

புதுச்சேரி:
காரைக்கால் எம்.ஜி.ஆர் நகரில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காரைக்கால் நகர போலீஸ் நிலையத்திற்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில், இன்ஸ்பெக்டர் சண்முகம், சப்.இன்ஸ்பெக்டர் முத்துசாமி மற்றும் போலீசார் எம்.ஜி.ஆர் நகருக்கு சென்றனர். போலீசாரை பார்த்ததும் 2 இளைஞர்கள் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். போலீசார் அந்த 2 பேரையும் மடக்கி பிடித்து சோதனைச் செய்தனர். அவர்களிடம் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது.
மேலும் அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், காரைக்காலை அடுத்த கிளிஞ்சல்மேடு சுனாமி நகரை சேர்ந்த விஜயசென் (வயது 22), அவரது நண்பர் அம்மன் கோவில்பத்து, எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த பைசல் ரஹ்மான் (19) என்பது தெரிய வந்தது. தொடர்ந்து, 2 பேரையும் கைது செய்து போலீசார், அவர்களிடமிருந்து ரூ.10 ஆயிரம் மதிப்பிலான கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.