒருவர் மூத்த மாவோயிஸ்டு தலைவர் தாமோதரின் மனைவி ராஜிதா (வயது 25) என்பவர் ஆவார். இன்னொருவர் மாத்வி தானி. இவர்கள் இருவருக்கும் பல்வேறு வழக்குகளில் தொடர்பு இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சட்டசபையில் கவர்னர் உரைக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
    • குடியரசு தினத்தன்று கொடியேற்ற அனுமதிக்கப்படவில்லை.

    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநில கவர்னராக தமிழிசை சவுந்தரராஜன் பொறுப்பேற்று நேற்று 3 ஆண்டுகள் நிறைவடைந்தன.

    இதையொட்டி, அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, தெலுங்கானா மாநில அரசு மீது குற்றச்சாட்டுகளை தெரிவித்தார். அவர் கூறியதாவது:-

    3 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் நான் பதவி ஏற்றபோது, இந்த மாநிலத்துக்காக என்னை அர்ப்பணித்துக் கொள்வது என்று உறுதி பூண்டேன். ஆனால் அதை சாத்தியமாக்க நான் எந்த முயற்சி எடுத்தாலும், அது எளிதான காரியமாக இல்லை.

    மாநிலத்தின் உயர்ந்த பதவிக்கு கூட நிறைய முட்டுக்கட்டைகள் போடப்படுகிறது. உதாரணமாக, 'சம்மக்கா-சரக்கா ஜதாரா' என்ற பழங்குடியின திருவிழாவுக்கு செல்ல எனது அலுவலகம் ஹெலிகாப்டர் கேட்டது.

    ஆனால், ஹெலிகாப்டர் தரப்படுமா, இல்லையா என்பது பற்றி மாநில அரசு எதுவுமே கூறவில்லை. பின்னர், 8 மணி நேரம் நான் சாலைமார்க்கமாக செல்ல வேண்டி இருந்தது. நான் மக்களை சந்திக்க விரும்பும்போதெல்லாம் நிறைய முட்டுக்கட்டைகளை சந்தித்தேன். ஒவ்வொரு மாநிலமும் தனது வரலாறை எழுதும். பெண் கவர்னர் என்பதால் கடந்த 3 ஆண்டுகளாக ஒருவர் எப்படி பாகுபாட்டுடன் நடத்தப்பட்டார் என்பதை இந்த மாநிலம் வரலாறாக எழுதும்.

    கவர்னர் மோசமாக நடத்தப்பட்டார் என்று எதிர்மறையாக வரலாறு எழுதப்படுவதை நான் விரும்பவில்லை பெண் என்பதற்காக மட்டும் எனது உரிமைகளை கோர விரும்பவில்லை.

    சட்டசபையில் கவர்னர் உரைக்கு அனுமதி மறுக்கப்பட்டது. குடியரசு தினத்தன்று கொடியேற்ற அனுமதிக்கப்படவில்லை. எனது அரசுமுறை பயணங்களின்போது மரபுகள் பின்பற்றப்படவில்லை.

    கவர்னர் பதவி அவமதிக்கப்படுகிறது. உதாரணமாக, கவர்னர் மாளிகையில் நான் விருந்து அளித்தபோது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உயர்ந்த பதவியில் இருப்பவர் வரமாட்டார் என்ற தகவலை என்னிடம் தெரிவித்து இருக்க வேண்டும்.

    முதலில், வருவதாக சொன்னார்கள். பிறகு தகவலே இல்லை. உரிய நடைமுறை பின்பற்றப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மாணவர் மீது ரெயில் மோதும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. இது பார்ப்போரை அதிர்ச்சியடைய செய்கிறது.
    • அசும்பாவித சம்பவங்களை தவிர்க்க தண்டவாளம் அருகே டிக் டாக் செய்வதை தவிர்க்க வேண்டும் என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், அனுமாகொண்டா மாவட்டம் காஜி பேட்டையை சேர்ந்தவர் அக்‌ஷய் (வயது 17). இவர் அங்குள்ள கல்லூரியில் இன்டர்மீடியட் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

    நேற்று முன்தினம் காஜி பேட்டை ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் தனது நண்பர்களுடன் ரூல்ஸ் எனும் புதிய ஆப்பிள் டிக் டாக் செய்து கொண்டு இருந்தனர்.

    அப்போது காஜி பேட்டையில் இருந்து பாலாஷா சென்ற பயணிகள் ரெயில் வேகமாக வந்தது. தண்டவாளம் அருகே அக்‌ஷய் நடந்து வரும்போது பின்புறம் ரெயில் வருவது போல் செல்போனில் படம் பிடித்தனர். தண்டவாளத்தின் அருகில் சென்ற அக்‌ஷய் மீது ரெயில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயம் அடைந்தார். ரத்த வெள்ளத்தில் துடி துடித்தார்.







    இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் அவரை மீட்டு அங்குள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மாணவர் மீது ரெயில் மோதும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. இது பார்ப்போரை அதிர்ச்சியடைய செய்கிறது.

    எனவே அசும்பாவித சம்பவங்களை தவிர்க்க தண்டவாளம் அருகே டிக் டாக் செய்வதை தவிர்க்க வேண்டும் என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு உதவிகள் செய்து வருகிறார்.
    • முன்னணி நடிகர்களும் ஏழை, எளிய மக்களுக்கு உதவ வேண்டும்.

    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில் உள்ள சிரஞ்சீவி கண் மற்றும் ரத்த வங்கியில் 50 முறைக்கு மேல் ரத்த தானம் செய்த தன்னார்வலர்களுக்கு தெலுங்கு திரைப்பட மெகா ஸ்டார் சிரஞ்சீவி இலவச ஆயுள் காப்பீடு அட்டை வழங்கி வருகிறார்.

    தெலுங்கானா ஆளுநர் மாளிகையான ராஜ்பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அம்மாநில ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் பயனாளர்களுக்கு இலவச ஆயுள் காப்பீடு அட்டை வழங்கினார் இதில் நடிகர் சிரஞ்சீவி கலந்து கொண்டார். 


    மேலும் சிரஞ்சீவி அறக்கட்டளை சார்பில் இதுவரை 9,30,000 யூனிட் இரத்தம் மற்றும் 4,580 ஜோடி கண்தானம் செய்ததற்காக அப்போது ஆளுநர் பாராட்டு மற்றும் வாழ்த்துத் தெரிவித்தார்.

    ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு உதவிகள் செய்து வரும் சிரஞ்சீவியை பின்பற்றி மற்ற முன்னணி நடிகர்களும் ஏழை, எளிய கலைஞர்களுக்கும், மக்களுக்கும் உதவ வேண்டுமென தமிழிசை சௌந்தரராஜன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    • மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெலுங்கானா மாநிலம் சென்றார்.
    • அங்கு ரேஷன் கடையை ஆய்வு செய்த அவர், ரேஷன் கடைகளில் பிரதமர் மோடி படம் இல்லாதது ஏன் என கேள்வி எழுப்பினார்.

    ஐதராபாத்:

    தெலுங்கான மாநிலத்தின் ஜஹீராபாத் பாராளுமன்ற தொகுதியில் நேற்று நடைபெற்ற மத்திய அரசின் நலத்திட்ட நிகழ்ச்சியில் மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் பங்கேற்றார். பின்னர் அவர் அங்குள்ள ரேஷன் கடையை ஆய்வு செய்தார்.

    அப்போது மத்திய அரசு அதிக மானியம் கொடுக்கும்போது, ரேஷன் கடைகளில் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் இல்லாதது ஏன் என மாவட்ட ஆட்சியரை கடிந்து கொண்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

    இந்நிலையில், நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியினர் கியாஸ் சிலிண்டரில் பிரதமர் மோடியின் படத்தை ஒட்டியுள்ளனர். அதில் கியாஸ் விலையும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவும் வைரலாக பரவி வருகிறது.

    இதுதொடர்பான வீடியோவை தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியின் நிர்வாகி கிரிஷன் பகிர்ந்திருப்பதோடு, பிரதமர் மோடியின் புகைப்படத்தைத் தானே கேட்டீர்கள், இங்கே இருக்கிறது என பதிவிட்டுள்ளார். இது தற்போது வைரலாகப் பரவி வருகிறது.

    ×