என் மலர்tooltip icon

    பஞ்சாப்

    • டிஜிட்டல் கரன்சியை படிப்படியாக அறிமுகப்படுத்த உள்ளோம்.
    • சாதாரண பணத்தைப்போல பாதுகாப்பு அம்சங்களும் உள்ளன.

    சண்டிகார் :

    பஞ்சாப் மாநில தலைநகர் சண்டிகாரில், ரிசர்வ் வங்கி ஏற்பாடு செய்த டிஜிட்டல் கரன்சி தொடர்பான கருத்தரங்கம் நடந்தது. அதில், ரிசர்வ் வங்கி செயல் இயக்குனர் அஜய்குமார் சவுத்ரி பேசியதாவது:-

    ரிசர்வ் வங்கி சில மாதங்களுக்கு முன்பு டிஜிட்டல் கரன்சியை மொத்த பயன்பாட்டுக்கும், சில்லரை பயன்பாட்டுக்கும் தனித்தனியாக சோதனை முறையில் அறிமுகப்படுத்தியது.

    பணத்தின் பரிணாமத்தில் இது ஒரு மைல்கல். சோதனை முறை முடிந்து, டிஜிட்டல் கரன்சியை படிப்படியாக அறிமுகப்படுத்த உள்ளோம்.

    தற்போது, 115 நாடுகள் டிஜிட்டல் கரன்சி வெளியிட பரிசீலித்து வருகின்றன. ஜி20 அமைப்பை சேர்ந்த 18 நாடுகள் பரிசீலித்து வருகின்றன.

    டிஜிட்டல் கரன்சி என்பது சாதாரண பணத்தின் டிஜிட்டல் வடிவம் மட்டுமே. அதை சாதாரண பணத்துக்கான மாற்றுவழியாக கருதக்கூடாது. சாதாரண பணத்துக்கான அனைத்து மதிப்பும் டிஜிட்டல் கரன்சிக்கு உள்ளது. சாதாரண பணத்தைப்போல பாதுகாப்பு அம்சங்களும் உள்ளன.

    ஆனால், சாதாரண பணத்துக்கு அளிப்பதுபோல், டிஜிட்டல் கரன்சிக்கு வட்டி அளிக்கப்படாது. டிஜிட்டல் கரன்சி, மின்னணு பொருளாதாரத்தை மேலும் வலுப்படுத்தும். பணம் செலுத்தும் முறையை மேலும் திறம்பட மாற்றும். சாதாரண பணத்தை கையாள்வதில் உள்ள செலவை குறைக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 88 வயதான முதியவர் மகா சங்கராந்தியையொட்டி நடந்த பம்பர் குலுக்கலில் லாட்டரி வாங்கி உள்ளார்.
    • லாட்டரியில் முதியவருக்கு ரூ. 5 கோடி பரிசு விழுந்துள்ளது.

    சண்டிகர்:

    சாதாரண தொழிலாளி ஒரே நாளில் கோடீஸ்வரராக மாறுவது எல்லாம் சினிமாவில் மட்டும் தான் நடக்கும் என்பதில்லை.

    அதிர்ஷ்டம் இருந்தால் நிஜ வாழ்க்கையிலும் நடக்கலாம் என்பது போன்ற சம்பவம் 88 வயது முதியவருக்கு நடந்துள்ளது. பஞ்சாப் மாநிலம் மொகாலி மாவட்டத்தில் உள்ள தேராபஸ்ஸி பகுதியை சேர்ந்தவர் துவாரகா தாஸ்.

    88 வயதான இவர் மகா சங்கராந்தியையொட்டி நடந்த பம்பர் குலுக்கலில் லாட்டரி வாங்கி உள்ளார். இதில் அவருக்கு ரூ. 5 கோடி பரிசு விழுந்துள்ளது.

    இவர் ஜிராக்பூரில் இருந்து லாட்டரி சீட்டை வாங்கி உள்ளார். பரிசு தொகையில் வரி பிடித்தம் போக ரூ.3.5 கோடி அவருக்கு கிடைக்கும்.

    அவருக்கு பரிசு சீட்டை விற்ற லோகேஷ் என்பவர் கூறுகையில், துவாரகா தாசின் பேரன் நிகில் ஷர்மா என்னிடம் வந்து அவருடைய தாத்தா குறிப்பிட்ட இலக்கங்களை கொண்ட லாட்டரி சீட்டை கேட்டதாக கூறினார். அதன்படி அந்த டிக்கெட்டை கொடுத்தேன்.

    தற்போது அந்த டிக்கெட்டுக்கு மெகா பம்பர் பரிசு கிடைத்துள்ளது. அவருக்கு லாட்டரி சீட்டை விற்றதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் என்றார்.

    துவாரகா தாஸ் 1947-ம் ஆண்டு பாகிஸ்தானில் இருந்து பஞ்சாப்புக்கு குடி பெயர்ந்தவர். அப்போது அவருக்கு வயது 13. பரிசு கிடைத்தது குறித்து அவர் கூறியதாவது:-

    ஒரு நாள் பம்பர் பரிசு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நான் ஒவ்வொரு மாதமும் லாட்டரி சீட்டுகளை வாங்கினேன். அந்த பணத்தை இப்போது என் குடும்பத்தினர் நல்ல முறையில் பயன்படுத்துவார்கள். நான் என் வாழ்நாள் முழுவதும் நிறைய வேலை செய்தேன். ஆனால் எந்த தவறும் செய்யவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொழிலாளிக்கு கிடைத்த மெகா பம்பர் பரிசால் அந்த பகுதியில் கொண்டாட்டங்கள் நடந்தன. அப்போது துவாரகா தாசின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் ஆடிப்பாடி கொண்டாடினர்.

    • விமானம் திட்டமிடப்பட்ட நேரத்துக்கு முன்பாக மாலை 3 மணிக்கே சிங்கப்பூருக்கு புறப்பட்டு சென்றது.
    • விமானம் முன்னதாக புறப்பட்டு சென்ற தகவலை அறிந்த அந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

    அமிர்தசரஸ்:

    பெங்களூருவில் இருந்து டெல்லிக்கு கடந்த 9-ந் தேதி புறப்பட்ட விமானம் ஒன்று 55 பயணிகளை ஏற்றிக்கொள்ளாமல் புறப்பட்டு சென்றது. அந்த பயணிகள், விமான நிலைய பஸ்சில் சிக்கி கொண்டதால் அவர்களை விட்டுவிட்டு விமானம் புறப்பட்டு சென்றது.

    இந்த நிலையில் இதேபோன்ற சம்பவம் மீண்டும் நடந்துள்ளது. அமிர்தசரசில் 35 பயணிகளை ஏற்றி கொள்ளாமல் சிங்கப்பூர் விமானம் புறப்பட்டு சென்றது. பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூருக்கு ஸ்கூட் ஏர்லைன் விமானம் நேற்று இரவு 7.55 மணிக்கு புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    ஆனால் அந்த விமானம் திட்டமிடப்பட்ட நேரத்துக்கு முன்பாக மாலை 3 மணிக்கே சிங்கப்பூருக்கு புறப்பட்டு சென்றது. 35 பயணிகளை ஏற்றிக்கொள்ளாமல் விமானம் புறப்பட்டுவிட்டது. விமானம் முன்னதாக புறப்பட்டு சென்ற தகவலை அறிந்த அந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக அவர்கள் விமான நிறுவனத்திடம் முறையிட்டனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக விமான நிலைய இயக்குனர் வி.கே.சேக் கூறும்போது, சிங்கப்பூர் விமானம் விட்டு சென்ற அனைத்து பயணிகளும் தங்குவதற்கு வசதி செய்யப்படுவதாக விமான நிறுவனம் மூலம் தெரிவிக்கப்பட்டது.

    இந்த சம்பவத்திற்கான காரணம் குறித்து கேட்டபோது, பயணிகள் விமான டிக்கெட்டை முன்பதிவு செய்த முகவர் நேர மாற்றம் குறித்து தங்களுக்கு தெரிவிக்கவில்லை என்று கூறினார் என்றார்.

    விமான நிறுவன தரப்பினர் கூறும்போது, விமான நேர மாற்றம் குறித்து பயணிகளுக்கு மின்னஞ்சல் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது என்று தெரிவித்தனர்.

    • காங்கிரஸ் பாதயாத்திரையில் ராகுல் காந்தியை திடீரென ஒரு நபர் ஓடிவந்து கட்டி பிடித்தார்.
    • அருகிலிருந்த கட்சி தொண்டர்கள் உடனே அவரை விலக்கி அப்புறப்படுத்தினர்.

    சண்டிகர்:

    காங்கிரஸ் எம்.பி.யான ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை யாத்திரையை கடந்த செப்டம்பர் 7-ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கினார். தமிழகம், கேரளா, கர்நாடகா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம் மற்றும் டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் வழியே இந்த யாத்திரை கடந்து சென்றுள்ளது. கடந்த 6-ம் தேதி அரியானாவுக்குள் யாத்திரை நுழைந்தது. அதன்பின் இந்த யாத்திரையானது தொடர்ந்து, பஞ்சாப்பில் நடந்து வருகிறது.

    லூதியானாவில் கடந்த 14-ம் தேதி நடந்தது. இதில், கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சியின் எம்.பி. சந்தோக் சிங் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்து விட்டார். இதனால், அன்றைய தினம் யாத்திரை ரத்து செய்யப்பட்டது.

    இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தின் ஹோசியார்ப்பூர் பகுதியில் காலையில் யாத்திரை தொடங்கி நடந்து வருகிறது. இதில், ராகுல் காந்தியை திடீரென ஒருவர் ஓடி வந்து கட்டி பிடித்துள்ளார். அருகிலிருந்த கட்சி தொண்டர்கள் உடனே அவரை விலக்கி அப்புறப்படுத்தினர். இதனால் அங்கு சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

    • வருண் காந்தி எனது பாத யாத்திரையில் பங்கேற்றால் அவர் சிக்கலை சந்திக்க நேரிடும்.
    • பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புகள், மத்திய நிறுவனங்களை கட்டுப்படுத்துகின்றன.

    ஹோஷியார்பூர்:

    இந்திய ஒற்றுமை பயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரது உறவினரும் பாஜக எம்பியுமான வருண் காந்தியை சந்திப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்து ராகுல் காந்தி கூறியதாவது:-

    அவர்களின் சித்தாந்தங்கள் எங்களுடன் ஒத்துப்போகாது. வருண் காந்தி எனது பாத யாத்திரையில் பங்கேற்றால் அவர் சிக்கலை சந்திக்க நேரிடும். பாஜக அதை ஏற்காமல் போகலாம்.

    என்னால் ஆர்எஸ்எஸ் அலுவலகத்திற்கு போக முடியாது. என் கழுத்தை அறுத்தாலும் அங்கு நான் போக மாட்டேன். எனது குடும்பத்திற்கு என ஒரு சித்தாந்தம் உள்ளது, அதற்கு ஒரு சிந்தனை அமைப்பு உள்ளது. நான் அவரை அன்புடன் சந்திக்க முடியும், அவரை கட்டிப்பிடிக்க முடியும். ஆனால் அந்த சித்தாந்தத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது, அதற்கு சாத்தியம் இல்லை.

    பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புகள், மத்திய நிறுவனங்களை கட்டுப்படுத்துகின்றன. தேர்தல் ஆணையம், நீதித்துறை மீது அழுத்தம் கொடுக்கிறது. அனைத்து நிறுவனங்களுக்கும் அழுத்தம் உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணம் தற்போது பஞ்சாபில் நடைபெற்று வருகின்றது.
    • அங்கு நடந்த கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, பகவந்த் மான் அரசை கடும் விமர்சனம் செய்தார்.

    சண்டிகர்:

    கன்னியாகுமரியில் தொடங்கிய ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணம் 122வது நாளாக பஞ்சாபில் தற்போது நடைபெற்று வருகின்றது.

    இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தின் சோசியார்பூர் பகுதியில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய ராகுல் காந்தி, பகவந்த் மான் அரசை கடுமையாக விமர்சனம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:

    பஞ்சாப் மாநிலத்தை டெல்லியில் இருந்து இயக்கக் கூடாது. பஞ்சாபை மாநிலத்திலிருந்து அரசு இயக்க வேண்டும். முதல் மந்திரி பகவந்த மானுக்கு ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன், அவர்தான் பஞ்சாபில் முதல் மந்திரி, டெல்லி மற்றும் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் இருந்து வரக்கூடிய அழுத்தத்தில் செயல்படக் கூடாது.

    பகவந்த் மான் கண்டிப்பாக தன்னிச்சையாக செயல்பட வேண்டும். இது வரலாறு சம்பந்தப்பட்ட விஷயம். மாநிலத்தின் மரியாதைக்குரிய விஷயம். நீங்கள் இங்கு சுதந்திரமாக வேலை செய்ய வேண்டும். நீங்கள் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களைக் கேட்டு முடிவுகளை எடுக்க வேண்டும். நீங்கள் ஒருவரின் ரிமோட் கண்ட்ரோலாக இருக்கக் கூடாது என தெரிவித்தார்.

    • பஞ்சாப்பில் இன்று நடைபயணத்தின்போது ஜலந்தர் தொகுதி காங்கிரஸ் எம்.பி. சந்தோக்சிங் சவுத்திரி மரணம் அடைந்தார்.
    • நாளை பிற்பகல் ஜலந்தர் அருகே இருந்து நடைபயணம் தொடரும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணத்தின்போது பஞ்சாப்பில் இன்று ஜலந்தர் தொகுதி காங்கிரஸ் எம்.பி. சந்தோக்சிங் சவுத்திரி மரணம் அடைந்தார்.

    நடைபயணத்தின்போது மயங்கி விழுந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவர் வழியிலேயே இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    இந்தநிலையில் காங்கிரஸ் எம்.பி.யின் மறைவை தொடர்ந்து ராகுல் காந்தியின் பாதயாத்திரை அடுத்த 24 மணி நேரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாளை பிற்பகல் ஜலந்தர் அருகே இருந்து நடைபயணம் தொடரும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    • பா.ஜனதாவும், ஆர்.எஸ்.எஸ்.சும் நாட்டை பிளவுபடுத்துகிறார்கள்.
    • இந்தியா, சகோதரத்துவம், ஒற்றுமை மற்றும் மரியாதைக்காக நிற்கிறது.

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வருகிறார்.

    கடந்த செப்டம்பர் 7ம் தேதி தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த யாத்திரை கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், அரியானா, டெல்லி, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களை கடந்தது.

    கடந்த 5ம் தேதி மீண்டும் அரியானாவுக்குள் நுழைந்த பாதயாத்திரை நேற்று அம்பாலா மாவட்டத்தில் நிறைவடைந்தது.

    இதையடுத்து இன்று பஞ்சாப் மாநிலத்தில் இருந்து ராகுல்காந்தி தனது பாதயாத்திரையை தொடங்குகிறார். இதற்காக பஞ்சாப் சென்ற ராகுல் காந்தி நேற்று அமிர்தசரசில் உள்ள பொற்கோவிலில் வழிபாடு நடத்தினார்.

    பின்னர் நேற்று மாலை சிர்ஹிந்த்துக்கு சென்று அங்கு இரவு தங்கினார். இன்று காலை சிர்ஹிந்தில் உள்ள குருத்வாரா பதேகர் சாகிப்புக்கு ராகுல்காந்தி சென்று வழிபட்டார். அப்போது அவர் தலைப்பாகை அணிந்திருந்தார். அவருடன் பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் அமிர்ந்தர்சிங் ராஜா உள்ளிட்ட தலைவர்கள் உடன் சென்றனர்.

    அப்போது ராகுல் காந்தி பேசியதாவது:-

    இந்திய ஒற்றுமை யாத்திரையில் நான் விவசாயிகள், வியாபாரிகள், தொழிலாளர்கள், வேலையில்லா இளைஞர்கள் என பலரிடம் பேசினேன். இதன் மூலம் இந்த யாத்திரையில் இருந்து நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன்.

    பா.ஜ.க, நாட்டில் பயத்தையும், வெறுப்பையும் பரப்புகிறது. ஆனால் இந்தியா, சகோதரத்துவம், ஒற்றுமை மற்றும் மரியாதைக்காக நிற்கிறது. இதனால்தான் இந்தியா ஒற்றுமை யாத்திரை வெற்றி பெற்றது.

    பா.ஜனதாவும், ஆர்.எஸ்.எஸ்.சும் நாட்டை பிளவுபடுத்துகிறார்கள். ஒரு மதத்தை இன்னொருவருக்கு எதிராகவும், ஒரு சாதியை இன்னொருவருக்கு எதிராகவும், ஒரு மொழியை இன்னொருவருக்கு எதிராகவும் வைத்து நாட்டின் சூழலை கெடுத்துவிட்டார்கள்.

    எனவே அன்பு, ஒற்றுமை, சகோதரத்துவம் கொண்ட மற்றொரு பாதையை நாட்டுக்கு காட்ட வேண்டும் என்று நினைத்தோம். அதற்காகவே இந்த யாத்திரையை தொடங்கியுள்ளோம்.

    இந்த யாத்திரை பொது மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு செல்லும்போது அது சிறப்பாக இருந்தது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பஞ்சாப்பில் இன்று ராகுல்காந்தி தனது யாத்திரையை சிர்ஹிந்தில் இருந்து தொடங்கினார். பஞ்சாப்பில் தினமும் 25 கி.மீ. தூரத்தை கடக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. வருகிற 19ம் தேதி பதன்கோட்டில் யாத்திரை முடிவடைகிறது. பின்னர் ஜம்மு- காஷ்மீருக்குள் நுழைகிறது.

    • ஆம் ஆத்மி கட்சி அவருக்கு இரண்டு காரணங்களுக்காக நோட்டீஸ் அனுப்பியது.
    • ராஜினாமாவுக்குப் பிறகு, பஞ்சாப் அமைச்சரவையில் பெரும் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது

    பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. ஊழலுக்கு எதிராக செயல்படும் அமைச்சர்கள் மீது ஆம் ஆத்மி நடவடிக்கை எடுத்து வருகிறது.

    இந்நிலையில், ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய தோட்டக்கலைத்துறை அமைச்சர் பவுஜா சிங் சராரி இன்று ராஜினாமா செய்துள்ளார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு பவுஜா சிங் பேசிய ஆடியோ ஒன்று வைரலானது. அப்போது அதில், பணம் கையாடல் தொடர்பாக பேசும் வகையில் பதிவாகி இருந்தது.

    இந்த ஆடியோ வைரலானதைத் தொடர்ந்து, ஆம் ஆத்மி கட்சி அவருக்கு இரண்டு காரணங்களுக்காக நோட்டீஸ் அனுப்பியது. இந்நிலையில், அமைச்சர் பவுஜா சிங் சராரி ராஜினாமா செய்துள்ளார்.

    இந்த ராஜினாமாவுக்குப் பிறகு, பஞ்சாப் அமைச்சரவையில் பெரும் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • மாந்தோட்டத்தில் வெடிகுண்டு கிடந்ததை ஆழ்குழாய் கிணறு ஆபரேட்டர் கண்டுபிடித்து தகவல் கொடுத்தார்.
    • வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டபோது பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் வீட்டில் இல்லை

    சண்டிகர்:

    சண்டிகரில் இன்று பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானின் வீட்டின் அருகே வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மாலை 4:30 மணியளவில், ஹெலிபேட் மற்றும் பஞ்சாப் முதல்வரின் வீட்டிற்கு அருகிலுள்ள மாந்தோட்டத்தில் வெடிகுண்டு கிடந்ததை ஆழ்குழாய் கிணறு ஆபரேட்டர் கண்டுபிடித்து தகவல் கொடுத்தார்.

    இதையடுத்து அங்கு வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வெடிகுண்டு பத்திரமாக எடுத்துச் செல்லப்பட்டது. இந்திய ராணுவத்தின் மேற்கு பிரிவும் விசாரணைக்கு அனுப்பப்பட்டுள்ளது. வெடிகுண்டு எப்படி அங்கு வந்தது? என்பது குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.

    வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டபோது பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் வீட்டில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • பாகிஸ்தான் பயங்கரவாதிகள் டிரோன் மூலம் ஆயுதங்களை இந்தியாவுக்குள் அனுப்புவதை வழக்கத்தில் வைத்துள்ளனர்.
    • டிரோனில் பயங்கர ஆயுதங்கள் கடத்தப்பட்டிருப்பது தெரியவந்தது.

    பாகிஸ்தானில் ஆயுத பயிற்சி பெறும் பயங்கரவாதிகள் காஷ்மீர் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ இயலாதபடி எல்லையில் பலத்த பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது.

    இதன் காரணமாக பாகிஸ்தான் பயங்கரவாதிகள் டிரோன் மூலம் ஆயுதங்களையும், போதை பொருட்களையும் இந்தியாவுக்குள் அனுப்புவதை வழக்கத்தில் வைத்துள்ளனர்.

    எல்லையில் அத்துமீறி நுழையும் டிரோன்களை கண்காணிக்க ராணுவ வீரர்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். கடந்த வாரம் மட்டும் ஊடுருவ முயன்ற 3 பாகிஸ்தான் டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன.

    இந்த நிலையில் நேற்று இரவு பஞ்சாப் மாநில எல்லையில் பாகிஸ்தானில் இருந்து டிரோன் ஒன்று ஊடுருவியது. இதை எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் கண்டுபிடித்து உஷாரானார்கள்.

    அந்த டிரோனை நோக்கி சரமாரியாக சுட்டனர். அந்த டிரோன் பாகிஸ்தானுக்குள் திரும்பி செல்ல முயன்றது. என்றாலும் இந்திய ராணுவ வீரர்கள் அந்த டிரோனை சுட்டு வீழ்த்தினார்கள்.

    அமிர்தசரஸ் அருகே ராஜாதல் என்ற இடத்தில் அந்த டிரோன் நொறுங்கி கிடந்தது. அந்த டிரோனில் பயங்கர ஆயுதங்கள் கடத்தப்பட்டிருப்பது தெரியவந்தது. அவற்றை எல்லை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர்.

    • மதுபான ஆலை செயல்பட உள்ளூர் பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு.
    • மக்களின் வாழ்வாதாரத்தை பாதிப்பதுடன் நீர் ஆதாரங்களை அழிப்பதாக குற்றச்சாட்டு.

    பெரோஸ்பூர்:

    பஞ்சாப் மாநிலம் ஃபெரோஸ்பூர் மாவட்டம் மன்சுர்வால் கிராமத்தில் உள்ள மதுபான ஆலைக்கு எதிராக அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் நீண்ட காலமாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.இந்த தொழிற்சாலை உள்ளூர் மக்களின் வாழ்வாதாரத்தை பாதிப்பதுடன் அப்பகுதி நீர் ஆதாரங்களையும் அழிப்பதாகவும் அவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். மதுபான ஆலைக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறி கடந்த ஜூலை மாதத்தில் இருந்து அந்த பகுதியில் போராட்டம் நடைபெற்று வந்தது.

    மதுபான ஆலையால் சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதுடன் விளைச்சல் குறைந்ததாகவும் குற்றம் சாட்டி, அந்த ஆலையின் வாயிலை இன்று முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள் கோஷங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அங்கு விரைந்து வந்த போலீசார் போராட்டக்கார்களை தடுத்து நிறுத்த முற்பட்டபோது இரு தரப்பினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் பதற்றமான நிலை காணப்பட்டது.

    ×