என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த 2 பெண்டாட்டிக்காரர் கைது
- ஆசைவார்த்தை கூறி காதலிப்பதாக நாடகமாடி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததை பாபு ஒப்புக்கொண்டார்.
- பல பெண்களை பாபு ஏமாற்றினாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாகூர்:
புதுவை அரியாங்குப்பத்தை அடுத்த நோணாங்குப்பம் பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி மணவெளி தந்தை பெரியார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 வகுப்பு படித்து வருகிறார்.
இந்த மாணவி நேற்று முன்தினம் இரவு சிவராத்திரியை முன்னிட்டு கோவிலுக்கு செல்வதாக பெற்றோரிடம் கூறி சென்றார். ஆனால் வெகுநேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை.
பல்வேறு கோவில்களிலும் தேடிப்பார்த்தும் மாணவி கிடைக்காததால் பெற்றோர் அரியாங்குப்பம் போலீசில் புகார் அளித்தனர். அந்த புகார் அடிப்படையில் யாரேனும் மாணவியை கடத்தி சென்றார்களா என்ற கோணத்தில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த நிலையில் நேற்று காலை 9 மணி அளவில் மாணவி சுண்ணாம்பாற்று பாலத்தின் மீது இருந்து ஆற்றில் குதித்து தற்கொலை முயற்சி செய்தார். உடனே அங்கிருந்தவர்கள் ஆற்றில் குதித்து அந்த மாணவியை மீட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் தவளக்குப்பம் மற்றும் அரியாங்குப்பம் போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து வந்தனர்.
ஆற்றில் இருந்து மீட்கப்பட்ட மாணவிக்கு வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அரியாங்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவி தற்கொலை முயற்சி குறித்து விசாரணை நடத்தினர்.
போலீசாரின் தீவிர விசாரணைக்கு பிறகு பல்வேறு தகவல் தெரிய வந்தது. அதில் தற்கொலை முயற்சி மேற்கொண்ட மாணவி பாலியல் பலாத்காரத்திற்கு ஆளானதும் கரிக்கலாம்பாக்கம் பகுதியை சேர்ந்த தனியார் பஸ் டிக்கெட் பரிசோதகர் பாபு அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து பாபு மீது போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வந்தனர். மேலும் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த மாணவி குழந்தைகள் நல பாதுகாப்பு குழு சார்பில் புதுவை மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அரியாங்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன் தலைமையிலான போலீசார் அரியாங்குப்பம் சந்திப்பில் நின்றிருந்த பாபுவை மடக்கி பிடித்து கைது செய்தனர்.
விசாரணையில் ஆசைவார்த்தை கூறி காதலிப்பதாக நாடகமாடி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததை பாபு ஒப்புக்கொண்டார். மேலும் பாபுவிற்கு ஏற்கனவே திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ள நிலையில் பஸ்சில் பழக்கம் ஏற்பட்ட ஒரு பெண்ணை பாபு 2-வது திருமணம் செய்து கொண்டதும் தெரியவந்தது.
மேலும் இதுபோல் பல பெண்களை பாபு ஏமாற்றினாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






