என் மலர்tooltip icon

    பஞ்சாப்

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கமலேஷ், யோகேஷ் தமிழகத்தை சேர்ந்தவர்கள். மற்ற 2 பேர் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர்கள்.
    • பதிண்டா ராணுவ முகாமில் 4 வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக ராணுவ வீரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    சண்டிகர்:

    பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ராணுவ முகாமில் 4 ராணுவ வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

    பதிண்டா ராணுவ முகாமில் கடந்த 12-ந் தேதி அதிகாலை 4.35 மணியளவில் 4 வீரர்கள் காயங்களுடன் இறந்து கிடந்தனர். பீரங்கி படையை சேர்ந்தவர்கள்.

    அடையாளம் தெரியாத இருவர் நடத்திய துப்பாக்கி சூட்டில் சாகர் பன்னே (25), கமலேஷ் (24), யோகேஷ் குமார் (24), சந்தோஷ் (24) ஆகிய 4 வீரர்களும் குண்டு பாய்ந்து பலியானார்கள்.

    இதில் கமலேஷ், யோகேஷ் தமிழகத்தை சேர்ந்தவர்கள். மற்ற 2 பேர் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர்கள்.

    இந்த சம்பவம் தொடர்பாக பஞ்சாப் போலீசும் ராணுவமும் இணைந்து விசாரணை நடத்தி வருகிறது.

    இந்த நிலையில் பதிண்டா ராணுவ முகாமில் 4 வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக ராணுவ வீரர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட ராணுவ வீரரின் பெயர் தேசாய் மோகன் ஆவார். இதை பதிண்டா மாவட்ட மூத்த போலீஸ் சூப்பிரண்டு குல்னீத் சிங் குரானா தெரிவித்தார்.

    இது தொடர்பாக அவர் மேலும் கூறும்போது, இதன் நோக்கம் தனிப்பட்டது. அவர்களுடன் அவருக்கு தனிப்பட்ட பகை இருந்து உள்ளது. அவர் குற்றத்தை ஒப்புக் கொண்டு உள்ளார் என்றார்.

    • டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய பஞ்சாப் 153 ரன்கள் எடுத்தது.

    மொஹாலி:

    16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில் இன்று நடக்கும் 18-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற குஜராத் அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பந்துவீச்சை தேர்வுசெய்தார்.

    அதன்படி, பஞ்சாப் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பிரப்சிம்ரன் சிங் டக் அவுட்டானார். கெப்டன் ஷிகர் தவான் 8 ரன்னில் வெளியேறினார்.

    அடுத்து இறங்கிய மேத்யூ ஸ்காட் 24 பந்தில் 36 ரன்கள் எடுத்தார். பானுகா ராஜபக்ச 20 ரன்னும், ஜிதேஷ் சர்மா 25 ரன்னும், சாம் கர்ரன் 22 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    கடைசி கட்டத்தில் ஷாருக் கான் 2 சிக்சர் உள்பட 22 ரன்கள் எடுத்தார்.

    இறுதியில், பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 153 ரன்களை எடுத்துள்ளது. இதையடுத்து, 154 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களமிறங்குகிறது.

    • ராணுவ வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக இந்த துப்பாக்கி சூடு நடந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
    • 2 நாட்களுக்கு முன்பு ராணுவ முகாமில் ஒரு துப்பாக்கியும் குண்டுகளும் மாயமாகி இருந்தன.

    சண்டிகர்:

    பஞ்சாப் மாநிலத்தில் பதிண்டா என்ற பகுதியில் ராணுவ முகாம் உள்ளது. அதிநவீன ஆயுதங்களை கையாளும் அந்த முகாமில் ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.

    அந்த ராணுவ வீரர்கள் வசிப்பதற்காக ராணுவ முகாம் வளாகத்தில் ஆங்காங்கே குடியிருப்புகளும் அமைக்கப்பட்டுள்ளன.

    இன்று (புதன்கிழமை) அதிகாலை 4.30 மணியளவில் அந்த ராணுவ முகாமுக்குள் சரமாரியாக துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. இதனால் ராணுவ வீரர்களும், அவர்களது குடும்பத்தினரும் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

    பயங்கரவாதிகள் ஊடுருவி தாக்குதல் நடத்துகிறார்களோ என்ற பரபரப்பு ஏற்பட்டது. துப்பாக்கி சத்தம் கேட்ட சில நிமிடங்களில் பதிலடி கொடுக்கும் அதிரடி படையினர் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

    அந்த ராணுவ முகாம் முழுவதும் சுற்றி வளைக்கப்பட்டது. வெளிநபர்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. ராணுவ வளாகம் முழுவதையும் சீல் வைத்து தேடுதல் வேட்டை நடத்தினார்கள்.

    உள்ளூர் போலீசார் கூட உள்ளே வருவதற்கு அனுமதிக்கப்படவில்லை. துப்பாக்கி சூடு நடந்த அதிகாரிகள் உணவக பகுதியில் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.

    அப்போது குண்டு பாய்ந்து 4 பேர் பலியாகி கிடப்பது தெரியவந்தது. அவர்களது உடல்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவர்களை சுட்டுக்கொன்றது யார் என்று தெரியவில்லை.

    ராணுவ உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். பிறகு துப்பாக்கி சூடு தொடர்பாக விசாரணை தொடங்கியது. அந்த பகுதியில் இருந்த வீரர்கள் அனைவரும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டனர்.

    பதிண்டா ராணுவ முகாமுக்குள் துப்பாக்கி சூடு நடத்தியது பயங்கரவாதிகள் அல்ல என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அப்படியானால் துப்பாக்கி சூடு நடத்தியது யார் என்பதில் நீண்ட நேரமாக மர்மம் நீடித்தது.

    ராணுவ வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக இந்த துப்பாக்கி சூடு நடந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. துப்பாக்கியால் சுட்டவர்கள் 2 பேர் என்று முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    அவர்கள் இருவரும் சாதாரண உடையில் இருந்தனர். அவர்கள் ராணுவ வீரர்களா? அல்லது வெளியில் இருந்து ஊடுருவியவர்களா? என்று விசாரணை நடந்து வருகிறது.

    2 நாட்களுக்கு முன்பு ராணுவ முகாமில் ஒரு துப்பாக்கியும் குண்டுகளும் மாயமாகி இருந்தன. அது பற்றி விசாரணை நடந்து வந்த நிலையில் துப்பாக்கி சூடு நடந்திருக்கிறது.

    எனவே ராணுவ வீரர்களில் 2 பேர் தான் துப்பாக்கி சூடு நடத்தி இருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.

    • கோடை காலத்தில் அலுவலக நேர மாற்றம், மின் தேவையின் சுமையை குறைக்கும் என்றார்.
    • புதிய அலுவலக நேரம் ஜூலை 15ம் தேதி வரை அமலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பஞ்சாப் மாநிலத்தில் வரும் மே மாதம் 2ம் தேதி முதல் அலுவலக நேரத்தை மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் பகவந்த் மான் தெரிவித்துள்ளார்.

    தற்போது மாநில அரசுத் துறைகளின் அலுவலக நேரம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படுகிறது. இந்நிலையில், வரும் மே மாதம் 2ம் தேதி முதல் அனைத்து அரசு அலுவலகங்களும் காலை 7.30 மணிக்கு திறக்கப்பட்டு மதியம் 2 மணிக்கு மூடப்படும் என்று பஞ்சாப் அரசு முடிவு செய்துள்ளது.

    இந்த புதிய அலுவலக நேரம் ஜூலை 15ம் தேதி வரை அமலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த முடிவு மாநில அரசு ஊழியர்கள் உள்பட பலருடன் கலந்துரையாடியதைத் தொடர்ந்து எடுக்கப்பட்டதாக முதல்வர் பகவந்த் மான் தெரிவித்தார்.

    மேலும், கோடை காலத்தில் அலுவலக நேர மாற்றம், மின் தேவையின் சுமையை குறைக்கும் என்றார்.

    பஞ்சாப் மாநில பவர் கார்ப்பரேஷன் லிமிடெட், மதியம் 1.30 மணிக்கு மேல் பீக் லோட் (மின்சாரம்) தொடங்கும் என்றும், மதியம் 2 மணிக்கு அரசு அலுவலகங்கள் மூடப்பட்டால், பீக் லோட் 300 முதல் 350 மெகாவாட் வரை குறைக்க உதவும் என்றும் முதல்வர் கூறினார்.

    பகலில் வெப்பமான காலநிலையின் உச்ச நேரம் தொடங்கும் முன், அரசு அலுவலகங்களில் தங்கள் வேலையைச் செய்து முடிப்பதால், இந்த முடிவு சாமானிய மக்களுக்கும் பயனளிக்கும் என்றும் முதல்வர் கூறினார்.

    இதைதவிர, ஊழியர்கள் அலுவலக நேரத்திற்குப் பிறகு சமூக நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடியும், தங்கள் குழந்தைகளுடன் அதிக நேரத்தை செலவிட முடியும் என்பதால் இது அவர்களுக்கு வசதியாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

    • கடந்த ஆண்டு மே 20-ந் தேதி, பாட்டியாலாவில் உள்ள கோர்ட்டில் சரண் அடைந்தார்.
    • இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் வீரர் நவ்ஜோத்சிங் சித்து, காங்கிரசில் பணியாற்றி வருகிறார்.

    சண்டிகார்:

    இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் வீரர் நவ்ஜோத்சிங் சித்து, காங்கிரசில் பணியாற்றி வருகிறார்.

    அவர் 1988-ம் ஆண்டு சாலையில் ஏற்பட்ட தகராறில் 65 வயது முதியவரை தாக்கியதில், முதியவர் உயிரிழந்தார். இதன் மேல்முறையீட்டு வழக்கில், சித்துவுக்கு சுப்ரீம் கோர்ட்டு ஓராண்டு சிறைத்தண்டனை விதித்தது.

    அதைத்தொடர்ந்து, அவர் கடந்த ஆண்டு மே 20-ந் தேதி, பாட்டியாலாவில் உள்ள கோர்ட்டில் சரண் அடைந்தார். பிறகு, பாட்டியாலா சிறையில் அடைக்கப்பட்டார்.

    சிறையில் நன்னடத்தையுடன் செயல்படுபவர்களுக்கு தண்டனை குறைப்பு அளிக்க பஞ்சாப் சிறைத்துறை விதிமுறை வகை செய்கிறது. அதன்படி, சித்து தண்டனை குறைப்பு பெற்று இன்று (சனிக்கிழமை) பாட்டியாலா சிறையில் இருந்து விடுவிக்கப்படுவார் என்று அவருடைய வக்கீல் வர்மா தெரிவித்தார்.

    • அம்ரித்பால் சிங் போலீசாரின் கைது நடவடிக்கைளுக்கு பயந்து தலைமறைவாக உள்ளார்.
    • அம்ரித்பால் சிங்கின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    சண்டிகார் :

    பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த பிரிவினைவாத தலைவரான அம்ரித்பால் சிங் போலீசாரின் கைது நடவடிக்கைளுக்கு பயந்து தலைமறைவாக உள்ளார். அவர் நேபாளத்தில் பதுங்கியிருக்கலாம் என கருதப்படுகிறது.

    இந்த நிலையில் தனது ஆதரவாளர்களை கைது செய்துள்ள பஞ்சாப் போலீசாரை கண்டித்து வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டு உள்ளார். அதில் மாநில அரசுக்கு தன்னை கைது செய்யும் நோக்கம் இருந்தால், போலீசார் தனது வீட்டுக்கு வரட்டும் என கூறியுள்ளார்.

    அந்த வீடியோ பதிவில் அவர் மேலும் கூறுகையில், 'என்னை கைது செய்வதற்கு அனுப்பி வைக்கப்பட்ட லட்சக்கணக்கான போலீசாரிடம் இருந்து கடவுள்தான் எங்களை காப்பாற்றினார்' என தெரிவித்து உள்ளார். அம்ரித்பால் சிங்கின் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது பஞ்சாப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • வக்கீலான ஹர்ஜோத் சிங் பெயின்ஸ் தற்போது முதல்-மந்திரி பகவந்த் மான் அரசில் கல்வி மந்திரியாக உள்ளார்.
    • ஹர்ஜோத் சிங் பெயின்சுக்கு பெண் ஐ.பி.எஸ். அதிகாரியான ஜோதி யாதவுடன் சமீபத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

    சண்டிகர்:

    பஞ்சாப் மாநிலத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் ரூப்நகர் மாவட்டத்தில் உள்ள ஆனந்த்பூர் சாகிப் தொகுதியில் இருந்து ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஹர்ஜோத் சிங் பெயின்ஸ். வக்கீலான ஹர்ஜோத் சிங் பெயின்ஸ் தற்போது முதல்-மந்திரி பகவந்த் மான் அரசில் கல்வி மந்திரியாக உள்ளார். 32 வயதான ஹர்ஜோத் சிங் பெயின்சுக்கு பெண் ஐ.பி.எஸ். அதிகாரியான ஜோதி யாதவுடன் சமீபத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

    இந்த நிலையில் இவர்கள் இருவருக்கும் ரூப்நகர் மாவட்டத்தில் உள்ள குருத்வாராவில் நேற்று திருமணம் நடந்தது. அரியானா மாநிலம் குருகிராம் பகுதியை சேர்ந்த ஜோதி யாதவ் தற்போது பஞ்சாபின் மான்சா மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அரியானா, உத்தரகாண்ட் மற்றும் டெல்லி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
    • அம்ரித்பால் சிங் காலிஸ்தானை உருவாக்க பல நாடுகளுடன் தொடர்பில் இருந்துள்ளார்.

    சண்டிகர்:

    பஞ்சாபில் காலிஸ்தான் தனி நாடு கோரிக்கையுடன் செயல்படும் பஞ்சாப் தி வாரிஸ் அமைப்பின் தலைவர் அம்ரித்பால் சிங்கை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    சினிமா பாணியில் காரில் இருந்து மோட்டார் சைக்கிளுக்கு மாறி தப்பிய அம்ரித்பால் சிங் மாறுவேடத்தில் சாதாரண உடைகளில் வலம் வரலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். அவரை தேடும் பணி இன்றுடன் 8-வது நாளாக தொடர்கிறது.

    அவரை தேடி அரியானா, உத்தரகாண்ட் மற்றும் டெல்லி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இந்த பணியில் அந்தந்த மாநிலங்களின் போலீசாரும், பஞ்சாப் போலீசாருடன் இணைந்து செயல்படுகின்றனர்.

    இந்நிலையில் அம்ரித்பால் சிங்கின் கூட்டாளியான அமித்சிங் என்பவரை டெல்லியின் திலக்விகார் பகுதியில் போலீசார் கைது செய்துள்ளனர். இவர் இன்சூரன்ஸ் ஏஜென்டாக செயல்பட்டு வந்துள்ளார்.

    இதைத்தொடர்ந்து அம்ரித்பால் சிங்கும் டெல்லியில் பதுங்கி இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். அவர் சாது வேடத்தில் டெல்லியில் பதுங்கி இருக்கலாம் எனவும் உளவுத்துறை எச்சரித்துள்ளது. மேலும் அவர் டெல்லியில் ஒரு பஸ் நிலைய பகுதியில் இருந்து பஸ்சில் ஏறியதாகவும் கூறப்படுவதை அடுத்து டெல்லியில் பல்வேறு இடங்களிலும் போலீஸ் தேடுதல் வேட்டை தீவிரமாக நடந்து வருகிறது.

    இதற்கிடையே தலைமறைவாக உள்ள அம்ரித்பால் சிங் காலிஸ்தான் கரன்சியை வடிவமைத்து அச்சிட்டது தெரிய வந்துள்ளதாக போலீஸ் அதிகாரி அம்னித் கவுந்தல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், அம்ரித் பால்சிங் காலிஸ்தானுக்கான கொடியை வடிவமைத்துள்ளார்.

    அமெரிக்க டாலரை போன்று காலிஸ்தான் கரன்சியை வடிவமைத்து அச்சிட்டுள்ளார். அது டாலரில் இருந்து நகல் எடுக்கப்பட்ட கரன்சி போல இருந்தது. அதில் காலிஸ்தானின் வரைபடமும் அச்சிடப்பட்டிருந்தது.

    மேலும் ஆனந்த்பூர் கல்சா படை (ஏ.கே.எப்.) போன்று அம்ரித் பால்சிங் தனக்கென ஒரு புலிப்படையையும் உருவாக்கி கொண்டிருந்தது தெரிய வந்துள்ளது. அந்த படையின் உறுப்பினர்களுக்கு தனித்தனி எண்கள் வழங்கப்படுவது போன்று பெல்ட் பெயரில் ஏ.கே.எப். எண்கள் வழங்கப்பட்டன. அந்த படையின் உறுப்பினர்கள் கைகளில் ஏ.கே.எப். பச்சை குத்தி இருந்தனர்.

    அம்ரித் பால்சிங் காலிஸ்தானை உருவாக்க பல நாடுகளுடன் தொடர்பில் இருந்துள்ளார். அவருக்கு ஐ.எஸ்.ஐ. உதவி செய்துள்ளதும் தெரிய வந்துள்ளது என்றார்.

    • போஸ்டர்களை ஒட்டியுள்ள போலீசார் அவரை கண்டால் தகவல் தெரிவிக்குமாறு பொது மக்களுக்கு அறிவுறுத்தி உள்ளனர்.
    • ஆனந்த்பூர் கல்சா படை (ஏ.கே.எப்.) உறுப்பினர்கள் பஞ்சாபின் ஜல்லுப்பூர் கிடா கிராமத்தில் ஆயுதப்பயிற்சி பெற்றதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    சண்டிகர்:

    பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த காலிஸ்தான் அமைப்பின் தலைவரான அம்ரித் பால்சிங் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு போலீசார் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    இதுவரை அவரது ஆதரவாளர்கள் 207 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் எங்கே தப்பி சென்றார்? என்பது தொடர்பாக போலீசார் சி.சி.டி.வி. காமிராக்களை ஆய்வு செய்தனர்.

    இதில் அவர் கடந்த 18-ந் தேதி அமிர்தசரசில் இருந்து சொகுசு காரில் அவரது சொந்த கிராமமான ஜலுப்பூர் கேராவுக்கு தப்பி சென்றது தெரிய வந்தது. அங்கிருந்து சினிமா பாணியில் வெவ்வேறு கார்களுக்கு மாறியுள்ளார். மேலும் துப்பாக்கி முனையில் ஒருவரை மிரட்டி அவரது மோட்டார் சைக்கிளை பறித்து அதில் தப்பிச்சென்ற காட்சிகளை போலீசார் கைப்பற்றினர்.

    தொடர்ந்து நடந்த விசாரணையில் அவர் தனது தோற்றத்தை மாற்றி அரியானாவுக்கு தப்பிச் சென்றதும், அங்கு பல்ஜித்கவுர் என்ற பெண்ணின் வீட்டில் தங்கியிருந்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து அம்ரித் பால்சிங்கிற்கு அடைக்கலம் கொடுத்த பல்ஜித் கவுரை போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய அம்ரித் பால்சிங்கை தேடும் பணி இன்று 7-வது நாளாக நீடிக்கிறது. அவர் உத்தரகாண்டிற்கு தப்பி சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் ஒரு தனிப்படையினர் அங்கு விரைந்து சென்றுள்ளனர்.

    அவர் நேபாளம் வழியாக தப்பி செல்லலாம் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதைத்தொடர்ந்து நேபாள எல்லை பகுதிகளில் போலீசார் கண்காணிப்பை உஷார்படுத்தி உள்ளனர்.

    குறிப்பாக நேபாள எல்லை பகுதிகளில் அம்ரித் பால்சிங்கின் புகைப்படத்துடன் கூடிய போஸ்டர்களை ஒட்டியுள்ள போலீசார் அவரை கண்டால் தகவல் தெரிவிக்குமாறு பொது மக்களுக்கு அறிவுறுத்தி உள்ளனர்.

    இதற்கிடையே அம்ரித் பால்சிங்கின் ஆதரவாளர்களான ஆனந்த்பூர் கல்சா படை (ஏ.கே.எப்.) உறுப்பினர்கள் பஞ்சாபின் ஜல்லுப்பூர் கிடா கிராமத்தில் ஆயுதப்பயிற்சி பெற்றதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    இதுதொடர்பான வீடியோக்களும் போலீசாருக்கு கிடைத்துள்ளது. அந்த வீடியோக்களில் வனப்பகுதியை போன்று இருக்கும் இடத்தில் அந்த ஏ.கே.எப். உறுப்பினர்கள் குறிவைத்து துப்பாக்கியால் சுட்டு பயிற்சி பெறும் காட்சிகள் இருந்தன.

    அதில் ஒருவர் ஆயுதங்களுடன் உணவு அருந்திக்கொண்டிருப்பது போன்றும் காட்சிகள் இருந்தன. அங்கு ஏ.கே.எப். உறுப்பினர்களுடன் அம்ரித் பால்சிங் நடந்து செல்வது போன்றும் காட்சிகள் இருந்தன. இவற்றை கைப்பற்றியும் போலீசார் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    • அம்ரித்பால்சிங் பிரிவினைவாத தலைவர் மட்டுமல்லாது ஒரு மன்மதராசாவாகவும் வலம் வந்துள்ள விவரம் இப்போது தெரியவந்துள்ளது.
    • இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவனை ஏராளமான பெண்களும் பின் தொடர்ந்து வந்துள்ளனர்.

    பஞ்சாப்:

    பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் பகுதியை சேர்ந்தவன் அம்ரித்பால் சிங் (வயது30). இவன் காலிஸ்தான் ஆதரவு அமைப்பான வாரிஸ் பஞ்சாப் டி என்ற அமைப்பின் தலைவராக செயல்பட்டு வருகிறான்.

    தன்னை ஒரு சீக்கிய மதகுரு என அறிவித்துக் கொண்ட அம்ரிபால் சிங் பஞ்சாப்பை பிரித்து காலிஸ்தான் என்ற தனி நாட்டை உருவாக்க வேண்டும் என கோரி வருகிறான்.

    சமீபத்தில் போலீஸ் நிலையத்தில் இவனும், ஆதரவாளர்களும் துப்பாக்கி மற்றும் வாள்களுடன் நுழைந்து போராட்டம் நடத்தியது அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

    மேலும் அம்ரித்பால் சிங் தனி நாடு கேட்டு ஆதரவாளர்களுடன் மேற்கொண்டு வரும் நடவடிக்கையால் நிலைமை கைமீறி போனதை உணர்ந்த பஞ்சாப் போலீசார் அவனை கைது செய்ய முடிவு செய்தனர். அவனை கடந்த சனிக்கிழமை முதல் தேடி வருகின்றனர். அவனது கூட்டாளிகள் 78 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர்.

    ஆனால் அம்ரித்பால் சிங் போலீசாரின் பிடியில் சிக்காமல் தப்பி ஓடிவிட்டான். 5 நாட்களாக அவனை தேடி கண்டு பிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர். அவன் இதுவரை எங்கு இருக்கிறான் என தெரியவில்லை.

    இந்த சூழ்நிலையில் அவனை பற்றிய திடுக்கிடும் தகவல்கள் வெளி வந்த வண்ணம் உள்ளது. பல்வேறு தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய அவன் இந்தியா வருவதற்கு முன்பு பாகிஸ்தானில் ஆயுத பயிற்சி பெற்றான் என்ற தகவலை உளவுத் துறையினர் தெரிவித்து உள்ளனர். மேலும் இந்தியாவில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் பாகிஸ்தான் அவனை இயக்கி வருவதாக கூறப்படுகிறது.

    அம்ரித்பால்சிங் பிரிவினைவாத தலைவர் மட்டுமல்லாது ஒரு மன்மதராசாவாகவும் வலம் வந்துள்ள விவரம் இப்போது தெரியவந்துள்ளது. இவன் சமூக வலைதளங்களில் எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கக்கூடியவன். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவனை ஏராளமான பெண்களும் பின் தொடர்ந்து வந்துள்ளனர்.

    இதில் திருமணம் ஆன பெண்கள் மட்டுமல்லாமல் கல்யாணம் ஆகாத பெண்களிடமும் அம்ரித்பால் சிங் காதல் ரசம் சொட்ட சொட்ட மெசேஜ் அனுப்பி வந்துள்ளார்.

    இதில் பல பெண்கள் இவனது காதல் வலையில் சிக்கி உள்ளனர். முதலில் அந்த பெண்களுடன் வீடியோகாலில் சாதாரணமாக பேசும் அவன் பின்னர் அவர்களை மயக்கி ஆபாச படத்தையும் வாங்கி உள்ளான்.

    சில பெண்களுடன் அவன் நெருக்கமாக இருக்கும் படங்களும், சிலருக்கு முத்தம் கொடுக்கும் புகைப்படங்களும் இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.

    பல பெண்களிடம் அவன் நீண்டநேரம் வீடியோ காலில் பேசி உள்ளான். சிலருக்கு அவன் தொடர்ந்து மெசேஜ் அனுப்பி வந்தான். ஒரு பெண்ணுக்கு அவன் நமது திருமணம் உறுதி ஆனதா? துபாயில் நமக்கு தேனிலவு நடக்கும் என்று மெசேஜ் அனுப்பி இருந்தான். அதற்கு அந்த பெண்ணும் சிரிப்பது போன்ற உருவ படத்தை பதிவிட்டாள்.

    இப்படி தன்னிடம் மயங்கிய பெண்களின் ஆபாச படங்களும் அவனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ளது. அந்த புகைப் படங்களை வெளியிடுவேன் என மிரட்டி அவன் பெண்களிடம் தொடர்ந்து தொடர்பில் இருந்தது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தப்பியோடிய அம்ரித்பால்சிங்கை கடந்த 4 நாட்களாக போலீசார் தீவிரமாக தேடியும், அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
    • அம்ரித்பால்சிங் மாறு வேடங்களில் சுற்றலாம் என போலீசார் கருதுகின்றனர்.

    சண்டிகர்:

    பஞ்சாப் மாநிலத்தை பிரித்து காலிஸ்தான் என்ற தனிநாடு உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் செயல்படும் 'வாரிஸ் பஞ்சாப் தே' அமைப்பின் தலைவர் அம்ரித்பால்சிங் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    அந்த அமைப்பின் ஆதரவாளரை போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்த நிலையில் அம்ரித்பால்சிங் மற்றும் அவரது ஆதரவாளர்கள் போலீஸ் நிலையத்திற்குள் புகுந்து தாக்குதல் நடத்திய வழக்கில் அவரை கைது செய்வதற்காக போலீசார் வாகனங்களில் துரத்தி சென்றனர். அப்போது அவர் உடைகள் மற்றும் வாகனங்களை மாற்றி மோட்டார் சைக்கிளில் ஏறி சினிமா பாணியில் தப்பி சென்றது விசாரணையில் தெரியவந்தது.

    மேலும் அவர் கடைசியாக ஜலந்தரில் உள்ள ஒரு குருத்வாராவுக்கு சென்று சீக்கிய தலைவர் ஒருவரின் செல்போனில் பேசியதும், பின்னர் அங்கு ஆடைகளை மாற்றியதோடு உணவு சாப்பிட்டு விட்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றதும் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அவர் ஒரு சுங்கச்சாவடி வழியாக தப்பி சென்ற வீடியோக்களை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.

    அம்ரித்பால்சிங்கின் நெருங்கிய கூட்டாளிகள், ஆதரவாளர்கள் என இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்ட நிலையில், தப்பியோடிய அம்ரித்பால்சிங்கை கடந்த 4 நாட்களாக போலீசார் தீவிரமாக தேடியும், அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

    அம்ரித்பால்சிங் மாறு வேடங்களில் சுற்றலாம் என போலீசார் கருதுகின்றனர். இதைத்தொடர்ந்து அவரின் பல்வேறு தோற்றங்கள் குறித்து புகைப்படங்கள் வரைந்து போலீசார் அவற்றை வெளியிட்டுள்ளனர்.

    தேடுதல் வேட்டை 5-வது நாளாக நீடிக்கும் நிலையில் பஞ்சாப் மட்டுமல்லாது உத்தரகாண்ட், அசாம் மாநிலங்களுக்கு அவர் தப்பி சென்றிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.

    இதைத்தொடர்ந்து அங்கும் தேடுதல் வேட்டை மற்றும் கண்காணிப்பை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர். குறிப்பாக உத்தரகாண்டில் உள்ள குருத்வார்க்கள், ஓட்டல்கள் மற்றும் இந்திய நேபாள எல்லையில் உள்ள உதம்சிங் நகர் மாவட்டத்திலும் தீவிர சோதனை நடந்து வருகிறது.

    • காரில் தப்பிச்சென்ற அம்ரீத் பால்சிங் ஜலந்தர் பகுதியில் வேறு ஒரு வாகனத்திற்கு மாறி தப்பினார்.
    • அம்ரீத் பால்சிங்கின் நெருங்கிய உதவியாளர்கள் 4 பேர் உள்பட அவரது ஆதரவாளர்கள் 112 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

    சண்டிகார்:

    பஞ்சாப் மாநிலத்தில் சீக்கியர்களுக்கு தனி நாடு கேட்டு போராடும், தடை செய்யப்பட்ட காலிஸ்தான் அமைப்பின் ஆதரவாளரான அம்ரீத் பால்சிங்கின் கூட்டாளி லவ்பிரீத் சிங் சமீபத்தில் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

    அப்போது அம்ரீத் பால்சிங் ஆதரவாளர்கள் போலீஸ் நிலைத்தை சூறையாடினர். இதைத்தொடர்ந்து அம்ரீத் பால்சிங்கை கைது செய்ய போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.

    அவரை வாகனத்தின் விரட்டி சென்றபோது, காரில் தப்பிச்சென்ற அம்ரீத் பால்சிங் ஜலந்தர் பகுதியில் வேறு ஒரு வாகனத்திற்கு மாறி தப்பினார். அவரை பிடிக்க 3-வது நாளாக தேடுதல் வேட்டையை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர்.

    இந்நிலையில் அம்ரீத் பால்சிங்கின் மாமா ஹரிஜித் சிங் மற்றும் டிரைவர் ஹர்ப்ரீத் சிங் ஆகிய இருவரும் குருத்வாரா அருகே போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்துள்ளதாக ஜலந்தர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்தார்.

    இதில் ஹரிஜித் சிங் தான் அம்ரீத் பால்சிங் இருந்த காரை ஓட்டிச் சென்றுள்ளார். போலீசார் துரத்தும் போது தானும், அம்ரீத் பால்சிங்கும் பிரிந்து சென்றதாக அவர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

    இதுவரை அம்ரீத் பால்சிங்கின் நெருங்கிய உதவியாளர்கள் 4 பேர் உள்பட அவரது ஆதரவாளர்கள் 112 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். கைதான அம்ரீத் பால்சிங்கின் முக்கிய கூட்டாளிகள் 4 பேர் விமானம் மூலம் அசாம் மாநிலம் பிப்ருகாருக்கு கொண்டு செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    கைதானவர்களிடம் இருந்து ஏராளமான துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர். 

    ×