என் மலர்tooltip icon

    பஞ்சாப்

    • அம்ரித்பால் சிங் கைது செய்யப்பட்டதால் பஞ்சாப் மாநிலத்தில் பதற்றம் நிலவி வருகிறது.
    • வதந்திகள் பரவாமல் இருக்க நாளை மதியம் 12 மணி வரை இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது.

    சண்டிகர்:

    சீக்கியர்கள் அதிகம் வசிக்கும் பஞ்சாப் மாநிலத்தில் காலிஸ்தான் தனி நாடு கோரிக்கை நீண்டகாலமாக இருந்து வருகிறது. பஞ்சாப் மாநிலத்தை இந்தியாவில் இருந்து பிரித்து காலிஸ்தான் தனி நாடு என அறிவிக்க வேண்டும் என்பதே அந்த கோரிக்கை. கடந்த சில ஆண்டுகளாக பெரிய அளவில் வலியுறுத்தல் இல்லாத நிலையில், சமீப காலமாக காலிஸ்தான் பிரிவினைவாதம் மீண்டும் தலைதூக்கி உள்ளது.

    காலிஸ்தான் பிரிவினைவாதம் பேசி பரபரப்பை ஏற்படுத்தி வந்த சீக்கிய மதபோதகர் அம்ரித்பால் சிங்கை இன்று போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அம்ரித்பால் சிங் ஜலந்தரின் ஷாகோட் பகுதிக்கு இன்று வருவதாக தகவல் கிடைத்ததையடுத்து அவரை கைது செய்ய போலீசார் முடிவு செய்தனர். அவர் தனது ஆதரவாளர்களுடன் காரில் சென்றபோது, போலீசார் சினிமா பாணியில் அவரை விரட்டி மேஹத்பூர் கிராமத்தில் சுற்றிவளைத்து கைது செய்துள்ளனர்.

    இந்த சம்பவத்தால் தற்போது பஞ்சாப் மாநிலத்தில் பதற்றம் நிலவி வருகிறது. இதனால் அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வதந்திகள் பரவாமல் இருக்க நாளை மதியம் 12 மணி வரை இணையதள சேவை மற்றும் எஸ்எம்எஸ் சேவை முடக்கப்பட்டுள்ளது.

    நடிகர் தீப் சித்துவால் தொடங்கப்பட்ட ‛வாரிஸ் பஞ்சாப் தே'' என்ற அமைப்பின் தலைமை பொறுப்பில் அம்ரித்பால் சிங் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ஆனந்த்பூர் சாகிப் தொகுதியில் இருந்து முதல் முறையாக ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏ.வாக தேர்ந்து எடுக்கப்பட்டவர் ஹர்ஜோத் சிங் பெயின்ஸ்.
    • மணப்பெண்ணான ஜோதி யாதவ், பஞ்சாபின் மான்சா மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டாக உள்ளார்

    சண்டிகார்:

    பஞ்சாப் மாநிலம், ரூப்கர் மாவட்டத்தில் உள்ள ஆனந்த்பூர் சாகிப் தொகுதியில் இருந்து முதல் முறையாக ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏ.வாக தேர்ந்து எடுக்கப்பட்டவர் ஹர்ஜோத் சிங் பெயின்ஸ். தற்போது முதல்-மந்திரி பகவந்த் மான் அரசில் கல்வி மந்திரியாக உள்ளார். அங்குள்ள கம்பீர்பூர் கிராமத்தை சேர்ந்த 32 வயதான பெயின்ஸ் வக்கீல் ஆவார். கடந்த 2017-ம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் சாஹ்னேவால் தொகுதியில் போட்டியிட்டு அவர் தோல்வியடைந்தார்.

    இந்நிலையில் தற்போது நடந்த தேர்தலில் வெற்றி பெற்று மந்திரி ஆனார். ஆம் ஆத்மியின் இளைஞர் பிரிவுக்கு தலைமை வகிக்கிறார். இவருக்கு தற்போது ஐ.பி.எஸ். அதிகாரியுடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. மணப்பெண்ணான ஜோதி யாதவ், பஞ்சாபின் மான்சா மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டாக உள்ளார். இவர் அரியானா மாநிலம் குருகிராம் பகுதியை சேர்ந்தவர். இருவருக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

    இம்மாத இறுதியில் இவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற உள்ளதாக ஆம் ஆத்மி கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    • மாபியா கும்பலை ஒழித்ததற்காக பகவந்த் மான் தலைமையிலான அரசாங்கத்தை நிதியமைச்சர் பாராட்டினார்.
    • விவசாயம் மற்றும் அதை சார்ந்த துறைகளுக்கு மொத்தம் ரூ.13,888 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    சண்டிகர்:

    பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி அரசு தனது முதல் முழுமையான பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தது. நிதியமைச்சர் ஹர்பால் சிங் சீமா பட்ஜெட்டை தாக்கல் செய்தார். ரூ.1,96,462 கோடியில் தாக்கல் செய்துள்ள இந்த பட்ஜெட்டில் கல்வி, சுகாதாரம் மற்றும் விவசாயம் ஆகிய துறைகளில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

    நிதியமைச்சர் சீமா தனது அறிமுக உரையில், பஞ்சாப் மாநிலத்தில் ஆதிக்கம் செலுத்திய மாபியா கும்பலை ஒழித்ததற்காக முதல்வர் பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி அரசாங்கத்தை பாராட்டினார். மாநிலத்தை கொள்ளையடித்த ஊழல்வாதிகள் ஜெயில் கம்பிகளுக்கு பின்னால் உள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.

    ஆம் ஆத்மி அரசாங்கம் செய்த பணிகளை கோடிட்டுக் காட்டிய அவர், 'ஆம் ஆத்மி கிளினிக்குகளில் பத்து லட்சம் பேர் இலவச சிகிச்சை பெற்றுள்ளனர். அரசு உயர்நிலைப் பள்ளிகளைத் திறந்துள்ளது. அரசு மற்றும் அரசு நிறுவனங்களில் 26,797 நபர்களுக்கு ஆம் ஆத்மி அரசாங்கத்தால் வேலை வழங்கப்பட்டுள்ளது' என்றார்.

    அவர் மேலும் பேசியதாவது:-

    பட்ஜெட்டில் பள்ளி கல்வி மற்றும் உயர் கல்விக்காக ரூ.17,072 கோடி ஒதுக்கப்படுகிறது. இது முந்தைய ஆண்டை விட 12% அதிகம் ஆகும்.

    விவசாயம் மற்றும் அதை சார்ந்த துறைகளுக்கு மொத்தம் ரூ.13,888 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய நிதியாண்டைவிட 20 சதவீதம் அதிகம். புதிய விவசாயக் கொள்கை விரைவில் வெளியிடப்படும்.

    சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறைக்கு ரூ.4,781 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 11% அதிகம். சட்டம் ஒழுங்கை பராமரிப்பதற்காக, காவல்துறைக்கு ரூ10,523 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 11% அதிகம், உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக ரூ 26,295 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

    அரசாங்கம் 300 யூனிட் மின்சாரம் இலவசம் என்ற வரலாற்று முடிவை எடுத்தது, இதன்மூலம் கிட்டத்தட்ட 90 சதவீத குடும்பங்களுக்கு மின் கட்டணம் எதுவும் வருவதில்லை.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • நபி நகர் பகுதியில் உள்ள ஒரு விவசாய நிலத்தில் இருந்து ட்ரோனை கைப்பற்றினர்.
    • இந்த சம்பவத்தைத் தொடர்ந்து எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    சண்டிகர்:

    பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் செக்டாரில் உள்ள, இந்தியா -பாகிஸ்தான் சர்வதேச எல்லையோர பகுதியில் இந்திய எல்லைப் பாதுகாப்பு படையினர் இன்று வழக்கமான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பாகிஸ்தான் பகுதியில் இருந்து இந்திய எல்லை பகுதியை நோக்கி ஒரு ட்ரோன் பறந்து வந்ததை கவனித்தனர்.

    உஷாரான எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள், அந்த ட்ரோனை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து ட்ரோன் பாகிஸ்தான் நோக்கி திரும்பிச் சென்றது. ஆனால் அதற்குள் ட்ரோன் விழுந்துவிட்டது. நபி நகர் பகுதியில் உள்ள ஒரு விவசாய நிலத்தில் இருந்து அந்த ட்ரோனை கைப்பற்றினர். 6 இறக்கைகளுடன் கூடிய அந்த ட்ரோனில் ஒரு ஏகே ரக துப்பாக்கி, 2 மேகசின்கள் மற்றும் 40 ரவுண்டு சுடக்கூடிய புல்லட்டுகள் இருந்தன. அவற்றை அதிகாரிகள் ஆய்வு செய்துவருகின்றனர்.

    இந்த சம்பவத்தைத் தொடர்ந்து எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

    • சிறிது நேரம் அமர்ந்து கீர்த்தனை நிகழ்ச்சியில் பங்கெடுத்தார்.
    • பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    அமிர்தசரஸ் :

    ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று ஒரு நாள் பயணமாக பஞ்சாப் சென்றார். இதற்காக விமானம் மூலம் அமிர்தசரஸ் சென்ற அவர், அங்குள்ள பொற்கோவிலில் வழிபாடு செய்தார். மேலும் அங்கு சிறிது நேரம் அமர்ந்து கீர்த்தனை நிகழ்ச்சியிலும் பங்கெடுத்தார்.

    ஜனாதிபதியுடன் முதல்-மந்திரி பகவந்த் சிங், சிரோமணி குருத்பாரா பிரபந்தக் கமிட்டி தலைவர் ஹஜிந்தர் சிங் தாமி உள்பட பலர் உடனிருந்தனர்.

    முன்னதாக அமிர்தசரஸ் விமான நிலையத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை மாநில கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்-மந்திரி பகவந்த் சிங் மான், மத்திய மந்திரி சோம் பிரகாஷ், அமிர்தசரஸ் காங்கிரஸ் எம்.பி. குர்ஜீத் சிங் அஜ்லா உள்பட பலர் வரவேற்றனர்.

    பொற்கோவிலில் வழிபட்ட ஜனாதிபதி திரவுபதி முர்மு பின்னர் ஜாலியன் வாலாபாக், துர்கையனா கோவில் உள்ளிட்ட இடங்களுக்கும் சென்றார்.

    ஜனாதிபதி வருகையையொட்டி அமிர்தசரஸ் உள்ளிட்ட இடங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற நபரை துப்பாக்கியால் சுட்டு பிடித்த பாதுகாப்பு படையினர்.
    • முழுமையான விசாரணைக்கு பிறகு அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல்.

    சர்வதேச எல்லை வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற வங்கதேசத்தைச் சேர்ந்த நபரை எல்லைப் பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.

    பஞ்சாபின் அமிர்தசரஸ் செக்டாரில் உள்ள எல்லைப் பகுதியான ரஜதல் பகுதியில் நேற்று நள்ளிரவில் அந்த நபர் ஊடுருவ முயன்றுள்ளார். அப்போது, பணியில் இருந்த பாதுகாப்பு படையினர் அந்த நபரை துப்பாக்கியால் சுட்டனர். பின்னர் கைது செய்தனர்.

    இதுதொடர்பாக நடத்திய முதற்கட்ட விசாரணையில், கைது செய்யப்பட்ட நபர் வங்கதேசத்தை சேர்ந்தவர் என்று தெரிவித்தார். மேலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அதன் பிறகு அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

    • மோதலின்போது நூற்றுக்கணக்கானோர் இருந்த நிலையில் யாரும் சண்டையை தடுக்கவில்லை.
    • ஆபாசமான பாடலை இசைத்ததை தட்டிக்கேட்டதால் கொலை செய்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

    மொகாலி:

    பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் பிரதீப் சிங் (வயது 24). இவர் கடந்த 2016-ம் ஆண்டு கனடா சென்றார். அங்கு வாழ்ந்து வந்த பிரதீப் சிங் கனடா நாட்டு குடியுரிமை பெற்றார். கடந்த பிப்ரவரி மாதம் பிரதீப் சிங் கனடாவில் இருந்து இந்தியா வந்துள்ளார். குர்தாஸ்பூரில் உள்ள தனது சொந்த ஊரான காசிகோட் கிராமத்திற்கு வந்த அவர் குடும்ப உறுப்பினர்களுடன் வசித்து வந்துள்ளார்.

    இந்நிலையில், அனந்தபூர் சாகிப்பில் ஹோலா மொஹல்லா என்ற சீக்கிய கொண்டாட்ட நிகழ்ச்சியில் பிரதீப் சிங் நேற்று பங்கேற்றுள்ளார். அப்போது ஏற்பட்ட சண்டையில் பிரதீப் சிங் குத்தி கொல்லப்பட்டுள்ளார். பிரதீப் சிங்கிற்கும் நிரஞ்சன் சிங் என்பவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகவும், அப்போது நிரஞ்சன் சிங் தான் வைத்திருந்த ஆயுதத்தால் பிரதீப் சிங்கின் வயிற்றில் குத்தியதாகவும் கூறப்படுகிறது.

    இந்த மோதலின்போது நூற்றுக்கணக்கானோர் இருந்த நிலையில் யாரும் சண்டையை தடுக்கவில்லை. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், பிரதீப் சிங்கின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், நிரஞ்சன் சிங்கை போலீசார் கைது செய்தனர். குற்றவாளி நிரஞ்சன் சிங்கிற்கும் காயம் ஏற்பட்டுள்ளதால் போலீசார் பாதுகாப்பில் அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மக்கள் கூட்டம் அதிகம் இருந்த இடத்தில் காரில் வந்த கும்பல் ஆபாசமான பாடலை இசைத்ததை தட்டிக்கேட்டதால் பிரதீப் சிங்கை அந்த கும்பல் கொலை செய்ததாக பிரதீப்பின் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சம்பவத்தன்று பிரதீப் சிங், சீக்கியர்களின் ஒரு பிரிவான நிகங்க் பிரிவினரின் பாரம்பரிய ஆடையை அணிந்திருந்தார். எனினும், அவர் எந்த நிகங்ங் குழுவுடன் தொடர்புடையவரா என்பது உறுதி செய்யப்படவில்லை என மொகாலி சீனியர் போலீஸ் சூப்பிரெண்டு தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. இந்த வீடியோக்களை போலீசார் ஆய்வு செய்கின்றனர். விசாரணை நடைபெற்று வருவதால் பொதுமக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம் என காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

    • பாடகர் சித்து மூஸ் வாலா கடந்த மே மாதம் 29-ம் தேதி சுட்டு கொலை செய்யப்பட்டார்.
    • வி.ஐ.பி-க்களுக்கான பாதுகாப்பை விலக்கப்பட்ட பிறகு இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்தது.

    சண்டிகர்:

    பஞ்சாப் மாநிலம் டர்ன் தரன் மாவட்டத்தில் உள்ள கோவிந்த்வால் சாகிப் மத்திய சிறைச்சாலையில் இன்று பயங்கர மோதல் ஏற்பட்டது. இரு குழுவினரிடையே ஏற்பட்ட இந்த சண்டையில் 2 பேர் கொல்லப்பட்டனர். ஒருவர் பலத்த காயமடைந்தார். கொலை செய்யப்பட்ட இருவரும் பாடகர் சித்து மூஸ் வாலா கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள்.

    மூன்று பேரும் ஒரே குழுவைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் மீது இந்த கொலை வழக்கு தவிர மற்ற சில வழக்குகளும் இருப்பதாகவும் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு குர்மீத் சிங் சவுகான் கூறினார்.

    பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த பிரபல பாடகர் சித்து மூஸ் வாலா கடந்த மே மாதம் 29-ம் தேதி மன்சா மாவட்டத்தில் உள்ள மூஸா என்ற கிராமத்தில் பட்டப்பகலில் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டார். பஞ்சாப் அரசு வி.ஐ.பி-க்களுக்கு கொடுத்துவந்த பாதுகாப்பை விலக்கிக் கொண்ட பிறகுதான் இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்தது. 

    • பசில்கா பகுதியில் கானியாகே கிராம பகுதியில் அந்த டிரோனை எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் பறிமுதல் செய்தனர்.
    • டிரோன் பறந்தது தொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள பஞ்சாப் பஞ்சாப் மாநிலத்தின் எல்லை பகுதிகள் வழியாக அடிக்கடி பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவும் சம்பவங்கள் நடந்து வருகிறது.

    இதையடுத்து அந்த பகுதியில் எல்லை பாதுகாப்பு படையினரும், ராணுவத்தினரும் 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்தநிலையில் நேற்று பஞ்சாப் மாநிலம் பசில்கா மாவட்ட பகுதியில் நேற்று ஒரு டிரோன் பறப்பதை அதிகாரிகள் பார்த்தனர்.

    இதுபற்றி வீரர்கள் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக அவர்கள் அந்த ஆளில்லா டிரோனை பறிமுதல் செய்ய உத்தரவிட்டனர். அதன்படி பசில்கா பகுதியில் கானியாகே கிராம பகுதியில் அந்த டிரோனை எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் பறிமுதல் செய்தனர்.

    அந்த டிரோனை ஆய்வு செய்தபோது அது சீன தயாரிப்பு டிரோன் என தெரியவந்தது. இது தொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கடந்த 24 மணி நேரத்தில் இது 2வது சம்பவம் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • முகமூடி அணிந்த மர்ம நபர்கள் 2 பேர் கையில் துப்பாக்கி மற்றும் ஆயுதங்களுடன் வங்கிக்குள் நுழைந்தனர்.
    • வங்கியில் உள்ள அலாரம் கடந்த சில மாதங்களாக செயல்படாமல் இருந்துள்ளது.

    அமிர்தசரஸ்:

    பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் உள்ள ரானி கா பாக் பகுதியில் பஞ்சாப் நேஷனல் வங்கியின் மண்டல கிளை அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

    நகரின் முக்கிய பகுதியில் உள்ள இந்த வங்கியின் அருகே தான் மாநகர போலீஸ் துணை கமிஷனர் (சட்டம்-ஒழுங்கு), மற்றும் கூடுதல் காவல் துணை ஆணையர் (போக்குவரத்து) ஆகியோரின் அலுவலகங்களும், கன்டோன்மென்ட் போலீஸ் நிலையமும் அமைந்துள்ளது.

    இந்நிலையில் நேற்று பட்டப்பகலில் முகமூடி அணிந்த மர்ம நபர்கள் 2 பேர் கையில் துப்பாக்கி மற்றும் ஆயுதங்களுடன் வங்கிக்குள் நுழைந்தனர்.

    வங்கியின் வளாகத்தில் பாதுகாவலர் யாரும் இல்லை. இதை வசதியாக பயன்படுத்தி கொண்ட மர்ம நபர்கள் வங்கிக்குள் புகுந்து அங்கிருந்தவர்களை ஆயுதங்களால் மிரட்டி உள்ளனர்.

    பின்னர் நேராக காசாளர் அறைக்கு சென்ற ஒரு முகமூடி கொள்ளையன் தன்னிடம் இருந்த கைத்துப்பாக்கியை காட்டி காசாளரை மிரட்டுகிறார். பின்னர் துப்பாக்கி முனையில் காசாளரை மிரட்டியவாறு அங்கிருந்த ரூ.22 லட்சத்து 48 ஆயிரத்தை கொள்ளையடித்துவிட்டு, வெளியே தயாராக நின்ற ஸ்கூட்டரில் ஏறி தப்பி சென்றுவிட்டார்.

    ஒரு சில நிமிடங்களில் நடந்து முடிந்த இந்த துணிகர கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சம்பவ இடத்துக்கு போலீஸ் உயர் அதிகாரிகள் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். வங்கியில் இருந்த சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

    அப்போது கொள்ளையர்களில் 2 பேரில் ஒருவர் வங்கியின் வெளியே தயாராக நிற்பதும், மற்றொரு முகமூடி கொள்ளையன் துப்பாக்கியை கையில் மறைத்து வைத்தவாறு வங்கிக்குள் நுழைந்து கொள்ளையடிக்கும் காட்சிகளும் தெரிந்தது.அவற்றை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதுதொடர்பாக போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், வங்கியின் மேலாளர் அலுவலகம் மற்றும் காசாளர் அறையில் அலாரம் பொத்தான்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அது செயல் படவில்லை. கொள்ளையன் வங்கி வளாகத்திற்குள் நுழைந்த போது எச்சரிக்கை ஒலி எழுப்பும் கருவியையும் யாரும் அழுத்தவில்லை என்றனர்.

    மேலும் வங்கியின் பிரதான காசாளர் விடுமுறையில் இருப்பது விசாரணையில் தெரிய வந்தது. அதே நேரம் நேற்று காசாளர் பணியில் தற்காலிக பணியாளர் ஒருவரை நியமித்துள்ளனர்.

    கொள்ளையன் துப்பாக்கியை காட்டி மிரட்டியதும் பணியில் இருந்த காசாளர் பணத்தை அவரிடம் கொடுத்திருப்பது தெரிய வந்துள்ளது.

    வங்கியில் உள்ள அலாரம் கடந்த சில மாதங்களாக செயல்படாமல் இருந்துள்ளது. அதனை சரி செய்ய கோரி வங்கி அதிகாரியிடம் போலீசார் பலமுறை அறிவுறுத்தி உள்ளனர். ஆனால் அதிகாரிகள் அதை கண்டு கொள்ளாத நிலையில் தான் இந்த துணிகர சம்பவம் நடைபெற்றுள்ளது.

    • சுட்டு வீழ்த்தப்பட்ட டிரோனை இன்று காலையில் எல்லை பகுதியில் இருந்து படை வீரர்கள் கைப்பற்றினர்.
    • டிரோன் சட்டத்திற்கு மாறாக எல்லை பகுதியில் பறந்ததால் சுடப்பட்டதாக எல்லை பாதுகாப்பு படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அமிர்தசரஸ்:

    பஞ்சாப் மாநிலத்தில் உள்ள சர்வதேச எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் டிரோன் இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்களால் சுட்டு வீழ்த்தப்பட்டது. ஆள் இல்லாத அந்த 'டிரோன்' பஞ்சாப் தலைநகர் அமிர்தசரஸ் பகுதியில் உள்ள காக்கர் என்ற இடத்தில் இன்று அதிகாலை இறங்கிய போது எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டனர்.

    சுட்டு வீழ்த்தப்பட்ட டிரோனை இன்று காலையில் எல்லை பகுதியில் இருந்து படை வீரர்கள் கைப்பற்றினர். அந்த டிரோன் சட்டத்திற்கு மாறாக எல்லை பகுதியில் பறந்ததால் சுடப்பட்டதாக எல்லை பாதுகாப்பு படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு படை வீரர்கள் அதனை பறிமுதல் செய்து எதற்காக அவை அனுப்பப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • இது கெட்ட நோக்கத்தின் வெளிப்பாடு.
    • இந்த பாரபட்சமான அணுகுமுறை விரும்பத்தகாதது.

    சண்டிகார் :

    பஞ்சாப் மாநிலம் பதிண்டா நகரில் நடந்த குடியரசு தின விழாவில் முதல்-மந்திரி பகவந்த் மான் தேசிய கொடி ஏற்றினார்.

    பின்னர் அவர் பேசியதாவது:-

    டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின தேசிய அணிவகுப்பில் பஞ்சாப் மாநிலத்தின் அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டுள்ளது. இது கெட்ட நோக்கத்தின் வெளிப்பாடு. மத்தியில் ஆட்சியில் இருப்பவர்களின் குறுகிய மனப்பான்மையை காட்டுகிறது.

    பஞ்சாப்புக்கு எதிரான இந்த பாரபட்சமான அணுகுமுறை, தேவையற்றது, விரும்பத்தகாதது. பஞ்சாப்பின் பங்களிப்பு இல்லாமல் எந்த தேசிய தினம் கொண்டாடுவதையும் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×