என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • சபாபதி இறந்துபோனார். இதனால், பத்மாவதி இளைய சகோதரர் சங்கர் பாதுகாப்பில் சபாபதி வீட்டிலேயே வசித்து வந்தார்
    • தாய் உடல் நிலை பாத்திக்க ப்பட்டு இருந்ததை தனக்கு சாதமாக பயன்படுத்கி சொத்து அனைத்தையும்தனது பெயருக்கு மாற்றிகொண்டார்.

    புதுச்சேரி: 

     காரைக்கால் அருகே வரிச்சிக்குடி புது த்தெருவில் வசித்து வந்தவர் சபாபதி. இவரது மனைவி பத்மாவதி. இவர்களுக்கு 6 ஆண் குழந்தைகள், 5 பெண் குழந்தைகள் என மொத்தம் 11 குழந்தைகள் உள்ளனர். இதில் இளைய சகோதரர் சங்கர் (வயது56) என்பவர், வரிச்சிக்குடியில் தனியாக வசித்து வந்தார். மூத்த சகோதரர் இளங்கோவன் (66) வெளிநாட்டிலும் மற்றவர்கள் வெளி நாட்டிலும், இந்தியாவிலும் வசித்து வந்தனர். இந்நிலையில், கடந்த 2006-ம் ஆண்டு சபாபதி இறந்துபோனார். இதனால், பத்மாவதி இளைய சகோதரர் சங்கர் பாதுகாப்பில் சபாபதி வீட்டிலேயே வசித்து வந்தார். தாய் பத்மாவதி செலவுக்காக, சகோதரர், சகோதரிகள் மாதம் மாதம் ஒரு தொகையை, சங்கர் வங்கி கணக்கிற்கு அனுப்பி வந்துள்ளனர்   மேலும், பத்மாவதி வசம் சுமார் ரூ.25 லட்சம் மதிப்பிலான தங்கம், வைரம் நகைகள் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இந்நி லையில், கடந்த 2017ல் பத்மாவதி கீழே விழுந்து காயம் அடைந்ததால், சங்கர் தாயை தனது வீட்டுக்கு அழைத்து சென்று பராமரித்து வந்துள்ளார்.

    பின்னர், தாய் பத்மாவதி தனது சொத்துக்களை சரிசமமாக அனைத்து குழந்தைகளுக்கும் எழுதி வைத்தாக கூறப்படுகிறது. தாய் உடல் நிலை பாத்திக்க ப்பட்டு இருந்ததை தனக்கு சாதமாக பயன்படுத்தி கொண்டு, சங்கர், தாய், தந்தையின் பூர்வீக சொத்துக்கள், சகோதரர், சகோதரிகளுக்கான உரிமங்கள் சிலவற்றையும், பத்மாவதி வங்கியில் டெபாசிட் செய்திருந்த சுமார் 7.50 லட்சம் பணம் மற்றும் சகோதர்கள் அனுப்பிவந்த பணம் அனைத்தையும் சங்கர் தனது பெயருக்கு மாற்றிகொண்டார். இந்நிலையில், பத்மா வதி கடந்த 2021ல் இறந்துபோனார். தொடர்ந்து காரைக்கால் வரிச்சிச்குடி திரும்பிய இளங்கோவனுக்கு, தாயின் பணம், நகை, சொத்துக்களை சங்கர் ஏமாற்றி பறித்துகொண்டதாக மற்ற சகோதரர்கள் மூலம் அறிந்து கொண்ட இளங்கோவன், இது குறித்து, கோட்டுச்சேரி போலீஸ் நிலையத்தில், சகோதரர் சங்கர் தங்களது தாய், தந்தையர்களின் சொத்துக்கள், பணம் மற்றும் சகோதர, சகோதரி களுக்கான சொத்துக்களை தாயிடமிருந்து ஏமாற்றி பறித்துக் கொண்டதாகவும், மேலும் சில அரசு முத்திரை தாள்கள், பத்திரங்கள், வெறும் பேப்பர்களில் பத்மாவதியின் கையெ ழுத்தை மிரட்டி வாங்கி வைத்திருப்பதாகவும் அதனை சங்கரிடமிருந்து மீட்டு தர வேண்டுமென புகார் கொடுத்தார்  போலிசார் இது சிவில் வழக்கு, கோர்ட் மூலம் தீர்த்துகொள்ளும்படி அனுப்பி வைத்துவிட்டனர். தொடர்ந்து, உயர் அதிகாரிகாளை இளங்கோ வன் சந்தித்து புகார் கொடுத்தும் யாரும் வழக்கு பதிவு செய்யவில்லை. இதனால், இளங்கோவன் காரைக்கால் கோர்ட்டில் இது குறித்து முறையிட்டார். தொடர்ந்து நீதிபதி உத்தரவின் பேரில், போலீ சார் சங்கர் மீது இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 


    • பால் கொள்முதல் விலையை ரூ.45 ஆக உயர்த்தி வழங்க வேண்டும்.
    • போராட்டத்தின்போது தரையில் பாலை கொட்டி கோஷம் எழுப்பினர்.

    புதுச்சேரி:

    புதுவை பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் ஆம்பூர் சாலை அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்துக்கு பால் உற்பத்தியாளர் சங்க சிறப்பு தலைவர் கீதநாதன், பொதுச்செயலாளர் பெருமாள், தலைவர் ராமகிருஷ்ணன், தொகுதி செயலாளர் ஆறுமுகம் ஆகியோர் தலைமை வகித்தனர். நிர்வாகிகள் வீரப்பன், ஆனந்தன், பாண்டுரங்கன், கணேசன், சுமதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    பால் கொள்முதல் விலையை ரூ.45 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். ஊக்கத்தொகை லிட்டருக்கு ரூ.5 வழங்க வேண்டும். இலவச கறவை பசு, கால்நடை தீவனம் வழங்க வேண்டும். முகவர்களுக்கு சரியான நேரத்தில் தட்டுப்பாடின்றி பால் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடந்தது.

    போராட்டத்தின்போது தரையில் பாலை கொட்டி கோஷம் எழுப்பினர்.

    • இந்தியாவிலேயே சுகாதாரத்தில் முதல் மாநிலமாக புதுவை உள்ளது.
    • இந்தியாவிலேயே பெண்களுக்கு உதவித்தொகை கொடுக்கும் முதல் அரசாக புதுவை அரசு விளங்கிக் கொண்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை கதிர்காமம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் குடும்ப தலைவிக்கான ரூ.1000 வழங்கும் திட்ட தொடக்க விழா நடைபெற்றது. கவர்னர் தமிழிசை, முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் இதனை தொடங்கி வைத்தனர்.

    விழாவில் கவர்னர் தமிழிசை பேசியதாவது:-

    பெண்களின் கையில் பணம் இருந்தால் அது குடும்பத்திற்கு தான் பயன்படும். அதுதான் நம் தேசத்தின் பண்பாடு. அதை உணர்ந்து அரசு இந்த திட்டத்தை ஆரம்பித்துள்ளது.

    பிரதமரின் நிதி ஆய்வு அறிக்கை சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

    அதில், இந்தியாவிலேயே வாழ்வாதாரம், சுகாதாரம், குடிநீர் வழங்குவதில் முதல் மாநிலமாக புதுவை உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதுவும் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் எடுக்கப்பட்ட கணக்கீட்டின்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது மாநிலத்திற்கு பெருமை. மற்றொரு ஆய்வில் 10-ம் இடத்தில் இருந்த புதுவை ஒரே ஆண்டிற்குள் 6-ம் இடத்திற்கு வந்துள்ளது.

    இந்தியாவிலேயே சுகாதாரத்தில் முதல் மாநிலமாக புதுவை உள்ளது. இதை நானாக கூறவில்லை. அதிகாரப்பூர்வமான ஆய்வுகள் சொல்கின்றன. அப்படி என்றால் புதுவை நிச்சயமாக முன்னேறி வருகிறது என்பதை அனைவரும் ஒப்புக்கொண்டாக வேண்டும்.

    குடும்ப தலைவிக்கு மாதாந்திர உதவித்தொகை திட்டத்தை பட்ஜெட்டில் குறிப்பிடாமல் முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்தார் இந்த அரசு அறிவிக்காததை செய்கிறது. சில அரசு அறிவித்தும் செய்யவில்லை. அதை நம் பார்த்துக்கொண்டுள்ளோம்.

    இந்தியாவிலேயே பெண்களுக்கு உதவித்தொகை கொடுக்கும் முதல் அரசாக புதுவை அரசு விளங்கிக் கொண்டுள்ளது.

    இன்னும் பல திட்டங்கள் மக்களுக்காக வர உள்ளது.

    இவ்வாறு கவர்னர் பேசினார்.

    • காரைக்கால் புனித செபஸ்தியார் ஆலய தேர்ப்பவனி நடந்தது.
    • தருமபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் வலம் வந்த தேர் நள்ளிரவில் மீண்டும் ஆலயத்தை சென்றடைந்தது.

    புதுச்சேரி

    காரைக்கால் திருநள்ளாறு சாலை தருமபுரம் அருகே, பழைமை வாய்ந்த புனித செபஸ்தியார் ஆலயம் உள்ளது. தருமபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில், சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு நிலவிய வறட்சி மற்றும் காலரா நோய் பாதிப்பு நீங்க வேண்டி, ஆண்டுதோறும் தை மாத அறுவடையின்போது தேர் பவனி நடத்துவதாக பக்தர்கள் வேண்டிக் கொண்டதாகவும், அதன்படி பாதிப்பு நீங்கியதால், புனித செபஸ்தியாரை மகிழ்விக்கும் வகையில், ஆண்டுதோறும் இந்த தேர் பவனி நடத்தப்படுகிறது.

    அறுவடை தொடங்கவுள்ள நிலையில், செபஸ்தியார் ஆலயத்தில் தேர்பவனி நடைபெற்றது. முன்னதாக, பக்தர்கள் முன்னிலையில் புனித செபஸ்தியாருக்கு சிறப்பு திருப்பலி நடைபெற்றது. பிரதான தேரில் புனித செபஸ்தியாரும், மைக்கேல் அந்தோணியார், சம்மனசு சொரூபத்துடன் தேர் பவனி நடைபெற்றது. தருமபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் வலம் வந்த தேர் நள்ளிரவில் மீண்டும் ஆலயத்தை சென்றடைந்தது. இதில், திரளான கிறிஸ்தவர்கள் மற்றும் கிராம மக்கள் பங்கேற்று செபஸ்தியாரை வழிபட்டனர்.

    • ரங்கசாமி சட்டைபையில் இருந்து பணத்தை எடுத்து தமிழக நோயாளியிடம் கொடுத்தார்.
    • திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த நோயாளி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    புதுச்சேரி:

    புதுவை முதலமைச்சர் ரங்கசாமி தனது ஆன்மீக குருவான அப்பா பைத்தியம் சாமிக்கு திலாசுப்பேட்டை அருகில் கோவில் எழுப்பி உள்ளார்.

    இங்கு சனிக்கிழமை தோறும் சிறப்பு பூஜை செய்து மக்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். கடந்த சனிக்கிழமை பூஜை முடித்து அன்னதானம் செய்ய சென்ற முதலமைச்சரை அங்கே அமர்ந்திருந்த ஒரு முதியவர் கைகூப்பி வணங்கினார்.

    மேலும் தன் கையில் இருந்த ஒரு மருந்து சீட்டை காண்பித்து 'மருந்து வாங்க காசு இல்லை' என்றும் கூறினார். உடனடியாக முதல்-அமைச்சர் தனது சட்டைபையில் இருந்து பணத்தை எடுத்து தமிழக நோயாளியிடம் கொடுத்தார். அவர் யார் என்பது குறித்து அங்கு இருந்த போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

    திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த நோயாளியான அவர் ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 2 கால்களும் பாதிக்கப்பட்டு நடக்க முடியாத நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். கோவிலில் அன்னதானம் நடைபெறுவது கேள்விப்பட்டு வந்ததாகவும் தெரியவந்தது.

    அவருக்கு அன்னதானம் வழங்கி காவலர்கள் பஸ்சில் ஏற்றி அனுப்பினர். முதலமைச்சர் திருவண்ணாமலை நோயாளிக்கு எவ்வளவு தொகை கொடுத்தார் என யாருக்கும் தெரியாது. புதுவை முதலமைச்சரிடம் தமிழக நோயாளி பண உதவி பெறும் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    • சாராயக்கடையில் வேலை செய்யும் இளைஞர்கள் சிலர் அங்குள்ள வீடுகளுக்குள் புகுந்து அங்கு இருந்தவர்களை தாக்கிவிட்டு தப்பிச்சென்றனர்.
    • சாராயம் குடிக்க வருபவர்களால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாகவும், எனவே சாராயக்கடையை உடனடியாக அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கூறினர்.

    திருக்கனூர்:

    திருக்கனூர் அருகே உள்ள லிங்காரெட்டிபாளையத்தில் சாராயக்கடை செயல்பட்டு வருகிறது. இங்கு சந்தை புதுக்குப்பத்தை சேர்ந்த இளைஞர்கள் சிலர் வேலை செய்து வருகின்றனர். இவர்களின் ஏற்பாட்டின்பேரில் அமாவாசையை முன்னிட்டு அங்குள்ள அங்காளம்மன் கோவிலில் அன்னதானம் வழங்கப்பட்டது.

    இதில் உள்ளூர் இளைஞர்கள் சிலர் அன்னதானம் சாப்பிட சென்றனர். அப்போது அங்கு உணவு தீர்ந்து விட்டதாக கூறப்படுகிறது.

    இதனால் இருதரப்பு இளைஞர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அவர்களை அங்கு இருந்த பெரியவர்கள் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

    இந்த நிலையில் சாராயக்கடையில் வேலைசெய்யும் இளைஞர்களுக்கும், உள்ளூர் இளைஞர்களுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். அப்போது சாராயக்கடையில் வேலை செய்யும் இளைஞர்கள் சிலர் அங்குள்ள வீடுகளுக்குள் புகுந்து அங்கு இருந்தவர்களை தாக்கிவிட்டு தப்பிச்சென்றனர்.

    இதனால் ஆத்திரம் அடைந்த லிங்காரெட்டிபாளையம் பகுதியை சேர்ந்த பெண்கள் 50-க்கும் மேற்பட்டோர் அங்குள்ள சாராயக்கடை அருகில் ஒன்று திரண்டனர். அவர்கள் திடீரென்று சாராயக்கடைக்குள் புகுந்து அங்கிருந்த நாற்காலி, மேஜை, கண்காணிப்பு கேமரா, சாராய கேன்களை அடித்து நொறுக்கி சூறையாடினர்.

    அப்போது அங்கு சாராயம் குடித்துக்கொண்டு இருந்தவர்கள் இதனை பார்த்தவுடன் ஓட்டம் பிடித்தனர்.

    பின்னர் அந்த பெண்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்று சேர்ந்து சாராயக்கடையை இங்கிருந்து உடனடியாக அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தி திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதுபற்றிய தகவல் அறிந்தவுடன் திருக்கனூர் போலீஸ் இன்ஸ்பெ க்டர் ஆறுமுகம், காட்டேரிக்குப்பம் சப்-இன்ஸ்பெக்டர் சரண்யா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது, சாராயம் குடிக்க வருபவர்களால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாகவும், எனவே சாராயக்கடையை உடனடியாக அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கூறினர்.

    இது தொடர்பாக அரசிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். இதன் பின் அவர்கள் போராட்டத்தை கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர். சாராயக்கடையை பெண்கள் அடித்து நொறுக்கி சூறையாடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • காரைக்காலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு ராஜேந்திரனை ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.
    • உறவினர்கள் கேள்வி எழுப்பி தனியார் ஆஸ்பத்திரி முன்பு கோஷம் போட்டனர்.

    புதுச்சேரி:

    மயிலாடுதுறை மாவட்டம் வளத்தா ன்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன்.(வயது65) இவருக்கு புற்றுநோய் கட்டி இருந்ததால் மயிலாடுதுறை பகுதியில் அமைந்துள்ள தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என டாக்டர்கள் கூறியதை தொடர்ந்து அவருக்கு மயிலாடுதுறை தனியார் ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை செய்யும் போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறினர். இந்த நிலையில், திடீரென அவருக்கு நாடி துடிப்பு இருக்கிறது என்று கூறி, உறவினர்களின் ஒப்புதல் இல்லாமல் அவசரகதியில் மேல் சிகிச்சைக்காக காரை க்காலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு ராஜேந்திரனை ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.

    இதனை அடுத்து காரைக்கால் தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டுவரப்பட்ட ராஜேந்திரன் குறித்து, 2 நாட்களாக காரைக்கால் தனியார் ஆஸ்பத்திரி எந்த ஒரு தகவலும் தெரிவிக்கவில்லை. ரமணா சினிமா பாணியில் இறந்து விட்ட தாக கூறியவருக்கு மீண்டும் சிகிச்சை அளிப்பது எந்த வகையில் நியாயம் என்றும் உறவினர்கள் கேள்வி எழுப்பி தனியார் ஆஸ்பத்திரி முன்பு கோஷம் போட்டனர். இதனால் இப்பிரச்சினை சமூக வலைதளங்களில் வைரலாகியது.இதனை அடுத்து, தனியார் ஆஸ்பத்திரி ராஜேந்திரனை மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளதாக கூறி முற்றுப்புள்ளி வைத்தனர். தனியார் ஆஸ்பத்திரி கொண்டு செல்லப்பட்ட ராஜேந்திரன் இதுவரை உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்பது தெரியாமல் உறவினர்கள் திக்கு முக்காடி வருகின்றனர். இச்சம்பவம் காரைக்கா லில் உள்ள சமூக வலைதள ங்களில்வைரலாகி வருவதால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    • காற்றின் வேகத்தால், பக்கத்தில் இருந்த ராஜேந்திரன் வீட்டிலும் தீ பரவியது.
    • 2 பேர் வீட்டிலும் இருந்த சுமார் ரூ.4 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமானது.

    புதுச்சேரி:

    காரைக்கால் தலத்தெரு காளியம்மன் கோவில் தெருவில் வசிப்பவர்கள் ரவி, இவரது சகோதரர் ராஜேந்திரன். 2 பேரும் தனி தனியே தங்களது குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். நேற்று பிற்பகல், ரவி வசிக்கும் கூரை வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. காற்றின் வேகத்தால், பக்கத்தில் இருந்த ராஜேந்திரன் வீட்டிலும் தீ பரவியது. இதனால், 2 பேரின் வீடும் தீயில் எரிந்து சாம்பலானது. அக்கம் பக்கத்தினர் தீயை அணைக்க முயன்றும் முடியாததால், காரை க்கால் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

    அதன்பேரில், தீயணை ப்பு நிலைய அதிகாரி மாரிமுத்து தலைமையில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீ மற்ற வீடு களுக்கு பரவாமல் போராடி அணைத்தனர். இருந்தும், 2 பேர் வீட்டிலும் இருந்த சுமார் ரூ.4 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமானது. இந்த தீ விபத்தில், இருவர் வீட்டின் அருகே இருந்த மணிவாசகம் என்பவர் வைக்கோல் போரிலும் தீ பிடித்ததால் வைக்கோல்கள் கருகியது. தீ விபத்து எதனால் ஏற்பட்டது? என்பது குறித்து, காரைக்கால் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • விசித்திரனுக்கு அடிக்கடி மூச்சு திணறல் ஏற்பட்டு வந்தது.
    • சாப்பிட்டு விட்டு தூங்கிய சிறிது நேரத்தில் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்தான்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி நெட்டப்பாக்கம் மேட்டுதெருவை சேர்ந்தவர் சீனிவாசன். தச்சு தொழில் செய்து வருகிறார். இவரது சித்தி பரமேஸ்வரி. இவரது மகன் விசித்திரன்.

    இவன் ராம்பாக்கம் அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான். விசித்திரனுக்கு அடிக்கடி மூச்சு திணறல் ஏற்பட்டு வந்தது. இதனால் தூக்க மின்மையால் அவதிப்பட்டு வந்தான்.

    நேற்று மதியம் விசித்திரன் வீட்டில் சாப்பிட்டு விட்டு தூங்கினான். சிறிது நேரத்தில் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்தான்.

    • சட்டமன்றம், பாராளுமன்ற தேர்தல் காலங்களில் மாநில அந்தஸ்து விவகாரம் அனைத்து கட்சிகளின் தேர்தல் அறிக்கையிலும் இடம்பெறும்.
    • முதலமைச்சர் ரங்கசாமி, தான் கலந்துகொள்ளும் அரசு விழாக்களில் எல்லாம் மாநில அந்தஸ்து பெறுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி பேசி வருகிறார்.

    புதுச்சேரி:

    யூனியன் பிரதேசமான புதுவைக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது.

    மத்திய அரசிடம் மாநில அந்தஸ்தை வலியுறுத்தி புதுவை சட்டசபையில் இதுவரை 15-க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாநில அந்தஸ்து கோரிக்கையை முன்வைத்தே முதலமைச்சர் ரங்கசாமி 2011-ம் ஆண்டு என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை தொடங்கி ஆட்சியை பிடித்தார்.

    மாநில அந்தஸ்து கோரிக்கை அவ்வப்போது வலுப்பெறுவதும், பின்னர் அடங்குவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது. சட்டமன்றம், பாராளுமன்ற தேர்தல் காலங்களில் மாநில அந்தஸ்து விவகாரம் அனைத்து கட்சிகளின் தேர்தல் அறிக்கையிலும் இடம்பெறும்.

    தேர்தலுக்கு பிறகு கோரிக்கை மாயமாகிவிடும். இதேநிலைதான் பல ஆண்டாக நீடித்து வருகிறது. சமீபத்தில் முதலமைச்சர் ரங்கசாமி ஒரு விழாவில் பேசும்போது, மாநில அந்தஸ்து இல்லாததால் மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்ற காலதாமதம் ஏற்படுகிறது என்றும் இது மன உளைச்சலை உருவாக்குவதாகவும் பேசினார்.

    இதையடுத்து மாநில அந்தஸ்து விவகாரம் மீண்டும் சூடுபிடித்தது. புதுவையில் பல்வேறு சமூக அமைப்புகள் ஒன்றிணைந்து மாநில அந்தஸ்து வலியுறுத்தி போராட்டம் நடத்தப்போவதாக தெரிவித்துள்ளனர். ஏற்கனவே ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள அ.தி.மு.க. மத்திய அரசை வலியுறுத்தி பந்த் போராட்டம் நடத்தியுள்ளது.

    அதோடு முதலமைச்சர் ரங்கசாமி, தான் கலந்துகொள்ளும் அரசு விழாக்களில் எல்லாம் மாநில அந்தஸ்து பெறுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி பேசி வருகிறார். ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் நடந்த வக்கீல்கள் சேம்பர் அடிக்கல் நாட்டு விழாவில் மாநில அந்தஸ்து பெற நீதிபதிகள் ஆலோசனை வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

    விழாவில் பங்கேற்ற மத்திய சட்டத்துறை மந்திரி கிரண் ரிஜிஜூவிடம் மாநில அந்தஸ்து வலியுறுத்தி மனுவும் அளித்தார். இந்த நிலையில் கூட்டணியில் ஆட்சியில் அங்கம் வகிக்கும் பா.ஜனதா, புதுவைக்கு மாநில அந்தஸ்து அவசியமா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

    பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன் கூறும்போது, புதுவைக்கு சொந்தமாக மின் உற்பத்தி, கனிம வளங்கள் இல்லாததால் மாநில அந்தஸ்து கொடுத்தால் வளர்ச்சி பாதிக்கும் என்றும் மாநில அந்தஸ்து குறித்த சாதக, பாதகங்களை ஆராய வேண்டும் என்றும், மக்களை பாதிக்காத மாநில வளர்ச்சியை பா.ஜனதா ஆதரிக்கும் என்றும் கூறினார்.

    இதனால் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. மத்தியில் பா.ஜனதா ஆட்சி நடைபெறும் நிலையில், புதுவைக்கு மாநில அந்தஸ்து தேவையா? என்ற ரீதியில் பா.ஜனதா மாநில தலைவர் கேள்வி எழுப்பியிருப்பது மாநில அந்தஸ்தை வலியுறுத்தும் கோரிக்கைக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

    • கடற்கரை சாலையில் உள்ள பிரெஞ்சு தூதரகத்தின் சுற்றிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கும்.
    • பிரெஞ்சு தூதரகத்தின் மீது டிரோன் பறந்தது ஊழியர்கள் மத்தியில் பதட்டத்தை ஏற்படுத்தியது.

    புதுச்சேரி:

    புதுவை கடற்கரை சாலையில் பிரெஞ்சு தூதரகம், தலைமை செயலகம், அரவிந்தர் ஆசிரமம், மணக்குள விநாயகர், காவல்துறை தலைமையகம் ஆகியவை உள்ளது.

    கடற்கரை சாலையில் உள்ள பிரெஞ்சு தூதரகத்தின் சுற்றிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கும்.

    இந்நிலையில் இன்று பகலில் பிரெஞ்சு தூதரகத்தின் மீது டிரோன் ஒன்று பறந்தது.

    இதைக்கண்ட தூதரக ஊழியர்கள் மத்தியில் பதட்டம் ஏற்பட்டது. உடனடியாக பாதுகாப்பு பணியிலிருந்த தூதரக பாதுகாப்பு அதிகாரிகளிடம் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து சென்று டிரோனை இயக்கியவரை பிடித்து விசாரித்தனர்.

    ஆனால் அவர்கள் சரிவர பதில் தெரிவிக்கவில்லை. உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வருவதற்கு முன்பாக அந்த நபர் டிரோனை எடுத்துக்கொண்டு மாயமானார்.

    அங்கிருந்த கேமரா மூலம் டிரோனை இயக்கியவர் யார்? என போலீசார் விசாரித்து வருகின்றனர். இதனால் தூதரகம் அருகே பரபரப்பு ஏற்பட்டது.

    • மத்திய அரசு ரூ.80 லட்சம் நிதி ஒதுக்கியுள்ளது விரைவில் கட்டடம் கட்டி முடிக்கப்படும்.
    • புதுவை சிறந்த மாநிலமாக வரவேண்டும் என்பதே அரசின் எண்ணம்.

    புதுச்சேரி:

    புதுவை கடலூர் சாலையில் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகம் உள்ளது.

    புதுவை கோர்ட்டு வளாகத்தில் ரூ.13.79 கோடியில் வக்கீல்களுக்கு 105 அறைகள் கொண்ட புதிய கட்டிடம் கட்டப்பட உள்ளது. இதன் அடிக்கல் நாட்டு விழா இன்று நடந்தது. புதுவை தலைமை நீதிபதி செல்வநாதன் வரவேற்றார். மத்திய சட்டத்துறை மந்திரி கிரண்ரிஜிஜூ தலைமை வகித்து அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.

    விழாவுக்கு கவர்னர் தமிழிசை முன்னிலை வகித்தார். விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:-

    புதுவையில் சிறிய பள்ளிக்கூடத்தில் சட்டக்கல்லூரி இயங்கி வந்தது. அதில் படித்தவர்கள் இன்று சிறந்த வக்கீல்களாகவும், நீதிபதிகளாகவும் உள்ளனர். தற்போது சட்டக்கல்லூரி பெரிய வளாகத்தில் காலாப்பட்டில் இயங்கி வருகிறது. சட்ட பல்கலைக்கழகம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும்.

    ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகம் கட்ட நிலத்தை தேர்வு செய்தபோது, மரங்கள் அடர்ந்து காடுகள் இருந்த பகுதியை தேர்வு செய்தோம். இங்கு விரைந்து பணிகளை முடித்து கோர்ட்டு வளாகத்தை உருவாக்கினோம். இன்று பிற மாநிலத்தினர் வியக்கும் வகையில் கோர்ட்டு வளாகம் அமைந்துள்ளது. இங்கு வக்கீல்கள் அறைகள் கட்ட ரூ.13 கோடி அரசு ஒதுக்கியுள்ளது.

    மத்திய அரசு ரூ.80 லட்சம் நிதி ஒதுக்கியுள்ளது. விரைவில் இந்த கட்டடம் கட்டி முடிக்கப்படும். அதை திறந்து வைக்கவும் அனைவரும் வர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

    வக்கீல்கள், நீதிபதிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றித்தர அரசு நடவடிக்கை எடுக்கும். கோர்ட்டு வளாகத்தில் சிறிய மருத்துவ சிகிச்சை மையம் அமைத்துத்தரப்படும்.

    இளம் வக்கீல்கள் உதவித்தொகை உயர்த்தித்தரப்படும். புதுவை மக்கள் நீதிமன்றத்தில் அதிக வழக்குகள் தீர்க்கப்படுகிறது. வக்கீல்கள் விரைவாக நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    புதுவை சிறந்த மாநிலமாக வரவேண்டும் என்பதே அரசின் எண்ணம். நிர்வாகம், செயல்பாடுகள் சிறப்பாக இருக்க வேண்டும்.

    அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகள் தீர்க்கப்பட வேண்டும். புதுவை மாநில தகுதி பெற தேவையான ஆலோசனைகளை நீதிபதிகள் வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    மத்திய சட்டத்துறை மந்திரி கிரண்ரிஜிஜூ பேசும் போது புதுவையில் ஐகோர்ட்டு கிளை அமைக்கப்படும் என்றார்.

    விழாவில் அட்டர்னி ஜெனரல் வெங்கட்ராமன், சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி (பொறுப்பு) ராஜா, புதுவை மாவட்ட பொறுப்பு நீதிபதிகள் வைத்தியநாதன், இளந்திரையன், புதுவை சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர் லட்சுமிநாராயணன், செல்வகணபதி எம்.பி., நேரு எம்.எல்.ஏ., தலைமை செயலர் ராஜீவ்வர்மா, சட்டத்துறை செயலர் செந்தில்குமார், புதுவை வக்கீல்கள் சங்க தலைவர் குமரன், செயலாளர் கதிர்வேல் உட்பட பலர் கலந்துகொண்டனர். தலைமை குற்றவியல் நீதிபதி மோகன் நன்றி கூறினார்.

    ×